என்னைப்போல் ஒருத்தி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2024
பார்வையிட்டோர்: 294 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜெரோம்.

பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட்டில் நாலாங்ளாஸ் படித்த போது என்னுடைய ஆஸ்தான சிநேகிதன். ஹோம் ஒர்க் செய்யாமல் பெஞ்ச் மேலே ஏறி நின்ற போது எனக்கு கம்பெனி கொடுத்தவன்!

எத்தனை வருஷமாச்சு இவனைப் பார்த்து! பள்ளிக் கூட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன் இவனை. மனைவியோடு வந்திருக்கிறான், என்னைப் போலவே.

நான் அடையாளங் கண்டு கொண்டேன். அதேபோல இவன் என்னை அடையாளங் கண்டு கொள்கிறானா என்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிற குறுகுறுப்போடு அவனை சமீபித்த போது, அவனுடைய பான்ட் பாக்கெட்டிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்டெதாஸ்கோப்பைப் பார்த்துப் பின்வாங்கினேன்.

ஜெரோம் இப்போது ஒரு டாக்டர். நான்? சாமான்யமான ஒரு க்ளார்க்.

வேண்டாம். இந்தப் பரிதாபமான க்ளார்க் மூஞ்சியை அந்த டாக்டரிடம் காட்ட வேண்டாம். குட் பய் நண்பனே.

அந்தக் காம்ப்ளக்ஸிலிருந்து வெளியேறுகிற போது இவள் விலாவில் இடித்தாள். “அந்த டாக்டரோட போனாளே அவளப் பாத்தீங்களா?”

டாக்டரையே பார்க்காமல் நான் ஜகா வாங்கிக் கொண்டிருக்கிற போது, உடன் போகிறவளை நான் ஏன் பார்க்கப் போகிறேன்!

“அவர் சம்சாரமாயிருக்கும், அதுக்கென்ன இப்ப?” என்று ஒப்புக்குச் சொல்லி வைத்தேன்.

“அவ என்னோட க்ளாஸ்மேட்டுங்க” என்றாள் இவள்.

“நா காலேஜ் ஃபஸ்ட். அவ பாவம் ஃபெயிலாய்ட்டா. இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் இன்னும் அவளுக்குப் போகவே போகல பாருங்க. என்னைப் பாத்தும் பாக்காத மாதிரி போறா. இத்தனை வருஷங்கழிச்சிப் பாக்கறோம், ஒரு ஹலோ சொல்ல மாட்டாளா? என்ன மோசமான ஒலகங்க இது!”

– ஆனந்த விகடன், “அவன் அவள் அவர்கள்”, 03.10.2004.

– ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் (பகுதி-1). முதற் பதிப்பு: டிசம்பர் 2012, நிலாச்சாரல் லிமிடெட், சென்னை.

திருநெல்வேலிக்காரரான ஏ.ஏ.ஹெச்.கே.கோரி இப்போது வசிப்பது சென்னையில். ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும், இலக்கியப் பத்திரிகைகளிலுமாக இதுவரை 200 ப்ளஸ் சிறுகதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள். மெய்ன் காட் கேட் என்கிற சிறுகதைத் தொகுதியும், காதில் மெல்ல காதல் சொல்ல என்கிற நாவலும் 2009ல் வெளியாயின. மாம்பழ சாலை என்கிற ஆறாவது சிறுகதைத் தொகுதியும், சிரிக்கும் நாளே திருநாள் என்கிற நாவலும் 2011ல் வெளியாகவிருக்கின்றன. 2009ம் வருஷம் கல்கி மற்றும் கலைமகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *