மெடிக்கல் ரிப்போர்ட்களோடு ஜம்புவின் மனைவி அகிலாண்டேஸ்வரி கன்ஸல்டிங் அறைக்குச் சென்றாள்.
தன் மனைவி கன்ஸல்டிங் அறையிலிருந்து வெளியே வந்து ஷாப்பர் பையிலிருந்து எதையோ எடுத்துக்கொண்டு மீண்டும் டாக்டர் அறைக்குள் சென்றதைக்கூட கவனிக்காமல் வாட்ஸப்பில் மூழ்கியிருந்ததார் ஜம்பு.
“என்னங்க..”
“கன்ஸல்டேஷன் முடிஞ்சிடுச்சா அகி.” மொபைலை சட்டைப்பையில் செருகியபடியே கேட்டார் ஜம்பு.
“ம்..”
“பார்மஸில மருந்து வாங்கணுமா?”
“ம்ஹூம்.. டாக்டரே கொடுத்துட்டாங்க..”
“அப்படியா” என்று வியந்தபடியே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான் ஜம்பு.
“எல்லாத்தையும் விவரமா சொல்றேன் இப்போ கீரைக் கடைல நிறுத்துங்க. தூதுவளை வாங்கணும்..”
“வரும்போதே வாங்கினோமே அகி.?” வாய் கேள்வி கேட்டாலும் ஸ்கூட்டர் கீரைக் கடையில் நின்று சென்றது.
“டாக்டரம்மா பாவம்க,”
“ஏன்?”
“அவங்களுக்கு கடுமையான தொண்டை சளி .”
“ஓ.!”
“ஆமாங்க.. மூணு வேளை தூதுவளைக் கீரையை நெய்ல பொரிச்சி சாப்ட்டா கபம் அறுத்துண்டு வெளீல வந்துடும்னு சொல்லி கையில இருந்த கீரையை டாக்டருக்குக் கொடுத்துட்டேன்ங்க,,” என்றாள் அகி.
ஜம்பு தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“அதுமட்டுமில்லேங்க. தூதுவளையை இலவசமா வாங்கமாட்டேன்னு சொல்லி பதிலுக்கு ‘சாம்பிள் மாத்திரைகளைக் குடுத்துட்டாங்க…” என்றாள் அகிலாண்டேஸ்வரி வெள்ளந்தியாக..
ஜம்பு இப்போது வாய்விட்டுச் சிரித்தான்.