எதிர்விசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 4,015 
 

‘அந்த மாலைப் பொழுதில், என்னோமோ கொஞ்சம் எகிறிப் பாய்ந்தால் அந்த சூரியனை தொட்டுவிடலாம் என்பது போல்… மண் சாலையின் மறுகோடியில் சூரியன் ஆரஞ்சுப் பழ வடிவில் பிரகாசமாக தெரிந்தபோது, கணேஷ் தன் சைக்கிளை முழுப்பலம் கொண்டு மிதித்தான் ….மிதிக்க மிதிக்க சைக்கிள் கொஞ்சமும் நகர்வது போல் தெரியவில்லையே!!…. இன்னும் முழுப்பலம் கொண்டு மிதித்தான்….ஆனாலும் சைக்கிள் கொஞ்சமும் நகர்வது போல் தெரியவில்லை!!…..சூரியன் வேறு பாதி மறைந்து கொண்டு போகிறானே!…..மேலும் முழுப்பலம் கொண்டு மிதித்தான்….சைக்கிள் சாய்ந்து விழ….’

கணேஷ் ஆகிய நான் ஒரு நடுக்கத்துடன் அந்த கனவிலிருந்து விழித்துக் கொண்டேன்….. என் இரு கால்களையும் பார்த்தேன்….இல்லை இல்லை …அந்த இரு கால்களையும் தேடினேன்….. இருப்பது போல் உணருகிறேன்…. ஆனாலும் அவைகள் இல்லை!!….. இரு கைகளால் மண்டையை அடித்துக்கொண்டு சத்தம் வராமல் விசும்பினேன்.

பொறுத்து பொறுத்து என் வாழ்க்கை தான் கசப்பாகிக் கொண்டிருந்தது…. சிங்கப்பூரில் நிரந்தரவாசியாகி விட்டாலும், ஒரு விபத்தில் இரு கால்களையும் இழந்த எனக்கு இங்கு வாழப் பிடிக்கவில்லை.

“மாமா நான் இந்தியா திரும்ப முடிவு பண்ணிட்டேன். தயவு செய்து வேண்டிய ஏற்பாடுகளை பண்ணுங்கள். என் அப்பா அம்மாவுக்கும் தகவலை சொல்லிடுங்க”.என் மேல் மிகுந்த அக்கறை காட்டி என்னை இதுநாள்வரை நல்வழியில் உதவி வந்த என் மாமாவிடம் கெஞ்சினேன்.

“கணேஷ், நீ ஏற்கனவே அங்கு நடந்த கசப்பான அனுபவத்தால்தான் இங்கே வந்தே…. திரும்பவும் அங்கே போனா உன் மனசு நொந்து போகும்…. சாகலாம்னு கூட நினைப்பு வரும். இங்கேயே இரு. நான் உன் பொழுதுபோக்குக்கு ஏதாவது நல்ல ஏற்பாடுகளை பண்றேன்.”

“வேண்டாம் மாமா, இங்கே மாத்திரம் எனக்கு என்ன நல்லது வாழக் கிடைச்சது? நான் அங்கே போய் ஏதாவது பொதுச் சேவை செய்யலாம்னு நினைக்கிறேன், தயவு செய்து தடுக்காதீங்க என்னை”

அன்று எடுத்த முடிவுக்குப் பின், ஒரு மாதம் கழித்து சென்னையில் திருவல்லிக்கேணியில் என் வீட்டில் நான் சில ஏழை மாணவர்களுக்கு படிப்பில் ஊக்குவிக்கும்படியாக தினசரி பாடங்களை சொல்லித் தர ஆரம்பித்தேன்.

ஒரு நாள் என் மாணவி ஒருத்தி தன் விஞ்ஞானப் பாடத்தை படித்துக் கொண்டிருந்தாள்…..

“ஆற்றல் அழிவின்மை விதி – ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஆற்றல் ஒன்று ஒரு வகையில் மறையுமாயின் அதுவே பிறிதொரு வகையில் சேதமின்றி வெளித்தோன்றும்!”

பிறகு அவள் இன்னொரு விஞ்ஞான விதியையும் படித்தாள்…..

“நியூட்டனின் மூன்றாவது விசை விதி – ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு”

இவைகள் இரண்டும் என் காதில் ஒலித்த பொழுது, எனக்கு விபத்து நடந்து கால்கள் இழந்த சமயம் அம்மா தொலைபேசியில்…..”எல்லாம் நீ ஜென்மம் ஜென்மமாக செய்து வந்த பாவம்டா பாவம்!” என்று அழுது புலம்பியது நினைவுக்கு வந்து….உடல் பனி போல் உருகியது.

ஜென்மத்துக்கும் பாவ புண்ணியத்துக்கும் இந்த இரு விஞ்ஞான விதிகளே Solid Proof என்பது எனக்கு மிகத் தெளிவானது.

அறிந்தோ அறியாமலோ இதுவரை செய்து வந்த பாவங்களின் வினை தான் இன்று நான் அனுபவித்துக் கொண்டிருப்பது என்பதை உணர்ந்த பொழுது கண்களில் நீர் மல்கியது…….என் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றது……

***

அப்பொழுது எனக்கு வயது பதினான்கு இருக்கும் – பள்ளியில் என் அருகில் அமர்ந்த ஒருத்தியின் மேல் எனக்கு அளவு கடந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

சாந்தமான முகம், முத்தான சிரிப்புகள், படிப்பில் முதன்மை போன்றவைகளே காரணம். மற்றவர்களிடம் பழகுவதை விட என்னிடம் மட்டும் தான் அவள் அதிகம் பேசிப் பழகியது என் ஆசைகளை தூண்டியது. சில காதல் சினிமாக்களும் என் மனதை கெடுக்க, இனி அவள் தான் என் வாழ்க்கை என்ற முடிவுக்கு ஆளாகினேன்.

படிப்பில் மிக மந்தமாகிக் கொண்டு வந்தவன், கவிதைகளில் புலவனாகிக் கொண்டு வந்தேன்!!

பள்ளி வாழ்க்கை முடிந்து பிரிவு ஏற்பட்டது….அவளுக்கு கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன்….சில கடிதங்கள் தான் எழுதி இருப்பேன்……

பதிலுக்கு அவள் அப்பாவிடமிருந்து என் அப்பாவுக்கு ஒரு கடிதம் வந்தது. வந்ததை அப்பா என்னிடம் அன்றே காட்டவில்லை. ஆனால் சில நாட்கள் அவர் மிகுந்த வேதனையில் இருந்தது புரிந்தது.

ஒருநாள் அழைத்து திடீரென்று என்னிடம் “நீ இனி படிக்கப் போக வேண்டாம்…..புத்தகங்கள் எல்லாவற்றையும் எரித்து விடு….. இனி என்னுடன் சேர்ந்து எனக்கு வியாபாரத்தில் துணையாக இரு” என்றார்.

நான் புரியாமல் முழித்தேன். அப்பொழுது தான் அந்த கடிதத்தை காண்பித்தார். படித்தேன்…. அதில் இருந்த அவள் அப்பாவின் சில சாந்தமான மிரட்டல்கள் என்னையும் நடுங்கச் செய்தது.

என்னால் என் பெற்றோர்கள் அவதிப்பட வேண்டாம் என்று தீர்மானித்தேன்.

“அப்பா – என்னை மன்னிச்சிடுங்க, சத்தியமா இனிமே நான் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன்…. இனி நல்லா படித்து முன்னுக்கு வருவேன்” என்று அவர் காலில் விழுந்து அழுதேன்.

அடுத்த நான் சோற்றுக்கு வழி தேடி அலையும் என் அப்பாவின் வேதனை….. வந்த பணத்தை அதிகம் செலவு செய்து விடக் கூடாது என்று தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் என் அம்மா படும் கஷ்டங்கள்….. சில சமயங்களில் பசியால் அழும் என் தம்பி தங்கைகளின் துன்பங்கள்…. என் கண்களுக்கு அதன் பின் தான் தெளிவாக தெரிய, என்னை விரைவில் நான் மாற்றிக்கொண்டேன்.

நன்றாக படித்து வந்தேன். ஆனாலும் சில நேரங்களில் அவளின் நினைப்பு வரும்… தனிமையில் அழுவேன்….ஆண்டவன் எனக்கும் என் பெற்றோருக்கும் துன்பத்தை மட்டும் தான் தந்திருக்கிறார் என்று மனம் வேகும்.

“கடவுள் என்று ஓன்றிருந்தால் எல்லோரும் நலமாய் இன்பமாய் அல்லவா வாழ வேண்டும்??” போன்ற கேள்விகளினால் மனம் குழம்பி கடவுள் நம்பிக்கை இழந்தேன்.

படிப்பு முடிந்து நல்ல உத்தியோகத்தில் சேர்ந்தேன்

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற கோட்பாட்டினால் இனி என் வாழ்க்கையில் திருமணம் என்பது இல்லை என்ற முடிவுடன் அதுவரை வாழ்ந்து வந்த எனக்கு இன்னொரு சோதனை காத்திருந்தது……

உத்தியோகம் பார்த்த இடத்தில் அந்த இன்னொருத்தி என் வாழ்க்கையில் அறிமுகமானாள். நான் பார்க்கும் வேலை காரணமாக அவளிடம் கட்டாயம் பேசிப் பழக வேண்டியதானது. இருந்தும் வேலை சம்பந்தமாக மட்டும் அவளைப் பார்த்து பேசிப் பழகி வந்தேன்…..

ஆனால் அவளோ என் மற்ற நேரங்களில் எல்லாம் என்னை தொல்லை செய்ய ஆரம்பித்தாள்.

அவள் தன்மனதை என்னிடம் ஏனோ பறிகொடுத்துக் கொண்டிருந்தாள். நான் என் மனதை திடமாகவே வைத்துக் கொண்டிருந்தேன்.

‘நீ ஒருத்தியை காதலித்து அவளை திருமணம் செய்து கொள்வதை விட உன்னை காதலிக்கும் ஒருத்தியை நீ திருமணம் செய்து கொள்வது மேல்’ என்று நண்பர்கள் சிலர் என்னை தூண்டிப் பார்த்தார்கள்….

என்னைப் பெற்றவர்களும் எனக்கு திருமணம் செய்து வைக்க மிக ஆவலாக இருந்தார்கள்.

நான் “எனக்கு திருமணமே வேண்டாம:’ என்று அடம் பிடித்தேன்.

“அட முட்டாள்! அது உன் பருவ வயசுக் கோளாறுனால நடந்தது….அதையே நினைச்சுக்கிட்டு வாழ்க்கையை வீணடிக்காதே, உன்னால கல்யாணம் செய்துக்காம இந்த நவீன சமுதாயத்துல வாழ முடியாது…..சொல்றதை புரிஞ்சுக்கிட்டு இவளையே கல்யாணம் பண்ணிக்கோ” என்றார் அப்பா.

ஆனால் எனக்கு பழையவளின் ஞாபகம் இன்னும் போகவில்லை. அவள் விலாசத்தைத் தேடி அலைய ஆரம்பித்தேன். சில மாதங்கள் கழித்து அந்த

விலாசத்தை கண்டறிந்து….. அங்கு சென்ற பொழுது அவள் தன் பெற்றோருடன் அமெரிக்கா போய் பல வருடம் ஆகிவிட்டது என்று தெரிந்தது. மனம் உடைந்து போனேன்.

அதன் பின் உத்தியோகம் பார்த்த இடத்தில் இந்தப் புதியவளின் நச்சரிப்பு அதிகரித்தது. ஒருநாள் அவள் தன் விலாசத்தை ஒரு துண்டுப் பேப்பரில் எழுதிக் கொடுத்து “உங்களுக்கு இஷ்டமிருந்தால் ஞாயிற்றுக்கிழமை உங்க அப்பா அம்மாவோட என் வீட்டுக்கு வந்து சம்பந்தம் பேசுங்க….. எனக்கு இன்னொரு பிரச்னை இருக்கு,… நான் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறிவிட்டுப் போனாள்.

அன்று அவள் முகம் ஏனோ சோகமாக இருந்தது ஆனால் நான் அந்த விலாசத்தை கிழித்தெறிந்தேன்.

அந்த ஞாயிறு நான் என் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். டிவியில் பார்த்த அந்த சினிமா என் மனதை மிகவும் குழப்பியது…. அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் யோசித்து யோசித்து கடைசியாக அவளை திருமணம் செய்து கொள்வது நலம் என்ற முடிவுக்கு வந்தேன்.

முடிவு எடுத்தது தான் தாமதம்…….பின் உடனே அவளுடன் கனவில் மிதக்க ஆரம்பித்தேன். அவளுடன் இனி எப்படிப் பழகி வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கற்பனை உலகில் இரவை கழித்தேன்.

மறுநாள் வேலைக்கு சென்றதும் முதல் காரியமாக அவளைத் தேடினேன்…. அவள் அன்று ஏனோ வேலைக்கு வரமாட்டாள் என்று தெரிய வந்தது…. அன்றைய தினமும் கனவு வாழ்க்கையில் அவளுடன் சேர்ந்து திரிந்து மகிழ்ந்தேன்

மறுநாள் வந்தாள். “உன் விலாசம் எனக்கு வேண்டும்” என்றேன். அவள் முகம் சாய்ந்து சோகமானாள்.

“சாரி, என் விலாசம் நேற்று மாறிடுச்சு!!. விலாசம் மட்டும் இல்லை, என் துணையும் மாறிடுச்சு…. நான் சொன்னேன்…. எனக்கு ஒரு பிரச்னை இருக்கு. சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும்னு…. நான் என் மாமன் மகனை கல்யாணம் பண்ணிக்க வாக்கு கொடுத்துட்டேன்…..என் மாமா செய்து வந்த தொந்தரவுனால….. நீங்களும் அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை வராததால…., நான் என் மனசை திடப்படுத்தி மாத்திக்கிட்டேன். நான் உங்கிட்ட பழகினதை கனவா நினைச்சு மறந்துடுங்க….”

இவளும் போய் விட்டாள்.

இரண்டு நாள் தான் இவளுடன் கனவுலகில் மிதந்து திரிந்தேன்.

இப்பொழுது இவளையும் மறக்க என்னால் முடியவில்லை…..”ஒரு தவறும் செய்யாத எனக்கு ஏன் இந்த சோதனை? ஏன் இந்த ஏமாற்றம்??”’ என்று பித்துப்பிடித்து கத்திப் புலம்பினேன்.

வேலையில் சரிவர மனம் போகாமல்…. பல பெரிய தவறுகள் செய்தபடியால் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன்….புதிய வேலைக்கு விண்ணப்பிக்கவும் மனம் வராமல் ஏனோ தானோ என்று நாள் கடத்த ஆரம்பித்தேன்.

இந்த சமயத்தில் தான் சிங்கப்பூரிலிருந்து என் மாமா என்னை அழைத்தார் நானும் எனக்கு மாற்றம் வேண்டும் என்று ஒப்புக் கொண்டேன்.

சிங்கப்பூரில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தேன் இரண்டு வருடம் கழிந்தது

ஒருநாள் என் மாமா ஒரு நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

“கணேஷ் உன்னைப் பத்தியும், நீ இதுவரை பட்ட கஷ்டத்தைப் பற்றியும் எனக்கு நல்லா தெரியும்…..பெத்தவங்களை நீ முதல்ல சந்தோஷப்படுத்த வேண்டும். அதுக்கு கல்யாணம்னு ஒன்னு நீ செய்துக்கிட்டு தான் ஆகணும்” என்று பேசிக்கொண்டே என்னை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென் றார்,

“இந்தப் பெண்ணை பார்” என்று கூறியவர் என்னை ஒரு அழகுத் தேவதையின் முன் கொண்டு போய் நிறுத்தினார். ஒரு சில நிமிடங்களில் யோசித்துவிட்டு மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டேன்.

பிறகு வெகு விரைவாக நிச்சயதார்த்தம் நடந்தேறியது… கல்யாணப் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டது

‘இனி என் வாழ்வில் வசந்தமே!!’ என்று பாடலானேன். என் மனம் எப்படி இப்படி மாறிவிட்டது?….இன்ப வெள்ளத்தில் துள்ளுகிறது?? என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது!

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும் சமயம்…..

அன்றைய தினம் என் இந்திய நண்பன் ஒருவனை எதேச்சையாக… மிக ஆச்சரியத்துடன் சந்திக்க நேர்ந்தது. அவனுடன் ஹோட்டலுக்கு சென்றேன்

“நீ கல்யாணம் பண்ணிக்கப் போ றியா? நம்பவே முடியலை!” என்றான், என் முழுக் கதையையும் அறிந்திருந்த நண்பன்.

அவன் கையில் என் கல்யாணப் பத்திரிகையை திணித்து, “கண்டிப்பா வரணும்” என்றேன்.

அவனுடன் இருசக்கர வாகனத்தில் திரும்புகையில்…. அந்த விபத்து

நடந்தது……நான் என் கால்களை இழந்தேன்….அதன் காரணமாக திருமணம் செய்து கொள்வதாய் இருந்த அந்த அழகு தேவதையையும் இழந்தேன்.

விட்டத்தைப் பார்த்து, மறுபடி மறுபடி “எனக்கு ஏன் இந்த சோதனை?” என்று மனம் குழம்பி வெட்டியெடுக்கப்பட்ட என் இரு கால்களையும் பார்த்து அழுது தவிக்கலானேன்.

***

இப்பொழுது உணர்கிறேன்…. “இப்பிறவியில் நான் அறிந்து எந்தப் பாவமும் செய்யவில்லை தான்…… ஏழேழு ஜென்மங்கள் என்பதெல்லாம் பொய்யில்லை……ஆக ஜென்ம ஜென்மமாக நான் செய்து வந்த பாவங்களின் வினை தான் (எத்தனை பெண்களின் வாழ்க்கையில் விளையாடி அவர்களை ஏமாற்றியிருப்பேன்?!) இப்பொழுது, இப்பிறவியில் நான் அனுபவித்துக் கொண்டிருப்பது” என்பதை உணர உணர உடல் உருகி பாவங்கள் கழிவது போலிருந்தது.

நான் என் சிந்தனையிலிருந்து மீளுகையில், திடீரென்று பர்தா அணிந்த முஸ்லிம் பெண் ஒருத்தி என் வீட்டிற்குள் தடதடவென்று ஓடோடி வந்து நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டு நடுக்கத்துடன் அழுதாள்.

குழுமியிருந்த என் மாணவர்கள் அனைவரும் திகைத்தனர். அதில் ஒரு சிறுமி அவளைப் பார்த்து “அம்மா” என்று கத்தினாள். அவளும் ஓடோடி வந்து அவளை அணைத்துக் கொண்டு என்னை திகைப்புடன் பார்த்தாள்.

“இன்னிக்கு விநாயக சதுர்த்தி இல்லையா…. ஒவ்வொரு வருஷம் இங்கே இந்து முஸ்லிம் கலவரம் நடக்குது… போன வருஷம் என் புருஷன், அப்பா, அம்மாவை எல்லாம் வெட்டி சாகடிச்சாங்க…..இப்ப எனக்கு இருக்கிறது இவ ஒருத்தி தான்…… நீங்க தான் எங்களை காப்பாத்தணும்’ அவளுக்கு அழுகை பீறிட்டு வெளிவந்தது.

வெளியே தெருவில் நிறைய அலறலும் குழப்பமும் கேட்டது. என் வீட்டுக் கதவை சிலர் தட்டினர். என் அப்பா பயந்தவாறு சென்று திறந்து பேசிப் பார்த்தார்.

அவர் பேச்சை மதிக்காமல் அவர்கள் கைகளில் பெரிய பெரிய கத்தியுடன் உள்ளே வந்தனர்….

என்னையும்….சக்கர நாற்காலியில் இருந்த என் நிலைமையையும்…..கதி கலங்கி இருந்த மாணவர்களையும் முறைத்துவிட்டு ஒருவன் “இவளை வெளியே விடுங்க” என்றான்

“அவளை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா இருக்கேன். அதுக்கு மேலே அவளை எதனாச்சும் பண்ணனும்னா என்னை முதல்ல கொன்னுட்டு அப்புறம் பண்ணுங்க” என்றேன் நான்…… ஏன் அப்படி பேசினேன் என்று எனக்கே புரியவில்லை!.

வந்தவர்கள் மெதுவாக திட்டிக் கொண்டே கலைந்தனர்.

ஒரு அறைக்குள் தன் பெண்ணுடன் நுழைந்த அந்த பர்தா பெண் சுமார் ஒரு மணி நேரம் வரை அழுது புலம்பினாள். பிறகு வெளியே வந்தாள்,

“உன்னைக் காப்பாத்ததான் அப்படி பொய் சொன்னேன். மனசுல வெச்சுக்காதே. வெளியே போக இன்னும் பயமா இருந்தா, கலவரம் அடங்கற வரைக்கும் இங்கேயே இரு” என்றவாறு நான் என் அப்பா அம்மாவை பார்த்தேன் அவர்களும் ‘சரி பரவாயில்லை’ என்பது போல் பார்த்தனர்.

“ஆனா நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்…. உங்களுக்கு சம்மதம்னா…. நான் இங்கேயே நிரந்தரமா இருந்து காலில்லாத உங்களுக்கு சேவை செய்யணும்னு ஆசைப்படறேன்….நீங்க விருப்பப்பட்டா என்னை கல்யாணமும் பண்ணிக்குங்க” அவள் என் காலருகே விழுந்து மண்டியிட்டாள்

“நான் காலில்லாதவன்…. என்னோடு நீ சந்தோஷமா வாழ முடியாது” நான் மறுத்துப்பார்த்தேன்

“நான் என் உடம்புல உயிரே இல்லாதவளாக ஆகியிருப்பேன்!!.. நீங்க என்னை காப்பாற்றி இருக்கீங்க…..உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்”

நான் அவளையும் அவள் பெண் குழந்தையையும் பார்த்தேன் பின் என் பெற்றோர்களை பார்த்தேன்.

கண்களை மூடி யோசித்தேன். கடவுளை உணர்ந்தேன். என் வீட்டில் தஞ்சம் புகுந்தவள் என் வாழ்க்கையிலும் தஞ்சம் புகுந்துவிட்டாள் இப்பொழுது.

என் தவறுகளையும் பாவங்களையும் மன்னித்த கடவுள் அவளை ஒரு பரிசாக எனக்கு அனுப்பியுள்ளதாக எண்ணி நான் அவளைப் பார்க்கிறேன்!

கெட்ட விசைகளுக்கு கெட்ட எதிர்விசை….நல்ல விசைகளுக்கு நல்ல எதிர்விசை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *