எது வெற்றி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2024
பார்வையிட்டோர்: 1,048 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகல் மணி பதினொன்று இருக்கும். 

வேலையெல்லாம் முடிந்துவிட்டபடியால் ஓய்வாகப் பத்திரிகை களை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தேன். 

தபதபவென்று யாரோ தெருக் கதவைத் தட்டுகிற ஓசை கேட்டது. எழுந்துபோய்க் கதவைத் திறந்தேன். 

“ஜயம் தாண்டி!” 

“நல்ல வேளை. எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம்!” 

வந்திருந்தவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாராட்டுரை வழங்கிக் கொண்ட பிறகுதான் எனக்கு முக தெரிசனம் தந்தார்கள். 

எனக்குச் சிறிது குழப்பம். மிகவும் தெரிந்த முகம் போலவும் இருந்தது. எப்போதோ பார்த்தது போலவும் இருந்தது. இவர்கள் யார்? 

என். விழிகளில் நெளிந்த வினாக்குறி அவர்களின் சூட்சுமப் பார்வைக்குப் புலப்பட்டிருக்க வேண்டும். 

“என்னமோ முழிக்கிறாயே! எங்களைத் தெரியவில்லையா? எங்களுக்கு மன்னார்குடி: இவள் என் தங்கை ருக்கு. என் பெயர்…” 

“ரங்கம் தானே!” நினைவு வந்துவிட்டப் பெருமிதம் என்னைப் பூரிக்க வைத்தது. 

“பரவாயில்லையே…ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாய். பட்டணத்து வாசம், பங்களா வாழ்வு, நாகரீகத் தோற்றம், எல்லாம் எங்களை மறந்துவிடவில்லை. ரொம்ப சந்தோஷம் ” என்றாள் ரங்கம். 

”உள்ளே வாருங்கள். பிஞ்சுப் பருவத்தில் பழகிய பசுமை யான நினைவுகள் சிறிது மெருகு குன்றி வேண்டுமானால் போகுமே தவிர, அடியோடு ஒருபோதும் மறந்து போகாது ரங்கம். உன்னுடைய இந்தக் கிழ வேஷம் தான் என்னைக் கொஞ்சம் தடுமாற வைத்துவிட்டது… என்றேன் அவர்களை உட்பக்கம் அழைத்தபடியே, அவள் பதினெட்டு முழம் புடவையைக் கொசு வம் வைத்து உடுத்தியிருந்தாள். 

“ஒரு வருஷமா, இரண்டு வருஷமா? இருபது வருஷங்கள். நினைவு வைத்துக்கொள்வது கஷ்டம்தான் ஜயம். நீ இந்த ஊருக்குத் தகுந்தபடி இருக்கிறாய். மன்னார்குடியில் இப்படி யிருக்க முடியுமா? அது சரி, வீடு நிசப்தமாக இருக்கிறதே. குழந்தை குட்டி?”…என்று இழுத்தாற்போல் வினவினாள் ருக்கு. 

“நிறைய இருக்கிறது. எல்லோரும் பள்ளிக் கூடத்திற்குப் போயிருக்கிறார்கள். இந்த நேரம்தான் எனக்குக் கொஞ்சம் ஓய்வு” 

“நிறைய என்றால் எத்தனை?” ருக்கு தான் கேட்டாள். 

“நான்கு. அதிகம் தானே” என்றேன் நான். 

“நான் ஒப்புக் கொள்ளமாட்டேன் ஜயம். எனக்கு ஒரே ஒரு பையன் தான். ருக்குவுக்கு அதுகூட இல்லை. எங்களுக்கு இன்னமும் ஆசை விடவில்லை. குறைதான்” என்று கூறினாள் ரங்கம். அவள் வார்த்தைகளைவிட குரலில் அளவு கடந்த ஏக்கம் பிரதிபலித்தது. 

“அதிருக்கட்டும். எங்கே இப்படி மன்னார்குடியிலிருந்து இவ்வளவு தூரம்?’ என்று வினவினேன் நான். அவர்களுக்கு உட்காரப் பாயை விரித்துப் போட்டுக் கொண்டே. 

“ருக்கு இங்கேதான் நுங்கம்பாக்கத்தில் இருக்கிறாள். எத்தனையோ தடவைகள் பட்டணத்துக்கு வந்து போயிருக் கிறேன். ஒவ்வொரு தடவை வரும்போதும் உன் அத்தையிட மிருந்து உன் விலாசத்தைக் கேட்டுக் கொண்டுதான் வருவேன். ஆனால் வந்ததே இல்லை.” 

“ஏனாம்?”

“நீ கதையெல்லாம் எழுதுகிறாயாமே! பேப்பரிலே எல்லாம் உன் படம் வந்ததைப் பார்த்தேன். நீ ரொம்பப் பெரிய மனுஷியாகி விட்டாயே! உன்னைத் தேடிக் கொண்டு வந்தால் நீ முகங் கொடுத்துப் பேசுவாயோ, மாட்டாயோ என்று பயம்..” என்றாள் ரங்கம். 

“என் கதைகளையெல்லாம் படித்திருக்கிறீர்கள் அல்லவா?” இருவரையும் பார்த்துத்தான் கேட்டேன்: 

”ஓ! ஒரு பத்திரிகை பாக்கி கிடையாது. எல்லாம் படிக் கிறோம். ரேடியோவிலும் நாடகங்கள், பேச்சுக்கள் கேட்டிருக் கிறோமே…” என்று சொன்னாள் முந்திக்கொண்டு,ருக்கு. 

“எப்படியிருக்கின்றன எல்லாம்?” 

“எல்லோருக்கும் நல்லதைத்தான் சொல்லுகிறாய். கருத் தில்லாத உன் கதைகளை இதுவரையில் நான் படித்ததில்லை.” என்றாள் ரங்கம். 

“அப்படியிருந்துமா வீடுதேடி வருகிற உன்னிடம் நான் முகங்கொடுத்துப் பேசுவேனோ மாட்டேனோ என்று பயப்பட்டாய் ரங்கம்? எழுத்தாளர்கள் என்றால் அவர்கள் கூடிய மட்டில் தாம் எழுதுவது போலவே வாழ்ந்தும் காட்டக் கடமைப் பட்டவர்கள் ருக்கு. முகம் தெரியாத யாரேனும் வீடுதேடி வந்தால்கூட அவர்களுடன் முகங்கொடுத்துப் பேசிப் புதிய நண்பர்களைப் பெற்றுக்கொண்டு விடுவது தமிழர்களின் பண்பாடாயிற்றே! 

“அழகாகத்தான் பேசுகிறாய். ஏண்டி ஜயம்! நம்ப கோமளவல்லி இந்த ஊரில்தான் இருக்கிறாள். உனக்குத் தெரியுமா? அவளை நீ பார்த்திருக்கிறாயா?” ரங்கம்தான் கேட்டாள். 

”இந்த ஊரில்தான் என்றால் எங்கே? நான் அவளைப் பார்த்ததில்லை” என்று சொன்னேன். 

“மாம்பலத்தில்தான் இருக்கிறாள். என்னிடம் விலாசம் இருக்கிறது” என்றாள் ருக்கு. 

போய்ப் பார்த்துவிட்டு வரலாமா ஜயம்?” ஆவல் மேலிட வினவினாள்: 

“உனக்கு ஆசையாக இருந்தால் போய்வந்தால் போச்சு!* 

”உனக்குத் தெரியுமா? அவள் ஒரு ‘நான் பிராமினைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள். இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறது. அதனால்தான் அவளைப் பார்த்துவிட்டு…” 

ரங்கம் வார்த்தையை முடிக்கவில்லை. “உண்மையாகவா?” என்று ஆச்சர்யம் தாங்காமல் கேட்டேன் நான். 

“ஏன் இவ்வளவு ஆச்சர்யப்படுகிறாய் ஜயம். இந்தக் காலத்தில் இது ஒரு அதிசயமா?” என்றாள் ருக்கு. 

“இல்லையில்லை. கோமளவல்லியின் குடும்பம் ரொம்பவும்…” 

“ஆசாரசீலர்கள் தான். ஆனால் இது இவளாகக் காலேஜில் ஏற்பட்ட பழக்கத்தின் பேரில் செய்து கொண்டது…” 

‘பெற்றோர்களின் விரோதத்தின் பேரில்தானே …? 

“பட்டணத்தில் இருந்துகொண்டு நீ இப்படிப் பட்டிக்காடு மாதிரிப் பேசுகிறாயே ஐயம்?” ரங்கத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது என் கேள்வி. 

“கலப்பு மணங்கள் உனக்குப் பிடிக்காது போலிருக்கிறது…” சிரித்துக்கொண்டே கூறினாள் ருக்கு. 

”சே! சே! ரொம்பப் பிடிக்கும். சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளையும் பழக்க வழக்கங்களையும் சமனப்படுத்த உதவு கிறது என்கிற முறையில் எனக்கு அது பிடித்தமானதுதான்…” என்று கூறினேன். 

“சரி, கிளம்பு. மாம்பலம் இதோதானே இருக்கிறது. போய் வந்துவிடலாம்…” என்று கூறி, எழுந்தாள் ரங்கம். 

“டிபன் – காபி சாப்பிட்டு விட்டுப் போகலாமே…” என்றேன். 

“மணி பதினொன்றரை தானே ஆகிறது, போய் வந்து பின் சாப்பிட்டால் போதும்” என்றாள் ருக்கு.’

குழந்தைகள் எல்லோரும் கையில் சாப்பாடு கொண்டு போயிருந்ததால் நானும் அவர்களுடைய அழைப்புக்கு இணங்கிப் புறப்பட்டேன். 


“ஓ! நீங்களா! வாங்க, வாங்க” என்றபடி ஓடிவந்து வர வேற்றாள் கோமளவல்லி. உடம்பெல்லாம் தெரியும்படியான நைலான் புடவை. வாரப்படாத பரட்டைத்தலை, பொட்டில் லாத நெற்றி, மெட்டியில்லாத கால்கள். இவளா கோமளவல்லி? 

“இது யாரென்று தெரிகிறதா கோமு. நம்ப ஜயம்” என்று என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் ரங்கம். 

“நம்ப ஜயமா? வா, ஐயம்! ரொம்ப மாறிட்டியே” என்று புன்முறுவல் செய்தாள் கோமளவல்லி, 

அவளைப் பின் தொடர்ந்து நாங்கள் மூவரும் வீட்டி னுள்ளே சென்றோம். கருவாட்டின் மணம் குப்பென்று மணம் வீசி எங்களை வரவேற்றது, வீடெல்லாம் ஒரே கோழிகளின் அசுத்தப் பொருட்களின் நெடி வேறு. 

“குந்துங்க. இதோ வந்துவிட்டேன்.” ஒரு எண்ணைச் சிக்குப்பிடித்த பாயை விரித்து எங்களை உட்கார வைத்துவிட்டு உள்ளே போனாள் கோமளவல்லி. 

“இதென்ன இப்படிப் பேசுகிறாள் இவள்!” ரங்கத்தைப் பார்த்து மெல்லிய குரலில் வினவினேன் நான். 

“‘நான்பிராமினைக்’ கல்யாணம் செய்துகொண்டிருக்கிறாள் இல்லையா? அதனால் இவளும் ‘நான்பிராமினாக’ ஆகிவிட்டாள். இதுதானே பாரதப்பெண்களின் தனிப் பண்பு?” என்று என்னையே திருப்பிக்கேட்டாள் ரங்கம். 

நான் முகத்தைச் சுளித்தேன். 

இதற்குள் கோமளவல்லி எங்களிடம் வந்துவிட்டாள். 

“காபி போடட்டுமா? நீங்களெல்லாம் சாப்பிடுவீங்களா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். 

“மன்னார் குடியில் உங்கள் வீட்டுக் காப்பிக்குத் தனிப் பெயராச்சே!” என்றேன் நான். அவளுடைய மனத்தில் சகஜ நிலையை ஏற்படுத்துகிற நோக்கத்துடன். 

“அந்த வீட்டுப் பழக்க வழக்கங்களில் இங்கே ஒன்றுகூடக் கிடையாது ஜயம். இங்கே வந்ததும் நான் எல்லாவற்றிலும் ரொம்ப மாறிவிட்டேன். சுருக்கமாகச் சொல்லனும்னா…நான்… நான்…நானும் இப்போது ஒரு ‘நான்பிராமின்’ பெண்மணி தான்” என்று கூறினாள் கோமளவல்லி. 

“சாதியைப் பற்றி விட்டுவிடுவோம். பழக்க வழக்கங்களால் தான் ஏற்றமும் தாழ்வும் நம்மிடையே உண்டாகிறது என்பது என் கருத்து ‘” என்று ரொம்பவும் அழுத்தமாகக் கூறினேன் நான். 

“உண்மைதான் ஜயம்! ஆனால்…கணவனுக்காக எல்லா வற்றையும் தியாகம் செய்வதுதானே இந்தியப் பண்பு? அந்தப் பெண்மையின் பண்புப்படி நான் அவருடன் – அவருடைய இயல் புடன் – அவருடைய பழக்க வழக்கங்களுடன் இரண்டறக் கலந்து விட்டேன். அதிகமாக விவரிப்பானேன்? நான் இப்போது அசைவ உணவுகள் கூடச் சாப்பிடுகிறேன்….போதுமா?” என்றாள் கோமளவல்லி. 

நான் பேசவில்லை; 

“ஆச்சர்யம்தான்!” என்றாள் ரங்கம். 

“ஸ்டோர் ரூமில் அடுக்கடுக்காக அடுக்கி வைத்திருக்கிற பானை வரிசைகளைப் பார்த்தாலே தெரிகிறதே!” என்றாள் ருக்கு. 

ஆமாம் ருக்கு! அவருக்கு என்னை மணந்து கொண்டதால் எந்த ஒரு விதமான மாறுபாடும் தெரியக்கூடாது என்பதே என் லட்சியம். அந்த என் லட்சியத்தில் நான் வெற்றி பெற்று விட்டதாகவே எண்ணுகிறேன்…” இதைச் சொல்லிவிட்டு எங்கள் எதிரிலேயே காபி போடத் தொடங்கினாள் கோமளவல்லி. 

ஸ்டவ்வைப் பற்றவைத்து, அதில் ஒரு அலுமினியம் ‘டேக்ஸா’வில் தண்ணீரைக் கொதிக்க வைத்தாள். பிறகு அதில் காபித்தூளைக் கொட்டி-வடிகட்டினாள். பிறகு பாலும் சர்க்கரையும் சேர்த்து அதிவிரைவில் எங்கள் முன் காபியைக் கொண்டுவந்து வைத்துவிட்டாள் கோமளவல்லி. 

நீலம் பாரித்துக் கிடந்த அந்தக் காபியைப் பார்க்கவே எனக்கு அருவருப்பாக இருந்தது. 

“நான் காபி சாப்பிடுவதில்லை கோமு!” என்று கூறினேன் உள்ளத்தின் அருவருப்பை முகத்தில் காட்டாமல். 

“ஆசாரமா?” என்று வினவினாள் கோமளவல்லி. 

“அதெல்லாமில்லை. மோர் கொடு, சாப்பிடுகிறேன்-” என்றேன்: 

மோர் கொண்டுவந்து கொடுத்தாள்; குடித்து வைத்தேன் அரைமனத்தோடு, அதில்கூட அசைவ உணவின் வாடை அடிப்பதுபோல் ஒரு பிரமை எனக்கு. 

“போகலாமே…” என்றேன் ருக்கு -ரங்கத்தைப் பார்த்து; 

“போகவேண்டியதுதான். நேரமாச்சு”. இருவருமே எழுந்து விட்டார்கள். அவர்கள் எப்படியோ அந்தக் காபியைக் குடித்திருக்கிறார்கள். 

“என் வீட்டுக்கு எப்போது வரப்போகிறாய் கோமு!” என்று வினவினாள் ருக்கு. 

“வரேன் ருக்கு: கோவிச்சுக்காதே!” என்றாள் கோமள வல்லி. 

நாங்கள் மூவரும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். ஒரு குங்குமம் கூட எங்களுக்கு வழங்கவில்லை கோமளவல்லி. மன்னார் குடியில் அவளுடைய பிறந்தகத்துக்குப் போனால்… அவளுடைய அம்மா தேங்காய் இல்லாமல் வெறும் வெற்றிலைப் பாக்குக்கூடக் கொடுக்கமாட்டாள். அவளுடைய பெண்தான் இவள். அவள் மறந்து விட்டாள். ஆனால் என்னால் மறக்க முடியவில்லையே ! 

“இருந்தாலும் நீ ரொம்பமோசம் ஜயம். காபியைத் தொடவேயில்லையே! அவள் ஏதாவது நினைத்துக் கொண்டால்…?” என்றாள் ரங்கம் என்னைக் குற்றம் சாட்டுகிற பாவனையில். 

“நினைத்துக் கொள்ளட்டும்…ஏன், ரங்கம்! பில்டர் வைத்து நல்லமுறையில் போட்டுத் தருகிற நல்ல காபியை அவளுடைய கணவர் சாப்பிடமாட்டாரா ? அவர் ஹோட்டலில் இதுபோன்ற காபியைப் பார்த்திருக்க முடியாதே!” என்றேன் ஆத்திரம் மேலிட. 

“உனக்கு நாக்கு ருசி ரொம்ப அதிகமடி! அவள் தான் நான் அடியோடு மாறிவிட்டேன் என்கிறாளே!” என்றாள் ரங்கம். 

“இந்த மாற்றத்தை என்னால் விரும்ப முடியவில்லை…” என்றேன் நான். 

இரண்டு தெருக்களைக் கடந்து மூன்றாவது தெருவில் நுழைந்தோம். 

வாசலில் அந்தத் தெருவின் திருப்பத்தில் ஒரு வீடு. பளிச்சென்று கோலமிட்டு செம்மண் பூசியிருந்தது. அந்த வீடு எனக்குத் தெரிந்தவர்களுடையது தான். 

“இந்த வீட்டில் ஏதோ விசேஷம் போலிருக்கிறது. செம் மண் பூசியிருக்கிறது” என்றாள் ருக்கு. 

“இன்று கிருத்திகை இல்லையா ? அதனால்தான். வருகிறீர் களா? உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம்…?” என்று அவர்களைப் பார்த்து வினவினேன். 

“உனக்குத் தெரிந்தவர்களின் வீடா?” இருவருமே கேட்டார்கள். 

“ஆமாம், வாருங்கள் ” என்று அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வீட்டின் வாசற்படியில் ஏறினேன்: 

முத்துமுத்தாக இட்டிருந்த மாக்கோலங்களுக்கு அடுத்த படியாக வாசற்படியின்மேல் வரிசையாகக் கோர்த்துக் கட்டியிருந்த மாவிலைத் தோரணம் எங்களை வரவேற்றது. அது அன்று கட்டியது அல்ல. மாவிலைகள் காய்ந்து போய்த்தான் இருந்தன. இருந்தும் அதில் ஒரு புனிதம், கவர்ச்சி. 

“வரவேண்டும், வரவேண்டும்…” என்ற இனிய குரலும் இசைக்குத் தப்பாத தாளம் போன்ற ‘ணிங்! ணிங்! என்ற மெட்டியோசையும் எங்களைக் கட்டியம் கூறி வரவேற்றன. 

”சௌக்கியமா சீதா? இவர்கள் இருவரும் என் பால்யத் தோழிகள். இவர்களுடன் இந்தப் பக்கமாக வரவேண்டியிருந்தது. அப்படியே உன்னையும் பார்த்து விட்டுப் போகலா மென்று வந்தேன்…” என்றேன். 

“அதனாலென்ன? நீங்கள் வந்ததுதான் பெரிது. எல்லோரும் உள்ளே வாருங்கள்…” என்று முகமலர்ந்து அழைத்தாள் சீதா. 

நாங்கள் மூவரும் அவளைப் பின் தொடர்ந்தோம். 

சாம்பராணியின் புகை வீடு பூராவும் வியாபித்திருந்தது. அதை மிகைப்படுத்துகிற விதத்தில் ஊதுபத்தியின் இனிய சுகந்தம் வேறு. மல்லிகை – ரோஜாக்களின் தெய்வீகமணம். இவைகளுக்கெல்லாம் மேலாக, பூஜை அறையினின்றும். 

‘ஏறுமயில் ஏறி விளையாடுமுகம் ஒன்றே 
ஈசருடன் ஞானமொழி பேசுமுகமொன்றே…’ 

என்ற இசைவேறு, பண்ணுடன் ஒலித்தது. நிச்சயமாக அது ஓர் ஆணின் கட்டைக் குரல்தான். 

“இன்று அலுவலகம் விடுமுறையா சீதா?” என்று வினவினேன். 

“இல்லை. இவராக வேண்டுமென்று தான் விடுமுறை வாங்கிக் கொண்டிருக்கிறார்… கொஞ்சம் உட்கார்ந்து கொள்கிறீர்களா இதோ வந்து விட்டேன்…” என்றாள் சீதா. நாங்கள் மூவரும் அவள் தரையில் விரித்திருந்த பாயில் அமர்ந்தோம். 

ஐந்தே நிமிஷத்தில் திரும்பி வந்தாள் சீதா. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டம்ளர் பசும்பால், இதமான சூட்டுடன். சிறியசிறிய தட்டுகளில் ரஸ்தாளிப் பழங்கள் நான்கு நான்கு. எங்கள் எதிரில் பணிவுடன் வைத்துவிட்டுத் தானும் பாயில் அமர்ந்து கொண்டாள். 

ரங்கத்தையும் ருக்குவையும் பார்த்து, 

“எங்கள் வீட்டில் யாரும் காபியே சாப்பிடுவதில்லை. வீட்டில் இரண்டு பசுக்கள் பால் கொடுக்கிறது. ஐயம் எல்லாம் சொல்லி யிருப்பாரே…” என்று கூறி முறுவலித்தாள் சீதா. 

“காபி சாப்பிடாதது நல்ல பழக்கம் தான்…” என்றாள் ரங்கம். 

“இந்த ரஸ்தாளிப் பழங்கள் கூட வீட்டிலேயே காய்த்துப் பழுத்தது தான்…அப்படித்தானே சீதா?” என்றேன். 

“ஆமாம். உங்களுக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்ற ஆசை. வரமுடியவிலலை. நான் மனப்பூர்வமாக விரும்பினேனல்லவா? தாங்களே வந்துவிட்டீர்கள்…” என்றாள் சீதா. 

சர்க்கரை போடாமலே இனித்த பசும்பாலையும் ரஸ்தாளிப் பழங்களையும் காலி செய்துவிட்டு நாங்கள் எழுந்திருந்தோம். 

“ஒரு ஐந்து நிமிஷம் பொறுத்துக் கொள்ளுகிறீர்களா? கத்தரிக்காய் பிஞ்சாக நன்றாக இருக்கிறது. உங்கள் வீட்டுக்காரருக்குப் பிடிக்குமே” என்ற சீதா என் பதிலுக்காகக் கூடக் காத்திருக்காமல் சின்னக் கூடை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் ஓடினாள். 

ரங்கத்தையும் ருக்குவையும் அழைத்துக் கொண்டு நானும் தோட்டத்துப்பக்கம் சென்றேன். 

தோட்டத்தைப் பார்த்துவிட்டு ரங்கமும்-ருக்குவும் அப்படியே அசந்து போய்விட்டார்கள். 

“இதில் காய்க்கும் காய்கறிகளையெல்லாம் வீட்டுக்கு மட்டுமே உபயோகித்துக் கொள்ள முடியாது போலிருக்கிறதே…” என்றாள் ரங்கம் வியப்புத் தாங்காமல். 

“குறைந்த பட்சம் தினமும் ஐந்து ரூபாய்க்காவது நாங்கள் காய்கறிகளை விற்காமல் இருந்ததில்லை. கருவேப்பிலை – அகத்திக் கீரை இப்படி…ஏதாவது ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று… விற்க முடிகிறது…” என்று சொன்னாள் சீதா. 

“புஷ்பங்கள் கூட நிறைய விற்கலாம் போலிருக்கிறதே!” என்றாள் ருக்கு. 

“விற்கலாம்தான். ஆனால் நாங்கள் விற்பதில்லை. கோவில்களுக்கும்-வீட்டுக்கு வந்துசெல்கிற-அல்லது அக்கம் பக்கத்திலுள்ள சுமங்கலிகளுக்கும் நிறையக் கொடுத்து வருகிறோம். மஞ்சள் கூட வீட்டில் பயிராகிறது” என்றாள் சீதா. 

“இதற்குக் கடுமையாக உழைக்க வேண்டுமே…” என்றாள் ரங்கம். 

”ஆம், உழைக்கவே செய்கிறோம்…” இதைச் சொல்லும் போது சீதாவின் முகத்தில் ஓர் அசாதாரணமான ஒளி பரவி நின்றது. 

இதற்குள் சீதா பேசிக்கொண்டே ஒரு வீசைக்கும் மேல் கத்தரிக்காயும் வெண்டைக்காயும் பறித்துக் கூடையை நிரப்பி விட்டாள். 

தட்டு நிறைய வெற்றிலை – பாக்கு – மஞ்சள் – புஷ்பம் – தேங்காய் எல்லாம் வைத்து எங்களுக்குக்கொடுத்தாள். மூவரும் அவளிட மிருந்து மனமில்லாமலே விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம். வாசல் தாழ்வாரத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார், சீதாவின் கணவர். பட்டை பட்டையாக உடம்பெல்லாம் திருநீறு. கையில் ‘ராமகிருஷ்ணரின் பொன் மொழிகள்’ என்ற புத்தகம். நல்ல கருப்புத்தான். இருந்தாலும் முகத்தில் ஓர் உயர்ந்த ஒழுக்கத்தால் ஏற்பட்டிருந்த புனிதமானதும் கம்பீரமானதுமான பொலிவு மேலோங்கி நின்றது. 

என்னைப் பார்த்துவிட்டு வெள்ளைப் பற்கள் பளிச்சிட, 

“வணக்கம்” என்று கரம் குவித்தார்.நானும் பதில் வணக்கம் தெரிவித்தேன். 

மூவரும் தெருவில் இறங்கி வேகமாக நடந்தோம். 

“இந்த வீட்டைப்பற்றி உன் அபிப்பிராயம் என்ன ரங்கம்?” என்று கேட்டேன். 

“அழகான குடும்பம். உயர்ந்த பண்பாடு” என்றாள் ரங்கம். 

“என்ன இருந்தாலும் பிராமணக் குடும்பம்…பிராமணக் குடும்பம் தான்!” என்றாள் ருக்கு. 

“நான் இதை ஒப்புக்கொள்ள முடியாது ருக்கு. நம் அண்ணல் காந்திக்கு மிகமிக விருப்பமான பாடல் இருக்கிறதே ‘வைஷ்ணவ ஜனதோ…’ அது என்ன சொல்லுகிறது? உண்மையான வைஷ்ணவனின் குணங்களை எவ்வளவு அழகாக அது சொல்கிறது. அதன்படி பார்த்தால் ஒருவன் பிறப்பினால் மட்டும் உயர்வாக இருக்கமுடியாது. ஒழுக்கத்தால் தான் உயருகிறான் என்று தெரிகிறதல்லவா? நம் கோமளவல்லி பிராமண வகுப்பினளாக இருந்தாலும் ஒழுக்கக்குறைவுகளால் அதற்கு உரிய பெருமையை அடையமுடியவில்லை. இந்த சீதாவோ…” 

“சீதா பிராமணப்பெண் இல்லையா ஐயம்?” ஆச்சர்யம் தாங்காமல் வினவினாள் ருக்கு. 

“சீதா பிராமணப்பெண்தான். ஆனால் அவளுடைய கணவர் தான் … ஒரு ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர்”. 

“என்ன! உண்மையாகவா?” இருவருக்குமே ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. 

“ஆமாம் சீதாவின் கணவர் ஓர் ஹரிஜன். சீதாவின் தகப்பனாரே கலப்பு மணத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். கலப்பு மணங்களால் எந்த நல்ல அம்சங்களையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று அவர் விரும்பினாரோ அதையெல்லாம் சீதா தன் ஒப்பற்ற பெண்மையின் சக்தியால் சாதித்துக் காட்டிவிட்டாள். கோமள வல்லியைப்போல் அவளும் ஒரு ‘நான் பிராமினாக’ மாறிவிட வில்லை. அதற்குப் பதிலாகத் தன் கணவரையே ஓர் ஒழுக்கத்தால் உயர்ந்த பிராமணனாக மாற்றிவிட்டாள். தன் வகுப்பில் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் தன் புகுந்த வீட்டில் புகுத்தி ஒரு பிராமணக் குடும்பமாக ஆக்கியதுடன் அவள் விட்டு விடவில்லை. அந்தக் குடும்பத்திலுள்ள உழைக்கும் சக்தியையும் பொறுமையையும் தானும் ஏற்றுக்கொண்டு குடும்பத்தையே உழைப்பால் – உழைப்பின் பெருமையால் உயர்த்திவிட்டாள். உள்ளபடி பெண்மையின் வெற்றியை நான் சீதாவிடத்தில் தான் ரங்கம் காண்கிறேன். கோமளவல்லியிடம் காணவில்லை”. உணர்ச்சி பொங்கப் பேசிக்கொண்டே போனேன் நான். 

“அப்படியானால் முன்பெல்லாம் ‘பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளியமரத்தில் ஏறத்தானே வேண்டும்’ என்பார்களே…” என்று இழுத்தாள் ருக்கு. 

“அது அப்போதைக்குச் சரியாக இருக்கலாம். இப்போதைய புதுமைப் பெண்ணின் கடமை – லட்சணம் என்னவென்றால்… பேய்க்கு வாழ்க்கைப்பட நேர்ந்துவிட்டால் அந்தப் பேயுடன் சேர்ந்து தானும் புளியமரம் வாசம் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக அந்தப்பேயைக் கீழே இறக்கி அதையும் ஓர் மனிதத் தன்மையை அடையும்படி செய்துவிட வேண்டும். பெண்மைக்கு, அதற்கான சக்தி உண்டு என்பதுதான்”, என்று கூறி முடித்தேன் நான். 

கலப்பு மணங்களால் சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வு களெல்லாம் மறையும் என்றுதான் காந்தியடிகள் விரும்பினார். அந்த ஏற்றத் தாழ்வுகள் வெறும் பணம் – காசுகளோ அல்லது சாதிப்பிரிவுகளோ மட்டும் அல்ல. மனிதனின் திறமைகளும்-உயர்ந்ததும் நல்லதுமான ஒழுக்கங்களும் கூட என்று சொல்லுகிறாய், அப்படித்தானே?” என்று கேட்டாள் ரங்கம். 

“ஆமாம், பெண்மையின் வெற்றி இதுதான். தன் லட்சியத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறுகிறாள் கோமளவல்லி. உண்மையில் லட்சியத்தில் வெற்றி பெற்றவள் சீதா தான்” என்றேன். 

“அதில் சந்தேகமில்லை” என்று கூறினார்கள் ரங்கம்-ருக்கு இருவரும். 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *