முதல் பாகம்:
கடவுளை நம்புவதை போன்றதொரு முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை..
இன்று காலை முதலே, எல்லாமே தடங்கல், பிரச்சனைகள் தான்..
******
டிகிரிமுடித்து, வேலை கிடைக்காமல் ரோடுரோடாக வேலைக்காக நாயைவிட கேவலமாக அலைந்தது தான் மிச்சம்.
வெறுப்புத்தலைக்கேறி, மூளையை குழப்பிக்கொண்டிருந்தபோதுதான், விஐயலஷ்மி அக்கா வீட்டுக்கு வந்தாங்க..
என் அம்மாவழியில் உறவு, எனக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லை.. பள்ளி, கல்லூரி என எல்லாமே ஹாஸ்டலில் படித்ததால்.., ஊர்க்காரவுக சார்பு இல்லாமலே இருந்தேன்..
வீட்டுக்கு வந்த அவக, என்னை நலம்விசாரித்துவிட்டு, அம்மாவை பார்க்கணும்’னாங்க.. அம்மா, கழனி நடவுக்கு போய் இருக்காங்க’கா என்றேன்.
சரி தம்பி, நீ எதுவும் வேலைக்கு போகலியா?னு கேட்டாங்க..
நான் மௌனமாய் தலைகுனிந்ததை புரிந்துகொண்டு, “என்ன பண்றது..? இந்த காலத்துல, படிச்சவுடனே எங்க வேலை கிடைக்குது?..
இருந்தாலும், உங்க அம்மா ஒத்த ஆளா, உன்ன கஷ்டப்பட்டு, படிக்க வைச்சதுக்கு, நீயாச்சும், உங்க அப்பானாட்டம் இல்லாம, ஒரு வேலைக்கு போய் அம்மாவ காப்பாத்தணும்”ட்டு போனவங்க மறுநாள், வீட்டுக்கு வந்து, ஒரு துண்டு சீட்டு கொடுத்துவிட்டு, எங்க அப்புச்சி மாமாவோட போன் நம்பர்.. திருச்சில ஒர் ஆடிட்டிங் ஆபிஸ்ல அக்கவுண்ட்ஸ் படிச்சவுக வேலைக்கு வேணும்னாங்க.. எனக்கு உன் ஞாபகம் வந்துட்டு.. நீயும் அக்கவுண்ட்ஸ் படிச்சவந்தானே, போய் பாருனு சீட்ட கையில் திணித்துவிட்டு போய்டாங்க..
நானும், ஒரு புது உற்சாகத்தோடு, மொபைலை எடுத்து, கடகடவென பொத்தான்களை தட்டினேன்.. இரண்டு, மூன்று ரிங்க்களுக்கு பிறகு எடுத்தார்..
எல்லாம் பேசிவிட்டு அட்ரஸை வாங்கிக்கொண்டேன்..!!!
நாளை இன்டர்வியூ..
—–
இன்று,
தொடக்கமே சோர்வோடு.. லேசாக காய்ச்சலாக இருந்தது.
அம்மா காபியை கொடுத்துட்டு, காய்ச்சல் எப்டி இருக்குனு, கழுத்தை தொட்டுப்பாத்தாங்க..
என்னமா, சொல்ற..!!?
“ஆமாப்பு, நைட் முழுக்க உமக்கு காய்ச்ச, ஒறக்கத்துல புலம்புனே.. அதான் எழுப்பி, பெரியஆசுபத்ரி சுர மாத்திரைய கலக்கி, குடுத்தேன்.. இப்ப கொறஞ்சிருக்கு..” உமக்கு ஏதும் ஞாபவமில்லயா??னாங்க..
சரி போவட்டுமா,.. மணி 6ஆகிட்டு.. இன்னைக்கு இன்டர்வியூக்கு போவனும்னு, துண்ட எடுத்து கட்டிக்கிட்டு, வெந்நீர்ல குளிச்சிப்புட்டு, ட்ரஸ் அயர்ன் பண்ணி போட்டுக்கிட்டு, அம்மா செய்த இட்லிய ரெண்டு பிச்சுதின்னுப்ட்டு..முச்சந்தி பிள்ளையாரை உதடு சுழிப்பால் வணங்கி, ஊர் பஸ் நிறுத்ததுக்கு ஓட்டம் பிடித்தேன்..
பஸ் பஞ்சர்ஆ!மாப்பா.. என்று பஸ்வரும் வழியே சைக்கிளில் வந்த பெருசு,…நிறுத்தத்தில் இருந்தவர்களை உஷார் படுத்தியது..
ச்சே.., என்னடா இது?ன்னுட்டு, வயல் வழியே மேல்ரோட்டை அடைந்தால் மணி எட்டு..! அரசுப்பேருந்து என்னை கடந்து போய்க்கொண்டிருந்தது..
பின்னால் வந்த பைக்கில் லிப்ட் கேட்டு பஸ்ஸை அடுத்த ஸ்டாப்பில் பிடித்து ஏறினேன்..
9.40க்கு சத்திரம் பேருந்து நிலையம்..
வெயில் வறுக்க தொடங்கியது.. உடல் சோர்வு ஒருபுறம்..
அங்கிருந்து, ஸ்ரீரங்கம் போகும் வழியில், ஆபிஸ் கண்டுபிடித்து, களைத்துப்போய் உள்ளே நுழைந்தேன்..
15 பேர் எனக்கு முன்பே அமர்ந்திருந்தனர்..பாதிபேருக்கு இன்டர்வியூ முடிந்தே விட்டது..
அந்த போன் ஆசாமியை தொடர்பு கொள்ள.. என்னை தனியே அழைத்துசென்று..அறிமுகமானவரை திட்டுவதுபோல்.. திட்டித்தீர்த்தார்..
“அவனவன் நாயாபேயா வேலைக்காக அலையுறான்.. நீ என்னடானா..இவ்ளோ லேட்டா சாவகாசமா வர்ற.. கஷ்டபடுற குடும்பம்னு விஜி சொன்னாலேனு பாத்தா..இப்டி சோம்பேறியா இருக்கியேனு” கத்தினார்.
எனது நிலையை எடுத்து சொல்ல யாருமே இல்லை.. உடல் சூடு அதிகமானது..
இன்டர்வியு சம்பிரதாயம் முடிந்து, எல்லோருக்குமான பொதுவான தோரணையில், “கால் பண்றோம்” என்ற பதிலோடு வெளியேறினோம்..
ப்யூன் மட்டும் “ராகேஷ்” உள்ளவாங்க என்றார்..
சிவப்பான தேகம், ப்ரெஞ்ச் தாடி வாலிபன் உள்ளே போனான்..
‘வேலை அவனுக்குதான்” என்று கூட்டம் முணுமுணுத்தது..
இத்தனைக்கும், அவன் எனக்கு பக்கத்திலிருந்தவன்.. அவனது சர்டிபிகேட்களை எதேர்ச்சயாய் பார்க்கும் போது, 4 அரியர் என இருந்தது..
மொத்தமாய் வெறுப்படைந்து போனேன்..
ஸ்ரீரங்கம் வந்தும்கூட, அரங்கனை காண மனம் ஒப்பவில்லை.
எல்லாவற்றுக்கும் காரணம் அவன்தான்.. இறைவனை நம்பி, நன்மைநடக்கும் என்பது முட்டாள்தனம்,.. பணம், சிபாரிசு மட்டுமே எல்லாம்.. திறமைக்கு எங்குமே மதிப்பில்லை..என்றெல்லாம் குமுறியபடியே….காய்ச்சல் அதிகமானது..!!
சிறிது நேரத்தில், அம்மா மண்டபம் அடைந்து., சலசலத்து ஊர்ந்து கொண்டிருக்கும் காவிரியை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
மதியநேர பசி, களைப்பு,..உறங்கிபோனேன்.
மாலை 5 ஆகிவிட்டது, கூட்டம் சேர்ந்திருந்தது.. சுற்றுலா பயணிகள்..சிலர் அமர்ந்தும், காவிரியில் குளித்துக் கொண்டிருந்தனர்.. திருமால் படத்தை கையில் பிடித்துக்கொண்டு, ஓர் யாசகர், வரும் பயணிகளிடம் காசு கேட்டுக்கொண்டு, ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார்.
“நடப்பதுவும், நடந்தனவும் பரமனின் செயல்” என்று பிதற்றிக்கொண்டு..உளறி கொண்டும் ஒரு கிறுக்கன் உலவிக்கொண்டிருந்தான்.
இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை..முதலாமவன், கடவுளை வைத்து, ஏமாற்றிக்கொண்டிருக்கிறான், இரண்டாமவன் கடவுளிடம் ஏமாறிக்கொண்டுருக்கிறான்..என்றே தோணிற்று..!!
இருக்கும் பணத்தை வைத்து, ஒரு டீ கப் காலியானது.
பேருந்து நிலையத்தை அடைந்தேன்.. உச்சிப்பிள்ளையார் கோவில் கலசத்தின் மேல் மின்விளக்கு ஒளிர்ந்து..பொழுது கடந்துவிட்டதை உணர்த்தியது.
மேல்ரோடு போய்தான்..ஊர் பேருந்தை பிடிக்கணும்.. பஸ் நிலையத்தை அடைந்தேன், இரண்டு பேருந்து..இருந்தது.. எது முன்னே போகும் என்று விசாரிக்காமல், முதல் பேருந்தில் அமர்ந்தேன்.. இரண்டு பேருந்திலும் முதல் சீட் காலியாகவே இருந்தது.
எப்போதுமே, டிரைவர் சீட்டுக்கு இடப்புறம் உட்காருவதுதான் எனக்கு பிடிக்குமென்பதால்..முதல் சீட்டில் உட்கார்ந்தேன்.
வண்டி, நெடுநேரமாகியும் புறப்படவில்லை..பின்னே இருக்கும் பேருந்து.. நிரம்ப ஆரம்பிக்க, இந்த பேருந்தில் ஏறியவர்களும், அப்பேருந்துக்கு ஓடினர்.
எனக்கு போக மனம் இல்லை.. ஏதோ என்னை தடுத்தது…!?! சீக்கிரம் போய் என்ன ஆகப்போகிறது..?
வேலை களைப்பை போக்க, அவர்தம் வீடுகளுக்கு போக ஆசைபடுகின்றனர்.
நாம் என்ன ? வெட்டி யாய்தானே இருக்கிறேன்.. என்ற விரக்தியே மிஞ்சியது.
அந்த பேருந்து புறப்பட்டது..
15 நிமிடம் கழித்து இப்பேருந்தும் புறப்பட்டது.
வண்டி, சிறிதுதூரம் சென்றது..உறக்கம் கண்ணை இறுக்கியது.
வழியில் கொள்ளிடப்பாலத்தை கடந்து திரும்பும்போது..
“டமால்”….??????????
.
.
.
.
.
.
.
.
*****தொடரும்*****
இரண்டாம் பாகம்:
“டமால்….?????????
என்ற பெருசத்தத்தோடு ஒரு மோதல்..?!?!
கண்ணை கசக்கி விழித்து பார்த்த போது,..
எனக்கு முன்னே சென்ற அந்த பேருந்து.. சாலையில் நிறுத்தியிருந்த கம்பிகள் ஏற்றி சென்ற லாரியில் மோதி உருக்குலைந்து போய் இருந்தது…
ஓரே கூச்சல்..அலறல்..!!
கூட்டம் சேர்ந்து விட்டது..
நான் சென்ற பேருந்து ஓரமாய் நிறுத்தப்பட்டது..
இறங்கி விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடினேன்..
பேருந்து, தாறுமாறாய்..உடைந்து..இருப்பதை பார்த்தவுடனே மனம் படபடத்தது..??!
“ட்ரைவருக்கு படுகாயம் தான்பா.., முன்சீட்ல, இருந்த பையன்தான், கம்பிக பாய்ஞ்சு ஸ்பாட் அவுட்” னு குரல்கள் வெளிப்பட்டது..!!
கேட்டவுடனே, தலை கிறுகிறுத்தது..
தவறிப்போய், அந்த பேருந்தில்..’நான் பயணித்திருந்தால்??. அவன் அமர்ந்த முன் சீட்டில் நானும் பயணித்திருந்தால்…??
அந்த இளைஞனுக்கு பதில், இந்த இடத்தில், என்பிணம் தானே கிடந்திருக்கும்??
யார் என்னை தடுத்தது..??
எது என்னை அதே பேருந்திலே பயணிக்கவைத்தது..??
யோசிக்க, யோசிக்க..மனம் சமாதானமடையவில்லை..
போலிஸும், ஆம்புலன்ஸும் வந்தது.. போக்குவரத்து சீரானதும், எனது பேருந்தும் புறப்பட்டது..
வீடு வந்தடைந்தேன். பெருங்களைப்பில், அம்மாவிடம் கூட எதுவும் பேசாமல் உறங்கிவிட்டேன்..
*****
மறுநாள்,
எழுந்திருக்க நேரமாயிற்று..
அம்மா, “அப்பு, மூஞ்சி ஒருமாறி இருக்கு, உடம்பு பரவாயில்லையா,” னாங்க..
“ம்ம்ம்ம்” என்று இழுவையாக பதிலளித்துவிட்டு..வெளியே சென்றேன்.
‘மாமு, என்னடா..நேத்து இண்டர்வியூ போனியாமே, என்னாச்சு’ என்றபடியே.. என் நண்பன் பரசு எதிர்நோக்கி..வந்தான்.
‘தெரியல..போன் பண்றானாங்க’ என்றேன்.
டீக்கடைக்கு கூட்டிக்கிட்டு வந்தான்..
“ரெண்டு டீ அண்ணே..” என்றவுடன் சரசரவென..போட்டு கொடுத்தார்.
பெஞ்சில் அமர்ந்து, டீயை உறிஞ்சயபடியே..நாளிதழை புரட்டினேன்.
அரசியல், பொது செய்திகளை படித்துவிட்டு, உள்ளூர் செய்திகளை பார்த்தேன்.
மூன்றாவது பக்கத்தில், நேற்றிரவு நடந்த அந்த விபத்து பற்றிய செய்தி..!
இறந்தவரின் படத்தோடு சம்பவத்தை விவரித்தது அச்செய்தி…
இறந்த இளைஞனின் படம்..????
எங்கோ பார்த்தது போல் இருந்தது..??
செய்தியில், தில்லை நகரை சேர்ந்த அவரின் பெயர் ‘ராகேஷ்’ என்றிருந்தது.. அவர் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது என்றிருந்தது.
உடனே..மூளை நரம்புகள் அவனை அடையாளம் கண்டது..!
நேற்று இண்டர்வியூவில் சிபாரிசால் வேலை கிடைத்த அதே இளைஞன் தான் அவன்..
சற்று நேரத்தில், மனம் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்தது.
எனக்கு ஏன் நேற்று காய்ச்சல் வந்தது?
காலை ஏன் பேருந்தை தவறவிட்டேன்?
இண்டர்வியூவில், அந்த இளைஞன் தேர்வாகியது.
இரவு நடந்த பேருந்து விபத்தில் நான் தப்பித்தது..என எல்லாவற்றுக்கும் விடை கிடைத்தை போன்ற ஓர் உணர்வு..!!
“நடப்பதுவும், நடந்தனவும் பரமனின் செயல்” என்று அந்த கிறுக்கன் அம்மா மண்டபத்தில் சொன்னது மட்டுமே எதிரொளித்தது..!!
முச்சந்தி பிள்ளையார் கோவிலில் மணி அதிர்ந்தது..!!!
நன்றி..கடவுளுக்கு..!!
Arumai