கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2024
பார்வையிட்டோர்: 1,946 
 
 

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானத்துச் சரிவில் நிற்கும் கதிரவன் வளர்த்துவிடும் நிழலாய் நீண்டது அம்மாவின் நினைவு.

நினைவை நீட்டிவிட்ட குரல் கதவடியில் பலமாகக் கேட்டு, தேய்ந்து தெருவோடு போயிற்று. “அம்மோவ்” என்னும் அவனுடைய குரல் அச்சாக அவருடைய குரலே போன்ற அந்தக் குரல். எத்த னையோ தடவை அம்மாவே ஏமாந்திருக்கிறார்கள்.

அவர்தான் கூப்பிடுகிறாரோ என்று கை வேலையையும் போட்டு விட்டு ஓடிவந்து பார்த்தால் அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பார். நெகிழ்ந்து கிடக்கும் போர்வையைச் சரிசெய்துவிட்டு வெளியே மெது வாக எட்டிப் பார்த்தால்… பிதுங்கி வழியும் கீரைக்கூடையைத் தலை யுடன் சேர்த்து இடக் கரம் அணைந்திருக்க, வலக்கரத்தில் தளதளக் கும் கீரைக்கட்டுடன் அவன் தான் நிற்பான்.

கைக்கடங்காத கட்டுக்கீரை அவன் பிடியில் ஒரு விநாடி மொறு மொறுத்து அம்மாவின் முந்தானையில் விழும். அவன் கீரைக் கட்டை உதறிக்காட்டிய வேகத்தில் நுணுங்கி விழுந்த இரண்டோர் இலைத் துகள்களையும், சிதறி விழுந்த நீர்த்துளிகளையும் காலால் தேய்த்து வாசல் கல்லில் தள்ளிவிட்டு அம்மா உள்ளே போவதற்குள் அவன் அடுத்த வீட்டுப்படியில் “அம்மோவ்” என்று நிற்பான்.

“அசல் அவர் மாதிரியே” என்று முனகிய வண்ணம் அவர் சாய்ந்து கிடக்கும் கட்டி லையும் எட்டிப் பார்த்துக் கொண்டு உள்ளே நடக்கும்போது அம்மா வின் உயிர்கூடச் சிரித்துக் கொள்ளும். அவன் அடுத்த வீட்டிலும் “அம்மோவ்” என்பதைக் கேட்பதற்காக நிற்கும் இடைநேரத்தில் தான் அந்தத் தண்ணீர்த் தேய்ப்பும் தள்ளலும்.

அடுப்படியை அடையுமுன்னமே “அம்மா” என்று குரல் வரும் உள்ளறையிலிருந்து. அம்மிக் கல்லின் மேல் கீரையை வீசிவிட்டு உள்ளே ஓடினால்…

வலது முழங்கையைக் கட்டில் சட்டத்தில் தேய்த்துக் கொண்டிருப்பார். அம்மாவுக்குத் தெரியும் அதன் சூட்சுமம்.

அவருடைய கையைப் பற்றித் திருப்பிய வண்ணம் மெதுவாகக் கட்டிலடியில் அமர்ந்து முழங்கையைச் சொறிந்து கொடுப்பார்கள். அரித்த இடத்திற்கு அந்தச் சொறிவு தரும் இதம் அவரைவிட அம்மா வுக்கே அதிகம். முதிர்ந்த அந்த முகத்தில் விரிந்து கிடக்கும் மந்த காசம், அவருக்குப் பணிவிடை செய்வதில் கிடைக்கும் மனமகிழ் வுக்கு ஓர் எடுத்துக் காட்டு.

அவருடைய வாயில் வார்த்தைகள் குழறும். அவருக்குச் சொல் தெரியும்… சொல்லவும் தெரியும்… ஆனால் சொல்லத்தான் முடியாது. சொல்ல வேண்டியதற்குச் சரியான உருவம் தரச் சக்தியற்ற வாய். “வாடா கண்ணே” என்று கூற நினைப்பதை “வாழா கழ்ழே” என்றே ஒலிசெய்கிறது அவருடைய வாய்… சக்தியிழந்த வாய்.

இழுத்துக் கட்டிய மத்தளத் தோலில் கத்தி முனையால் ஒரு கொத் துப் போட்டது போல, வலப் பக்கம் மட்டுமே வாய் சிறிது பிளந்தி ருக்கும். இடப்புறம் பசைப்போட்டு ஒட்டியது போல் ஒட்டிக் கொண் டிருக்கவில்லை என்றாலும் திறக்க முடியாத ஒரு நிபாத நிலை.

ஒரு நாள் ஊன்றி நின்ற கால்தான். தனியாக அல்ல…. அம்மா வையும் தாங்கிக் கொண்டு. அதில் ஒன்று, இன்று சூம்பிக் கிடந்தது. அடித்து, அணைத்து, ஆதரித்த கைகள்தான். அவற்றில் ஒன்று, அசை வற்றுக் கிடந்தது …. அடித்துப் போட்ட பாம்பாய்.

இடக்கை, இடக்கால் எல்லாமாய்… முழு இடப்பக்கமுமே இரத் தமின்றிச் செத்துப்போய், வேரிலே பூச்சி விழுந்த மரமாய் வெம்பிக் கிடந்தது. இருப்பது, எழும்புவது, உண்பது, உடுப்பது, ஒன்றுக்கு இரண்டுக்குப் போவது எல்லாமே துணையுடன் தான்.

தம்மையே துணை என்று வந்து தமக்கே துணையாகிவிட்ட தம் துனைவியை அவர் பார்த்தார். அந்தப் பார்வையிலே பாறையாகிக் கிடந்தது கணவன் மனைவியைப் பார்க்கும் பாசமா, நம்பிக்கையா எது என்பது?

ஊதிவிட்ட பஞ்சுத் திவலைகளாய் நுரைத்துக் கிடக்கும் அம்மா வின் நரைத்த தலையை அவருடைய வலக்கரம் நீவித் தருகிறது. தலை நடுவே ஓடித் தலைமயிரை இருபாதியாகப் பிரிக்கும் அந்தச் சுண்டு விரலளவு கோட்டில் நெற்றித்தொட்டு உச்சிவரை ஊர்கிறது அவரு டைய விரல். அவருடைய விரல் நடை தந்த கிளர்வு அம்மாவை எங்கோ இட்டுச் செல்கிறது.

என்றோ காலியாகிவிட்ட பெருங்காயச் செப்பாக அம்மாவின் காலியாகிவிட்ட வாழ்வின் ஆதி நாளைய மணம் குப்பென்று மணத்தது. அவருடைய விரல் தந்த உணர்வில் . கண்கள் மூடிக்கொள்கின்றன. மனம் பார்க்கத் தொடங்கிவிட்டால் கண்ணுக்கு வேலை ஏது?

கண்கள் மூடிக்கிடக்க, கை மாத்திரம் அவருடைய முழங்கையைச் சொறிந்துகொண்டே இருக்கும். அவரும் கையை வளைத்தும் திருப் பியும் கொள்வார். சொறிவு தரும் உணர்வுக் கேற்ப, அம்மாவின் தலை யில் ஓடும் விரல் நடை பிறழாமல்.

“எனக்கு முந்தி நீ போயிட்டீன்னா ? என் பாடு நடுவீதி நாய்தான்!” தமக்கே சொல்லிக் கொள்கிறார். அம்மா நடந்ததை நினைக்கையில்

அவர் நடக்கப் போவதை நினைக்கிறார்.

அம்மா திடுக்கிட்டு விழிக்கிறார்கள். அவர் குழறுவது நமக்குத் தான் புரியாது. அம்மாவுக்கு நன்றாகப் புரியும். அவருடைய ஒரு பக்கத்து உதடுகள் கோணல் மாணலாக நெளிந்தன. இதயத்தின் வேதனை. துடிப்பு, பிழவு அதில் எழுதி ஒட்டியிருக்கிறது.

துடிக்கும் அவருடைய உதட்டை அழுத்திமூடி, சொறிந்து விட்டுக் கொண்டிருந்த கையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அம்மா குமுறுகிறார்கள். அந்த நெஞ்சின் துடிப்பை, அந்தக் கை உணர்ந்திருக்கும். “இல்லை… இல்லை” என்பதுடன் நிறுத்திக் கொண்டு வெகு சிரமத்துடன் நெஞ்சுவரை வந்துவிட்ட வார்த்தைகளை விழுங்கி விட்டு வேறு புறம் முகத்தைத்திருப்பிக் கொள்ளுகிறார்கள். தம் கண்ணீரை மறைக்க அல்ல, அவர் கண்ணீரைக் காண சகியாமல்.

“உங்களை விட்டுவிட்டு நான் சாகமாட்டேன்” அப்படி என்றால் உங்களைக் கொன்றுவிட்டுத்தான் நான் சாவேன் என்பது போலத் தானே? எந்தத் தமிழ்ப் பெண்ணாவது தன் கணவனிடம் இதைக் கூறு வாளா? மஞ்சளுடன் போவதில்தானே மகிமை, மகிழ்வு எல்லாம்?

நெஞ்சுவரை வந்துவிட்ட வார்த்தைகள் உள்ளிறங்கையில் கூட அம்மாவுக்கு எத்தனை அருவருப்பு. குமட்டிய வாந்தியைத் துப்ப வழி யின்றி விழுங்குவதைப்போல் அம்மா அவருக்கு முன் இறப்பாள் என்று எண்ணுவதே பாவமாயிற்றே. அம்மா இறந்துவிட்டால் அவர் கதி?

“அம்மா, அம்மா” என்று நொடிக்கு நூறு தரம் அந்த உள்ளறையி லிருந்து குரல் வந்து கொண்டே இருக்குமே, அதற்கு யார் பதில் கூறுவது?

அம்மாவும் அலுக்காமல் சளைக்காமல் நடந்து கொண்டே இருப் பார்கள். இருக்க நடக்கக் கணக்குப் பார்த்தால் நடக்குமா? உள்ள றைக்கும் சமையலறைக்குமாக அம்மா போடும் நடைகளை நீட்டிப்போட்டால் நாளுக்கு நாற்பது மைல் குறையாது… அத்தனை நடை!

இடுப்பு வேட்டி நழுவித் தொடையில் கிடக்கும், அதற்கு ஒரு தரம் அம்மா… எழுந்து சற்று உட்கார வேண்டும், அதற்கும் அம்மா… ஒன்றுக்குப் போக, அம்மா… ஊட்டிவிட, அம்மா… ஆக வேண்டிய அத்தனை மனிதத் தேவைகளுக்கும் அம்மா…. அம்மா… அம்மா… தான். அந்த அம்மா இல்லாவிட்டால் இத்தனை தேவைகளையும் யார் கவனிப்பார்கள்? யாரால் கவனிக்க முடியும், மனம் சளைக்காமல்? அம்மா ஆணாய் நின்று சமாளிக்கக் குடும்ப பாரம் ஒன்றும் பெரிதல்ல என்றாலும் தூணாய் நின்று சுமக்க வேண்டி இருக்கிறதே அவரை.

***

என்றுமே அவர் இப்படி இருந்ததில்லை. அன்றெல்லாம் ஆலமர மாகத்தான் நின்றார். ஆயிரம் பேருக்கு நிழல் கொடுத்துக்கொண்டு. மோதிரத்தில் பதித்த இரத்தினமாய் ஈழத்தின் மத்தியில் பதிந்துவிட்ட மலை நாட்டில் அவரும் மலையாக நின்றார். பட்டணத்தில் இருப்ப வர்களுக்குப் போலப் பச்சைக் கண்ணாடி தேவையில்லை, பச்சை யைப் பார்ப்பதற்கு. அண்ணாந்து பார்த்தால் பரந்த நீலம். குனிந்து பார்த்தால் பரந்த பச்சை.

மலையோடு மலை இணையும் பள்ளங்களில் நெகிழ விட்ட துகிலாய்ச் சலசலத்தோடும் அருவிகள். கடலிலே காற்று நீல அலை எழுப்புவது போலத் தேயிலை மலையிலே காற்று, பச்சை அலை எழுப்பும். பார்வைபட்ட இடமெல்லாம் பசுமை என்றால் செழிப்பு என்பது தானே பொருள்?

அவரும் செழிப்புடன்தான் இருந்தார். பச்சைப் பசேல் என்று. வெயில் மழை பாராமல் உழைத்தார். தனக்காக உழைப்பவர்களை தாழ்த்தியே வைப்பதுதான் தேயிலையில் குணமோ என்னவோ உயர்ந்து நின்ற அவரும் குனிந்தார்.

ஆலமரத்தின் அடியிலேயே வெயில். பால்வனமாய் இருந்த வாழ்வு பாலைவனமாயிற்று. கால் ஊன்ற முடியாத கனல். அதில், பெண் நிழலில் அவர் நிற்க வேண்டிய நிர்பந்தம்.

இந்த வியாதி தனக்கு எப்படி வந்தது என்பதே அவருக்குத் தெரி யாது. நோய் எமனைப்போலத் திடுதிப்பென்று வருவதில்லை! அறிகுறி களுடன்தான் வரும். நமக்கு ஏன் இந்த வியாதி வரப்போகிறது என்ற அசட்டையில் நாம் தாம் ஆரம்பத்திலேயே கவனியாமல் வளர்ந்து முற்றிய பிறகு வருந்துகின்றோம். அவரும் அப்படித்தான். நாற்பது வயசு நாற்பத்திரண்டாகும் இரண்டு வருட இடைக்காலத்தில் என்ன என்னவோ நடந்துவிட்டது. இரண்டாக இருந்தவை எல்லாம் அவர் வரையில் ஒன்றாகி, ஒன்றாக இருந்ததெல்லாம் பாதியாகி….

நினைக்கச் சுடும் நரக வேதனை! அனுபவிப்பவருக்கு எத்தனை எத்தனையோ வைத்திய நிபுணர்கள், எத்தனை எத்தனையோ புதுமுறை வைத்தியர்கள், மருந்து மாத்திரைகள் என்று நிமிடத்துக்கு நிமிடம், மணிக்கு மணி கண்டு பிடித்துக் கொண்டே இருந்தாலும் அத்தனை மருந்து மாயங்களாலும் அத்தனை நோய்களுமா தீர்ந்துவிடுகின்றன? ஐம்பது புது முறைகள் என்றால் நூறு புது வியாதிகள் !

முடமாகி.. முடங்கி.. மூலையில் விழுந்த பின்னும், பங்களாக் கொடுத்து, சம்பளம் கொடுத்து வைத்திருக்கத் தோட்டத்தாருக்கு என்ன பைத்தியமா? அனுப்பிவிட்டார்கள்.

அதன் பிறகு….

அவருடைய உடலில் பாதி அம்மாதான். செத்துப்போன பாதி உடலை இட்டு நிரப்பும் பொறுப்பு அம்மாவினுடையதாகி விட்டது.

மனைவி என்ற பதமே மறந்து, அம்மா என்ற சொல்லுக்கு ஆதரவு என்பதே பொருளாகிவிட்டது. நெய்யே தொன்னைக்கு ஆதரவாகி விட்ட ஓர் நிர்பாக்கிய நிலை.

மலைநாட்டின் குளிர்காற்றோ கீரிமலையின் கடற்காற்றோ அவரு டைய பாரிச வாதத்திற்கு பலன் அளிக்கவில்லை. வைத்தியர்கள் இரு கையை விரித்தது போல இயற்கையும் தன் பெருங்கையை விரித்து விட்டது. விளைவு? ஒருவரே மற்றவருக்கு அனைத்துமாகி அன்றாடம் நாம் மேலே கண்ட அதே காட்சிதான்.

பால் இருந்த பாத்திரத்திலே இன்று பாஷாணம் இருக்கிறது. பாத் திரம் ஒன்றுதான் என்றாலும் பாஷாணம் தனித்துத்தான் இருக்க வேண் டும் என்பது பெரியவருடைய கட்சி. ஆகவே மக்களாலும் அவரைத் தம்முடன் இருத்திக் கொள்ள முடியவில்லை. இந்த வண்டியையும் நூல் கட்டி இழுப்பவர்கள் அவர்கள் தாம். எலெக்ட்ரிக் பில்’லிலிருந்து எல்லாமே நாளை என்று இல்லாமல் நடக்கிறது. அலுங்காமல் நலுங்காமல்.

தந்தையால் அம்மா படும் அவஸ்தை மக்களின் மனத்தை வெகுவாகப் பாதித்தது. ஆகவே அடிக்கடி “அந்தக் கண்ராவியை பார்க்க இயலாது” என்று வருவதில்லை. அவர் இறந்துவிட்டால் என்ன என்று கூடச் சிற்சில வேளை எண்ணுவார்கள். ஏன் எண்ண மாட்டார்கள்?

அவரைக் கட்டிக் கொண்டு அம்மா அழுவது. எந்த நேரமும் அறைக்குள்ளேயே பூட்டிக் கிடப்பது. எல்லாம் “பேன் கட்டிக்கல் இழுப்பது” போன்ற பேதமை என்பது அவர்களுடைய கருத்து. அவர்களுடையது மட்டுமல்ல! பொதுவாக அண்டை அயலர்வாசிகள் அத்தனை பேருடைய கருத்தும் அதேதான்.

அன்று, மூத்தவனுடைய கல்யாணத்தின் போது கல்யாணம் பெண் வீட்டில் நடந்தது. அவரைக் காரில் ஏற்றிக் கொண்டு போய் கல்யாண வீட்டில் போட அம்மா பட்ட பாடு…

எத்தனைபேர் நினைத்திருப்பார்கள்… சொல்லாவிட்டாலும், “ஏன் இந்த மனிதன் செத்துத் தொலையக் கூடாது?” என்று!

தானும் வாழாமல் பிறரையும் வருத்திக் கொண்டு இருப்பதை விடச் சாவது நல்லதுதான். ஆனால் சாவே வா’ என்றதும் வந்து விடுமா என்ன?

தூக்குவது, எடுப்பது, பிடிப்பது, காரிலிருந்து இறக்குவது எல்லாம் சுற்றந்தான் என்றாலும் துடிதுடிக்கும் இதயம் அம்மாவுடையதுதானே “எங்கே மோதிவிடுவார்களோ? எங்கே போட்டுவிடுவார்களோ?” என்று கவலை.

உடையவனுக்குத்தானே உடைமை பெரிது? ஊரானுக்கு என்ன? “கை வலித்தது விட்டு விட்டேன்” என்பான்.

“சடங்குகளில் கலந்து கொள்ளும் உடல் நிலையா அவருடையது? சொன்னால் கேட்கிறார்களா?”

அவரைச் சாய விட்டிருந்த சோபாவினருகில் அமர்ந்திருந்ததுதான் அம்மாவின் வேலை. அத்துடன் அங்கே எழுந்த மொழிப் பிரச்சி னையைத் தீர்த்து வைப்பது. அவர் பேசுவது அம்மாவுக்கு மட்டுந் தானே புரியும்?

மகனையும் மருமகளையும் ஆசீர்வதிக்கையில் அவர் பட்ட பாடு…எடுபடாத அவருடைய இடக்கை அவருள்ளத்தில் எரிமூட்டித்தகித்தது.

சுற்றி நின்ற இரண்டொருவர் கையால் வாயைப் பொத்திக் கொண் டார்கள். எங்கே பலமாகச் சிரித்துவிடுவோமோ என்ற பயம். நேரடி யாகத் தாமே சம்பந்தப்படாதவரையில் மற்றவர்களுடைய துயரம் நகைச்சுவைதானே?

அம்மா அழவில்லை. துயரத்தைத் தேக்கி வைத்தே பழகிவிட்ட அனுபவம் துணை நின்றது. வாழப்போகும் இரண்டு இளசுகளை வாழ்த்தும் நேரம் அழுது வைக்கலாமா, அபசகுணம் மாதிரி?

“அந்த மனிதன் இப்படிக் கிடப்பதிலும் இறந்து விடுவது எத்தனை நல்லது!”

“ஆமாம் அந்த அம்மாதான் எத்தனை பாடு படுறா? வெளியே தெருவில் போறதுக்குக்கூட அவுங்கதானாமே கூட்டிக்கிட்டு போவணும்? சேசே…”

திருமண வீட்டு ஆர்ப்பாட்டம் அடங்கி, அவரும் கண்ணயர்ந்த பின்பு ஒரு நிமிஷம் வெளியே நகர்ந்த அம்மாவின் காதில் பழுத்த ஈயக்கோலைப் பாய்ச்சியது, யாரோ இருவருடைய பேச்சு…

இவர்கள் மட்டுந்தானா, எத்தனையோ பேர் எத்தனையோ விதத்தில் கூறிய அதேதான். ஒருவராவது அம்மாவின் முகம் பார்த்துக் கூறியதில்லை. முகத்துக்கு முகம் கூறப்படாதவை நம் செவிக்கு எட்டுவதில்லையா என்ன?

அப்போதெல்லாம் அம்மாவின் உடல் ஒரு கணம் சில்லிட்டாலும் உடனே சுதாகரித்துக் கொள்ளும். அவர்கள் சொல்லுவதிலும் உண்மை இருக்கிறது என்பது நீர்பட்ட கண்ணாடி காட்டும் மங்கல் உருவமாகத் தெரிந்தாலும், உண்மைதான் என்று ஏற்றுக் கொள்ளும் பலம் மனதிற்கு இல்லை.

“இப்படி நடந்துவிட்டால் எப்படித் தாங்குவேன்?” என்னும் விஷ யங்களும் நடக்காமல் இருப்பதில்லை! அவை நடந்துவிட்ட பிறகு தாங்கிக் கொள்ளாமல் இருப்பதும் இல்லை. இருப்பினும் “அதைத் தாங்கிக் கொள்ளும் பலம் என் மனதிற்கு இல்லை ” என்ற ஒரு பல வீனம் எல்லா மனிதர்களிடமுமே உண்டு. அம்மாவுக்கும் அதே பலவீனந்தான்.

அண்டை அயலார் பார்வைக்கும் அம்மாவின் பார்வைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அம்மாவின் கஷ்டம், அவரால் அம்மா படும் வேதனை, அவஸ்த்தை இத்தியாதிகளைக் கண்டே அவர்கள் அங்கலாய்த்தார்கள்! “இத்தனை பெரிய உலகை இரண்டே அறையுள் சுருக்கிக் கொண்டாளே பாவி” என்று.

அம்மாவுக்குத் தம் அவஸ்தை ஒரு பொருட்டே அல்ல. அது அவஸ்தை என்றுகூட அவர்கள் கருதியல்லை. நோயின் நோவில் அவர் துடிக்கையில், அதைப் பார்த்துக் கொண்டு, வேதனையைப் பகிர்ந்துக் கொள்ள முடியாத பாவியாக நிற்கிறேனே என்பதுதான் அம்மாவின் துடிப்பு.

இல்லாதவனுடைய கவலை வேறு. இருந்து பின் இல்லையானவ னுடைய கவலை, முதலிலும் பார்க்கக் மூர்க்கமானது.

கீரைக்காரனின் குரல் கிண்டிவிட்ட தீயின் ஜ்வாலை அம்மாவின் மனதை எங்கெங்கோ விரட்டிக் கால்களைக் உள்ளறைக்கு விரட்டியது.

அவர் போய்விட்டார்.

ஆம் அம்மாவின் எத்தனையோ நாள் சுமையை ஒரே நாளில் ஊர் சுமந்துகொண்டு போய்விட்டது…கழுவி குளிப்பாட்டி!

தெருவே, ஏன், ஊரே திரண்டிருந்தது என்பதற்கு, அந்தக் கைய டக்க இல்லத்தில் நேற்று கழுவி விடப்பட்டு இன்று காய்ந்து கிடக்கும் சிமின்ட தரை காட்டும் ‘நசநச’ வென்ற அடிச்சுவடுகளே ஓர் எடுத் துக் காட்டு! சிறிதும் பெரிதும் கோணலும் மாணலுமாக.

அத்தனை கூட்டத்திலும், பிதுங்கிய திரட்சியிலும் அவர் மறைவு குறித்து மனம் கசிந்த ஜீவன் ஒன்று. ஆம், அம்மா மட்டுந்தான். மற்ற வர்களுக்கு அது மரண வீடாகப் படவே இல்லை . ஓடுவதும் ஓடிவ ருவதும், பூவைக் கொண்டா, பெட்டியை நகர்த்து என்னும் ஆர்ப் பார்ட்டம் அனைத்திலும் இழையோடியது. மணவீட்டு மணமே ஒழிய, மரண வீட்டு மயக்கமல்ல… சடங்கு வேறுபாட்டைத் தவிர.

சிரித்த முகத்துடன் தூங்குபவரைப் போலத்தான் அவர் கிடந்தார். பெட்டி நிறைந்த பூவில் அவர் பிணமாகத் தோற்றவில்லை. சாகப் போகிறோம் என்று தெரிந்தவுடன் சிரித்திருக்கிறார். உள்ளம் வெடிக் கும் புன்னகை. அதே அழகுடன் கிடக்கிறார்.

சாவுக்கு அஞ்சி, அரண்டு உயிர் விட்டவர்கள் தான். பிணமான பின்பு, கோரமாகக் கிடப்பார்கள் போலும், கண்டவர்கள் கதிகலங்கும் வண்ணம் அத்தனை பேர் மத்தியில் அழும் திராணி அம்மாவுக்கு இல்லை. பல்லி விழுங்கிய ஈ பல்லியின் அடிவயிற்றில் தெரிவது போல், உள்ளே போட்டு அமுக்கி வைத்திருந்த உள்ளக் கொதிப்பு, இதயக் குமுறல், அத்தனையும் உலர்ந்துவிட்ட உடலில் தெரிந்தன.

“அம்மாவுக்கு இனி விடுதலை.”

“அவ்வளவு அவஸ்தைகளும் மடிந்து விட்டன.”

“இனி வெளியே போகலாம், வரலாம்.”

மரண வீட்டில் அடிப்பட்ட அனுதாபக் குரல்கள். அம்மாவால் காதைப் பொத்திக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

இத்தனை நாளாக இறைவனுக்கும் மேலாக இயமனைத்தான் வேண்டிக்கொண்டார்கள்…”அவருக்கு முன்பு என்னிடம் வந்து விடாதே” என்று. இனி என்ன இருக்கிறது?

“என்னைத் தனியாக விட்டுப் போய் விட்டீர்களே!” பிரிந்து கிடக்கும் தலையுடன், கட்டிலில் மோதியழும் அம்மாவைப் பார்த்தால்!

அவர் இல்லாத அம்மாவா, அம்மா இல்லாத அவரா அனாதை என்பது புரியும்.

அவர் உயிருடன் இருந்துகொண்டு அம்மாவை அழ வைக்கிறார் என்று சொன்ன ஊரும் மக்களும் அம்மாவின் இன்றைய நிலையைப் பார்த்தால்?

அவர் இல்லாத உலகமே அம்மாவுக்குக் காலியாகத் தெரிகிறது: அவர் கிடந்த கட்டிலைப் போல. தேவன் இல்லாத கோயிலில் வலம் வர அம்மா விரும்பவில்லை.

“தருமராஜா, எத்தனையோ பேர் உன்னைக் கொடியவன் என்கிறார்கள். என் வரை நீ உத்தமன். என் பிரார்த்தனைப்படியே எனக்கு முன் அவரைக் கொண்டுபோய் விட்டாய். என்னையும்…என்னையும்…” அம்மாவின் கண்கள் மூடிக்கொண்டன.

நொண்டியின் கையில் இருக்கும் வரையில் தானே ஊன்று கோலுக்கு மதிப்பு?

நொண்டியே போய்விட்ட பிறகு?

– கலைமகள் 1963.

– தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2014, பாக்யா பதிப்பகம், ஹட்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *