எதுவும் மாறிவிடவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 22,647 
 
 

அந்த அறையிலிருந்து சம்போக வாடை அடிக்கிறது.

வார இறுதியில் வருகிற என்னுடைய தாதியின் கணவனை, இந்த இரண்டாவது படுக்கை அறையைப் பயன்படுத்திக் கொள்ள நானே அனுமதித்திருந்தேன். அந்த இளைஞன் ஜெயராஜை எனக்குப் பிடித்திருந்தது. அவன் கண்கள் பொய் சொல்லாதவையாக இருந்தன. ‘எனக்குத்தடையில்லை. நீங்கள் அந்த அறையை உபயோகித்துக் கொள்ளலாம்’ என்று சொன்னபோது அவை மிகவும் உண்மையுடன் ஒளிர்ந்தன.

அவன் இருந்த பொழுதுகளிலும் அவன் இல்லாத வார நாட்களிலும் நான் பெயர் சொல்லியே, ‘நிர்மலா’ என்று கூப்பிட்டேன். நிர்மலாவை நிம்மி என்று கூப்பிட எனக்கு விருப்பம் இல்லை. எந்தப் பிரியத்தின் பொருட்டும் காதலை முன்வைத்தும் நான் என் மனைவியை ‘சிவகாமி‘ என்றே அழைத்தேன். ஆறு கீமோ, பன்னிரண்டு கதிரியக்க மருத்துவத்திற்கும் தாண்டி, அவளுடைய மிகப் பிந்திய மஞ்சட்காமாலை தினங்களில் கூட எந்தச் செல்லப் பெயரிட்டும் அழைக்கவில்லை. அவள் தன்னுடைய அறுபத்தாறு வயதின் இறுதி தினத்தைக் கிழித்துப் பறக்கவிடும் வரை, தான் வேறேனும் அப்படியொரு செல்லப் பெயரால் அழைக்கப்பட விரும்பினாளா என்று தெரியாது.

மனிதர்கள் கடைசிவரை இன்னொரு மனிதரிடம் முற்றிலும் தன்னை வாசித்துக் காட்டிவிடுவது இல்லை. ஒளித்துவைத்தவை என்று அல்ல, வாசிக்க அவசியமற்றவை என்று தீர்மானிக்கப்பட்ட பக்கங்கள் உள்ள ஒரே ஒரு பிரதிப் புத்தகம் அது. குறிப்புகளுக்காக சில சமயங்களில் விடப்பட்டிருக்கும் வெள்ளைக் காகிதங்களில்தான் சில வரிகள் பூரணமாக மரணத்திற்குப் பின்பு வாசிக்கப்படவேண்டிய உயிலாக, ஒரு ரசாயன லிபியில், வேறென்ன கண்ணீரால், எழுதப்பட்டிருக்கின்றன.

சிவகாமி தன் இறுதி இரவில் மிக மஞ்சளாக இருந்தாள். நாட்களை எண்ணிக் கொண்டு நாங்கள் மருத்துவ மனை வாடையில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு வந்திருந்தோம். அதில் எங்கள் மகனுக்கு மிகுந்த கோபம். அவன் அவனுடைய தாயாரைக் கடைசி நொடிவரை காப்பாற்றிவிட விரும்பினான். நான் மிகச் சுருக்கமாக, ‘மருத்துவம் முந்திய நொடி வரையே காப்பாற்றும்’ என்று சொன்னேன். அதி வெறுப்புடன் என்னைப் பார்த்து, சிவகாமியின் கையை கட்டிலின் பச்சை விரிப்பில் வைத்துவிட்டு வெளியே போனான். அவனுக்குக் கேட்கட்டும் என்றே, ‘அவள் மட்டுமல்ல. எல்லோருமே அவரவர் வீட்டில்தான் அந்தக் கடைசிக் கதவைத் திறந்துவைக்க நினைக்கிறோம்’ என்றேன்.

மருத்துவர் குழு அதைப் புரிந்துகொண்ட விதம் அருமையானது. எனக்குச் சற்று இளையவராகத்தான் இருப்பார் அந்தப் பெண் மருத்துவர். நடுவகிடு எடுத்து நரைத்திருந்த கூந்தலில் இடவலமாக மருத்துவக் காருண்யம் வழிந்து கொண்டிருந்தது. சிவகாமியின் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னுடைய வலது கையை, இடது கை சிவகாமியின் மேல் இருந்தது, எடுத்து முத்தமிட்டுத் தோளைத் தட்டிக்கொடுத்தார். ‘எங்களின் அக்கறைக்குரிய நோயாளியின் அக்கறை மிகுந்த கணவர் நீங்கள்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். எத்தனை மரணங்களின் சாட்சியாக இருந்தாலும், ஒரு மருத்துவர் மீண்டும் ஒரு மரணத்திற்குச் சாட்சியமளிக்க விரும்புவது இல்லை போலும். திரும்பிவந்து சிவகாமியின் சிகை வருடி, மருத்துவக் கோப்பில் சிறுகுறிப்பு எழுதிவிட்டு என்னைப்பார்த்துப் புன்னகைத்தார். சிறிய கீற்றுப் போன்ற அவருடைய உதடுகள் எங்களை வழியனுப்பிய விதம் அது.

வீட்டில் திரைச்சீலைகள் வேறு விதமாக அசைகின்றன. ஒரு நோயாளியின் கட்டிலை நோக்கி எப்படிச் சாய்ந்து விழவேண்டும் என்று வீட்டின் வெளிப்பக்க வெயில் அறிந்திருக்கிறது. பின் வீட்டு மா மரம் இந்த வீட்டுச் சுற்றுச் சுவரின் மேல் தணிந்து கிடக்கும் கிளையில் உள்ள இலைகள் செப்புப் போலத் தொங்கும் நாக்குகளை அசைக்காமல் மரணத்தை நக்கக் காத்திருக்கின்றன. சிவகாமி மிக மஞ்சளாக இருந்தாள். வளர்ந்தும் வளராமலும் இருந்த தலைமுடியின் கீழ் அவளுடைய முகம் வேறு யாருடையதோ போல இருந்தது. தோல் கருத்து உரிந்த உதடுகள். காற்றோசையுடன் தொண்டையிலிருந்து கிளம்பும் சப்தம் உலர்ந்த உதடுகளைத் தாண்டமுடியாமல் நாக்கின் கீழ் உள்ப்பக்கம் உதிர்ந்தது. அப்போது எனக்கு உண்டான உணர்வைக் குறித்து எனக்கு எந்த வெட்கமும் இல்லை. யாரிடம் சொல்வதிலும் தயக்கம் இல்லை.

‘ஜெயராஜ். நிர்மலா எங்கே?’ என்றுகேட்டேன்.

‘குளித்துக்கொண்டு இருக்கிறாள், வந்துவிடுவாள்’ என்று குனிந்து கொண்டே சொன்னான். வெட்கம் இருந்தது. ‘நீயும் குளிக்கவேண்டியவன் தானே ‘ என்று சொன்னபோது என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு மறுபடியும் முன்னால் கிடந்த ஆங்கிலத் தினசரியின் ஞாயிற்றுக் கிழமை இணைப்பைப் பிரித்தான்.

‘நிர்மலா குளிக்கிறாள் என்ற ஞாபகத்துடன், எனக்குத் தெரியும், உன்னால் முழுதாக இரண்டு வரிகள் கூட வாசிக்க முடியாது’ என்று நான் சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

‘நீங்கள் புகைப்பதை மட்டுப்படுத்த வேண்டும்’ என்று சற்றுப் பதற்றத்துடன் ஜெயராஜ் சொன்னான். ‘நிர்மலா உங்களைக் கண்காணிக்கச் சொல்லிவிட்டே போனாள்’ – அவன் சொன்னபோது நான் என் முதல் கொத்துப் புகையை வெளியேற்றினேன். தங்க மினுமினுப்புடன் ஒன்றே ஒன்று மட்டும் உருவப்பட்டுச் செறிவாக இருந்த, புகையிலைத் துணுக்கு சிந்தாத, சிகரெட்களின் அடுக்கு எனக்குப் பிடித்திருந்தது. டப்பாவின் பிளந்த வாயை மூடி வலப்புறம் வைத்தேன்.

‘நேற்றிரவு நீ என்னுடன் குடிக்கும் போது உன்னை நான் மட்டுப்படுத்தினேனா? இல்லையே ஜெயராஜ். ‘

‘இல்லை. நிம்மி நீங்கள் புகைப்பது குறித்து சொல்லிவிட்டுப் போனாள் ‘

‘ஒரு தாதி தாதியாக இருக்கட்டும். ஜெயராஜ் ஜெயராஜாக இருக்கட்டுமே’ நான் இப்படிச் சொன்னது ஜெயராஜிற்கு சௌகரியத்தை விட அசௌகரியத்தையே உண்டாக்கியிருந்தது. நான் சொல்லப் போகும் விஷயத்திற்கு அவனை மேலும் கொஞ்சம் தளர்த்த விரும்பினேன். நேற்று இரவு ஜெயராஜை வாசிக்கச் சொன்ன விஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் நினைவுக்கு வந்தன.

‘வாதைகள், இறந்தவனுடன் திட்டமிடுவது , இரண்டு கவிதைகளையும் நீ நன்றாகவே வாசித்தாய். அந்த நல்ல வாசிப்பை அடைய உனக்கு மூன்று மிடறுகள் தேவைப்பட்டன. நிர்மலாவின் குறைந்த படிப்புக்கு அவளுடைய ஆங்கில உச்சரிப்புக் கூடுதலானவை. உன்னுடையது ரசனையும் பாவமும் நிரம்பியது. ஒரு வரி வாசித்தால் போதும். எழுதிய சிம்போர்ஸ்காவைக் கேட்க வைத்து விட்டால் சரி’

ஜெயராஜ் சட்டென்று மனனத்தில் சொல்ல ஆரம்பித்தான்.

’எதுவும்மாறிவிடவில்லை.
நதியோட்டம் தவிர,
காடுகள், கரைகள், பாலைகள், பனிவரைகள்தவிர.
ஒருசின்ன ஆத்மா அலைகிறதுநிலவெளிகளில்
மறைகிறது, திரும்பவருகிறது,
பக்கம் நெருங்குகிறது, தூர விலகுகிறது,
நழுவிநழுவிஅதற்கேஅதுவேறொன்றாக..’

அவன் சொல்லிக்கொண்டே போனான்.

‘இப்போது நீதான் வேறொருவனாக ஆகிவிட்டாய் ஜெயராஜ்’.

‘சில நேரங்களில் அதே ஒருவனாக இருக்க முடிவதில்லை ஸார்’ என்றவன் ‘எதற்கு நீங்கள் நிர்மலாவைத் தேடினீர்கள்?’ என்றான் என்னிடம்.

‘நீ வேறொருவன் ஆகிவிட்ட பொழுது, நான் வேறொருவனாக ஆகியிருந்த கதையைச் சொல்லத்தான். அவள் இல்லாத போது உன்னிடமே சொல்ல விரும்பினேன். நிர்மலா மேலும் குளிக்கட்டும். மேல் நிலைத் தொட்டியில் என்றென்றைக்கும் தண்ணீர் வற்றாதிருப்பதாக’– இதைச் சொல்லும் போது வழக்கமான அளவு சிகரெட்டைப் புகைத்து முடித்திருந்தேன். ஜெயராஜ் என் கண்களை விலகாமல் பார்க்கிற நிலையில் இருந்தான்.

நான் துவங்கினேன்.

‘நிறைய இடைவெளி ஆகிவிட்டது. நிர்மலா எங்கே என்று உன்னிடம் கேட்ட நிமிடத்தில் இதைச் சொல்லத் துவங்கியிருந்தால், என்னுடைய மனைவி மரணத்திற்குக் காத்திருந்த கட்டிலின் மேல் விழுந்த வெயிலைப் பற்றிய ஞாபகத்தின் வாக்கியம் முடிவதற்குள் இதை உன்னிடம் ஆரம்பித்திருக்க முடியும். குறைந்த பட்சம் அதனுடைய அடுத்த வாக்கியமாகவாவது ‘

முகங்களைப் பார்க்கத் துவங்கி, அவற்றிலிருந்து விலகி, அவற்றைத் தொலைத்து அப்பால் போய் விடுவதுதான் ஞாபகங்களைச் சொல்வதற்கான திறந்த மைதானங்களை நமக்குத் தரமுடியும். நான் எழுந்து நகர்ந்து, புதைந்துபோகிறது மாதிரிக் கிடந்த கருப்பு சோபாவின் பின்னால் நின்று சொல்லத் துவங்கினேன்.

‘எனக்கும் சிவகாமிக்கும் உடலுறவு அற்றுப்போய் வெகு காலம் ஆயிற்று. அது ஒரு பதினைந்து வருடங்கள் இருக்கும். அப்போது அவள் அவளுடைய நிச்சயமற்ற மாத விலக்குகளிலும் உதிரப்பெருக்கிலும் இருந்தாள். என்னைச் சந்தேகிக்கவே சந்தேகிக்காதவள் ஆகவும். சந்தேகிப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாதவள் ஆகவும் அவள் இருந்த இடைவெளியில்தான் என்னுடைய அந்த ஒரே ஒரு விலகல் நிகழ்ந்தது. ஆறு பாறைக்கு விலகி ஆற்றோடு சேரும் நேரத்திற்குள் உண்டாகும் அத்தனை சுழிப்பும் நுரைப்பும் இன்னொரு பெண் குறுக்கிடும் அந்த விலகலுக்கு இருந்தது உண்மைதான். சிவகாமி அதிகபட்சமாக என்னைத் தண்டித்தாள். தண்டனையைக் குறைக்கவே இல்லை. அதன் பின் ஒரு முத்தத்திற்குக் கூட அவள் என்னை அனுமதித்தது கிடையாது.’ – நான் ஜெயராஜையோ, சோபாவையோ, புத்தக அலமாரிகளையோ, தொலைக்காட்சி பெட்டியையோ, ஒரு சிறுவனைப் போல இடக் கால் மடக்கி வலக் கால் முட்டியில் முகம் சாய்த்துப் பார்க்கும் புத்தர் சிலையையோ எதையுமே பார்க்கவில்லை.

பத்துப் பன்னிரண்டு அடி உயரத்திற்குக் கண்ணாடிச் சட்டமிட்டுத் துடைக்கப் பட்டுத் தெளிவாக இருந்த ஜன்னல் பக்கம் வந்திருந்தேன். இப்போது அனேகமாகக் காணாமல் போய்விட்ட, கல்வாழைகள் பூத்திருக்கிற முன் வாசலையே பார்த்தேன். வெயிலின் தள்ளாட்டத்தோடு ஒரு மஞ்சள் வண்ணத்துப் பூச்சி அவசரம் அவசரமாகத் தரையில் விழும் நிழலை பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்திப் பறந்துகொண்டு இருந்தது. குறைவற்ற வெயிலில் களகளவென்று தண்ணீர் ஓடுகிற ஒரு ஓடையாக என் சொற்கள் குளிர்ந்திருந்தன.

‘ஜெயராஜ். எனக்கு எழுபத்தி இரண்டும் கூடுதலும். அவளுக்கு அறுபத்தாறு. கட்டிலில் ஒரே ஒரு புதிய வைக்கோல் துரும்பு போலக் கிடந்தாள். அடைக்கலாங் குருவிகள் கூடுகட்டக் கவ்விக்கொண்டு போகும்போது தவறி விழுமே அந்தத் துரும்பு. முற்றிய மஞ்சள் காமாலையில் விடைபெற்றுக் கொண்டிருந்த அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். நீ நம்ப மாட்டாய் ஜெயராஜ். யாருமே கூட. இந்த பதினைந்து பதினாறு வருடங்களின் தண்டனையை நான் அக்கணம் முடித்துக்கொள்ள விரும்பினேன். சிவகாமியை முழுவதுமாக மறுபடி பார்க்கவேண்டும் போல இருந்தது. அவளுடைய மஞ்சளில் குளித்து நானும் மஞ்சளாகிவிட வேண்டும். அப்படி நினைக்கும் போது என்னிடம் பல வருடங்கள் குறைந்துவிட்டிருந்தன. பழைய சினிமாக்களில் படிப்படியாக கால், இடுப்பு, மார்பு, முகம் என்று கல் சிலைக்கு மனுஷ உரு வருவதைக் காட்டுவார்களே அது மாதிரி ஆகியிருந்தேன். என் அடிவயிற்றுக்குக் கீழ் நிகழ்ந்ததை என்னாலேயே ஒரு ஆச்சரியமாக மட்டுமே உணரமுடிந்தது. கிளர்ச்சி என்று அதைச் சொல்ல மாட்டேன். அது ஒரு நிலை. அது ஒரு உயரம். என்னுடைய உயரத்தில் என்னை நிறுத்திவிட்டு அவள் மஞ்சளாகப் படுத்திருந்தாள்.

நான் உட்பக்கம் திரும்பி, ‘ஜெயராஜ். நான் புகைக்கவேண்டும்’ என்றேன். ஜெயராஜ் இம்முறை ஒன்றும் சொல்லவில்லை. சிகரெட் பெட்டியையும் தீப்பெட்டியையும் என்னிடம் கொடுத்துவிட்டு, ‘போ. போய் உன் இடத்தில் உட்கார்’ என்று நான் சொன்னது போல மறுபடி அதே இடத்தில் அதே போல உட்கார்ந்தான். ஏற்கனவே வரையப்பட்டிருந்த சித்திரத்தின் ஒரே மாறுதலாக, மாடிப் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி, சாப்பாட்டு மேஜையின் கீழ் வரை போய், பூனை படுத்துக்கொண்டு தன்னை நாக்கால் சுத்தப்படுத்தத் துவங்கியிருந்தது.

‘அடுத்த கணமே அந்த உயரம் போதுமென்று தோன்றிவிட்டது. நான் என்னைத் தளர்த்திக் கொண்டேன். ‘நீ தராததை நான் எடுத்துக் கொள்வதற்கில்லை சிவகாமி’ என்று அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். அவளை அப்போதுதான் பார்ப்பது போல என்னால் பார்க்க முடிந்தது. அவள் மஞ்சள் வெயில் போல இருந்தாள்.’

நான் திரும்பிய போது ஜெயராஜ் பக்கத்தில் நிர்மலாவும் இருந்தாள். அவள் கலங்கிய கண்களுடன் நின்றாள். குளித்து முடித்திருந்த அவளை, இந்தக் கண்கலங்கல் ஒரு பீங்கான் பொம்மை போலத் துல்லியமாக்கி இருந்தது.

‘இதையெல்லாம் இப்போது எதற்கு ஸார் சொல்கிறீர்கள்? ‘நிர்மலா தன் கையில் வைத்திருந்த தேநீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டு ஜெயராஜ் என்னிடம் வந்து கொண்டு இருந்தான்.

‘எதையும் எப்போதும் சொல்வதற்குரிய வயதையும் தனிமையையும் சிவகாமி இறந்த தினத்திலிருந்தே நான் அடைந்துவிட்டேன் என்பது அந்தத் தேனீர்க் கோப்பைக்கே தெரியும். உனக்கும் நிர்மலாவுக்கும் தெரியாவிட்டால் எப்படி? ‘ – நான் நிர்மலாவைப் பார்த்தபடி சொன்னேன்.

‘நீங்கள் நேற்றிரவு சரியாக உறங்கவில்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது ஸார் ‘ நிர்மலா தொண்ணூறு சதவிகித மரியாதையுடன் பத்து சதவிகிதப் புன்னகை கலந்து சொன்னாள். உடனடியாக என்னை உட்கொள்ளச் செய்யவேண்டிய அவசர மாத்திரைகளை அவள் மனதில் வரிசைப்படுத்தியிருக்க வேண்டும்.

‘உண்மைதான். நேற்று இரவு உறங்கவில்லை. ஆனால் சற்று முன்பு உறங்கி விட்டிருந்தேன். ஒரு கனவு காணும் அளவுக்கான உறக்கம். கனவிலும் சிவகாமி அல்லது சிவகாமி போன்ற ஒருத்தியே வந்தாள். நிறை அம்மணமாக. மேலிருந்து கீழ் வரை மஞ்சள் பூசியிருந்தாள். அப்போது அரைத்து அப்போதே பூசிக்கொண்டது போல, திப்பி திப்பியாக மஞ்சள். பூசின விரல் அடையாளம் நெஞ்சில் தெரிகிறது. வயிற்றில் தெரிகிறது. அதற்கும் கீழேயும். நான் இதே போல ஒரு கண்ணாடி ஜன்னலுக்குள் நிற்கிறேன். பெய்கிற மழையில் அவள் தூரத்தில். தூரத்திலா பக்கத்திலா என்பது உறுதியில்லை. அவளையும் தாண்டி நீலமாக மலைகள். இறுதிவரை மலைகள். வெள்ளி ரிப்பன் போல அருவி வழிவது கூட. ஒரு நேர் கோட்டில் வைத்தது போல எல்லாவற்றையும் பார்க்கிறேன். ஆனால் தீர்மானமாக, அவள் என்னைப் பார்க்கவே இல்லை. பார்த்திருக்கலாம். கனவிலாவது பார்த்திருக்கலாம். ‘

சற்று அமைதியாக நின்றேன். அந்த இடத்தில் என்னை ஆணியிட்டு அந்தக் கனவுடன் சேர்த்து முறுக்கியது போல இருந்தது. ‘ எதுவும் மாறிவிடவில்லை. இல்லையா ஜெயராஜ்? ‘ என்று சிரித்தேன்.

ஜெயராஜிடமிருந்து தேநீர்க் கோப்பையை வாங்குவதற்குக் கையை நீட்டினேன். கோப்பைக்கும் என்னுடைய விரல்களுக்குமான இடைவெளி முற்றிலும் குறைவதற்குள்
’சரியாகத்தான் சொன்னாய் நிர்மலா. எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது’ என்று சொல்லிக்கொண்டு இருக்கையில், இடது புறமாக என்னை யாரோ வலுவாகத் தள்ளுவது போல இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *