நவாஸ் ஹாஜியார் அன்றும் வழமை போல் தனது சமூக சேவைகளை முடித்து விட்டு இரவு நேர தொழுகைகளையும் தொழுது முடித்து விட்டு தூங்கச் செல்லும் போது
நேரம் 11.30 ஆகிவிட்டது.இரவு நேரங்களில் அவரைச் சந்தித்து தனது கஷ்டங்களை எடுத்துச் சொல்லி அவரிடம் உதவி கோரி வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருந்தன. பின்னே இருக்காதா?… சும்மாவா சொல்வார்கள் அவரை அவ்வூர் மக்கள் வாய் நிறைய “ஹாஜியார் “என்று. ஆம் அவர் உண்மையிலையே இவ் ஊரின் செல்வாக்கு மிகுந்த பெரும் புள்ளி. ஹாஜியார் என்றால் இப்படித்தான் இருக்கனும் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக் காட்டு. மிகவும் சிறந்த மனிதர். கைநீட்டி வருபவருக்கு மனம் குளிரக் கொடுத்து உதவுவதோடு, வயிறு நிரம்ப உபசரித்து அனுப்பி வைப்பார்.அவர் வீட்டு விளக்குகள் இரவில் நீண்ட நேரம் எரிந்து கொண்டிருக்கும் ஊர் சனங்களுக்காய்….
‘எல்லாப் புகழும் இறைவனுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு ‘ என்ற வரிகளைக் கொண்ட நாகூர் ஈ .எம் ஹனீபாவின் பாடல் வரிகள் தொலைபேசி அழைப்பாக அவர் காதுகளை வந்தடைய சட்டென்று விழித்துக் கொண்டார் நவாஸ் ஹாஜியார். பக்கத்தில் உறங்கியிருந்த அவர் மனைவி மைமூனாவும் விழித்துக் கொண்டாள். நேரம் நான்கு மணிதான் ஆகியிருந்தது. “அஸ்ஸலாமு அலைக்கும்.யார்…பேசுறீங்க? “என்று பதட்டத்துடன் வினவினார் ஹாஜியார். மறுமுனையில் தொலைபேசியில் பேசியவர் ஸலாத்துக்கு பதில் கூறிவிட்டு சொன்ன விசயம் ஹாஜியாருக்கு தூக்கிவாரிப் போட்டது.நெஞ்சில் கைவைத்தபடி பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தார். “ஏங்க என்னாச்சு “என்று மைமூனா பதற்றத்துடன் வினவினாள்.தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு எழுந்து நின்றவர் கதிரையில் கழட்டி வைக்கப்பட்டிருந்த தனது சேட்டை அணிந்து கொண்டார். உடுத்தியிருந்த ஸாரத்துடனே வெளியே செல்ல ஆயத்தமானார். மேசையில் கிடந்த பைக் சாவியை கையில் எடுத்துக் கொண்டு முன் வாசலுக்கு விரைந்தார். “என்னாச்சுங்க ஒன்னுமே சொல்லாம நீங்க பாட்டுக்கு போறீங்க? “என்று கேட்டவாரே மைமூனாவும் பின்னால் அவசரமாக வந்தாள். “இருங்க மைமூனா பிறகு வந்து சொல்றன். “என்று கூறிவிட்டு அவசரமாக பைக்கில் அமர்ந்தார். மறு வினாடி ஸ்ட்டாட் செய்யவே பைக் வேகமாக அவ்விடத்தை விட்டு மறைந்தது. ஒன்றும் புரியாது கணவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள் அவள்.
ஹாஜியார் ஊரின் டவுன்னுக்குள் நுழையும் போதே மனிதர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துச் சென்று கொண்டிருப்பதையும், பதட்டத்துக்கு காரணமாக இருக்கும்இச்சம்பவத்தை பலவாறு விமர்சித்தபடி இருப்பதையும் அவதானித்தார். “ஹாஜி என்ன செய்ய? இப்படி ஆயிடுச்சே”என்று அருகால் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கேட்கவும் அதை ஒன்றும் காதில் வாங்காதவர் போல் விரைந்தார்.அவர் கடைக்கு அருகாமையில் வந்ததும் அதிர்ச்சியடைந்தார். இருபத்தைந்து வருட காலமாக நடாத்தி வந்த பரக்கத் ஹோட்டல் இன்று அடையாளமே தெரியாமல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. பெரிய லட்சியத்தோடு உருவாக்கப் பட்ட சாம்ராஜ்யம் பரக்கத் ஹோட்டல்.அது ஒன்றும் சிறிய ஹோட்டலல்ல பென்னம் பெரிய இரண்டு மாடிக் கட்டிடம். நவீன வசதிகளுடன் அதிகமாக கண்ணாடிச் சுவர்கள் பொருத்தப்பட்டு, ஏ சீ கள் பொருத்தப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்ட ஹோட்டல். இது ஒன்றும் தங்குவதற்கு ரூம் வசதிகள் உள்ள ஹோட்டலல்ல! பலவகையான சுவையான உணவுகளை சுத்தமாக தயாரித்து தரமானதாக மலிவான விலையில் விற்பனை செய்யும் ஒரே கடைதான் பரக்கத் ஹோட்டல்.இங்கு உள்ள பணியாட்கள் எல்லாம் சமையலை நன்கு படிச்சி கைதேர்ந்த செஃப் கள் தான். இக்கடையின் விஷேசம் பணத்துக்கு கஸ்டப் படும் ஏழை மிஸ்கீன்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எல்லாம் இலவச சேவைதான். அங்கு உட்கார்ந்தும் சாப்பிடலாம், வீட்டில்உள்ளவர்களுக்கும் கொண்டு செல்லலாம். இதனால் பணக்காரங்க சாப்பிடுவது போல் வயிறு நிரம்ப, மனம் குளிர இவர்களாலும் உண்ண முடிந்தது. இதனால் இவ்வூரில் உள்ள நிறைய சிறிய ஹோட்டல்களுக்கு வியாபாரம் சற்று குறைவாகவே நடக்கும். நிறைய வியாபாரிகளுக்கு கோபம் இருக்கத்தான் செய்தன.
தீயணைப்புப் படை வந்து தீயணைத்தாலும் கடையை சிறிதாவது மீட்டெடுக்க முடியவில்லை. ஹோட்டல் முற்றாக எரிந்து சாம்பலாகி இருந்தன. இது வெறும் கட்டிடமல்ல அவரது லட்சியம்,கனவு நினைவுகள் எல்லாமே இதில் தான் இருந்தது. அவர் சின்ன வயதிலேயே சாப்பாட்டுக்கு நிறையவே கஸ்டப் பட்டவர். விரல் விட்டு எண்ண முடியாத நாட்கள் பசியோடு பட்டினி கிடந்துள்ளார். பசியின் கொடுமையை நன்கு உணர்ந்துள்ளார். வாப்பா இல்லாத பிள்ளைகளை உம்மாதான் தனியாக வளர்த்தாள்.நான்கு தங்கைமாருக்கு ஒரே சகோதரன் இவர் தான். உம்மா அக்கம் பக்கத்தில் வேலை செய்து கிடைக்கும் பணத்தில்தான் காலம் உருண்டோடியது. அவர் சின்ன வகுப்பில் இருக்கும் போதே படிப்பை நிறுத்தி தாய்க்கு உதவியாய் இருந்தார்.
நவாஸ் ஹாஜியின் நினைவுகள் சிறுபிராயத்தை நோக்கிச் சென்றன.
பக்கத்து வீட்டு ஸலீமா தாத்தா காயப் போட்ட பழைய பாண் துண்டை தெரியாமல் போய் எடுத்து வந்து தங்கைகளுக்கும் கொடுத்து தானும் உண்பார். மாட்டிக் கொண்டால் ஏச்சுப் பேச்சுக்கள் காதில் நிறைய விழும். பல தடவை ஸத்தார் நாநாவின் ஹோட்டலில் நுழைந்து அவருக்கு தெரியாமல் பணிஸில் கைவைத்து மாட்டி அடியும் பட்டிருக்கிறார். “ஏ தம்பி இங்க பாரு இன்னுமொரு மொர இந்த மாதி செஞ்சா பாக்கம். பழைய பாண், பணிஸ் மிஞ்சா வெளனைக்கு வாங்க தாரன்”என்பார் . சின்னபையன் அல்லவா? பசி பொறுக்க வா முடியும்! விடிந்ததுமே ஓடிச் சென்று எடுத்து வந்து தங்கைமாருக்கு கொடுத்து தானும் உண்பார். பல முறை பழையது சாப்பிட்டு நோய் வாய்ப்பட்டுள்ளார்கள்.அவர்களைப் பெற்றவளும் பழையது உண்பதை தடுக்க முடியாமல் கலங்கிப் போவாள். பசியோடு உண்ணும் போது தடுக்கவா முடியும்!
இப்படி பல அனுபவப் பட்டவர் ஹாஜியார். எப்படியோ தங்கைகளை கரைசேர்த்தவர் தனது உம்மாவின் நாநாவின் ஒரே மகளான மைமூனாவை மணம் செய்தார். காலம் உருண்டோடியது அவரின்உம்மாவும் இவ்வுலகை விட்டு போய்விட்டார். ஹாஜியாரும் கடுமையாக உழைத்து சிறுகச் சிறுக சேமித்த பணத்தில் சிறிய தேநீர்க் கடை ஆரம்பித்து அதில் வேகமாக வளர்ச்சி கண்டார். அவரின் ஒரே உயரிய நோக்கு பசித்தவருக்கு உடனே உணவளித்து மகிழ்ச்சி அடைவது. தான் பட்ட பசிக் கொடுமை யாருக்கும் வராமல் பார்த்துக் கொள்வதற்காகவே பரக்கத் ஹோட்டலை ஆரம்பித்தார். போட்டி ,பொறாமையுள்ளவர்கள் இருந்தாலும் இன்று வரை நன்றாகத்தான் இயங்கியது. இன்று எப்படி இது நடந்தது? என்று எல்லாருக்கும் புதிராகவே இருந்தது.
நவாஸ் ஹாஜிக்கு பணம் ஒன்றும் பெரிய விடயமல்ல. நிறைய சொத்துக்கள் உள்ளவர். மகனும், மகளும் மணமாகி பிள்ளைங்களோடு வெளிநாட்டில் வாழ்கிறார்கள். வசிக்கின்ற வீட்டை தவிர்த்து மற்றைய சொத்துக்களை வரிய குடும்பங்களுக்கு கொடுக்க நினைத்துள்ளார். நல்ல மனசு படைத்த அவருக்கா இந்த நிலை.
எரிந்த ஹோட்டலை மீண்டும் பழைய படி உருவாக்கி விடலாம். ஆனால் அவர் முதன் முதலாக உருவாக்கிய லட்சிய சாம்ராஜ்யம் அல்லவா எரிந்து போயுள்ளது. எரிந்து போன ஹோட்டலில் அவர் உழைப்பும், வியர்வைத் துளிகளும், நினைவுகளும் அல்லவா எரிந்து கருகிவிட்டது. எரிந்தது நெருப்பாயிருந்தாலும் கருகியது அவரின் உடைந்து போன இதயம்.
(யாவும் கற்பனை)