கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 2,278 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முகில்களின் கைகளும் கால்களும் நீண்டு படர்ந்து கறுக்கத் தொடங்கின. அம்மாவின் முகமும் அது போலவே. எடி. பிள்ளை இந்த தேங்காய் மட்டைகளை எடுத்து அடுக்கு. இந்த சனியன் பிடிச்ச மழை எப்ப வரும் எப்ப போகும் எண்டும் தெரியாது. இந்த அம்மாவுக்கு மழையை திட்டத்தான் தெரியும். பாவம் மழை. முந்தி நாங்கள் சிலேற் காயவேணும் எண்டாலும் மழை போ வெய்யில் வா எண்டுதானே பாடுறனாங்கள்.

நான் கத்துறது உனக்கு கேக்கேல்லையே?

இதை எங்க அடுக்கினாலும் நனையத்தானே போகுது. அதைவிட இதிலேயே கிடந்து நனையட்டும்.

உனக்கு நல்லா வாய் கூடிப்போயிற்றுது. எல்லாம் உன்ரை அப்பா தர்ற செல்லம்.

சே இந்த அம்மாவுக்கு ரசனையே இல்லை. எப்ப பார்த்தாலும் மழையை பேசிக்கொண்டே இருப்பா. பிறகு தண்ணி இல்லையெண்டும் அழுது கொண்டு இருப்பா. மழையைக் கண்டா மரம், செடி, கொடி எல்லாம் மகிழும். இந்த மண்ணும் மழையை சேர்த்து வைத்துக்கொண்டு எனக்காகக் காத்திருக்கும். நானும் என்ரை சொந்தக் கிணற்றில் சுகந்தி, ராகினி, கமலா மாதிரி அள்ளி அள்ளிக் குடிப்பன், குளிப்பன். தண்ணி எண்டு கேட்டு வாறா எல்லாரையும் நீங்களே அள்ளிக்கொண்டு போங்கோ எண்டுதான் சொல்லுவன். அவையள் என்னைக் கண்டா வேணுமெண்டு தங்கட. துலாவில் தொங்கி தொங்கி அள்ளுவினம். எனக்கும் ஆசையாக இருக்கும் நானும் எப்பவாவது ஒரு நாள் அவையள் மாதிரி துலாவில் தொங்கி தொங்கி அள்ளவேணும். நான் பார்க்கிறது தெரிஞ்ச இன்னும் கொஞ்சம் கூட தொங்குவினம். ஒரு நாளைக்கு இந்த கயிற்றை தொட்டுப் பார்க்கவேணுமெண்டு ஆசை துளிர் விடும். ஆனால் சரஸ்வதி பூஜை அன்று நடந்ததை நினைச்சா துளிர்த்த வேகத்தில் கருகி விழும்.

பாவம் சிவராசா நானும் அமுதாவும்தாள் கேட்டனாங்கள். எங்களாலதானே அவன் இப்ப பள்ளிக்கூடத்துக்கு வாறதே இல்லை. அதுக்கு பிறகு இந்த துலாவைப் பார்க்கிற நேரமெல்லாம் ஆறுமுக வாத்தியரின்ட கோபமுகமும் சிவராசாவினர சிவந்த முகமும்தான் ஞாபத்தில வரும். மனுசரின்ர தோற்றத்துக்கும் அவையளுக்கும் சம்பந்தமே இருக்கா தெண்டு வாத்தியரைப் பார்த்துதான் எனக்கு தெரிஞ்சது. ஏன் என்ரை அப்பாவையும்தான். ஊத்தை துரை எண்டுதானே என்ரை அப்பாவை எல்லாரும் கூப்பிடுவினம். அதுக்குள்ள இருக்கிற வெள்ளை மனசை ஆருக்கும் தெரியாது. ஆனா எனக்கு மட்டும் இல்லை என்ரை அம்மாளாச்சிக்கும் தெரியும்.

அண்டைக்கெண்டு பார்த்து கிணத்தில் தண்ணீ எடுத்து தர ஆரும் இல்லை. அப்பவும் ஆறுமுக வாத்தியார் சொல்லுவார்.

எடி பெடிச்சியள் வாளியில முட்டாமல் குடியுங்கோ.

இவர் டாப்பு கூப்பிடேக்க மட்டும்தான் எங்கட பெயரை சொல்லுவார். அண்டைக்கும் இப்பிடித் தான் தேவிகா எண்டு கூப்பிட்டுட்டு,

ஏனடி உன்ரை கொப்பர் நல்லா படம் பார்ப்பாரோ?

ஏன் இப்பிடி கேட்கிறார் எனக்கு அன்று விளங்கவே இல்லை. ஆனா வகுப்பில எல்லாரும் சிரிச்சவை. அதிலேயும் சுகந்தியின்ரை சிரிப்பு தனிச்சு கேட்டது. ஆனா நான் அழுததைப் பார்த்து அமுதாவும் அழுதவள். வாத்தியாருக்கு வெட்க்கையா இருந்தா பிள்ளையள் வாங்கோ இன்டைக்கு மா மரத்துக்கு கீழ இருந்து படிப்பம் எண்டு சொல்லி விட்டு என்னையும் அமுதாவையும்தான் அவரின்ர கதிரையை தூக்கிக்கொண்டு வரச் சொல்லுவார். பிறகு மகாபாரதக் கதை சொல்லுவார். அவர் கதை சொல்லேக்க எனக்கு வாத்தியார் சகுனி மாதிரி, துரியோதனன் மாதிரித்தான் தெரிவார். ஆனா இதே கதையை வைகுந்தசாமி வாத்தியார் சொல்லேக்க அவர் கர்ணன் மாதிரி, தருமன் மாதிரி இருப்பார். அவர்தான் இந்த பள்ளிக்கூடத்துக்கு அதிபர். எங்களைப் பெயர் சொல்லித்தான் கூப்பிடு வார். சில நேரத்தில இங் முடிஞ்சு போயிற்றா தன்ரை பேனாவை தருவார். இப்பஅவரின்ர இடத்தில எனக்கு பிடிக்காத இவர். உண்யைான அதிபர் எப்ப வருவார்? எனக்குள் இக்கேள்வி எழுந்து கொண்டே இருக்கும்.

வகுப்பு தொடங்கி விட்டதுக்கு அடையாளமா ஆறுமுக வாத்தியார் நமச்சிவாய பதிகம் சொல்லத் தொடங்கிவிடுவார். எல்லாரும் கத்தி கத்தி பாடு விளம். ஆனா எனக்கு அந்த பாட்டு பாடவே பிடிக்காது. இது செத்த ஆட்களுக்கு படிக்கிற தேவாரம் எண்டு பயம். ஆனா அவர் பாடேக்க எத்தனை பிறப்புக்கு பிறகு கிடைச்ச பிறப்பு இந்த மனுச பிறப்பு என்று மனதுக்க எண்ணிக்கொண்டே இருப்பன். அவரும் கண்ணை மூடிக்கொண்டு எல்லோரும் ஏற்க்க பணிந்து என்று சொல்லேக்க நல்லவர் மாதிரித்தான் தெரிவார். வாத்தியாரின்ர வெள்ளை வேஷ்டியும், நஷனலும், கழுத்தை சுற்றி பாம்பு மாதிரி இருக்கிற சால்வையும். அந்த சால்வை மடிப்பு விரிஞ்சா நாக பாம்பு படம் விரிச்ச மாதிரி இருக்கும். அதை தொட்டு பார்க்க வேணும் எண்டு எனக்கு ஆசை. ஆனா பயம். என்ரை அப்பா பாவம். அவருக்கும் இப்பிடி போட்டா எப்பிடி இருக்கும்? அப்பாட்டை ஒரே ஒரு சாரம்தான். அதில இனி தைக்கிறதுக்கு இடமே இல்லை. அம்மா சொல்லுவா..

ஏனுங்க ஒரு சாரமேனும் வாங்கலாம்தானே?

உனக்கென்ன விசரே எனக்கு சாரம் வாங்கிற காசில என்ரை பிள்ளைக்கு சட்டை துணி எடுத்திடுவன். எனக்கென்னத்துக்கு பிள்ளை. இந்தா தீபாவளி வருகுது. அதுக்கு ஆரும் பலகாரம் தரேக்க கோடித் துணியும் தருவினம்தானே. தார எண்டுதான் சொன்னவை.

அப்பா தீபாவளியை எதிர்பார்த்து ஏமாந்து போவார். பிறகு சரி சரி தைப்பொங்கலுக்கு தருவினம். இப்பிடியே எல்லாம் வரும் போகும். ஆனா அப்பாவை விட்டு அந்த கிளிஞ்ச சாரம்மட்டும் போகாது.

என்ரை கவலையை மகிழ்வை எல்லாம் நான் முற்ற வெளி மீனாட்சி அம்மனிடம்தான் சொல்லு வன். மதியம் ஆரும் இருக்க மாட்டினம். அவவின்ரை ஆலமர வேரில் இருந்து கொண்டு நான் கவலையை சொல்லி அழேக்க அவவும் அழுவா. நான் சிரிச்சா அவவும் சிரிப்பா. பிறகு அங்கை விழுந்து கிடக்கிற அரளி பூக்களை எடுத்து அவவின்ரை வாசலில வைப்பன். அம்மாளாச்சி உன்ரை கிணத்திலையும் தண்ணி அள்ள என்னை ஆரும் விடுகினம் இல்லை. நீ அவைக்கு சொல்லலாம்தானே. நீ சொன்னா கேட்பினம். அவை உனக்கு சரியான பயம். நீ கனவில வந்து சொன்னபடியாலதானே உனக்கு கோயில் கட்டினவையாம். சித்திரா பவுர்ணமி அன்று மாத்திரம் எங்களுக்கு சில சலுகைகள் தருவினம். அம்மா சொல்லுறவா அது அம்மாளாச்சிக்கு பயந்து தான் விடுகினம். அண்டைக்கு என்ரை அம்மாளாச்சி என்னை பார்த்து பார்த்து சிரிப்பா, பின்னேரம் வீதிவலம் வரத் தொடங்கினா எண்டா விடியத்தான் இருப்பிடத்துக்கு வருவா. நாங்களும் அவவுக்கு பின்னால் போவம். நல்ல சாப்பாடெல்லாம் கிடைக்கும். சுகந்தி, ராகினி, கமலா எல்லாரின்ர வீட்டிலையும் மண்டபடி நடக்கும். நான் அப்பாட்டைசொல்லியிருவன்.

அங்கை மாத்திரம் சுண்டல் அவல் வாங்கக் கூடாது.

ஏன் பிள்ளை வாங்கக் கூடாது?

அது வாங்கக் கூடாது எண்டா வாங்கக் கூடாது தான்.

சுகந்தி கண்கொத்தி பாம்பு மாதிரி அவ்வளவு சனத்துக்கையும் என்னை துலாவுவாள். நான் அம்மனின்ரை சக்கரத்துக்கு பின்னால ஒளிஞ்சிடுவன். நல்லா தேடட்டும் எண்டு ஒளிச்சிருப்பன். பிறகு கேட்பாள்,

ஏனடி நீ அண்டைக்கு வரேல்லை?

ஏங்க? எண்டு நானும் தெரியாத மாதிரி கேட்பன். அவள் என்னை ஒரு மாதிரி பார்த்திட்டு போவாள். இவை மூன்று பேரிலையும் இவள்தான் பொல்லாதவள் எண்டு அமுதா சொல்லிறது சரி. என்னை கண்டா காணும் மூக்கை பிடிச்சுக்கொண்டு.

எடியே நீ உன்ரை அப்பாட்டை சொல்லு நாங்கள் பள்ளிக்கூடம் வரேக்க அந்த வண்டில தள்ளிக் கொண்டு வரவேண்டாம் எண்டு. சீக் ஒரே நாத்தம். ஏனடி உனக்கு உன்ரை அப்பாவில அரியண்டம் இல்லையே? எங்கட கோடிக்குள்ளால் உன்ரை அப்பா வந்து போனால மணக்கும் எண்டு சொல்லி முகத்தை கோணலாக்கி சிரிப்பாள். நான் அப்பாட்டை போய் அழுவன்.

அப்பா சொல்லுவார், இந்த ஊத்தை துரை இல்லாட்டி அவையளின்ரை வீடு மணக்கத் தொடங்கிவிடும். சரி சரி விடம்மா அது சின்னப் பிள்ளைதானே.

இல்லை அவள் சின்னப் பிள்ளை இல்லை. இந்த அப்பாவுக்கு அவளைப் பற்றி ஒன்டும் தெரியாது. அப்பாவுக்கு எல்லாரும் நல்லவை. வைகுந்தசாமி வாத்தியார் சொன்னவர். ஒரு நாள் துரோணர் தருமனிட்டையும் துரியோதனட்டையும் சொன்னா ராம், இந்த உலகத்தில எவ்வளவு நல்ல மனுசர் கெட்ட மனுசர் இருக்கினம் எண்டு கணக்கெடுத்திட்டு வாங்கோ என்றாராம். துரியோதனுக்கு எல்லாரும் கெட்டவர்களாகவே தெரிஞ்சதாம். தருமனுக்கு எல்லாரும் நல்லவர்களா தெரிஞ்சுதாம். அதுக்கு துரோணர் சொன்னாராம். எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது எண்டு சொல்லிற்று என்னை பார்த்து சிரிச்சவர். அவரும் அம்மாளாச்சி மாதிரித்தான் சிரிப்பார். அவர் வருத்தம் மாறி வந்த உடனே எங்களை கேட்டவர்,

ஏப்பிடி பிள்ளையள் படிக்கிறீங்களோ? கவன படிக்கவேணும் என்ன.

எனக்கும் அமுதாவுக்கும் சரியான சந்தோஷம். நாங்கள் அவருக்காக அம்மாளாச்சியிற்றை நேர்த்திடவும் வைச்சதையும் ஆரும் இல்லாத நேரத்தில கோயிலை சுற்றி அடிஅளிச்சதையும் சொல்ல வேணும் போல இருந்தது.

என்ன பிள்ளையள் சிரிக்கிறியள்? எண்டு தலையை தடவிவிட்டவர். நானும் அமுதாவும் அழுதிட்டம். அவர் சிரிச்சுக்கொண்டு சின்னக் குழந்தைகள் தேவதைகள் அவை சிரிக்கவேணும் அழக் கூடாது. அவர் வந்தாப்பிறகு பள்ளிக்கூட தோட்டப்பூக்கள் எல்லாம் பூத்து சிரிச்சது. அதால வில்லூன்றி சுடலைக்கு போறவையை பார்த்து எனக்கும் அமுதாவுக்கும் பயமே வரேல்லை. ஆனா ஆறுமுக வாத்தியார் மட்டும் இன்னும் கோபமா உலாவினார். அவரை பார்த்தா எனக்கு பகடைக்காய் இழந்த சகுனி போல இருந்தார். ஆனாலும் அவர் am 0 சூரன் சாகேல்ல உருவம் மட்டும்தான் மாறியிருக்கு எண்ட மாதிரித்தான் எங்களை பார்த்தார்.

அவருக்கும் அவர் படிப்பிக்கிறதுக்கும் சம்பந்தமே இருக்காது. பாரதியார் பாட்டில் எனக்கு பிடிச்ச பாட்டு காணி நிலம் வேண்டும் பராசக்தி பாட்டை சொல்லி தரேக்க கத்தும் குயிலோசை எண்டு சொன்னவர், எனக்கு கேட்க வேணும் போல இருந்தது. குயில் கூவும் எப்பிடி கத்தும்? வாய் உன்னிக்கொண்டு இருந்தது கீழ கிடந்த பிரம்பு என்னை பார்த்து சிரிக்கிற மாதிரி இருந்ததால் வாய் தன் பாட்டில் மூடிற்று. சிலர் கையால அடிக்கவே தேவையில்லை. அதைவிட கொடுமையான அடியை வேறுவிதமாய் தருவினம். அண்டைக்கு இப்பிடித்தான் சிவராசா எங்களுக்காக துலாக்கயிறை தொட்டதுக்கு…

உங்களுக்கு தண்ணி அள்ளக் கேட்குதோ எண்டு எவ்வளவு அடி அடிச்சவர். நாங்கதான் அழுதனாங்கள். சிவராச அழவே இல்லை. அவனுக்கு அப்பிடி யொரு கோபம் வந்ததை நான் பார்த்ததே இல்லை.

ஏன் மாஸ்ரர் அள்ளக் கூடாது?

கூடாது எண்டா பிறகென்ன கேள்வி.

அப்ப ஏன் சாதிகள் இல்லையடி பாப்பா எண்டு படிப்பிக்கிறீங்கள்?

எட வாத்தியார் எண்ட மரியாதை இல்லாமல் எதிர்த்தோ கதைக்கிற. உங்களுக்கு இடம் கொடுத்தா கடைசியில காகத்துக்கு இடம் கொடுத்த கொக்கின்ரை கதையாப் போயிடும் எண்டு எத்தனை அடி அடிச்சவர். எல்லாரும் பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததை பார்க்க. அஸ்தினாபுரத்து அநீதி களை எல்லா கண்களும் பார்த்துக்கொண்டு இருந்தது போல விழிகள் விழித்திருக்க மனங்கள் கோழைகளாகி எங்கேயோ ஓடி ஒளிந்திருந்தது.

அம்மாளாச்சியிற்றை நாள் சத்தியம் பண்ணியிருக்கிறன். எப்பிடியாவது ஒரு கிணறு வெட்டுவன். பிறகு அதில் அரளி மரம் வைச்சு மரத்தில இருந்தே பூ பிச்சு உனக்கு தருவன். ஆனா எப்பிடி வெட்டுறது? சிவராசாவும் நானும் இதை பற்றி கதைப்பம். அவனும் அவையளின்ரை அப்பாவோட கிணறு வெட்ட போறவன். அவன் சொல்லுவான்.

கிணறு வெட்டுறது நாங்கள். தண்ணி அள்ளுறது அவையள். ம் என்ன செய்யலாம். நான் வெடிவைக்கவும் பழகீட்டன். இளி கொஞ்ச காசும் மனுசரும் வேணும். உன்ரை அப்பாட்டை கேட்டா அவர் பயப்பிடுறார். எத்தனை நாளுக்கு இவையளின்ரை கை தண்ணி அள்ளுறதை நாங்க வாய் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதுக்கு ஒரு முடிவு வேணும். நீதான் உன்ரை அப்பாட்டை சொல்லி உங்கட காணிக்கை வெட்ட விடவேணும். அதில நல்ல தண்ணி வரும் எனக்கு தெரியும். எல்லாருக்கும் பொதுக் கிணறா இருக்கட்டும் எண்டு சொல்லிக் கொண்டே போனான். அவனோட சேர்ந்து அம்மன் கோவில் மண்ணும் போனது. நானும் அம்மனும் பார்த்துக்கொண்டே இருந்தம்.

எவ்வளவு நேரமெண்டு ஆரும் வராயினமோ எண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறது. நிழல் இன்றி முற்றவெளி அந்த நீண்ட பகல் பொழுதில் தவித்துக் கொண்டிருந்தது. நானும் குடத்தோடும் தாகத்தோடும் தவித்துக்கொண்டு இருந்தன். இந்த பொழுதுகளில் தான் குளத்தின்ரை நடுவில எறிந்த கல்லு வட்டம் போட்டு அது விரிஞ்சு விரிஞ்சு பெரிசாகிற மாதிரி எனக்குள்ள புதைந்து கிடக்கிற கவலை எல்லாம் விரிஞ்சு வெடித்து வெளியில வரும். அம்மாளாச்சி யிற்றை எல்லா கவலைகளையும் பகிர்ந்துகொள்வேன். அவவும் கவலையா கேட்டுக்கொண்டு இருப்பா.

மிகுதி நேரத்தில் பஞ்சு பஞ்சாய் குவிந்திருக்கும் வானத்தை பார்த்துக்கொண்டே இருப்பன். முகில்கள் முதலை போல மலை போல எல்லாம் இருக்கும். அதை அள்ளி அள்ளி விளையாடுவன். என்னோட விளையாட தேவதைகள் வருவினம். அவை என்ரை கையை பிடிச்சுக்கொண்டே விளையாடுவினம். ஒரே கோப்பையில சாப்பிடுவம். என்னை தண்ணி அள்ளி விளையாட விடுவினம். ஆரும் ஒன்றும் சொல்ல மாட்டினம்.

என்ன தண்ணி வேணுமோ? என்ற குரல் என்னை நரகத்தில் மறுபடியும் இறக்கியது.

நீங்கள் எல்லாரும் இப்ப பெரியாக்கள் ஆகிட்டீங் களாக்கும்?

என்ன கேட்கிறார் ஐயர் என்று யோசிச்சுக் கொண்டு நிற்க,

கிணறெல்லாம் வெட்டுறீங்களாம் எல்லாம் கலிகாலமா போயிற்றுது அம்மாளாச்சி.

எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்தது. இவருக்கு என்ன செய்யுது? அதை வெட்டுறதுக்கும் அப்பாவை சம்மதிக்க வைக்கிறதுக்கும் நானும் சிவராசவும் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும். அம்மாளாச்சி என்று மூற்ற வெளி காற்றை எல்லாம் ஒருமுறை இழுத்து சூறாவளியாய் வெளியே தள்ளினபடி ஆயத்த மணியை அடித்தார். இனி அம்மனை சுற்றி கூட்டம் இருக்கும். அவையள் அம்மாளாச்சியை பார்த்து அழுவினம், கதைப்பினம். என்னை கண்டா மாத்திரம் முகத்தை சுளிப்பினம். அதுக்கிடையில கெதியாய் போயிடுவம்.

ஒவ்வொரு அடியும் எனக்கு பலதையும் நினைவு படுத்தியது. அம்மாளாச்சி கிணறு வெட்டி முடியும் மட்டும் மழை பெய்யக் கூடாது. மழையும், இடி முளக்கமும் எனக்கு நன்றாகவே பிடிக்கும். ஆனா சண்டைக்கோழி மாதிரி திரியிற சுகந்திக்கு இடி முளக்கம் எண்டா பயம், உனக்கு பயமில்லையேடி? ம் இதைவிட சத்தத்தோட வெடி வெடிச்சு தண்ணி சீறிபாய்கிற நாளுக்காக பார்த்துக்கொண்டிருக்கிற எனக்கு பயமோ? சொல்லவேணும் போல இருக்கும்.

அந்த நாளும் வந்தது. எல்லா அனுமதியும் பெற்று நாளைக்கு வெடி வைக்கிற நாள். இரவிராவா நித்திரையே இல்லை. அம்மாவும் அம்மாளாச்சி அம்மாளாச்சி எண்டு கும்பிட்டுக்கொண்டே இருந்தா. அப்பாவை பார்த்தன். புரண்டு புரண்டு படுப்பது தெரிந்தது. கண்ணை மூடினாலும் முளிச்சாலும் தண்ணி சீறிக்கொண்டு வாற மாதிரியே இருந்தது. எப்படா விடியும் என்று மனம் ஏங்கியது.

அப்பாவும் சிவராசாவும் கிணற்றுக்குள்ள இறங்க வெளிக்கிட நான் அம்மாளாச்சியிற்ற ஓடி வந்திட்டன். என்னால அம்மனோட ஒன்றும் கதைக்கவும் முடியேல்ல. நடப்பமா இருப்பமா என்ன செய்ய? மனம் என்னவோ செய்தது.

என்ன குட்டி போட்ட ஏதோ மாதிரி நடந்து திரியிறாய்? ஐயரின் கேள்விக்கு எப்பவும் போல மௌனம் சாதித்தாலும். மனம் ஒரு நிலை இல்லாமல் தவித்துக்கொண்டு இருந்தது. ஒரு நிமிடம் முற்ற வெளியே இரண்டாக பிளப்பது போல் ஒரு சத்தம். என்ரை உடம்பெல்லாம் நடுங்கியது. ஐயர் அம்மா ளாச்சி என்று கத்தியபடி தட்டத்தை கீழே போட நெய்வேத்தியம் எல்லாம் சிதறியது. நான் அம்மனை பார்த்தன். அவ சிரிக்கவே இல்லை. திரும்பவும் நிலம் நடுங்கியது. அதோட அம்மாவின்ரை சத்தமும்.

அம்மா ஏன் கத்திறா சந்தோஷத்திலையா? இல்லை அழுகிறவா? என் கால்கள் காற்றை விட வேகமாக ஓடியது. எல்லாரும் கிணற்றை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிவராசா அம்மாவை பிடிச்சபடி நின்றான்.

என்ன நடந்தது? தண்ணி வந்திட்டுதா? எனக்கு எதுவும் புரியவில்லை. அம்மா பிள்ளை பிள்ளை என்று கிணறை காட்டிறாவே தவிர வேற எதுவும் சொல்லிறவே இல்லை. கிணற்றை எட்டிப் பார்த்தேன் அங்கே தண்ணி சீறி பாய்ந்து வெளியே வந்து கொண்டிருந்தது. தண்ணியோட தண்ணியோட என்ரை குஞ்சு அப்பாவின்ரை இரத்தமும்…

– காலம், யூன் 2005,

– ‘பதிவுகள்’/ ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுச் சிறுகதைபோட்டி 2004 – முதல் பரிசு!. 200கனடியன் டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *