(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பழைய கடிகாரமொன்று பன்னிரண்டுமுறை அலறி ஓய்ந்தது. அந்தத் தென்னோலைக் குடிசையில் இன்னும் பேச்சுக் குரல். “இப்படித் தூங்காமல் ஒரே வேலை வேலேன்று இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” அரைத் தூக்கத்தில் படுத்திருந்த சின்னப்பிள்ளை இருமலுக் கும் முனுகலுக்குமிடையில் கடிந்து கொண்டாள்: கரிசனை யோடு.
மண்சுமந்து முடிந்து, இப்போது அதே கொந்தராத்துக் காரன் கிட்டே கல்லுடைக்கும் படலம் ஆரம்பமாகியிருந் தது. பகலெல்லாம் வேலை செய்து களைத்து பாயில் நொந்து கிடந்தாள். புருஷனின் ஓய்வு ஒழிச்சலில்லாத வேதனையில் மனம் இரங்கித்தான்……..
“நா என்னமோ சொல்றேன் …… நீ ஓம்பாட்டுக்கு இருக்கியே”.
“ம்…… முடிஞ்சுப்போச்சு புள்ள, இன்னும் ரண்டு தையல் தான் பாக்கி இருக்கு ….. அதையும் முடிச்சிட்டா இந்தச் சோடியும் சரி”.
சப்பாத்து தைத்துக்கொண்டிருந்த கருப்பண்ணன் தொண்டையை ஒருமுறை கனைத்து விட்டுப் பேசினான்.
“இருக்கட்டும் நாளைக்குச் செய்யேன் …….” அவளது பலவீனமான உடம்பு சோர்வடைந்திருந்தது.
அவன் அந்த இரண்டு தையலை முடிக்கும் தீவிரத்தில் சணல் நூலை உள்ளால் போட்டு, ஊசியால் குத்தி இழுக்கும் ஒரு கணநேரத்தில்,
“ஸ்…. ஆ…”
“என்ன?” சின்னப்பிள்ளை வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.
“ஒன்றுமில்லே ஊசி கொஞ்சம் குத்திருச்சி”
“ஐயய்யோ சொன்னா கேட்டாத்தானே?” அவளது களைப்பும், நித்திரை மயக்கமும் சுவடு தெரியாமல் மறைந் தன.
தனக்குத் தெரிந்த கைமருந்தொன்றைப் போட்டு, ஆள் காட்டி விரலில் சிறிய கட்டொன்றைப் போட்டாள். அப்பொழுதும் குருதி கசிந்து கொண்டே இருந்தது.
இந்தச் சோடியை மேல் வீட்டுப் பையன் வந்து கேட்டா குடுத்துட்டு ரெண்டு ரூபா வாங்கு, அந்தச் சிவப்பு சிலிப் பருக்கும் ஆள் வரும். ஒன்றரை ரூபா…மொத்தமாக நாளைக்கு வரவேண்டியவர்கள் வந்துவிட்டால் ஆறு ரூபா சேரும். அவசர நிமித்தமாக ஓடி வருபவருக்கு சுடச்சுடச் செய்து கொடுப்பதெல்லாம் நம்பிக்கை இல்லாத ஊதியம்.
சிறிது நேரத்திற்குப் பின் கருப்பண்ணனும் சின்னப் பிள்ளையும் நிந்திரைக்குப் போனார்கள்.
உள்ளறையில் அவள் படுத்துக்கொண்டாள். அதிலேயே ஒரு ஒதுக்குப் புறம் சமையலுக்கு என்று. முன்னறைதான் அவனுடையது.
எல்லாம் அப்படியே இருக்க ஓரத்தில் படுக்கை விரிக் கப்பட்டிருந்தது. இரண்டு அறைகள் தாம், களிமண் சுவ ரும், தென்னோலையும் ஏழ்மையை மறைத்துக் கொண்டன.
அவன் புரண்டு கொண்டிருந்தான்.
“நீ தூங்கலெ ….?” உள்ளேயிருந்து குரல் வந்தது.
“இல்லே …. நீ படுபுள்ள, எனக்கு ஒண்ணுமில்லே”.
“ஒண்ணுமில்லேன்னு வுட்டுடாதே. நாளைக்கி ஆசுப் பத்திரியிலே போய் ஊசி ஒண்ணு போட்டுக்க”.
சில நிமிடங்களில் அவள் ஆழ்ந்த துயிலில் மூழ்கி விட் டாள். அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
ஒரு ஊசி குத்தியதும் இன்னொரு ஊசியைக் குத்தி, ஊசியின் விஷத்தை ஊசியால் வெல்ல முடியும். ஏழாண்டு களுக்கு முன் பட்ட காயத்தை எதனால் குணப்படுத்த முடியும்?
கருப்பண்ணனின் உள்ளத்தில் ஏற்பட்ட வடுவுக்கு கதிரவேலின் உள்ளத்தில் கலக்கப்பட்ட விஷத்தின் தன்மை தான் காரணம். மனத்தின் காயத்தை மனதின் தன்மையால் வெல்ல முடியுமா! விரலில் ஊசிக்கர்யத்தால் பொசிந்த இரத்தக் கசிவு நினைவுச் சரடுகளை நனைத்து விட்டது. சற்று மனக் கடலில் நீந்திப் பார்த்தான் கருப்பண்ணன்.
(2)
அது ஒரு மார்கழி மாதத்தின் நடுப்பகுதி. தேயிலைத் தோட்டத்தை மூடியிருந்த பனித்திரை, உதய சூரியனின் கதிர்பட்டு மெல்ல மறைந்து கொண்டிருந்தது.
சின்னப்பிள்ளை அதிகாலையிலேயே எழுந்து விட்டாள். வழக்கம்போல் அந்த லயத்துக்குப் பொதுவான குழாயில் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு வந்தாள். அப்போது அவ ளுடைய சிநேகிதிகள் கூட அவளை ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள். “கேத்தலில்” நீரை ஊற்றி அடுப்பில் ஏற்றிவிட்டுப் பாத்திரங்களைக் கழுவி வீட்டைத் துப்பரவு செய்வதற்குள், ”உஸ்” என்று நீர் கொதித்தது. சாயத் தைக் கலந்து, ஒரு கரண்டி சீனியும் எடுத்துக்கொண்டு போய், கணவனை உசப்பினாள். வாயைக் கொப்பளித்துத் துப்பி விட்டு.சீனியைப்போட்டு மொறு மொறுத்து சாயத்தை உறிஞ்சினான். அதே நேரத்தில் சின்னப்பிள்ளை –
“பிளாஸ்டிக் ரெட்டை” இடுப்பில் சுற்றிவிட்டுக் கூடை யைத் தலையில் மாட்டினாள்.
கருப்பண்ணன் அப்பொழுது தான் திடுக்கிட்டான். “ஏ… புள்ள நீ என்ன இன்னைக்கு வேலெக்கிப் போறியா?” வினோதமாகக் கேட்டான்.
“ஆமா”
“சொல்லுரதே கேளு இண்ணைக்கி வேலெக்கி போவாதே”
“ஓங்க கட்சிக்காரங்க எல்லாம் நிக்குதுன்னா, நம்ம ஆளுங்க எல்லாம் போறாக; நானு போவாம இருந்தா?”
“அப்படிக் கேளு சின்னப்புள்ளே”
“ஒங்க வூட்டுக்காரர்கிட்டே நல்லா கேளு”.
இருவரும் குரல் வந்த திக்கைப் பார்த்தபோது.
முன் வாசலில் நாலைந்து பெண்கள், கூடையும் தலையு மாக வேலைக்குப் போக ஆயத்தமாய், சின்னப்பிள்ளையை எதிர்பார்த்து நின்றார்கள்.
அவள், அவர்களுடன் நடந்து மறைந்தாள். அதுவரை யும் சிலையாய் நின்ற கருப்பண்ணனின் கண்கள் பனித்தன. தன் பேச்சைத் தட்டிவிட்டு வெளியேறி விட்டாளே என்ற ஆத்திரமும் ஆக்ரோசமும் நெஞ்சத்தில் புடைத்து நரம்பு கனை முடுக்கியபோது பீறிட்டுக் கொண்டு வந்த ஆவேசத் தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான். அடுக்க ளையிலிருந்த சட்டி முட்டிகளையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து உடைத்துக் கொண்டிருந்தான். இந்தச் சத்தத் தைக் கேட்டுப் பக்கத்து வீட்டிலிருந்து சின்னக்கண்ணு ஓடி வந்தான்.
“கருப்பண்ணே ! ஒனக்கு என்ன பயித்தியமா. அவளை வுட்டுப்புட்டு சாமான்களைப் போட்டு ஒடக்கிறீயே.”
அது அவனுக்கு நியாயமாகப் பட்டிருக்க வேண்டும்.
சரி, அவ வரட்டும் எங்கே போவப்போறா? என்றவாறு. சாக்குக் கட்டிலில் படுத்துச் சிந்தித்துக் கொண்டிருந்தான், கோபம் சற்றுத் தணிந்தது.
தோட்டத்தில் ஒரே பரபரப்பும் குழப்பங்களும் ஏற் பட்டு, எல்லாரும் வெறிபிடித்து அலைந்து கொண்டிருந்தார்கள்.
கருப்பண்ணனின் கட்சியின் தலைவர் வேறு யாருமில்லை. ஒரு காலத்தில் தான் அனாதரவாக, வேலைக்குத் திரிந்து கொண்டிருந்தபோது “தம்பி, நம்ம தோட்டத்திலே ஆள் சேர்க்கிறாங்க, நீ வா ஒன்னே சேர்த்துவிடறேன்.’ என்று அழைத்து அடைக்கலம் கொடுத்த அண்ணன் கதிரவேலு தான்.
அவன் நாற்பது வயது நிரம்பிய பிரமச்சாரி நெடிது வளர்ந்து கறுத்து வைரம் போன்றிருப்பான். சுமாராக எழுதப் படிக்கத் தெரியும். தோட்டத் தொளிலாளர்களின் எந்தப் பிரச்சினையையும் அலசி நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து கொள்ளும் தனித் திறமையைப் பெற்றுக்கொண்ட அவன், ஒரு நல்ல தலைவனுக்குப் பொருத்தமானவன். எல்லாத் தொழிலாளர்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்தான். வேறு என்ன வேண்டும்!.
கருப்பண்ணனும் கதிரவேலுவுக்கு உறுதுணையாக இருந் தான்.
கருப்பண்ணனுக்கும் சின்னப்பிள்ளைக்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சொல்ல எடுத்த முயற்சி தோல்வி தான். கதிரவேல் எதையுமே நம்பாதிருந்தான்.
ஆனால், கருப்பண்ணன் சின்னப்பிள்ளையைத் தன் துணைவியாக ஏற்றுக் கொண்டபோது கதிரவேலுவுக்குப் பொறி கலங்கியது.
முப்பத்தைந்து வயதான கருப்பண்ணன் முப்பது வயது சின்னப்பிள்ளையை கதிரவேலுவுக்குத் தெரியாமல் மணந்து கொண்டது அவள் எதிர்க்கட்சியைச் சார்ந்தவள். என்ப தற்காகத்தான். திருமணம் என்று ஒரு வார்த்தை சொல்லி யிருந்தால் கதிரவேலு முன்னின்று விமரிசையாக முடித் திருப்பானே. ஆனால், சின்னப்பிள்ளை தான் மணமகளாக வர இடம் கொடுத்திருப்பானா? அதனால் தான் இந்த ஒரு விசயத்தில் கருப்பண்ணன் தன்னிச்சையாக நடந்து கொண்டான்.
கருப்பண்ணன் செய்த தவறு இது ஒன்றுதான். நாளடைவில் அவளையும் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டால் அண்ணனின் மனம் சாந்தியும் சமாதானமும் அடைந்துவிடும் என்று நம்பியிருந்தான்.
கதிரவேலுவும் ஒரு தலைவனுக்குரிய பரந்த மனத்துடன், உத்தியோக பூர்வமாகட்டும் கருப்பண்ணனுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டான்.
(3)
இப்போது பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த வேலை நிறுத்தம் வந்து நின்றது.
நெஞ்சில் பலவகை உணர்ச்சிகள் அலைபாய அவன் மௌனமாக உட்கார்ந்திருந்தபோது.
“டேய் கருப்பண்ணா!” என்று குரல் வந்தது. வெளியே கதிரவேலுவும் சிலரும் நின்று கொண்டிருந்தனர்.
“சோத்துக்கு நாதியத்துச் சப்பாத்துத் துலக்கித் திரிஞ் சிக்கிட்டிருந்த ஒனக்கு உதவி செஞ்சவனுக்குத்தாண்டா செருப்பாலே அடிக்கணும்.”
வெலவெலத்துப்போன கருப்பண்ணனை நோக்கி வெறி பிடித்த கதிரவேலு நெருங்கிக் கொண்டிருந்தான்.
“அண்ணே ! ஆதிரப்படாதே சொல்லுறேன் கேளு.” அவன் தடுமாறினான்,
“டேய், என்னக்கி எதிர்கட்சி காரியோட கை பிடிச்சி அவங்களோட சேர்ந்தியோ அண்ணைலேயிருந்து, நா உனக்கு அண்ணனுமில்லே. நீ எனக்குத் தம்பியுமில்லே; போனா போகட்டும்னு வுட்டுப்புட்டேன். இன்னக்கி என்னடான்னா நீ உன் பொம்பிளையே வேலைக்கி அனுப்பிட்டு நம்ப ஆளுங்களையும் வேலைக்குப் போகத் தூண்டுறியாடா?” கையிலிருந்த ‘கழியால்’ அவனைத் தாக்கினான். கருப்பண் ணனோ சவுக்குமரம் சாய்வதுபோல் சடாரென்று வீழ்ந்து கிடந்தான் கதிரவேலுவுக்கு வெறி தீரவில்லை. அவன் வெளி யேறினான்.
அந்த லயத்தில் யாருமே இருக்கவில்லை. சிலர் வேலைக் குப் போயிருந்தார்கள். வேலை நிறுத்தம் செய்தவர்கள் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் பல இடங்க ளில் கும்பலாகவும் கூட்டமாகவும் இருந்து கோஷம் எழுப் பிக்கொண்டிருந்தார்கள்.
“புருஷன் அடிபட்டுக் கிடக்கிறான்” என்ற செய்தி சங்கின் ஒலிபோல, மலையில் கொழுந்து எடுத்துக்கொண் டிருந்த சின்னப்பிள்ளையின் காதுகளுக்கு எட்டியது. கூடையை மலையிலேயே போட்டுவிட்டு, பதறிப்போய் ஓடி வந்தாள். தன் லயத்திற்குள் நுழைந்தபோது –
கருப்பண்ணன் மயக்கம் தெளிந்து எழுந்து கொண்டி ருந்தான். அவள் அழுத குரலுடன் நெருங்கியதும் அவனுக் கும் ஒரு தனி தெம்பு பிறந்தது. வலது காலால் எட்டி உதைத் தான். அது அவள் தொடையில் பட்டு அவளும் சாய்ந்தாள். அவளது நெற்றியில் ஒரு காயம் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.
“நாளைக்கு வேலைக்கு வந்தால் இப்படித்தான் கல் எறிவோம்.” என்று மலையில் கல்வீச்சு நடந்தபோது, ஒரு கல் அவள் நெற்றியைத் தாக்கியபோது அவளுக்குத் தலையைச் சுற்றியதெல்லாம் அவனுக்குத் தெரியாது.
அவனால் எழுந்து நடமாட முடியவில்லை. முன் வாசலைச் சாத்திப் படுந்துக்கொண்டான்.
(4)
கருப்பண்ணன் கண் விழித்துப் பார்த்தான். அறையில் இருள் சூழ்ந்திருந்தது கதவைத் திறந்தான். வெளியிலும் அப்படித்தான். தட்டுத் தடுமாறி விளக்கை ஏற்றினான்.
அதன் மங்கிய ஒழியில் மனைவியைக் கூர்ந்து கவனித்தான். அவள் நெற்றியில் குருதி கசிந்து உறைந்திருந்தது. அவள் பக்கத்தில் போய் நின்றான். அவன் விழிகளில் நிறைந்த நீர் அவள் கன்னங்களில், ஆளுயரத்திலிருந்து சொட்ட, அவள் மயக்கமும் தூக்கமும் கலைந்தாள். எதிரே கணவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் அவன் பாதங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
கணவன் மனைவி இருவருக்கும் மண்டையில் காயம். உடம்பெல்லாம் ஊமைக் காயம். அந்த நேரத்தில் அந்த நிலையில் அவள் தானே அவனுக்குத் துணை. அவன் தானே அவளுக்கு ஆதரவு.
கடையில் வாங்கிய ‘ரொட்டி’யை சீனியில் தொட்டுச் சாப்பிட்டு, தேநீரைக் குடித்தார்கள். மீண்டும் படுக்கையில் இருந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒரு முடி வுக்கு வந்தார்கள். அதை மீண்டும் நிச்சயப்படுத்தினான் அவன்.
“சின்னப்புள்ளே…… கதிரவேலண்ணனின் கட்சியும் இந்த வேலெ நிறுத்தமும் ஞாயமானது. ஒரு சின்ன விச யத்தை மட்டும் பொதுவா யோசிச்சிப்பாரு. காலையிலே யிருந்து அந்தி வரைக்கும் உழைச்சிட்டு. ‘அஞ்சி மணிக் கெழுந்து’ அது இதுன்னு. ஆறரை மணி வரைக்கும் கஷ் டப்பட்டுக்கிட்டிருந்தா நமக்குன்னு குடும்பம் பிள்ளை குட்டி இல்லாதவங்களா..?
வேலை நிறுத்தத்திற்கு முன் வைத்த எத்தனையோ கார ணங்களுள் இதுவும் ஒன்று,
சின்னப்பிள்ளை மௌனமாக இருந்தாள். கருப்பண்ணன் உசாராகப் பேசிக்கொண்டிருந்தான்.
பார்க்கப்போனா இன்னக்கி நடந்தது சின்ன விசயம், குடும்ப விசயம், இதுக்குப் போயி போலீஸ் கோடுன்னு மானத்தே விடக்கூடாது…”
காயங்கள் பட்டால் போடவேண்டும் என்று எப்போதோ ஒருநாள் தோட்டத்து ஆஸ்பத்திரியில், ‘மருந்து தார பெருமாள் கிட்டே வாங்கிக்கொண்டுவந்த மருந்துக் குப்பியைத் தேடிப் போட்டுக் கொண்டார்கள்.
பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து வெளியே போய், வெற்றிலை எச்சிலைத் துப்பி, கதவைப் பூட்டிவிட்டு வந்தான், மீண்டும் பேச்சுத் தொடர்ந்தது.
“….புள்ள இப்ப நம்ம இங்க இருக்கிறதாலே ஒரு புரோசனமுமில்லே, அண்ணனுடைய பகையெ சம்பாரிச் சிட்டோம்: ஒரு வேளை அவனுடைய நல்ல காரியங்களெல் லாம் தடைப்பட்டுப் போகும். நாங்க இல்லாட்டாலும் மற்றவங்களாவது நல்லதைப் பெறனும்னா நாங்க ரெண்டு பேரும் தோட்டத்தை வுட்டுப் போறதே நல்லதுன்னு எனக்குப் படுது, நீ என்ன சொல்லுறே?”
பேச்சு ஒரு கேள்விக் கொக்கியில் நின்றபோது சின்னப் பிள்ளை தலையாட்டி அதற்குச் சம்மதம் என்று தெரிவித்தாள்.
அடுத்த நாள் தோட்டம் பூராவும் விசயம் பரவியது. தோட்டத்து அலுவலகத்தில் ‘செக்ரோல்’ முதலான புத்த கங்களில். கருப்பண்ணன் – சின்னப்பிள்ளை ஆகிய பெயர் களுக்கு எதிரே சிவப்பு மையில் ‘போல்டட்’ என்று ஆங் கிலத்தில் எழுதினார்கள்.
கருப்பண்ணனும் சின்னப்பிள்ளையும் நாவல் நகரின் ‘சேலம் பிரிட்ஜ்’ பகுதியில் குடியேறினார்கள். அவர்கள் இருந்த அதே தோட்டத்தில் முப்பது வருடங்கள் உழைத்து. கடைசியில் நானூற்றைம்பது ரூபா மட்டுமே ‘பென்சன்’ என்று முழுதாகப் பெற்று, நீங்காத மனக்காயத்துடன் குடியேறி – ‘பெட்டிக்கடை’ போட்டிருக்கும் பழனியாண்டிக் கிழவனை அவர்களுக்குத் தெரியும். கருப்பண்ண னின் தகப் பனான வீரனுடன் பழகியவன். அவன் அவர்களை வரவேற்றான்.
“வித்தியாசமா நினைச்சுக்காதே கையிலே காசு எவ் வளவு வைச்சிருக்கே?” பழனியாண்டிக் கிழவன் கேட்டான்.
சின்னப்பிள்ளை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த உண்டியலையும், கழுத்திலுள்ள ஒரு நகையையும் காட்டினாள். கருப்பண்ண னிடம் ஐம்பது ரூபா இருந்தது.
பழனியாண்டிக் கிழவன் சகல ஒத்தாசைகளும் செய் தான். முதலில் ஒரு தனிக் குடிசையை வாடகைக்குப் பேசி முடித்தான். ஒரு வாரத்திற்குப்பின் அவனுடைய தொழில் விசயத்தை அவனிடமே கேட்டான்.
“கரு … ஒங்கண்ணன் தொழிலையே செய்றதாயிருந்தா சொல்லு; டவுனிலே ஒரு கடை இருக்கு முடிச்சிடலாம். ஒரு நாளைக்கு நாலு ரூபாவாவது கூலி வரும்”.
கருப்பண்ணன் அதற்கு, பூரண விருப்பத்தைத் தெரி வித்தான். தோட்டத்தில் கூட ஓய்வு நாட்களில் அதால் இரண்டு மூன்று ரூபாய் உழைப்பான். ‘கைத் தொழில் தெரிஞ்சா எங்கேயும் இடமிருக்கு’. அவன் பீற்றிக்கொள் வான்.
நாவல் நகரின் அழகிய ‘குபெலஸ்’ ஒன்றில் ஒரேயொரு வருடம் வேலை செய்துவிட்டு, பழனியாண்டிக் கிழவன் கிட்டே அந்த யோசனையைக் கேட்டான். அவன் ‘சரி’ என்று சொன்ன பிறகு தான், முக்கிய சாமான்களை யெல்லாம் வாங்கி வீட்டிலேயே ஆரம்பித்தான். நகரில் பழகியவர்க ளெல்லாம் அவனைத் தேடி வீட்டுக்கு வந்தார்கள். கூலியை யும் குறைத்துக் கொண்டான், எல்லோரும் அவனுக்குப் பரிச்சயமானார்கள்.
(5)
பொழுது புலர சற்று நேரத்திற்கு முன்பே சின்னப்பிள்ளை எழுந்துவிட்டாள். கருப்பண்ணன் தூங்கிக் கொண்டிருந் தான். அவனுடைய சிந்தனை அந்தக் காயத்திலிருந்து எப் போது கலைந்ததோ தெரியவில்லை. அவள் அவனை எழுப்ப வும் மனமில்லாமல் விரலைத் தொட்டு இரவு போட்ட கட்டை அவிழ்த்தாள். இரத்தம் காய்ந்திருந்தது.
வெளியில் அவர்கள் வளர்க்கும் நாய் ஏதோ ஒரு புது மையைக் கண்டுவிட்டது போல் குரைத்துக்கொண்டிருந்தது. அதன் ஓயாத இரைச்சலால் அவன் எழுந்ததும் எழாதது மாக ”சின்னப்புள்ளே ஏன் நம்ம ‘ராசாத்தி’ குலைச்சிக் கிட்டே இருக்கா?’
அவன் கதவைத் திறந்து வெளியே போனான். கடையை உடைக்க யாரும் வந்திருப்பார்கள் என்று பழனியாண்டிக் கிழவனும் அந்த மங்கிய கருக்கலில் லாந்தரை எடுத்துக் கொண்டு வந்தான். சற்றுத் தள்ளி ஒரு முனகல் சத்தம் கேட்டது. ‘ராசாத்தி’ அங்கேயிருந்துதான் குரைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் விரைந்து பார்த்தபோது –
பைத்தியக்காரனைப் போல் ஒருவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
“யாரப்பா நீ, என்ன வேணும்…” பழனியாண்டி கேட்டான்.
“ஐயா நானு ஒரு காலில்லாதவன், தொணையாயியிருந்த கைக் கம்பு கீழே வுழுந்திருச்சி இருட்டிலே, தேட முடியல்லே.”
“ஏன் இந்த நேரத்தில் இங்கே வந்தே?”
“ஐயா இங்கே கருப்பண்ணன் வூடு எதுங்க?. என் பேரு கதிரவேலு.”
இப்படிச் சொன்னானோ என்னமோ –
கருப்பண்ணனும் கதிரவேலுவும் கட்டிப்பிடித்துப் புலம் பிய அழுகைப் புலம்பல் -பாசக் குரல் – மனத்தின் காயத்தை மனத்தின் தன்மையால் வெல்ல முடியும் என் பதைப் பிரதிபலித்தது.
கதிரவேலுவின் மெலிந்த தோற்றமும், கறுத்த தாடி யும். உருவத்தை மாற்றி விட்டிருந்தன. தோட்டக் கலவர மொன்றில் அவன் காலை வெட்டிப்போட்ட சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான்.
என்னமோ ஏதோ என்று கம்பு தடிகளுடன் ஓடிவந்த குடிசைக்காரர்கள் பச்சாதாபத்தோடு திரும்பினார்கள்.
“கதிரவேலுவும் கருப்பண்ணனும் சந்தித்து விட்டார்கள், என்ன இருந்தாலும் அவுக அண்ணன் தம்பிதானே!” பழனியாண்டிக் கிழவன் முணு முணுத்துக் கொண்டே நடந்தான்.
– மல்லிகை – ஜனவரி; 1968.
– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.