எதிர்பாராதது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2024
பார்வையிட்டோர்: 1,862 
 
 

ஜயந்தி பெயருக்கேற்ற அழகு வாய்ந்தவள். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். எனவே, ஆடம்பரமான ஆடை ஆபரணங்கள், நகை நட்டு எதுவும் அவளுக்குக் கிடையாது . ” ’எனக்கென்னத்திற்கு நகை?’ என்பதைப் போல் எப்போதும் அவள் முகத்தில் புன்னகை அரும்பிக் கொண்டிருக்கும்!

அவளுடைய தாயார் இறந்து மூன்று வருஷங்கள் ஆகின்றன. இப்போது அவளுக்கு வயது ஒன்பது. தகப்பனார் வேலைக்குப் போய் விட்டால் அவளுக்குத் துணையாக வீட்டில் யாருமே கிடையாது. அப்பா திரும்பி வரும் வரை அவள் தன்னந் தனியாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு வருஷம் சென்றதும் அப்பா மறுமணம் செய்து கொண்டார். சூடாமணி என்ற பதினெட்டு வயது இளம் பெண் ஒருத்தி அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வசீகரமான தோற்றம். எப்போதும் சிரித்த முகம் ; குளுமையான பேச்சு.

சூடாமணி வந்த பிறகு ஜயந்தியின் வாழக்கையில் புது உற்சாகம் பிறந்தது.

அவர்களிருவரும் ஒருவரை யொருவர் அன்பு டன் நேசிக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட வாத்சல்யமானது வளர் பிறை போல் வளர்ந்து, தேய் பிறைபோல் தேயாமல், பூர்ண சந்திரிகையாகவே நின்று விட்டது. அவர்களிருவரையும் பார்க்கும் போது உடன் பிறந்த சகோதரிகளைப் போல் காணப்பட்டனர்.

அவர்களிருவருடைய அந்நியோன்ய வாழ்க்கையைக் கண்ட ஜயந்தியின் தகப்பனார் தம்முடைய துக்கத்தையும் ஏழ்மையையும் மறந்தார்.

ஜயந்தியின் குதூகலம் நிறைந்த வாழ்க்கை யில் மறுபடியும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது.

இரண்டொரு வருஷங்களுக் கெல்லாம் சூடாமணி கர்ப்பிணியானாள். பத்தாவது மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்த அவள் தன்னுடைய கண்களை சாசுவதமாக மூடிக்கொண்டாள். அவள் தன்னுடைய அந்திய காலத்தில் ”ஜயந்தி! இந்தக் குழந்தையை உன்னிடம் விட்டுச் செல்கிறேன். நீதான் இவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவளை நான் எப்படி அன்புடன் வளர்ப் பேனோ அதே மாதிரி வளர்க்க வேண்டும். இவளுக் குச் சூடாமணி என்றே பெயர் வைத்து விடு. அப் போது தான் உனக்கு என்னுடைய ஞாபகமும் இருந்து கொண்டிருக்கும்” என்று கூறின போது ஜயந்தியின் கன்னத்தில் கண்ணீர் பெருகியது.

#

சில தினங்களுக் கெல்லாம் அடுத்த வீட்டுக்கு வாசுதேவன் என்று ஒரு பையன் வந்து சேர்ந்தான். அவனுக்குப் பத்து அல்லது பதினோரு வயது இருக்கும். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட் டான். ஜயந்தியின் அடுத்த வீட்டில் தான் – அவனுடைய மாமா வசித்து வந்தார். வாசுதேவனுடைய மாமா தமக்குக் குழந்தைகள் இல்லாத குறையை வாசுதேவனை வளர்ப்பதன் மூலம் போக்கிக் கொண்டார்.

வாசுதேவன் அடிக்கொரு தடவை ஜயந்தியின் வீட்டுக்கு வந்து போனான். வந்து, சிறு குழந்தையான சூடிக்கு விளையாட்டுக் காட்டுவான் ; தொட் டிலில் போட்டு ஆட்டுவான். கையில் எடுத்துக் கொஞ்சுவான்.

ஜயந்தியின் தகப்பனாருக்கு அந்தப் பையனிடம் தனிப்பட்ட அன்பு இருந்தது. “ஐயோ பாவம்! தாயில்லாப் பையன் ” என்று அந்தப் பையன் மீது கருணை காட்டுவார்.

வாசுதேவனுக்குப் பதினைந்து வயதானதும் அவனுடைய மாமா அவனை டாக்டர் படிப்புக்காக வெளியூருக்கு அனுப்பிவிட்டார். எனவே அதற்குப் பிறகு அவனால் ஜயந்தியை அடிக்கடி பார்க்க முடிய வில்லை. எப்போதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வருவான். மறு நாளே திரும்பிப் போய் விடுவான். இப்படி இரண்டு மூன்று வருஷங்கள் கழிந்தன.

வரவர வாசுதேவனுடைய நடையுடை பாவனை சுளில் மாறுதல் காணப்பட்டது.

ஜயந்தியும் திடீரென்று தோற்றத்தில் வெகுவாக மாறிப்போயிருந்தாள். வாசுதேவன் ஒரு நாள் அவளை அகஸ்மாத்தாகக் கண்டபோது யாரோ ஒரு புதிய ஸ்திரீயைக் காண்பதாகவே நினைத்தான்.

“ஜயந்தி! என்ன இது, உன்னை அடையாளமே தெரியவில்லையே? இப்படி ஒரேயடியாய் மாறி விட்டாயே !” என்று கேட்டான்.

ஜயந்தி தனக்கே உரித்தான விசேஷப் புன்னகையுடன், தலை குனிந்து கொண்டாள். மறுபடியும் அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தபோது வாசுதேவன் அவளையே நோக்கிக் கொண்டிருந்தான்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் மறு படியும் சந்திப்பதற்குள் எத்தனையோ ஞாயிற்றுக் கிழமைகள் கழிந்து விட்டன.

வாசுதேவன் தன்னுடைய டாக்டர் படிப்பு முடிந்ததும் கராச்சியில் யுத்த இலாகாவில் உத்தி யோகம் செய்து கொண்டிருந்தான்.

#

ஜயந்தியின் உதவி அவளுடைய தகப்பனாருக்கு அத்தியாவசியமாயிருந்தது. ஜயந்தியோ அவள் தகப்பனாரோ அவளுடைய விவாகத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கவும் இல்லை; கவலைப் படவும் இல்லை. குடும்பத்தின் பிற்கால வாழ்க்கையைக் குறித்தும் யோசிக்கவில்லை.

சின்னஞ் சிறு சூடியும் கவலையற்று விளையா டிக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் தாயாரின் கண்களைப் போலவே அழகாயிருந்தன. ஜயந்தியின் தகப்பனார். குழந்தை சூடியைப் பார்த்துப் பார்த்துப் பரவச மடைந்தார்.

இந்த இன்பத்தில் தம்முடைய துக்கத்தை மறந்தார். தமக்குக் கடவுள் அளித்திருக்கும் இந்தச் சின்னஞ் சிறு செல்வமே போதும் என்று எண்ணித் திருப்தி அடைந்தார்.

ஜயந்தி மட்டும் அடிக்கடி வாசுதேவனை அந்த ரங்கத்தில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

கடைசியில் ஒரு நாள் வாசுதேவன் வந்தான். வந்தவன் ஓரிரு தினங்களுக் கெல்லாம் திரும்பிப் போக வேண்டும் என்று கூறினான். இதைக் கேட் டதும் ஜயந்திக்குக் கோபம் கோபமாய் வந்தது.


வஸந்த காலத்தின் சௌந்தர்யத்தினால் பூமாதேவி புது அலங்காரம் பெற்று விளங்கினாள். பசும்புல் நிறைந்த தரைகளில் அங்கங்கே பூத்திருந்த சிறு சிறு வெண்ணிறப் பூக்கள் நீல வானத்தில் ஒளிரும் நக்ஷத்திரங்களைப் போல் காட்சி அளித்தன.

திடீரென்று ஒரு நாள் மறுபடியும் முன்னெச்சரிக்கை எதுவுமின்றி வாசுதேவன் வந்து சேர்ந்தான். அப்போது ஜயந்தியின் கோபமெல்லாம் இன்ப வேதனையாக மாறியது.
வாசுதேவன் சிறிது நேரத்திற் கெல்லாம் ஜயந்தியைப் பார்ப்பதற்காக ஆவலோடு வந்தான்.

ஜயந்தியினுடைய தோற்றத்தில் முன்னைவிட அதிக வித்தியாசம் காணப்பட்டது.
ஜயந்தி, அவளுடைய தகப்பனார், வாசுதேவன் மூவரும் சேர்ந்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்த சமயம் வெளியே சென்றிருந்த சூடி உள்ளே ஓடி வந்தாள்.

வாசுதேவனைக் கண்ட சூடாமணி ஒரு கணம் செயலற்று நின்றாள். வாசுதேவன் அவளை ஆவலுடன் நோக்கினான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்த வண்ணம் உள்ளே சென்று விட்டாள்.

சூடாமணியின் மீது ஜயந்திக்குச் சிறிது சந்தேகம் தோன்றியது. சூடியின் அழகில் வாசுதேவன் மயங்கிப் போயிருக்கிறான் என்பதை வெகு சீக்கிரம் அறிந்து கொண்டாள் ஜயந்தி. வாசுதேவன் மீது என்றைக்கு மில்லாத கோபம் பொங்கி வந்தது. வாசுதேவனுக்கும் சூடிக்கும் சிநேகம் வளர்ந்து கொண்டே போயிற்று. இதுவரை வாசுதேவன் தன் மீது வைத்திருந்த அன்பெல்லாம் வெறும் பாசாங்குதானா ? வாசுதேவனுக்காகத்தான் இத் தனை காலம் காத்திருந்ததெல்லாம் வீண் தானா? தன்னை விட சூடாமணி எந்த விதத்தில் அழகி?

ஜயந்தியின் இருதயத்தில் பெரிய கொந்த ளிப்பு ஏற்பட்டது. கள்ளங் கபடமற்ற சூடாமணி ஒரு நாள் ஜயந்தியின் கண்கள் சிவந்திருப்பதைக் கண்டுவிட்டு “அம்மா ! ஏன் உன்னுடைய கண்கள் இத்தனை சிவப்பா யிருக்கின்றன?” என்று கவலை யுடன் கேட்டாள்.

ஜயந்தி ஏதோ பதில் கூறி மழுப்பி விட்டாள். சூடாமணி. இதை உண்மை யென்று நம்பினாள்.

வாசுதேவன் உண்மையில் யாரை அதிகமாக நேசிக்கிறான் என்பதை ஒருவராலும் ஊகித்தறிய முடியவில்லை.

கடைசியில் ஜயந்தியின் குழப்பம் ஒருவாறு தீர்ந்தது. அவளுடைய சிற்றன்னை இறக்கும் சமயம் குழந்தையைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் அவளுடைய இருதயத்தில் எதிரொலி செய்தன.

“ஜயந்தி, இந்தக் குழந்தையை நான் எத்தனை அன்பாக வளர்ப்பேனே, அவ்வாறே நீயும் காப்பாற்ற வேண்டும்.”

ஜயந்திக்கு இந்த வார்த்தைகள் ஞாபகம் வந்ததும் சூடியின் மீதிருந்த கோபமும் வருத்தமும் மறைந்து அன்பும் ஆசையும் தோன்றின.

அதே சமயத்தில் உள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சூடாமணி தன்னுடைய தவறான செய்கையைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். தன் தாயைப் போல் இருந்து வரும் ஜயந்தியின் மீது அவளுக்கு அளவிலாத அனுதாபமும் வாஞ்சையும் ஏற்பட்டது. அவளுடைய விருப்பத்துக்கு மாறாகத்தான் வாசுதேவனுடன் பழகு வதை விட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

உடனே, வாசுதேவனிடம் சென்றாள். சூடாமணியைக் கண்டதும் அவன் “எங்கே வந்தாய்?” என்று கேட்டான்.

சூடாமணி தான் வந்த விவரத்தைச் சொல்லி தன்னை அடியோடு மறந்துவிட வேண்டும் என்று வாசுதேவனை வேண்டிக் கொண்டாள்.

“மறந்து விட்டு என்ன செய்ய வேண்டும் ?” என்று கேட்டான் வாசுதேவன்.

“ஜயந்தியை மணந்து கொள்ள வேண்டும் ” என்றாள் சூடி.

“உன்னை மறப்பது; ஜயந்தியை மணப்பது; இரண்டுமே நடக்காத காரியம் !” என்றான் வாசுதேவன். சூடாமணி பதில் பேசத் தெரியாமல் திகைத்தாள்.

அவள் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்துக் கெல்லாம் வாசுதேவனைத் தேடி ஜயந்தி வந்து சேர்ந்தாள். அவள் முகத்தில் என்றைக்கும் இல் லாத சோகம் குடி கொண்டிருந்தது. வாசுதேவன் ஜயந்தியைக் கண்டதும் ‘நீ வந்திருக்கிற காரியம் எனக்குத் தெரியும்” என்றான்.

ஜயந்திக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன தெரியும்?” என்று கேட்டாள்.

“உன்னை மறந்துவிட்டு சூடாமணியை மணக்க வேண்டும் என்று கேட்கத்தானே வந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

தன் மனதிலுள்ளதை வாசுதேவன் எப்படியோ அறிந்து கொண்டது அவளுக்கு ஆச்சரியத் திலும் ஆச்சரியமாயிருந்தது.

“ஆமாம்; அதற்காகவேதான் வந்தேன். என் பேச்சைத் தட்டக் கூடாது!” என்றாள் ஜயந்தி.

“அது முடியாத காரியம்; உன்னை மறப்பதோ சூடியை மணப்பதோ இரண்டுமே என்னால் ஆகாத காரியம்” என்றான்.

சில தினங்கள் சென்றதும் வாசுதேவனுடைய இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது. வாசு தேவன் அவர்களிரண்டு பேரையும் மணக்கவில்லை; மறக்கவுமில்லை. அவன் அவர்களிருவர் மீதும் வைத் திருந்த அன்பு என்றென்றைக்கும் மறக்க முடியாத சகோதர அன்பாகும். அந்த அன்புக்குப் பங்கம் வராமல் அவன் தன்னுடைய மாமா நிச்சயம் செய்து வைத்த வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டான்.

– வத்ஸலையின் வாழ்க்கை, முதற் பதிப்பு: 1949, வாடாமலர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *