தூங்கிக்கொண்டிருக்கிறேன். அப்போது கணீர் கணீர் என்ற சத்தம். என்ன சத்தம் என்று எழும்பி குசினிக்குள் சென்று பார்த்தேன். அம்மா சட்டி, பானை, கோப்பை, என எடுத்து வைத்துக்கொண்டுருந்தா. என்னம்மா செய்கிறீர்கள் இந்த காலை வேளையில என்று கேட்டபோது.
“பிள்ள உனக்கு தெரியாதா இன்றைக்கு நம்மட பொருட்களையெல்லாத்தையும் எடுத்துப்போகப்போறம். நீ போய் உன்ட உடுப்பு எல்லாத்தையும் எடுத்து வை”. (அப்போது எனக்கு ஏழு வயது தான்)
என்னத்துக்கு அம்மா எடுத்துவைக்கணும். மகள் உங்களோடு எனக்கு பெரிய கரைச்சல் மகள். ஐயோ! சரிம்மா எடுத்துவைக்கன் விடுங்க. ஆமா அப்பா எங்கம்மா? அப்பாவா அவர் நம்மட ஆடு கோழியெல்லாம் கட்டிக்கிடக்காம் அத அவிட்டுவிட போறார். “மகள் நீ போய் நான் சொன்னதை செய்.” அம்மா நீங்கள் பேசுற ஒன்றும் எனக்கு விளங்கல. சரி நான் போய் எடுத்து வைக்கிறேன்.
மகள் என்று அப்பா அழைத்துக் கொண்டு வந்தார். என்னப்பா கூப்பிடுறீங்க என்ன விசயம். மகள் உனக்கு திரிபோச பிடிக்கும் தானே.
ஆமாம் அப்பா பிடிக்கும் அதை எடுத்து வைக்கின்றேன் என.
அப்பா இங்க என்ன நடக்குது நீங்களாவது சொல்லுங்களேன் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “பிள்ள நாம இந்த இடத்தில் இருக்கிறது ஆபத்தா அமையுமாம். வேறு இடத்துக்கு போக வேண்டுமாம். அதான் நாம எல்லாரும் போகப்போறோம் மகள். இப்ப யுத்தகாலம் என்டதால என்ன நடக்கும் எது நடக்கும் என்று தெரியாது மகள். அதான் நாமளும் மக்களோடு மக்களா போயிடனும் அதான் இந்த ஆயத்தம்.”
ஏன் அப்பா போகணும் நாம. நான் வரல நான் வறேன்டா என்ட மாடு கோழி எல்லாத்தையும் எடுத்துக்கொண்டுதான் நான் வருவேன் இல்லாட்டி நான் வரமாட்டேன் அப்பா.
மகள் அப்பா சொல்றத கேட்கணும் நானும் எல்லாத்தையும் விட்டுத்து போகணும் என்டு நினைக்கல மகள் இருந்தாலும் என்ன செய்ற நம்ம நிலைமை அப்படி (என பெருமூச்சுவிட்டார்
இவள் என்ட பேச்ச கேட்கிறதே இல்ல போய் நான் சொன்னது செய்யலையா இப்ப என்று அம்மா கோவமாக சொன்னார். அப்போது மாமியார் வந்து அம்மாவோட கதைத்த போது அப்போ. அம்மா சொல்ற நாம இரவோடு இரவா போகணும் பகல்ல போனா பிரச்சனையாம் என்று கூற மாமியார் நீ சொல்றது சரிதான் விக்கி என்று சொல்லுறா.
இரவு ஆறு மணிக்கு போலா பயணத்தை ஆரம்பித்தனர். என்டப்பா என்னை அவரின் தோளின் மேல் என்னை தூக்கி வைத்துக்கொண்டு “பத்திரமாக அப்பாட தலையை பிடித்துக் கொள் மகள் என்றார”. நானும் அப்பாவின் தலையை நன்றாகப் பிடித்துக்கொண்டு அப்பாவோட நல்லா போகப்போகிறேன் என்று ஆனந்தம் அடைந்தேன். ஆனால் பயணம் எவ்வளவு தூரம் என்று அறிய மறந்து விட்டேன்.
இரண்டு மூன்று நாட்களாக பயணம் தொடர்ந்து, அப்பா நீங்கள் என்னை இறக்கி விடுங்கள் நான் நடந்து வாறேன் உங்களுக்கு சிரமம் தானே அப்பா. மகள் அதெல்லாம் சிரமம் இல்லை நீ பேசாமல் இரு இந்த திரிபோசவை சாப்பிட்டு பிடி என்றார் அப்பா.
சீனி இல்லாம எப்படி சாப்பிட்றப்பா. அது இனிப்பாத்தான் இருக்கும் மகள் என கூறிக்கொண்டு தூக்கமின்றி நிம்மதியின்றி களைத்து போய் வாடிய முகத்துடன் சென்றார்.
இரவு பகலென இருபது நாட்கள் கடந்தன அப்பாவும் என்னை தோளிலே சுமந்து கொண்டு வந்தார். அப்பா என்னை கீழே இறக்கி விடவில்லை இன்னும் எத்தனை நாள் நான் இப்படி இருப்பது என்று அப்பாவிடம் கேட்டேன். “மகள் நான் உயிருடன் இருக்கும் வரை உன்னை என்றுமே சுமப்பேன் மகள் பேசாமல் இரு என்றார்”.
பக்கத்தில் வந்த மாமி என்ன குமார் உன்ட பிள்ளையை இறக்க மாட்டா போல. இல்லை அவள் சின்னப்பிள்ளை நம்மளப் போல நடக்க மாட்டாள் என்ன அதான். அம்மாவும் அப்பாக்கிட்ட சொல்லுறா கொஞ்சம் அவளை இறக்கி விடுங்களம்பா அவள் நடக்கட்டுமே என்று அதற்கு அப்பா இன்னும் கொஞ்ச தூரம் தான் பரவாயில்லை என்று கூறுகினார்.
பயணம் தொடர்ந்து செல்லுகின்றது அப்பா நீங்கள் சாப்பிட்டீங்களா எனக்கு திரிபோச மட்டும் சாப்பிட ஏலாம இருக்குப்பா. எனக்கு பசிக்கிறது என்ன செய்ய நான் எனக் கேட்டேன் எனது அப்பா ஒன்றும் கூறவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தான் என்று கூறினார். “எனக்கு தெரியாது அன்று எனது அப்பா உணவு உண்ணவில்லை என்றும் அவர் உணவு உண்டு ஒரு கிழமையாகிவிட்டது என்று எனக்கு தெரியவில்லை”.
அவர் பக்கத்தில் வந்த மாமாவிடம் கேட்டு ஒரு பிஸ்கட்டை வாங்கித்தந்தார். நான் உண்டு கொண்டு வந்தேன். “அடர்ந்த அந்த காட்டு வழி பயணம் பனி பொழிந்த இரவும் பதறிப்போன நாட்கலும் மிருகங்களின் சத்தம் வேறு பயத்தினை ஏற்படுத்தியது.” நான் அப்பாவிடம் எனக்கு பயமாக உள்ளது என்று அப்பாவிடம் கூறினேன்.
அப்பா ஏன் என்று கேட்க நான் அப்பாவிடம் ஏதோ கத்துவது போல் சத்தம் கேக்கிறதுப்பா என்றேன். அப்பா அது ஒன்றும் இல்லை மகள் அப்பத்தானே மகளை தூக்கிட்டு வாறன் யோசிக்காதே என்று என்னை தோளில் சுமந்து கொண்டு வந்தார். நானும் அட்டையை போன்று அப்பாவின் தோளில் ஒட்டிக்கொண்டு வந்தேன்.
“கண்விழித்து பார்த்தால் ஒரு கடற்கரையோரம் பக்கத்தில் வரிசையாக வீடுகள் இருந்தன வேலி இல்லை கிணறு இல்லை ஒரு பொதுவான மலசலக்கூடம் இருந்தது”.
நாம் கொஞ்ச நாள் இங்க தான் இருக்கணும் என்று கதைத்துக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. அப்போது அப்பாவிடம் அப்பா என்னை கீழே இறக்கிவிடுங்க நான் என்ன என்று பார்க்கிறேன் என்றேன்.
அப்பா சொன்னார் சிறிது காலம் நாம் இங்குதான் வாழ வேண்டும் என்று கூறினார். இந்த நாட்டுல யுத்த முடியும் வரைக்கும் இதுதான் நம்ம வீடு. அப்பா அப்போ இந்த ராணி மாடு அப்பு நாயெல்லாம் எங்கப்பா. அது நம்மட ஊர்ல நம்ம வீட்டு பாதுகாத்துட்டு இருக்கும் மகள் அங்க போய் பார்ப்போம் என்று அப்பா உணர்வுகளை அடக்கி கூறினார்.
புதிய வீடு பிடிக்கவில்லை என்று அழுதேன. ஆனால் அழுதும் எந்த பிரியோசனமும் இல்லை. கண்களை மூடி கண்களை திறப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டுது. அந்த நாளை இன்று நினைத்தால் கூட மனம் வேதனையடைகின்றது.
“காலங்கள் மாறினாலும்
சில காயங்கள் மாறுவதில்லை.”
– கு.யர்சினி, கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் கற்கைகள் துறை, தமிழ் சிறப்புக் கற்கை, மூன்றாம் வருடம்.