என்னைப் பார் காய்ச்சல் வரும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 4,496 
 

பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6

ஆம் நான் யோசித்த விஷயங்கள் சரிதான். மாயா அக்காவின் ஆன்மா ஏன் இன்னும் அங்கு இருக்கக் கூடாது என்பதே எனது சந்தேகம். அந்த ஆன்மாவினால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் நானாக இருந்தால் கூட அந்த நிகழ்வு நடந்து சுமார் 15 வருடங்கள் கடந்து போய்விட்டன. இன்னுமா அக்காவின் ஆன்மா அங்கு அழையும் என்று சிந்தித்த எனக்கு, நான் இங்கு தான் உள்ளேன் என்று அக்கா உரக்கச் சொன்னதைப் போல் நேற்று ஒரு செய்தி என் காதை எட்டியது.

நமது பிரதிலிபி செயலியில் இந்த தொடர்கதையின் முதல் மூன்று பாகத்தின் தொடர்பை அச்செடுத்து என் உறவின்முறை தங்கை ஒருவருக்கு அனுப்பினேன். அதைப் படித்த அந்த தங்கை, ஐயோ அண்ணா அப்படியென்றால் நான் கடந்த வருடம் பாதிக்கப்பட்டதும் ஒருவேளை அந்த அக்காவின் ஆன்மாவினால் தான் இருக்குமோ என்று அவள் கூற சிறிது நேரத்தில் என் உடம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பித்தது. அப்படி என்னதான் நடந்ததென்று என் தங்கையிடம் கேட்டேன். நடந்ததைக் கூற ஆரம்பித்தாள் தங்கை ஹர்ஷிதா.

அண்ணா! அன்று நான் என் காதலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் எங்கே நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோமோ என்று வருந்திக் கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக நான் என் மாடியில் சென்று வெகுநேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். அந்தசமயம் என் வீட்டின் மாடியில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அதனால் பெரும்பாலும் நான் மேலே செல்வதில்லை. இதைக் கவனித்த என் அப்பா ஏன் இங்கு அமைதியாய் வந்து நின்று கொண்டிருக்கிறாய்? என்று வினவினார். ஒன்றும் இல்லை என்று சமாளித்தேன். சரி, நாளை நாம் ஒரு இடத்திற்குச் செல்வோம் என்று கூறிவிட்டுக் கீழே சென்றார். என் கவலை எனக்கு என்று மனதினுள் புலம்பியவாறு அன்று சூரியன் மறையும்வரை மேலே இருந்துவிட்டு பின் கீழே சென்றேன்.

அடுத்தநாள் காலை சரியாக ஏழு மணியளவில் வீட்டை விட்டுப் புறப்பட்டோம். சுமார் இரண்டரை மணிநேரம் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியே போக்குவரத்து குறைவான ஒரு இடத்திற்கு சென்றோம். அங்கு என் தந்தை எனக்கு இருசக்கர மோட்டார் சைக்கிள் கற்றுக் கொடுக்க அழைத்துச் சென்றார். நானும் பழகிவிட்டுப் பின்னர் மாலை 6 மணியளவில் இராமநாதபுரம் அரண்மனைக் கடைவீதியில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீட்டை வந்தடைந்தோம். அதுவரை நான் நன்றாகவே இருந்தேன். எந்த சோர்வும் கூட இல்லை. பிறகு குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தேன். நல்ல பசி ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை. அரைகுறையாகச் சாப்பாட்டை முடித்துவிட்டுக் கையைக் கழுவினேன். சற்று நேரத்தில் என் உடல் முழுவதும் தீயாய் எரிவதைப் போல் உணர்ந்தேன். என்னை அறியாமல் கண்களும் கலங்கின. பிறகு கொடூர வேதனையால் மிகவும் அதிகமாக அழத் தொடங்கினேன். வீட்டிற்குள்தான் அதிக சூடுபோல என்று நினைத்து என் அம்மா என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். மேலே சென்றவுடன் அறவே எனக்குக் கண்பார்வைத் தெரியவில்லை. மேலும் அழுகை மேலோங்கியது. அங்கு சென்றும் உடலெரிச்சல் விட்டபாடில்லை. உன் அழுகை சரியில்லை வழக்கத்திற்கு மாறாக அழுகிறாய் என்று என் அன்னை அப்பொழுதே கூறினார். பிறகு மீண்டும் கீழே வந்து அழுதுகொண்டே அன்றிரவு இரண்டு மணிக்குமேல் தூங்கிவிட்டேன் என்றாள் ஹர்ஷிதா.

எப்பொழுது ஹர்ஷிதா எனக்கு உடல் எரிவதைப் போல் இருந்தது என்று கூறினாளோ அந்த நொடியே இந்த நினைவுகள் யாவும் நசிமா அக்காவிற்கு ஏற்பட்ட நிகழ்வின் பிம்பமாய் தோன்றியது. அடுத்து என்ன அடுத்து என்னவென்று ஹர்ஷிதாவிடம் கேட்டுக் கொண்டே கதையில் மூர்சையானேன். பிறகு ஹர்ஷிதா கதையைத் தொடர்ந்தாள்.

அடுத்தநாள் காலையில் எழுந்து காலைக் கடனை முடித்துவிட்டு, அம்மா கொடுத்தக் காப்பியை குடித்துவிட்டு ஒரு மூலையையே வெறித்துக் கொண்டிருந்தேன். அம்மா என்னம்மா முடியலையா? மருத்துவமனைக்கு செல்வோமா? என்று கேட்டார். நான் நிலை மாறாதவளாய் முறைத்துக் கொண்டே இருந்தேன். பிறகு ஓவென்று கதற ஆரம்பித்துவிட்டேன். இதுவரை என் வாழ்நாளில் நான் அப்படி அழுததில்லை என்றாள் ஹர்ஷிதா. பிறகு அவளது அம்மா,அப்பா மற்றும் பெரியம்மாவை அழைத்து அனைவரும் என்னைச் சுற்றி உட்காருங்க, அம்மா என்னைய மட்டும் விட்டுட்டு ஏன் தனியாக செல்கிறீர்கள் என்று கூறியுள்ளாள். இதை ஹர்ஷிதா கூறக்கேட்டதும் எனக்கு மேலும் அதிர்ச்சி. உண்மையில் மாயா அக்காவின் குடும்பம் இப்பொழுது ஊரில் இல்லை. மாயா அக்காவின் அப்பா மறைவிற்குப் பின்னர் அவரது அம்மா மற்றும் மதியக்காவின் குடும்பம் வேறு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டனர் என்பது இவ்விடத்தில் எனக்கு நினைவிற்கு வந்தது.

ஹர்ஷிதா கதையைத் தொடர்ந்தாள், சாப்பிடுறியா என்று ஹர்ஷிதாவின் அம்மா கேட்டுள்ளார். சரி என்று கூறியிருக்கிறாள். சரிவா திருநீறு வைப்போம் என்று அம்மா சாமி அறைக்கு அழைக்க, வரமாட்டேன் என்று கூறி சாப்பாடும் வேண்டாம் என்று கூறியிருக்கிறாள் ஹர்ஷிதா. பிறகு மீண்டும் ஓவென்று அழத் தொடங்கியிருக்கிறாள். வீட்டின் மேலே வேலைபார்த்துக் கொண்டிருந்த அனைவரும் கீழே வர, கோபமான அப்பா கதவை மூடிவை என்று கடிந்திருக்கிறார். இவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போல, இந்த வீடும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கூறியுள்ளார். சரி நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஹர்ஷிதாவின் அம்மா. மீண்டும் பழையபடி ஹர்ஷிதா அனைவரும் என்னைச் சுற்றி அமருங்கள் என அழைத்துள்ளாள். சாதாரண நாட்களில் அப்பாவைத் தீண்டாத அவள் அன்று அப்பாவைக் கட்டியணைத்து அழுதிருக்கிறாள். பிறகு அம்மா சாப்பிடு என்று கூற, ஹர்ஷிதாவின் பெரியம்மா அவளுக்காக தோசை ஊற்ற ஆரம்பித்தார். சுமார் 11 தோசைகள் உண்ட பின்னரும் அவள் போதுமெனக் கூறியவாறு இல்லை. செய்து வைத்த சட்டினி மொத்தமும் ஊற்றி முடிந்தாயிற்று. பிறகு தன் அக்காவிடம் ஹர்ஷிதாவின் அம்மா தன் கண் ஜாடையால் போதுமெனக் கூற கையைக் கழுவினாள் ஹர்ஷிதா. இதுதான் பேய் பசி போல என்று நான் நினைத்துக் கொண்டேன்.

பிறகு ஹர்ஷிதா சுவர் புறமாகத் திரும்பி ஒரு மூலையில் அமர்ந்தாள். அம்மா மருத்துவமனைக்கு செல்வோமா என்று கேட்க அவள் கீழே சாய்ந்து அழுதிருக்கிறாள். பிறகு அவளை நிமிர்த்தி நாற்காலியில் அமரவைத்து அவளது அம்மா தொலைக்காட்சியை ஆரம்பித்தார். ஆனால் ஹர்ஷிதா அதை நிறுத்தியுள்ளாள். அவளது தந்தை அவள் தொலைபேசியை எடுத்துவந்து இதில் ஏதாவது பழுது ஏற்பட்டுவிட்டதா? என்று வினாவ அவள் அருகில் இருந்த செம்பைத் தூக்கி எறிந்தாள். ஹேய் என்று கனத்த குரலில் கடும் கோபமானார் தந்தை. அவளின் கோபமும் உச்சத்தை அடைந்தது. உடனே ஹர்ஷிதாவின் அம்மா அவளைக் கன்னத்தில் அறைய அவளோ தன் தலையை சுவற்றில் மெதுவாக இடித்துக்கொள்ள ஆரம்பித்தாள். ஹேய் இருடி உன்னை என்ன செய்கிறேன் பாரு என்று ஹார்ஷிதாவின் அம்மா கோபத்தில் கூறினார். பிறகு ஹர்ஷிதாவின் அம்மா அவருடைய தோழி யோகாவை தொலைபேசியில் அழைத்து நடந்தவற்றைக் கூறினார். யோகா என்பவர் ஒரு ஆசிரியை மேலும் ஒரு சாமியாடி அவர். இதுபோன்ற திருநீறு அணிவிப்பது மற்றும் ஆன்மாவால் பாதிக்கப்பட்டவரை கையாள்வதில் சற்று அனுபவமுடையவர். அவர் ஹர்ஷிதா அம்மாவிடம் அவளைக் குளிக்கவை நான் இதோ வருகிறேன் என்று கூறினார். இதற்கிடையில் ஐயோ எரிகிறதே என்று கூறிய ஹர்ஷிதாவின் உடலை அவளது பெரியம்மா நனைத்த போர்வையால் போர்த்தியிருந்தார். அந்தப் போர்வையும் முழுமையாகக் காய்ந்திருக்கிறது.

பிறகு ஹர்ஷிதாவின் அம்மா அவளைக் குளிப்பாட்ட, அவளது பெரியம்மா அந்த வாளியில் ஒரு வெட்டிய எழும்பிச்சையைப் போட்டார். உடனே அதைத் தூக்கி எறிந்தாள் ஹர்ஷிதா. பிறகு அவளைத் தயார்செய்து அவளது அறையில் அமரவைத்தார் ஹர்ஷிதாவின் அம்மா.

தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *