எனக்கு தெரியாமல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 6,013 
 

அன்று சேலத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தேன்.முக்கிய விருந்தாளியே நான் தான். கருத்தரங்கில் அவரவர்கள் தங்களுடைய கருத்துக்கக்களை மேடையில் விளக்கிக்கொண்டிருந்தபோது எனக்கு அழைப்பு செல்போனில் வந்தது. எரிச்சலுடன் எடுத்துப்பார்க்க மனைவி. இப்ப மீட்டிங் நடந்துட்டிருக்கு, பத்து நிமிசம் கழிச்சு நானே கூப்பிடுறேன். சொல்லிவிட்டு போனை அணைத்தவன், என்னையே பார்த்துக்கொண்டிருந்த அந்த கருத்தரங்கின் காரியதரிசியிடம் ஒண்ணுமில்லை, வீட்டில இருந்து போன் சமாளித்தேன். காரியதா¢சி நீங்க வேணா பேசிட்டு வாங்க,என்று சொல்லவும் நன்றி சொல்லிவிட்டு மெல்ல மேடையிலிருந்து இறங்கி வாசலை நோக்கி நடந்தேன்.

என்னம்மா? என்ன திடீருன்னு போன் பண்ணியிருக்க? செல் போனில் அழுகை.

எனக்கு பகீரென்றது ! என்னாச்சு ஏன் அழறே?சச்சு, ராமுவுக்கு ஒண்ணுமில்லையே?

இரண்டும் எங்கள் வாரிசுகள். அவங்களுக்கெல்லாம் ஒண்ணுமில்ல, மூக்கை உறிஞ்சிய சத்தம். சீக்கிரம் சொல்லு என்ன பிரச்சினை அங்கே? நம்ம வீட்டுல வச்சிருந்த மூணு பவுன் நகைய காணோம், அப்புறம் வெள்ளி விளக்கு ஒண்ணையும் காணோம்,பீரோவுல வச்சிருந்த பத்தாயிரம் பணத்தையும் காணோம் ஒப்பித்துக்கொண்டிருந்தாள்.

மனசு படபடத்தாலும், இங்க பாரு தெளிவா சொல்லு, வேற என்னென்ன காணாம போச்சு. எப்ப போச்சு.இதெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சுது?

காலையில பீரோவ சரியா கவனிக்கல, இப்ப அரை மணி நேரம் முன்னாடிதான் சச்சுவுக்கு டிரெஸ் எடுக்கறதுக்கு பீரோவை திறக்க போகும்போதுதான் பீரோ திறந்திருந்ததை பார்த்தேன். அப்புறம் நல்லா கவனிச்சு பார்த்ததுல பீரோவுக்குள்ள வச்சிருந்த மூணு பவும் செயின் ஒண்ணும்,பணம் பத்தாயிரத்தையும் காணோம், அதுக்குள்ள வச்சிருந்த வெள்ளி விளக்கு ஒண்ணையும் காணோம். வெளியில எல்லா இடத்தையும் பார்த்துட்டேன், மத்தது எல்லாம் இருக்கு.

சரி சரி நீ வெளியில எதையும் சொல்லாம இரு, நான் வந்ததுக்கு அப்புறம் பாத்துக்கலாம்.

இல்லே பக்கத்துல எல்லாம் போலீசுக்கு போலாம் அப்படீங்கறாங்க.

நீ என்ன சொன்ன?

நான் நீங்க வந்த பின்னால பாக்கலாம் அப்படீன்னு சொல்லிட்டேன்.

சரி இன்னைக்கு இராத்திரி கிளம்பி நாளைக்கு அங்க வந்திடுவேன். அப்புறம் பாக்கலாம்.

போனை அணைத்தவன் கருத்தரங்கு நடக்கும் அரங்குக்குள் நுழைந்து மேடைக்கு போகாமல் கீழே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டேன்.மனசு மட்டும் வீட்டிலிருந்தது.

அக்கம் பக்கம் ஒரே விசாரிப்புக்கள், போலீஸ் கம்ளெயிண்ட் பண்ணூங்க சார் என்று அறிவுரைகள், உங்க வீட்டு வேலைக்காரி மேலதான் எனக்கு சந்தேகம், என்று பல அறிவுரைகள். அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டேன்.எப்படி கண்டுபிடிப்பது யோசனையில் ஆழ்ந்தேன்.

ஒரு வாரம் அமைதியாக ஓடியிருந்தது.மனைவியுடன் கடைவீதிக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் எதிர்புறம் ஒரு இளஞ்சோடி நடந்து வந்து
கொண்டிருந்தன. என் மனைவியை கண்டவுடன் அந்தப்பெண் கைகளை பிடித்துக்கொண்டு அக்கா எப்படி இருக்கறீங்க, என்று வினவ நான் நல்லாயிருக்கேன், நீ எப்படி இருக்கே?

சரி நேரமிருக்கும்போது வீட்டுக்கு வா, சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

ஏம்மா, அந்த பெண் பேசறதுக்குள்ள அப்படி என்ன அவசரம்? நின்னு பேசிட்டுதான் வர்றது? கேட்ட என்னிடம் பசங்க வீட்டுல தனியா இருப்பாங்க, சீக்கிரம் போகணும் என்று சொன்னது எனக்கு செயற்கையாக பட்டது. ஏன் தினமும் வீட்டுல தனியாகத்தான் இருப்பாங்க, இன்னைக்கு மட்டும் ஏன் உனக்கு அக்கறை?சரி சரி சீக்கிரமா வாங்க.

மேற்கொண்டு பேசாமல் மெள்னமாக வந்ததால் நான் மேலும் பேச முடியாமல் போயிற்று.

வேலைக்காரி பொன்னம்மாள் ஏதோ இரகசியமாய் என் மனைவியிடம் வந்து சொல்ல அவளும் நாளைக்கு காலையில வரச்சொல் என்று சொல்வது கேட்டது. என்ன விசயம் என்று மனசு கேட்க விரும்பினாலும், அவளாக சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன்.

இரவு படுக்க வருவதற்கு கொஞ்சம் நேரமானது. அப்படி என்ன அடுக்களையில் வேலை எல்லாரும் சாப்பிட்ட பின்? கேட்டவனிடம் கொஞ்சம் லட்டும்,பர்பியும் செஞ்சேன், பசங்களுக்கு ஆகட்டுமேன்னு. எனக்கு ஆச்சர்யம், பராவாயில்லையே, எடுத்துட்டு வா சாப்பிட்டு பாக்கலாம். காலையில டிபனுக்கு வைக்கிறேன்.இப்ப படுங்க என்று என் வாயை அடைத்துவிட்டாள்.

காலையில் வேலைக்கு நானும், பள்ளிக்கு என் குழந்தைகளும் கிளம்பிவிட்டோம்.

பாதி தூரம் போன பின்னால்தான் ஞாபகம் வந்தது. காலையில் பலகாரம் வைப்பதாக சொன்னாள்,ஆனால் கண்ணில் கூட காட்டவில்லை.கோபம் வந்தது. வர வர இந்த வீட்டுல என்ன செய்யறாண்ணே தெரியமாட்டேங்குது.சாயங்காலம் போன உடனே கேட்கணும் முடிவு செய்துகொண்டேன்.

மாலை வீட்டுக்கு வந்தவனுக்கு தட்டில் ரெடியாக பலகாரங்கள் வைக்கப்பட்டு போய் கை கால் கழுவிட்டு வாங்க, பசங்க இப்பத்தான் சாப்பிட்டு போனாங்க.ஏன் காலையில் மறந்தாய் என்று சண்டை போடலாம் என்ற் கேட்க வந்தவன், தட்டில் பலகாரங்களை பார்த்த உடன் கை கால் கழுவ பின்புறம் சென்றேன்.

இரவு சாப்பிட்டு முடித்தவுடன் மெல்ல வீட்டு முன் சிறிய நடை உலா வந்தவனை எதிர் வீட்டு ராமையாவின் குரல் இழுத்த்து.

என்ன ஓய்? காலையில உம்ம வேலைக்காரியோட பொண்ணும்,மாப்பிள்ளையும் வந்து ஒரே விருந்து நடந்துகிட்டிருந்தது. எனக்கு ஆச்சர்யமாக போய்விட்டது. என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. வேலைக்காரி பொண்ணு ஏதோ டிகிரி படித்துக்கொண்டிருப்பதாக அல்லவா சொல்லிக்கொண்டிருந்தாள்.

அந்தப்பெண்ணுக்கு எப்பொழுது கல்யாணமாயிற்று. அவளுக்கு விருந்து வைத்தவள் என்னிடம் ஒரு வார்த்தை சொல்வதால் என்ன குறைந்து போயிற்று.மனதுக்குள் கோபம் வந்து உட்கார்ந்தாலும் முகத்தில் மெல்ல புன்னகையுடன் சமாளித்து ராமையாவிடம் இருந்து தப்பித்தேன்.முதலில் வேலைக்காரியிடம் இதை பற்றி விசாரிக்க வேண்டும், அதன் பின்னால் இவளிடம் சண்டை பிடிக்க வேண்டும். போருக்கு ஆயத்தமானேன்.

மறு நாள் வேலைக்கு போகும் அவசரத்தில், அனைத்தும் மறந்து போக, அதற்கு மறு நாள் வேலை விட்டு வீடு வரும்பொழுது மனைவி கோயிலுக்கு சென்று விட்டதாக தெரிவித்த வேலைக்காரியிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன்.

என்ன பொன்னம்மா உன் புள்ளை கல்யாணத்த எல்லாம் எங்கிட்ட கூட சொல்லாம முடிச்சுட்டே போலிருக்கு, வீட்டம்மா கிட்ட சொன்னவ எங்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சா போயிடுவே. உன்னைய உங்கம்மா காலத்துல இருந்து எனக்கு தெரியும், ஆனா என் வீட்டுக்காரிகிட்ட மட்டும் சொல்லிட்டு எனக்கு சொல்லாம இருந்திருக்கே? கொஞ்சம் கோபமாகவும்,ஆற்றாமையுடனும் சொன்னவனை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவள் கேவி கேவி அழ ஆரம்பித்தாள்.பயந்துவிட்ட நான் பொன்னம்மா பொன்னம்மா எதுக்கு அழறே? நான் ஒண்ணும் தப்பா கேட்டுடலயே?

ஐயா, நீங்க ஒன்ணும் தப்பா கேட்கலை, உங்களை சின்ன வயசுல இருந்து பாத்துக்கிட்டிருக்கற உங்களுக்கே தெரியாம இந்த கலியாணத்தை செஞ்சிருக்க்ண்ணா ஏண்ணு யோசிச்சு பாருங்கய்யா? படிக்க போன இடத்துல காதல், அது இதுன்னு சொல்லி கலயாணம் பண்ணி வைக்ககூடிய நிலைமையில என்னைய விட்டுட்டாயா? அந்த பையன் வீட்டுல அதுதான் சாக்குன்னு மூணு பவுன் நகையும், பணம் பத்தாயிரமும் வச்சாத்தான் கல்யாணம் அப்படீன்னு சண்டை புடிச்சங்கய்யா? வந்து அம்மா கிட்டத்தான் அழுதேன், அம்மா தான் சூழ்நிலை புரிஞ்சு எப்படியோ இந்த கல்யாணத்தை நடத்தி கொடுத்தாங்க. புள்ளை நாம சொலறத கேக்கறவளா இருந்தா இந்த ஊருக்கே சொல்லிட்டுதான பண்ணியிருப்பேன், சொன்னவள், ஆற்றாமை தாங்காமல் அழுவதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

காணாமல் போன பொருட்கள் காணாமல் போனதாகவே இருக்கட்டும் என முடிவு செய்து கொண்டேன். இவள் பெண்ணின் கல்யாணத்தை கூட தெரிந்ததாக காட்டி கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *