ஊருக்கு திரும்பணும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 978 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாசி மாதத்தின் கடும்குளிர் கனடாவை கதிகலங்கச் செய்துகொண்டு இருந்தது. 

மைனஸ் முப்பது பாகை செல்சியசில் இருக்கும் குளிர் காற்று பலமாக வீசும் பொழுது மைனஸ் முப்பத்தியைந்து செல்சியசையும் தாண்டிப் போவதுண் ண்டு. இப்படி கடுமையான குளிர் நேரத்தில்தான் ஜெகதீஸ் தன் தாய், தந்தையரின் விருப்பப்படி அவர்களைக் கொண்டு சென்று இலங்கைக்கு அனுப்பி விட்டு மனச் சோர்வுடன் வீட்டுக்கு வந்தவன், மனைவி இரவுச் சாப்பாட்டுக்கு கூப்பிட்டும், சாப்பிட போகாமல் கொஞ்சம் வெந்நீரைக் குடித்து விட்டு படுக்கைக்கு சென்றான். 

இரவு மணி பதினொன்றை தாண்டி இருந்தது. ஜெகதீஸ் படுகையில்தான் கிடந்தான். ஆனால் தூக்கம் அவனை தழுவ மறுத்தது.அவன் புரண்டு பிரண்டு படுக்கையில் உளன்றான். அவன் மனசு ஒரு நிலையில் இல்லை. அவனது உள்ளுணர்வுகளும் உறங்க மறுக்கின்றன. இருக்காதா பின்ன. எவ்வளவு கஷ்டப் பட்டு தனது பெற்றோர்களை கனடாவுக்கு கூப்பிட்டவன். அவர்கள் வந்து இருந்த மூன்று வருடங்களிலும் சந்தோசமாகவே இருந்தவனுக்கு கடந்த ஒரு மாதகாலமாக தாயும், தகப்பனும் தங்களை ஊருக்கு அனுப்பிவிடு என்று ஒரே தன்னை நச்சரித்துக் கொண்டு இருந்ததை அவன் எப்படி மறப்பான். அவர்கள் இப்போது தாயகம் நோக்கி பறந்து கொண்டிருக்க ஜெகதீசின் சிந்தனைகளும் சிறகு விரித்து பறக்க ஆரம்பித்தன. ஜெகதீசுக்கும் அவனது அப்பா, அம்மா ஆகிருக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. 

அப்பா உங்கட பிள்ளைகள் ஒருத்தர்கூட ஊரில் இல்லை என்பதால்தான் உங்களையும், அம்மாவையும் நாங்க கனடாவுக்கு கூப்பிட்டம். வயசுபோன காலத்தில தனியாக இருந்து கஷ்டப்படக் கூடாது என்றுதான் நானும், தம்பி, தங்கச்சியும் சேர்ந்து முடிவெடுத்து உங்களை இந்த நாட்டுக்கு வரவழைச்சம். 

இப்ப என்னடா என்றால் நீங்க ஊருக்கு திரும்பணும் என்று அடம்பிடிக்கிறீங்க.” 

இஞ்ச பார் தம்பி. நீ சொல்லுறதெல்லாம் சரிதான்.நாங்களும் வயசுபோன காலத்தில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று ஒண்டடிமண்டடியாக இருக்கலாமெண்டுதான் நீங்க எல்லோரும் சொன்னதற்கு இணங்க இங்கு வர விரும்பினோம். வந்தும் விட்டோம். ஆரம்பத்தில் எங்களுக்கு உங்களை எல்லாம் பார்த்தபோது சந்தோசமாகத்தான் இருந்தது. நீங்கள். அண்ணன், தம்பி, தங்கச்சி மூன்று பெரும் ஒரே நாட்டில், ஒரே இடத்தில் அக்கம், பக்கம் இருப்பதும் மிக சந்தோசமான விசயம்தான். 

ஆனால் இந்த மூன்று வருஷ புலம்பெயர் வாழ்க்கையில் எங்களுக்கு பல சிரமங்கள், கஷ்டங்கள் ஒவ்வாமைகள் ஏற்பட்டன. அதையெல்லாம் நாங்க உங்க ஒருத்தருக்கும் சொல்லயில்ல. உங்கட இந்த இயந்திரமயமான வாழ்கையில உள்ள ஒவ்வொரு சுமைகளையும் நாங்க பார்த்துக் கொண்டுதான் இருந்தம் இல்லையா ராஜேஸ்வரி” என்று தன் மனைவியை கேட்டார் ஜெகதீசின் அப்பா செபரெத்தினம். 

“ஓம் மகன் அப்பா சொல்லுறது சரிதான். நாங்க கொஞ்சம் சிரமத்துக்கு மத்தியில்தான் இருந்த நாங்க. பழகிபோச்சுதென்றால் சமாளித்து இருந்திடலாம் என்றுதான் பார்த்தோம் முடியல்ல… மற்றது இந்த கடுமையான குளிர் எனக்கும், அப்பாவுக்கும் ஒத்துக் கொள்ளுதில்ல. உங்களை விட்டு போறதென்றாலும் எங்களுக்கு மனக் கஷ்டம்தான். என்ன செய்ய, இனி போறதென்று முடிவெடுத்திட்டம். அப்பாட பென்சன் அங்கு வருகுது. அது எங்களுக்கு காணும். வெள்ளாம பூமி குத்தகையும் வரும். அது எங்களுக்கு செல்லாபத்தியமாக காணும். இனி ஊரில் அக்கம், பக்கம், கோவில் குளம் என்று நாங்கள் போய்வருவோம். இங்க என்னடா எண்டால், நீங்க வேலைக்கும், பிள்ளைகள் ஸ்கூலுக்கும் போனபின் நாங்க இந்த வீட்டுக்குள்ள இருந்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு எத்தனைகெண்டு இருப்பது. 

எத்தனை தரம்தான் டிவி பார்ப்பது. என்னை சமைக்கவும் விடமாட்டீங்க.” 

“அம்மா இங்க இருக்கிற நிறைய பெற்றோர்கள் அப்படிதான் இருக்கிறாங்க. பிள்ளைகளோடும் பேரப் பிள்ளைகளுடனும் சந்தோசமாக இருக்கிறாங்க. தமிழ் ரி.வி. தமிழ் ரேடியோ என்று இங்கு கனடாவில் எல்லாம் வசதியாக ஊர்போல இருக்குத்தானே..” 

“அது சரி மகன் எல்லாம் நல்லபடியாக இருக்குதுதான். வார இறுதியில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பூப்பு நீராட்டு விழா, அரங்கேற்றம், இசைநிகழ்ச்சி,ஒன்றுகூடல், புத்தக வெளியீடு என்று நடக்கின்றன இல்லையென்று சொல்லயில்ல. இதையெல்லாம் தாண்டி எங்கள் உளுணர்வில் ஒரு வெறுமை. இழப்பு இருந்துகொண்டே இருக்கிறது” 

“அதோட தம்பி கடைசி காலத்தில எங்கட கட்டை நாங்க பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணில்தான் வேகவேணுமென்று விரும்பிறம். என்னதான் இந்த நாடு பல சௌகரியங்களை தந்தாலும் சொந்த நாடுபோல வருமா?” 

“அப்பிடி சொல்லு ராஜேஸ்வரி. இதைத்தான் இங்கே உள்ள சி.பி.சி. வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பு செய்யுறாங்க ” சொந்தநாடு என்றாலே சொர்க்கபுரிதான். அதை சொல்லிச்சொல்லி பாடுவதே நம்ம பணிதான்” என்று. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான் ஊருக்கே சென்றுவிடுகின்றேன்.அப்படி ஒரு பிரமை எனக்கு” 

“அந்தப் பாட்டில ஒரு வரி வரும் “நமது நாட்டில் வாழ்ந்தபோது வசந்தகாலம்தான் நாம் நாடுகடந்து வந்தபோது புதிய வேஷம்தான்” என்று. இந்த நாட்டுக்கு வந்து எல்லோரும் வேஷம் போட்டுக் கொண்டுதான் வாழ்கிறார்கள். அப்படிதான் வாழமுடியும். என்று அழகாக எழுதியிருப்பார் அந்த பாடலாசிரியர்.” 

இங்க பாருங்க நான் உங்கட உணர்வுகளை மதிக்கின்றேன். நாங்களும் இந்த நாட்டுக்கு இஷ்டப்பட்டு வரயில்ல. நாட்டில் ஏற்பட்ட போர்சூழல், அதனால் அங்கு இருந்த அசாதாரண நிலை, உயிருக்கு அச்சுறுத்தல் போன்ற காரணிகள்தான் எங்களை இந்த நாட்டுக்கு வர வைத்தது. நீங்களும் அன்று உள்ள சூழ்நிலையில் உங்கள் பிள்ளைகள் உயிர்தப்பினால் போதும் என்று எங்களை அனுப்பி வைத்தீர்கள்.” 

அது உண்மைதான் மகன். அந்த நேரத்தில் எங்களுக்கு உங்களை காப்பாற்ற வேறு வழி தெரியல்ல. நீங்க இங்க வந்தும்,ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப் பட்டீங்க என்றெல்லாம் எங்களுக்கு தெரியும். இப்போ கடவுள் கிருபையால் வாழ்கையை நிலை நிறுத்திப் போட்டீங்க. அதப் பார்த்து எங்களுக்கு பெரிய திருப்தி. நாங்க நாளைக்கு கண்ணை மூடினாலும் பிள்ளைகள் நல்ல வாழ்க்கை வாழுறாங்க என்ற நினைப்பில போய் சேர்ந்திடுவம்.” 

“ஏனப்பா இப்படியெல்லாம் கதைக்கிறீங்க. நீங்கள் நல்ல படியா நோய் நொடி இல்லாமல் இருந்து நீண்டகாலம் வாழவேணும். ஊரில் போய் இருந்தால்தான் உங்களுக்கு நிம்மதி கிடைக்குமென்றால் நான் உங்களை C உடனே அனுப்பி வைக்கிறேன். கவலைப் படாதீங்க. 

ஒரு மாதமாக எனக்கும் உங்களுக்கும் இடையில் நடந்த இந்த பிரச்சினையில் ஏதாவது உங்க மனசு நோகும்படி நான் பேசி இருந்தால் என்னை மன்னிச்சுக்கோங்க” 

“சேச் சே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தாய் பிள்ளைக்குள்ள இதெல்லாம் சகஜம்தானே. நீ ஒன்றும் யோசிக்காத. நாங்க ஊரில போய் பழையபடி நல்ல வாழ்க்கையை வாழ இப்போ அங்கே வழி இருக்கு. புதிய அரசு. நல்லாட்சி எல்லாம் நடக்குதாம். செய்திகளும் அப்படிதான் வந்து கொண்டு இருக்கின்றன. 

“சரி அம்மா.. உங்கள் ஆசைப்படி நீங்கள் ஊருக்கு திரும்பிறீங்க. நான் நாளைக்கே உங்களுக்கு டிக்கெட் போட்டுவிடுகிறேன். ஒண்டுக்கும் யோசிக்காதைங்கோ என்ன., சரிதானே என்று தன் தாய், தகப்பனோடு கடந்த ஒருமாதமாக நடந்து வந்த ஊருக்கு திரும்பணும் என்றபிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தான் ஜெகதீஸ். 

அவனின் எண்ணச்சிதறல்கள் அவனது ஊருக்கும் செல்லத் தவறவில்லை. கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்ட ஆலையடி கிராமத்தை சேர்ந்த செபரெத்தினம் ராஜேஸ்வரி தம்பதியின் மூத்த மகன் ஜெகதீஸ். தகப்பன் ஆசிரியராக இருந்தாலும் அவர் அடிப்படையில் ஒரு விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். செபரெதினம் அவர்களின் தகப்பனார் கனகரெத்தினம் போடியார் பல ஏக்கர் காணி பூமிகளுக்கு சொந்தக்காரராக இருந்தார்.. இரண்டு போகங்கள் செய்கை பண்ணக்கூடிய நெற்காணிகள் அவருக்கு பல ஏக்கர் இருந்தன. 

கனகரெத்தினம் போடியார் ஒரு சைவ வேளாளராக இருந்தவர். ஆனால் அந்தக் காலத்தில் இலங்கையில் மெதடிஸ்த மிசனரி கிறிஸ்தவ மதத்தை வெகுவாக பரப்பிக் கொண்டிருந்தபோது கிழக்கிலும் அதன் செயற்பாடு விஸ்தரிக்கப்பட்டிருந்தது. அந்த திருச்சபையினரின் பிரசங்கங்கள் பல ஊர்களிலும் நடந்தன. அதில் பலர் ஈர்க்கப்பட்டதாலும், மிசன் பாடசாலைகளில் ஆசிரியர் உத்தியோகம் கிடைத்ததாலும் பலர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள் என்று சொல்வதுண்டு. 

அப்படி மாறியவர்களில் கனகரெத்தினம் அவர்களும் ஒருவர். அவர் மகன் செபரெதினம் அவர்கள் தன் தந்தை வழிவந்த கிறிஸ்தவர்தான். கனகரெத்தினம் அவர்கள் தன் பிள்ளைகளை படிப்பித்து அவர்களை நல்ல உத்தியோகத்தில் அமர்த்த தவறவில்லை. செபரெதினம் மாஸ்டருக்கு இரு சகோதரங்கள் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. ஜெகதீசின் பெரியப்பாவும், மாமியுமான அவர்கள் காலமாகி பல வருடங்களாகிவிட்டன. அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணையாமல் உத்தியோகம் பார்த்தும், ஆண்டவரின் ஊழியத்தில் இணைந்தும் இருந்து மறைந்தவர்கள். 

இவர்கள் மறைவுக்குபின் தனிமையில் ஒற்றையாளாக விடப்பட்ட செபரெதினம் அவர்கள் ஆசிரியத் தொழில் செய்துகொண்டே தங்கள் நிலபுலன்களைப் பார்த்துக்கொண்டும், பிள்ளைகளை படிப்பித்துக் கொண்டும் இருந்த வேளையில்தான் நாட்டில் அசாதாரண நிலை உருவாகத் தொடங்கியது. 

இலங்கையில் மாறி மாறிவந்த அரசுகள் தமிழர்களின் உரிமைகளை கொடுக்கவும் இல்லை.நலன்களை பேணவும் இல்லை. 

விரக்கதி அடைந்த தமிழர் தரப்பு பல முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் என்று நடத்தினாலும் பேரினவாத அரசுகளிடமிருது எந்த அனுகூலமும் கிடைக்கவில்லை.அதன்பின் பல தமிழர் அமைப்புகள் உருவாகி ஆயுத போராட்டத்தில் இறங்கி அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கின. 

இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல்களால் நாட்டில் அமைதி குலைந்தது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு சூழல் ஏற்பட்ட போதுதான் செபரத்தினம் மாஸ்டர் தனது மூன்று பிள்ளைகளையும் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார். தனது காணிகளில் சிலவற்றை விற்று ஏஜென்சிக்காரருக்கு கொடுத்து அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அதன்பின் அவர் மனைவி ராஜேஸ்வரியுடன் தனிமையில் ஊரில் இருந்து வந்தார். ஓய்வு பெற்றார். 

பிள்ளைகள் கனேடியப் பிரஜைகள் ஆனபின் ஊர் வந்தபோது அவர்களுக்கு நல்ல இடத்தில திருமணங்கள் செய்து வைத்தார். 

பல வருடங்கள் உருண்டோடினபின்னர் தங்கள் பெற்றோரை தங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்பித்தான் ஜெகதீஸ் அவர்களை கனடாவுக்கு கூப்பிட்டான். அவர்களும் விரும்பியே வந்தார்கள். அந்நிய நாடு,அந்நிய சூழ்நிலை அவர்களுக்கு. ஆரம்பத்தில் பிள்ளைகளைக் கண்ட சந்தோசம். பேரப்பிள்ளைகள் பார்த்த மகிழ்ச்சி என்று நன்றாகத்தான் இருந்தது. 

நாளடைவில் அவர்களுக்கு இந்த புலம்பெயர் வாழ்வு அலுப்புத் தட்டியது என்று சொல்வதைவிட பிடிக்கவில்லை. இருவரும் மகனோடு ஊருக்கு திரும்பணும் புராணம் பாடத் தொடங்கினார்கள். பல வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் அவர்களின் பக்க நியாயம் வெற்றி பெற்று இன்று தாயகம் நோக்கி பறந்து விட்டார்கள். 

என்னதான் அயல்நாட்டில் அனைத்தும் கிடைத்தாலும் அவர்களுக்கு அவர்களின் தாய்நாடுதான் உசத்தி என்பதை நிலைநிறுத்தி ஊருக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஜெகதீசின் எண்ணங்கள் சிறகடித்து ஓய, மூளை உறக்கநிலை அடைய, உள்ளுணர்வு அமைதியடைய அவன் கண்கள் தூக்கத்தை இப்பொழுது தழுவிக்கொண்டன.

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *