என்னைப் பார் காய்ச்சல் வரும்

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 5,108 
 
 

பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5

இஸ்லாமிய நண்பர் கொடுத்த நீரை எடுத்துக் கொண்டு பெரியப்பா நிஷாவின் அறைக்குச் சென்றார். அந்த நீரை வழக்கமாகக் குடிக்கக் கொடுக்கப்படும் நீராக நிஷாவிடம் பெரியப்பா கொடுத்தார். அதைக் குடித்த மறுகணமே நிஷாவின் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டு மொத்த உடலும் சிலிர்த்துள்ளது.‌ இதைக் கண்ட பெரியப்பா திடுக்கிட்டுப் போனார். பிறகு உடல் சாதாரண நிலையை அடைந்ததும், பெரியப்பா அந்த நீரைக்கொண்டு நிஷாவின் முகத்தைக் கழுவினார். அதன் பின் மிகச் சிலநாட்களிலேயே நிஷா பூரண குணமடைந்தார்.

இதற்கு முழு காரணமும் மாயாவின் ஆன்மாதானென்று நிஷாவின் குடும்பம் முடிவு செய்தனர். ஏனென்றால் அவர்கள் தொடக்கம் முதலே நிஷாவை முழுவதும் அறிவியல் ரீதியாக மருத்துவமனையில் வைத்தே கண்காணித்து உடல்நிலையை சரிசெய்ய முற்பட்டனர். ஆனால் இறுதியாக அந்த நீரினால் தான் நிஷா குணமடைந்ததாக நம்பினர். மேலும் நடு நடுவே நிஷாவிடம் ஏற்பட்ட மாற்றங்களால் இதற்கு அந்த மாயாதான் காரணமென்று அந்தக் காலகட்டத்தில் மாயாவின் குடும்பத்தோடு பெரியப்பாவின் குடும்பத்திற்குப் பெரும் பகையும் ஏற்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின் அந்த இரு குடும்பத்தாரும் மனக்கசப்பால் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டனர்.

இந்த நிகழ்வுக்குப் பின் நேரடியாக யாரும் பேய் பிடித்தது, பிசாசு பிடித்தது என்ற பெரிய கருத்துகளைத் தெருவில் எவரும் பொதுவாக முன்வைக்கவில்லை. இதனால் எந்த அச்சமுமின்றி சிறிது காலம் சிறப்பாகத் தான் சென்று கொண்டிருந்தது. அப்படியே நாட்கள் நன்றாக சென்றுகொண்டிருந்த வேளையில் ஒருநாள் நான் பள்ளியை முடித்துவிட்டு, மாலைப்பொழுதில் அந்த முச்சந்தியில் வழக்கமாக நண்பர்களுடன் விளையாடக் கோலிக் குண்டுகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். அந்த முச்சந்தியில்தான் வெகுவாக நண்பர்கள் அனைவரும் விளையாடுவதுண்டு.‌ மட்டைப்பந்து, கால்பந்து போன்ற பெரிய விளையாட்டுகள் தவிர சிறிய விளையாட்டுகள் அனைத்தும் அரங்கேறும் முக்கியமான இடம் தெருவின் மையப்பகுதியான அந்த முச்சந்திதான். ஆம் மாயா அக்காவின் விபத்து ஏற்பட்ட அதே முச்சந்தி தான். அவர்கள் விபத்துக்கு முன்னரும் சரி பின்னரும் சரி பொதுவாக சிறுவர்கள் விளையாடும் முக்கியான இடமாகவே அந்த முச்சந்தி விளங்கியது. மேலும் முன்புபோல் நடந்த அசம்பாவிதங்கள் குறைந்த காரணத்தினாலும் அங்கு நண்பர்கள் கூடுவது வழக்கமானது.

அன்று மாலை விளையாடி முடித்துவிட்டு வீடுதிரும்பிய நான், அன்றைய நாள் இரவில் எனக்கு என்னதான் நடந்தது என்று இன்றுவரை கூட நான் அறிந்திருக்கவில்லை. இதைப்பற்றி எப்பொழுது கேட்டாலும் வீட்டிலும் பெரிதாக விளக்கம் கொடுக்கப்படவில்லை. அன்று மாலைவரை விளையாடிய எனக்கு எந்த உடல்சோர்வோ வியாதியோ அல்லது வேறு எந்தவிதமான உபாதைகளும் இல்லை. ஆனால் அன்றிரவு என் நினைவில் இருக்கும் ஒரே விஷயம் என் தலைக்குள் பாறை உருண்டதைப்போல் நான் உணர்ந்தேன். மேலும் அந்த வலியை வெளிக்கொணர நான் ஏதோ உளறுவதை என்னால் உணர முடிந்தது. அந்தசமயம் அப்பாவும் எங்களுடன் இல்லை, முன்பே இறந்துவிட்டார். அம்மாவும் என் அண்ணன்கள் இருவருமே என்னுடன் இருந்தனர். என் அம்மா பெரிய அண்ணனை அழைத்து ,என் சித்தியை மிதிவண்டியில் அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். என் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கிறது, கை கால்கள் சிறிது வலிப்பு வந்ததைப் போல நடுங்கியிருக்கிறது. அதனால் அந்த நள்ளிரவில் என்ன செய்வதென்று அறியாமல் ஒரு துணைக்காக பயந்துபோய் சித்தியை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்..

இரவு முழுவதும் பார்த்துவிட்டு, பின்னர் பகலில் வழக்கமாக நாங்கள் பார்க்கும் மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு முகப்பில் இருந்த செவிலியர் ஒருவர் என் உடல் வெப்பநிலையை கணக்கிட்டு 108 °F இருப்பதை அறிந்து என் அம்மாவை சிறிது கடிந்து கொண்டார். என்னம்மா! பையனுக்கு உடல் வெப்பநிலை இவ்வளவு இருக்கிறது, வந்ததும் ரொம்ப அவசரம் என்று சொல்லியிருக்க வேண்டியது தானே என்றார். உடனே மருத்துவரிடம் இதைக் கூறி அந்த செவிலியர் என்னை மருத்துவர் அறைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் என் உடல்நிலையைச் சோதனை செய்த பிறகு 2 நாட்கள் படுக்கையில் அனுமதிக்கச் சொன்னார். இரண்டு நாட்கள் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு, என் உடல்நிலை மிகச்சோர்வாக இருந்த காரணத்தால் இரண்டு குளுக்கோஸ் போத்தல்களை ஏற்றினார்கள். மேலும் பலவகையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அனைத்து சோதனைகளின் முடிவுகளும் எதிர்மறையாக வர மருத்துவர் வெறும் கிருமித் தொற்று என்று கூறி முடித்துவிட்டார்.

மருத்துவரின் முடிவும் முந்தையநாள் இரவில் என் புலம்பல்களும், செயல்பாடுகளும், என் உடல் நிலையும் அம்மாவிற்கு அதிகக் குழப்பத்தை அளித்தது. இது வெறும் காய்ச்சலைப் போலத் தெரியவில்லை. எதற்கும் நாம் நம் மகனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, சூரங்கோட்டையில் உள்ள பிரபல ஜோதிடரை அணுகலாம் என்று முடிவெடுத்தார். அங்குபோய் என் ஜாதகத்தைக் காட்டி, வந்த விஷயங்களை அம்மா எடுத்துரைத்திருக்கிறார். பிறகு ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர், உன் மகன் பொழுதடைந்து விளையாடச் சென்ற இடத்திலே ஒரு எரிந்த கன்னி ஒருவள் சற்று உரசிச் சென்றுள்ளாள். உன் மகன் உறங்கச் செல்லும்முன் இந்த திருநீறை அவன் நெத்தியில் வைத்துவிடு, மேலும் அவன் தலையணைக்குக் கீழே இந்த மந்திரித்த எழுமிச்சையை வை என்று அதனைக் கொடுத்துள்ளார். அம்மாவும் அதை அப்படியேப் பின்பற்ற என் வாய் புலம்பல்களும் குறைந்துள்ளது.

ஆனால் மேலே நடந்த விஷயங்கள் எதையும் என் அம்மா அந்தசமயம் என்னிடம் கூறவில்லை. 2 நாட்கள் ஓய்விற்குப் பின் பள்ளி சென்ற எனக்கு ஆச்சரியம். என்னடா காய்ச்சல் மற்றும் வலிப்பு என்றார்களே இப்பொழுது உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று நண்பர்கள் விசாரித்தனர். நானோ அவர்களிடம் வலிப்பா ? யாருக்கு என்று கேட்டேன். டேய் அப்படித்தான் சொன்னார்கள் என்று கூற, யார் கூறினார் என்று அவர்களிடம் கேட்க உன் தெருப்பையன் விஜய் தான் கூறினான் என்றார்கள். அவனிடம் விசாரிக்க, அவனும் ஆமா உன் அம்மா அப்படித்தான் என்னிடம் கூறினார் என்று கூறினான். பிறகு நான், அப்படியெல்லாம் இல்லை விஜய் வெறும் காய்ச்சல் மட்டுமே என்று கூறி சமாளித்தேன்.

பிறகு வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் கேட்டேன், ஏன் என் நண்பர்களிடம் அப்படி சொல்லி வைத்தீர்கள் என்று சத்தம் போட்டேன். நான் உள்ளதைத் தான் ராஜா சொன்னேன், உன் உடல்நிலை அப்படிதான் இருந்தது என்று கூறிவிட்டார். மற்றபடி வேறு ஜோதிடரைப் பார்த்த விஷயங்கள் எதையும் கடுகளவு கூட என்னிடம் கூறவில்லை. ஆனால் பிறகு உடல்நிலை பழைய நிலைக்கு மீண்டபின் நான் மீண்டும் வழக்கம்போல மாலையில் விளையாடப் புறப்பட்டேன். ஆனால் வழக்கமாக விளையாடசா சென்றால் எதையும் பொருட்படுத்தாத என் அம்மா புதிதாக, மாலைக்கு மேல் உனக்கு என்ன விளையாட்டு வேண்டியிருக்கு அந்த விளங்காத முச்சந்தியில் என்று கடிந்து கொண்டார். என்னடா இது இப்படியெல்லாம் நம் அம்மா கோவப்பட மாட்டார்களே என்று அந்தச் சிறுவயதிலேயே எனக்குச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது.

மேலே கூறிய நிகழ்வு நடந்த வருடம் 2005, ஆனால் இதைப்பற்றி நானும் என் அம்மாவும் 2018 இல் ஒருமுறை பேச்சுவழக்கில் பேசிக்கொண்டிருந்த போதே இந்த உண்மைகளை என்னிடம் கூறினார். நீ விளையாடச் சென்றது தான் வினை. மேலும் இதெல்லாம் உன்னிடம் அந்தக் காலகட்டத்தில் கூறியிருந்தால் நீ எப்பொழுதெல்லாம் அந்த முச்சந்திப் பக்கம் செல்கிறாயோ அப்போதெல்லாம் உனக்கு பயம் வந்திருக்கும். அதனாலேயே அந்த வயதில் உன்னிடம் இதைப்பற்றி எதையும் நான் கூறவில்லை என்றார். அத்தனை வருடங்கள் ஆகியும் கூட எனக்குப் பழைய நிகழ்வுகளும் கோரச் சம்பவங்களும் சிறிதும் மாறாமல் என் நினைவில் உதிக்கத் தொடங்கின. என் அம்மா கூறியதும் உண்மை தான். ஒரு விஷயம் என் மனதை உறுத்தினால் அதைப்பற்றியே என் மனம் அதிகம் சிந்திக்கும் என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார் என்று என் அம்மாவின் செயலை நினைத்து பெருமிதமடைந்தேன்.

ஆனாலும் இந்த விஷயத்தை என் அம்மா என்னிடம் கூறிய அடுத்த கணமே ஒரு குழப்பம் ஏற்பட்டது. நான் இப்பொழுது இராமநாதபுரம் சென்று சரியாக ஒரு 5 வருடங்கள் ஆகப்போகிறது. இனி அந்த இடங்களுக்குச் சென்றால் நம்மால் சாதாரணமாக இருக்க முடியுமா. இல்லை மீண்டும் அச்சம் மேலோங்குமா என்பது தான் என்னுடைய சிந்தனை. மேலும் அந்த ஆன்மா தற்சமயம் அங்கு இருக்குமா? என்றும் ஒரு கேள்வித் தொற்றிக்கொண்டது.

என் சிந்தனையும் தவறாகவில்லை, என் கேள்விக்கும் விடை கிடைத்துவிட்டது.

தொடரும் மாயாவின் திருவிளையாடல்!

Print Friendly, PDF & Email

1 thought on “என்னைப் பார் காய்ச்சல் வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *