என்னவளே! அடி சின்னவளே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 2,479 
 
 

நீலத்தில் இத்தனை வகைகளா…? அதுவும் 20 சென்டிமீட்டர் பூங்குருவியின் உடலில்!

நெற்றியிலும் தோள்பட்டையிலும் கருநீல தீற்றுகள்..ராயல் ப்ளூ இறக்கைகள்..அதில் ஆங்காங்கே கருந்திட்டுகள்..கருத்த அலகு..

சூரிய ஒளி பட்டு மின்னும் இடங்களில் கருநீல செதில்களின் பளபளப்பு மின்னி மின்னி மறையும் காட்சி மாயாஜாலம் நிகழ்த்தியது…

இதோ…நான் எதிபார்த்து காத்திருந்த விசில் சத்தம்…

விஷ்ஷ்ஷ்ஷ்…விஷ் விஷ்…

நீண்ட விசில்…இடைவெளி விட்டு …மறுபடியும்..

சீகார் பூங்குருவி…மலபார் விசிலிங் திரஷ்…

என்னை மறந்து அதன் கூவலில் லயித்திருந்த தருணத்தில்…

ஐய்யோ… என்ன இது? தொப்பென்று மரக்கிளையிலிருந்து …தோட்டா சத்தம்…!

என்னுடைய பூங்குருவியை எந்தப்பாவியோ சுட்டிருக்க வேண்டும்…! எப்படி மனது வந்தது…?

ஓடிப்போய் புதர்களை விலக்கிப் பார்ப்போமா…? மூளையே மரத்துப் போய் கால் நகர மறுத்தது…

அதற்குள் சலசலவென்ற சத்தம்…புதரில் இருந்து வெளிவந்தது அந்த உருவம்…அவன் மனிதனாய் இருக்க முடியாது..மிருகம்…பறவைக் குஞ்சை, அதன் உயிர் நாடியை நெரிந்துக் கொன்ற மிருகம்…!

அதற்குள் அவன் புதரில் இருந்து வெளிப்பட்டான்…இளைஞன் வயதைக் கடந்திருந்தான் முப்பது வயது இருக்கும்..உள்ளத்தைப் போல் உடலும் கரடுமுரடாகவே இருந்தது…கையில்லாத பழுப்பு நிற ஸஃபாரி…

கையில் பொத்தியிருந்தது பிஸ்டல் இல்லை…என் அருமை பூங்குருவி…ஆம் நிச்சயம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்..

என்னை எதிர்பார்க்கவில்லை என்று அந்தப் புருவ நெரிசல் கூறியது…ஆனாலும் சட்டென சமாளித்துக் கொண்டான்..

“ஹலோ! ஐயம் ரஞ்சன்..நைஸ் டு மீட் யூ…!”

தன்னிச்சையாக நீண்ட என் கைமேல் கோபம் வந்தது. ‘இட்ஸ் நாட் நைஸ்’ என்று மனது சபித்தது…

“உங்கள் பெயர்…?”

“குகன்…”

“குகன்..ஸீ…” கையை விரித்து காண்பித்தான்..குனிந்து அதை முத்தமிட்டான்..

“மை ப்ரைஸ்லெஸ் பொஸஷன்…மை பெஸ்ட் ஷாட் எவர்..இந்த ரஞ்சன் வச்ச குறி தப்பாது…என்ன குகன்? ஆர் யூ இன் டியர்ஸ்…? என் மேல் கோபமா…? நீங்கள் ஒரு பர்ட் வாச்சர்…சரியா..? உங்கள் கையில் இருக்கும் பைனாக்குலரே சொல்கிறதே…!”

“பர்ட் வாச்சர் இல்லையடா மடையா…பர்ட் லவர்…!”

அவனுக்கு என்ன புரியப்போகிறது..?

“இந்த மலபார் விசிலிங் திரஷு க்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்…”

“மிஸ்டர் ரஞ்சன்…இந்தக் குருவியை மீண்டும் விசிலடிக்கச் செய்ய முடியுமா…? இதன் கருநீல சிறகுகளைப் பறக்க வைக்க முடியுமா? சொல்லுங்கள்…”

அவன் சட்டையைப்பிடித்து உலுக்கினேன்..

“கைய எடுங்க குகன்…! ஏன் இவ்வளவு வயலன்ட் ஆறீங்க..? கூல் டவுன்!”

சாத்தான் வேதம் ஓதுகிறதா…?

“குகன்..! ஒரு குருவிக்காக இவ்வளவு உணர்ச்சிவசப் படாதீங்க…! இதுமாதிரி ஆயிரக் கணக்குல இந்த காடு முழுசும் குருவிங்க இருக்கு..!”

“என்ன..? என்ன சொன்னீங்க…? இதே மாதிரி குருவியக் காமிங்க பாக்கலாம்…முதல்ல நீங்க பண்ணினது சட்டப்படி குத்தம்..வனத்துறைக்கு அறிவிச்சா உடனே விலங்குதான்…”

“எனக்கும் தெரியும் குகன்.. அதுக்கெல்லாம் ஆளு வச்சிருக்கேன்…ஸீ யூ…”


“குகன்…! நான் ரொம்ப நாளா உன்ன கேட்டுகிட்டே இருக்கேனே! மறந்துட்டியா..?”

நந்தினி என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கேட்டாள்…!

எதை மறந்தேன்…? கேட்டால் கோபம் வரும்…!

“உனக்கு சுத்தமா மறந்துபோச்சு…! ஹிடன் வேலிக்கு (Hidden valley.. மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு) கூட்டிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணியிருந்த..”

“சாரி டியர்..சுத்தமா மறந்துட்டேன்…இங்கியே பொறந்து வளந்த நீ எப்படி இதப்பாக்காம விட்ட…”

“அப்பா என்ன அப்படி பொத்தி வளத்திருக்காரு…உன்னோடதான் பாக்கணும்னு எனக்கு விதிச்சிருக்கே…”

நந்தினி எனக்கு அடித்த லாட்டரி…குன்னூர் தேயிலைத் தோட்டத்தை நிர்வகிக்க வந்த எனக்கு அந்த தோட்டத்தையே உரிமையாக்க சட்டப்படி வழிவகுத்துக் கொடுத்து விட்டாரே மதன்…

நந்தினி மதன், நந்தினி குகனானாள்…

பணக்கார அப்பாவால் வளர்க்கப்பட்ட ஒரே செல்லமகள் எப்படி இருப்பாளோ அப்படி இருந்தாள்…கேட்பது அடுத்த நொடியில் கையில் இருக்க வேண்டும்…

என்னக் கேட்டாள்…கிடைத்து விட்டேன்…


மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு…!

“தேனிலவை இங்கே கொண்டாடியிருக்க வேண்டும்…ஆல்ப்ஸ் எல்லாம் சுத்த வேஸ்ட்…”

நந்தினிக்கு மூடு வந்துவிட்டால் சமாளிப்பது அத்தனை சுலபமில்லை..

காட்டு மரங்களின் பச்சிலை மணம்…சலசலப்பு…பறவைகளின் க்ரீச்..க்ரீச்..வண்டுகளின் ரீங்காரம்…

இயற்கை தன் அழகையெல்லாம் கொட்டி நிரப்பிய பள்ளத்தாக்கு…

“ஏய்.. குகன்…நீ விசிலடிச்சியா…?”

“இல்லியே…”

“ஷ்ஷ்ஷ்..” வாயில் விரலை வைத்து ‘லிசன்’ என்றாள்..

சீழ்க்கை ஒலி…விஷ்ஷ்ஷ்ஷ்…விஷ்…விஷ்ஷ்ஷ்ஷ்…விட்டு விட்டு…

யாராயிருக்கும்…?

‘நான்தான்’ என்பதுபோல சிறிது தூரத்தில் ஒரு பறவை…சின்னஞ் சிறு குருவி…

பைனாக்குலரின் வழியாக ஒரு நீலம் மாயாஜாலம் புரிந்தது…

மலபார் விசிலிங் த்ரஷ்…வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகு…இருவருக்கும் மாறி மாறி பார்த்தும் அலுப்பு தீரவில்லை..

சட்டென்று மாயமானது அந்தப் பூங்குருவி…

நந்தினியும் இப்படித்தானே மாயமானாள்…?

“குகன்…நீ எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க..நீ இத பாத்திருக்கியா…?”

“யெஸ்…ஒரு முறை நாங்க நண்பர்கள் எல்லாம் சேந்து இடுக்கிக்கு சுற்றுலா போயிருந்தோம்…அப்பத்தான் இந்த விசில் சத்தத்த கேட்டோம்”.

‘நீதானே..நீதானே’ ன்னு மாறி மாறி ஒருத்தர ஒருத்தர் கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கும்போதுதான் ‘நான்தான்’னு ஜம்முனு மரத்து மேல உக்காந்திட்டே விசிலடிக்கிறான்..

இவன் பேரே ‘விசில் அடிக்கும் பள்ளி மாணவன்’ (whistling school boy)…என்ன பொருத்தமான பேரு பாரு…

மாதத்துக்கு ஒரு முறையாவது அவனைத் தேடி இருவரும் மறைக்கப்பட்ட பள்ளத்தக்குக்கு வருவது வழக்கமாகி விட்டது…

எங்கள் ஆனந்த வாழ்க்கையில் ஆனந்தன் குறுக்கிடும் வரை…

தேயிலையின் நிறம், மணம், குணம், தரம் நிர்ணயிப்பதில் நிபுணன்…இளம் வயதில் உலகம் முழுதும் சுற்றியவன்…பாடினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்…ஆணழகன்…

அவனது நிறம், மணம், குணம் நந்தினியை அவன்பால் இழுத்து விட்டதே…இருவரும் நெருங்கிவிட்டார்கள்..

நான் சீக்கிரமே அலுத்துவிட்டேன் போலிருக்கிறது…

“குகன்..என்ன மன்னிச்சிடு..நான் மீதி வாழ்க்கைய ஆனந்தோட கழிக்க முடிவு செய்திட்டேன்…இந்த எஸ்டேட், சொத்து எதுவுமே எனக்கு வேண்டாம்…நீதான் இதுக்காக ரொம்பவே உழைச்சிருக்க..யூ டிஸர்வ் திஸ்…”

“நோ நந்தினி…நீயில்லாத இந்த தேயிலைத் தோட்டத்துல என்னால் ஒரு வினாடி கூட இருக்க முடியாது…நீதான் என்னோட சொத்து..நீயே இல்லைன்னு ஆனப்புறம் நான் இத அனுபவிக்கறதே பாபம்..நீ ஆனந்தோட சந்தோஷமா இங்கியே வாழறதுதான் உங்கப்பாவுக்கு நான் செய்யும் மரியாதை..பீ ஹாப்பி…!”

என் நந்தினி ஒரு பூங்குருவி…அவள் சுதந்திரமாக விசிலடித்து பறக்கட்டும்…!


நானும் இப்போது ஒரு சுதந்திர பறவை..இன்னொரு துணையை ஏற்றுக் கொள்ள மனம் விரும்பவில்லை…இயற்கையின் மோகத்தில் மூழ்கிவிட்டேன்…

ஊட்டியின் குளிருக்கு இதமாக ஒரு ட்ரிங் வேண்டியிருந்தது..

ஃபேர்ண் ஹில் பார்..(Fern Hill Bar)..

பழக்கமான இடமானதால் வரவேற்பு பலமாயிருந்தது. நான் எப்போதும் அமரும் இருக்கையை நோக்கி நகர்ந்தேன்.

“ஹல்லோ…வாட் எ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ்”

குரல் கேட்டு திரும்பினேன்.

யாரை என் வாழ்நாளில் மீண்டும் சந்திக்கக் கூடாது என்று நினைத்தேனோ அவன் …ரஞ்சன்!

நான் பதில் ஏதும் சொல்லவில்லை…கையும் கொடுக்கவில்லை…

ஓ..ஸ்டில் யூ ஆர் ஆங்ரி வித் மீ…நீங்க எப்படி இங்க…? மறந்துட்டேன்..பறவையைத்தேடி வந்திருப்பீங்க…!

ஒய் டோன்ட் யூ ஜாயின் அஸ்? பைதபை திஸ் இஸ் ஜனனி..மை பெட்டர் ஹாஃப்..

ஜனனி..இது குகன்…ஆர்டன்ட் பர்ட் வாச்சர்!

பின்னால் நின்றவள் ஒரு புன்முறுவலோடு நிறுத்திக் கொண்டாள்…அவளைப் போன்ற அழகியை நான் இதுவரை பார்த்ததில்லை..

கருநீலப் புடவையில் சீகார் பூங்குருவியை பறந்து வந்து விட்டதா..?

ஒரு வினாடி திகைத்துப் போய் நின்று விட்டேன்..

“வேண்டாம்..யூ கேரி ஆன்…!”

“தென் வீ வில் ஜாயின் யூ…”

மறுக்க முடியவில்லை…

ரஞ்சனே எல்லாம் ஆர்டர் செய்யத் தொடங்கினான்..

அவள் ஒரு மாதுளம்பழச்சாற்றுடன் நிறுத்திக் கொண்டாள்…பேச்சும் ஒற்றை வார்த்தைகளில்!

ஒவ்வொரு முறை வாயைத் திறக்கும் போதும் கண்கள் அவன் அனுமதிக்குக் காத்திருப்பதுபோல் தோன்றியது…!

ரஞ்சன் திறந்த வாய் மூடாமல் பேசினான்.பேசினான்…!

“ஜனனி பிறந்து வளந்ததெல்லாம் சிங்கப்பூர்..அங்கே இவளது இசை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கப்போனவன் இவள் குயில் குரல்ல மயங்கிட்டேன்..இவள்தான் என் மனைவின்னு தீர்மானம் பண்ணிட்டேன்…”

“ஐ ஸீ…நீங்க இங்கேயும் பாடிட்டு இருக்கீங்கன்னு நம்பறேன்…”

அவள் கண்களில் இருந்த சோகம் ‘இல்லை’ யென்று பதிலை உணர்த்தியது..

“அதுக்கெல்லாம் நேரமில்லை குகன்..ஷீ இஸ் வெரி ஹாப்பி அட் ஹோம்…”

நீ எப்படி இந்தக் குயிலை பாட அனுமதிப்பாய்…? இந்நேரம் அதன் குரல்வளையை நெரிந்திருப்பாயே…!

குகன் மனதில் நினைத்ததை சொல்லமுடியவில்லை…ஜனனி முன்னால் அவள் கணவனை தரக்குறைவாகப் பேச அவன் நாகரீகம் இடம் தரவில்லை…!

“குகன் உங்களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே…ஆர் யூ சிங்கிள்..?”

“நோ ஐ வாஸ் மாரீட்…”

“அப்படின்னா…?”

“இப்போ என் மனைவி என்னோட இல்ல…”

அவனுள் இறங்கிய திரவம் அவனை தயக்கமின்றி பேச வைத்தது..

“சாரி..அவுங்களுக்கு ஏதாவது..?”

“நீங்க பயப்படற மாதிரி ஒண்ணுமில்லை..அவள் பிடிச்ச வேற வாழ்க்கைய தேர்ந்தெடுத்திட்டா…ஐம் வெரி ஹாப்பி…அவ ஒரு சுதந்திர பறவை…”

“குகன்…நீங்க தப்பு பண்ணிட்டீங்க. கையில கெடச்ச புதயலை நழுவ விட்டுட்டீங்க…! அந்த அழகான பறவைய கைக்குள்ள பொத்தி வச்சுக்கத் தெரியலையே…”

ஜனனி அவனை கண்கள் விரிய ஆச்சரியத்துடன் பார்த்தாள்…

“குகன்…நீங்க வீட்டுக்கு அவசியம் வரணும்..பறவைகளத் தேடி காட்ல அலையவே வேண்டாம்…எல்லாமே எங்க வீட்டுக்குள்ளேயே பாக்கலாம்…”

அடப்பாவி…எத்தனை பறவைகள சுட்டுத்தள்ளியிருக்க…அதுங்களப் பாத்தா போதுமா…? குயிலோட இன்னிசைக் குரல கேக்க வேண்டாமா…சீகார் குருவிய விசிலடிக்கச் செய்ய முடியுமா…?

என்னுடைய மைண்ட் வாய்ஸ் அவனுக்கு கேட்டு விட்டதா…?

“குகன்…பறவைகளோட குரல ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்..அதையும் ஒரு சிப்ல பொருத்தி பறவைங்க உடல்ல வச்சிட்டேன்..நீங்க தொட்டாலே கூவும்…விசிலடிக்கும்…”

“ரஞ்சன்..ப்ளீஸ்! போதும்..! கிளம்பலாம்…”

இதுவரை மௌனமாயிருந்த ஜனனியின் குரல் ஓங்கி ஒலித்தது..

இருவருமே திடுக்கிட்டு எழுந்து நின்றோம்..

ஜனனி கண்கள் சிவந்து , தாரை தாரையாய் கண்ணீர்…!

“ஹேய்..ஜனனி டியர்..என்னாச்சு…ஓக்கே. லெட்ஸ் லீவ்…”

அவளது தோளை அணைத்தபடி போகும் உருவத்தை பார்க்கும்போது மனிதனாக என் கண்ணுக்குத் தெரியவில்லை…மானை வேட்டையாடிய வெற்றிக் களிப்பில் மிதக்கும் புலியாகத்தான் தெரிந்தான்..

ஜனனி…உன் மௌன மொழி எனக்கு நன்றாகப் புரிகிறது…

யெஸ்..யூ ஆர் ஹிஸ் ப்ரைஸ்லெஸ் ஷாட்…பெஸ்ட் பொஸெஷன்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *