வாசல்புறத்துக் கொன்றை மரத்திலிருந்து ஒரு குயில் இனிமையாகப் பாடியது. அதன் குரலொலியைக் கேட்டு கண்ணன் திடுக்கிட்டவன் போல நிமிர்ந்து எழுந்தான். ஒரு புதிய யோசனையுடன் தன்னை அழவிடுவதற்காக ஏதோ முயற்சி செய்கிறான் என்று நினைத்தாள் ராதை. அவளுடைய கருவிழிகளிலிருந்து கம்பீரமான ஒரு ஒளி பிரகாசித்தது.
குழலைப் பற்றிய இடக்கரத்தால் தன் சிகை முடியை சீர்திருத்திக் கொண்டான். அவளிடம் ஒன்றும் சொல்லாமல் புறப்பட்டு விட்டான்.
அப்போதும் ராதை அவன் உண்மையாகவே வெளியே போகப் போகிறான் என்று நம்பவில்லை. இது ஏதோ புது விளையாட்டின் ஆரம்பம் என்றுதான் நினைத்தாள். அவனுடைய குறும்புகள் அவளை வருத்தின. ஆனால் அந்த வேதனையிலும் ஒரு தனி இன்பம் இருந்தது. அந்த இன்பத்திற்கு இணையாக அவளால் வேறெதையும் சொல்ல முடியாது. “கண்ணா” என்று திடுக்கிட்டுக் கூவினாள். அவளுடைய இதயகமலத்தை யாரோ நெருப்பால் கருக்கியது போன்ற வேதனை எழுந்தது. கண்ணன் நிஜமாகவே வெளியே புறப்பட்டுவிட்டான்.
அந்த ஒரு வார்த்தையில், அந்தத் துடிதுடித்த ஹிருதயத்தின் அழைப்பில், கண்ணனது செவிகள் வழியாக அமுதத்தைப் பாய்ச்சும் இயற்கைவாய்ந்த அந்தக் குரலில், அடிபட்ட ஒரு பிடியின் அபய கோலம் கலந்திருந்தது. வேடன் அம்பினால் தாக்குண்டு அலறிவிழும் குயிலின் மரணவேதனைக் குரல் போல ஒலித்தது அவள் குரல்.
திடுக்கிட்டவன் போலத் திரும்பினான் கண்ணன். அவன் முகத்தில் படர்ந்து கொண்டிருந்த இள நகை மங்கி மறைந்தது. இரண்டே எட்டில் ராதையின் அருகை அடைந்தான். ரொம்பக் கனிவோடு, ஜகத்ரக்ஷகனின் கருணாமயமான திருஷ்டியுடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு “ராதா!” என்றான். பதிலில்லை .
“ராதா!”
மறுபடியும் மௌனம்; ஆனால் அவளுடைய நெஞ்சத்தின் குமுறல் சாந்தியடைந்து வருகிறதென்று அறிகுறிகள் தோன்றின முகத்தில், கனிவுடன் அவள் கேசத்துடன் விளையாடிக்கொண்டே கண்ண ன் “அசடு!” என்றான். அவன் திவ்ய வதனத்தில் அந்தக் குறும்புப் புன்னகை மறுபடி படர்ந்தது.
ஒருதரம் பெருமூச்செறிந்து பேசினாள் ராதை. “நான் அசடா யிருந்தால் இருந்துவிட்டுப் போகிறேன். உன்போல அயோக்யனுக்கு என்போன்ற அசடுதானே வேண்டும்?” என்றாள். –
“ராதா!.
“ஏன் விழுங்குகிறாய்? சொல்லேன். நான் நிச்சயமாக உன்மேல் குற்றம் சாட்டுகிறேன்.என்னை உதாசீனம் செய்தாய். ஏதோ மரக்கட் டையை உதைத்துத் தள்ளிவிட்டுப்போவதுபோலப் புறப்பட்டாய்.”
“ராதா, நீ இப்படிப் பேசுவது தர்மமா?”
“தர்மத்தைப் பற்றிப் பேச உனக்கு அதிகாரமிருக்கிறதா? நீ சோரன், துஷ்டன், அயோக்யன். தர்மத்தின் புனிதத்தைக் கெடுக்க முயலாதே.”
கண்ணனின் உள்ளம் பதறியது. மந்தகாசம்மிளிர்ந்த அவனது வதனம் சுருங்கியது. ரொம்பக் குழைவுடன் அவளை இறுகத் தழுவிக் கொண்டு “அழாதே அசடே. இப்போது என்ன நடந்துவிட்டது? அவசர ஜோலியொன்று ஞாபகம் வந்ததால் திடீரென்று புறப் பட்டேன்; அவ்வளவுதான். மறுபடி வரவே மாட்டேனா? உன்னை விட்டுப் பிரிந்து போவதென்றால் எனக்குக் கரும்பு தின்பதுபோல இருக்கிறதென்று எண்ணிவிட்டாயா?” என்றான் நெகிழ்ந்த குரலில்.
“இல்லாவிட்டால் வேப்பங்காய்தான்போ!ஆளைக் கண்டால் ஒரு பேச்சு; அப்புறம்போனால் அவள் யாரோ. உன்னை இன்று நேற்றா அறிவேன்!” என்றாள் ராதை இன்னும் பிணக்குவிடாமல். அவளுடைய வார்த்தைகள் கிருஷ்ணனின் முகத்தில் மறுபடி அந்த மந்தகாசத்தை வரவழைத்தன. ஆனால் அவள் பார்த்துவிடப் போகிறாளே என்று பயந்தவன்போல முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டான்.
“ஏன் பேசமாட்டேன் என்கிறாய்?” ராதை அதிகாரத்துடன் கேட்டாள்.
திடுக்கிட்டுத் திரும்பினான் கிருஷ்ணன். “என்ன சொல்ல வேண்டும்? நீ கேட்க வேண்டியதைக் கேள்” என்றான்.
“எங்கே புறப்பட்டாய்?”
“வீட்டிற்கு.”
“நிஜமாக வீட்டிற்குத்தானா?”
“ஆமாம்!”
“நிஜமாக வீட்டிற்குத்தான்.”
“ஆனால் ஏன் இப்படி ஒன்றும் சொல்லாமல் புறப்பட்டாய்?”
“இதில் ஏதும் விசேஷமிருப்பதாகத் தோன்றவில்லையே. தினம் போலத்தான் புறப்பட்டேன், சரி சரி, உன் சுபாவம்தான் எனக்குத் தெரியுமே. என்னைப் பதற அடிக்கவேண்டும். அதற்காக உன் ஸ்திரீ சாகசத்தையெல்லாம் கையாண்டுவிடுவாய். அப்பா! எப்படி நடுங்கிப் போய்விட்டேன் தெரியுமா? என்னமோ ஏதோவென்று பயந்துவிட்டேன். என் கண்ணல்லவா! அழாதே. எங்கே என்னைப் பார். நிஜமாகவா! ஊம்….ஹூம்….” என்று சொல்லிக்கொண்டே அவளுடைய முகவாய்க்கட்டையைத் தாங்கி முகத்தை நிமிர்த்தினான். அவனது முயற்சியைத் தடுக்கும் சிந்தையற்றவள்போல ராதை முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். ஒரே விநாடி இருவரும் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தார்கள்.
“சரி.எனக்கு ஒரு அவசரவேலையிருக்கிறது” என்று சொல்லி விட்டு எழுந்தான். ராதையும் அவசரமாக சுருட்டி மடக்கிக் கொண்டு எழுந்து நின்றாள். கண்ணன் வேடிக்கையாக அவள் கன்னத்தைக் கரைத்துவிட்டு கலகலவென்று அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளிப்பட்டான். ராதையின் உள்ளத்தில் விவரிக்கவியலாத ஏமாற்றத்தின் ஏக்கம் எழுந்தது.
செங்கோல், சைனியம் முதலிய அதிகாரச் சின்னங் களின்றியே, தங்கள் இதயங்களை அரியாசனமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பாலகிருஷ்ணனைப் படைத்த கர்வத்துடன் திகழ்ந்தது கோகுலம் முழுவதும். அந்த மாலை நேரத்தில் கோகுலத்தின் தோற்றம், உலகம் முழுவதற்கும் தனது பெருமையை எடுத்துக்கூறி களிவெறியுடன் நகைப்பது போலிருந்தது.
இரு கரைகளிலும் அலைமோதும் வெள்ளப் பெருக்குடன் அசைந்தாடி, விரகத்தால் துடிக்கும் ஒருயுவதியின் சோக சங்கீதத்தை உவமிக்கும் ஒயிலுடன் நடந்துகொண்டிருந்தது யமுனை. மரம், செடி கொடிகள், பட்சிகள், பசுமந்தைகள் முதலியவைகூட அந்த கர்வத்தாலும், மகிழ்ச்சியாலும் பெருமிதம் கொண்டு தோன்றின.
கோகுலத்தின் கோபியர்களும், கோபர்களும் தங்களை, விவரிக்க இயலாத இன்பமும் துன்பமும் கலந்த ஒரு போதையில் அமிழ்த்தி, ஆட்சிசெய்த, கண்ணனுடன் சாலோக ஜீவியம் செய்யும் கர்வத்துடன் திரிந்தனர்.
புதுமையாக அலங்காரம் செய்துகொண்டு வீட்டுவாசலில் நின்றாள் ராதை. காலையில் தன்னைத் துடிக்கத் துடிக்க விட்டுச் சென்ற அந்தக் கண்ணனைத் தேடியலைந்தன அவளது விழிகள், வீதியின் வட கோடியில் பக்கத்து வீதி வந்து கலக்கும் சந்தியில் சென்று லயித்தது அவள் பார்வை.
சட்டென்று நிமிர்ந்து நின்றாள். தூரத்தில், அந்த வீதியின் கோடியில் திரும்பிய பசுமந்தையினால் எழுப்பப்பட்ட தூசிப் படலத்தினுள்ளே தெரிந்த ஒரு வடிவத்தைக் கண்டு, பெண்மையின் முழுகாம்பீர்யத்துடன் நிமிர்ந்தாள்.ஆம்; சந்தேகமில்லை. அந்தக் கள்ளன்தான். அந்த சுந்தரவடிவம், தூசிப் படலத்தினுள்ளல்ல, ஒரு மேகத் திரையின் பின்னாலிருந்தாலும் நிச்சயமாகக் கண்டு கொள்ளக் கூடிய அந்த மாயன்தான்.
சட்டென்று வீட்டினுள் பாய்ந்து தனது அறையின் கதவை அடைத்துத் தாளிடவேண்டுமென்ற எண்ண மெழுந்தது ராதையின் மனத்தில். அதையும் மீறி அவனது மனமோகன ரூபசௌந்தர்யத் தைப் பருகும் அவளுடைய ஜீவதாகம் பொங்கி எழுந்தது. நின்ற இடத்தில் தரையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டவள் போல் நின்றாள்.
“அதோ வந்துவிட்டான் ! போய்விடவேண்டும். அந்த அயோக்யனுடன் பேசக்கூடாது. அவனுடைய முகாலோபனம் கூடக் கூடாது,” என்று சொல்லி அவளைத் தூண்டியது மனம். “இல்லை! அவன் என்ன செய்வான்? கோகுலம் முழுவதற்கும் பொதுவான ஐஸ்வர்யமல்லவா அவன்? அவனை என்னுடைய ஏகபோக உரிமையாக்கிக்கொள்ள முயலுவது அநியாயமல்லவா? என் பங்கை அவன் வஞ்சித்து ஏமாற்றுவதில்லையே. பரவாயில்லை. ஒரு முறை கண் நிறைய, இதயம் நிறைய அவனுடைய சுந்தரரூபத்தைப் பார்க்கட்டும்.” என்றது அவள் ஜீவன்.
அந்த மாபெரும் போராட்டத்தில் சிக்கி அதிலிருந்து தப்ப வழியறியாதவள்போலச் சோர்ந்து நின்றாள்.“அதோவந்துவிட்டான்!” என்று உள்ளேயிருந்து கூவியது அவள் இதயம்.
மறுகணம் சடக்கென்று சிவந்து கருத்தது ராதையின் முகம். பொறாமையின் தீச்சலாகை ஒன்று சுருக்கென்று பாய்ந்தது இதயத்தினுள்.
வரும் வழியில் ஒரு வீட்டு வாசலில் நின்றிருந்த ஒருத்தி அவள் தான் முல்கி; வெறும் குழந்தை; எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். பின் புறத்திலிருந்து வந்த கிருஷ்ணன் – அவன் ராதையைத் தேடி வருகிறவனாகவிருந்தால் நேரே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல்தானே வரவேண்டும்! முல்கியின் கேசத்தைப்பற்றியிழுத்தான்!
முல்கி திரும்புகிறாள். சிரிப்பைப் பாரு! அல்பம்! காணாத தைக் கண்டதுபோலத்தான். அந்தத் திருடனுக்குத்தான் என்ன, விவஸ்தை வேண்டாமோ? அவள் கன்னத்தைச் சீண்டிக் கொஞ்சுகிறான்.
“தூ!” என்று வாய்விட்டுச் சொல்லி, உதட்டைக் கோணலாக மடித்து, தலையை இடப்புறமாக உள்ளுக்கு வாங்கி நொடித்தாள் ஒரு முறை. பரபரவென்று வீட்டினுள் நுழைந்தாள். பின்புறக் கொட்டத்திலிருந்து யாரோ”ராதா!” வென்று அழைத்ததைக்கூடச் சட்டை செய்யவில்லை. வில்லிலிருந்து புறப்படும் அம்பைப் போல அறையினுள் பாய்ந்து கதவைத் தாளிட்டாள்.
“ராதா?”
பதிலில்லை .
சற்றுநேரம் மௌனமாக நின்றான் கண்ணன். உள்ளேயிருந்து விசும்பியழும் குரலொலி வந்தது. அவன் முகம் வாடியது. மறுபடி கதவை மெதுவாக விரல்களால் தட்டி “ராதா” என்று அழைத்தான்.
மறுபடியும் பதிலில்லை .
கண்ணனது கவலை கட்டை மீறும் எல்லையையடைந்தது. “ராதா கதவைத் திற. சமத்தல்லவா! இதோ பார், உனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறேன் என்று. இன்று பகலில் ஒரு புது கீதம் பயின்றிருக்கிறேன். என்னுடைய வேணுவில் அதை உனக்கு இசைத்துக் காட்டவேண்டுமென்று ஓடோடியும் வந்தேன். ராதா! ராதா, என் கண்ணல்லவா! நீயும் இப்படி ஊர்ப்பெண்களைப் போல பிடிவாதம் செய்தால்….. ராதா! இந்த கீதத்தை மட்டும் கேட்டுவிடு. பிறகு நீயே என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே நெட்டிவிடு; பரவாயில்லை …..
இடக்கரத்தில் பற்றியிருந்த குழலை ஒரு தடவை பார்த்தான். அவன் கண்கள் கலங்கின.“உம்” என்று பெருமூச்சு விட்டு, மேலும் கீழுமாக அந்தக் கதவின் முன்னால் உலாவினான். அவன் முகமண்ட லத்தில் அதே விஷமக்குறுநகை படர்ந்திருந்தது. “ராதா!” மறுபடி அழைத்தான் பொறுமையற்று.
அதே சமயத்தில் வீதிப் புறத்து மரக்கிளையிலிருந்து குயில் கூவியது. கூண்டினுள் அடைக்கலம் புகுமுன் அன்றைய தினத்தின் கடைசி கீதத்தை எழுப்பியது. அதன் குரலொலியில் – அதன் இசையில் அந்த இரண்டு மனித நெஞ்சங்களின் சோகம் நிறைந்திருந்தது.
ஸ்வப்பனத்திலிருந்து விழித்தெழுபவன் போலத்திரும்பினான் கண்ணன் அதன் இசையைக் கேட்டு. ஒரு கணம் தயங்கி நின்றான். மறுகணம் சரேலென்று புறப்பட்டு வீதியை அடைந்து தெற்கு நோக்கி வேகமாக நடந்தான். அழுகையை நிறுத்தி, தொண்டையி லிருந்து எழுந்தபொறுமலைக் கஷ்டத்துடன் அடக்கிக் கொண்டு உள்புறத்திலிருந்து கதவிடுக்கு வழியாகக் கவனித்தாள் ராதை, முன் பின்னாகச் சுற்றி வரும் கண்ணன் உருவம் வந்து வந்து மறைந்து கொண்டிருந்தது. அதைக் காண அவள் உள்ளம் உருகியது.“ஐயோ! என் கண்ணனை இப்படி வருத்துகிறனே பாவி” என்று பச்சாத் தாபம் எழுந்தது.
அதே சமயம் வாசல் புறத்திலிருந்து குயிலின் இன்னிசை வந்தது அதைக் கேட்டு ராதையும் நிமிர்ந்தாள். கதவின் வெளிப் புறத்தில் கண்ணனது காலசைவின் ஓசையினால் அங்கே நடப்பதையெல்லாம் படத்தில் காண்பது போலக் கண்டு நின்றாள்.
ஐயையோ! எங்கேயோ போகப் புறப்பட்டு விட்டானே என் அன்பன் கோபித்துக் கொண்டு…….!
வாசற்படியைத் தாண்டி விட்டான் கண்ணன். பதறிக் கொண்டு தாளை விலக்கினாள். கதவைத் திறந்து கொண்டு வாசலுக்கு ஓடினாள். அதோ போகிறான். கூப்பிட நினைத்து உதட்டை அசைத்தாள். மறுபடி மௌனமாகப் படியை விட்டு இறங்கி அவனைப்பின் தொடர்ந்தாள்.
தெருவின் தென் கோடியை அடைந்த கண்ணன் வலது புறமாகத் திரும்பினான். எங்கே போகிறான்? யமுனைக் கரைக்கா? இந்நேரத்திலா? அதுவும் ராதையிடம் சொல்லாமல்! யாரைச் சந்திக்க? படபடவென்று அடித்துக் கொண்டது அவள் இதயம்.
அந்த வீதியையும் கடந்து விட்டான். அங்கிருந்து இடப்புறம் திரும் நான் கரத்தில் ஆனால் அவருைவதைக் கண் பார்வையிலிருந்து தவறவிடாமல் பார்க்கும் அளவில், பின்னாலேயே நடந்தாள் ராதை.
வீட்டுக் கதவு கொஞ்சமாகத் திறந்திருக்கிறது. உள்ளே எரியும் குத்துவிளக்கின் வெளிச்சம், கதவின் பின்னால் நடையில் பரவியிருப்பது தூரத்திலிருக்கும் போதே தெரிகிறது. வீட்டின் படியேறி விட்டான். கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழை கிறான். ராதையும் வேகமாக நடந்து வீட்டு வாசலையடைந்தாள். மெதுவாக, சப்தம் செய்யாமல் அடிமேல் அடிவைத்து முன்குறட்டின் மேல் ஏறி நின்றாள். உள்ளே இருந்து ஒரு குரல், தீனமான குரல் வந்தது.
“அம்மா! அவன் வருவானா?”
“கட்டாயமாக வருவான் கண்ணே !”
“சாயங்காலம் கட்டாயம் வருகிறேன்’ என்றான். காலையில் குழலை எடுத்து எனக்காக இசைக்கும்படி கேட்டேன், வேண்டாம். இப்போது என் இதயம் நிறைந்திருக்கிறது. சாயங்காலம் வரும்போது இசைக்கிறேன்’ என்றான். அம்மா! கண்ணன் நல்லவன் தான். அவனுக்கு எல்லாரிடத்திலும் ஒரே மாதிரி இருக்கிறது பிரேமையும் கருணையும் ஆனால் மற்றவர்கள் அப்படியில்லையே. அவன் தனக்கே சொந்தமாக, ஏகதேச உரிமையாக இருக்க வேண்டுமென்கிறார்கள். ராதைதான் ரொம்பப் பிடிவாதம் செய்கிறாள்! இன்னும் பவதி, மதுரா முதலியவர்களும் இருக் கிறார்கள். அவர்களெல்லாமிருக்க என்னை -இந்த சப்பாணியை – அவன் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்?”
“ஊஹும்… அந்தத் திருடன் ரேழியிலா ஒளிந்து கொண்டிருக் கிறான்? ராதை அழகாயிருந்தால் உனக்கென்னடி அவள் அப்படித் தானிருப்பாள். கண்ணன் அவளுக்குத்தான் சொந்தம்..” என்று ராதையின் உள்ளம் ஓட்டமெடுத்தது.
மறுபடி குரல் கேட்கிறது. அந்தச் சப்பாணி பேசுகிறாள். ராதை சிந்தையையடக்கி செவியைப் பிரயாசைக்குள்ளாக்கினாள்.
“ஆம்மா !”
“என்னடி கண்ணே !”
“அவன் வரமாட்டானம்மா! யாருடனாவது வீதியில் தட்டா மாலை ஆடிக்கொண்டிருப்பான். என்னை இந்தக் கட்டிலிலிருந்து இறக்கி விடேன். மெள்ள மெள்ளப் போய் கண் குளிரப் பார்த்து விட்டாவது வருகிறேன்.”
“கொஞ்சம் பொறுமையாயிரு குழந்தை. அவன் கட்டாயம் வருவான். கண்ணனுக்கு யாரிடமும் அலக்ஷியம் கிடையாது. நொண்டியானாலும் சப்பாணியானாலும் எல்லாரும் அவனுக்கு சமம்.” என்று அவளைச் சமாதானம் செய்தாள் தாய்.
“அம்மா! எனக்குக் கூட அவனுடன் கைகோத்து மத்தாட வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால்..”
“ஆனால் என்ன? வேறு விளையாட்டு விளையாடுவோம்” என்று சொல்லிக்கொண்டே கூடத்தில் நுழைந்தான் கண்ணன்.
அவனைக் கண்டவுடன் சப்பாணியின் கண்களில் ஒரு புது ஒளி தோன்றியது, முகம் பூர்ண சந்திரன் போல் ஜ்வலித்தது. கைகளைக் கொட்டிக் கொண்டு “அம்மா! கண்ணன்!” என்று மகிழ்ச்சிப்பெருக்குடன் கூவினாள்.
ராதை குறட்டிலிருந்து முன்னேறினாள். கதவைக் கொஞ்ச மாகத் தள்ளி உள்ளே தலையை நீட்டிக் கவனித்தாள்.
கூடத்தின் ஒரு புறத்தில் போட்டிருந்த ஒரு கட்டிலின் மேல் சப்பாணிப்பெண் அமர்ந்து பக்கத்திலிருந்த சுவற்றின் மேல் சாய்ந்து கொண்டிருக்கிறாள். கண்ணன் அவளருகில் சென்று கட்டிலில் வீற்று, அவளுடைய முகத்தின் அவயவங்களைத் தொட்டுக் கொஞ்சுகிறான். சப்பாணியின் தாயார் எதிரே ஆச்சரியம், மகிழ்ச்சி, பெருமை முதலிய உணர்ச்சிகள் தோன்ற நிற்கிறாள். ராதையின் உள்ளத்தில் சுறுக்கென்ற வேதனை கண்டது,
“என்னடி வேண்டியிருக்கிறது சிரிப்பும் விளையாட்டும் ! மானம் கெட்டவன்! சொரணை கெட்டவன்!” அந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்கவில்லை ராதைக்கு. “தூ!” அங்கிருந்து போய்விட வேண்டுமென்று தோன்றியது. ஆனால் அவளால் அந்த இடத்தை விட்டு நகரவே முடியவில்லை. கால்களை ஆணிகளால் தரையுடன் இறுக்கிவிட்டது போலிருந்தது.
சப்பாணி கொஞ்சுதலாகக் கேட்டாள், “கண்ணா சாயங் காலம் குழலூதுவதாகச் சொன்னாயே”.
ராதையின் எரிச்சல் எல்லை தாண்டியது. நல்லவேளை வாய் விட்டுக் கூவாமல் தன்னை அடக்கிக் கொண்டது தெய்வ கிருபைதான்!
கண்ணன் முகத்தைப் பார்க்க முடியவில்லை அவளால். அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறான். அதோ எடுத்துவிட்டான் குழலை. அப்பா! பிரமாதமாக ஊதிவிடப்போகிறான்! ராதைக்குச் சிரிப்பு வந்தது. வெறுப்புச் சிரிப்பு,
வாசிக்க ஆரம்பித்து விட்டான்.
குறுகுறு என்று வரும் தென்றலில் ஆடும் மாந்தளிரின் சிறு நடுக்கம் போல் ஆரம்பித்தது அந்த இசை. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. முதலில் சிறு ஊற்றாக ஆரம்பித்து, வழியில் பல சிற்றாறுகளினின்றும் ஜலத்தைச் சேகரித்துக் கொண்டு பெருகிவரும் கங்கா நதியைப் போல அதன் கதி வர வர வேகமும் கனமும் அடைந்தது.
ஆஹா! இது என்ன! ராதையின் உள்ளம் ஏன் அப்படித் தககக கவாத நெஞ்சம் எல் வருவது போன்ற ஒரு உணர்ச்சி. ஐயோ! தாங்க முடியவில்லையே இந்த இனிமை!
ஒரு கணம் குமிழிகளை எழுப்பிச் சுழன்று சுழன்று ஓடுகிறது. மறுகணம் சாந்தமாக தனது ஆழத்தின் அளவை நிதானிக்க முடியாத படி அசைந்து நடக்கிறது. மீட்டி விட்டு மெதுவாக நெருடப்பட்ட வீணைத் தந்தியின் நடுக்கம் ஒரு விநாடி. காதளவிழுத்துத் தீண்டிவிடப் பட்ட தனுஸின் டங்காரம் மறு விநாடி |
இனிமை, இனிமை, இனிமை!
அளவுக்குட்பட்ட சக்தியுடன் படைக்கப்பட்ட மனித இந்திரியங்களைச் செயலற்றுஸ்தம்பிக்கச் செய்யும் இனிமை.
மனித உலகத்தின் சோகத்தைக் கற்பனை செய்து காண முயலலாம். ஆனால் இவ்வளவு பெரிய உலகத்தையும், சராசரங் களையும் படைத்த அந்த மகா சக்தியின் சோகத்தைக் கற்பனை செய்து கொள்ளுவது சாத்தியமா? கண்ணன் அப்பொழுது இசைத்த கீதத்தில் அந்த மகத்தான சோகம் நிறைந்திருந்தது. அந்த அதிமானுஷ்ய சோக கீதத்தில் மனித உலகத்தின் புலன்களைத் தீய்த்துக் கறுக்கி விடும் தீவிரவேகம் கொண்ட இனிமை நிறைந் திருந்தது. ராதை மெய்ம்மறந்து விட்டாள். அவளுடைய புலன்கள் செயலற்றன. சிந்தை ஒடுங்கியது. இவ்வளவிற்கும் மேல், தனியாக இயங்கிக் கொண்டிருந்த ஜீவாத்மா, கண்ணனது அந்த தெய்வீக இசையில் இரண்டறக் கலந்தது.
சப்பாணி, அவளுடைய தாய் என்ற பாகுபாடுகளெல்லாம் மறைந்தன!
தன்னிடமிருந்து சிதறிவிழுந்த உயிர்ப்பொறிகளையெல்லாம், ஒன்றொன்றாக மறுபடி தன்னிடம் இழுத்துக் கொள்ளும் காந்தத்தை ஏவுவதுபோலக் கண்ணன் குழலை இசைத்துக் கொண்டேயிருந்தான்.
வேணுகானம் எப்போது, எப்படி நின்றது என்பது ஒன்றும் ராதைக்குத் தெரியாது. கடுமையான மூர்ச்சையில் கிடந்து பிரக்ஞை யடைந்தவள் போல விழித்தாள். அவளது புலன்கள் ரொம்ப மெதுவாக ஜீவசக்தி பெற்றன. திடீரென்று சுறு சுறுப்படைந்து விட்டாள்.
அதோ அந்தச் சப்பாணி பேசுகிறாள். “கண்ணா ! என்னை ஏமாற்றி விட்டாயே!”
“என்ன ஏமாற்றினேன்?”
“எனக்காக வேணுகானம் செய்வதாகச் சொன்னாய். அதற்கு பதிலாக என்னவோ மாயம் செய்துவிட்டாய். நீ குழலை அதரங்களில் பொருத்தியதைக் கண்ணால் கண்டேன். பிறகு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. என்னை யாரோ பலமாக, வேகமாக ஆகர்ஷிப்பது போலவிருந்தது. யார் எங்கே இழுக்கிறார்கள் என்பது ஒன்றுமே தெரியவில்லை. ஒரே ஆனந்த வெள்ளத்தில் மிதந்து மிதந்து எங்கேயோ போனேன். அந்த வெள்ளப்பெருக்கில் மிதப்பது உன் மடியில் தலைசாய்த்துக் கிடப்பது போலவிருந்தது. அப்புறம் அதுவும் தெரியவில்லை. திடீரென்று “நான் இல்லை” இது என்னமாயம் கண்ணா !”
அவன் பதில் பேசாமல் குறுநகை செய்தான்.
மறுபடி கேட்டாள் சப்பாணி. இரு கைகளையும் கூப்பிக் கொண்டு கெஞ்சினாள். “கண்ணா! என்ன செய்தாய்? சொல்ல மாட்டாயா? நான் பிறவிமுதல் சப்பாணி. நடக்கும் இன்பத்தை அறிந்தவளல்ல. ஆனால் நீ முரளியை இசைக்க ஆரம்பித்தவுடன், நான் உன்னுடன் என்னென்னவோ ஆட்டங்களெல்லாம் ஆடினேன். ஓடினேன்; நீ ஒளிந்தாய். தேடினேன். இருவரும் கைகோர்த்துச் சக்கரம் போலச் சுழன்றோம். திடீரென்று என்னை உன்னிடம் இழுத்துக் கொண்டாய். உடனே நான் இல்லை.”
கருணாமயமான திருஷ்டியுடன் அவள் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த அளகச் சுருள்களைக் கோதினான் கண்ணன். தன் குழலிசையினும் இனிய சங்கீதம் போன்ற குரலில் சொன்னான். “குழந்தாய்! நான் ஒரு மாயமும் செய்யவில்லை . என் இதயத்தின் துக்கத்தை சங்கீதமாக இசைத்தேன். காலையில் என் ஜீவன் நிறைந் திருந்தது. மாலையில் ராதையிடன் ஓடினேன். அவள் என்னைப் புறக்கணித்து விட்டாள். வெளியே தள்ளிவிட்டாள் என்னுடைய ஜீவன் இரண்டாக்கப்பட்டது. என்னுடைய மறுபாதி விலகிநின்றது. அந்த துக்கம்தான் குழலில் ஒலித்தது. குழந்தாய்! உனக்குத்தெரியாது. நீங்கள் எல்லோரும் கண்ணனைத் தேடி அலைவதாகக் கருது கிறீர்கள்.ராதையும் அப்படித்தான் எண்ணுகிறாள். “நான் அவனைத் தேடித் துடித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கள்ளன் எங்கெல்லாமோ ஓடித்திரிந்து கொண்டிருக்கிறான். என்னை ஏமாற்றுகிறான்” என்று நினைக்கிறாள். அதனால் அவள் நீங்களெல்லாம் என்னை வருத்துகிறீர்கள். என் இதயத்தை துக்கத்தால், துன்பத்தால் நிறையச் செய்கிறீர்கள். ஆனால் என் ஜீவன் உங்களைத் தேடித்தேடி ஓடி அலைகிறது. அப்போது நான் குழலை இசைக்கிறேன். என் ஜீவன் கூவியழைக்கிறது. அந்தக் குரல்தான் என் முரளிகானம் எந்தவினாடி நீங்கள் அதைக்கேட்கிறீர்களோ…”
வாசல் புறத்தில், ரேழியில் யாரோ விம்மியழுத குரல் கேட்டது. கட்டிலினின்றும் பாய்ந்தான் கண்ணன். அவனைக் கண்டவுடன் ராதை “கண்ணா” வென்று அலறிக்கொண்டு அவன் கரங்களுக்குள் பாய்ந்தாள்.