கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 4,003 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

8. வாழ்த்தியருள அன்புடன் அழைக்கிறோம் | 9. தொண தொணன்னு கூத்து கூத்துனுட்டு | 10. நீலக் கலர்ல கயிறு கட்டிக்கலாமா?

“டேமைத் தாண்டித்தான இந்தப் பஸ்சு போவும். மேட்டூர் டேம் மேட்டூர் டேம்ங்றாங்க. சும்மா இங்க ஜாலியா வந்து ரெண்டு மீனு தின்னுபோட்டு போறதுக்கெல்லாம் நம்மளால முடியுதா ஒன்னா? மீனத் திங்காட்டித்தான் போச்சாது, டேமையாவுது பாத்துக்கறேன்” என்றான் சாமிநாதன். 

“நானும் ரெண்டு தடக்கா தான் ஏர்வாடிக்கு இது வழியா வர்றப்ப டேமைப் பார்த்ததோட சரி” என்றான் சின்னச்சாமி. 

“அப்படின்னா ஏர்வாடியில உன்னோட மாமன் வீட்டுக்கு ரெண்டு தடக்காத்தான் வந்திருக்கியா?” 

“இதுவழியா வர்றதே இல்ல. விசயமங்கலத்துல இருந்து நேரா சேலம். சேலத்துல இருந்து நேராப் போயிடுவேன். அதா மேபக்கம் பாரு. தண்ணி கம்மியாத்தான் தொறந்துட்டிருக்காங்க” பஸ் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தது. 

“இன்னும் எவ்ளோ தூரம் உன் மாமன் ஊருக்கு?” 

“பத்துக் கிலோ மீட்டர் வரும்” என்றான் சின்னச்சாமி.

பஸ் இப்போது மலையின் மீது ஏறிக் கொண்டிருந்தது! மதியத்திற்கும் மேலேதான் சின்னச்சாமி இவனைப் பிடித்தான். 

மதியமாகத்தான் ஏர்வாடியிலிருந்து இவன் மாமன் போன் வந்திருந்தது. “ஊருக்குள்ள சாயந்தரமா கூத்து நடக்குது மாப்ள. சும்மா இருந்தீங்கன்னா வீட்டுக்கு வந்துட்டு நாளைக்கு மதியமா போய்க்கோங்க. அப்புறம் நீங்க ஊருக்கு வந்துகூட இப்ப வருசத்துக்கும் மேல ஆயிப்போச்சு” என்றதும் உடனே இவன் “சரிங்க மாமா” என்று சொல்லி விட்டான். மாமன் உடனே போனை வைத்துவிட்டது! அம்மாவிடம் விசயத்தைச் சொன்னான். 

“என்ன கூத்தாம் இந்த மாசத்துஅ? யேசு சாமி நோம்பி தான் இருக்குது. அதுக்கும் நமக்கும் என்ன கெடக்குது? அதையக் கேட்டியாடா? இல்ல, கறி எச்சா எடுத்து செஞ்சுப் போட்டுத் திங்கறதுக்கு ஆள் இல்லாமக் கூப்பிடறானா? அவன் கூப்பிட்டா என்ன ஏதுன்னு கேட்காமயே சரி மாமான்னு சொல்லிட்டியா! கூப்புட்டுக் கேளு” என்றது! 

“அதை அப்புறம் கேட்டுக்கறேன். நீயும் வர்றியா?” என்றான். 

“அவ்ளோ தூரம் நான் வரலைடா. ரெண்டு புள்ளை வச்சிருக்கான். இன்னம் காரியம் பண்ணாம இருக்கான். காரியம் செய்யுறப்ப தான் வரோணும். பெரிய புளையக் கட்டிக்க மாப்ள! அப்படிம்பான்டா. கஞ்சப் பிசினாறி. அந்தப் புள்ளை கிட்டயும் மாமா மாமான்னு மாப்புள்ள வந்தா கொஞ்சிப் பேசுடின்னு சொல்லி வச்சுருவான். கொஞ்சறான்னு அவ மடியில உழுந்துடாதே! அஞ்சு பீசா உங்களுக்கு செலவு பண்ட மாட்டான். புள்ளைய வெறுங் கழுத்தோட உன்கூடத் தாட்டி உட்டுருவான். அவனெ ஆளு ஆருன்னு நெனச்சே! பார்த்துப் பத்திரமாப் போயிட்டு நாளைக்கே வந்து சேர்ந்துரு” என்று தான் இவன் அம்மா சொன்னது! தனியாக இனி ஏன் அவ்ளோ தூரம் போகாட்டி என்று தான் சாமிநாதன் இருக்கானா என்று எட்டிப் பார்த்தான். ஆள் வீட்டில் தான் கிடந்தான். 

சாமிநாதனை எப்படி வலைக்குள் வீழ்த்திக் கூட்டிச் செல்வது என்ற திட்டமெல்லாம் சின்னச்சாமிக்குத் தெரியும் தான். தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி உட்கார வைத்தான். “மேட்டூர் போயிட்டு நாளைக்கு வந்திடலாம். சீக்கிரம் கிளம்பு” என்றான். 

“மணி மூனு இருக்குமாட்ட, இதுக்கும் மேல அங்க போய் என்ன வேலை?” என்று தான் அவனும் கேட்டான். 

“போறப்ப சொல்றேன் கெளம்பு” என்றான். 

சாமிநாதன் முகம் கைகால் கழுவிப் பேண்ட்டைப் போட்டுக் கொண்டான். 

“ஏர்வாடியில் ராத்திரி மதுரை வீரன் கூத்து நடக்குதாமா. மாமன் சொல்லிக் கூப்புட்டுச்சு” என்றான் சின்னச்சாமி. சாமிநாதனுக்குச் சப்பென்று ஆகிவிட்டது! 

“அந்தக் கருமம் வெடிய வெடிய நடக்கும்டா. அத எவன் போய் வெடிய வெடிய ஒக்காந்து பாத்துட்டு இருக்கறது?” 

“நம்ம வழுவுல நாலு புள்ளைங்க இருக்குதுடா. வந்து நீயும் பார்த்து உனக்கு ஆவுறதைச் சொன்னீன்னா எம்மாமன் காத்தால பேசி முடிச்சுடும்டா. இல்ல பேசவே வேண்டாம்னா கூட்டிட்டே வந்துரு” என்று சின்னச்சாமி திரியில் தீயைப் பற்ற வைத்தான் நினைத்த மாதிரியே பற்றிக் கொண்டது. 

“அப்படியா? அப்ப ஒரே நிமிஷம்” என்றவன் உள் அறைக்குள் சென்று பெட்டியை உருட்டிக் கொண்டிருந்தான். பின்னர் வெளிவந்து “இனி போகலாம்” என்றான். 

பஸ் பொட்டனேரி ஸ்டாப்பில் நின்றது! இருவரும் இறங்கிக் கொண்டார்கள். சின்னச்சாமி இவனை டாஸ்மாக் கடைக்குத்தான் கூட்டிச் சென்றான். அங்கே முன்பு சாக்னா கடை இருந்த இடத்தில் முட்களைப் போட்டு வைத்திருந்தார்கள். சின்னச்சாமி ஒரு ஆப் பாட்டிலை வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டான். “இன்னம் ஒரு கோட்டர் எச்சா வாங்கு” என்றான் சாமிநாதன். அதையும் வாங்கி இவன் பாண்ட் ஜோப்பில் செருகிக் கொண்டான். சிலர் கடை ஓரமாக நின்று டம்ளர் வைத்துக் குடித்து வீசி விட்டுப் போய்க்கொண்டிருந்தார்கள். 

“இங்க வேண்டாம் சாமிநாதா.ஏர்வாடி ரெண்டு கிலோ மீட்டர் தான். போற வழியில காடுக இருக்குது! இருட்டும் கட்டீருச்சுல்ல. போய் ஒரு கெடையில உட்கார்ந்து குடிச்சுப் போட்டுப் போகலாம்” என்றான். அப்படித்தான் செய்தார்கள். காலி வயிறாய் இருந்ததால் இருவருக்குமே போதை கிர்ரென ஏறிக் கொண்டது. சாமிநாதன் தன் பாக்கெட்டிலிருந்த கோட்டரை எடுக்கவில்லை. இருவருமே கொஞ்சம் தள்ளாட்டமாய் எழுந்து ரோட்டுக்கு வந்தார்கள். 

“வர்ற வழியில ஒரு ரயில் ரோட்டைத் தாண்டி வந்தமே. மெயிலுக எல்லாம் இதுல போவுதுகளா? ஒரு ரயில் சத்தத்தையும் காணமே!” 

“உங்க மாமனூட்டுல புள்ளைக இருக்குதா?” 

“இருக்காளுக கறுப்பிக ரெண்டு பேரு. ஊட்டுல கறி ஆக்கி வெச்சிருக்காப்லையான்னு தெரியில. பருப்புச் சோறுதான்னு சொன்னாப்பலைன்னா அவுரு டிவிஎஸ் மொபட்டை அவுரு டிவிஎஸ் மொபட்டைத் தூக்கீட்டுப் பொட்டனேரிக்கு வந்து கறிச்சோறு திங்கலாம்” 

“அந்தப் புள்ளைக கறுப்பா இருக்குதுகளா? நம்ம வழுவுல வேற புள்ளைக இல்லியா?” 

“அட சாமிநாதா, இந்த ஊர்ல செவப்பா புள்ளைங்களே இல்ல. கறுப்பா இருந்தாலும் கலையா இருப்பாளுக. நான் தான் பல்லடத்து மீனாவைக் கட்டிக்கப் போறவனாச்சே! இவுளுகளைக் கல்யாணம் கட்ட முடியாது. மதுரைவீரன் கூத்து பார்க்க வருவாளுக நம்ம புள்ளைக! எவளையாச்சும் கரேட் பண்ணு! கட்டி வெக்கிறதுக்கு எம் மாமன் இருக்காப்ல” 

இருவரும் பேசிக் கொண்டே ஊர் ஆலமரத் திண்டுக்கு வந்துவிட்டார்கள். சனம் பூராவும் தேங்காய் களத்தில் உட்கார்ந்து கூத்து பார்த்துக் கொண்டிருந்தது! 

“பொம்பளப் புள்ளைங்களையே காணம்? பஞ்சம் புடிச்ச ஊருக்குக் கூட்டிட்டு வந்திட்டியா? வெறும் ஆம்பளைக தான் சுத்துறாங்க! பசி என்னைப் பிரிச்செடுக்குது. மொதல்ல உன் மாமன் ஊட்டுக்குக் கூட்டிட்டுப் போ” என்றான் சாமிநாதன். 

“ரோட்டுலயே நேரா நட. அவத்திக்கிப் போயி திரும்பினா மொத வீடு என் மாமன் வீடுதான்” என்று நடந்தவன் பின்னால் சாமிநாதனும் போனான். 

“வா மாப்ளே, கூட சோடியாளோட வந்துட்டீங்களா? கூத்துப் பார்க்கலாம்னு தான் கெளம்பினேன். உம்மட அத்தையும் சின்னவளும் பொம்மையாட்டம் பாக்க அப்பலையாவே போயிட்டாங்க. பெரியவ தான் கூத்தாமா, மதரவீரனாமா, மசராமான்னுட்டு எங்கீம் வரலை நீ போப்பானுட்டா! லேய் பெரியவளே! உன் மாமன் வந்திருக்கான் வா. எல்லாரும் ஒரு வாய் இப்பத்தான் சாப்பிட்டோம். ரெண்டு பேரும் போய் முகம் கழுவீட்டு வங்க. சாயந்தரம் உங்களைக் கூப்பிடறப்ப தான் போய் ஆட்டுக்கறி ஒரு கிலோவும், கோழியில் ஒரு கிலோவும் எடுத்தாந்தேன். கூத்து பார்த்து எத்தனையோ வருசமாயிடிச்சு. நீங்கெல்லாம் பாத்திருக்கவே மாட்டீங்க. உங்க ஊரு பக்கமெல்லாம் ஏது? போன வருசமே இந்த ஊர்ல மேட்டுத் தெருவுல இருக்கிற பையன் ஏற்பாடு பண்ணியிருந்தாப்ல! எனக்கு அந்தன்னைக்கு நைட்டு ஷிப்ட்டு. இன்னிக்கும் நைட்டு வேலைதான்.போறாங்க போன்னு உட்டுட்டேன். கூத்துல வேஷங்கட்டுற ரெண்டு பசங்களை எனக்குப் பழக்கம் மாப்ள. வடிவேலுங்றவன் தான் பொம்மி வேஷம் கட்டுறான்”. 

“வாங்க மாமா, நீ சித்த கம்மண்ட்டுண்டுப்பா. சும்மா தொண தொணன்னு கூத்து கூத்துனுட்டு. நீ சொன்னீன்னு அவிங்க போயி இனி வெடிய வெடியப் பார்த்துட்டு இருக்கப் போறாங்களா? என்ன வாய் போ! உட்டா வீரன் வேஷத்தை நீ கட்டி ஆடப் போடுவியாட்ட இருக்குது! துளி சாராயங் குடிச்சிட்டீன்னா உம்மடக் கூத்து தான் ஊட்டுல பெரும் கூத்து!” என்றபடி முகம் கழுவிக் கொண்டு வந்து இவர்களுக்கு சொம்பில் தண்ணீர் கொடுத்தாள் ராஜி. இவர்கள் வாங்கி ஆளுக்குத் துளி தண்ணீர் குடித்துவிட்டு சேரில் உட்கார்ந்தார்கள். 

“என்ன சத்தத்தவே காணம் மாமா! புள்ள ஒரு பேச்சு பேசுனதுமே கப்புசிப்புனு உக்கோந்துட்டீங்க!” 

“ஒரு கோட்டரைக் குடிச்சுப் போட்டன் மாப்ள. துளி நனைக்காம கறிச்சாறு எப்பிடி வகுத்துல எறங்கும்? அதிசீமா சும்மா பெரியவ பேசிட்டே இருக்கா மாப்ள! சரி, ரெண்டு பேரும் சோறு தின்னு போட்டு 

வாங்க. நானு ரோட்டும் பேர்லயே நின்னுட்டுப் பாத்துட்டிருக்கேன். சட்டுனு வாங்க” என்றவர் சேரில் இருந்து எழுந்து லுங்கியைச் சரியாய்க் கட்டிக் கொண்டு வாசல் இறங்கினார். 

“ராஜி, சாப்பாடு பத்து நிமிசம் கழிச்சு சாப்டுக்கறேனே!” என்று உள் வீட்டைப் பார்த்து சின்னச்சாமி பேசினான். 

“கூத்து பாக்கத்தான் மாமா விசயமங்கலத்துல இருந்து எங்க ஊருக்கு வந்தீங்க? மளார்னு சாப்புட்டுப் போட்டுப் போய் பார்க்க வேண்டீது தான? பின்ன மாமன் புள்ளை இருக்கறா, போயிப் பாத்துட்டு வந்துடலாம்னா வந்தீங்க!” என்றவள் இவர்களுக்கு எதிர்க்கே இருந்த சேரில் வந்து உட்காந்து கொண்டாள். சின்னச்சாமிக்கு அம்மா சொல்லி விட்டது ஞாபகம் வந்தது. 

“ஏன் மாமா, ஒரு போனு பண்டிப் பேசக்கூடாதா? அப்புடி என்ன கெவுறுத்தி?” 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ராஜி. இனிப் பேசுறேன் போதுமா!” 

“ரெண்டு பேருக்குமே கண்ணெல்லாம் செவந்து கெடக்குது! குடிச்சிருக்கிங்ளா? காசை ஏன் தான் இப்புடிப் பாட்டலுக்குக் கொண்டிக் கொண்டி வீசுறீங்கன்னே தெரியல. கொஞ்ச நேரம் திருகலா இருக்கறதுக்கு நூறு நூத்தம்பதுன்னு தூக்கி வீசிடறீங்க! 

சம்பாதிக்கறதுக்குக் தறிக்கிட்ட கால்வலி, குதிவலின்னு நின்னு தான் சம்பாதிக்கறீங்க? செரி எந்திரிங்க. சாப்பாடு போடறேன். சாப்புட்டுப் போட்டு உட்காந்துக்கலாம்” என்று வீட்டினுள் சென்றவள், இலை கொண்டு வந்து ஆசாரத்தில் போட்டாள். இவர்களும் எழுந்து போய் இலை முன்னால் உட்கார்ந்தார்கள். 

“எனக்குக் கொஞ்சமாப் போடு இவுனுக்கு உண்டுனாப் போடு. அப்பலையாவே பசின்னான்” என்றான் சின்னச்சாமி. 

“தென்னமோ ஊமயாட்டமா உட்கார்ந்திருக்காப்லயே! ஒன்னும் பேசவே காணம்?” என்றவள் சோற்றில் குழம்பு ஊற்றினாள். சாமிநாதன் “போதுங்க, அவுனுக்கு ஊத்துங்க” என்றான். இருவரும் சாப்பிட்டு முடித்துக் கை கழுவிக் கொண்டார்கள். ராஜி வெற்றிலைத் தட்டம் கொண்டு வந்து வைத்தாள். 

“எனக்கிது ஆவாதுங்க. இவன் போடுவானோ என்னமோ” என்றான் சாமிநாதன். 

“வெத்தலை போட்டா அவாதுன்னு அதிசியமாச் சொல்றீங்ளே!” என்று சாமிநாதன் முகம் பார்த்து ராஜி சொன்னாள். 

“சின்ன வயசுல இருந்தே பழக்கம் பண்ணிக்கலைங்க. கூத்து பார்க்க வாங்களேன். அதெப்படி விடியும் வரைக்குமா?” 

“கோழி கொத்திப் போடும்னு கொழந்தல இருந்தே மெரட்டிப் போட்டாங்ளா? போச்சாது நான் போடறேன். மாமா நீங்களும் மெல்லுங்க” என்று தானும் போட்டுக் கொண்டு சின்னச்சாமிக்கும் இரண்டு வெற்றிலையில் பாக்கு வைத்துச் சுண்ணாம்பு தடவிக் கொடுத்தாள் சின்னச்சாமி வாங்கி வாயில் போட்டு மென்று “பேஷ் பேஷ்” என்றான். 

“வர்றீங்களா போய்ப் பாக்கலாம்” என்று ராஜியை இழுத்துப் போவதில் குறியாய் இருந்தான் சாமிநாதன். போதையில் சாமிநாதனுக்கு ராஜியே திருப்தியாய் தெரிந்தாள். எப்படியும் கூடவே கூத்துப் பார்க்கச் சித்த நேரம் இழுத்துச் சென்றால் பேசிப் பழகிக் கொள்ளலாம். சின்னசாமி எப்படியும் இவளைக் கட்டப்போவதில்லை என்றே நினைத்தான், “வா போகலாம்” என்று சின்னச்சாமி கூப்பிட்டால் வந்து விடுவாள். ஆனால் அவன் கூப்பிட மாட்டேன் என்கிறான். ஒரு கல்யாணம் பண்ணப் பொண்ணுக்கு என்ன என்ன தகிடுதத்தம் போட வேண்டி இருக்கிறது! 

ஆனால் எதிர்பார்த்த மாதிரியே ராஜியும் வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு இவர்களோடு வந்தாள். “எங்க மாமனைக் காணமே?” என்றான் சின்னச்சாமி. “அது எங்காச்சிம் முன்னாடி போய் உக்காந்து பாத்துட்டு இருக்கும்” என்றாள் ராஜி. கூட்டம் தேங்காய்க் களம் நிரம்ப உட்கார்ந்திருந்தது. கூத்தில் எந்தக் காட்சி நடந்து கொண்டிருந்தது எனத் தெரியவில்லை. வசனம் பேசுவதும் தாளம் தட்டிப் பாடுவதுமாக இருந்தார்கள். கூத்துக் கட்டியவர்கள் சலங்கை கட்டியிருப்பார்கள் போலும். சலங் சலங்கெனச் சத்தமாய் இவன் காதுகளில் விழுந்து கூசியது! ஆலமரத் திண்டின் மீது சிலர் சரக்கடித்துப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். இந்தப் புறம் இவர்கள் தனியே கூத்து கட்டிக் கொண்டிருந்தார்கள். “இத்தன சனம் இருக்குதா உங்கூர்ல” என்றான் சாமிநாதன். “எங்கூர்ல ஏதுங்க இத்தன சனம்? எல்லாரும் கூத்துப் பாக்குறதுக்கு வெளியூர்ல இருந்து வந்திருக்காங்க. எங்கம்மாளும் தங்கச்சியும் கூட்டத்தில எவத்திக்கி உட்கார்ந்துட்டு இருக்காங்கன்னே தெரியல?” 

“தேன் சின்னச்சாமி.. ஊர்ல பிள்ளைங்களக் காட்டறன்னு கூட்டியாந்தே. பூராப் பொம்பளைங்களும் முன்னாடி உட்கார்ந்துட்டு சினிமா பாக்குறாப்ல ஆன்னு வாயைப் பொழந்துட்டு உட்கார்ந்திருக்காங்க. வந்து மாட்டீட்டனாட்ட இருக்குது! போதையே போச்சு எனக்கு’ 

“அதான் பாக்கெட்ல வச்சிருக்கீல்ல. எடுத்துக் குடி” 

“இதை என்னால பாக்க முடியாது மாமா. நான் போய்ப் படுக்கறேன். உனக்கும் தூக்கம் வந்துச்சுன்னா வா” என்றாள் ராஜி. 

“சித்த நேரம் வேடிக்கை பார்த்துடு வர்றேன். தாழ்ப்பாள் போட்டுட்டுத் தூங்கீடாதே ராஜி” என்றான். 

“வந்தீங்கன்னா கதவைத் தள்ளினீங்கன்னா நீக்குற மாதிரி சீவக்கட்டையக் கதவுக்கிட்ட போட்டுட்டுத் தூங்குறேன்” என்று ராஜி வீடு நோக்கி நடந்தாள். 

“நீ கூத்துப் பாக்குறீயா? பாக்கறதுன்னா சேருக கெடக்குது பாரு. போயி உட்கார்ந்து பாரு. நான் அதா ஆலமரத் திண்டுல போய்ச் சித்த நேரம் படுத்திருக்கட்டா?” என்றான் சாமிநாதன். 

“நானெங்கடா தனியாப் போய் உட்கார்ந்து பாக்கிறேன். நட ஆலமரத்தடிக்கே போலாம். எனக்கும் தெளிஞ்சு போச்சு. டம்ளர் இல்லயேடா?’ 

“அங்க திண்டுல உக்காந்திருந்தவங்க குடிச்சுப் போட்டு பிளாஸ்டிக் ட்மளரை எறிஞ்சிருப்பாங்க. நான் எடுத்தாரேன்” என்றவன் நடக்க இருவருமே திண்டுக்கு வந்தார்கள். 

கறுத்த நிறத்தில் மீசையில்லாத ஒருவன் “தென்மதுரை வைகை நதி..தினம் பாடும் குயில் பாட்டு” என்று இம்மி பிசகாமல் பாடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால் டம்ளரில் சரக்கு இருந்தது! சுற்றிலும் நிறையப் பேர் கைதட்டிக் கூடவே பாடி உசுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். வழியில் கிடந்த டம்ளரை சாமிநாதன் குனிந்து எடுத்தான். 

“நண்பரே, எச்சிக் கிளாஸ் நண்பரே அது” பாடலை நிறுத்திவிட்டு மீசை இல்லாத நபர் இவர்களைப் பார்த்துக் குரலிட்டான். 

“கொஞ்சம் தண்ணி இருந்தா ஊத்துங்க. கழுவிட்டுக் குடிச்சாப் போவுது” கீழே நின்றபடி இவர்களிடம் நீட்டினான். 

“உங்க பேருங்க நண்பரே..? சொல்லவே இல்லையே.. என் பேரு யாத்ரா.. சென்னைல இருந்து பாட்டுப் பாட வந்திருக்கேன்” என்றவன் கேனிலிருந்து தண்ணீரை சாமிநாதன் கிளாசில் ஊற்றினான். சாமிநாதன் டம்ளரைச் சுத்தமாய்க் கழுவிக் கீழே ஊற்றினான். 

‘தென்னுங்க பேரே உங்குளுது வித்தியாசமா இருக்குது? 

“என்னது ஆத்திராவா?” என்றான். 

“யாத்ரா”

“ம்.. சரி.. அதான் சரி.. வெறுங்கிளாசைப் புடிச்சுட்டு இருக்கீங்க.. எங்ககிட்ட சரக்கு முடிஞ்சுபோச்சு நண்பரே! உங்க பேரைச் சொல்லுங்க!” 

“சாமிநாதனுங்க.. இவன் சின்னச்சாமிங்க” 

“சரிங்க சாமிநாதன்.. பாட்டு பாடுவீங்களா?’ 

“நான் பாடினா ஊர்ல ஒரு ஆளு தூங்காதுங்க.. நீங்க நல்லாப் பாடறீங்க..பாடுங்க” 

“உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?” 

“எதியோ ஒன்னைப் பாடுங்க” 

“ஜிஞ்சினக்கு ஜனக்கு.. நான் சொல்லித்தாரேன் கணக்கு” 

யாத்ரா பாடலை ஆரம்பிக்கக் கூட்டமும் கூடவே பாடியது. சாமிநாதன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து கோட்டரை எடுத்துப் பாதி ஊற்றித் தண்ணீர் கேனுக்குக் கை நீட்டினான். வேறு ஒரு நண்பர் கேனை எடுத்து நீட்டினார். வாங்கித் தண்ணீர் கலந்து சின்னச்சாமியிடம் நீட்டினான். அவன் வாங்கியதும் மூக்கைப் பிடித்துக் கொண்டு குடித்துவிட்டு டம்ளரை நீட்டினான். டம்ளரை வாங்கிவன் மீதமிருந்த சரக்கை ஊற்றித் தண்ணீர் கலந்து குடித்தான். பாட்டிலையும் டம்ளரையும் தூர வீசியெறிந்தான். 

பாடல் முடிந்ததும் எல்லோரும் டம்ளரை எடுத்துத் தூக்கி மேலே நீட்டினார்கள். “சாமிநாதனின் நலனுக்காக” சொல்லிவிட்டுக் குடித்து முடித்தார்கள். இவர்கள் இருவருக்கும் செவ்வாழைப்பழம் பிய்த்து நீட்டினார்கள். இவர்கள் வாங்கிக் கொண்டார்கள். 

“ஏன் கீழேயே நிற்கறீங்க ரெண்டு பேரும் மேலே வாங்க’ 

“உட்கார்ந்தா குமட்டீட்டு வரும்ங்க. சித்தநேரம் நின்னா ஏப்பம் வரும். அப்பறம் செரியாப் போவும். கூத்துல பாடறதுக்கு வந்தீங்ளா?” 

“ஆமாம் சாமிநாதன். அது வேற கூத்து. இதான் ஒரிஜினல் கூத்து”

“இந்த ஊர்ல விஷ்ணுகிருஷ்ண பகவான்னு ஒருத்தர் இருக்காரு. அவுரு அழைப்பு போட்டாரு. வந்தோம்” 

“பகவான்னா பெரிய கவுண்டருங்ளா?” 

“நீங்க எந்த ஊர்ல இருந்து வர்றீங்க?” புதிதாய்க் கண்களைப் புளிச் புளிச் என மூடித் திறந்து கொண்டிருந்தவர் சிகரெட் புகையை வானம் பார்த்து ஊதியபடி கேட்டார். 

“விசயமங்கலமுங்க. ஈரோட்டுல இருந்து திருப்பூர் போற வழியில இருக்குதுங்க” 

“உங்க ஊர்ல சமணர் கோவில் இருக்கு தெரியுமா?” 

“ஈஸ்வரன் கோயிலு, பெருமா கோயிலுதான்டா இருக்குது சாமிநாதா.சமணர் கோயில்னா..? அது?” என்று சின்னச்சாமி இழுத்தான். 

“நெட்டைக் கோபுரத்தை சொல்றாங்க” 

“அதே தான். உங்க ஊருக்குப் பழைய பேர் என்னன்னு சொல்லட்டா? அரசர்கள ஆண்ட காலத்துல அதுக்குப் பேரு விஜயாபுரி.. மலை ஒன்னு இருக்குமே! சமணப் படுகைக எல்லாம் அந்த மலையில கேப்பாரத்துக் கெடக்குதகளாமா! சரி அது கிடக்கட்டும். என்னை யாருனு நீங்க ரெண்டு பேருமே கேட்கவே இல்லையே. சிகரெட் குடிக்கறீங்ளா?’ 

“ரெண்டு பேருமே குடிக்க மாட்டோம்ங்க” 

“சிகரெட் குடிப்பது கெட்ட பழக்கம். ஆனா புண்பட்ட மனசைப் புகைவிட்டுத் தான் ஆத்தோணும். எதுக்கு இப்ப ரெண்டு பேரும் தண்ணி போட்டீங்க” 

“சும்மா ஜாலிக்குங்க!” 

“கரைட்டா சொல்றீங்க. பை த பை நான் சிவா. 

சிவசுப்பிரமணிங்கற பேர்ல எழுதிட்டு இருக்கிறேன். தாராபுரத்துக்குப் பக்கத்துல தான் என் ஊரு” 

“கதை எழுதறவீங்ளா? நாங்க டீக்கடையில பேப்பர் பாக்குறதோட சரிங்க” 

“அப்புறம் இங்க எப்படி வந்தீங்க? யாரு கூப்பிட்டது?” 

“இவிங்க மாமன் ஊட்டுக்கு வந்தமுங்க” 

“ஓறம்பரைக்கு வந்தவிங்க. அப்பச் சேரி விடுங்க ஜூட்டு” என்றதும் இவர்கள் மேற்கே வந்து திண்டு ஓரமாக வடக்கே சென்று குதித்து ஏறி உட்கார்ந்தார்கள். 

“தூக்கம் வருது சாமிநாதா. ஊடு போயி படுத்துக்கலாமா?” “மணி என்ன ஆச்சுன்னு உன்னோட செல்போன்ல பாரு. எனக்கும் படுத்தா தூக்கம் வந்துரும்” 

“மணி பதினொன்னு ஆகப் போகுது. சரி எறங்கு. போய்ப் படுப்போம். காலையில கிளம்பி ஊருக்குப் போயர்லாம். உன்னைக் கூட்டிட்டு வந்தது வேஸ்டாப் போச்சு. எவளையும் காணம்” 

“போயிச் சாட்டாது உடு. தண்ணி போடறதுக்காவே இந்த ஊருக்கு வந்தமாட்ட ஆயிப்போச்சு. இதை விசயமங்கலத்துலயே பண்ணி இருந்திருக்கலாம். இந்தச் சந்துல தான போனம்?” 

“ஆமாம்டா. இதென்ன ஊடு? கொஞ்சம் எனக்கு மப்பு எச்சாப் போச்சு சாமிநாதா. உன்னையவே குடிக்கச் சொல்லியிருக்கலாம். தலை சுழல் போடுது” என்ற சின்னச்சாமி வீட்டுக் கதவைத் தள்ளினான். இவனும் உள்ளே சென்றான். மஞ்சள் நிற இரவு விளக்கு ஆசாரம் பூராவும் மங்கலான வெளிச்சத்தை விதைத்திருந்தது. சாமிநாதன் உள் ரூமைப் பார்த்தான். உள்ரூமில் சிவப்பு நிற பல்பு எரிந்து கொண்டிருந்தது. 

“நம்புளுக்குன்னே பாய் தலகாணி விரிச்சு வெச்சிருக்கா ராஜி. தண்ணிச் சொம்பு தலைமாட்டுலயே இருக்குது. தண்ணி தெவிச்சா எடுத்துக் குடிச்சுக்கோ” என்று சின்னச்சாமி போய்ப் பாயில் குப்புறப் படுத்தான். உள்ரூம் கதவுக்கருகில் கழுத்துவரை போர்வை போர்த்தி இரண்டு உருவங்கள் படுத்திருந்தன. சாமிநாதன் உள்ரூம் கதவு வரை சென்றான். புஸ்புஸ்சென இரண்டு உருவங்களும் தூக்கத்திலிருந்தன. ஒன்று ராஜி, ஒன்று அவள் தங்கச்சியாக இருக்குமென நினைத்தான். திரும்பி வந்து சின்னச்சாமிக்கு அருகில் படுத்தான். பொருள் பத்திரமாக இருக்கிறதா என்று இடதுபுறப் பாண்ட் பாக்கெட்டை நசுக்கிப் பார்த்துக் கொண்டான். வருவது மாதிரி இருந்த தூக்கம் காணாமல் போயிருந்தது. இருதயம் தடக்தடக்கென அடித்துக் கொண்டிருந்தது. ராஜின்யின் அப்பா அம்மா கூத்து முடிந்து தான் வருவார்கள். என்று யோசித்துக் கொண்டிருந்தான். சின்னச்சாமி “பர்ர்ர்” ரெனக் குறட்ட்டை விட்டான். 

சாமிநாதன் கையால் முட்டி நெகுத்தி விட்டான். குறட்டைச் சப்தம் நின்றது. 

சாமிநாதன் எழுந்து உட்கார்ந்து சொம்பை எடுத்துத் தண்ணீர் குடித்தான். எழுந்து கதவை நீக்கி வெளிவாசல் வந்து சாலையைப் பார்த்தான். எந்த ஆள் நடமாட்டமும் இல்லை. சலங்கைச் சத்தமும் பாட்டுச் சத்தமும் கேட்டன. பாண்ட் ஜிப்பை நீக்கி நிதானமாய் உச்சா போனான். செல்லில் லைட்டைப் போட்டவன் திரும்பி வீட்டினுள் வந்தான். உள்ரூம் கதவுக்கருகில் சென்று தூங்கிக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் ஒளியைக் காட்டி யார் யார் என்று பார்த்தான். ராஜியும் அவள் தங்கையும் தான். தங்கையும் ஜாடையில் அக்காவைப் போலத்தான் இருந்தாள். ரொம்பச் சின்னப் பிள்ளை மாதிரி இருந்தாள். 

பாண்ட் பாக்கெட்டிலிருந்து தாலிக்கயிற்றை எடுத்தான். மேல் சட்டை உள் பாக்கெட்டிலிருந்து மாங்கல்ய பொம்மையை எடுத்துத் தாலிக்கயிற்றில் கோர்த்தான். கோர்த்து முடித்ததும் செல்லை வாயில் கடித்துக் கொண்டே ராஜியின் பின்கழுத்து ஜடை முடியை ஒதுக்கி ஒரு முனையைக் கழுத்தின் பின்பக்கமாய் விட்டு இந்தப்புறமாய் இழுத்தெடுத்தான். ராஜியிடம் ஒரு முனகல் கூட இல்லை. சாமிநாதன் மண்டிபோட்டு அமர்ந்து, பரட்டத்தலச்சி ஆத்தா! என்று மனதில் வேண்டிக்கொண்டே மூன்று முடிச்சு போட்டான். முடிச்சைப் பின்னால் கழுத்துப்புறமாக இழுத்துவிட்டுத் தாலிப் பொம்மையை நெஞ்சில் இருக்குமாறு வைத்து எழுந்து அழகு பார்த்தான். உள் அறைக்குள் செல்லைக் காட்டிப் பார்த்தான். சாமி போட்டோக்களுக்கு முன்னால் திருநீறு தட்டம், சந்தனம், குங்குமம் என்றிருந்தன. ஓரமாய்க் கால்வைத்து வீட்டினுள் சென்றான். விரலில் குங்குமம் எடுத்துக் கொண்டு ஓரமாய் வந்து ராஜியின் தூங்கும் முகத்தைப் பார்த்தான். நெற்றியில் சின்னதாக ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தாள். அதற்கும் மேலாகக் குங்குமம் பூசிவிட்டான். தூங்கிக் கொண்டிருந்த சின்னச்சாமியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவைச் சாத்திக் கொண்டு வெளிவாசலுக்கு வந்தான். 

இனிப் பொட்டனேரிவரை நடந்து போக வேண்டியது தான். மெதுவாக நடந்து கூத்து நடந்து கொண்டிருந்த இடத்துக்கு வந்தான். கூட்டமே கூத்தில் தான் பார்வையை வைத்திருந்தது. இவன் தார் ரோட்டில் நடந்தான். நேர் சேலம் பஸ் ஏறி, சேலத்திலிருந்து ஈரோடு போய் விட வேண்டும் என்று யோசித்தபடி நடந்தான். போதை சுத்தமாய்ப் போயிருந்தது. 

காலையில் பதினொரு மணி வாக்கில்தான் சின்னச்சாமியும் அவன் மாமனும் இன்னொரு பெரிய ஆளும் இவன் வீட்டு வாசலுக்கு வந்தார்கள்.”டேய் சாமிநாதா!” சின்னச்சாமி தான் குரல் கொடுத்தான். “இருடா வர்றேன்” என்று வெளிவாசலுக்கு வந்தவன், “என் பொண்டாட்டியக் கூட்டியாராம சும்மா நீங்க மட்டும் வந்திருக்கீங்க?” என்றான். நாலு அறைகள் சப்சப்பென விழுந்தன. வந்திருந்த பெரிய ஆள் தான் அப்பினார். 

“நீயெல்லாம் மனுசனாடா? உண்ட வீட்டுக்குத் துரோகம் பண்ற நாய்டா நீ! இந்தாடா உன்னோட தாலி. காத்தால புள்ளை வெளக்கி கழுவப் போறப்ப என்னடா கழுத்துல கனமா தொங்குதேன்னு பாத்திருக்குது. திருட்டு நாயி. பொண்டாட்டிய கூட்டிட்டு வரலியான்னு கேட்கறியாடா?” என்று சின்னச்சாமியின் மாமா ஓங்கி ஒரு மிதி மிதித்தார்.”போய் சாவுடா!” சரோஜா அக்கா தப்புறு குப்புறென ஓடிவந்து வாசலில் கிடந்தவனைத் தூக்கி நிறுத்தியது. எல்லா நாயத்தையும் சின்னச்சாமிதான் அக்காவுக்குச் சொன்னான். 

“அவனிந்த மூனு மாசமாவே லூசாட்டத் திரியறானுங்க. இத்தோட உட்டுருங்க. இனி என்ன பண்றது? பண்ணிப்போட்டான். உங்க கால்ல வேணாலும் உழறேன். உடுங்க” என்றது. “இவனெல்லாம் ஒரு ஆளு.. த்தூ” எனத் துப்பிவிட்டுச் சின்னச்சாமி வீட்டுக்கு நடையைக் கட்டினார்கள். சரோஜா அக்கா வாசலில் கிடந்த தாலிக்கயிற்றை எடுத்துக் கொண்டு இவனை வீட்டினுள் கூட்டிப் போனது. “என்னடா இப்பிடி எல்லார்கிட்டயும் மிதி தின்னுட்டே சாவுறே!” என்று அழுதது.

– தொடரும்…

– எட்றா வண்டியெ, முதற் பதிப்பு: 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *