கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 4,062 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

3. அடுத்த வாரமே வச்சுக்கலாமா! | 4. அதென்னமோ நெசந்தானுங்க சாமி | 5. நான் யார் மேலயும் ஆசைப்படலே

“டாக்டர் கிட்டனாச்சும் சித்த போயி ஒரு ஊசியப் போட்டுட்டு வந்து உழுந்து கெடக்கலாம்ல? துளி கஞ்சி வெச்சுத் தரட்டுமா” சரோஜா தான் சாமிநாதனின் அப்பன் சுப்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தது. சுப்பனுக்கு நேற்றுக் காலையிலிருந்தே காய்ச்சல் அடித்துக் கொண்டுதான் இருந்தது. மாரன் தான் நேற்று மாலையில் விசயமங்கலம் போனவன் இவனுக்கு ஒரு கோட்டர் வாங்கிவந்து கொடுத்து, “மெட்டைக் கழட்டி அப்புடியே தண்ணி கலக்காம ஊத்திக்க. காச்சகீச்ச எல்லாம் காத்தாலைக்குள்ள பறந்தோடிப் போவும்” என்று சொல்லிப் போய்விட்டான். ஆனான் காய்ச்சல் போனபாடில்லை. இப்போது கை, கால் மூட்டுகளில் வலி பிடித்துக் கொண்டது. 

“உம்மட பையன் எங்கதான் போனான்? ரெண்டு நாளாவே ஆளு கண்ணுக்குத் தட்டுப்படலியே! அவனோட செல்லுக்கும் எம்பட போன்ல இருந்து அடிச்சுப் பார்த்தேன். சுவிட்ச் ஆப் அப்புடின்னே சொல்லுது.தறிப்பட்டறையிலயே கெடக்கறானா?” 

“எஞ்சாமியத்தான் ரெண்டு நாளா ஆளையே காணலியே.. இருந்தான்னாத்தான் இப்புடி என்னைப் படுக்க உட்டுருப்பானா? சைக்கிள்ல மூட்டையக் கட்டுறாப்ல கட்டிக் கொண்டி கவருமெண்டு ஆசுபத்திரில சேத்தீருப்பானே! எங்க போறேன்னு கூட ஒரு வார்த்தை சொல்லீட்டுப் போவலை பாத்துக்கோ. உம்பொட பையன் எங்கெ?கட்டிலில் கிடந்த சுப்பன் சரோஜாவைப் பார்த்துக் கேட்டான். “க்கும்.. நல்ல ஆளுப் பார்த்துக் கேட்டேபோ! 

அவனையெல்லாம் புடிக்க முடியாது. சரி, கஞ்சி வெச்சுட்டு வரட்டுமா?” 

“அதெல்லாம் வேண்டாம். மத்தியானத்துக்குப் பாத்துக்கலாம். போயி ஒரு ஊசியக் குத்தீட்டு வந்துட்டாத்தான் ஆவுமாட்ட இருக்குது” 

“காசு வெச்சிருக்கியா.. கவுண்டருகிட்ட தான் போயி வாங்கீட்டு வரோணுமா? இப்ப அவுரு ஊட்டுல இருக்காரோ என்னுமோ! சரி ஆனாட்டிப் போச்சாது. நான் நூறு ரூவா தாரேன் மெதுவா ஒரமாப் போயிட்டு ஓரமா வந்துடறியா?” 

“மூட்டு வலிக்குது சாமி நானு எப்புடிப் போவட்டும்?” 

“அதுக்குனு நானென்ன உன்னத் தூக்கீட்டா போவ முடியும். இந்தா காசு புடி. கவுண்டருகிட்ட காசு வாங்கனீன்னா எம்படகிட்ட கொண்டாந்து குடுத்துப் போடோணுமாமா?” என்ற சரோஜா 

மடிச்சுருக்குப் பையை அவிழ்த்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றைச் சுப்பனின் கையில் திணித்தாள். 

“பாம்படிக்கறதுக்கோ என்னமோ மூலையில் ஒரு தடி கவக் கோலாட்ட சாத்தி வெச்சிருக்குது பாரு. அதை எடுத்து ஊனீட்டுப் போயிட்டு வந்து சேரு. பன்னெண்டு மணிக்காட்ட நானு கஞ்சி வெச்சுக் கொண்டாறேன். கெழக்கால கவுண்டரு காட்டுல கடலக்கா புடுங்கறாங்ளாமா. சின்னம்மிணியக்கா கூப்புட்டுப் போட்டு போவுது. சித்த நானும் போயி கூட நின்னு புடுங்கீட்டு வர்றேன்” என்று சரோஜா சுப்பன் வீட்டை விட்டு வெளியே சென்றது. சரோஜா போன பிறகு சுப்பன் சிரமப்பட்டுக் கட்டிலில் இருந்து எழுந்து தரையில் கால் வைத்தான். பல்லை வெறுவிக் கொண்டே எழுந்தவன் வலித்தால் வலிக்கட்டுமென்று வீட்டினுள் அங்கும் இங்கும் நடைபோட்டான். ஒரே முடிவில் மூலையில் நின்றிருந்த தடியை எடுத்துக் கொண்டு நடப்பது கொஞ்சம் சுலபமாக இருந்தது. இருந்தும் வெட்கமாகவும் இருந்தது. 

பெட்டிக்கடைக்குள்ளிருந்து மாதேஸ்வரன் சத்தம் போட்டான். “என்றா ஆச்சு சுப்பா?” சுப்பன் நின்று “ஆச்சு ஆச்சு.. உம்பொட வண்டீல சித்த ஆசுபத்திரி வரைக்கிம் கொண்டாந்து உட்டுட்டு வந்துடேன் போச்சாது! சித்த சாமி சாமியா இருப்பே. காய்ச்ச வந்து ரெண்டு நாளா மனுசனைச் சீரழிக்குது” என்றான். 

“அப்புறம் எம்பட கடைய யாரு பார்த்துக்கறது? காத்தால புடிச்சு ரெண்டு கடலை உருண்டை வித்துட்டு உட்கோர்ந்துட்டு இருக்கேன்டா. யாராச்சிம் வந்தா கூட உட்டுப்போட்டு போயிர்லாம். இந்த சிகாமணி தெனமும் இங்கயே கெடப்பான். இன்னிக்குனு பார்த்து ஆளையே காணம். சரி, நீ பொடி நடையா போயிட்டே இரு. யாராச்சிம் வந்தாங்கன்னா, கடையச் சித்த பர்த்துக்கச் சொல்லிப் போட்டு வண்டியெ எடுத்தாரேன். உம்பட பையன் எங்கெ போனான் சுப்பா?” 

“அவன ஆளையிங்காணம் அம்பையுங்காணம்” என்று சொல்லி விட்டுச் சுப்பன் நடக்க ஆரம்பித்தான். பெரிய கனமான கால்களைத் தூக்கித் தூக்கி வைத்துப் போவது மாதிரி இருந்தது. சுப்பனுக்குக் கால் விரல்களும் கை விரல்களும் விண்விண்ணென வலித்ததுக் 

கொண்டிருந்தன. சிரமப்பட்டு வின் டெக்ஸ்வரை ரோட்டைக் கடந்து வந்து மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். சித்த நேரம் பொறுத்துப் போகலாம் என்று தான் இருந்தது. அதிசயமாய் “கெஸ் கெஸ்” என மூச்சு வாங்கிற்று. கழுத்தைப் புறங்கையால் தொட்டு பார்த்துக் கொண்டவனுக்குச் சூடு இருந்ததா இல்லையா? என்று கூடத் தெரியவில்லை. 

வின் டெக்ஸ் மரநிழலில் போண்டாவும் டீயும் போடும் தள்ளு வண்டிக்காரணை இன்னும் காணோம். பத்து மணி வாக்கில் தான் வருவான். ரோட்டில் போகும் வண்டி எதையாவது நிறுத்தலாம் என்றாலும், தடி ஊன்றி நின்று கொண்டிருக்கும்போது யாரும் நிறுத்தமாட்டார்கள். 

“தேஞ் சுப்பா இங்க மரத்தடியில அக்கடான்னு நீட்டி உட்கார்ந்துட்டே?” கிழக்கே இருந்து எக்ஸெல் சூப்பரில் வந்த சைக்கிள் கடை முருகன் தான் இவனைக் கண்டு வண்டியை நிப்பாட்டி விசாரித்தான். 

“யாராச்சிம் வருவாங்களான்னு தான் பார்த்துட்டேக்கோந்துட்டு இருந்தனுங்கொ சாமி. நல்லவேளை நீங்க வந்தீங்க. எங்கெ போயிட்டு இப்புடி கெழக்கெ இருந்து வர்றீங் சாமி” என்றவன் எழுந்து எக்ஸெல் அருகில் வந்தான். 

“சரளைகிட்ட ஒரு வண்டி பஞ்சர்னு போனு பண்டி சொன்னாங்க. காத்தால கடைய நீக்கிட்டு மொதல் பஞ்சரை வேண்டாம்னு ஏஞ்சொல்லாட்டினு போயிட்டு ஒட்டிட்டு வந்தேன். உனக்கென்ன சிக்குன்குனியாவா? அந்தத் தடி எதுக்கு கெரவத்தெ ரோட்டுல போறவங்க ஆராச்சியும் இடிக்கறதுக்கா? அதெல்லாம் பொன்னம்பலம் டாக்டர்கிட்ட போய் ஊசி குத்தினாப் போதும் காய்ச்சல் போன எடம் தெரியாமப் போயிடும். கெரவத்த வீசி எறிஞ்சுட்டு உட்காரு” என்று முருகன் சொல்லச் சுப்பன் தடியை மரத்தடிக்கு வீசிவிட்டு ஏறி உட்கார்ந்தான். “தாண்டுக்கால் போட்டே உட்கார்ந்துட்டியா? போலாமா?” 

“போலாம் உடுங்க சாமி” என்றதும் முருகன் வண்டியைக் கிளப்பினான். விசயமங்கலம் பஸ் ஸ்டாப் தாண்டி நேரே 

பொன்னம்பலம் மருத்துவமனை முன்பு கொண்டு சென்று நிறுத்தினான். “சேரி சாமி, நீங்க கடைக்கு உடுங்க. நான் ஊசி குத்தீட்டு வர்றேன்” என்று சுப்பன் நேரே மருத்துவமனைக்குள் நுழைந்தான். முகப்பு அறையில் நின்று கொண்டிருந்த பெண் “ஒடம்புக்கு என்ன?” என்றாள். 

“காய்ச்சல் தான் அம்மிணி. மூட்டு மூட்டா வலிக்குது” என்றவன் கையில் டோக்கன் ஒன்றைக் கொடுத்துச் சேரில் போய் உட்காரச் சொன்னாள்

“இதைய வெச்சுட்டு நானு என்ன பண்ட?” 

“டோக்கனுங்கய்யா.. எட்டாம் நெம்பரு.மூனு பேரு டாக்டரைப் பார்த்துட்டுப் போயிட்டாங்க. இன்னும் நாலு பேரு பார்த்த பின்னாடி நீங்க போயி டாக்டரைப் பார்க்கலாம். டாக்டரைப் பார்க்குறப்ப இந்த டோக்கனைக் குடுத்துருங்க” 

“பின்ன இப்புடி வெவரமா சொன்னாத்தானாயா தெரியும். நானும் இதென்னடா இத்தினியூண்டு காயிதத்தைக் 

குடுக்கறாங்களேன்னு பாக்கறேன்” என்று பேசிக் கொண்டே போய் சேரில் உட்கார்ந்தான். 

சேரில் உட்கார்ந்திருவர்கள் எல்லோரும் அறையின் மூலையில் இருந்த டிவியில் கவனமாய் இருந்தார்கள். டிவியில் விஜய் ஜெனிலியாவோடு பாட்டுப் பாடி ஆடிக்கொண்டு இருந்தான். ஜெனிலியா ஐஸ்கிரீமையே இதுவரை காங்காதவள் மாதிரி வெதுப்பிக் கொண்டிருந்தாள். துளி ஐஸ்கிரீம் அவள் மூக்கில் இருந்ததை விஜய் விரல் நீட்டி முகம் சுளித்துக் காண்பித்தான். டாக்டர் அறைக்குள்ளிருந்து ஒரு பெண் வெளியேறிப் போனதும், கதவுக்கு அருகாமையிலேயே நின்று கொண்டிருந்த இன்னொரு பெண் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனது. கதவு அது பாட்டுக்கு மெதுவாய் நகர்ந்து வந்து சாத்திக் கொண்டது. முகப்பு அறை முழுவதும் பினாயில் வாசம் அடித்துக் கொண்டிருந்தது. 

இந்தக் காய்ச்சல் இப்போது கொஞ்சம் விசயமங்கலத்தினுள் குறைந்து போய்விட்டது தான். விசயமங்கலம் சுற்றுப் புறங்களில் ஒரு மாதமாக வேகமாகப் பரவி வந்ததிலிருந்து எல்லா டாக்டர்களுக்கும் கூட்டமோ கூட்டம் தான். டாக்டர்க்ள நோயாளிகளைப் பார்த்து முடித்துவிட்டு வீடு செல்கையில் இரவு பதினொன்றாகிக் கொண்டிருந்தது. டிவியில் இப்போது சிம்பு ஜோதிகாவுடன் குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தான். நோயாளிகள் டிவிப் பொட்டியையே ஆவென வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். டோக்கன் கொடுத்த பெண்ணும் டிவியையே பார்த்துக் கொண்டிருந்தது. 

டாக்டர் ஒவ்வொரு நோயாளியையும் சீக்கிரம் சீக்கிரம் தாட்டி அனுப்பிக் கொண்டிருந்தார். நோயாளிகள் உள்ளே நுழைந்ததும் காய்ச்சல் என்று சொன்னால் போதும். எதுவும் பேசாமல் மிஷின் மாதிரி ஊசியை எடுத்துப் புட்டத்தில் ஏற்றித் தாட்டி அனுப்பிக் கொண்டிருந்தார். 

“டோக்கன் நெம்பர் எட்டு யாரு? எந்திரிச்சு டாக்டரைப் பார்க்கப் போங்க” என்று அந்தப் பெண் சத்தமிட்டது. அந்தச் சத்தத்தை யாரும் மதித்ததாய் தெரியவில்லை. சிம்புவும் ஜோதிகாவும் புட்டங்களை படுவிரைவாக அசைத்து அசைத்துக் குத்தாட்டத்தில் கவனமாய் இருந்தார்கள். சுப்பன் எழுந்து போய்க் கதவுக்கு அருகாமையில் நின்று கொண்டு அந்தப் பெண்ணின் பக்கமாய்த் திரும்பினான். 

“த்தா.. அம்மிணி.. இங்க சித்த வந்து கதவைக் கொஞ்சம் தள்ளிப் புடி அம்மிணி. என்ன கதவு இது? ஆளைத் திருப்பிக் கொண்டாந்து தள்ளி உட்டுருமாட்ட” என்றவன் தலைக்குக் கட்டியிருந்த உருமாலைகக் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் தோளில் போட்டுக் கொண்டான். அந்தப் பெண் ஓடிவந்து கதவை உள்புறமாய்த் தள்ளிப் பிடித்து, “போங்க பெரியவரே!” என்றதும் சுப்பன் உள்ளே சென்றான். கதவைப் பிடித்திருந்த கையை விட்டுவிட்டு டிவியைப் பார்த்தது. 

“கும்புடறனுங்கொ டாக்டர் சாமி” என்று சுப்பன் டாக்டருக்கு ஒரு கும்பிடு வைத்தான். 

“கும்பிடு இருக்கட்டும். நான் என்ன பிசாசா! அங்கயே நின்னுட்டே? இப்புடிக் கிட்ட வந்து சேர்ல உட்காரு. ஒடம்புக்கு என்ன பண்ணுது?” 

“இருங்கொ சாமி உக்கோந்துட்டு சொல்றேன். நானு என்ன பண்டுவனுங்க சாமி? காலு கையெல்லாம் வலி உசுரு போற மாதிரி இருக்குதுங்கோ. ஊர்ல அமுட்டு சனத்துக்கும் இந்த ஒரு மாசமா காச்சத்தானுங்க. என்னைய என்ன பண்டிப் போடுதுன்னு அவிககிட்ட எல்லாம் ஜம்பம் பேசீட்டு இருந்தனுங்க. பார்த்தா எனக்கும் அதே காச்சலாட்ட தானுங்க சாமீ தெரியுது” 

“உன்னட ஊரு எது?‘ 

“மூங்கில்பளையந்தானுங்க.. சாமீ’ 

“வாயில என்ன வெத்தல பாக்கா? டேபிள் பூராவும் எச்சை துப்பீட்டே பேசுறியே!’ 

“ஆமாங்க சாமி. இதொன்னு போடலீன்னா எம்பட பொழப்பே ஓடமாட்டீங்குதுங்ளே!’ 

“வெத்தல போடறது எல்லாம் நல்ல பழக்கம் தான். 

பொகையிலை தான் போடக்கூடாது! என்ன வேலை?” என்று கேட்டவர் சிரின்ஜில் மருந்தை ஏற்றிக் கொண்டு சுப்பனிடம் வந்தார். 

“காட்டு வேலைதானுங்க சாமி. உங்களையாட்டமே 

படிச்சிருந்தா நானும் ஊசியப் போட்டுட்டு இருக்கலாம். எங்க காலத்துல 

எல்லாம் யாருங் சாமி படிக்க வெச்சாங்க?” 

“நீ மட்டும் தான் வந்தியா? கூட யாராச்சியும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? கையில போட்டுக்கறியா? இடுப்புல போட்டுக்கறியா?” 

“எம்பட பையன் இருக்கானுங்க. மூனு நாளா ஆளவே காணங்க. ஊசியக் கையிலயே போட்டு உட்டுருங்க சாமி. போன வாட்டி ஒருக்கா உங்ககிட்ட ஊசி போட்டுட்டுப் போயி வெந்தண்ணியில வேட்டித் துணிய நனைச்சு மூனு நாள் ஒத்தடம் குடுத்துட்டு கெடந்தனுங்க. ஆழமாக் குத்தி உட்டுட்டீங்க?” 

“அதெல்லாம் ஒன்னும் பண்டாது. ஊசின்னா உனக்கு இந்த வயசுலயும் பயமா? நடுங்கறியே?” என்றவர் சுப்பன் கையைப் பிடித்து வாகு பார்த்துக் குத்தி மருந்தை ஏற்றிவிட்டுச் சென்று காகிதத்தில் மாத்திரை எழுதி இவனிடம் நீட்டினார். 

“இதென்னுங் சாமி மாத்திரை குடுக்காம வெறுங்காயிதத்தை நீட்டறீங்கோ?” 

“காயிதத்துல தான் என்ன மாத்திரை எத்தனை வேலைக்கு திங்கணும்ன்னு எழுதியிருக்கேன். முன்னாடி மருந்துக் கடையில வாங்கிக்க ரெண்டு நாளைக்கு மூனு வேலைக்கும் ரெவ்வெண்டு மாத்திரை தின்னீன்னாத்தான் காய்ச்சல் சுத்தமா செரியாகும். வெளிய நின்னுட்டு இருந்துச்சுல்ல, போறப்ப அந்த பொண்ணைப் பார்த்துட்டு போ” 

“பேண்ட்டு போட்டுட்டு நின்னுட்டு இருந்துச்சுங்ளே.. அந்த புள்ளையவா?‘ 

“ஆமாம், இப்ப உனக்கு ஊசி போட்டு உட்டேன்ல அதுக்கு ஐம்பது ரூபா அந்தப் பொண்ணுகிட்ட குடுத்துட்டுப் போ” 

“எம்படகிட்ட ஏதுங்க காசு? நானே நடக்க மாட்டாம நடந்து வந்து சாமிகிட்ட ஊசி ஒன்னு போட்டுட்டு போலாம்னு வந்தேன். எம்பட பையன் சாமிநாதன் ஊடு வந்துட்டானுங்கன்னா உங்ககிட்டயே வந்து சுப்பன் போட்ட ஊசிக்கு அம்பது ரூவான்னு குடுத்துவானுங்க” 

“சரி சரி, நீ போ” என்றவர் பெல்லை அழுத்தினார். அந்தப் பெண் கதவைத் திறந்தது. சுப்பன் வெளியே வந்தான். டாக்டர் கொடுத்த மருந்துச் சீட்டை வேட்டி மடிப்பில் சுருட்டி வைத்துக் கொண்டே மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான். கால்கள் நேராக டாஸ்மாக் கடை நோக்கித்தான் சென்றன. “எழுவது ரூவா பாட்டலு ஒன்னு குடுங்க” என்று கேட்டு வாங்கிக் கடை முன்னேயே அரை பாட்டிலை அண்ணாந்து ஊற்றி வாயைத் துடைத்துக் கொண்டு பாட்டிலை மூடி டவுசர் ஜோப்பில் போட்டுக் கொண்டு கிழக்கே ரோட்டோரமாக நடந்தான். 

டாக்டரிடம் ஊசி போட்டுக் கொண்டதுமே உடம்பு சூடு காணாமல் போய்விட்டதை உணர்ந்தான். அதனால தான் சனம் இந்த டாக்டர்கிட்டயே போவாங்களாட்ட இருக்குது என்று நினைத்துக் கொண்டான். அரசாங்க ஆசுபத்திரிக்கு இன்னமும் அரை பர்லாங் நடந்து போக வேண்டும். அங்கேயே சைக்கிள் கடைக்காரரை வண்டியை உடச் சொல்லி இருந்தால் நேரே கொண்டி இறக்கிவிட்டிருப்பார். இந்த நேரத்திக்கு மாத்திரைகளையும் கையில் கொடுத்து தாட்டி இருந்திருப்பார்கள் என்று நினைத்தபடி சுப்பன் சைக்கிள் ஸ்டேண்டைத் தாண்டி ஈஸ்வரன் கோவில் வந்தான். மூத்திரம் வேறு முட்டிக் கொண்டு நின்றது.  

ஈஸ்வரன் கோவிலின் தெற்குப் புறமாக நடந்தான். மாருதி வேன்கள் வாடகைக்காக ஆலமர நிழலில் நின்றிருந்தன. கோவில் கல்லுக்கட்டில் கேரம் போர்டு வைத்து டிரைவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அச்சகத்தில் வேலை செய்பவர்கள் டீ குடித்த கையோடு வந்து இவனுக்கு எதிர்க்கே மூத்திரம் பெய்து முடித்துவிட்டுக் கடந்து போனார்கள். சுப்பன் டில்லி முள் செடி ஓரமாகச் சென்று நின்றவாக்கில் மூத்திரம் பெய்தான். சூடு பிடித்த மாதிரி எரிச்சலாய் மூத்திரம் இறங்கியது. அத்துணை நோவும் மூத்திரத்தில் போய்விட்டதாய்ச் சுப்பன் நினைத்துக் கொண்டு லுங்கியைச் சரியாய்க் கட்டிக் கொண்டு திரும்பி நடந்தான். 

திடீரெனச் சுப்பனுக்கு சாமிநாதனின் நினைப்பு வந்தது. இப்படி ஒரு தடவைகூடச் சொல்லாமல் கொள்ளாமல் அவன் எங்கேயும் போனதில்லை. விசாரிப்பதென்றால் நெடச்சிலாபாளையம் போய் அவன் தறிப்பட்டறையில் கேட்க வேண்டும். அப்படி அவன் அங்கே இருந்தால், வீட்டுக்கே வந்துவிடுவானே! 

யாராச்சும் அடிச்சுகிடிச்சு வெச்சுட்டாங்ளோ என்னமோ என்று யோசனை ஓடியதும் சுப்பனுக்குத் தன்னப்போல உதடு பிதுங்கியது! கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டது. டவுசர் பாக்கெட்டில் கைவிட்டு மிச்சமிருந்த சரக்கையும் அண்ணாந்து ஊற்றிக் கொண்டான். காலி பாட்டிலை ஜோப்பிலேயே போட்டுக் கொண்டு நடந்து முருகன் சைக்கிள் கடைக்கு வந்தான். முருகன் சுத்தி வைத்து டொம் டொம்மென சைக்கிளைக் கிடையாய்ப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். 

“சாமீ என்ன பண்றீங்கொ? சைக்கிளை ரிப்பேர் பண்டக் குடுத்தா டொமீர் டொமீர்னு போட்டு எச்சா ரிப்பேரு பண்ணிக் குடுத்துப் போடுவீங்ளாட்ட இருக்குது?” என்றவன் கடைக்கு வெளியே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான். 

“டாக்டரைப் பார்த்து ஊசி போட்டுட்டு வந்துட்டியா?” 

“போட்டுட்டுத்தானுங்க சாமி வந்தேன்” 

“இப்போ எப்படி இருக்குது? ஓடலாம்னு இருக்குமே?” 

“நீங்க சொல்லீட்டீங்கன்னா பாத்துக்கங்க. ஓடலாம்னு இருக்குமாமா! இனி எங்கீங்க நானு போயி ஓடறேன். காலமே முக்காவாசி முடிஞ்சிபோச்சு” 

“இப்புடியே சொல்லீட்டு உங்க ஆளுகதான் தொன்னூறு வயசு தாண்டிக்கூட இருந்து பார்த்துட்டுத்தான போறீங்க! திங்கறீங்க.. அதுக்குத் தகுந்த மாதிரி காட்டு வேலை மாங்கு மாங்குன்னு செய்யறீங்க. எவன் இப்பக் காட்டு வேலை செய்றதுக்கு நிற்கிறான்? அப்புறம் கூலியும் செரியா குடுக்க மாட்டாங்க. குடுக்கறதைத்தான கும்புடு போட்டு வாங்கிக்கறீங்க!’ 

“ஆமாங் சாமி, குடுக்கறதைத்தான் வாங்கிக்குவேனுங்க. நோம்பி நொடிக்கு வேட்டி துண்டு எல்லாம் அவிகளே எடுத்துக் குடுத்துவாங்க. துணியில பணம் நூத்தி ஒன்னு வெச்சு குடுப்பாங்க” 

“பனியன் கம்பெனிக்கிப் போற உங்க புள்ளைக தெனம் நூத்தி முப்பது ரூவா சம்பாதிக்குதுக. மாசம் கணக்கு என்ன ஆச்சு? உனக்குத் தெனம் ஒரு அம்பது ரூவா குடுப்பாங்ளா?” 

“அம்பது ரூவா கணக்கு இருக்குமுங்க” 

“பத்து இருபது சேர்த்திக் கேட்டு வாங்கீட்டீன்னா மாசம் கணக்கு என்னாச்சு? வேட்டி துண்டு எத்தனை நீயே எடுத்துக்கலாம்” 

“மத்தியானம் குண்டா நம்ப சோறு ஊத்துறாங்க சாமி” 

“அப்போ உனக்கு வகுறு ரொம்ப சோறு ஊத்துனா போதும். பொழுதுக்கும் சாணி வழிச்சுட்டு, தட்டறுத்துட்டுக் கெடப்பே” 

“என்ன வேற என்ன பண்டச் சொல்றீங்க?’‘ 

“காடு தோட்டம் இல்லாத சாணானாப் போயிட்டனப்பா நானு. இருந்திருந்தா உன்னைக் கூட்டிட்டுப் போயி மூனு வேளையும் சுடு சோறா போடச் சொல்லி வேலை வாங்கிக்குவேன். என்ன பண்றது? இப்புடி இரும்பு தட்டீட்டு விசயமங்கலத்து வீதியில் கெடக்கோணும்னு எந்தலையில் எழுதியிருக்குது” 

“பொழுதுக்குள்ள நூறு நூத்தம்பது சம்பாதிச்சுப் போட்டுத்தான ஊடு போறீங்க” 

“சைக்கிளை ஓவராயில் செஞ்சா ஐநூறு ஆவும்னு சொன்னா கையில இருநூறு குடுத்து சிம்பிளா செய்யச் சொல்றாங்க. செஞ்சதீம் நாளைக்கி ஆயிடும், அடுத்த வாரம் மிச்சம் ஆயிடும்னு போயிடறாங்க. நானு அவிங்க ஊட்டுக்கு நடையா நடக்க வேண்டி இருக்குது! இப்புடி நாலு பக்கம் என் காசு நின்னா தலையில துண்டைப் போட்டுட்டுத் தான் ஊருக்குப் போகோணும்” 

“தொழில் செஞ்சா முன்னப் பின்ன இருக்கத்தானுங்க செய்யும்” 

“அதனால் தான் பல்லைக் கடிச்சுட்டு அஞ்சு வருசமா உட்கார்ந்துட்டு இருக்கேன். எதுக்கால செந்திலு இருக்காபலைல்ல? வொர்க் ஷாப் வெச்சிருக்காப்ல. வாரங்கூடி நாலு டிவிஎஸ்தான் செய்யுறாப்ல. பொழுது ஆச்சுன்னா ஒரு கோட்டரும் ஊத்திக்கிறாப்ல. குடும்பமும் ஓடுது. இது மட்டும் எனகு எப்படின்னே தெரியமாட்டீங்குது. எனக்குத் தண்ணி போடற பழக்கமும் இல்லை. ஆனா கையில காசு தங்கவேமாட்டீங்குது. விசயமங்கலத்துல பூரா ஆளுங்களையும் பார்த்துட்டேன். சோப்புல காசு இல்லீங்றாங்க. ஆனா கியர் வண்டீல தான் போறாங்க. பெட்ரோலுக்கு வதுலா மூத்திரத்தை டேங்க்ல புடிச்சே அவிக வண்டியெல்லாம் ஓடுமாட்டதான் இருக்குது! பஞ்சர் ஒட்டினாக்கூடக் கடன்தான் சொல்லீட்டுப் போறாங்க. காசு இல்ல.. காசு இல்லைனுட்டே போறாங்க. இல்லாமயே போயிடும் பாத்துக்க ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள்” 

“அந்தச் சைக்கிளை என்னுங்கோ பண்ணீட்டு இருக்கீங்க அப்பலையா புடிச்சு?” 

“வீலைக் கழட்டீட்டு இருக்கேன். பின்னாடி வீலு கோட்டம் எடுக்கோணும். எண்ணெய் கிண்ணெய் உட்டு ஓட்டறாங்ளா ஒன்னா? எல்லாம் துருப்புடிச்சுக் கெடக்குது. நாம சீமெண்ணெய் ஊத்தித்தான் நெட்டுகளையே அசைக்க முடியுமாட்ட இருக்குது. முன்னே என்ஹச் ரோடா இருந்தவரைக்கிம் காருக ஒன்னு ரெண்டு பஞ்சருக்கு வரும். 

இல்ல லாரிக்காரனாவது ஒட்டிட்டுப் போவான். அதான் இப்ப நாலு மாசமா டோல்கேட் போட்டு வசூல் பண்ணிட்டு வண்டீக பூராம் நேராத் தங்கச்சாலையிலயே போயிடுதுகளே. ரோடு பாரு எப்புடிச் சுத்தமா சத்தமில்லாம கெடக்குது பாரு. 

கிழக்கே நைட்டுக் கடைக பத்து இருந்திச்சில்ல. சாப்பாட்டுக்கு எத்தன லாரிக நிற்கும். இப்ப ஒரு வண்டி ரெண்டு வண்டிகதான வருது. எல்லாருக்கும் நட்டம் தான இனி. கடையப் பூட்டிட்டு வேற பொழப்பெப் பார்க்கறதுக்கு போயிடுவாங்க பாரு. நமக்கு இப்புடியே நாலு சைக்கிள் பஞ்சர் ஒட்டினாக்கூடப் போதும். நானெல்லாம் சின்னப் பையனா இருந்தப்ப அரிசி சோத்தைக் கண்டனா என்ன? ராயிக் களியும் சோளச் சொறும் தான். 

ஒரு நாளைக்கி அதிசியமா ஊட்டுல செய்யச் சொன்னா எப்புடிச் செய்றதுன்னு பொண்டாட்டி கேட்கறா! ராயி வாங்கி அரைச்சுக் கொண்டு போயி எங்கம்மாகிட்டக் களி கிண்டிக்குடுன்னு சொன்னேன். ரெண்டு உருளைக் கட்டை வேணுமே. அதுகெல்லாம் எங்கெ போச்சுதுகளோன்னு புதுசா ரெண்டு பச்சைக்குச்சி வெட்டிக் களி கிண்டி உருண்டை புடிச்சுக் குடுத்துது. பசக, புள்ளைக எல்லாம் இதென்ன பிய்யாட்ட இருக்குதுன்னு ஒரு வாய் திங்கமாடேனுட்டுதுக!” 

“நான் களி தின்னே இப்பப் பத்து வருசத்துக்கும் மேல ஆயிப் போச்சுங்க. அதும் மலைச்சீனாபுரம் எம்பட பங்காளி ஊட்டுக்கு நோம்பிக்கிப் போயிருந்தப்ப. எம்பட பையனுக்குக் கம்மஞ்சோறு, களின்னா என்னான்னே தெரியாதுங்கோ” 

“ஆமா ஆளு ரெண்டு மூனு நாளா இந்தப் பக்கம் தட்டுப்படவே இல்லையே! பொறுப்பா தறி ஓட்டப் போறானா? வந்து ஈன்னு நிப்பான். பஞ்சர்னா அவனே டியூப்பைக் கழற்றி ஒட்டீட்டுப் போவான்” 

“ஆளையே மூனு நாளா நான் பாக்கவே இல்லீங்க. எந்த ஊருக்குச் சோலியா போயிருக்கான்னு தெரியில. அவன் குடோனு ஓனருகிட்ட போயி கேட்டா கரைட்டா சொல்லிப் போடுவாருங்க. இனி நாளைக்கிம் ஆளைக் காணம்னாத்தான் அவ்ளோ தூரம் ஒரு எட்டுப் போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரோணும். அப்பா அப்பான்னே ஊட்டுக்குளார சுத்துவானுங்க. வெங்காயம், தக்கோளி, மொளகான்னு ரெண்டு தட்டுக்கூடை பூராவும் வாங்கிப் போட்டுட்டான். அப்படியே கெடக்குதுக” 

“தக்கோளி எல்லாம் அழுகிப் போயிடப்போவுது சுப்பா. பக்கத்து ஊட்டுக்காரவுகளுக்காச்சிம் எடுத்துக் குடுத்துடலாம்ல! வேஸ்டாத்தான போயிரும்?” 

“அப்படித்தான் பாண்டோணுமுங்க. தக்கோளி கிலோ மூனு ரூவாய்ங்காட்டி ரெண்டு கிலோ வாங்கியாந்துட்டானாட்ட இருக்குது” 

“ஓரு எட்டுக்கு பார்த்தீன்னா கிலோ இருவது ரூவாம்பாங்க. இப்போ சீப்பா கெடக்குது” 

“உங்கூருப் பக்கமெல்லாம் தெளுவுத் தண்ணி கெடைக்குதுங்களாமா? ஒரு கேன் தான் கொண்டுட்டு வந்து இந்தா குடிச்சுட்டுப் போடா சக்கிலின்னு குடுக்க மாட்டீங்றீங்ளே!” 

“நான் தான் அந்தக் கெரவத்தை மோந்து கூடப் பாக்கமாட்டன்னு சொல்றன்ல. உனக்கு ஒரு கேன் கொண்டாந்து குடுத்தா விசயமங்கலத்துல முருகன் கள்ளு ஏவாரம் பண்றான்னு புடிச்சுக் குடுத்துட்டாங்கன்னா? நான் உள்ளார போயி எண்ணீட்டுக் கெடக்கணும். உனக்கென்ன மடக் மடக்குனு குடிச்சுப்போட்டு பொச்சைத் தட்டீட்டு எந்திருச்சுப் போயிருவே. அப்புறம் சும்மாவும் போகமாட்ட நாலு பேருத்து கிட்டச் சொல்லீட்டும் போயிருவே. அப்புறம் தெனமும் எதுக்கால குடுக்கணும், இந்தப் பக்கத்துல குடுக்கணும். எனக்குத் தேவையா? நீ வின் டெக்ஸ்கிட்ட போயிச் சடச்சன்னு மண்டுட்டும் போயிருவே” 

“அதென்னமோ நெசந்தானுங்க சாமி” 

“என்னமோ பின்னெ சொல்றையே‘ 

“எங்கூரு பிரிவுக்கிட்ட ரெண்டு மூனு நாளைக்கிம் முன்னால பொழுதோட போலிஸ்காரங்க ஜீப்பெ நிறுத்தீட்டுப் போறவிங்க வாரவிங்க புட்டுர் பைக்கையெல்லாம் நிறுத்தி வாயை ஊதிக்காட்டச் சொல்லீட்டு இருந்தாங்கெ” என்றான் சுப்பன். 

“குடிச்சுப்போட்டு வண்டில போயித்தான எங்கியோ ஒரு பக்கம் கொண்டி மோதி மண்டைய ஓடச்சிக்கறாங்க. தலைக்குச் சட்டி போடாதவிங்களை எல்லாம் புடிச்சிருப்பாங்களே! உன்னையும் வாயை ஊதச் சொன்னாங்ளா?” என முருகன் கேட்டான். 

“என்னையெல்லாம் ஊதச் சொல்லலீங்க. எனக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாதுங்கெ” 

“சேரீ.. நீயி உங்கூருக்கே போறதுக்கு ரோட்டு ஓரமா ஒதுங்கித்தான் போறீன்னே வெச்சுக்கோ. ரோட்டுல வர்றவன் கரைட்டா வந்தாத்தான நெசம். குடிச்சுப்போட்டு எதுக்கால லாரி வருதுன்னு கொஞ்சூண்டு திருப்புறவன் உம்மடமேல கொண்டாந்து இடிச்சு நீ சாவமாட்டீன்னு என்ன நிச்சயம்?” 

“இதென்னுங்கே அலும்பா இருக்குது உங்ககோட? செத்தே போயிருவன்னு சொல்றீங்க. சரி அப்புடிப் போனா போயிச்சாட்டாறேன். காலு கை போச்சுன்னாதான் எம்பட பையனுக்கு வெட்டியா சிரமம். அப்பிடி கிப்பிடி அடிபட்டா ஒரே முட்டா போயிச் சேர்ந்துடோணுமுங்க. இழுத்துட்டுக் கெடந்தா எனக்கும் செரமம், எம்பட பையனுக்கும் செரமம். எம்பட காலம் தான் முக்காத்திட்டம் போயிடுச்சுங்ளே. இரூந்து இனி என்ன பண்டப் போறேன். மருமக வந்துட்டாலும் அவுளுக்குத்தான் சீரழுவு” 

“உம்பட பையனுக்கு ஒரு கல்யாணாச்சி பண்ணிப் பாக்காமயே போறேங்கறியா?” 

“அவனெங்கீங்க சாமி கல்யாணம் பண்டுறான்? அவுனும் பண்டி ஒரு மருமக வந்து எனக்கு வட்டல்ல சோத்தப் போட்டுட்டாலும் கெனா வேணா காங்கலாம். நான் சாவுறதுக்குள்ள அவன் கலியாணம் பண்டீட்டா அதிசியந்தான். அவஞ் சாதகமே ஊசெச் சாதகமாமாங்க. சாதகம் நல்லா இருந்தாத்தான போன பக்கம் பொண்ணு அமையும். டிவிஎஸ்ஸோ என்னமோ வாங்கோணுமப்பான்னு சொல்லீட்டுத் திரியறான் இந்த மாசம் பூராவும். பொண்ணுப்புள்ள பேண்ட்டு போட்டுட்டுத் தாண்டுக்கால் போட்டு இவனைக் கட்டிப்புடிச்ச மானிக்கி உட்கார்ந்துட்டு வர்ற பொண்ணுதான் இவுனுக்கு வேணுமாம். பொண்டாட்டி எதுக்குங்க சாமி இவுனுக்கு? தாண்டுக்கால் போடறதுக்கா? இந்த நெனப்பு இருக்கறவனுக்குப் பொண்ணு கெடைக்குமா?” 

“பகல்ல பொறந்தானா? ராத்திரியில பொறந்தானா? சொல்லு எப்புடிப் பொண்ணு அமையும்னு நாஞ்சொல்றேன்” 

“யாருக்குங்க ஞாவகம் இருக்குது. பவானி போய் எம்பட ஊட்டுக்காரி கிட்டத்தான் கேட்டுட்டு வரோணும். இந்தப் பொன்னம்பலம் டாக்டரு போட்டு உட்ட ஊசி பரவாயில்லைங்கோ. கால்வலி கை வலி எல்லாம் போயிடுச்சுங்க” 

“மேல ஒரு கோட்டர் ஊத்தீட்டீன்னா கப்சுப்புனு ஆயிடும். எதுக்கால பட்டறை செந்திலு அப்புடித்தான் பண்டுனாப்லையாமா! ஒரு ஊசி ஒரு கோட்டரு. ஒரே நாள்ல காச்சல் போன எடம் தெரியலியாமா” 

நானும் ஒரு கோட்டர் அடிக்கலாம்னு தான் பம்முறேன். காசு இல்லீங்களே! முப்பது ரூவாயோ என்னமோதான் மடியில கெடக்குது” 

“டாக்டருக்கு குடுக்க காசு இருந்துச்சா? அம்பது ரூவா கேட்டிருப்பாப்லையே?” 

“இங்க ஏதுங்க அம்பது ரூவா? பீடி தீப்பொட்டி கூட இல்ல. வெத்தல பாக்கு இல்லெ. வெறும் பொச்சு அம்மணம் போட்டுக்க சம்மணம்னு உங்க கடை வாசல்ல உட்காந்துட்டேன்.” 

“டாக்டருக்கே சூப்பு குடுத்துட்டு வந்துட்டியா? பயங்கரம் தான். நீ பொழச்சுக்குவே சுப்பா. நாங்கூட உன்னை என்னமோன்னு தான் நெனச்சேன். அப்படிப் போடு அருவாளை” 

“எம்பட பையன் வந்து அம்பது ரூவாயக் குடுப்பானுங்க சாமீன்னு சொல்லீட்டு வந்துட்டனுங்க. வெச்சுட்டா இல்லீனுட்டு வந்துட்டேன். எம்படகிட்ட வாங்கித்தான் இனி அந்த டாக்டரு சோறு திங்கோணுமா? சரி, உங்ககிட்ட அம்பது ரூவா இருந்தாத் தாருங்களேன். பையன் குடுத்துருவான்.” 

“ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, இனி மனுசனைக் கடிக்க வந்துட்டியா? அதெப்படி சுப்பா உங்காளுக பூராவும் கூசாமக் காசு கேக்கறீங்க? அம்பது ரூவா உனக்கு அவ்ளோ சாதாரணமா போச்சா? நானு அஞ்சு சைக்கிள் டயரைக் கழட்டிப் பஞ்சர் ஒட்டினாத்தான் அம்பது ரூவா தெரியும்ல! நீயே சொன்னியே காட்டு வேலை ஒரு பொழுது நின்னு வேலை செஞ்சாத்தான் அம்பது ரூவான்னு. ஒரு கோட்டருக்கே இன்னம் இருவது ரூவா வேணும்ல? அப்புறம் டம்ளர், தண்ணிப் பொட்டணம், கடிச்சுக்கறதுக்கு முறுக்குன்னு பத்து பதனஞ்சு ரூவா வேணும்ல?” 

“தண்ணி, முறுக்கு, டம்ளர்னு யாருங்க வாங்குறா! எனக்கு அதெல்லா வேண்டீதே இல்லிங்கோ” 

“அப்படியே அண்ணாந்து ஊத்திக்குவியா! சரி சரி.. இந்தா பாத்தியா.. சைக்கிள் நிக்குது பாரு. அட்வான்ஸ் முந்நூறு குடுத்துட்டுச் சுத்தமா வேலை செஞ்சு வையுங்கோன்னு போன வாரம் கம்புளியம்பட்டிக்காரரு உட்டுப் போட்டுப் போனாரு. அவுரு இன்னிக்கித்தான் வர்றேன்னு சொல்லியிருக்காரு. அவரைத்தான் பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கேன். கோன் பால்ஸ்ல இருந்து சீட் கவர், பெல் வரைக்கும் புதுசு போட்டு உட்டுருக்கேன். வண்டிய எடுத்து ஓட்டினா சும்மாத் தேர் மாதிரி ரோட்டுல போவும். இன்னம் நானூறு ரூவா வாங்கணும். ரெண்டு டயரும் டியூப்பும் புதுசு போட்டு உட்டுருக்கேன். பணம் இப்ப வந்தாலும் நீ கேட்ட காசை உடனே தாறேன். உன்னோட ராசியத்தான் பாக்குறேனே!” 

“எங்க பரட்டத்தலச்சிய கும்பிட்டேன்னா உங்களுக்கு இன்னம் ஒரு மணி நேரத்துல காசு ஆயிரும்” 

“சரி சொல்லாதே.. கும்பிடு நீ.. எந்தச் சாமிய வேணாலும் கும்பிடு. எனக்கும் வேலை செஞ்ச வண்டி கடைய உட்டு அக்கட்டால போச்சுன்னு இருக்கும்ல. உம்மட பையனுக்குப் பொண்ணு கெடைக்கலீன்னா உங்க ஊரு சரோசாவையே அவுனுக்குக் கட்டி வெச்சுடு ரெண்டு பேரும் சோடியா சைக்கிள்ல போனதை நானே ரெண்டு வாட்டி பார்த்தேன்” 

“ஏனுங்க நீங்க.. மாரன் காதுல கேட்டான்னா சாமிநாதனை மிதிச்சுப் போடுவான். அக்காளுங்க” 

“அக்கா அக்கான்னு கூப்புட்டுப் பேசிட்டே தப்புப் பண்டமாட்டாங்ளா?” 

“எம்பட பையன் அந்த மாதிரி எல்லாம் பண்ட மாட்டானுங்க” “உம்மொட வெரலைக் கொண்டி நீட்டு. சூப்புவான்” 

“ஒடம்பு செரியில்லீன்னு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிருப்பான்” 

“அப்ப அந்தப் பொம்பளை நல்ல பொம்பளையா? அவ பையனே இங்க கடைப்பக்கம் வர்றப்ப எல்லாம் புல் போதையில தான் வர்றான்.எங்கம்மா இந்த மாதிரி பண்டுதுன்னு அழுவுறான்” 

“அவ என்ன இப்பத்தான் இப்புடிப் பண்றாளா? மாரன் கட்டீட்டு வந்த நாள்ல இருந்தே அப்புடித்தான். அவ பையன் நல்லாக் குடிச்சுப் பழகீட்டான். நொண்டிச் சாக்காட்டுக்கு ஆயாளைக் குத்தம் சொள்றான். அவ சாவுமுட்டும் அப்படித்தான் பண்டுவாளுங்க. ஊட்டுல அவகிட்ட பையன் பேசுறதே இல்லையாமா. காசு கொண்டி வாரம் இவ்வளவுன்னு குடுக்கறதும் இல்லையாமா. மாரனும் அவன் சம்பாதிச்சு அவனே குடிச்சுக்கறான். 

அவன் பொண்டாடிய தண்ணி தெளிச்சே உட்டுட்டான். சரோஜா அப்புறம் காசுக்கு என்ன பண்டுவாளுங்க சாமி? இல்ல கேக்கேன். ஊட்டுக்கு முன்னாடி பணம் காச்சி மரமா வச்சிருக்கறா! சேரின்னு ஏறிப் போயிப் புளியம்பழம் உலுக்குற மாதிரி உலுக்கிக் காசு பொறுக்கீட்டு வந்து கஞ்சி ஆக்குறதுக்கு? கட்டிக் குடடுத்த புள்ளையும் அங்கெ ஊட்டுல சீராடிட்டு அடிக்கொருதரம் ஓடியாந்துடறா. 

அவளுக்கும் குடுத்துத் தாட்டி உடோணும். அத்தனைக்கும் அவ ஒருத்தியே எங்க இருந்து அவுத்துக் குடுப்பா? பையன் குடிக்கறது அவளுக்கே தெரியும். குடிச்சுக் குண்டி வெடிச்சுச் சாவட்டும், ஒரே நாள்ல அழுது தீத்துட்டு கொண்டி குழியல பொதைச்சுடறேன்னு சொல்லிட்டா” 

“சரோசாவுக்கு சப்போர்ட் பண்டி நல்லாத்தான் நாயம் பேசுறே. சாமியக் கும்புட்டுப் போட்டியா? பணம் வந்துடுமா?” 

நீங்களாச்சிம் மகராசன் காசு தர்றேன்னு சொல்லீட்டீங்களே. எனக்கு இப்பவே குடிச்ச மாதிரி ஆயிப்போச்சுங்க. எம்பட பையன் காசைக் கொண்டுட்டுப் போயி அமட்டையும் அந்தப் பெரிய வீரசங்கிலிக்காரி கிட்டயே குடுத்துப் போடறானுங்ளே. வெடிய வெடிய தறி ஓட்டிச் சம்பாதிக்கறான். இப்புடிப் பண்றானுங்களே! அவ இனி காசை வெச்சிருக்காளா. தின்னு போட்டாளான்னே தெரியலீங்க” 

“அந்த வேலையும் பண்றானா? அது ஆவாதே. இந்தக் காலத்துல எவ நல்லவ எவ கெட்டவன்னு மூஞ்சியப் பார்த்துக் காங்க முடியுதா ஒன்னா. எவளைக் கண்டாலும் திருட்டுக் கழுதைக மாதிரியே முழிகறாளுக. அந்தப் புள்ளைய நானும் ஒரு நாள் பஸ் ஸ்டாப்புல பார்த்தேன். புள்ள செவச் செவன்னு அழகாத்தான் இருக்கறா. உங்க சாதியில அப்புடிக் கலரா ஒருத்தியையும் நானு பார்த்ததே இல்லயே. சேட்டுப் புள்ளை மாதிரி ஈக்குமாத்துக் குச்சியாட்ட ஒல்லியா இருக்கா. இப்ப நீ இருக்குறே பனைமரத்தை தண்ணி ஊத்தி நனைச்சு உட்டாப்புல. உன் பையன் எப்புடி செவப்பா இருக்கான்?” 

“எம்பட ஊட்டுக்காரி செவப்புங்க சாமி” 

“என்னமோ நீ சொல்றே நான் நம்புறேன்” 

“அந்த வீரசங்கிலி புள்ளைய ஒரு தாட்டி ஊட்டுக்கே எம்பட பையன் கூட்டீட்டு வந்துட்டானுங்க. பொழைக்க்ப் போற ஊட்டைப் பாக்குறதுக்கு அவளும் இவன் கூட சைக்கிள் ஏறீட்டு வந்துட்டா. சொன்னாப்புல புள்ளை துக்ளியூண்டுதானுங்க. எங்கிட்ட நல்லா பேசுச்சு. கொணமான புள்ளைதானுங்க. என்ன பலமா காத்தடிச்சா பெரிய வீரசங்கிலில போய் உழுந்துடுவா. கீச்சுக் கீச்சுன்னு தான் பேசினா அவ. எப்பிடியோ நல்லா இருந்தீங்கன்னா போதும் சாமீன்னு சொன்னேன். 

“உம்பட பையன் தாலிகட்டிக் கூட்டியாந்து நேரா நேரத்துக்கு அவளுக்குச் சோத்தை உருண்டை புடிச்சு ஊட்டி ஊட்டி உட்டான்னா அதெல்லாம் ஒரு மாசத்துல குண்டாயிடுவா!” 

“அவனும் ஊட்டி உட்டுட்டாலும் அவளும் அவுக் அவுக்குனு தின்னு குண்டு ஆயிட்டாலும் ஏஞ்சொல்லிக்கறீங்க போங்க. கட்டல்ல ரெண்டு பேரும் சோடியா உட்கார்ந்துட்டுக் குசுகுசுன்னே காதைக் கடிச்சாப்ல பேசிட்டே இருந்தாங்க. எனக்கு ஒரு நெகாவும் சிக்குல” 

“அப்புடி நாயம் பேசுறவதான் நாளைக்கு உனக்கொரு நோவு நொடின்னா மருந்து மாத்திரை குடுத்துக் கஞ்சி வெச்சு ஊத்துறவளா?’ 

“எனக்கு ஊத்தாட்டிப் போச்சாறாளுங்க சாமி. நாம ஊத்து ஊத்துன்னா போயி நிக்கப் போறோம். எப்பிடியோ அவிங்க பாட்டைப் பார்த்துக்கிட்டாங்கன்னா சரி. அப்புறம் என்ன ஆச்சுன்னு கேளுங்க. அவளோட ஆயாகாரி விசாரிச்சு எம்பட ஊடே தேடி வந்துட்டாளுங்க. ‘புள்ளை எங்கே? புள்ளை எங்கே’ன்னு பறவாப் பறக்குறா. எம்பட வாசல்ல நின்னுட்டு. ஆனா ஊட்டுக்குள்ள போவமாட்டீங்றா!” 

“அந்தப் பொம்பளைக்கு எப்புடித் தெரிஞ்சுதாமா? புள்ளை உம்பட ஊட்டுக்குத்தான் வந்துச்சுன்னு?” 

“எனக்கென்னங்க சாமி தெரியும் இவிங்க தில்லுமாரித்தனங்கோ? பொட்டை நாயி குட்டி எங்க போச்சுன்னு மோப்பம் கண்டுபுடிச்சே வந்துடுமுங்க. அம்மா சத்தம் வாசல்ல கேட்குதேன்னு வெளிய இந்தப் புள்ளை வரவும், முடியப் புடிசு ஒரு ஆட்டு ஆட்டி முதுகுல சத்சத்துனு நாலு அடி எம்பட ஊட்டு முன்னாடியே போட்டா. எம்பட பையன் ஊட்டை உட்டு வெளியவே தலையை நீட்டலீங்க” 

“வந்திருந்தா அவுனுக்கு சேர்த்தீல்ல ரெண்டு உழுந்திருக்கும்” “ஆனா கெடாப் பொம்பளைங்க அவ ஆயா. புள்ளை திங்கற சோத்தையும் சேர்த்து அவளே திம்பாளாட்ட. இன்னம் குரதைக்குட்டியாட்ட கணுக்கணுன்னு இருக்கா” 

“சம்மந்தி மேல நீ கண்ணைப் போட்டுட்டே, அப்புடித்தான?

“நானு இனி கண்ணைப் போட்டு என்னத்தப் பண்டப் போறனுங்கோ ஆனா குண்டு வடச்சட்டியாட்ட இருந்தா” 

“பக்கத்து ஊட்டுக்காரிக எல்லாம் தடுத்து ஒன்னும் சொல்லலியா?” 

“அவளுக என்னத்த சொல்லுவாளுக? தெரிஞ்ச மூஞ்சியா ருந்தாக் கூட நிறுத்தி, ‘தேனாயா?”ன்னு கேட்பாங்க. சும்மா அவிக அவிக வாசல்ல நின்னுட்டு வேடிக்கை தான் பார்த்துட்டு இருந்தாளுக. யாரும் ஒன்னும் கேட்கலை. தேஞ்சாமி அவ புள்ளைய அவ அடிச்சு இழுத்துட்டுப் போறா. நான் தான் என்ன சொல்ல முடியும்? இவன் ஊட்டுக்குள்ளயே கொரவனாட்டம் உட்கார்ந்துட்டான். இவனாவது எந்திரிச்சு வந்து எம் பொண்டாட்டிய மொத்தாதேன்னு சொல்லியிருக்கணும். ஆனா அந்தப் பொம்பளை இருக்குற சைசுக்கு இவன் றெப்பட்டையைப் புடிச்சுத் தூக்கி வீசினாள்னா ஓட்டுமேல கெடப்பான். ஏணி வச்சுத்தான் எறங்கோணும். ஆனா அறிவுங்கறது கொஞ்சம் கூடக் கெடயாதுங்க இவுனுக்கு. ஊட்டுக்குக் கூட்டிட்டு வந்தவன் அந்தப் புள்ளைக்கி ஒரு மஞ்சக் கயித்தைக் கட்டி உட்டுருந்திருக்கலாம்ல!’ 

‘அந்தப் புள்ளை படிப்பு முடிச்சுட்டு தான் கலியாணம் பண்ணிக்கோணும்னு சாமிநாதன் கிட்டே கட்டேன்ரைச்சா சொல்லிப்போடுசாமா. அது தெரியாதா உனக்கு?” 

“அவ படிச்சு இனி எலிகாப்டரு ஓட்டற வேலைக்குப் போவப்போறா?” 

“கல்யாணத்த மொதல்ல நாம பண்டிக்கலாம். நீ பாட்டுக்கு மேல படிச்சுட்டு இரு. உன்னைய நானே படிக்க வைக்கிறேன்னு தான் இவுனும் சொன்னானாம்” 

“நாயம் பேசுறதுக்கு நல்லா இருக்குமுங்க. இவன் படிக்க வெச்சுக் கழட்டறது தெரியாது?‘ 

“கல்யாணம் பண்ணீட்டு இவன் என்னத்தைக் கழட்டுவான்னு 

அந்தப் புள்ளைக்கும் தெரிஞ்சிருக்கும். இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு அதுகூடவா தெரியாது. டிவில தெனமும் அப்புறம் இதைத் தான காட்டுறான். அல்லாரும் பாக்கறாங்கள்ள? தெரியாம போயிருமா? எடது கையில மொழங்கைக்கு கீழ கர்ச்சீப்பைக் கட்டீட்டே நாலு நாளைக்கும் முன்னாடி சுத்தீட்டுத் திருஞ்சானுங்களே?” 

“அந்தக் கதை உனக்குத் தெரியாதா?” 

“அவன் பண்றது எதுதானுங்க எனக்குத் தெரியுது?” 

“கையில என்னடா சாமிநாதா கர்சீப் கட்டியிருக்கே? புது ஸ்டைலா? விஜய் எதாச்சிம் படத்துல இது மாதிரி கட்டியிருக்கானாடா?’ அப்படின்னு கேட்டதுக்குக் காது வரைக்கும் பல்லைக் காட்டிட்டே நின்னான்.சித்த நேரம் கழிச்சு கர்ச்சீப்பை நெவுத்திக் காட்டினான். கொப்பளம் கொப்பளமா புள்ளி புள்ளியா சீப்புண்ணு” 

“கையில எப்பிடிங்கோ புண்ணு ஒரே நாள்ல வந்து சீப்புடிக்கும்? சரி புண்ணு வந்தா இருக்கட்டும்.. கையில புண்ணுதான்னு எங்கிட்ட சொல்றதுக்கென்ன நோக்காடு. நானு என்ன சொல்லப் போறேன்?” 

“அந்தப் புள்ளெ பேரு லதாவாமா.. இவுரு ஊதுபத்தி பத்த வெச்சுக் கையில லதான்னு புள்ளி புள்ளியா சூடுவச்சிருக்காரு. பூராம் சீப்புடிச்சுக் கொந்திக்கிச்சு. வெட்கப்பட்டுக்கிட்டு கர்ச்சீப் கட்டிக்கிட்டாரு. அவனப் போயி இனி என்னன்னு சொல்றது? இவன்னு இல்ல சுப்பா. பசங்களே பூராம் இப்புடித்தான் சுத்தீட்டுத் திரியறானுக. போயி ஒரு விசுக்கா முழுசாப் பார்த்துட்டானுகன்னாத் தூக்கருமம்.. இந்த கருமத்துக்குத்தான் இத்தனை பாடுபட்டுச் சீரழிஞ்சமான்னு தெரியும். அதுவரைக்கும் தெரியாது” 

“அவன் சூத்துலயும் அவ பேரைச் சூட்டுக்கோலு வெச்சுக் குத்திக்கச் சொல்ல வேண்டீதுதானுங்க நீங்க. சோறு வேற ஒரு வட்டல் தின்னுக்கறான். ஏஞ்சாமி, இதென்ன கேடுகாலம் அவனைப் புடிச்சு ஆட்டுது? போங்காலம் கட்டிக்கிச்சுன்னா இப்படித்தான் பண்டுவாங்க. ஒரு காய்ச்ச வந்தாக்கூட அட போயி ஒரு ஊசியப் போட்டாவது செரி பண்ணிக்கலாம்னு ஓடியாந்து போட்டுக்கறோம். வெனைய அவனாவே தேடிக்கிட்டா என்னுங்க அர்த்தம்? கண்ணத் தொறந்துட்டே போயிப் பாங்கெணத்துல ஆராச்சிம் குதிப்பாங்களா?” 

“நான் கூடக் கேட்டேன். ‘ஏண்டா சாமிநாதா, இப்புடிப் பொட்டச்சி பேரைக் கையில எழுதிப் புண்ணு பண்டிட்டு சுத்துறே! அவ பேரு லதாங்காட்டி மளார்னு எழுதிட்டே. சொர்ண சுப்புலட்சுமின்னு நீளமான பேரை வச்சிருந்தாள்னா எப்படித் தோள்பட்டைல இருந்து நேரா புடிச்சுக்குவியா?’ன்னு கேட்டா சிரிக்கிறான். இப்புடி அந்தப் புள்ளை நெனப்பாவே இருந்தான்னா பைத்தியம் புடிச்சுக்கும் சுப்பா! உம்பட பையன் வெட்டியாப் போயிடுவான். காதல் சினிமா படத்துல, ஙஙஙன்னுட்டு சுத்துவான் ஒருத்தன். அவனாட்டம் மண்டைய மண்டையச் சொறிஞ்சுட்டு, பேனுப்புடிச்சு நசுக்கித் தின்னுட்டே பஸ் ஸ்டாப் பக்கத்துல கூடிய சீக்கிரம் உம்பட பையனைப் பார்க்கலாம்.” 

“மசநாயை அடிச்சக் கொல்ற மாதிரி கொன்னு போடச் சொல்லிருவனுங்க. அப்புடிப் பையன் எதுக்கு மண்டையச் சொறிஞ்சுட்டு வீதியில சுத்தோணும்?” 

“சரி, அந்தப் புள்ளைதான் இவனோட பேரைக் கையில எழுதிவச்சுக் காமிச்சாளான்னு கேட்டேன். இல்லைன்னு மண்டையை ஆட்டுறான். அவுளுக எழுதுவாளுக பாரு. கடைஞ்ச மோர்லயே வெண்ணெய் எடுக்கிறவளுகள்ல” 

“அதுக்கும் முன்னத்த வாரம் தான் ‘ஊர்ல எல்லாரும் பழனிக்கு மாலை போடறாங்க.நானும் போடட்டுமாப்பா?’ன்னு கேட்டான். மாலையப் போட்டுட்டான்னா ஊடு வேற சுத்தபத்தமா இருக்கோணும். நான் வேற தண்ணியப் போடக் கூடாதுங்ளே! காத்தால நேரத்துல தலைக்குத் தண்ணி வேற வாத்துக்கோணும். பொழுதோட ஒருக்கா தண்ண்ணி வாத்துக்கோணும். எல்லாத்தையும் யோசிக்கோணும்ல. மொத்தமே ஏழு நாள் தான்னு சொன்னான். சரி ஏழு நாள் தான ஒரு இரண்டு தடவை தண்ணி போடுவோம். உட்டுட்டாப் போச்சாதுன்னு நானும் ‘செரி போட்டுக்கடா’ன்னு சொல்லீட்டனுங்க. செருப்பில்லாம வெறுங்கால்ல தான நடந்து போகோணும். கொஞ்சத் தூரமா? ‘முடியுமா சாமி?’ன்னு கேட்டேன். ‘அதெல்லாம் நடக்கலாம்’ன்னு மாலையப் போட்டுட்டான்”

“அது போன மூனாம் வாரம் சுப்பா. போயிட்டு வந்துட்டு கால்கூட வீங்கி ரெண்டு நாள் சுத்துனானே?’ 

“இதையக் கேளுங்க. மாலையப் போட்ட மூனாம் நாளோ என்னமோ பொழுதோட சைக்கிள்ல வெசையா ஊடு வந்தான். அவசரத்துல வாசல்ல செரியாக் கூட ஸ்டாண்டு போடலியாட்ட இருக்குது.திடுகுப்புனு சைக்கிள் உழுந்திடுச்சு. உள்ளார வந்தவன் கழுத்துல கெடந்த சாமி கவுத்தை அவுத்துப் படத்து முன்னாடி வெச்சான். துண்டையும் வேட்டியையும் அவுத்துட்டு பேண்ட்டைப் போட்டுட்டு சைக்கிள எடுத்துட்டுப் போயிட்டான். சித்தங்கூரியத்துக்குள்ள புல்லா தண்ணியப் போட்டுட்டு வந்து என் கையில ஒரு கோட்டரை குடுத்தான். கட்டல்ல படுத்துட்டுக் கக்கி வெச்சுட்டே தூங்கீட்டான்” 

“நீயும் குடிச்சுப் போட்டு படுத்திருப்பே? வேற என்ன நடந்திருக்கும்?” 

“காத்தால நேரத்துல எந்திரிச்சுத் தலைக்குத் தண்ணி வாத்துட்டு மறுபடியும் மாலையும் வேட்டியும் துண்டையும் போட்டுக்கிட்டானுங்க” “இப்புடியும் ஒருத்தன் பழனிக்கு மாலை போட்டுட்டுப் போயிட்டு வருவானா?” 

“இவம் போயிட்டு வந்துட்டானுங்ளே! இவுனுக்கெல்லாம் பக்தியாவுது ஒன்னாவுது? ஒரு மசுரும் கெடையாதுங்க. நானு ஒன்னுஞ் சொல்றதேயில்ல” 

“அந்தப் புள்ளையோட அப்பன் இவனைப் பஸ் ஸ்டாப்புல அடிக்க வந்துட்டானாமா. இவன் மாலை போட்டிருந்ததால அடிக்குத் தப்பிச்சுட்டான். ஆளை சும்மா மெரட்டி உட்டுட்டுப் போயிட்டாப்ல. அவ பஸ் ஸ்டாப்புல நின்னுட்டுப் பார்த்துட்டே தான் இருந்தாளாமா. அவ பின்ன என்ன பண்ணுவா? அப்பன் கிட்ட வந்து எம்பட ஊட்டுக்காரனைத் திட்டாதீங்கன்னா சொல்லுவா? இனிமேல் இந்த வேலை வெச்சுக்காதேன்னு சொன்ன ஒடனே உங்காளுக்கு கோவம் வந்திடுச்சு.கோவம் வந்தாத்தான் கோழிப் பொச்சை நோண்டப் போயிருவிங்களே? மாலையக் கழட்டி வீசிட்டு தண்ணியப் போட்டுட்டான்” 

‘ஓ.. அதனால்தான் அந்தக் குடிகுடிச்சுட்டு வந்து கெடந்தானா?’ 

“பின்ன படிச்சுட்டு இருக்கிற புள்ளையப் போயி இவன் காதல் பண்ணுறேன், மயிரப் புடுங்கறேன்னு பொறவுக்கே சுத்தீட்டு இருந்தா அவ அப்பன் பார்த்துட்டு ‘சூப்பருங்க மாப்ளை’ன்னா சொல்வான்? மிதிக்காம உட்டானே! நீ புள்ளை ஒன்னு பெத்து வளர்த்திருந்தீன்னா தான உனக்கு அந்தக் கஷ்டம் தெரியும். காளை மாடாட்ட பையனைப் பெத்து ரோட்டுல உட்டுருக்கே. நீ அவ அம்மாவையே குண்டு வடச்சட்டியாட்ட இருக்காளுங்றே? உன் புத்திதான உன் பையனுக்கும் இருக்கும்? வேறயாவா இருக்கும்?” 

“நானு சும்மா நிதுக்குச் சொன்னேனுங்க. நீங்க பேசிட்டாலும்..” “நீ சும்மா சொன்னியோ, காசுக்குச் சொன்னியோ.. சொன்னீல்ல. அந்தப் புள்ளைக்கு ஊட்டுல மிதிபோட்டுப் புத்திமதி சொல்லி உட்டுட்டாங்க. பெத்தவிங்க அவ்வளவு தான் சொல்ல முடியும். அந்தப் புள்ளை இவனைக் கண்டுக்காம, போனும் பண்டாம இருக்கவும் இவன் கையில சூடு போட்டுகிட்டான். அவ உடனே சாமிநாதான்னுட்டு ஓடியாந்து கட்டிப் புடிச்சுக்கப் போறாளா? மூனு நாளா காணம்னு சொல்றே. போலீஸ் ஸ்டேசன்ல பொம்பளப் போலிஸ்கிட்ட மிதி தின்னுட்டுத்தான் கிடப்பான்னு நான் சொல்றேன்” 

“செரி, நானு பொடி நடையா ஊட்டுக்குப் போறனுங்க. அவன் எங்கியோ போயி மிதி தின்னுட்டு ஊடு வரட்டும். சரோசா மத்தியானம் கஞ்சி வெச்சுத் தர்றேன்னு சொன்னா. போனா துளி குடிச்சுட்டுக் கட்டல்ல சாயறேனுங்க. பரட்டத்தலைச்சியக் கும்பிட்டும் காசு உங்களுக்கும் ஆகல. எனக்கும் ஆகல.” என்ற சுப்பன் எழுந்து கிழக்கே நடக்க ஆரம்பித்தான். 

முருகன் சொன்னது மாதிரி ஜட்டியோட தான் பெருந்துறைக் காவல் நிலையத்தில் சாமிநாதன் மிதி வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

– தொடரும்…

– எட்றா வண்டியெ, முதற் பதிப்பு: 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *