என்னைப்போல் ஒருவன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 4,367 
 
 

“டூ பாக்கட் பார்லிமென்ட் சிகரெட்..சாவேஜ் ஆஃப்டர் ஷேவ்..லின்ட் டார்க் சாக்லேட்…தாட்ஸ் ஆல்…”

ஒருநிமிடம் திடுக்கிட்டேன்..

எனக்காக யாரோ ஒருத்தன் ஆர்டர் பண்ணுகிறானா…??

அதுவும் என் குரலில்…!

எல்லாமே நான் உபயோகிக்கும் சாதனங்கள் ..

இங்கே…?? யார்…??

என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்…

டார்ஜீலிங்கில் மிகவும் பிரபலமான டிராகன் மார்க்கெட்டில் நானும் என் மனைவி வீணாவும் ஷாப்பிங் பண்ணி முடித்து விட்டு திரும்பும் போதுதான் இந்த அதிசயம் நடந்தது….

குரல் வந்த திக்கை நோக்கித் திரும்பினவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி…

கவுன்ட்டரில் நின்று கொண்டிருந்தவன் அசப்பில்..இல்லை அச்சு அசல் என்னைப் போலவே…!!

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்…

“அபி… நான் காருக்கு போறேன்.. பாவம்..கன்யாவும், தன்யாவும் கார்ல தனியா உக்காந்திருக்காங்க.புது எடம்..பயமா இருக்கு..என்ன வேடிக்க…? கமான்..!

“ஓக்கே..நீ போ..! நான் இதோ பின்னாடியே வரேன்…”

இப்போது அந்த குரலுக்கு சொந்தக்காரன் பணத்தைக் குடுத்துவிட்டு அவனுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தான்..

செம்பட்டை முடியை வாரி ஒரு குடுமியாகப் போட்டிருந்தான்.

என்னைப் போலவே அகலமான நெற்றி… பெரிய கண்கள்… நீண்ட முகம்…எனக்கில்லாதது ஒன்று..நல்ல அடர்த்தியான மீசை..

அவனுக்கு இல்லாதது எனக்கு ஒன்று..கண்ணாடி..

ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டான்..

ஒரு பழைய ஜீன்ஸூம் சாயம் போன சிவப்பு டீஷர்ட்டும் அணிந்திருந்தான்..

கழுத்தில் ஒரு கறுப்பு கயிறு…

ஒரு காதில் கடுக்கன்…

ஒரு கலைஞனைப்போன்று கவர்ச்சியான தோற்றத்தில் கொஞ்சம் ஏழ்மையும் ஒட்டிக்கொண்டிருந்தது..

ஆனால் இவன் வாங்கிய பொருட்கள் எல்லாமே என்னைப் போன்ற மேல்தட்டு மக்கள் உபயோகிக்கும் பிராண்டட் ஐட்டம்ஸ்…!!

யாரிவன்…? ஒருவரைப் போல ஏழுபேர் இருப்பதாக படித்திருக்கிறேன்…
இவன் ஆறாவதா..?? ஐந்தாவதா?

ஒரு வினாடி காருக்குத் திரும்பி வீணாவைக்கூப்பிடலாமென்று நகர்வதற்குள் மாயமானான்..

அவனை நிறுத்தி இரண்டு வார்த்தை பேசலாமென்று நினைத்து ஏமாந்து விட்டேனே…!!

வீணா நம்ப மாட்டாள்….!

***

வீணா டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு காரைக் கிளப்ப தயாராக இருந்தாள்.

“கெட் இன் அபி..என்ன பண்ணிட்டிருந்த..?

மிருகக்காட்சி சாலைக்கு போறதுக்கு தன்யாவும் கன்யாவும் எவ்வளவு நேரம் வெயிட் பண்றாங்க தெரியுமா…?

“யெஸ்..டாடி..”

இரண்டு பேரும் ஒரே குரலில் கத்தினார்கள்.

இன்றைக்கு டிராகன் மார்க்கெட் போய்விட்டு பத்மஜா நாயுடு இமாலயன் மிருகக்காட்சி சாலை போவதாக ஏற்கனவே தீர்மானம் பண்ணியிருந்ததால் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகமானது…

“நேரா அங்கதான் போறோம்..பீ கூல்…”

சரோஜினி நாயுடுவின் மகள் பெயரைக் கொண்ட மிருகக்காட்சி சாலையில் பனிக் கரடிகளும், சிறுத்தைகளும் சிவப்பு பாண்டா குட்டிகளும் மிகவும் பிரபலம்…

தன்யாவும் கன்யாவும் சுற்றிப்பார்த்த களைப்பில் அங்கிருந்த பார்க்கில் அமர்ந்து வாங்கி வந்த தின்பண்டங்களைக் கொறிக்க ஆரம்பித்தனர்..

“அபி..! கடையில ஏன் அவ்வளவு நேரம்? வேற ஏதாவது வாங்கினயா..? நீதானே ‘ போலாம் போலாம்னு’ அவசரப்படுத்தின..!!”

“வீணா..நீ சொன்னா நம்ப மாட்ட. அங்க ஒரு அதிசயத்த பார்த்தேன்.!

என்ன மாதிரியே ஒருத்தன்.பாக்குறதுக்கு மட்டுமில்ல…குரலும் தான்..!

நான் வாங்குற சிகரெட், ஆஃப்டர் ஷேவ், சாக்லேட்…! எல்லாமே நான் உபயோகிக்கும் பிராண்ட்!!”

“இதிலென்ன ஆச்சரியம்…? நீ ஒத்தன்தான் இதெல்லாம் வாங்கணுமா…??”

“அதில்ல வீணா..இதெல்லாமே கொஞ்சம் விலகூட…ஆனா அவனப்பாத்தா ஒரு சாயம் போன பழைய டீஷர்ட்டும், ஜீன்சும், செம்பட்ட முடியும், கழுத்தில கறுப்பு கயிறும், ஒரு காது கடுக்கனும்…”

“ஸ்டாப்.. ஸ்டாப்…!! விட்டா ஒரு கவிதையே எழுதிடுவ போலியே..!! ஒரு காதலிய வர்ணிக்கிறமாதிரி ?”

“வீணா..!! எனக்கு மனச ஏதோ சங்கடம் பண்ணுது..? இப்படி கூட ஒருத்தன் இருக்க முடியுமா..?”

“நீ அவனக் கூப்பிட்டு பேசியிருக்கலாமே…!!”

“உன்னக் கூப்பிட்டு காமிக்கலாம்னு திரும்பறதுக்குள்ள ஆள் மாயமா மறஞ்சுட்டான்..”

“சரி..விட்டுத்தள்ளு….! எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு..
லெட்ஸ் கோ ஹோம்…. நேரா படுக்கையில தான் விழப்போறேன்..”

திரும்பப் போகிற வழியெல்லாம் அந்த குடுமி இளைஞன்தான்…!

அறைக்குப் போனதுமே வீணா படுத்துவிட்டாள்.

குழந்தைகளுக்கும் தனக்கும் ஒரு பீட்ஸா ஆர்டர் பண்ணிவிட்டு, அவர்களுக்கு ஒரு கார்ட்டூன் போட்டுவிட்டு ஃபிரிட்ஜில் இருந்து ஒரு ஹெனிக்கன் பியரை எடுத்து வைத்துக் கொண்டு மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தான்..

***

அபிநந்தன் வணிகவியல் மேற்படிப்பிற்காக கல்கத்தாவில் இரண்டு வருடம் தங்கியிருக்கும் போதுதான் வீணா பழக்கமானாள்.

அபிக்கு ஓவியக் கலையில் அதிக ஈடுபாடு உண்டு.அவன் பெரிய ஓவியனாக வேண்டுமென்று சிறுவயதிலேயே கனவு கண்டு கொண்டிருப்பான்.

ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக படித்து சீக்கிரமே ஒரு வேலையில் அமர வேண்டிய கட்டாயம்..

எங்கு ஓவியக் கண்காட்சி நடந்தாலும் தவறாமல் போய்விடுவான்..

கல்கத்தாவிலுள்ள பிரபலமான பெண் ஓவியர்கள் வரைந்த படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன…

ஒரு ஓவியம் அவரை மிகவும் கவர்ந்தது.முகமில்லா ஒரு பெண் உருவம்..

‘காணவில்லை ‘ என்ற தலைப்பில்.!!

“என்ன? ரொம்ப நேரமா தேடிட்டிருக்கீங்க..!! கிடைக்கலையா…??”

“எது?”

“நீங்க தேடும் அந்த பெண்ணின் முகம் ?? அது ஒரு போதும் உங்களுக்கு கிடைக்காது….அது தொலைந்து போன முகம்…”

அபி ஒரு வினாடி பதில் கூற முடியாமல் திணறினான்..

“ஐயம் வீணா..இந்த முகத்துக்கு சொந்தக்காரி’

வீணாவை உடனே அவனுக்கு பிடித்து விட்டது.

இருவரும் அடிக்கடி சந்தித்தார்கள்.

வீணாவின் வீட்டிற்கு போன அன்றுதான் அவள் எங்கேயோ எட்டாத உயரத்தில் இருப்பவள் என்று புரிந்தது..

அவளிடம் நெருக்கமாக பழகுவது சரியல்ல என்று நினைக்க ஆரம்பிக்கும் போதே,

“அபி..உன்னை என் அப்பா.. அம்மாவுக்கு அறிமுகம் செய்து வைக்கவேண்டிய நேரம் வந்து விட்டது..

ஐ லவ் யூ!! உனக்கு என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா..??”

படிப்பு முடிந்ததும் வீணாவின் கணவன்+ வீணா க்ரூப் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் என்று டபிள் ப்ரமோஷன்..!

கல்கத்தாவில் பாலிகஞ்சில் நாலு கிரவுண்டில் வீடு..

மூன்று வருடத்தில் மறுபடியும் டபிள் ப்ரமோஷன்..!

தன்யா..கன்யா…இரட்டை இளவரசிகள்..

ஏழு வருடங்களில் அசுர வளர்ச்சி…வீணா ஒரு சின்ன ஸ்டூடியோ வைத்துக் கொண்டு ஓவியக் கலையை தொடர்ந்தாள்..

வருடத்துக்கு ஒருமுறை ஒரு மாத கட்டாய ஓய்வு.வீணாவின் உத்தரவு!!

இதோ இப்போது டார்ஜீலிங்கில்!

***

தன்யாவும் கன்யாவும் இரவு கொட்டமடித்துவிட்டு இரண்டு அதட்டல் போட்டப்புறம்தான் தூங்கினார்கள்..

காலை மணி ஒன்பதாகியும் எழுந்திருக்கவில்லை..

வீணாவும் அபியும் கையில் காஃபியுடன் சிற்றுண்டி முடித்து பால்கனியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்…

“அபி..நீ கவனிச்சிருக்கியா..? தன்யாவுக்கும் கன்யாவுக்கும்
நீலநிற பற்பசை தான் பிடிக்குது.

இரண்டுபேரும் பிரவுன் நிற சாக்சை போடமாட்டாங்களாம்.

இரண்டும் மஞ்சக்கருவை எடுத்துட்டு தந்தான் முட்டைய சாப்பிடுதுங்க…

அதிசயமா இல்ல….??

ஏய் !! அபி !! என்ன நான் சொல்லிட்டே இருக்கேன்…? என்னவோ யோசிச்சிட்டு இருக்க ?

வீணா கையை அவன் முகத்துக்கு நேரே ஆட்டினாள்….

“வீணா. ! என்ன சொன்ன ??”

“அபி ! நீ சரியில்ல…! நம்ம குழந்தைங்க இரண்டு பேருக்கும் இருக்கிற ஒரே மாதிரியான டேஸ்ட்டப்பத்திதான் பேசிட்டிருந்தேன்….”

“வீணா.நானும் அதப்பத்திதான் யோசிச்சிட்டிருந்தேன்…?

“ஏய்.பொய் சொல்லாத… நீதான் நான் பேசினத கேக்கவேயில்லையே… அப்புறம் ??”

“வீணா…! உங்க வீட்டில.. அதாவது உங்க குடும்பத்தில யாருக்காவது இரட்டை குழந்தைக்கு இருந்திருக்கா..?”

“ஓ…இருக்கே…!”

“சொல்லு… யாருக்கு….??”

“எனக்கு…! நமக்கு !”

“ பீ சீரியஸ் வீணா…!”

“சரி..சரி..எனக்கு தெரிஞ்சு யாரும் இருக்கிற மாதிரி இல்ல…”

சரி..இப்போ என்ன ஆராய்ச்சி.?”

“நீ சொன்னியே… நம்ம பசங்களுக்கு ஒரே டேஸ்ட்னு…

“டிராகன் மார்க்கெட்ல பாத்த அவனுக்கும் எனக்கும் கூட ஒரே டேஸ்ட்..பாக்கவும் என்ன மாதிரியே.. இரண்டு பேரும் இரட்டை குழந்தைகளாயிருக்க சான்ஸ் இருக்கா…?? மண்ட குழம்புது வீணா…”

வீணா எழுந்து அபியின் அருகே வந்து அவன் தோளைப் பிடித்துக் கொண்டாள்..
“ஓ..நீ இன்னமும் டிராகன் மார்க்கெட்டுலதான் இருக்கியா?

ஐயம் சாரி அபி..உன்னோட உணர்ச்சிகள புரிஞ்சுக்காம கேலியாக பேசிட்டேன்..

ஆனா நீ பொறந்த போது இன்னொரு குழந்தை இருந்தது உனக்கு எப்படி தெரியாம போகும்.? அம்மாக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்குன்னு ஊருக்கே தெரிஞ்சிருக்குமே.!!

அத எப்படி மறைக்க முடியும்..??

அம்மா…அப்பா… உயிரோட இருந்தா உடனே இந்த கேள்விக்கு பதில் கிடைச்சிடுமே…

இப்ப யாரைக் கேக்கலாம்…?”

“வீணா…நாந்தான் உனக்கு நிறைய தடவை சொல்லியிருக்கேனே.! அப்பாவும் அம்மாவும் குடும்பத்த எதுத்துகிட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு…

லக்னோவில இருக்கும்போதுதான் நான் பிறந்தேன்..அப்பா மட்டும்தான் கூட இருந்தாங்க.ஹாஸ்பிடல் பேரு லேசா நினைவு இருக்கு..அவுங்கதான் உதவி பண்ணனும்.

அடுத்த இரண்டு நாளும் அபிக்கு இதே வேலைதான்..

குடும்பத்தில் தெரிந்தவர்களைக் கேட்டுப் பார்த்தான்.

ம்ஹூம்.. எல்லோரும் அடித்து சொல்லி விட்டார்கள்.. நோ ட்வின்ஸ்…..!!

இனி மருத்துவமனையில் தான் கேட்டுப் பார்க்க வேண்டும்…!

“விடு…அபி…அவன நிச்சயம் மறுபடியும் இங்க பார்ப்போம்னு என் உள் மனசு சொல்லுது…
பொறுமையா இரு….!

அவள் சொன்னது சனிக் கிழமை பலித்தது……

***

முதல் நாளே குழந்தைகள் தீர்மானம் செய்து விட்டார்கள்.இமாலயன் ரயில்வேயின் டாய் ட்ரெயின் சவாரி..!

“வீணா..நீ குழந்தைங்கள கூட்டிட்டு போறியா? நான் மியூசியம் பாத்துட்டு புத்தகக் கடைக்கு போலாம்னு இருக்கேன்…”

வீணாவுக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது.. அவன் மனம் அவன் வசமில்லை..

சரி..தனியாக விட்டுவிடுவோமென்று குழந்தைகளை கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்..

அபி இன்றைக்கு எப்படியாவது அந்த குடுமிக்காரனை பார்த்துவிடவேண்டுமென்ற வெறியில் இருந்தான்..

வேறு எங்கு போய்விடப்போகிறான்….?

மீண்டும் டிராகன் மார்க்கெட் போய் பார்த்தாலென்ன…?

கடைக்காரனிடமாவது அவனைப் பற்றிய விவரம் கேட்டுப் பார்க்கலாமே…??

லோக்கலாயிருந்தால் நிச்சயம் அவனுக்கு தெரியாமல் போகாது…

மூன்று தடவை மார்க்கெட்டை சுத்தினதுதான் மிச்சம்…

மதியம் ஒரு பீர் குடிக்கக் தோன்றியது..

பக்கத்தில் ஜோய்ஸ் பப் மிகவும் பிரசித்தி பெற்றது..

புரண் என்பவர் நடத்திவந்தார்.

அவருடைய மகன் பெயரில் நடத்திய அந்த மதுக்கூடம் டார்ஜீலிங் வரும் பயணிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வந்தது..

அதற்குக் காரணம் அவருடைய அன்பான உபசரிப்பு தான்…. தன் கையாலேயே வாடிக்கையாளர்களுக்கு மதுவழங்கி உபசரிக்கும் பாணியே தனி….! இப்போது அவர் இல்லை…

அங்கிருந்த இருவர் அமரும் மேசையில் அமருவதற்காக சுற்றிலும் பார்த்தவனுக்கு ஜாக்பாட் அடித்ததுபோல ஒரே இன்ப அதிர்ச்சி..

ஒரு மேசையில் காதில் இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு, அவன் தேடி வந்த இளைஞன்.

“ஹலோ…!!”என கை நீட்டினான்.

காதில் மாட்டியிருந்த இயர் ஃபோனைக் கழட்டிய வண்ணம் எழுந்து நின்றான் அவன்.

“ஐயம்..அபி…! இங்கே உட்காரலாமா…?”

“தாராளமாக…! பை தி வே..! நான் சிபி…!”

மறுபடியும் ஒரு இன்ப அதிர்ச்சி..!

“நீங்க ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ணிட்டீங்களா…??”

“நாட் யெட்….!”

பணியாளரைக் கூப்பிட்டான் அபி..

“எனி வோட்கா..? விஸ்கி…??”

“நோ… பியர் மட்டுமே சாப்பிடுவேன்…”

“இரண்டு ஹெனிக்கன் பியர்…”

இருவர் குரலும் ஏககாலத்தில் ஒலித்தது…

“சிபி… நீங்க யாருன்னே எனக்கு தெரியாது.மூணுநாள் முன்னாடி இங்க ஒரு கடையில உங்களப் பாத்தேன்..

இல்லையில்ல.. பாக்குறதுக்கு முன்னாடி உங்க குரலத்தான் கேட்டேன்.!

நான் உபயோகிக்கும் அதே பிராண்டட் ஐட்டம்ஸ்….

திரும்பின உங்க முகம்…!

சிபி..என்ன நல்லா பாருங்க…
நானும் நீங்களும்.. எப்படி இது சாத்தியம்.??”

சிபி மிகவும் அமைதியாக இருந்தான்…அவனையே உற்று நோக்கினான்..!

“யெஸ்…யூ ஆர் ரைட்…! எனக்கு மீசை.. உங்களுக்கு கண்ணாடி.. ஆனால் எனக்கு இது பிரமிப்பைத் தரல..ஆனா தற்செயல்னும் சொல்லமாட்டேன்…
அதிசயம்னு வேணா சொல்லலாம்..”

“நோ..சிபி ..!! என்னால அப்படி இருக்க முடியல… உங்களப் பார்த்ததிலிருந்து நான் நானாக இல்ல.. நீங்களும் நானும் இரட்டை பிறவிகளோன்னு தோணுது..!

கமான்…டோன்ட் ஹைட் யுவர் ஃபீலிங்ஸ்….உங்களால எப்படி இத சாதாரணமா ஏத்துக்க முடியுது…?”‘

“அபி.. நாம் இரட்டை பிறவின்னே வச்சுக்கலாம்..

ஸோ வாட்…? இப்ப என்ன அதுக்கு…??”

அபிக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை.. இவன் என்ன புத்தனா..? உணர்ச்சிகளை வென்ற மகானா..?

பியர் வந்தது.. இருவரும்
‘ சியர்ஸ் ‘ சொல்லிவிட்டு தொடர்ந்தார்கள்..

“சிபி.. உங்களுக்கு ஒரு சகோதரன் இருப்பது மகிழ்ச்சியா இல்லையா..? எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குது..

உங்களால..உன்னால… எப்பிடி இவ்வளவு இயல்பா இருக்க முடியுது….?”

“அபி… நம்ம இரண்டு பேரையும் பார்த்தாலே புரியுமே…!

வாழ்க்கையில எல்லாமே போராடிதான் எனக்கு கிடச்சிருக்கு…நிறைய ஏமாந்தவன் எதையும் எதிர்பார்க்க மாட்டான்.அதிகமா உணர்ச்சிவசப்பட மாட்டான்..

இப்போ..இந்த வினாடி மட்டும்தான் எனக்கு சொந்தம்.. எனக்கு நேற்றும் நாளையும் கிடையாது…”

“சிபி..உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…நாம ஏதாவது ஆர்டர் பண்ணலாம்…..

சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.. உன்னப் பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கு…
இஃப் யூ டோண்ட் மைண்ட்…!!”

“இரண்டு ஸன்னி ஸைட் அப்…! ஆலு பராட்டா … தால் மக்கானி..”
மறுபடியும் இருவர் குரலும் ஏக காலத்தில் ஒலித்தது…

அபி பேசினான்..நிறையவே பேசினான்….

***

“எனக்கு அஞ்சு வயசுக்கு முன்னால நடந்ததெல்லாம் நினைவில இல்ல. நான் ஒரு பாதிரியாரால வளர்க்கப்பட்டது மட்டும் நியாபகம் இருக்கு. என்னோட பெற்றோர்கள் ஏதோ கார்விபத்தில பலியானங்கன்னும் அனாதையா புதருக்குள்ள இருந்து என்னை எடுத்த சர்ச் பாதிரியார் தன்னோட அரவணைப்புல வச்சிகிட்டாருன்னு சொல்லியிருக்கார்…அவர்தான் சிபின்னு பேர் வச்சார்.

என்னோட ஓவியத்திறமைய பாத்துட்டு ஒரு ஓவியப்பள்ளியில சேர்த்துவிட்டார். அவர் இறந்தப்புறம் மறுபடியும் அனாதை ஆனேன். ஒரு கலைக்கூடத்தில வேலை பாத்துக்கிட்டே ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சேன். சில விளம்பரங்கள், போஸ்ட்டர்கள் தவிர பெரிசா ஒண்ணும் வருமானமில்ல. எத்தனையோ நாட்கள் பட்டினி கிடந்திருக்கேன். கோவால கொஞ்சநாள் தங்கியிருந்தேன்..என்னோட படங்கள வெளிநாட்டுக்காரங்க விரும்பி வாங்கின பணத்திலதான் வாழ்க்கை ஓடிட்டிருக்கு. அவுங்க பணத்தோட கஞ்சா, அபின் எல்லாமே பழக்கப்படுத்தி விட்டுட்டாங்க. இதோ பாத்தீங்களா அபி”

கையில் வைத்திருந்த நிறைய ஓவியச் சுருள்களைக் காண்பித்தான்.

இவன் எங்கோ இருக்க வேண்டியவன். ஆனால் இவன் சொல்வதைப் பார்த்தால் இவனுக்கு பெற்றோர்கள் இருந்திருக்கிறார்களே…!

ஆனாலும் அபி தீர்மானமாக இருந்தான். இவன் தனது இரட்டை சகோதரன் தான்.

“சிபி… உங்கிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே..? நாம ஏன் ஒரு டி.என்.ஏ.. டெஸ்ட் பண்ணிப் பாக்கக் கூடாது..?”

“பார்த்தால்…??”

“நீ என்னோட சகோதரன்னு தெரிஞ்சிடுமே…!”

“தெரிஞ்சால்….?”

அபிக்கு மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை..

“அபி….நீ எம்மேல ரொம்பவே பாசம் வச்சிட்ட….நீ ஆசைப்பட்டது எல்லாமே வாழ்க்கையில உனக்கு கிடைச்சிருக்கு..இப்போ உனக்கு நான் வேணும்…கூடவே வேணும்..!!

நானும் நீயும் ஒரே பழத்து விதைகளாயிருக்கலாம். எனக்கும் அதே எண்ணம் இருக்கு..

ஆனா யோசிச்சு பாரு…!!

இந்த முப்பத்தஞ்சு வருடம் நீயும் நானும் வாழ்ந்த வாழ்க்கை!

உன்னைப் பார்த்தாலே நீ எட்டாத உயரத்தில இருக்கன்னு புரியுது…உன்னோட ஒவ்வோரு அசைவிலயும் உன் செல்வ செழிப்பு தெரியுது…

உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கு பிடிக்கிறத வச்சு என்னை சட்டுனு எடை போட்டுடாத..

அது நம்மோட டி.என்.ஏ. விளையாடும் விளையாட்டு..

அதைத் தவிர எத்தனையோ இருக்கு.!

என்னோட ஒரு வாரம் தங்கினா.. ஏன் இரண்டு நாள் தங்கினா போதும்.. ஏன் இவனைப் பாத்தோமுன்னு மிகவும் வருத்தப்படுவ.இந்த மாதிரி ஒரு சகோதரன் இருக்கானேன்னு நெனச்சு வெட்கப்படுவ..

தினம் தினம் வேதனப்படுவ!

பிற்காலத்தில என்ன மாதிரி ஒரு சித்தப்பாவோ, பெரியப்பாவோ கிடைச்சத நினச்சு உன் குழந்தைகளும் அவமானப்படுவாங்க…!

நான் நாத்தோ சின்ன செடியோ இல்ல.. வளர்ந்த மரம்..பிடுங்கி நட முயற்சி பண்ணாத..செத்திருவேன்!

என்னோட நண்பனாவே இரு…எப்போ வேணாலும் சந்திச்சுக்கலாம்….

உன் குடும்பத்த அவசியம் சந்திப்பேன்…

கூடப் பிறந்தவனா இல்ல.. ஒரு நண்பனா..!

டேக் இட் ஈசி மை ஃப்ரண்ட்..!

அபி எழுந்து அப்படியே அவனனைத் தழுவிக் கொண்டான்.

இருவர் கழுத்துக்குக் கீழேயும் நெல்லிக்காய் அளவில் மச்சம்..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *