என் மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2021
பார்வையிட்டோர்: 4,020 
 

அது ஒரு பின்னிரவு.

எங்கள் படுக்கை அறையில் என் மனைவியின் செல்போன் அடித்துக்கொண்டே இருந்தது. அதை எடுத்துப் பேசாமல் அவள் தவிர்த்துக்கொண்டே இருந்தாள்.

எங்கள் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். செல்போனை எடுத்துப் பேசும்படி பலமுறை கூறியும், அவள் அதைத் தவிர்த்துவிட்டாள். மீண்டும் அது அடித்தது. எனவே நானே அதைக் கையில் எடுத்துப் பேசப்போனேன்.

திடுக்கிட்ட என் மனைவி திடீரென குளியலறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டாள். நான் எழுந்துசென்று கதவைத் தட்டினேன். அவள் திறக்கவில்லை.

பயந்துபோன நான் கதவை பலத்துடன் மோதித் திறந்தேன். அங்கே அவள் வேறொரு மொபைலில் மெசேஜ் டைப் செய்து அனுப்பிக் கொண்டிருந்தாள். அதைப் பிடுங்கிப் பார்த்தபோது, ‘எனக்குப் போன் செய்ய வேண்டாம். என் போன் தற்போது என் அண்ணனிடம் இருக்கிறது’ என்ற குறுந்தகவல், திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த அந்த நபருக்கு சென்றிருந்தது.

இதைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன். ஆனால் வாயைத் திறக்கவில்லை. நான் ஏதாவது சொல்லப்போய் அவள் மீண்டும் கதவைத் தாழிட்டுக் கொண்டாலோ, அல்லது வேறுஏதாவது செய்துகொண்டாலோ என்ன செய்வது என்று அமைதியாக இருந்துவிட்டேன்.

மறுநாள் காலை என்னுடைய அழைப்பின் பேரில் என் நண்பர் வீட்டிற்கு வந்தார். அவர் என்னுடைய அண்ணன் போன்றவர். ஏற்கனவே எங்களுக்குள் சண்டை வந்து பிரிந்திருந்தபோது எங்களிடையே சமாதானம் பேசி எங்களை மீண்டும் சேர்த்து வைத்தவர்.

என்னோடு நல்லவிதமாக சேர்ந்து வாழும்படியும், சிறிதுநாள் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் என் மனைவியிடம் எடுத்துச் சொன்னார். ஆனால் இந்தமுறை என் மனைவி பிடிவாதமாக இருந்தாள். ‘இந்த’ வாழ்க்கையை இனி வாழமுடியாது என்று சொல்லிவிட்டார்.

ஆனால் முன்புபோல் அல்லாமல் இந்தமுறை என் மூன்று வயது மகளை என்னிடமே விட்டுச் சென்றார். பிறகு விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்தும் பெற்றார். நீதிமன்றத்தில் கூட “குழந்தையை அவளது தந்தை நன்கு கவனித்துக்கொள்வார். எனவே அவரிடமே அவள் இருக்கட்டும்…” என்று நீதிபதி முன்பு சொன்னாள்.

என் மனம் உடைந்து போனது. ஆனால் ஒரேயொரு மகிழ்ச்சி எங்கள் செல்ல மகள் என்னோடு…

எங்களுடையது காதல் திருமணம். கல்லூரியில் ஒன்றாகப் படித்துக் மொண்டிருந்தபோது காதலித்தோம். அலைபாயுதே படத்தில் வருவதைப்போன்று யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அமைதியாக இருந்தோம். கடைசியாக இருவரின் வீட்டிலும் சொன்னபோது பூகம்பம் வெடித்தது. கடைசியாக இருவீட்டிலும் ஒப்புக்கொண்டு கோயிலில் திருமணம் செய்துவைத்தனர்.

சிறிதுகாலம் என் பெற்றோருடன் சொந்த வீட்டில் வாழ்ந்தோம். எனக்கும் அப்பாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டைவிட்டு வெளியே வந்து வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் செய்தோம். சொந்தமாக வீடுகட்டிக் கொண்ட பிறகே குழந்தை என்றாள் மனைவி. சரி என்றேன்.

அவள் ஐடி துறையில் பட்ட மேற்படிப்பு படித்திருந்தாள். எனவே நாங்கள் இருவரும் சென்னையில் குடியேறவேண்டும் என்று என்னை வற்புறுத்தினாள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேண்டாம் என்றேன். உடனே கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குச்சென்று சிலகாலம் இருந்தாள். பிறகு பிரச்சினையை பேசித் தீர்த்தோம். அவள் மீண்டும் வீட்டுக்கு வந்தாள்.

குழந்தை இல்லாததால் எங்களுக்குள் பிரச்சினை வருவதாக நினைத்தோம். எனவே குழந்தை பெற்றுக்கொண்டோம்.

குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆனபோது, அவளுக்கு மீண்டும் சென்னைக்கு குடிபெயரும் ஆசை மூண்டது. அதையே என்னிடம் திருப்பித் திருப்பி வலியுறுத்தினாள். நான் மறுத்தேன். இந்தமுறை அவள் தனியாக குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னை சென்றுவிட்டாள். நான் குழந்தையைப் பார்க்கச் சென்றதையும் அவள் விரும்பவில்லை. தம் விருப்பத்தை மீறி குழந்தையைப் பார்க்க வருவதாக போலீஸில் என்மீது புகார் கொடுத்தாள்.

நான் அவளோடு சென்னைக்கு வரவில்லை என்ற கோபம் என்று நினைத்தேன். அதனால் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். ஆனால் சென்னையில் அவள் எதிர்பார்த்ததுபோல நல்ல வேலை கிடைக்கவில்லை. திரும்பி ஊருக்கு வந்தும் தனியாகவே இருந்தாள். ஒரு கம்ப்யூட்டர் சென்டர் தொடங்கினாள். குழந்தை அங்கேயே ஒரு பள்ளியில் படித்தாள். ஆனால் நான் குழந்தையைப் பார்க்கப்போவது அவளைக் கோபப்படுத்தி மீண்டும் ஒன்றுசேரும் வாய்ப்பைக் கெடுத்துவிடும் என்று பயந்து நான் குழந்தையைக்கூட போய்ப் பார்க்கவில்லை. இப்படி ஒன்றரை ஆண்டுகள் பிரிந்திருந்தோம்.

இந்நிலையில், அண்ணனைப் போன்ற என் நண்பர் அவளிடம் தூது சென்று எங்களைச் சேர்த்து வைத்தார். மீண்டும் வாழ்க்கை நன்றாகப் போவதாகவே தெரிந்தது. அப்போது என் மனைவிக்கு வேறொரு ஆணிடமிருந்து மொபைல் வந்தது. என்னவென்று விசாரித்தேன்.

நாங்கள் பிரிந்திருந்த காலத்தில் அவனது அறிமுகம் ஏற்பட்டது என்றும் சட்டென துண்டித்தால் பிரச்சினையாகும், எனவே மெதுவாக அவனைத் துண்டித்துவிடுவதாகவும் என்னிடம் சொன்னாள். அது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் எனக்கு அது சரியாகப்படவில்லை…

ஒரு மாலைப்பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்து பேசினோம். “கடந்த காலத்தில் எது நடந்திருந்தாலும் பரவாயில்லை. பிரிந்திருந்த காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களால் எந்தப் பிரச்சினை என்றாலும் அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்… அவனுடைய தொடர்பை உடனே துண்டித்துவிடு…” என்று சொன்னேன். அவள் ஏற்றுக்கொண்டாள்.

ஆனால் அதன் பிறகும் அதே நபரிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது. ஆத்திரத்தில் நான் நிதானமிழந்து மனைவியின் மொபலைப் பறித்து வீசியெறிந்து அதை உடைத்துவிட்டேன். அதை அவள் நிதானமாக வாரி எடுத்து ஒன்றுசேர்த்து வைத்துக்கொண்டாள்.

அதன் பிறகும் இரவில் அவனிடமிருந்து போன் வந்து கொண்டேயிருந்தது. அவளையே அதை எடுத்துப் பேசச்சொன்னேன். அவள் பேசாததால் நான் எடுத்துப் பேசப்போனேன். பிறகுதான் என்னென்னவோ நடந்துவிட்டது.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டது…

அவள் பிரிந்துசென்று விவாகரத்தும் பெற்று, அந்த நபரை திருமணமும் செய்து கொண்டுவிட்டாள்…

நாங்கள் பிரிந்திருந்த காலத்தில் எல்லாம், மீண்டும் மனைவியுடனும் குழந்தையுடனும் சேர்ந்து வாழவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அதில் ஒன்றுமட்டும் நடந்துவிட்டது. குழந்தையோடு மட்டும் வாழ்கிறேன். மற்றொன்று நடக்கவில்லை.

எங்கள் வீட்டில் நான், அப்பா, அம்மா, தங்கை, தங்கையின் கணவர் என்று அனைவரும் என் செல்ல மகளைப் பார்த்துக் கொள்கிறோம்.

விவாகரத்துப் பெற்ற காலத்தில் நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். அதிலிருந்து மீண்டுவர அதிககாலம் பிடித்தது. அந்த நேரங்களில் என் மகள்தான் எனக்கு ஒரே ஆறுதல்.

பிறகு எனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு, உயிர்தப்பி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றேன். அப்போதும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டது என் மகள்தான்…

என் அம்மாவுக்கு சர்க்கரை நோய். அவருக்கு இன்சுலின் போடுவதும், மாத்திரைகள் எடுத்துத் தருவதும் பன்னிரண்டு வயதான என் மகள்தான். அவளுக்கு நான் ஆறுதலாக இருப்பதைவிட, எங்களுக்கு அவள் ஆறுதலாக இருப்பதுதான் அதிகம்.

யாராவது என்னை விமர்சித்தாலும், எனக்காக பரிந்து பேசுவதும் என் மகள்தான். இதுவரை ஒருமுறை கூட அம்மாவைப் பற்றி அவள் கேட்டதும் இல்லை அதுபற்றிப் பேசியதும் இல்லை.

அவளிடம் அதிக ஈடுபாட்டுடன் ஒரு ‘தாயுமானவனாக’ நான் நடந்து கொள்கிறேன். பிக்னிக் மற்றும் ஹிஸ்டாரிகல் ப்ளேசஸ் அழைத்துச் செல்வேன். அதுபோன்ற பயணங்களின்போது யாராவது அவளிடம் அம்மாவைப் பற்றிக் கேட்டால், அமைதியாக இருந்துவிடுவாள். ஒன்று, கேட்டவர் அந்தக் கேள்வியை கடந்து செல்லவேண்டும் அல்லது நான் தலையிட்டுச் சமாளிக்க வேண்டும்.

அம்மாவைப் பற்றி அவள் ஏதும் சொல்லாவிட்டாலும் அந்த மெளனம் புரிந்துகொள்ள முடியாததுதான். என் மனைவி உடன் இருந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்…

என்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளும்படி சொல்கிறார்கள். இப்போது என் மகளுக்கு பதின்மூன்று வயது. அவள் என்னோடு தனியாக அடிக்கடி பயணிப்பது என்னுடைய பெற்றோருக்கு சங்கடமாக இருக்கிறது. அவ்விதம் பயணிக்கும்போது அவள் பூப்பெய்திவிட்டால் என்னால் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறார்கள்.

என் மகளுக்கு கல்பனா சாவ்லா போல ஒரு விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்கிற ஆசை. நன்றாகவும் படிக்கிறாள். நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டால் இப்போதுபோல என் மகளுடன் அதிக நேரம் செலவிடமுடியாது என்கிற அச்சம் எனக்கு.

வேறொரு பெண் என் வாழ்க்கையில் இனிமேல் வந்தால் மேலும் பிரச்சினைகள் வரலாம். தவறான புரிதல்கள் ஏற்படலாம்… வருகிற பெண் சரியாகவே என் பெண்ணைக் கண்டித்தாலும் எனக்கு அது வேறுவிதமாகத் தோன்றலாம். ஏற்கனவே எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் போதும். அதனால்தான் திருமணமே செய்துகொள்ளாமல் நான் தனியாகவே இருக்க முடிவெடுத்தேன்.

இப்போது என் வாழ்க்கையின் மையப்புள்ளி என் செல்ல மகள் மட்டுமே.

Print Friendly, PDF & Email

வெள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)