எனக்கான காற்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 3,776 
 

இன்றைக்குத் தூங்கி எழுந்திருக்கும் போதே காலை 7 மணி. கண்ணிமைகளைத் திறக்கவே முடியவில்லை. விடியற்காலை 4 மணி வரை தூங்காமல் இருந்தது அசதியாக இருந்தது. நல்ல வேலை கொரோனா காலம் என்பதால் வேலை செய்யும் அம்மாவும் வரவில்லை. மூன்று மணி நேர தூக்கம கிடைத்தது. சோம்பல் முறித்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன். வீட்டில் ஒரு சத்தமும் இல்லை. கணவரும் பையனும் எழுந்திருக்க 12 மணியாவது ஆகும்.

‌ அடுப்பைப் பற்றவைத்து அவசரமாக ஒரு காபி போட்டுக் குடித்துவிட்டு , வேகமாக ஒரு குளியல் போட்டேன்.

சேலை கட்டுவதற்குக் கூட விருப்பமில்லை. ஒரு சுடிதாரை எடுத்துப் போட்டுக் கொண்டேன். தலை சீவி ரெடியாகி கிளம்பினேன். காலை டிபனை வெளியில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஞாபகமாக கொஞ்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, மொபைல் போனையும் சார்ஜில் இருந்து எடுத்து ஹேண்ட் பேக்கில் போட்டுக் கொண்டேன். வக்கீல் வீட்டு முகவரியை மீண்டும் ஒரு முறை பார்த்துக்கொண்டு கிளம்பி விட்டேன். கார் கதவைத் திறந்து விட்ட வாட்ச்மேனிடம், ‘ஐயா கேட்டால், அம்மா வெளியில் போயிருக்காங்க என்று சொல்லி விடு’ என்று கூறிவிட்டுக் கிளம்பினேன் .

ஒன்பது மணிக்கு வக்கீல் சாருமதியின் அப்பாயின்மென்ட் இருந்ததால் நேராக ஆழ்வார்பேட்டை சென்றேன். வீட்டின் ஹாலில் ஒரு ஐந்து நிமிடம் காத்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே நான் சாருமதியை ஒரு தோழி விட்டுக் கிருக பிரவேசத்தில் சந்தித்திருக்கிறேன்.

‘வாங்க ராஜி. எப்படி இருக்கீங்க’ என்று கேட்டுக்கொண்டே சாருமதி வந்தார். எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு அமர்ந்தேன். ‘உங்களைப் பானு வீட்டில் நான்கு மாதத்திற்கு முன்னால் பார்த்தது. நீங்க பெரிய பாடகி. உங்களோட பெரிய ரசிகை நான். உங்களைப் பார்த்ததில் இருந்து உங்கள் அழகின் ரசிகையும் ஆகிவிட்டேன். நீங்க எங்க வீட்டுக்கு வந்தது எனக்கு ரொம்ப பெருமை’. என்று என் கையைப் பிடித்து வரவேற்றார் சாருமதி. வேறு சமயமாக இருந்தால், மகிழ்ச்சியில் திளைத்திருப்பேன். ஒரு சிறிய புன்னகையுடன் அவர் கையில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அதற்குள் அவர்கள் வீட்டுச் சமையல் அம்மா எனக்குக் காபி கொண்டு வந்துவிட்டார்கள். சம்பிரதாயத்திற்காக இரண்டு வாய் குடித்துவிட்டு, தலையைக் குனிந்து கொண்டே, நான் உங்களைப் பார்க்க வந்தது, ஒரு வழக்கு விஷயமாக. இப்பொழுது அதைப்பற்றிப் பேசலாமா? என்று மெல்லிய குரலில் கேட்டேன். ‘தாராளமாகப் பேசலாம். ஆனால் இங்கு வேண்டாம். வாருங்கள். என் அலுவலகத்திற்கு’ என்று அந்த வீட்டின் காம்பவுண்டுக்குள் இருந்த அலுவலத்திற்குக் கூட்டிச் சென்றார்.

‘சொல்லுங்கள் ராஜி. யாருக்கு என்ன பிராப்ளம். நிச்சயமாக உங்களுக்கு உதவக் காத்திருகிறேன்’ என்றார் சாரு.

‘மேடம், பிரச்சினை எனக்கு தான். உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன். எனக்கு டைவர்ஸ் வாங்கித் தரமுடியுமா? என்றேன். ஒரு நிமிடம் அதிர்ந்த அவர், பின் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார். ‘சொல்லுங்க ராஜி. என்ன பிராப்ளம் உங்களுக்கு. இப்பொழுது உங்க கணவரோடு தானே இருக்கிறீர்கள் ‘என்று கேட்டார். ‘ஆம். என் கணவரோடும் என்ப மகனோடும் தான் இருக்கின்றேன்’. என் கணவர் நரேஷ் ஒரு பிசினஸ் மேன். 50 வயது ஆகிறது. எங்களுக்கு ஒரே மகன். அவன் பெயர் பிரசன்னா. 23 வயதாகிறது. இந்த வருடம் எஞ்சினியரிங் முடிக்கிறான்.’

ஒரு நிமிடம் இடைவெளிக்குப் பின், மீண்டும் பேசத் தொடங்கினேன். ‘நானும் நரேஷும் காதலித்து மணந்து கொண்டோம். என் வீட்டை எதிர்த்து அவரை நான் திருமணம் செய்து கொண்டேன். இன்று வரை என் வீட்டாரோடு எனக்கு உறவு இல்லை. அவருடைய அப்பா அம்மா இருந்த வரைக்கும் என்னை அவர்கள் தங்கள் பெண் போல் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் இறப்புக்குப் பின் , அவ்வப்போது குடித்து வந்த நரேஷ், முழுநேர குடிகாரர் ஆகிவிட்டார். நாள்தோறும் நண்பர்களோடு குடித்துவிட்டு, இரவு தாமதமாகத் தான் வீட்டுக்கு வருவார். நான் என்ன சொல்லியும் தன்னை அவர் திருத்திக் கொள்ளவில்லை. குடி இல்லாத பொழுது என்னிடம் மிகுந்த அன்பு காட்டுவார். குடிக்காதீர்கள் என்று சொன்னால் அவருக்குப் பிடிப்பதில்லை. இந்தச் சூழலில் வளர்ந்தான் பிரசன்னா. அவனுக்கு 15 வயது ஆகும் வரை, மிகுந்த கவனமாக அவனை வளர்த்தேன் அவருடைய அப்பா குடிப்பதை, அவனிடமிருந்து மறைத்தேன். அப்பொழுதெல்லாம் அவர் இரவு தான் குடிப்பார். அவர், பெற்றோரின் இறப்புக்குப்பின், பகல் நேரத்திலும் குடிக்கத் தொடங்கினார். வீட்டுக்குள்ளேயே குடிப்பதும், நண்பர்களோடு கும்மாளமிடுவதும் தொடங்கிவிட்டது .பிரசன்னாவிடம் இருந்து இதையெல்லாம் என்னால் மறைக்க இயலவில்லை. கடந்த 8 வருடங்களாக அவன் இதையெல்லாம் நாள்தோறும் பார்த்துதான் வளர்ந்தான். ஏன் சில சமயம், அதிகமாகக் குடித்து விட்டு, அவர் தடுமாறும் போது அவரைப் படுக்கையில் படுக்க வைப்பதே அவன் தான்.

நேற்று நடந்ததை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நேற்று விடுமுறை என்பதால் பிரசன்னா வீட்டில் இருந்தான். அவர் நண்பர்கள் யாரும் வீட்டுக்கு வரவில்லை. முதல் நாள் தான், நான் அவர்களைக் கண்டித்து இருந்தேன். அவர்களுடைய மனைவிகளுக்குப் போன் செய்து இது விஷயமாகப் பேசியிருந்தேன் அதனால் அவர்கள் யாரும் நேற்று என் வீட்டிற்கு வரவில்லை. இது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். நேற்று காலை நான் மியூசிக் அகாடமிக்கு ஒரு ப்ரோக்ராமிற்காகச் சென்றுவிட்டேன். பகல் 2 மணி அளவில் வீடு திரும்பினேன். அவர் அறையில் ஒரே சிரிப்பு. நண்பர்கள் வந்து விட்டார்களோ என்று பயந்து மெதுவாக அவர் அறையில் எட்டிப்பார்த்தேன் மனம் துணுக்குற்றது அங்கே அவர் பிரசன்னாவுடன் குடித்துக் கொண்டிருந்தார் எது நடக்கக்கூடாது என்று இதுவரை இறைவனை வேண்டிக் கொண்டிருந்தேனோ, அது நேற்று பொய்த்துவிட்டது. கோபத்துடன் உள்ளே சென்று பிரசன்னாவின் கையைப் பிடித்து இழுத்தேன். அவன் வேகமாக என் கையை உதறி விட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான். நரேஷோடு பேசும் மனநிலையில் நான் இல்லை. என் அறைக்கு வந்தேன். அதன்பின் நேற்று இரவு அப்பாவும் மகனும் சேர்ந்து திரும்பவும் குடித்தார்கள். நான் தடுக்கவில்லை. அது முடியாது என்பதை நேற்று பிரசன்னாவின் செய்கையிலிருந்து புரிந்து கொண்டேன். இரவு முழுக்க தூங்காது சிந்தித்தேன். இவர்களுக்காக அழுது புலம்புவதில் பயனில்லை . அது என் நேரத்தைத் தான் வீணாக்கும். இந்த வீட்டை விட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒரே நம்பிக்கையாக இருந்த பிரசன்னாவும் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான். என் பொறுமைக்கும் காத்திருப்புக்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா? எனவே நான் ஒதுங்கி இருப்பது தான் எனக்கு நல்லது. இதனால் எனக்கு உடனடியாக மனநிம்மதி கிடைக்கப்போவதில்லை என்றாலும் நாள்தோறும் மனம் புழுங்கி வாழ்வதைவிட ஒதுங்கி வாழ்வது மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் இனி என் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினேன். உடனடியாக எனக்குத் தேவை டைவர்ஸ் . அதன் மூலமாக கிடைக்கும் சுதந்திரம் தான் எனக்கான வாழ்க்கையின் தொடக்கம்’ என்று ஒரே மூச்சில் பேசி முடித்தேன்.

சாரு பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார். வாங்கிக் குடித்தேன். புழுங்கிக் கொண்டிருந்த மனதிற்கு அது சற்று இதமாக இருந்தது.

‘ராஜி, எனக்கு உங்களை நினைத்துக் கவலையாக இருக்கிறது. இது, நீங்கள் அவசரமாக எடுத்த முடிவு. ஒரு இரவுக்குள் எதையும் தீர்மானம் செய்து விடமுடியாது. கொஞ்சம் பொறுமையாக நீங்கள் இருக்க வேண்டும்’.

‘இல்லை மேடம். நான் உறுதியாக இருக்கின்றேன். என் காதல், நான் கல்யாணம் செய்து கொண்டு, குடும்பம் தொடங்கிய ஓரிரண்டு ஆண்டிலேயே மனதளவில் முடிந்துவிட்டது. பிரசன்னாவிற்காக மட்டுமே தான் வாழ்ந்தேன். நேற்று அதில் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். இருபத்தைந்து ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். வீட்டை எதிர்த்துக் காதலித்து மணந்த வாழ்க்கையில், நான் எதிர் நோக்கியது இதுவன்று. பிரசன்னா நன்கு படித்து நல்ல ஒரு வேலையில் அமர்வான்;_ அப்படியாவது நான் தேடிக்கொண்ட என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை வேர் அறுந்துவிட்டது. இனி அந்த வீட்டில் வாழ்ந்து பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். என் புது வாழ்க்கை இனித் தொடங்கப் போகிறது. இத்தனை வருடங்கள் குடும்பத்திற்காக வெளிநாட்டுக் கச்சேரிகளைத் தவிர்த்து வந்தேன். இனிமேல் நான் வெளிநாட்டுக் கச்சேரிகளை ஒத்துக் கொள்ளப் போகிறேன் . குடும்பத்திற்காக வாழ்ந்தது போதும். இனி எனக்காக வாழப் போகிறேன். பாட்டுக் கச்சேரிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் எனக்குப் பிடித்த சமூக சேவை செய்யப் போகின்றேன். ஒரு இசைப் பள்ளியைத் தொடங்க இருக்கின்றேன். இனிமேல் வாழப் போவது தான் , நான் விரும்பிய வாழ்க்கையாக அமைய போகிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தெளிவாக இருக்கின்றேன். சாரி மேடம். நீங்கள் எனக்காக வருத்தப்பட வேண்டாம். நான் அவசரப் படுகிறேன் என்று நினைக்கவும் வேண்டாம். இது நேற்று ஒரே இரவில் எடுத்த முடிவல்ல . பிரசன்னா ஒரு வேலைக்குச் சென்று தனக்கான வாழ்வைத் தொடங்கிய பின், எனக்கான வாழ்க்கையைத் தொடங்க இருந்தேன். இப்பொழுது சற்று முன்கூட்டியே என் வாழ்வைத் தொடங்கப் போகிறேன். என் உறுதியைப் புரிந்துகொண்டு என் வழக்கை கையில் எடுங்கள்…’

சாரு ஒன்றும் பேசவில்லை. இரண்டு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு, ‘ராஜி உங்கள் உறுதியைப் புரிந்து கொண்டேன். நீங்கள் உங்கள் கணவர் வீட்டில் இருந்து கொண்டு போராடப் போகிறீர்களா அல்லது வீட்டை விட்டு வெளியேறிப் போராடப் போகின்றீர்களா என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். இன்னும் ஒரு வாரம் பதில் கூற நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அன்றைக்கு வரும்பொழுது வழக்கைப் பதிவு செய்யலாம். மனக் குழப்பம் இல்லாமல் சென்று வாருங்கள். டைவர்ஸ் வாங்க ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் ஆகலாம்’ .

ராஜியின் அழகான முகத்தில் ஒரு சிறிய புன்னகையைக் கண்டார் சாருமதி .

‘ஓகே மேடம். அடுத்த வாரம் சந்திப்போம். நீங்கள் வழக்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யவும். என் முடிவில் மாற்றமில்லை. வருகிறேன்’ என்று நான் விடைபெற்றேன்.

பசி வயிற்றைக் கிள்ளியது.

நேராக தியாகராய நகர் சங்கீதா ஹோட்டலுக்குச் சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு, என் தோழி பானுவுடன் வீடு பார்க்கக் கிளம்பினேன். அந்த கணமே எனக்கான காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *