எங்கோ ஒரு தவறு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2023
பார்வையிட்டோர்: 1,268 
 

(1961 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

போஸ்ட் ஆபீசுக்கு நேராக இருக்கும் அந்தப் பஸ் ஸ்டாண்டை ஒரு வட்டமடித்துக்கொண்டு வந்து நின்றது பஸ். எப்போதுமே நிரம்பிப் பிதுங்கும் பசறை ரூட் பஸ். இன்றும் அப்படியே.

தன் இனத்துக்கேயுரிய மகா பொறுமையுடன் எல்லோரும் இறங்கும்வரை காத்திருந்து இறங்கினான் முனுசாமி. அவனைத் தொடர்ந்து அவனுடைய மகள் கமலமும் இறங்கினாள்.

பஸ் ஸ்டாண்டு கலகலவென்றிருந்தது. பத்து மைல் தூரம், சுளகில் கிடக்கும் தானியம் மாதிரி புதைக்கப்பட்டு வந் திருந்ததால் இரு வருக்கும் சோர்வாகவே இருந்தது. இரண்டு நாட்களாக முனுசாமியின் தங்கை வீட்டில் விருந்தாடிவிட்டு திரும்பியிருந்தார்கள். இன்னும் அரைமணி நேரத்தில் தங்கள் எஸ்டேட்டுக்குக் கடைபஸ் புறப்படும். அதில் போனால் ஒரு மணி நேரத்தில் வீடுபோய் சேர்ந்து விடலாம். எப்போது வீடு போய்ச் சேர்வோம் என்றிருந்தது கமலத்துக்கு. ஆகவே பஸ் ஸ்டாண்டுக் கலகலப்பும் கவர்ச்சியும் அவர்களைத் தொடர வில்லை.

தலையில் கட்டியிருந்த லேஞ்சை எடுத்துக் கோட்டுக்கு மேல் மார்பின் இருபுறமும் வழியவிட்டவாறு திரும்பி மக ளைப் பார்த்தான் முனுசாமி. “தேத்தண்ணி குடிக்கிறியா?” என்றான். அவள் தலையை ஆட்டினாள். பஜார் வீதியில் புதி தாக திறந்திருந்த சைவக்கடையை நோக்கி இருவரும் நடந் தார்கள். அந்திப்பொழுது இன்னும் பூரணமாக மங்கவில்லை. எனினும் கடைகள்தோறும் மின்விளக்குகள் பளிச்சிடத் துவங்கியிருந்தன.

கமலத்தின் சேலைக்கட்டு உடலுக்குப் பாந்தமாக இல்லா மல் அவசரமாகச் சுற்றியதுபோலக் கிடந்தது. காது, கழுத் தில் கிடந்த நகைகளும் அணிசேர்க்காமல், வெறுமனே மின் னின. இன்னும் கிராமியமாக ஒரு குடையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் உழைப்பின் பயனேபோன்ற மேனி வளப்பம், ரவிக்கை தெறிக்கிறாற்போல் மதர்த்து நின்ற இளமை, கை கால்களின் திரட்சி பஸ் ஸ்டாண்ட் வாலிபர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒருவன் தன் கண்களால் பக்கத்தில் நின் றவனிடம் ஆச்சரியம் தெரிவித்துக்கொண்டான்.

மார்க்கட்டின் முன்னால் கிடு கிடென்று இறங்கும் சின்ன ரோடு வழியாகப் போய்த் திரும்பிக் கதிரேசன் கோவிலைக் கடந்து கொண்டிருக்கையில் உள்ளே தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. கோவிலுக்கு அடுத்தாற்போல இருந்த கடைகளில் ஒன்றின் முன்னால் ஃபோர்ட் பிரிபெக்ட் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதன் அங்க லட்சணங்களி லேயே அது வாடகைக்கு ஓடும் கார் என்பது நன்றாகத் தெரிந்தது.

அதன் மட்கார்டில் சாய்ந்து எதிரே பத்தடி தூரத்தில் இருக்கும் கடையிலுள்ள முதலாளியோடு இரைந்து பேசிக் கொண்டிருந்தான் ஒருவன். வயது நாற்பதுக்குக் கிட்ட என் றாலும் அவன் ஒரு உல்லாசி என்பதுபோல் கவர்ச்சியாக உடுத்தியிருந்தான். மஞ்சளும் நீலமும் கோடுகோடாக இறங் கியிருந்த விலையுயர்ந்த துணியில் புஷ் கோட்டும் நல்ல சிவப் பில் மஞ்சள் நிறப் பூக்கள் போட்டிருந்த ஸ்கார்ப் ஒன்றைத் தலையில் காதுமறையக் கட்டி, பார்த்தவுடனேயே இவன் டிரைவர் ஜாதி என்பதைப் பிரகடனம் பண்ணுவது போலிருந்தது.

பேச்சுவாக்கில் திரும்பியவன் கண்கள் கமலத்தின் மீது – அவள் வளவளப்பான மேனிமீது – ரவிக்கை தெறிக்கிறாற் – போல மதர்த்துநின்ற இளமைமீது அப்புறம் முனுசாமி யின்மீது ஊர்ந்தது. அவர்கள் தன்னைக் கடந்துகொண் டிருக்கையில் “என்ன கங்காணி! கார் ஓணுமா” என்றான். முனுசாமி நின்று பரவசமாகச் சிரித்தவாறு ”வேண்டாங்க” என்று கையை ஆட்டினான். கோட் போட்டிருந்த ஒரே கார ணத்துக் காக தனக்கு கங்காணிப்பட்டம் கிடைத்ததில் அவனுக்கு அலாதி மகிழ்ச்சி.

சட்டென்று அவன் முனுசாமியின் கரங்களைப் பிடித்து ‘*ஆ! கங்காணி … நம்மளுக்குத் தெரியுதா?” என்றான். முனுசாமி வெகுளித்தனமாகச் சிரித்துவைத்தான்.

“கங்காணி நல்லமலைத் தோட்டந்தானே அப்பா?”

“ஆமாங்க”

“அய்யோ அய்யோ! கட்டவளையிலே இருந்து நம்ம காரிலே நீங்க ஒருதரம் போனது? ஒரு பொம்பளே சத்தி போட்டு சத்திபோட்டு வந்தது?”

ஞாபகமில்லையா என்பதுபோல் அவன் கேட்ட – குறிப் பிடும்படியாக ஒன்றுமில்லாத-அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வர “ஆமாமா…” என்றான் முனுசாமி. தொடர்ந்து அவனுடன் நட்புறவாகப் பேச ஒன்றுமில்லாததால் “எப்படி சொகந்தானுங்களே?” என்றான்.

தன் தகப்பனுக்கு மிகவேண்டிய ஒருவனைப்போல,கமலம் லேசான முகமலர்ச்சியோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் மிரட்சியோடு கூடிய ஒரு குளுமை குடி கொண்டிருந்தது.

“கங்காணி அப்புறம் எங்கே வந்தது, சாமான் சட்டு வாங்கவா?”

“இல்லீங்க, அம்மணிவத்தையிலே என் தங்கச்சி இருக்கு துங்க அதைப் போயி பார்த் திட்டு வர்றோம்”

முனுசாமியும் கமலமும் மெல்ல நகரத் துவங்கியபோது அவனும் தொடர்ந்து வந்தவாறு “கங்காணி ஒங்கட தோட் டத்திலே ஒரு லொறி விக்க இரிக்கிதானே?” என்றான். மூவ ரும் இப்போது நடந்துகொண்டிருந்தனர்.

“தெரியல்லீங்களே”

“ஓ! ஓ! விக்க இரிக்கி. அது நான் வாங்கறத்திக்கி மிச் சம் ஆசை” என்றவன் சற்று நிறுத்தி வெலதான் மிச்சங் சொல்றது” என்றான். முனுசாமி அவன் முகத்தைப் பார்த்தான்.

“ஏழாயிரம் சொல்லறது. அது அவ்வளவு மே…மே..” அவன் சொற்களுக்காகத் தடுமாறிக் கொண்டிருந்தபோது “அவ்வளவு பொறாதா” என்றான் முனுசாமி.

“ஓ … ஓ! அவ்வளவு பொறாது. நாலாயிரம் அஞ்சாயி ரம்தான் பொறும். கங்காணி அந்த விசயத்திலே என்னமும் சஹாயோக செய்ய ஏலுமா’?

“நான் என்னத்தங்க பண்ண முடியும்? நமக்கு தொரைக்கிட்டே பேசமுடியுமா? கிளார்க்கருகிட்டே பேச முடியுமா?”

பக்கத்துப் பக்கமா ஒரு தேனீர்க்கடையும் ‘இவ்விடம் சீமைக் குடிவகைகள் விற்கப்படும்’ என்று போர்ட் போட்டி ருந்த ‘பாரும்’ இருந்தன. டிரைவர் சற்றுத் தயங்கிவிட்டு முனுசாமியின் வலது கரத்தைப் பிடித்து இழுக்காத குறை யாக ‘பார்’ உள்ளே நுழைந்தான். முனுசாமி திமிற நினைத்துத் தயங்கி ஒன்றும் புரியாதநிலையில் உள்ளே நுழைந்தான். வேறு வழியின்றிக் கமலமும் தொடரவேண்டி வந்தது.

உள்ளே மூன்று நாற்காலிகள் போடப்பட்டு சுத்தமான வெள்ளைத்துணி விரித்திருந்த ஒரு மேசையைச்சுற்றி மூவரும் அமர்ந்தனர். சாராய நெடியும் சிகரட் புகையும் கமலத்திற்கு என்னவோ போலிருந்தாலும் முகத்தில் கொஞ்சமேனும் அதிருப்தியைக் காட்டாது, குடையை மார்போடணைத்தபடி அமர்ந்திருந்தாள்.

வெயிட்டரிடம் ஓடருக்கான விபரத்தைக் கூறிவிட்டு முனுசாமி பக்கம் திரும்பி இந்த மது உபசரிப்பு, அதுவரை இருந்த சகஜ நிலையை விரஜப்படுத்தி விடக்கூடாது என்ற அவசரத்தோடு – ஒங்கட பெரிய கிளார்க் இரிக்கிதானே, அவங் எப்படி?” என்றான் டிரைவர்.

“நமக்கெல்லாம் அவருகிட்டே அவ்வளவு தொடுசு இல்லீங்க”

“அதி இல்லேப்பா! தாருசரி பேசினா நல்லா பேசுறதா… இல்லாட்டி…”

“சாச்சா! அதெல்லாம் நல்லா நின்னு பேசுவது”

வெய்ட்டர் ஒரு தட்டில் பியர் போத்தல் ஒன்றும் இரண்டு டிராம் சாராயம் உள்ள கிளாஸையும் கொண்டு வந்து மேஜைமீது வைத்தான். தட்டில் ஒரு பெரிய வெற்றுக் கிளாஸும் சோடாப் போத்தலும் இருந்தன.

முனுசாமி ரொம்பவும் சங்கடப்பட்டு “இதெல்லாம் என்னங்க?” என்றான். ஒரு கண்ணியமான அதிதி உபசாரப் பாணியில் முகமலர்ச்சியோடு “அதுக்கி என்ன சும்மா எடுங்க” என்று கூறியவாறு இரண்டு டிராம் சாராயம் இருந்த கிளாசில் சோடாவைக் கலந்து முனுசாமி பக்கம் நகர்த்தி வைத்துவிட்டு, வெற்றுக் கிளாசில் பியரை நிரப்பி யவாறு “ஒங்கட பெரிய கிளார் புடிச்சாத்தான் இந்த விசயம் சரிப்போறது கங்காணி. அதுக்கி நான் ஒரு பிளான் சொல்லறது அதுசரியா சுட்டி யோசிச்சுப் பாப்பம்” என்ற வாறு கனமான சிந்தனை தேங்கிய முகபாவத்தோடு பியர் கிளாஸைக் கையில் எடுத்தவன், ஏதோ நினைவு வந்தது போலக் கமலம் பக்கம் திரும்பி “தங்கச்சி கொஞ்சம் எடுக் கறதா?’ என்று கிளாஸைக் காட்டினான்.

அதுவரை வேடிக்கை பார்க்கும் குழந்தைபோலச் சற்றே திறந்த வாயோடு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கமலம் சட்டென்று முகம்மாறி “வேண்டாம்” என்று வெட் கத்துடன் தன் தகப்பனைப் பார்த்தான். முனுசாமியும் “அது சாப்பிடாதுங்க” என்றான்.

ஒரு குழந்தையைப் பார்க்கும் வாத்ஸல்ய பாவனையோடு டிரைவர் க மலத்தைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிச் சிரித் தான். அவள் ஒரு கூச்சத்தோடு முகஞ் சிவந்து தலை குனிந் தாள். அவளுக்காக அடுத்த கடையிலிருந்து தேனீர் வந்தது.

சற்று நேரங்கழித்து மெல்ல தகப்பனை நோக்கி “பஸ் ஸுக்கு நேரமாகுது” என்றாள் கமலம். முனுசாமி அவள் பக்கம் திரும்பி “போவம்… போவம் …” என்றான். அவன் செய்து முடித்தால் சுளையாக இருநூறு ரூபாய் கிடைக்கும். அப்படி ஒன்றும் வானத்தை வில்லாக வளைக்கும் முயற்சி யல்ல. பெரிய கிளார்க்கர் ஐயாவைத் தனியாகக்கண்டு பேச வேண்டியது. இன்னார் எனக்கு ரொம்பத் தெரிந்த மனிதன், அவருக்கே லொறியை நாலரை அல்லது ஐந்துக்குள் முடித் துக் கொடுக்கவேண்டியது ஐயாவுக்கு ஐநூறு ரூபாய் வாங்கித் தருகிறேன் என்று சொல்லவேண்டியது…….. என்ன பிரமா SL… முடித்துவிடலாம் …

சற்றுமுன் தானெல்லாம் அணுக முடியாதவர்களாகத் தெரிந்த பெரிய கிளார்க் இப்போது அசாதாரணமாகத் தெரிந்தது முனுசாமிக்கு.

பஸ்ஸுக்கு நேரமாவதை மீண்டும் நினைவுபடுத்தினாள் கமலம். சட்டென்று நினைவுவந்ததுபோல டிரைவர் ஒங்கட தோட்டத்திக்கி ராவைக்கி ஒரு டிரிப் போக இரிக்கி கங்காணி” என்று கமலத்தைப் பார்த்துக் கூறினான் “நான் ஓங்கட தோட்டத்து ஆளுகொஞ்சம் படம் பார்க்க வந்திரிக்கி. கங்காணியும் போக ஏலும்…”

“ராவைக்கு பன்னெண்டு வரைக்கும்ல காத்துக்கிட்டு இருக்கணும்”

“ஏன் நீங்களும் படம்பாக்க ஏலும்தானே? ஜாதிப்படம் அப்பா. பாத்திட்டுப் போங்க…”

முனுசாமி சங்கடத்தோடு சிரித்தான்.

“சரி, கங்காணி நமக்கு நான் சொன்னதுமாதிரி லொறி விசயம் ஹெல்ப் பண்ணறதா? சரிசொன்னா ராவைக்கு நம்ம எக்கவுண்டலே சாப்பாடு, படங், அதுமுடிஞ்சி நம்பட காருல கொண்டு விடுறது” என்றான்.

என்ன தாராள மனசு இவனுக்கு என்று முனுசாமி குழைந்துபோய் எக்களிப்போடு அவனது இரண்டு கரங்களை யும் பிடித்துக் குலுக்கியவாறு “ரைட்டு! ரைட்டு” என்று குளறினான்.

கரத்தைப் பிடித்து நடந்து கொண்டு டிரைவருக்காகத் தன் உயிரையே கொடுக்கவும் தயார் என்றும்லொறி விசயம் தனக்கு அற்பம் என்றும் உளறிக் கொண்டிருந்தான்.

பஜார் வீதியிலிருந்து பிரிந்து ‘பொட்டனிக்கல் கார்டன் பக்கமாக போகும் ரோட்டில் நடந்துகொண்டிருந்தார்கள். அந்தப் பக்கந்தான் டிரைவரின் வீடு இருந்தது.

வீடு நன்றாகவே இருந்தது. முதுகுப்புறத்தில் லேஸ்உறை யிட்ட நாற்காலிகள், டீபாய், ரேடியோ எல்லாம் கச்சிதமாக இருந்தன. வீட்டில்தான் ஒரு சுடுகுஞ்சையும் காணவில்லை.

இரவு சாப்பாட்டுக்குப்பிறகு அவர்களோடு டிரைவரும் படம்பார்க்க கிளம்பினான். அவனும் முனுசாமியும் ஒன்றாக நடக்க, நாலடிதூரம் பின்னால் தள்ளிக் கமலம் வந்துகொண்டிருந்தாள்.

தூரத்தூர இருந்த லைட்தூண்கள் இருளை வெல்ல முடி யாமல், தங்கள் வரிசையே ஒரு அணியாக இருளை அழகு செய்துகொண்டிருந்தன.

“முனுசாமியை போகவிட்டு டிரைவர் தயங்கி நகர்ந்த வாறு “தங்கச்சிக்கி சாப்பாடு நல்லா இருந்தனதா?” என்று சிரித்தான். கமலம் வெட்கத்தோடு சிரித்தவாறு “நல்லா இருந்திச்சி” என்றாள்.

“கொஞ்சந்தாங் சாப்பிட்டது. பசி இல்லையா?”

பதில் சொல்லாத அவள் நாணமும் பல்தெரியாத அவள் சிரிப்பும் அழகாக இருந்தன. அவன் குரலை சற்றுத் தாழ்த்தி இதயபூர்வமாகக் கேட்பதுபோல “தங்கச்சிக்கு இந்த படங் ஆசையா வேறே படங் பார்க்கணுமா?” என்றான். அங்குள்ள நான்கு தியேட்டர்களிலும் நல்ல படங்களே ஓடிக்கொண்டி ருந்தாலும் இவர்கள் போய்க்கொண்டிருந்த தியேட்டரில் தான் சின்னஞ் சிறுசுகளும் பெயர் சொல்லும் பிரபல நடிக ரின் படம் ஓடிக்கொண்டிருந்தது.

“இதுதான் நல்லபடம் இதுக்கே போவோம்” என்றாள்.

ரோடுக்குப் பக்கத்திலிருந்து வீரியத் தொடங்கியிருந்த ரேஸ் கோர்ஸ் மைதானத்தையும் அதற்குள் ஆள்நின்றாலும் தெரியாத இருளையும் பார்த்தவாறு டிரைவர் எட்டிநடந்து முனுசாமியோடு இணைந்துகொண்டான்.

தியேட்டர் வாசலில் ரௌடிமாதிரி சாரத்தை ஒருபுறத் துத் தொடை சம்பூர்ணமாகத் தெரியத் தூக்கிக் கொண்டு நின்ற ஒருவன் மூவரையும் பார்த்துவிட்டு டிரைவரை நோக் கிக் கண்சிமிட்டியவாறு ‘வாளித’ என்றான். டிரைவர் எரிச்சலோடு “கட்ட வஹப்பன்டோ” என்று அதட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

தியேட்டருக்குள் போய் அமர்ந்ததும் மீண்டும் ஒருமுறை தியேட்டரிலிருக்கும் ‘பாரு’க்கு இருவரும் போய்வந்தார் கள். தியேட்டரில் காடையர்களின் தொந்தரவு இருக்கு என்று சொல்லிக் கமலத்தை நடுவில் உட்காரவைத்து இரு புறமும் டிரைவரும் முனுசாமியும் அமர்ந்துகொண்டார்கள். விளக்குகள் அணைந்து படம் ஓடத்துவங்கியது.

டிரைவர் ஒரு சொக்லேட்டை கமலத்திடம் நீட்டி “சாப் பிடுங்க தங்கச்சி” என்றவாறு அவள் கரங்களைப் பிடித்து அதில் வைத்தான். அதன் பின்னருங்கூட அவன் தன் கரத்தை எடுத்துக்கொள்ளாதால் கமலம் தன் கரங்களை உரு விக்கொள்ள வேண்டியதுதாயிற்று.

டிரைவர் அவள் காதருகில் குனிந்து “தங்கச்சி காலம் பறக்கி எத்தனை மணிக்கு வேலைக்குப் போகவேணும்?” என்றான். கமலம் மெல்லிய குரலில் “ஏழு மணிக்கு” என்றாள்.

“ராவைக்கி நம்ம வீட்டிலே நல்லாத் தூங்கிட்டி காலம் பற அஞ்சு மணிக்கு போக ஏலுந்தானே? பாவங் கங்காணி இப்பவே தூங்கறது…”

முனுசாமி நாற்காலியில் சாய்ந்து கூரையைப் பார்த்த வாறு தூங்கிக் கொண்டிருந்தான். வாய்திறந்து மூச்சு சன்ன மாக வந்துகொண்டிருந்தது.

கமலம் ஒன்றும் பதிலளியாது திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது இடப்பக்கம் கதகதத்த வெப் பத்திலிருந்து டிரைவர் தன்பக்கம் சாய்ந்திருப்பதை உணர்ந்தாள்.

அவனது கரம் அவள் கரம் ஒன்றைப் பற்றி வருடத் தொடங்கியபோது அவள் திடுக்கிட்டுத் திருப்பினாள். அதை எதிர்பார்த்தவனேபோல அவன் மிகவும் கெட்டியாகப் பிடித் துக்கொண்டான். அந்தச் சிறுநேரத்து இழுபறி தனக்கே அநாகரிகமாகவும், அவனது முரட்டுப் பிடி கொஞ்சமேனும் தளராததாகவும் காணப்பட்டதால் அவள் ஒன்றும் செய்ய இயலாமல் தப்பித்துக்கொள்ள சந்தர்ப்பத்திற்காக காத்தி ருக்க வேண்டியதாயிற்று.

அவனது வருடல் முன்னேறிக் கொண்டிருந்தது. முழங் கையின் மேற்புறத்தில் மெத்தென இருந்த சதைப்பகுதியில் வேறொன்றை எண்ணிப் பசியோடு அவனதுகரம் மேய்ந்து கொண்டிருந்தது. அவள் இரண்டுமூன்று தடவை கையை உருவிக்கொள்ள முயன்று இயலாததால் சோர்வுற்றிருந்ததை அவன் தனக்கு இணங்கியதாகக் கணித்துக்கொண்டு அவளது உடலைத் தொட்டுத்தழுவ முயன்றபோது…

அவள் வெகுண்டு எழுந்தாள். அவனிடம் இழக்காத மறு கரத்தால் குடையை எடுத்து எங்கு விழுகிறது என்று பார்க் காமல் மடார் மடார் என்று கண்மூடித்தனமாக அடிக்கத் துவங்கினாள். சுவையான படத்தில் ஆழ்ந்திருந்த கூட்டம் சிலிர்த்து எழும் பிநின்று பார்க்கத் துவங்கியபோது இதைச் சற்றும் எதிர்பாராத டிரைவர் அவசரமாக எழும்பி அந்த இருளைவிட்டு வாசலைநோக்கி ஓடத்துவங்கினான்.

இரவுப் பொழுது ஒரு சைவாட்டலில் கழிந்துகொண்டிருந்தது. சில பேப்பர்களை விரித்து அதில் கரமே தலையணையாகக் கமலம் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். போதை தெளிந்தும் தெளியாத நிலையில் முனுசாமி இன்னொரு பேப் பர் படுக்கையில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தான்.

தான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யாதபோதும் தனக்கு ஏன் இப்படிக் கொடுமைகள் எல்லாம் நடைபெறுகின்றன என்பது அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது.

– தினகரன் 4-6-61

– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *