எழவுக்குருவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 13,088 
 
 

குணா கண்விழித்தபோது சாந்தி அருகில் இல்லை.கனவென்று நினைத்து மீண்டும் உறங்கினான்.அதிகாலையில் வலுக்கட்டாயமாக அவன் உறக்கம் கலைக்கப்பட்டு அறையின் மூலையில் அமர்த்தப்பட்டான்.சாந்தி மட்டும் தூங்கிக்கொண்டிருந்தாள்,அவனுக்கு கோபம் வந்தது அவளுக்கு மட்டும் என்ன தனிச்செல்லம்.எப்போதும் காலையில் அவளை எழுப்ப அம்மாதான் அருகில் உட்கார்ந்து கத்திக்கொண்டிருப்பாள்,இன்று புதிதாக பக்கத்து வீட்டு அத்தை எல்லாம் கூட்டு சேர்ந்திருந்தாள்,புதிதாக இருந்தது.எத்தனை கூப்பிட்டும் சாந்தி எழுந்திருக்கவில்லை,அம்மா அழுதேவிட்டாள்.சாந்தி அழுத்தக்காரி.அப்பா வாசலில் நின்றுகொண்டிருந்தார்.கொட்டகை போடப்பட்டிருந்தது.எதோ மேளச்சத்தம் கேட்டது.அதைவிட அதிகமாக அழுகைச்சத்தம் கேட்டது.சாந்தி எழவில்லை,கோபத்தில் அவளை படுக்கையில் வைத்தே எங்கோ தூக்கிக்கொண்டு சென்றுவிட்டனர்.அதன்பின் அவளை அவன் பார்க்கவே இல்லை.அம்மாவிடம் கேட்டான் அக்கா சாமிக்கிட்ட போயிட்டா என்றாள்.அழுகை வந்தது,இவனும் அழுதான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு பள்ளி சென்றபோது கௌரி அக்கா குணாவைப் பார்த்து சாந்தியை பார்க்காம எனக்கு அழுகையா வருது என்றாள்,குணா எனக்கும் அழுகை வருது என்றான்.உங்க வீட்டு முன்னாடி அன்னைக்கு எழவுக்குருவி வந்து எழவு எழவுன்னு சொன்னதால தான் சாந்தி செத்துப்போயிட்டாளாம் பாட்டி சொன்னுச்சு என்றாள்.குணா பயந்து அது எப்படி இருக்கும் எனக் கேட்டான்,மூக்கு நீளமா,கருப்பு கலர்ல ரெக்கை இருக்கும் என அடையாளம் கூறிவிட்டு சென்றாள்.அவள்சொல்லிவிட்டு போன அடுத்தநாள் அவன் எழவுக்குருவியை முதன்முதலில் பார்த்தான்.

சாந்தி இல்லாத தனிமையை சாலையில் கிடந்த கற்களை எண்ணியபடி பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான் அவன்.பள்ளிக்குத் திரும்பும் முக்கில் இருந்த ஆலமரத்தில் அது அமர்ந்திருந்தது.கௌரி அக்கா சொன்ன அடையாளங்கள் அப்படியே பொருந்தியிருந்தது.அவன் அருகே சென்றபோது எழவு எழவு எனக் கத்தத் தொடங்கியது.அவன் மீண்டும் வீட்டுக்கே திரும்பி ஓடிவிடநினைத்தான்.பிறகு சாமியை வேண்டிக்கொண்டு குடுகுடுவென ஓடி பள்ளிச் சென்றுசேர்ந்தான். பள்ளி முடிந்து செல்லும்போது அந்த மரத்தின் கீழ் நாயொன்று செத்துக்கிடந்தது.இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென நாய்குலைக்கும் சத்தம்கேட்டது,பின் குருவியின் சத்தம் கேட்டதும் நாயின் சத்தம் அடங்கியது.கௌரி அக்காவிடம் மறக்காமல் சொல்லிவிட வேண்டுமென நினைத்து மறந்தான்.மேட்டுக்கடையை சுற்றி பள்ளி செல்லத் தொடங்கியிருந்தான்.அதன்பின் தினமும் கனவில் எழவுக்குருவி வந்து நீ செத்துப்போகப்போற என சொல்லி சென்றது.செத்துப்போவது என்றால் என்ன,அதன்பிறகு என்ன நடக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருந்தது, அப்பாவிடம் கேட்க பயம்.அம்மாவோ எப்போதும் சாந்தியைப் பற்றியே பேசி அழுதுகொண்டிருந்தாள்.

செத்துப்போறதுன்னா,அதுக்கப்பறம் நம்மால எதையுமே சாப்பிட முடியாது.நம்ம நல்ல புள்ளையா தப்பு ஏதும் பண்ணாம இருந்தா சாமி நமக்கு முட்டாயா ஊட்டிவிடுவார்,நம்ம தப்பு ஏதும் பண்ணிருந்தா கொள்ளிக்கட்டையை எடுத்து வாயில் வச்சிடுவார் என கௌரி அக்கா விளக்கம் தந்தாள்.சட்டென காலையில் குளிக்காமல் பள்ளி வந்தது,யாருக்கும் தெரியாமல் மாங்காய் பறித்தது எல்லாம் குணாவிற்கு கண்முன் வந்தது,கூடவே இந்நேரம் சாந்தி எத்தனை மிட்டாய் தின்றிருப்பளோ என நினைத்து பொருமிக்கொண்டான்.அன்றிரவு கனவில் எழவுக்குருவி வந்திருந்தது கூடவே அதனுடன் றெக்கை விரித்து சாந்தியும் வந்திருந்தாள்.அவனைப் பார்த்து சிரித்தாள்,இவன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டான்.உன்னோட பேசமாட்டேன் எனக்கு கொடுக்காம நீ அவ்வளவு மிட்டாயையும் தின்னுட்டள்ள என்றான்.அவள் கொஞ்சி சிரித்து உனக்கும் பாதி வச்சிருக்கேன் டா என கைநிறைய மிட்டாயைக் காட்டி,நீ என்கிட்டே வரும்போது தர்றேன் என்றாள்.உன்கிட்ட வர்ற என்ன பண்ணனும் என்றான் ஆர்வமாக பழம்விட்டுவிட்டு. எழவுக்குருவி எப்ப நம்ம வீட்டு முன்னாடி கத்துதோ அப்பவே என்கிட்டே வந்துடுவ என்று சொல்லி பறந்துசென்றாள்.

அன்றிலிருந்து தினமும் சாமியிடம் எழவுக்குருவி சீக்கிரமா வீட்டுமுன்னாடி வந்து கத்தனும் என வேண்டிக்கொள்ளத்தொடங்கினான்.கௌரி அக்காவிடம் சொன்னால் அவள் மிட்டாயில் பங்குகேட்டுவிடுவாளோ என்று மறைத்தான்.அவளைப் பார்க்கும்போதெல்லாம் மிட்டாய் எல்லாம் எனக்குத்தான் என மனதிற்குள் நினைத்துக்கொண்டே நமட்டு சிரிப்பு சிரிப்பான்.மிட்டாயைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவனுக்கு எச்சில்ஊறும்.அவன் வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறியது அன்று எழவுக்குருவி அவன் வீட்டுமுன்பு வந்து எழவு எழவு எனக் கத்தியது.உனக்கும் ஒரு மிட்டாய் தரேன் என சாமியிடம் கண்ணடித்து சிரித்தான்.ஆனால் அவனுக்கு முன்னே அவனது அம்மா செத்துப்போய் சாந்தியிடம் மிட்டாய் எல்லாவற்றையும் வாங்கிவிட்டாள்,அன்றிலிருந்து குணா அம்மாவிடம் பேசுவதில்லை.அவளும் பலமுறை கெஞ்சிப்பார்த்துவிட்டாள்.இப்போதெல்லாம் பகலிலும் வந்து சாப்பிட சொல்லி ஊட்டிவிட்டு தொல்லை பண்ணுகிறாள்,குணா மாட்டேன் என கையைத் தட்டிவிடுவான்,அவள் அழுவாள்.ஆனால் ஒருநாளும் சாந்தியைப் போல அம்மாவை றெக்கையுடன் குணா பார்த்ததே இல்லை.அப்பா அவனை சாப்பிட வைக்க ஏதேதோ கோயில்களுக்கெல்லாம் கூட்டிச்சென்றார்.சாமியும் சொல்லிப் பார்த்தது ஆனால் இவன் முடிவாய் சொல்லிவிட்டான் சாந்தி மிட்டாய் தந்தால் தான் மறுபேச்சு என்று…,

அவன் கால்களை வீட்டுத் தூண்களோடு கட்டியிருந்தனர்,அவன் சாந்தியோடு ஒளிந்துவிளையாடிய அதே தூணில்.அதன்பிறகு ஒருவழியாக எழவுக்குருவி அவன் வீட்டிற்கு மறுபடியும் வந்து கத்தத் தொடங்கியது.அப்பா தனக்குமுன் எழுந்து செத்துவிடுவாரோ என்ற பயத்தில் அவசர அவசரமாக கால்கட்டை அவிழ்க்க முயன்றான்,முடியவில்லை.எங்கிருந்தோ பறந்துவந்த சாந்தி மெல்ல கயிறை அவிழ்த்து அவன் கையைப் பிடித்து தூக்கினாள்.குணா எதோ சொல்ல முற்பட சாந்தி அவன் வாயை பொத்தி அவனை மறைவாக கிணற்றடியில் உட்காரவைத்து மிட்டாயை ஊட்டிவிடத் தொடங்கினாள்.

மறுநாள் கிணற்றில் யாரோ செத்து மிதக்கிறாங்க என்ற செய்தி கௌரி அக்கா வீட்டைத் தாண்டும்முன் அவன் எல்லா மிட்டாயையும் தின்றுமுடித்து சாந்தியுடன் வானில் பறந்துகொண்டிருந்தான் அவனுக்கும் சிறகு முளைத்திருந்தது..

அதன்பின் யாரும் அங்கு எழவுக்குருவியைப் பார்த்ததாக சொல்லவில்லை கௌரியும் அவளது பாட்டியும்கூட…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *