என் உயிர் நீ தானே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 3,612 
 
 

பால்ராஜ் லிப்ட் வழியாக கீழே இறங்குகையில் கைத்தொலைபேசி ஒலித்தது. ஜப்பானிலிருந்து அவர் முதலாளி தான், “ஹை பால்ராஜ், குட் நியூஸ், உங்களை நான் ப்ராஜெக்ட் டைரக்டராக ப்ரமோஷன் செய்துள்ளேன். அதோடு, நீங்கள் கூடிய சீக்கிரம் இலங்கைக்கு, கொழும்புவுக்கு சென்று நமக்கு கிடைத்துள்ள 5 வருட புது ப்ராஜெக்ட்டை முன்னின்று நடத்தவேண்டும்” என்று கூறி வாழ்த்தினார். திட்டமிட்டபடி நாற்பதாவது வயதில் இப்படியொரு பதவியில் அமரவேண்டும் என்கிற அவரின் கனவு பலித்துவிட்டது.

எப்பொழுது இலங்கை அல்லது கொழும்பு என்ற வார்த்தை கேட்டாலும் பால்ராஜ் மூட் அவுட் ஆகி விடுவார்……கண நேரத்தில் கொழும்புவில் கடைசி சில மாதங்களில் நடந்த சம்பவங்கள் எல்லாம் கண் முன் பிரதிபலிக்கும்…..

பால்ராஜ் பெற்றோருக்கு 6 பிள்ளைகள். இவர் தான் மூத்த மகன். சிறு வயதில் மிகவும் கூச்ச சுபாவம் – வீட்டில் எந்த பெண்கள் வந்தாலும் ஓடிஒளிந்துகொள்ளும் அளவுக்கு அந்த கூச்ச சுபாவம் இருந்தது. இப்படி இருக்க, பதின்ம வயது வந்ததும் அதன் தாக்கத்தால் பள்ளியில், மற்றும் வெளியே எங்கு எந்த பெண்ணை பார்த்தாலும் ஒரு ஈர்ப்பு ஏற்பட அந்த பெண்களின் அழகை கண்டு ரசிக்க, அதில் ஏதாவது ஒரு பெண் திரும்பிப் பார்த்தால் போதும், உடலில் ஒரு ஆனந்த மின்சாரம் பாயும், அந்த பெண் தன்னை விரும்புகிறாள் என்று மனம் பேதலித்து போகும்…

இப்படியாக நான்கு பெண்களிடம் ஒரு தலைக் காதல் வயப்பட்டு ஏமாந்து, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முற்பட்ட போது, அப்பாவின் உருக்கமான அறிவுரைகளால், பள்ளி வாழ்க்கை & பதின்ம வயது முடிவில், இனி எந்த பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்கக் கூடாது என்றும், 5 உடன்பிறப்புகளின் நல்வாழ்வுக்காக பாடுபட வேண்டும் என்று முடிவு செய்து வாழலானார்.

அன்றிலிருந்து கல்லூரி வாழ்க்கை முடிந்து, ஜப்பானிய பன்னாட்டு கம்பெனியில் சேர்ந்து, மூன்றாவது வருடத்தில் அவரின் திறமையை பார்த்து, இலங்கைக்கு அனுப்பப்பட்ட போது வரை எந்த பெண்ணையும் ஏறிட்டு பார்க்கவில்லை – அந்த சுமதியை, சாட்சாட்ச்த் மகாலக்ஷ்மி போல் காட்சியளித்த அந்த தேவதை பெண்ணை பார்க்கும் வரை.

பால்ராஜின் ஜப்பானிய பன்னாட்டு கம்பெனி, சுமதி பணி செய்யும் இலங்கை கட்டிட நிறுவனத்தோடு கூட்டு முறையில் (ஜாய்ண்ட்-வென்சர்) ஒரு பெரிய ப்ராஜெக்ட் கட்டிக்கொண்டிருந்தது. பணியில் இருக்கும் சமயம், ஒரே அலுவலகத்தில் இருந்தபடியால், சுமதி அடிக்கடி பால்ராஜை வந்து பார்த்து சந்தேகம் கேட்க, அவளின் காந்தப் பார்வை, அருகில் நின்ற போது ஏதோ ஒரு உஷ்ணம், பால்ராஜை பதின்ம வயதில் அனுபவித்த சுகங்கள் போல் தாக்கத்தை உண்டாக்கியது. சில தினங்களில் இருவரும் ஒரே அலுவலக கேபினுக்குள், அருகருகே அமர்ந்து பழக நேரிட்டது, பால்ராஜின் சாந்தமான தோற்றம் சுமதியையும் ஈர்த்தது. நான்கு மாதங்கள் இருவரும் மிக நெருக்கமாக பழகினார்கள்… அலுவலகத்தில் மற்ற சகாக்களுடன் சேர்ந்து கண்டி, நுவரெலியா போன்ற உல்லாச சுற்றுலா இடங்களுக்கு சென்ற போதெல்லாம் தனிமையை ஏற்படுத்திக்கொண்டு தொட்டு துழாவி முத்தமிட்டு…..

பால்ராஜ் தன் பெற்றோர்களிடம் பேசி சுமதியை மணக்க சம்மதம் பெற்றப்பின், “சுமதி, உன் சம்மதம் தான் இப்போ வேணும். என்னை கல்யாணம் செய்து கொள்வாயா?” என்று உருக்கமாக கேட்டார். சுமதியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை, “வீட்ல கேட்டு சொல்கிறேன்” என்றாள்.

பால்ராஜ் பலமுறை கேட்டும் சில வாரங்கள் கடந்து போனதுதான் மிச்சம். “என்னால் இன்னும் பொறுக்க முடியல சுமதி, அடிக்கடி வேலைல தப்பு வேற செய்ய ஆரம்பிச்சுட்டேன் – பித்து பிடுச்சிடும் போல இருக்கு, நாளைக்கு பீச்சுக்கு வந்து உன் முடிவை சொல்லிடு.- ஆம் இல்லை – எந்த முடிவானலும் பரவாயில்லை”

மறுநாள் பேசிக்கொண்டபடி, பீச்சில் பால்ராஜ் சுமதிக்காக காத்திருந்தார். “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” என்று பாடும் அளவுக்கு காத்திருந்தார். மூன்று மணி நேரம் போனபின், கோபம் கொண்டார் (அந்த காலகட்டத்தில் கைத்தொலைபேசி கிடையாது). அவள் வரவேயில்லை.

பின் இரண்டு நாட்களும் சுமதி ஆபிஸ் வரவில்லை. மூன்றாவது நாள் வந்தவளிடம் கேட்டபோது, .”நான் உன்னிடம் வெறும் நட்பாகத்தான் பழகினேன் – என்னை மன்னித்து மறந்துவிடு!” என்று அழாத குறையாக சொல்லிவிட்டு ஓடிவிட்டாள். ஒரு மணி நேரம் கழித்து தலை வலிக்கிறது என்று கூறி ஆபிஸ்விட்டு வெளியேறினாள்.

பால்ராஜ் மனதில் யேசுவிடம் மண்டியிட்டு அழ ஆரம்பித்தார். மதிய சாப்பாட்டிற்குபின், வேலையில் தப்புத்தப்பாக செய்ய, அவரும் தலை வலிக்கிறது என்று கூறி ஆபிஸ்விட்டு வெளியேறினார். வெளியே வந்தவரின் கண்களுக்கு நடந்து சென்ற பாதையெல்லாம் புத்தபிக்குகள்…மொட்டையடித்த யாசிகள் தெரியத் தெரிய, பின் ஒரு சலூன் முன் நின்ற போது, உள்ளுக்குள் ஏதேதோ தோன்ற, சலூனுக்குள் நுழைந்து மொட்டை அடித்துக் கொண்டார்!! தலையில் இருந்து முடி கீழே விழ விழ, கண்கள் குளமாக, ‘இனி என் வாழ்வில் எந்த பொருளுக்கும், எதற்கும் ஆசைப்படப் போவதில்லை’ என்று சபதம் எடுத்துக் கொண்டார்.

மறுநாள் பால்ராஜ் மொட்டை அடித்துக்கொண்ட நிலையில் ஆபிசில் நுழைய, சுமதி முன்வந்து நிற்க, அவளுக்கு அவர் மேல் பாசமும் காதலும் பொங்கி எழுந்தது. அலுவலகத்தில் மாலை யாரும் இல்லாத நேரத்தில் அவரை ஒரு அறைக்குள் இழுத்துச்சென்று முத்த மழை பொழிந்து, ஒரு 10 நிமிடத்தில், ஒரு யுக வாழ்க்கையை பால்ராஜுக்கு கொடுக்க, அவரும் அழுதவாறே அந்த சுகங்களை அனுபவித்தார்.

“என்னை மன்னித்து மறந்துவிடு. நீ வேற நாடு நான் வேற நாடு, நீ வேற மதம் நான் வேற மதம், என்னை நம்பி என் பெரிய குடும்பம் இருக்கு – ப்ளீஸ் என்னை மன்னிச்சு மறந்து போயிடு”

பிறகு திடீரென்று மூன்றே நாளில் தன்னை சிங்கப்பூருக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்ட போது “வாழ்க்கை ஒரு விடுகதைதான்” என்று பால்ராஜ் மனம் குழம்பியது.

சிங்கப்பூருக்கு திரும்பி வந்தபின் தான், சில தினங்கள் கழித்து தெரிந்தது – சுமதியின் கம்பெனி முதலாளி சுகுமார் அவளை மணக்க முடிவெடுத்திருந்ததால் தான் தன்னை தூக்கியிருக்கிறார்கள் என்று. ‘அப்படியானால்….அப்படியானால், நம் காதல் உண்மையானதுதான்…உண்மையானதுதான்…..பாவம் சுமதி என்ன செய்வாள்?.’ இது புரிந்தபின், சுமதியுடன் மானசீகமாக ‘என் உயிர் நீ தானே!…’ என வாழலானார். அந்த ஒரு நாள் கண்ட சுகம், அதிலேயே லயிச்சு வாழ்ந்து விட்டுப் போய்விடலாம், செத்துவிடலாம்….

அதன்பின் சுமதி பற்றி மேலும் ஏதும் தெரிந்துகொள்ள முற்படவில்லை, முடியவும் இல்லை. இரண்டு வருடங்கள் கழிந்த பின், இரு சகோதரிகளுக்கு திருமணம் ஆனபின், பெற்றோர்களின் உருக்கமான வேண்டுதலுக்கு மரியாதை கொடுக்க, ஊரார் உற்றார் வீண்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பெற்றோர் பார்த்த ஒருத்தியை மணந்து கொண்டார்….

புதுமணப்பெண் அவரை முதலிரவில் நெருங்கியபோது….கைகளால் மண்டையில் அடித்துக்கொண்டு, குலுங்கக்குலுங்க அழுதார் – மணப்பெண்ணிடம் தன் காதல் கதையை கூறிவிட்டார். இப்படி இருந்தும் புதியவள் அவர் மனதை மாற்றும் எண்ணத்தில் மீண்டும் மீண்டும் அவரை தேகசுகத்தால் ஈர்க்கப்பார்த்தாள்; நாட்கள் ஓடின; எதுவம் வேலைக்கு ஆவாது என்று சில மாதங்கள் கழித்து உணர்ந்தவள், பிறகு அவர் மேல் தன் சீற்றத்தை பேச்சு வார்த்தைகளால் காட்ட ஆரம்பித்தாள். வீண் சண்டை சச்சரவு அதிகரிக்க, அவள் விவாகரத்து வாங்க முடிவெடுத்து…. இவளும் 2 வருடத்தில் போய்விட்டாள்!!!……

அதன் பின், 15 வருடங்கள் ஓடி, இதோ பால்ராஜ் விமானத்தில் கொழும்பு செல்ல அமர்ந்துள்ளார்……“என் உயிருக்கு உயிரான சுமதியை சந்திக்க முடியுமா இத்தனை வருடங்கள் கழித்து? முன்பு போலவே, இப்பொழுதும் அதே கம்பெனியோடு அல்லவா கூட்டு சேர்ந்து இந்த ப்ராஜெக்ட் செய்யவேண்டியுள்ளது?!…அவள் எங்கே?… என்ன செய்கிறாள்?”

***

விமானம் கொழும்பு நகரில் தரையிறங்கியது. வெளியே வந்தவருக்கு அந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

“வெல்கம் பாக் பால்ராஜ்…சௌக்கியமா?!” சுமதி அவளை புன்னகையுடன் வரவேற்றபோது உடல் பனிபோல் உருகியது. சுமதி முன்பு போலவே சேலையில் மஹாலக்ஷ்மி போல் காட்சியளித்தாள். தலை கேசத்தில் கொஞ்சம் நரை….அவள் கையை பற்றிக்கொண்டு மிரட்சியுடன் நின்றிருந்த அந்த வாலிபனை பார்த்தபோது…. மயக்கம் வரும்போல் உணர்ந்தார் ‘யார் இவன்?…நான் பதின்ம வயதில் இருந்தது போலவே இருக்கிறானே??!!’

“பாபு, அப்பாவுக்கு வணக்கம் சொல்லுடா?” என்று சுமதி சொன்னபோது, நெற்றியை தேய்த்தவாறு….மயக்கம் வரும்போல் உணர, அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். பாபு அவர் அருகில் ஓடி வந்து அவர் கையை பற்றிக்கொண்டு “என் அப்பாவா?!” என்று மிரட்சியுடன்…..அதிசயமாக பார்த்தான். சுமதியும் அருகில் வந்து அவர்கள் இருவரையும் ஒருசேர ஆனந்த கண்ணீர் பொங்கிட அரவணைத்தாள்.

“நான் வரும் விஷயம் உனக்கு எப்படி தெரியும்?” பால்ராஜ் கேட்டார்.

“உங்கள் ஜப்பான் அலுவலகத்திலிருந்து நீங்கள் வருவதை அறிந்துகொண்டேன்… இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணினேன்” சுமதி நெருக்கமாக அமர்ந்து பதிலளித்தாள்.

பால்ராஜ் 14 வயதான பாபுவை ஆரத்தழுவி அவன் நெற்றியில் முத்தமிட்டார்; அப்போது, அவன் உடல் லேசாக நடுங்கிக்கொண்டே இருப்பதை உணர்ந்தார்…. பாபுவும் ஏதோ ஒரு மிரட்சியுடன், பயத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தவாறு இருந்தது அவரை குழப்பியது. ‘இவனுக்கு என்னாச்சு?’ என்பதை கண் ஜாடையால் சுமதியை பார்த்து கேட்டார். “வீட்டுக்கு வாங்க, நடந்ததை எல்லாம் சொல்கிறேன்” என்றாள் சுமதி.

வீடு வந்து சேர்ந்த பின், பாபுவை ஒரு அறையில் இருக்கச் சொல்லிவிட்டு தன் கதையை சொல்ல ஆரம்பித்தாள் சுமதி…….

சுகுமார் இலங்கையில் ஒரு பெரிய கட்டிடத்துறை கம்பெனியின் முதலாளி……சுமதி பணியில் சேர்ந்த நாள் முதற்கொண்டு அவள் மேல் இருந்த ஈர்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, அவளை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த தருணத்தில் தான் சுமதியும் பால்ராஜும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்து…. சுமதியின் குடும்பத்தாரை சந்தித்து சுமதியை மணக்க விரும்புவதாகவும்…. அவள் வீணாக வேற்று நாட்டு வேற்று மதத்தவனை காதலித்து வாழ்க்கையில் சீரழிய போகிறாள் என்பதை எடுத்துச்சொல்லி….. அவள் பாட்டியின் சம்மதம் பெற்றதும்….. மறு வேலையாக பால்ராஜ் கம்பெனி முதலாளிக்கு போன் செய்து அவனை உடனே சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்ப வேண்டும், இல்லையென்றால் செய்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் அடிபட்டு பிரச்சினை பல ஏற்படும் என்று மிரட்டலாக பேசி……ஒரு வழியாக பால்ராஜை திருப்பி அனுப்பி வைத்தார்.

பிறகு ஒரே வாரத்தில் பாட்டி சொன்ன நல்ல முகூர்த்த நாளில் அவசர அவசரமாக திருமணம் நடந்தது…..ஆனால் முதலிரவில் சுமதி, வேண்டாவெறுப்புடன் தான் புதுக்கணவனிடம் படுத்தாள்……. தான் பால்ராஜிடம் படுத்து உடலுறவு கொண்டதை போட்டுடைத்தாள். ஸ்தம்பித்துப்போன சுகுமார் தற்கொலை செய்துகொள்ளலாமா, இல்லை இவளை கழுத்து நெறித்து கொன்றுவிடலாமா என்று இரவு முழுக்க தூங்காமல் பித்து பிடித்தவர் போல் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறே இரவை கழித்தார்; விஷயத்தை வெளியே சொன்னால் எல்லார் மானமும் கப்பலேறிவிடும் என்பதால், இவளை கொஞ்சம்கொஞ்சமாக, சித்திரவதை செய்து, அவளாக சாகும்படி செய்ய வேண்டியது தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு வெளியேறினார்..

சுமதி தொடர்ந்தாள்….“நான் அந்த சுகுமாரோடு சந்தோஷமாக வாழவில்லை…. பாபு நம் குழந்தைதான்…..நாம அன்னிக்கு அந்த ஒரு 10 நிமிஷம் ஒன்னா வாழ்ந்ததுக்கு கிடைத்த காதல் பரிசு தான் பாபு. முதலிரவிலேயே சுகுமாரிடம் நாம் எந்த அளவுக்கு பழகினோம் என்பதை சொல்லிவிட்டேன். இந்த காரணத்தால் அடிக்கடி சண்டையிட்டு சித்ரவதைப்பட்டேன்” சுமதி பால்ராஜை நெருங்கி தோளில் சாய்ந்து விம்மினாள். பால்ராஜுக்கு புரிந்தது; தான் எப்படி கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம் நடத்தாமல், விவாகரத்து ஆகும் அளவுக்கு நடந்துகொண்டோமோ, அதே போல் சுமதியும் நடந்துகொண்டிருந்திப்பாள்; அதனால் தான் அவள் திருமண வாழ்விலும் சண்டை சச்சரவுகள் எல்லாம்…..

“என் வளைகாப்பு அன்னிக்கு, வயித்துல குழந்தை இருக்குன்னு கொஞ்சம் கூட பாவப்படாம…என்னை வயித்துல எட்டி உதைச்சிட்டான் அந்த படுபாவி” விம்மியவள் இப்போது ஓலமிட்டு அழ ஆரம்பித்தாள்.

இதை கேட்டவர் “ஐயோ சுமதி!” என்று அவளை அணைத்துக்கொண்டு, அவரும் கண் கலங்கினார்.

“ஆனா அந்த பாவம் அவனை சும்மாவிடல….என்னை எட்டி உதைச்சவன் கொஞ்ச நாள் கழித்து கொழும்புவில் ஈழத்துக்கும் போலீசுக்கும் நடந்த ஒரு துப்பாக்கி சூட்டில் மாட்டிக்கிட்டு செத்து ஒழிஞ்சான் படுபாவி”

பின் சுமதி பால்ராஜ் கண்களை பார்த்து “ஆனா நான் என்ன பாவம் பண்ணினேன்?…. நாம என்ன பாவம் பண்ணினோம்?….இந்த பாபு என்ன பாவம் பண்ணினான்?….ஐயோ கடவுளே! ” என்று மீண்டும் ஓலமிட்டு அழ ஆரம்பித்தாள்.

அவள் முகத்தை தன் இருகைகளால் தாங்கியவர் “ஏன், என்ன ஆச்சு சுமதி?” என்று வினவினார்.

“பாபு பிறந்ததிலிருந்து மற்ற பிள்ளைகள் போல இல்லை…கொஞ்ச மாசம் கழிச்சு டாக்டர்கிட்ட காட்டினப்போ, சுகுமார் என்னை எட்டி உதைச்சுதிலே இப்படி ஆகியிருக்கலாம்னார்…பாவம் பாபு…..யாரை பார்த்தாலும் பயப்படுறான்…இன்னிக்கு தான் முதல் முறையா உங்களைப்பார்த்து கொஞ்சம் மாறியுள்ளான்…..இரத்தபந்தம் இதுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்”

இதைக்கேட்ட பால்ராஜால் இருப்புக்கொள்ள முடியாமல் பாபு இருந்த அறைக்குள் நுழைந்தார். பாபு சந்தோஷமும் ஆர்வமும் பொங்க ஓடிவந்து அவரை தழுவியபோது ‘இனி என்னுயிர் நீதானே!’ என்று ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். பின்தொடர்ந்து வந்த சுமதி மறுபடியும் அவர்களை ஒருசேர அரவணைத்துக் கொண்டாள். பின் அவள் அவர்களை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். அவள் அறையில் ஒரு பெரிய புகைப்படம்….அதைப் பார்த்த பால்ராஜ் பிரமித்துப்போனார் – அதில் சுமதியோடு அவர் நெருக்கமாக நின்றிருந்தார்; ஆச்சரியத்துடன் சுமதியை புன்னகை பூக்க பார்த்தார். “இது நாம எல்லாரும் முன்பு நம்ம கம்பெனி பார்ட்டிக்காக கண்டி போயிருந்தோம் இல்லே…அப்போ எடுத்த குரூப் போட்டோ தான்; அதில் இருந்து நாம ரெண்டுபேரும் நிக்கிறதை மட்டும் இப்படி வெட்டி எடுத்து பெருசாக்கி இருக்கிறேன்!” சுமதி விவரித்தாள். பால்ராஜ் அவளை மறுபடியும் அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

சுமதி தொடர்ந்தாள்….“பாபுவுக்கு மூனு வயசு இருக்கிறப்போ, என்னால தனியா வாழ பயமா இருந்ததாலே, உங்களை தொடர்பு கொள்ள உங்க ஆபிசுக்கு போன் செய்தேன்….உங்களுக்கு கலயாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டு விட்டுட்டேன். சுகுமார் செத்தப்புறம் கம்பெனிக்கு நான் முதலாளியானதாலே, என் பாட்டி அறிவுரைப்படி, குடும்ப மானம் வேற காப்பாத்தணும்னு, எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு தனியா வாழ முடிவுபண்ணினேன்”. இவையனைத்தும் கேட்ட பால்ராஜ் மனதிற்குள் முடிவு செய்தார்……

சிலநாட்கள் கழித்து பால்ராஜ் சுமதியை மணந்து கொண்டு புது வாழ்க்கையை தொடங்கினார். பாபுவை அவ்வப்பொழுது அரவணைத்து அரவணைத்து பாசம் பொங்க நெற்றியில் முத்தமிட்டு பழகியதில் அவன் மனநிலை நல்லவிதமாக கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. உடலில் எப்பொழுதும் இருந்த நடுக்கமும் கண்களில் இருந்த மிரட்சியும் காணாமல் போய், ஒரே வருடத்தில் குணமுற்று நல்வாழ்வு வாழலானான்.

‘என்னுயிர் நீதானே…..உன்னுயிர் நான்தானே’ என்று வானொலியில் பாட்டு ஒலிக்க அவர்கள் மூவரும் கைகள் கோர்த்து ஆனந்தமாய் ஆடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *