ஊமையன் கோயில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 104 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைவாரி உச்சிவகிடெடுத்து நெற்றிப் பொட்டிட்டாற் போன்று ; சிரசாய் நிமிர்ந்து ; மார்பென உயர்ந்து ; புஜங்களாகப் பரந்த மலைகளிலும் குன்றுகளிலும் சரிவுகளிலும் இறக்கங்களிலும்; சாய்வுகளிலும் இராட்சதமாய் பாய் விரித்துக் கிடக்கும் தோட்டத்திற்கு நடுவே அமைந்துள்ள தேயிலை ஸ்டோர்; இறப்பர் ஸ்டோர்; கொக்கோ ஸ்டோர்; பிள்ளை மடுவம் அரிசிக் காம்பரா, இன்னும் தோட்டத்து உத்தியோகஸ்தர்களின் பங்களாக்கள்; இருண்ட வாழ்க்கையின் பிரதியமைப்பாக விளங்கும் கரிய லயங்கள்; என்பனவற்றுக்கிடையே மாரியம்மன் கோயிலொன்று; மீனாட்சியம்மன் மூக்குத்தியென மின்னிக் கொண்டிருக்கின்றது.

ஒரு தோட்டத்து இராஜ்ய’ மெனத்திகழும் அந்த பாரிய பிரதேசத்தின் நடுவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் இது. தோட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்குமே பொதுவான கோயிலும் இதுவாகும்.

இந்த தோட்டத்தில்தான் எத்தனை? எத்தனை கோயில்கள்…?

தோட்டத்திற்கு ஆள் கட்டிவந்த’ பெரிய கங்காணிமார்கள் தங்கள் தங்கள் “பெரட்டில்” உள்ளோர் வழிபாடு செய்ய ஏற்படுத்திய கோயில்கள்…

தோட்டத்தின் வடக்கு எல்லையில்; மூன்றாம் நம்பர் மலைக்கும் எட்டாம் நம்பர் மலைக்கும் இடையே மலைத்தொடரில் மேகத்தைத் தழுவி நிற்கும் சிகரத்தின் உச்சியில் சிந்தாகட்டி கோயில்!

சிந்தாகட்டி முனி’ சிந்தாகட்டி மலையிலிருந்து பூரணை தினத்தன்று ஆற்றுக்கு அப்பாலிருக்கும் நாகலவத்தை மலைக்கு பறந்து செல்வதாக இன்றும் தோட்டத்தில் எஞ்சியிருக்கும் “கம்பளிப் பெரியவர்கள்” கூறக் கேட்கலாம்.

“சிந்தாகட்டி முனி” நட்ட நடுச்சாமத்தில் பறந்து போகும் போது அதற்கு துணையாக வால்ராசா முனியும் பறந்து போகுமாம்.” வால் “முனிக்கு வால்ராசா கோயில் ” ஏலமலையில் இருக்கின்றது.

இன்னும் தனுஸ்கோடியில் பாய்மரக்கப்பலேறி; இராமர் அணையை கையெடுத்துக்கும்பிட்டு தட்டப் பாறையில் நடந்து ; கால் பொசுங்கி; முன்பின் அறியாத மன்னார் மணற்கடலில் கால் பதித்து; அடர்ந்த காட்டுவழியே காட்டுச்சுரம் வாட்ட; விலங்குகளின் கொடுமைகளை சகித்துக் கொண்டு; கால்நடையாக நடந்து வந்தபோது கூடவே துணைவந்த குலதெய்வத்தை மறந்துவிடாமல் தோட்டத்தில் குடியமர்த்தி வைத்த கோயில்கள்…

கனவில் தோன்றி காட்சி கொடுத்து; இன்ன இடத்தில் என்னை எழுந்தருளச் செய்” என்று சாமி கனவில் கேட்டுக் கொண்டதற்கமைய சாமி பேச்சைத்தட்டாது குறிப்பறிந்து கல்நாட்டி சூலம், வேல், தண்டு நட்டு வழிபடும் கோயில்கள்…..

“குலக்கறுப்பு” குறிப்பிட்ட இடத்தில் அமைத்த கோயில்கள் வேலைக்காட்டில் முள்ளுக்குத்தும் போதோ, கான் வெட்டும் போதோ உருக்கொண்டு அருள்வந்து சாமி ஆடி’, அடே என்னைய மறந்திட்டியா’ நான் தாண்டா பரம்பரை பரம்பரையா உன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன் “என்னை மறந்திடாம பூசை போடு” என்று கேட்டுக் கொண்ட சாமியை மன்டு வைத்து உடுக்கடித்து சாமி பார்த்து மடைக்கு வரவழைத்து கேள்வி கேட்டு எங்க குடிவைக்கனும்’ என்று மரத்திலோ கல்லிலோ எழுந்தருளச் செய்து பூசலார் கோயிலாக வழிபடும் இடங்கள்….

பெரியதுரை பங்களாவிற்கு கீழே ” தேர்க்கல்லு” தேர்க்கல்லின் கீழ்ப்பாக பாறைப் பிதிர்வில் வருடத்திற்கு ஒரு பொங்கல் பூசையோடு சயனித்திருக்கும் வெட்டரிவாள் சாமி.

சொந்த ஊரிலிருந்து பிழைக்க வந்த ஊருக்கு “பிடிமண்” கொண்டுவந்து ஆகமவிதிப்படி அமைத்த கோயில்கள்..

‘நக்கில்ஸ்’ தொடர்களின் குஞ்சுகளென தோட்டத்தைச் சுற்றி அரணமைத்துள்ள மலைகளின் கனவுகளில் வாழும் ஏழு கன்னியம்மன்கள் கோயில்கள்…

“பாவம் செய்யாதே என்று பயமுறுத்தி நிற்கும் சித்திரபுத்திரர் கோயில்.” அதில் நடக்கும் சித்திரைக்கஞ்சி. நாடகத் திருவிழா அம்மாடி..

தோட்டத்து “பாடமாதிக்கு ”ம் இடுகாட்டிற்கும் இடையே கொக்கோ மலையில் அமைந்துள்ள முனியாண்டி, வேட்டைக்கறுப்பன், மின்னடையான் இடும்பன், வைரவர் கோயில்கள்….

வருடந்தோறும் கூத்தாடும் காமன் கோயில் எட்டாம் நம்பர் மலையின் இறக்கத்தில் எழுத்துகற்பாறைக்கு மேலே அமைந்துள்ள தொட்டிச்சியம்மன் கோயில்…

எழுத்துக்கற்பாறையின் வரலாறும்; புராணமும்; மேதா விலாசமும் தனியானது!

தொட்டிச்சியம்மன் கோயில், மலை உச்சியில் குட்டையாகப் படர்ந்து நிற்கும் ஆலமரமொன்றின் அடியில் உள்ளது. அதிகம் உயரமில்லா அந்த ஆலமரத்தை இடதுபுறமாக வலம் வந்து சுனையொன்று; தொட்டிச்சியம்மன் காலடியில் தெண்டனிட்டுக் கிடக்கின்றது.

”இந்த சுனையில் நீராடி எழுத்துக் கற்பாறையில் காணப்படும் மூன்று எழுத்துகளையும் சரியாக வாசித்துப் படித்து விட்டால் கற்பாறை பிளக்க அதிலிருந்து புதையல் வெளிப்படும்” என்பது இன்றளவும் தோட்டத்தில் நிலைபெற்றுள்ள கதையாகும்.

ஆனால், எழுத்துக்களை சரியாக வாசித்து பாறையினைப் பிளக்கச் செய்து புதையலை வெளிப்படுத்தும் ஒருவர், தான் அந்தப் புதையலைப் பெற்று பயனடைய முடியாது.

குகை போல் அமைந்து தலைக்கு மேலே படர்ந்து விரிந்துள்ள அந்த பாரிய பாறையில் சமாந்திரமாக நீண்டுள்ள பகுதியிலேயே இம்மூன்று எழுத்துக்களும் காணப்படுகின்றன.

ஒருவர் மூன்று எழுத்துக்களையும் சரியாக வாசிக்கும் பட்சத்தில் பாறை பிளக்குமேயானால், அவர் தலை நசுங்கிச் சாக நல்ல வாய்ப்புண்டு.

அவரோடு செல்பவர்களுக்குத்தான் அந்தப் புதையல் அதிர்ஷ்டம். நல்லவேளை இதுவரை கற்பாறை எவரையுமே பலிகொள்ளவில்லை. புதையலும் புதைந்து கிடக்கின்றது. நம்பலாமா?

பிராமி எழுத்துக்களைப்போல் சிலந்துப் பூச்சியின் வடிவில் “கோடி” காட்டும் எழுத்துக் கற்பாறையின் எழுதப்படாத கதை இதுதான்.!

பலர் எழுத்துப் பாறையிலுள்ள முதலிரு எழுத்துகளையும் படித்து விட்டார்களாம். மூன்றாவது எழுத்தைத்தான் சரியாக வாசிக்க முடியவில்லையாம். மலையக மக்களின் எதிர்காலத்தைப் போல! புரியாத எழுத்து.

புதையலை எடுக்க வேண்டுமென்ற ஆசையேதுமில்லாது; எழுத்துக்கற் பாறையைப் பார்த்து அந்தச் சூழலை ரசித்துச் சென்ற தற்காலத்து தோட்டத்திலுள்ள படித்த இளைஞர்கள் சிலர், “காடுகளை அழித்துத் தோட்டங்களை உருவாக்கி கான்களை நிரப்பி கற்பாறைகளைக் குடைந்து பாதை அமைத்த நம் முன்னோர்களில் எவரோ ஒருவர் தன் வேதனையையும் மன உளைச்சலையும் கொட்டி வைத்த குறியீடுதான் இதுவென ”

அபிப்பிராயம் கூறியபடி வந்தனர்.

பாறைக்குள்ளே புதையல் உண்டோ இல்லையோ …. அது உளியினால் பொழியப்பட்ட எழுத்தானால்; அந்த எழுத்தை செதுக்கிய உளி; இந்த நாட்டிற்கு தோட்டங்கள் என்ற புதையலை வழங்கிய இந்திய வம்சாவழி தமிழ் மகனுடைய கைகளில் தவழ்ந்ததாகத்தான் இருக்கவேண்டும்.

தொட்டிச்சியம்மன் கோயிலுக்கு மிகச் சமீபமாகவே அடர்ந்த மூங்கில் புதர்கள் காணப்படுகின்றன. மூங்கில் காடுகளின் தொடர்ச்சியாக பிரம்புக் காடுகள் வளர்ந்து பின்னிக்கிடக்கின்றன.

மூன்றாம் நம்பர் மலையிலிருந்து எட்டாம் நம்பர் மலைக்கு கொட்டகல பீலி வழியே செல்லும் மண்ரோடில் நடந்தால் கொஞ்ச தூரத்தில் மலையிடுக்கில் ஒரு திடீர் வளைவு. அந்த இடத்திற்கு போகும் வரையில் இந்த முடக்கு கண்ணுக்குத் தெரியாது. உணரவும் முடியாது.

மலையும் மலையும் நூலிடையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

கீழே அதள பாதாளம்! அதில் எருக்கம்புதர் மண்டிப்போய் கிடக்கின்றது. எருக்கம் பூக்களின் மணம் பரவி நிற்கும்.

இந்த வழியே வருவோர்; சற்று நிதானமில்லாமல் வந்துவிட்டால் விபரீதம் தான்…!

ஆபத்து வலை விரித்து நிற்கும் அந்தப்பகுதியில் நடமாட்டம் மிகக் குறைவு.

இந்த மலை இடுக்கில்தான் “ஓசைக்கல்” உள்ளது. “ஓசைக்கல்” சொன்னதைத் திரும்பிச் சொல்லும்.

“ஓசைக்கல்லோ ….” என்று உரத்துச் சத்தமிட்டால் “ஓசைக்கல்….லோ லோ….” என்று மலைகளும் திக்குகளும் அதிரும் படியாக எதிரொலி கேட்கும்.

“ஓசைக்கல்” என்றால் “ஓசைக்கல்” “தோசைக்கல்” என்றால் “தோசைக்கல்” “வாடா” என்றால் “வாடா” “போடா” என்றால் அதுவும் “போடா” தான்!

கத்திப் பேசினால் ; கத்தும். சிரித்தால் சிரிக்கும். அழுதால் அழும். சுயநல வாதிகளின் பிடியில் மயங்கிக் கிடக்கும் அப்பாவி மலையக மக்களைப் போல!

அந்த வழியாக மலைகளுக்குத் தேத்தண்ணியும் சுட்ட ரொட்டியும் கொண்டு செல்லும் சிறுவர்கள் எவ்வளவு தான் நேரம் தாமதித்துச் சென்றாலும் கொஞ்ச நேரமாவது இந்த ஓசைக் கல்லோடு உறவாடி; விளையாடாமல் செல்வது கிடையாது.

ஓசைக்கல்லோடு ‘கத்திக் கத்திப் பேசி’ விட்டு இறுதியாக “கெட்ட வார்த்தைகளால் ” ஏசிவிட்டு ஓடுவார்கள் சிறுவர்கள்.

ஓசைக்கல் மட்டும் அவர்களை சும்மா விட்டு விடுமா….? “போனால் போகட்டும்” அவர்கள் “சிறுவர்கள் தானே ” என்று பெரிய மனசுடன் இருக்காது. தனக்கு துதிபாடாத அப்பாவி ஆசிரியரை துரத்திப் பழிவாங்கும்

அரசியல்வாதியைப் போல துரத்தி வந்து ஏசும்.

இந்த ஏச்சை வாங்கிய சிறுவர்கள் துள்ளிக்குதித்து நகைத்து ஓடும் போது குட்டிச்சாக்கிலுள்ள தேனீர் போத்தல்கள் “ணங்… ணங் ங்…” கென்று தாளம் போட்டுக் கொள்ளும்.

சிறுவர்கள் …… பிஞ்சுகள் இப்படித்தான் ஆடிப்பாடித் திரிவார்கள். கால நேரத்தைப்பற்றி அக்கறை இல்லை என்று பெருமனசு வைக்காமல் தேங்காய் இல்லாமல். சுட்ட ரொட்டியும் கானுகொச்சிக்காய் சம்பலும் மனம் சலிச்சுப்போகும்.

மலைக்கு தேத்தண்ணி கொண்டு போகும் சிறுவர்களுக்கு இது ஒரு குஷியான விளையாட்டு.

ஓசைக்கல் பள்ளத்திற்கு கிழக்கேயுள்ள நாலாம் நம்பர் மலை “பட்றப்பர் மலை”. நாலாம் நம்பர் மலையின் தொங்கலில் தான் ஊமையன் கோயில் இருக்கின்றது.

மூன்றாம் நம்பர் முடக்கில் கிடக்கும் எருக்கம் பூ காடுகள் ஊமையன் கோயில் வரை வியாபித்துக் கிடக்கின்றன.

ஊமையன் கோயில்…. இது என்ன விசித்திரமான கோயில்! இப்படி ஒரு தெய்வமா? இப்படியும் ஒரு கோயிலா…?

முதன் முதலாக கேள்விப்படும் எவரும் எழுப்பும் ; மனதில் எழும்; நியாயமான கேள்வி…. இது!

ஆனால் பரம்பரை பரம்பரையாக இத் தோட்டத்தில் வாழும் மக்களில் எவரும் இதனைப்பற்றி மெய்யியல் விசாரணை செய்து கொண்டதில்லை.

இப்படி ஒரு கோயில் வேறு எங்காவது உண்டா ? என்று அறிய முற்பட்டதும் இல்லை.

கேள்விகள் கேட்டு உண்மையை அறிந்து நடந்தால் நம்மவர்களின் நிலை இப்படியா இருக்கும்!

காட்டுத் தொங்கலில் அமைந்துள்ள ஊமையன் கோயிலின் நடைமுறையே தனியானது. தோட்டத்திலுள்ள மற்றைய ஆலயங்களைப் போன்று வெள்ளி, செவ்வாய் பூசை. வருடத்திற்கொருமுறை வருடாபிஷேக உற்சவம்…ம் இப்படி ஒன்றும் ஆகம விதிப்படி கிடையாது.

ஆனால் வருடத்திற்கு ஒரு தடவை ஊமையன் கோயிலில் அண்டாவில் பொங்கல் வைப்பார்கள். வீட்டுக்கு ஒரு பிடியாக சேர்த்த அரிசியும் சர்க்கரையும் மட்டும்தான். அதுவும் இந்தப் பூசையில் பெண்கள் பங்கு கொள்வது இல்லை.

பெண்கள் சும்மா கூட’ ஊமையன் கோயிலுக்கு போவதில்லை.

ஸ்டோருக்கு பக்கத்தில் ரோதமுனி. ரோதமுனிக்கு வருடந்தோறும் கடாவெட்டி பூசை செய்யப்படுகின்றது. இதுபோல கவாத்து சாமிபேரால் உயிர்பலி கொடுக்கப்பட்டாலும்; கள்ளும் இறைச்சியும் படைப்பவர்களுக்குத்தான். பலி கொடுக்கப்பட்ட மிருகத்தின் ஈரலை நெருப்பில் சுட்டு முக்கிளை கொண்ட குச்சியில் குத்தி படைப்பர்.

மதுரைவீரன் திருவிழா ; கோயிலிலிருந்து லயத்திற்கே வந்து கலகலப்பாக விளங்கும்.

இவையெல்லாம் பிரிவு பிரிவாக; பகுதி, பகுதியாக நடக்கும் போது மாரியம்மன் திருவிழா மட்டும் பொதுவானதாக விளங்கும். தோட்டத்தில் பிள்ளையார், முருகன் ஆகியோர் கோயில் கொண்டிருந்த போதும் அம்மனே அருள் தெய்வம். தோட்டத்திலுள்ள கோயில்களில் ஊமையன் கோயில் மட்டும் ஒதுங்கியே இருக்கின்றது. இந்த ஊமையன் கோயிலுக்கு மட்டும் எவரும் சொந்தம் கொண்டாட வருவதில்லை. தினமும் உண்டியல் நிறையும் கோயிலா

அது? எவரும் சொந்தம் கொண்டாடி வழக்காட…?

அதுவும் தூரத்து மலையிலுள்ள கோயில், காளாஞ்சி; பொன்னாடை என்ற பேச்சுக்கும் இடம் இல்லை.

வருடந்தோறும் ஊமையன் கோயிலில் நடைபெறும் பொங்கல் பூசைக்கு மட்டும் தோட்டத்திலுள்ள அனைவரும் பங்களிப்பு செய்து ஒத்துழைக்கின்றனர்.

ஆனால் பூசை செய்யும் கடமையை மட்டும் தோட்டத்திலுள்ள முனியாண்டி குடும்பத்தினர் மட்டுமே செய்து வருகின்றனர்.

முனியாண்டிக்கு முன்னர் அவனது தகப்பன் பிச்சாண்டி அதற்கு முன் அவனது அப்பன் பாட்டன். முனியாண்டிக்குப் பின் அவன் மகன் முத்து. அதற்குப் பின்னர் அவனது மகன். இது ஊமையன் கோயில் பூசை விதி.

ஊமையன் கோயிலில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று பொங்கல் வைக்கப்படுகின்றது.

ஊமையன் கோயில் பெயருக்குத்தான் கோயிலே அன்றி அங்கு எந்த ஒரு கட்டிடத்தையும் காணமுடியாது. ஒரு கல்லுத் திண்டின் மேலே முக்கோண வடிவில் நடப்பட்ட கல். சுற்றி வர மாமரங்களும் மலை வேம்பு, மரங்களும் பயங்கர அனுபவத்தையூட்டும் வகையில் செறிந்து வளைந்து வளைந்து முளைத்துள்ளன.

பூசை நடைபெறும்போது இக் கல்லுச் சிலைக்கு அரளிப் பூமாலையைச் சுற்றி சிலையின் வாயாக கணிக்கும் பகுதியை சிவப்புத் துணியால் கட்டி பொங்கலை படைத்து தூபம் கட்டுகின்றார்கள்.

சாமி சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து மேலே அண்ணார்ந்து பார்த்தால் மூன்றாம் நம்பர் மலைக்கும் எட்டாம் நம்பர் மலைக்குமிடையிலான பள்ளத்தாக்கின் இடைவெளி பயங்கரமாகத் தெரியும்.

மேலே இருந்து உருட்டி விட்டால் நேரே இங்கு வந்து விழலாம்.

பூசை முடிய மண்ணைத் தொட்டுப் பூசிக்கொள்வர். எத்தனை சிரமமென்றாலும் தோட்டத்திலுள்ள முதியோர்கள் முழங்காலைப் பிடித்தபடி பூசைக்கு வந்து போவர். ஒத்ததப்பு முழங்க பூசை கலகலப்பாக நடைபெறும்.

ஊமையன் கோயிலின் கடந்த வருட பூசையின் போது முனியாண்டி மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான். இந்த வருடம் பாரிச வாதத்தில் அவன் படுத்த படுக்கையில் கிடக்கின்றான்.

அவனால் பூசை செய்ய முடியாது விட்டால் அடுத்து அவன் மகன் முத்துதான் வாரிசு.

ஆனால் அவனோ இதில் நாட்டமின்றி தோட்டத்திலுள்ள தொழிற்சங்கத் தலைவரோடு சேர்ந்து கூட்டம் என்றும் ஊர்வலம் என்றும் ஓடியாடிக் கொண்டிருக்கிறான்.

பூசைக்கு நாள்கள் நெருங்க; நெருங்க முனியாண்டி அனலில் தகிக்கின்றான். கம்பனிக்கு ” தோட்டத்தை குத்தகைக்கு கொடுக்கப் போகின்றார்கள்” என்பதைக் கேள்விப்பட்ட தோட்டத்து மக்கள் நெஞ்சில் தீ… தீ மிதிப்பாய் தகிக்கின்றனர்.

“தலைவர்களைக் கண்டு மகஜர் கொடுத்து இந்த ஏற்பாட்டை நிறுத்த வேண்டும்”. முத்துவும் தோட்டத்திலுள்ள சிலரும் முஸ்தீபாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இது முக்கியமான வேலை; ஊமையன் கோயிலில் பூசையை போடாது; விட்டால் என்ன? தோட்டம் குத்தகைக்கு கைம்மாறி விடுமா… மீண்டும் அடிமை மேல் அடிமை வாழ்வா…? யார் யாரிடமெல்லாம் ஓட முடியுமோ அங்கெல்லாம் ஓடி அபிப்பிராயம் கேட்டு நிற்கின்றான் முத்து.

நாளை விடிந்தால் ஊமையன் கோயிலில் பூசை. தோட்டத்து லயங்களில் பிடி அரிசியும் எடுத்தாகிவிட்டது. தோட்டத்து சிறுவர்கள் காட்டுத் தொங்கலில் ஊமையன் கோயிலில் நடக்கும் அந்தப் பூசையில் கலந்து கொண்டு மகிழ எப்போது விடியும் என்று தூங்காமல் விழித்துக் கிடக்கின்றனர்.

“அப்பா நாளைக்கு நான் கொழும்பிற்கு போய் நம்ம தோட்டத்தை தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்கவா போறாங்கன்னு அறிந்து வரப்போறேன்”. கட்டிலில் அசைவற்றுக் கிடக்கும் முனியாண்டியிடம் முத்து மெதுவாகக் கூறினான்.

“அப்ப… ஊமையன் கோயில் பூசை?” போன வருடம் எப்படியோ போய் ஒப்பேத்திட்டேன். இந்த வருடம் என்னையால எழுந்து ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. நீ கட்டாயம் இந்தப் பூசைய செய்யத்தான் வேணும்”. முனியாண்டியின் குரல் சோகமாக ஒலித்தது.

“நம்மதான் இப்ப தோட்டத்தில் எத்தனையோ திருவிழாக்களை செய்யுறோம் தானே…..? இந்த கோயிலுக்கு பூசை செய்யாட்டி சாமி ஒன்னும் கோவிச்சுக்கிறாது”. முத்துவின் குரல் கோபமாக வெளிப்பட்டது.

“ஆத்திரப்படாதே தம்பி. நீ இப்ப தோட்டத்தைப் பத்தியும் நம்ம ஆளுகளுட நன்மையைப் பத்தியும் பேசப் போறேன்னு சொல்லுறியே. அதுபோலத்தான் இதுவும். இந்த ஊமையன் கோயில் வரலாறு இருக்கே அதுவும் நம்ம இரத்தத்தோட கலந்தது….”

கோபம் தணிந்த முத்து, தந்தையின் காலடியில் வந்து நின்று கொண்டான்.

இருமியபடியே முனியாண்டி ஆவேசம் வந்தவனைப்போல பேசத் தொடங்கினான். “நம்ம தோட்டத்தைப்பத்தி காலத்திற்கு காலம் பிரட்டி பிரட்டி பேசுறதே இப்ப பொழப்பா போச்சி; நமக்கு நல்ல வாழ்வு வாங்கித் தாரோம்னு சொல்லியே பலபேர் நல்லா பொழைச்சிக்கிட்டு முன்னுக்கு வந்துட்டானுக. நானும் எத்தனை காலமா இப்படி எத்தனையோ பேர பார்த்துகிட்டு இருக்கேன்”. முனியாண்டிக்கு மூச்சு இரைத்தது. நெஞ்சை அழுத்திப் பிடிக்க முயன்றான். கைகள் இயங்கவில்லை.

“அப்பா தூங்கு அப்பா காலையில் பேசிக்கலாம்”. முத்துவின் கைகள் தந்தையின் நெஞ்சைத் தடவிக் கொடுத்தன.

“இந்த ஊமையன் கோயில் பற்றிய இரகசியத்தை என் உயிரு போறதுக்கு முந்தி உனக்கு சொல்லிறனும்… கேட்டுக்க… இந்தக் காலம் மாதிரி இல்ல அது வெள்ளக்காரன் காலம். நம்மல கொண்டுவந்த பெரியாணிமார்கள் நம்மல அடிமையாகத் தான் நடத்தனாங்க…. யட்டவத்தை தோட்டத்தில் ஒரு வெள்ளைக் காரன் நம்ம சொந்தக்காரர் ஒருத்தரை ஒழுங்கா குதிரை பார்க்கல்லன்னு சவுக்காலேயே அடிச்சி அடிச்சி கொன்னு இருக்கான்”.

முந்தி நம்ம பாட்டா காலத்தில் இந்த தோட்டத்தில முத்துசாமின்னு ஒரு பெரியாணி இருந்திருக்காரு. அவரு ‘பெரட்டில’ ஆயிரக்கணக்கான தொழிலாளி இருந்திருக்காங்க. பெரியாணி வச்சதுதான் சட்டம். வெள்ளக்கார துரை பெரியாணி சொன்னபடி தான் கேட்பான்.

முத்துசாமி கங்காணியுடைய ‘பெரட்டில’ கறுப்பன்னு தொழிலாளி ஒருத்தன். மானா மதுரைக்காரன் இருந்திருக்கான். கறுப்பண்ணனுடைய பெஞ்சாதி பெருமாயி நல்ல அழகி. முத்துசாமி கங்காணிக்கு பெருமாயி மேல

ஒரு கண். எப்படியும் அவளை அடையனும்னு முடிவு கட்டிட்டான்.

திடீர்னு ஒருநாள் கப்பல் டிக்கட்ட கொடுத்து “ஊருக்குப் போயி, தோட்டத்திற்கு புதுசா வர இருக்கிற ஐம்பது குடும்பத்தையும் கூட்டிக்கிட்டு வா உனக்கு சின்ன கங்காணி வேலை தாரேன்னு” சொல்லிட்டான். “அப்ப என் சம்சாரம்?” திகைத்து நின்றான் கறுப்பண்ணன்.

“அட போயி ஒரு மாசத்தில வந்திரலாம். அது வரைக்கும் உன் சம்சாரம் என் வீட்டுல இருக்கட்டும்…” கையைப் பிசைந்து நின்றவனை கப்பலேற்றிவிட்டான் முத்துசாமி கங்காணி.

“கறுப்பண்ணன் ஊருக்குப் புறப்பட; பெருமாயி இந்த உலகத்தை விட்டே போய்விட்டாள். தன் வீட்டுக்கு பெருமாயியை அழைச்சிகிட்டு வந்த கங்காணி அவளோட தகாத முறையில் நடந்திருக்கான். இத பொறுக்க முடியாத அந்த அபல தூக்குப் போட்டுக்கிட்டு செத்திட்டா…. கங்காணி இந்தப் பழியை தன் வீட்டுல எடுபிடி வேலை செஞ்சிக்கிட்டு இருந்த மலையப்பன் மேல சுமத்தி, வெள்ளக்கார துரை கிட்ட சொல்லி மலையப்பனை கட்டிவச்சி சவுக்கால அடிச்சி அவமானப்படுத்தி ஆக்கினை செய்திட்டான்”.

“மலையப்பனுக்கு பெருமாயி தூக்குப் போட்டு செத்த இரகசியம் எதுன்னு தெரியும். ஆனா வெளியே சொன்னா தன் குடும்பத்திற்கு ஆபத்தின்னு சொல்லல்ல..”

மலையப்பனை வெள்ளக்கார துரை ” உண்மையைச் சொல்லு, சொல்லுன்னு மரத்தில் கட்டி வச்சி அடிச்சிருக்கான் பாவி… மயங்கி விழுந்த போதும் வாயியே தொரக்கல, ஊமையாகவே இருந்திருக்கான்”.

மலையப்பன் மீது பெருமாயியைக் கொன்ற வீண்பழி…. உண்மையை சொல்ல முடியுமா… குடும்பத்தையே பெரியாணி அழிச்சிடுவானே.

பழிச்சொல் ..பரிகசிப்பு. பிறகு அவமானம் தாங்காமமூனாம் நம்பர் முடக்கு பள்ளத்தில பாஞ்சி உசிர விட்டுட்டான். பின்னர் அவன் குடும்பத்தினரும் ஊருக்கு திரும்பி போயிட்டாங்க…”

“மலையப்பனை அடிச்ச துரை தந்தி வந்து; சீமைக்கு போயி மறு மாசமே யுத்தத்தில செத்திட்டான்”.

முத்துசாமி பெரிய கங்காணிக்கும் மூன்று மாசத்திலே உடம்பெல்லாம் கட்டி கட்டியா நோய் வந்து அழுகிப் போக தொடங்கிரிச்சி…” வாயும் கொண்ணி..பேச முடியாத நிலை.

“உடுக்கடிச்சி சாமி பார்த்த போது சாமி உண்மைக் கதையெல்லாம் சொல்லிரிச்சி…. கங்காணியும் மலையப்பனுக்கு செஞ்ச கொடுமையை ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டு மலையப்பனுக்கு இந்தக் கோயில் அமைச்சி இருக்கான்”.

அதற்குப் பிறகு அவன் நோய் தீர்ந்து ஊருக்கு திரும்பிட்டானாம். அதிலிருந்து இந்த தோட்டத்தில் இந்த ஊமையன் கோயிலுக்கு பூசை நடக்கிறது” நீண்ட கதையைக் கூறி முடித்த முனியாண்டி மீண்டும் தொடர்ந்தான்.

“மலையப்பன் வேறு யாருமல்ல; நம்ம பாட்டன் பூட்டன் வழிதான். நம்மதான் ஊமையன் கோயிலுக்கு வாரிசுகள்”. மதுரை வீரன் சாமியைப் போலதான் நம்ம மலையப்பனும் சாமிதான்”

முத்துவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. “காலம் காலமாக தொடர்ந்தும் சுயநலக்காரர்களால் பல்வேறு விதமாக வஞ்சிக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வந்துள்ளோம்”. நெஞ்சில் பெரு மூச்சாக கிளம்பும் வார்த்தைகள்.

காலமும் மனிதர்களும் தான் வேறு வேறு! துன்பமும் துயரமும் வஞ்சனையும் ஒன்றேதான்!

அடுத்த நாள் தான் அந்த ஊமையன் கோயிலில் பூசை செய்வதில் அர்த்தம் இருப்பதாக முத்துவிற்கு புலப்பட்டது.

– தினகரன், அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *