ஒரு பெரிய குடும்பத்திலே பெருஞ் செல்வனாக வாழ்ந்த தலைவன், நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலே கிடந்தான்.
அவனுக்குப் பல பிள்ளைகள், பேரன் பேத்திகள். எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். “அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? தாத்தா எனக்கு… …”
அவர் மனைவியும் அருகில் நின்று கதறி, “எனக்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று
பதைபதைக்கின்றாள். இனி பிழைக்கமாட்டான் என்று நிலைமை வந்ததும், ஒவ்வொருவராகச் சென்று “எனக்கு என்ன சொல்கிறீர்கள்?“ எனக் கேட்கின்றனர்.
நாள் முழுவதும் கண் மூடி, வாய் மூடிக் கிடந்த அவன் சற்று நினைவு வந்து, வாய் திறந்து, இவ்வளவு. நாளா சொன்னேன்! யார் கேட்டீர்கள்? இப்பொழுது மட்டும் கேட்க”…என்று சொல்லி நிறுத்திவிட்டான்.
இதிலிருந்து – தன் வாழ்நாள் எல்லாம் சொல்லுவதை சொல்லி வந்ததை எவரும் கேட்பதில்லை; கேட்காமல், சாகப்போகிற சமயத்தில் சொல்லுவதைத்தான் கேட்க விருப்பம் என்று தெரிகிறது – அது எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை –
எண்ணிப் பார்ப்பது நல்லது!
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை