“”அம்மா, நீ கொஞ்சம் வாயை மூடிண்டு சும்மா இருக்கியா” என்றான் சங்கரன். அவன் குரலில் கோபம் இல்லாவிட்டாலும், கெஞ்சல் இருந்தது தெரிந்தது. அம்மாவிடம் அவன் இதுவரை கோபித்துக் கொண்டதில்லை.
“”மாலதி இப்பத்தான் நம்ம வீட்டுக்கு முதல் தடவை வந்திருக்கா. அவ என்ன நினைச்சுப்பா என்னைப் பத்தியும், உன்னைப் பத்தியும்?”
“”என்னைப் பத்தி என்ன வேணா நினைச்சுண்டு போகட்டும். எனக்கு ஒண்ணும் கவலை இல்லே” என்றாள் சரசுவதி.
பிள்ளையிடம் தான் ஒன்றும் அடங்கி ஒடுங்கி இருப்பவள் அல்ல என்பதை, வீட்டுக்கு முதல் முறையாக வந்திருக்கும் மாலதி தெரிந்து கொள்ள வேண்டும். தன் ராஜ்யம்தான் அங்கே நடக்கிறது என்று அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தோரணை அவள் குரலில் வெளிப்பட்டது.
சங்கரன் மட்டும் அறியும் வண்ணம் மாலதி மெல்லப் புன்னகை செய்தாள், வலது கையால் லேசாக வாயை மறைத்துக்கொண்டு. பிறகு தன் ஹேன்ட் பாகை எட்டி எடுத்துக் கொண்டு, “”சங்கர், நான் கிளம்பறேன். எனக்கு நேரமாச்சு” என்று எழுந்தாள்.
“”இப்பத்தான் எங்க வீட்டுக்கு வந்திருக்கே. அதுக்குள்ளே ஒண்ணுமே சாப்பிடாம கிளம்பினா எப்படி?” என்றான் சங்கரன்.
“”என்னால எழுந்திருந்து காபி கீபி போட முடியாதுன்னு அவ நினைச்சிண்டிருப்பா. புத்திசாலி. அதான் வந்த உடனே கிளம்பறேன் என்கிறா” என்றாள் சரசுவதி. அவள் அப்பட்டமாகச் சொன்னது, தன் மகன் சங்கரனையும், அவன் சினேகிதி மாலதியையும் நேரடியாகத் தாக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும் அதைச் சொல்லாமல் அவளால் இருக்க முடியவில்லை.
“”மாலதி, நீ கொஞ்சம் வெய்ட் பண்ணேன். நான் ஒரு காபி போட்டுக் கொண்டு வரேன். அம்மாவுக்கும் இது காபி டைம் தான். ப்ளீஸ், உட்காரு” என்றான் வினயமாக.
“”அம்மா, நீ கொஞ்சம் சும்மா இருக்கியா? மாலதி இப்பத்தான்”
“”முத முதலா இந்த வீட்டுக்கு வந்திருக்கா. அதானே?”
சங்கரன் அம்மாவை வேண்டுகிற மாதிரி ஒரு பார்வை பார்த்தான். வாய் வார்த்தையாக எதுவும் பதில் சொல்லவில்லை. அது அவனுக்குப் பழக்கமில்லை.
மாலதி ஹேன்ட் பாகை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். இந்த அம்மா – பிள்ளை விளையாட்டு எப்படித்தான் தொடர்கிறது என்று பார்ப்போமே என்ற குறுகுறுப்பும் அவள் மீண்டும் உட்கார ஒரு காரணம்.
சரசுவதி கட்டிலில் காலை நன்றாக நீட்டிப் படுத்துக் கொண்டாள். சங்கரன் சமையல் அறைக்குப் போய் கேஸ் அடுப்பைப் பற்ற வைத்து, பாலைச் சூடாக்கினான். மூன்று தம்ளர்களில் அதை விட்டுவிட்டு, ஏற்கெனவே வைத்திருந்த காபி டிகாக்ஷனை போதுமான அளவு கலந்தான். ஷெல்பைத் திறந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துப் பிய்த்து ஒரு சின்னத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.
மாலதியிடம் பிஸ்கட் தட்டை நீட்டிவிட்டு, காபி தம்ளரையும் கொடுத்தான். அம்மாவிடம் காபி தம்ளரை நீட்டிய போது, “”எனக்கு பிஸ்கட் தர மாட்டியாக்கும்?” என்றாள் சரசுவதி.
“”நீ என்னிக்கு பிஸ்கட் சாப்பிட்டிருக்கே, இன்னிக்கு மட்டும் உன் கிட்டே வேணுமான்னு கேக்கறதுக்கு?”
“”இத்தன நாள் சாப்பிடலேன்னா என்னிக்குமே சாப்பிட மாட்டேனா என்ன? இன்னிக்கு எனக்கு பிஸ்கட் வேணும்போல இருக்கு. அந்தத் தட்டை அவ கிட்டே இருந்து எடுத்துண்டு வா”
சங்கரன் உள்ளுக்குள் புழுங்கினான். இன்னிக்கு அம்மாவுக்கு என்னவோ ஆயிடுத்து. சாமி வந்த மாதிரி ஆடறா. வாய்க்கு வந்த மாதிரி, கொஞ்சம்கூட இங்கிதம் தெரியாம, பேசறா. மாலதி என்னப் பத்தி என்ன நினைப்பா?
மாலதிக்கு உள்ளூர சிரிப்பு. பிஸ்கட் தட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“” உங்க அம்மாட்ட கொடுங்கோ. எனக்குப் போறும்”
“”உன்னோட சிபாரிசு எதுவும் எனக்கு வேண்டாம். பிஸ்கட்டை மாத்திரம் கொடுத்தாப் போதும்” என்றாள் சரசுவதி கடுகடுப்பாக.
சங்கரன் சரசுவதியிடம் போய் நின்றான்.
“”அம்மா, என்ன ஆயிடுத்து உனக்கு? இன்னிக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறே புதுசா நம்ம வீட்டுக்கு வரவா, என்ன நினைப்பா என்னப் பத்தியும், உன்னப் பத்தியும் சொல்லு?” என்றான் தாழ்ந்த குரலில்.
“”நாந்தான் சொன்னேனே, யார் என்னப்பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லேன்னு. உன்னப் பத்தி உன் சினேகிதி எதாவது நினைச்சான்னா அதுக்கு நான் பொறுப்பு இல்லே”
சங்கரனுக்கு மாலதியைப் பார்க்கவே பயமாக இருந்தது. வெட்கமாக இருந்தது. தன்னைப் பற்றி நிச்சயம் கேவலமாகத்தான் நினைப்பாள் என்று அவன் மனசுக்குள் ஒரு விதப் பதைபதைப்பு எழுந்து அடங்கியது.
மாலதி இந்த விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். தன்னுடன் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் சங்கரன், ஏதோ வழியில் எதேச்சையாகச் சந்திக்கப் போய், “”இங்கேதான் பக்கத்தில் என் வீடு. வாயேன்” என்று சொல்லப் போக, அம்மா இப்படி அலட்சியமாக நடந்து கொள்வாள் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
இத்தனைக்கும் அம்மாவை ஒரு வேலையும் அவன் செய்யவிடவில்லை. காலையில் காபி போடுவது முதல், சமையல் முதல் கொண்டு சங்கரன்தான் செய்தாக வேண்டும். அப்பா போனது முதலே இதுதான் வாடிக்கை. அம்மா படுக்கையிலிருந்து எழுந்தால், மீண்டும் படுக்கைக்குத்தான் திரும்புவாள். காபி தம்ளரைக் கூட எடுத்துக்கொண்டு போய்ப் போட மாட்டாள். குளித்துவிட்டு வந்தால், மறுபடி படுக்கை. கேட்டால் முட்டி வலிக்கிறது.
இல்லையா?
“”முதுகு பூரா ஒரே வலி. எழுந்திருக்கப் படலே” படுத்த வாக்கில் டீவியை மட்டும் போட்டுக்கொண்டு அத்தனை சீரியல்களையும் ஒன்றுவிடாமல் பார்த்துக் கொண்டே இருப்பாள். ஆபீசிலிருந்து சங்கரன் வந்து காலிங் பெல்லை அழுத்தினால், குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது கதவருகில் தபசாக நின்ற பிறகுதான் வந்து கதவைத் திறப்பாள். திறந்துவிட்டு வந்து மீண்டும் படுக்கை.
காபி தம்ளரைக் கையில் எடுத்துக்கொண்டு, “”இதை எங்கே வைக்கணும், சங்கர்?” என்று கேட்டாள் மாலதி.
“”அப்படியே வச்சுடு. நான் உள்ளே கொண்டு போய்த் தேய்க்கப் போட்டுடறேன். காலைலேதான் பத்துப் பாத்திரம் தேய்க்க வருவாள்” என்றான் சங்கரன்.
“”காபி-பிஸ்கட் எல்லாம் தான் ஆயிடுத்தே கிளம்பலியாமா?” என்றாள் சரசுவதி. அது நிச்சயம் சங்கரனைப் பார்த்துச் சொன்னதல்ல. மாலதியைப் பார்த்து எய்யப்பட்ட அம்பு அது.
“”ஓகே, சங்கர். நான் கிளம்பறேன். நாளக்கி ஆபீஸ்லே பார்ப்போம்”
“ஹம்’ என்ற ஒலி மட்டும் கட்டில் பக்கமிருந்து கேட்டது. சரசுவதிதான். சங்கரன் அவளை ஹால் கதவு வரை கொண்டுவிட்டு, அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். மாலதி தன்னைப் பற்றி என்ன மாதிரி எடை போட்டிருப்பாள் என்று அவனால் ஊகிக்க முடிந்தது.
“”வெரி பொஸஸிவ். வெரி வெரி பொஸஸிவ். ஆம் ஐ ரைட், சங்கர்”
சங்கர் லேசாகத் தலையை அசைத்தான். மாலதி மெல்ல லிப்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
“”நான் நேத்திக்கு உங்க வீட்டுக்கு வந்தே இருக்க வேணாமோன்னு தோணறது. உங்க அம்மா உங்களை ஆட்டிவைக்கறதைப் பாத்தால் பாவமாக இருந்தது. எப்படி சகிச்சுண்டு இருக்கீங்க? ஒரு வார்த்தைகூட எதுத்துப் பேச மாட்டீங்களா?” என்று கேட்டாள் மாலதி, மறுநாள் அவன் காபினுக்குள் லஞ்ச் டயத்தில் நுழைந்த போது.
“”எனக்குப் பழகிப் போச்சு. அம்மாவ எதுத்துப் பேசத் தோணலே. இன்னும் எத்தன நாளைக்கி இருக்கப் போறாளோ?”
“”உங்க அப்பா எப்படி சகிச்சுன்டார்?”
“”நாலுபேர் இருக்கற குடியிருப்புல, சண்டை, ரகளைன்னா ரசாபாசமாப் போயிடுமேன்னு வாயை மூடிண்டு சும்மாவே இருந்துட்டார். ஆரம்பத்திலேருந்தே யாருமே தட்டிக் கேக்கலே. தொலையட்டும்னு நானும் விட்டுட்டேன்.”
“”அங்கதான் நீங்க மிஸ்டேக் பண்ணியிருக்கீங்க. அப்பவே நீங்களோ உங்க அப்பாவோ அம்மாவை நாலு சத்தம் போட்டு அடக்கியிருந்தா, இந்த மாதி உங்கம்மா நடந்துண்டிருக்க மாட்டா. எல்லாம் நீங்க கொடுத்த எடம் பாருங்கோ, இப்போ உங்களாலே எதுவுமே பண்ண முடியலே யூ ஆர் ஹெல்ப்லெஸ்”
“”நவ் இட் ஈஸ் டூ லேட், மாலதி”
“”சப்போஸ்… சப்போஸ், நீங்க கல்யாணம் பண்ணிண்டு உங்க பெண்டாட்டியை வீட்டுக்கு அழைச்சுண்டு போனா, என்ன ஆகும்?”
சங்கரன் மௌனமாக இருந்தான். அவன் பதிலை யோசிப்பது மாதிரி இருந்தது. அவளால தாங்கிக்க முடியாது. அழுது ஆகாத்தியம் பண்ணுவா. வர்றவள் தன்னை கவனிச்சுக்க மாட்டான்னு அவளே தீர்மானம் பண்ணிண்டிருக்கலாம். அவ மேல இருக்கிற அன்பு, பாசம் எல்லாம் என் கிட்டே இருந்து ஒரேயடியா வத்திப் போயிடும்னு அவ மனசிலே நினைச்சுண்டிருக்கலாம். நீ பொஸஸிவ்னு சொன்னது ரொம்ப சிம்பிள் வார்த்தை. ஆனா அதுதான் உண்மை”
“”ஒரு பேச்சுக்குச் சொல்றேன். நாளைக்கே நீங்க உங்க அம்மாவ எதுத்து எதாவது பேசினா, என்ன ஆகும் நான் என் இஷ்டம்போலத்தான் அம்மா இருப்பேன்னு சொன்னா என்ன பண்ணுவா?”
“”இட் வில் பி அ ஷாக் டு ஹெர். அதிர்ந்து போய்டுவா. ஒரு வேளை பிராணனே போனாலும் போயிடும். இல்லேன்னா அதுக்கு ஆப்போஸிட் ரியாக்ஷனும் இருக்கலாம். அதாவது அந்த அதிகாரமான வார்த்தை எங்கிட்டே இருந்துதான் சாட்டை மாதிரி வந்திருக்குன்னு புரிஞ்சிண்டு ஒரேயடியா அடங்கிப் போகவும் செய்யலாம். தட் ஈஸ் ஆல்ஸோ பாஸிபிள்”
“”தென் ட்ரை தட். பார் ஒன்ஸ், ட்ரை தட். என்ன நடக்கறதுன்னு பாருங்க.”
“”அது டூமச்சா இருக்கும்னு எனக்குத் தோண்றது மாலதி. அம்மா பத்து மாசம் வயத்திலே சுமந்து பெத்திருக்கா என்னை”
“”எல்லா அம்மாவும் எல்லாக் குழந்தைகளையும் பத்து மாசமோ, இல்லே ஒண்ணு ரெண்டு வாரம் குறைவாவோ வயத்துலே சுமந்துண்டுதான் பெத்திருக்கா. உங்க அம்மா ஈஸ் நோ எக்ஸப்ஷன். நீங்களே உங்களை எமோஷனலா ப்ளேக் மெயில் பண்ணிக்கறது சுத்த அபத்தம். பீ பிராக்டிகல்”
சங்கரனுக்கு அது சுவாரசியமாக இருந்தது. உறைக்கிற மாதிரியும் இருந்தது.
“”லெட் மி ட்ரை, மாலதி” என்றான். ஒரு போன் கால் வந்து அவர்கள் உரையாடலைத் துண்டித்தது.
மாலதி அங்கிருந்து வெளியேறினாள்.
இப்போதெல்லாம் அம்மா வந்து கதவைத் திறக்கக் காத்திருக்காமல், பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு சாவியைக் கொடுத்திருந்தாலும், தன்னிடமும் ஒரு சாவி வைத்திருந்தான் சங்கரன். காலையில் வீட்டைப் பூட்டிவிட்டுத்தான் அலுவலகம் கிளம்புவான்.
மாலை வீடு திரும்பி, சாவியை நுழைத்து கதவைத் திறந்து உள்ளே போனதும், அம்மாவின் கட்டிலை நோக்கித்தான் அவன் பார்வை சென்றது. ஏஸியைப் போட்டுக்கொண்டு, ஒரு மெலிதான போர்வையைப் போர்த்துக்கொண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.
“”அம்மா, முழிச்சுண்டுதான் இருக்கியா இதோ காபி போட்டு எடுத்துண்டு வரேன்” என்றான் சங்கரன்.
“”வந்துட்டியா என்றாள் அம்மா. ஒரு வாய்க் காபிக்காக ஏழு மணி வரை தொண்டை வரள, வரளக் காத்துண்டிருக்க வேண்டியிருக்கு. ஹும்.. தலை எழுத்து”
“”நேத்திக்கு இங்க வந்தாளே, அவள மாதிரி யாரையாவது கல்யாணம் பண்ணிண்டு வந்தா அவள நிம்மதியா இங்க இருக்க விடுவியா? உனக்கு காபியோ டிபனோ சாப்பாடோ எல்லாம் வேளா வேளைக்கிக் கிடைச்சுடும். நீ நிம்மதியா இருக்கலாம்”
“”நீ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லு. எதுக்கு சுத்தி வளைக்கறே? ஏதோ இப்போ இருக்கற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுத்துடுவே போலருக்கு. நேத்திக்கு இங்க வந்தாளே, அவ பண்ணின உபதேசமோ?”
“”யாரோட உபதேசமும் இல்லே. நான் ஒண்ணும் பச்சக் குழந்தை இல்லே. இந்த ஜூலை வந்தா எனக்கு 35 வயது ஆகறது. உன்னோட வயசுதான் உனக்கு நாள்பூரா நினைப்பு”
அம்மா போர்வையை ஒரு விசிறு விசிறித் தூக்கி அடித்தாள்.
“”கல்யாணம் பண்ணிக்கப் போறே. அவ்வளவுதானே பண்ணிக்கோ. தாராளமா பண்ணிக்கோ. ஆனா ஒரு கண்டிஷன்”
என்ன? என்று கேட்பது போல் அவளைப் பார்த்தான் சங்கரன்.
“”நான் போனப்றம். நான் உசிரோட இருக்கற வரை கல்யாணத்தைப் பத்தி நினைச்சுக் கூடப் பார்க்காதே”
கண்களைப் பெரிதாக உருட்டி, கோபம் முகத்தில் வடிய, மெல்ல அம்மாவை நெருங்கினான் சங்கரன். இதுவரை அவன் அப்படி நடந்துகொண்டதே இல்லை. சரசுவதி சப்த நாடியும் ஒடுங்கி, கைகளைக் கூப்பிக்கொண்டு அவனையே கண்கொட்டாமல் பார்த்தாள். இதுவரை சங்கரன் அவளை அப்படிப் பார்த்ததுமில்லை. பேசியதுமில்லை. நெருங்கி வந்ததுமில்லை.
“”உனக்கு இனிமே பிள்ளையே இல்லேன்னு நினைச்சுக்கோ. உன்னைத் தலை முழுகினா என்ன பண்ணுவே? நான் இருக்கற வரைதானே இப்படி அழிச்சாட்டியம் பண்ணுவே? நான் போய்ட்டேன்னு வச்சுக்கோ. அப்போ என்ன பண்ணுவே?”
“”எதுவும் பண்ணிண்டுடாதேடா, சங்கரா. நீ ஆயுசோடு, ஆரோக்கியமா இரு. உனக்குப் பிடிச்சவளைக் கல்யாணம் பண்ணிண்டு இந்த வீட்டுலே குடுத்தனம் நடத்து. நான் இனிமே உன்னை எதுவும் கேக்க மாட்டேன்”
சங்கரனால் தன் கண்களையும் காதுகளையும் நம்ப முடியவில்லை. அப்படியே ஆணி அடித்த மாதிரி அங்கே நின்றுவிட்டான். ஸோ, மாலதி சொன்ன மாதிரி கொஞ்சம் மிரட்டினால், அடங்கிப் போய்விடுவாள். ஆரம்பத்திலேயே இதைச் செய்யாமல் விட்டது தவறுதான்.
அடுத்து நடந்தது அவன் துளியும் எதிர்பார்க்காதது. அம்மாவின் வாய் வலப் பக்கம் கோணலாக இழுத்துக்கொண்டது. உயரத் தூக்கிய வலது கை பொத்தென்று கீழே தாழ்ந்தது. திடீரென்று அவள் மயக்கம் அடைந்து கண்களை மூடிக்கொண்டதை சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தான். இனி தாமதிக்கக்
கூடாது என்று தீர்மானித்து, ஆம்புலன்ஸூக்குச் சொல்லிவிட்டுக் காத்திருந்தான்.
“”இட் இஸ் எ மைல்ட் ஸ்ட்ரோக். அதான் வலது பக்கம் பாதிக்கப்பட்டிருக்கு. பேச்சு குழறலா இருக்கு. கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும். அப்புறம் மெதுவா பேச்சு சரியாகிடலாம். வலது கைக்கும் காலுக்கும் பிஸியோ தெரபி பண்ணணும். பண்ணினா போகப் போக சரியாயிடும்” என்றார் டாக்டர்.
“”நான் ஒண்ணுமே பண்ணலே, டாக்டர்.. திடீர்னு இப்படி ஆயிடுத்து”
“”நீங்க எதுவும் பண்ண வேண்டாம். ஸ்ட்ரோக் எல்லாம் யாரையும் முன்னாலே கேட்டுட்டு வரதில்லே. நாளைக்கிப் பாத்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்றேன். வீட்டுலே கொஞ்சம் எக்சர்சைஸ், பிஸியோ தெரபி எல்லாம் பண்ணட்டும். பிஸியோ தெரபிஸ்ட்டோட அட்ரஸ் தரேன்” என்று டாக்டர் அமைதியாகச் சொன்னார்.
சங்கரனுக்கு உள்ளூர ஒரு சந்தேகம் உறுத்திக்கொண்டிருந்தது. தான் கடுமையாக மிரட்டியதுதான் அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வரக் காரணமாய் இருக்குமோ என்று. நல்ல வேளை. டாக்டர் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்.
“”வீட்டுலே ஹெல்ப்புக்கு லேடீஸ் யாரானா இருக்காங்களா?”என்று விசாரித்தார் டாக்டர்.
“”நோ” என்றான் சங்கரன்.
“”ஏதாவது அரேஞ்ச் பண்ண முடியுமா ஐ வில் பி கிரேட்புல். மார்னிங் டு ஈவினிங் ஒரு ஆள் பாத்துக்கறதுக்கு இருந்துட்டா பரவாயில்லை. ஐ வில் பே ஹெர்”
டாக்டர் நர்ஸிடம் ஏதோ பேசினார். நர்ஸ் ஒரு நம்பரும் கொடுத்து, கிருஷ்ணவேணி என்ற பெயரையும் சொன்னாள்.
அம்மாவுக்கு உடம்புக்கு வந்த பிறகு, வீட்டின் சூழ்நிலையே மாறிவிட்டது. கிருஷ்ணவேணி காலையில் வந்தால், அம்மாவைக் குளிப்பாட்டுவது, சாப்பிட வைப்பது, பிஸியோதெரபிஸ்ட் வந்தால் கூடவே ஒத்துழைப்பது என்று அவர்கள் பாட்டுக்கு இயந்திரம் மாதிரி இயங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மா பேசினால் கஷ்டப்பட்டுத்தான் புரிந்துகொள்ள முடிந்தது.
பகல் நேரங்களில் கிருஷ்ணவேணி அம்மாவைப் பார்த்துக் கொண்டாள். அம்மா இடது கையால் ஸ்பூனில் தட்டிலிருந்து எடுத்துச் சாப்பிடப் பழகிக் கொண்டிருந்தாள். பேச்சுத்தான் இன்னும் சரியாகவில்லை. இன்னும் நாளாக வேண்டும் என்றார் டாக்டர். அம்மாவைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. தான் அன்று அப்படி அவள் எதிர்பார்க்காமல் எரிந்து விழுந்ததால்தான் அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்குமோ என்று உள்ளூர ஒரு சந்தேகம் உறுத்திக்கொண்டே இருந்தது சங்கரனுக்கு. அதனால் அம்மா மீது இருந்த பரிதாபம், பச்சாத்தாபமாக உருவெடுத்திருந்தது.
சில அம்மாக்களுக்குத் தன் பிள்ளை கல்யாணம் பண்ணிக்கொண்டு அழகாகக் குடித்தனம் செய்வதைப் பார்க்கப் பிடிக்கும். சரசுவதிக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. கல்யாணமானால் பிள்ளை கையைவிட்டுப் போய்விடுவானோ என்ற கவலைதான் அவளை வாட்டிக் கொண்டிருந்திருக்கிறது. மாலதி வந்த அன்றைக்கு அது ஒரு வழியாக வெளிப்பட்டிருக்கிறது.
“”உன்னை கிருஷ்ணவேணி நன்னாப் பாத்துக்கறாளா அம்மா?” என்று படுக்கையில் அம்மாவின் அருகே அமர்ந்துகொண்டு, அவள் கையைத் தடவியபடி கேட்டான் சங்கரன். அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை. “”சொல்லும்மா” என்று வற்புறுத்தினான் சங்கரன்.
அம்மா இடது கையால் அவன் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வடியத் தொடங்கிற்று.
“”பாத்துக்கறா” என்றாள் அம்மா குழறலாக.
“”இனிமே நீ கல்யாணம் பண்ணிக்கணும்னாலும், இந்த மாதிரி ஒருத்தி கட்டிலும் படுக்கையுமா வீட்டுலே இருக்கறப்ப உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பா?” என்று நிறுத்தி நிறுத்தி வார்த்தைகளைக் கடித்துக் கடித்து வெளியிட்டாள்.
“”அதப் பத்தி நான் இப்போ உன்ன ஒண்ணும் கேக்கலியே” என்றான் சங்கரன்.
“”இல்லே. நாலஞ்சு வருஷம் மின்னாலேன்னா, யாராவது உண்ணப் பண்ணிண்டிருப்பான்னு சொல்ல வந்தேன்”
சங்கரனுக்கு அது யதார்த்தமாகப் பட்டது. ஒருவகையில் அம்மா ஜெயித்துவிட்டாள். அவள் இப்படி இருக்கும் வரை இந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் அவனைத் திருமணம் செய்துகொள்ள முன்வரப் போவதில்லை. அம்மாவின் உலகம் அப்படியேதான் எந்தவித மாற்றமும் இன்றி இருக்கப்போகிறது.
மாலதியை மறுநாள் ஆபீசில் சந்திக்கும்போது இதைச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான் சங்கரன். அவனுக்கு இன்னொன்றும் புரிந்தது. இனி அம்மாவால் அவனிடம் பழையபடி கடிந்து கொள்ள முடியாது.
– சாருகேசி (ஜூன் 2015)