மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார்.
இப்பொழுது யாராவது என்னிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது.
மதன் மருத்துவர் என்ன கேட்டார்னு கேளுங்களேன். நீங்க வெளில தானே இருந்தீங்க.
என்ன கேக்கணும். சொல்ல வேண்டியதை நீயே சொல்லு. இது மதன்.
எரிச்சலாக வந்தது எனக்கு.
இப்போ சம்பந்தமில்லாமல் மதன் என்னய இங்க எதுக்கு கூட்டி வந்திருக்கார். அவருக்கு ஏதும் பிரச்சினையா.
அமைதியாக ஜானவியுடன் பேச ஆரம்பித்தேன். அவள் எப்போதும் மறுக்காமல் கலகலவென்று பேசுவாள். எல்லா விசயங்களையும் கேட்டு வந்து எனக்காகச் சொல்லுவாள். பொறுமையாக மருத்துவரிடம் நடந்த உரையாடலைக் கேட்டாள். இப்போதான் எனக்கு திருப்தி.
அவளுடன் இருப்பது தனி சந்தோசம் தான்.
ஜானவி இருக்கும் வரை எனக்கு யாரும் தேவையில்லை. அவள் தினமும் டி.வி.யில் செய்திகள் பார்ப்பதால் பெரும்பாலும் அவைகளைப் பற்றி விவாதிப்போம். பின் சிறிது நேரம் சமயற்கலை.
சாயங்காலம் வாக்கிங் போகும்போது உடற்பயிற்சி பற்றி. பூங்காவில் அமர்ந்திருப்பவர்கள் பற்றி பேசுவோம். மற்றவர்களைப் பற்றி அதிகம் வம்பு பேச அவளுக்குப் பிடிக்காது. என்னைப் போலவே அவளுக்கும் பிடித்த கலர் மஞ்சள் தான். .
நான் படித்த அத்தனை கதைப் புத்தகங்களையும் அவளும் படித்திருப்பதால் கதைகளை திரும்பவும் நினைவு கூர்வோம்.
தமிழ் பேச ஆளில்லாத பஞ்சாபில் எனக்கு ஜானவி மட்டும் தான் உற்ற தோழி.
நீ பேசாவிட்டால் என்ன. எனக்கு ஜானவி இருக்கிறாள் என மதனிடம் சொன்னதற்குப் பின் தான் அவசரமாக விடுப்பு எடுத்தார் சென்னை வர. ஆனால் அவளைப் பற்றி அவர் ஒருகேள்வி கூட கேட்கவில்லை.
ஜானவியும் எங்களுடன் சென்னை வந்துள்ளாள். நேற்று தொலைக்காட்சியில் பார்த்த சினிமா கதையை சொல்லிக் கொண்டிருக்கிறாள். முன்பெல்லாம் ரேடியோவில் ஒலிச்சித்திரம் என மூன்று மணிநேர சினிமா கதையச் சுருக்கி ஒரு மணி நேரம் ஒலிபரப்புவார்களே. அதுபோல அவளும் கதையைச் சுருக்கி சொல்கிறாள். கண்ணை மூடிக்கொண்டு நான் கேட்டுக் கொண்டிருகிறேன்.
ஏனோ இந்த மதனுக்கு மட்டும் இருப்பு கொள்ளவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் மருத்துவரின் வருகைக்காக.
மருத்துவர் வந்தவுடன் அவரை விசாரிப்பார் போல. எதற்காக இத்தனையும். புரியவில்லை. கேட்டால் மட்டும் சொல்லிவிடவா போகிறார்.
இங்கு வந்ததிலிருந்து திரும்பத் திரும்ப தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உனக்கு என்னைப் பற்றி குறை சொல்ல வேண்டும் எனத் தோன்றினால் தாரளமாக மருத்துவரிடம் சொல். நான் வேணும்னாலும் திரும்ப வெளில உக்காந்துக்கறேன்.
மதனுக்கு என்ன ஆச்சு. நான் ஏன் குறை சொல்லணும். கொஞ்ச நேரம் முன்னால தானே மனநல மருத்துவர் முன்னால உக்காந்தேன். எங்கிட்ட கேட்ட பல கேள்விகளையும் அதுக்கு நான் சொன்ன பதிலையும் இப்பதான் ஜானவி கிட்ட சொன்னேன். திரும்பவும் மனதுள் அசை போட்டேன் நேரம் போவதற்காக.
உங்கள் பெயர் …
சரண்யா
உங்களுக்கு பிடித்த விசயங்களைப் பட்டியலிட்டுச் சொல்லுங்கள்.
பேசப் பிடிக்கும். முக்கியமா வம்பு கேட்கப் பிடிக்கும். அறிவுரை சொல்லப் பிடிக்கும். கூட்டமா உக்காந்து நேரம் போக்குவது பிடிக்கும். படம் பார்க்கப் பிடிக்கும்……
எதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. எது எரிச்சலைக் கொடுக்கும்.
பேசாம இருப்பது. தனியா இருப்பது. அவ்வளவு தான்.
இன்னும் அடுக்கடுக்கான கேள்விகள்.
சிறிது நேரத்துக்குப்பின் மருத்துவர் கூறினார். சரண்யா உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சாதாரணமா எல்லாப் பெண்களுக்கும் உள்ள குணம் தான் உங்ககிட்டயும் இருக்கு. பயப்படத்தேவையில்லை.
மனச அமைதியாகவும் சந்தோஷமாகவும் வச்சுக்கோங்க. அவ்வளவு தான்.
மதன் உங்கள் மனைவி தேவையில்லாமல் மனச குழப்பிக்கறாங்க. அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. டேக் கேர்.
இல்லை டாக்டர் உங்ககிட்ட முக்கியமான விசயம் சொல்லணும்.
நான் எங்க பயப்பட்டேன். எப்ப சொன்னேன் எனக்கு பிரச்சினைனு. என்ன இது. இங்கேந்து வெளில போனவுடனே மதன ஒரு பிடி பிடிக்கணும். அவர் என்ன லூசா. யோசித்துக் கொண்டிருக்கும்போதே மருத்துவர் திரும்பி வந்தார்.
அவர் மதனிடம்
நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே….என ஆரம்பித்தார்.
டாக்டர் நீங்க அவளோட தோழிகள் பத்தி கேட்டீங்களா. இது மதன்
மருத்துவர் சந்திராவுக்கு ஒரே ஆச்சரியம். இதெல்லாம் ஒரு விசயமா என.
ஓ… இது தான் பிரச்சினையா மதன் எனக் கேட்டுவிட்டு டாக்டரை நோக்கி பேசத் தொடங்கினேன்.
எனக்கு இப்போ ஒரே ஒரு தோழி தான். அவ பேரு ஜானவி. அவள நீங்கல்லாம் பாக்க முடியாது. எனக்கு வேணும் னு நெனைக்கும்போது என் கூட மட்டும் பேசுவா.
மருத்துவர் இருக்கையை விட்டு எழுந்தே விட்டார். அப்படின்னா ஜானவி ஒரு……..
என் கற்பனைத் தோழி அவ்வளவு தான். எனக்கு பேச ஆளில்லாததால் நானே உருவாக்கி வளர்த்துவிட்ட கற்பனைப் பாத்திரம்.
மதன் அதிகம் பேச மாட்டார். வேலைப் பளு வேறு. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச பாஷை தெரியாது. அதனால அப்டி செஞ்சேன்.
இதுக்குத்தான் இவ்ளோ பயமா மதன். எங்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே. கவலைப்படாதீங்க. எனக்கு ஒண்ணும் ஆகாது. எழுந்து வெளியேறினேன் என் மனத் தோழி ஜானவியுடன்.
புரிந்தும் புரியாமல் பின் தொடர்ந்தார் மதன்.
நன்றி (வல்லமை மின்னிதழ்)