ஊனம் ஒரு குறையல்ல‌

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2013
பார்வையிட்டோர்: 7,471 
 
 

அந்த அரச மரமும் புங்க மரமும் பதினைந்து வருடங்களாகவே ஒன்றாகவே வளர்ந்து வந்தன. எங்கிருந்தோ ஒதுங்கிய பறவைகளின் எச்சத்தில் வித்தாகி, செடியாகி, இலை விட்டு, கிளைவிட்டு வளர்ந்து, இப்போது ஓங்கி உயர்ந்து மரமாக நின்று கொண்டிருந்தன.

அரச மரத்துக்கு தான் அடர்ந்தும் உயர்ந்தும் இருப்பதாலும், தனக்கு கீழே உட்கார்ந்தே இருக்கும் பிள்ளையாருக்காக தன்னையே எல்லோரும் வணங்கி சுற்றி வருவதாலும் கொஞ்சம் பெருமை. ஆனாலும் புங்க மரம் ஒன்றும் சோடை போனதல்ல. நிழலுக்காக தன் கீழே எல்லோரும் ஒதுங்கும் போது “போதும் ! உன் சலம்பலை நிறுத்து ! நான் தரும் நிழலை உன் பரட்டைத் தலையால தர முடியுமா” என்று அரச மரத்தை சீண்டிப் பார்க்கும்.

மரத்துக்கு கீழே இருக்கும் பஸ் ஸ்டாப்பில் நிற்பவ்ர்களின் வம்புப் பேச்சுகளை கேட்டுக் கொண்டிருப்பது இரண்டு பேருக்குமே ஒரு நல்ல பொழுது போக்கு. அதிலும் காதல் வயப்படுபவர்களின் குசு குசுப் பேச்சுக்களை கிட்ட இருந்து கேட்கும் அனுபவம் அலாதியானது. அங்கே நிறைவேறிக் கொண்டிருக்கும் காதல் நாடகங்களை, மாலையானால் இரண்டு மரங்களும் சுவைபடப் பேசி சிரித்துக் கொள்வது வழக்கம். ஏன் இருக்காது ? பதினைந்து வயது என்பது மரங்களுக்கும் விடலைப் பருவம் தானே ?

அந்தப் பெண் ஒரு வருடம் முன்பு அந்த பஸ் ஸ்டாப்புக்கு முதல் முதலாக வந்தபோது இரண்டு மரங்களுமே வழக்கம் போல ஒரு எதிர் பார்ப்புடன் தான் இருந்தன. ஆனால் மரங்களுக்கு மட்டுமல்ல, அங்கே வந்து போகும் எல்லா ஆண்களுக்கும் கூட ஏமாற்றம்தான். இந்த ஒரு வருடத்தில் ஒரு ஆண் கூட அவள் அருகில் நெருங்க முடியவில்லை. எவனையாவது அவள் இரண்டாம் முறை பார்க்கிறாள் என்றால் அது கண்ணகியின் மதுரைப் பார்வையாகத்தான் இருக்கும். அந்தத் தணலில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்தவர்கள்தான் அதிகம்.

அவளுக்கு வலது கால் சற்று ஊனம் லேசாக விந்தி விந்தி நடப்பாள். தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியாத அளவுக்கு சிறிய ஊனம்தான் . அதைத் தவிர்த்து, ஒரு வயதுப் பெண்ணிற்கு இருக்கும் அனைத்து இலக்கணங்களும் அவளுக்கு இருந்தது. கிடக்கட்டும் ! ஆணுக்கு பெண் மீதும் பெண்ணிற்கு ஆண் மீதும் ஈர்ப்பு வருவதற்கு அதெல்லாம் எதற்கு ? வெறுமனே ஆணாகவும் பெண்ணாகவும் இருந்தாலே போதுமே ? இயற்கையின் அந்த கெமிஸ்டிரியே ஒரு மிஸ்டிரிதானே ?

புங்க மரம் கேட்டது ” சரி ! தினம் பிள்ளையார் கிட்ட போய் நிக்கிறாளே என்னதான் கும்பிடுறா ?

அவளா ? அம்மா, தம்பியோட என்னையும் நல்லா வச்சுக்க சாமி ! எப்பவுமே அவ்வளவுதான் ” அதுக்கு மேல எதுவும் கேட்க மாட்டா.

நாளடைவில் இரண்டுமே முடிவுக்கு வந்து விட்டன இது “தேறாத கேஸ்” என்று. அதனால்தான், ஒரு வாரமாக அந்த பஸ் ஸ்டாப்புக்கு புதிதாய் வந்து கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பார்க்கும் போது கூட இவளோடு இணைத்துப் பார்க்கும் என்ணம் இரண்டு பேருக்குமே வரவில்லை.

அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். மா நிறம். நடுத்தர உயரம். எந்தக் கூட்டத்திலும் எளிதில் கரைந்து விடுவது போன்ற சராசரித் தோற்றம். அவள் வந்து சேர்ந்த ஐந்து நிமிடங்களில் தோளில் ஒரு பையைத் தொங்க விட்டு அவன் வருவான். அவள் செல்லும் அதே பஸ்ஸில் தான் அவனும் போவான். பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றவுடன் பஸ்ஸ்டாப்பை விட்டு வெளியில் இருக்கும் ஒரு குத்துக் கல்லில் சாய்ந்த வண்ணம் நின்று கொண்டு கைகளைக் கட்டிக் கொள்வான்.

அங்கு நின்று கொண்டிருக்கும் ஆண்கள் பெண்கள், பள்ளிக்குப் போகும் குழந்தைகள், ஓடி விளையாடும் நாய்குட்டி, மேயப் போகும் மாடுகள், பறவைகள், வந்து நிற்கும் பஸ் என்று எல்லாவற்றையும் ஒரு வித ஈர்ப்போடு வேடிக்கை பார்ப்பான். சில சமயம் அந்தப் பெண்ணையும் கூட அப்படி வேடிக்கை பார்ப்பான், ஆனால் அந்தப் பார்வை ஒரு விதமான பொத்தாம் பொதுவான பார்வையாகத்தான் இருக்கும். அவனுடைய முகத்திலிருந்து அந்தப் புன்னகை மட்டும் எப்போதுமே மறைவதே இல்லை. சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் அவன் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்ப்பதை அந்த மரங்கள் இரண்டும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கும்.

அவளும் அவனை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். தான் போகும் பஸ்ஸிலேயே அவனும் வருவதாலும் தான் இறங்கும் ஸ்டாப்பிலேயே அவனும் இறங்குவதாலும். ஆனால் அவளுடைய பார்வை பொத்தாம் பொதுவான பார்வை அல்ல. அவனிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் நோக்கத்துடன் கூடிய ஒரு ஜாக்கிரதையான பார்வை. எந்த ஆணைப் பார்க்கும் போதும் அவளுக்குள் ஏற்படும் ஒரு எச்சரிக்கை மணி.

ஒரு நாள், அவன், பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ஆளிடம் மணி கேட்டான். அவனிடம் வாட்ச் இல்லாததால் இவள் பக்கம் திரும்பி நடந்து வந்தான். எங்கே நம்மிடம் மணி கேட்டுவிடுவானோ என்று ஒரு பதற்றம் அவளுக்குள். இதை அனுமதிக்கக் கூடாது. இந்த ஆண்கள் பெண்களிடம் பேசுவதற்கு இதை ஒரு சாக்காக வைத்துக் கொள்வார்கள். ஆனால் அவன் அவளைக் கடந்து சென்று தள்ளி நின்றிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணிடம் மணி கேட்டு, பின் பழைய இடத்திற்கே சென்று வழக்கம் போல வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான். அவளுக்கு நிம்மதியாகிப் போனது.

மற்றொரு நாள் ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அவனை ஸ்கூட்டியில் கொண்டு வந்து பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டார். அவனது அம்மா போல. அவன் ஸ்கூட்டியில் இருந்து இறங்குவதற்குள், அருகில் நின்று கொண்டிருந்த அவளிடம் 57 ஜி பஸ் போயிடுச்சாம்மா ? என்று கேட்டார். அவள் பதில் சொல்வதுற்குள் அவனே முந்திக் கொண்டான். போயிருக்காதும்மா ! அவங்களும் அந்த பஸ்ஸிலதான் போவாங்க ! என்றான். அப்படியா ! நீயும் அந்த பஸ்லதான் போறியாம்மா ? என்று கேட்டுவிட்டு பதிலை எதிர் பார்க்காமல் ஸ்கூட்டியைத் திருப்பி சென்று விட்டார்.

ஒரு நாள் வேறொரு பஸ்ஸில் ஏறுவதற்காக ஓடி வந்த பள்ளிச் சிறுமிகள் இவன் பையைத் தட்டிவிட அதன் உள்ளிருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து சிதறின. அப்போதுதான் அவள் அந்த மாத்திரை ஸ்ட்ரிப்பைக் கவனித்தாள். வெள்ளையும் சிவப்பும் கலந்த அதைப் பார்த்த மாத்திரத்தில் தெரிந்து போனது. அவள் பார்மஸியில் வேலை பார்ப்பதால் அது எந்த நோய்க்கானது என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. இவனுக்கு அப்படி ஒரு நோயா ? அல்லது வீட்டில் வேறு யாருக்குமா ? என்று யோசித்தாள். ஆனால் அடுத்த வாரத்திலேயே அதற்கு விடை தெரிந்து விட்டது.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் அந்த அம்மா அவனை ஸ்கூட்டியில் வந்து இறக்கி விட்டது. இறங்கும்போது அவன் கேட்டான். “மாத்திரையை எடுத்து வச்சியாம்மா ?

சாரிடா ! சாரிடா ! மறந்துட்டேன். நீ இங்கேயே நில்லு ! நிமிஷத்தில வந்துடறேன் என்று கிளம்பியவளை தடுத்து நிறுத்தினான்.

நீ இறங்கி நில்லும்மா ! மச மசன்னு நீ போயி என்னக்கி எடுத்துட்டு வரது. நானே போறேன்”னு சொல்லி ஸ்கூட்டியை எடுத்து விர்ரென்று கிளம்பிப் போய்விட்டான்.

அந்த அம்மா பக்கத்தில் நின்று கொண்டிருத அந்தப் பெண்ணிடம் புலம்பினார் ” எங்கம்மா வேலை ஒழியுது. காலையில 5 மணிக்கு எந்திருச்சு, வாசப் பெருக்கி கோலம் போட்டு, பாத்திரம் கீத்திரத்தை கழுவி, காபியைப் போட்டு அவனை எழுப்பனும், குக்கர்ல சாதத்தயும் பருப்பையும் வச்சு ஒரு பொரியலைப் பண்ணுனதுக்கு அப்புறம் அவனுக்கு இட்லிய சுட்டுக் குடுத்து, மத்தியானத்துக்கு ரெண்டு பேத்துக்கும் சோறைக் கட்டிட்டு அப்புறமா நான் குளிக்கனும். இதுல கரண்ட் கட் வேற. எல்லாத்தையும் முடிச்சு டிரஸ் பண்ணி வேலைக்கு கிளம்புற அவசரத்தில இப்படி ஏதாவது மறந்துடுது.

நான் உங்கிட்ட போயி புலம்பிட்டு இருக்கேன் ” என்று சொல்லி அந்தப் பெண்ணை ஏற இறங்க பார்த்து விட்டு ” நீயும் அந்த பஸ்ஸிலதான் போறேல்ல ” என்றார். சுற்று முற்றும் பார்த்துவிட்டு தாழ்ந்த குரலில் சொன்னார் ” தப்பா நெனச்சுக்காதம்மா ” பையனுக்கு அப்பப்போ வலிப்பு வரும். அப்பல்லாம் எங்கன்னாலும் அப்படியே விழுந்து கெடப்பான். அதுனாலதான் அவன் பாக்கட்டுலேயே என் போன் நம்பர், ஆஸ்பத்திரி போன் நம்பர்லாம் எப்பவுமே இருக்கும். நான் யார்ட்டயாவது சொன்னா ஏம்மா தண்டோரா போடுறன்னு என்னை திட்டுவான். இதை ஏன் உங்கிட்ட சொல்றன்னா ரோட்டுல விழுந்து கிடந்தா யாராவது எனக்கு தகவலாவது சொல்லுவாங்களேன்னு ஒரு ஆதங்கம் தாம்மா. தப்பா நெனச்சுக்காத ! என்றார்.

தெரு முனையில் அவன் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தான். அந்த அம்மா ” நான் சொன்னேன்னு சொல்லிடாதேம்மா ” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டார். வ்ந்தவன் ஸ்கூட்டியை அம்மாவிடம் கொடுத்து விட்டு “நீ கெளம்பும்மா உனக்கு நேரமாயிடும்”னு சொல்லி அம்மாவைக் கிளப்பி விட்டு பக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணிடம் ” எங்கம்மா ரொம்ப போரடிச்சுட்டாங்களா ? என்று சிரித்தபடியே கேட்டு விட்டு தள்ளிப் போய் அவனுடைய வழக்கமான இடத்தில் நின்று கொண்டான்.

ஒரு நாள் வழக்கம் போல பஸ்ஸுக்காக காத்திருந்த நேரம் அந்த ஸ்டாப்பிற்கு இரண்டு பேர் வந்தார்கள். மடித்துக் கட்டிய கைலி, அழுக்கடைந்த சட்டை, கலைந்த தலை, இரண்டு பேருமே குடித்திருந்தார்கள். ஒருவன் தள்ளாடிக் கொண்டிருந்தான். அங்கே நின்றிருந்த ஒவ்வொருவரின் அருகில் சென்ற போதும் நின்றிருந்தவர்கள் விலகிச் சென்றார்கள் ஏன் வம்பு என்று. தனியாக நின்றிருந்த அந்தப் பெண்ணின் அருகில் வந்து இரண்டு பேருமே அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே நகராமல் அங்கேயே நின்றிருந்தார்கள். அவள் தைரியமானவள்தான் ஆனால் இது போன்ற முரட்டு குடிகாரர்களைப் பார்த்ததில் சற்று வெல வெலத்து விட்டாள். சட்டென்று வியர்த்து விட்டது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் நகர்ந்து வந்தான். தள்ளாடிக் கொண்டிருந்தவனின் தோளில் தன் கையை வைத்தான், நட்பாக இல்லை, சற்று அழுத்தமாக. பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்த்து சற்று உரத்த குரலில் சொன்னான். “இவனை பாத்து வீட்டுக்கு கூட்டிட்டு போ ! டேமேஜ் இல்லாம போய் சேரனுமில்ல ? இவனுடைய குரலில் இருந்த கடுமையும், பார்வையில் இருந்த உக்கிரமும் அவர்களுக்குப் புரிந்தது. வாடா மாப்ளே ! என்று தள்ளாடிக் கொண்டே இடத்தைக் காலி செய்தனர். அவர்கள் தெருவின் எல்லையைத் தாண்டும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் தேங்க்ஸ் சொல்லலாமா என்று யோசித்து முடிவு செய்வதற்குள் மீண்டும் தன் பழைய இடத்திற்கே திரும்பிச் சென்று வழக்கம் போல வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

அவள் தன்னைத்தானே நொந்து கொண்டாள். சே ! என்ன மனுஷி நான் ? ஒரு தேங்க்ஸ் சொல்வதற்குக் கூட வாய் வரலியே ? என்ன ஜென்மம் நான் ? என்று தன்னையே திட்டிக் கொண்டாள். அன்றிலிருந்து அவளிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அவனைப் பார்த்தால் புன்னகைக்கலாம் என்று நினைப்பாள். ஆனால் அவன் இவளைப் பார்த்தால்தானே. வழக்கம் போல கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் அவன் அந்தப் பக்கம் திரும்பி பஸ் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்குப் பின் புறம் ஒரு மாடு வேகமாக ஓடி வந்தது. பஸ் ஸ்டாப்பில் இருந்தவர்கள் எல்லாம் கலைந்து ஓட அந்த சலசலப்பைக் கேட்டுத் திரும்பியவனின் மிக அருகில் வந்த மாடு இவனை முட்டி விட்டது. இவன் சற்று ஒதுங்கி விட்டதால் கொம்பு இவன் மீது படவில்லையென்றாலும் தலையால் இவனை முட்டி தரையில் சாய்த்து விட்டு அந்த மாடு அப்படியே நேராக ஓடிப் போய் விட்டது.

மாடு முட்டிய வேகத்தில் அவன் அந்தப் பெண்ணின் காலடியில் வந்து விழுந்தான். மறு நொடி அவன் கை, கால், தலை எல்லாம் வெட்டி இழுக்கத் தொடங்கியது. கண்கள் சொருகி வாயில் இருந்து நுரை தள்ளத் தொடங்கியது. எல்லாம் ஓடி வந்தார்கள். சிலர் அவன் கையில் சாவிக் கொத்தைத் தந்தார்கள். அந்தப் பெண் தன் கைக் குட்டையை எடுத்து அவனுடைய வாய்க்குள் நாக்கைக் கடித்து விடாமல் இருக்கும்படி திணித்து வைத்தாள்.

ஒரே நிமிடத்தில் எல்லாம் அடங்கி அவன் மெல்ல தன் நிலைக்குத் திரும்பினான். சுற்றி நின்றிருக்கும் கூட்டத்தைப் பார்த்ததும் புரிந்து விட்டது. வழக்கமாக நடப்பது தானே. சாரி ! சாரி ! என்று எழுந்து உட்கார்ந்தான். எல்லோரும் அவனை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சூழ் நிலையை மாற்றுவது போல அங்கிருந்த ஒரு பெரியவர் ” பசி மயக்கம் போல இருக்கு. காலைல சாப்பிடலையா தம்பி” என்று கேட்டார். அவனோ ” இல்லை சார் ! எனக்கு வலிப்பு வரும். தினம் ரெண்டு வேளை மாத்திரை சாப்பிடணும். நேத்து முழுக்க மற்ந்துட்டேன் அதுதான்” என்றான் மிகவும் நிதானமாக. சற்று நேரத்தில் எழுந்து நின்றவன் உடைகளை சரி செய்து கொண்டு வீட்டுக்குத் திரும்பி சென்றான்.

மறு நாள் காலை அவன் வந்த போது அந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த எல்லோருமே அவனையே பரிதாபமாகப் பார்த்தார்கள்

அரச மரத்தைப் பார்த்து புங்க மரம் கேட்டது” இன்னிக்கு கவனிச்சியா ?

ம்ம் .. கவனிச்சிட்டுதான் இருக்கேன். இன்னிக்கு இங்கே இருக்கிற எல்லாரும் அவனை விட்டு ஒரு அடி தள்ளியே நிக்கிறாங்க. ஆனால் அவள் மட்டும் ஒரு அடி பக்கத்தில் வந்து நிக்கிறாளே அதைத்தானே கேட்டே ?

அவனோ ஒன்றுமே நடக்காதது போல குத்துக் கல்லில் சாய்ந்து கொண்டு வழக்கம் போல கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதே சுவாரஸ்யமான பார்வை அதே மாறாத புன்னகை. நான் இப்படித்தான். எனக்குள்ள குறைகள் அப்படித்தான். இது எனக்கு ஒரு குறையும் இல்லை. . இதனால் எனக்கு கவலையும் இல்லை. ஆனாலும் இந்த உலகமே என்னை இந்தக் குறைகளோடு ஏற்றுக் கொள்ளும் என்பது போன்ற அவனது தன்னம்பிக்கை அவன் மேல் இருந்த அபிமானத்தை அதிகரிக்கச் செய்தது.

அவள் யோசித்தாள். மாறாக நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? என்னை சுற்றி யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி நானே ஒரு சுவற்றை எழுப்பிக் கொண்டிருக்கிறேன். அதனால் என்ன பயன் ? மற்றவர்களும் உள்ளே நுழைய முடியாது நானும் வெளியே போக முடியாது. இந்த உலகத்தில் எல்லோருமே அவரவர் வீடு அவரவர் வேலை என்று உழன்று கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றியோ என் குறைகளைப் பற்றியோ நினைப்பதற்கு இந்த உலகத்திற்கு நேரம் ஏது ? அப்படியே நினைத்தால் அது என்னை ஏன் பாதிக்க வேண்டும்.

என் குறைகளோடு நானே என்னை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத போது, என் குறைகளோடு நானே என்னை முழுமையாக நேசிக்காத போது இந்த உலகம் மட்டும் என்னை நேசிக்க வேண்டும் என்பது எப்படி சாத்தியம் ? அவனைப் போல நானும் ஏன் இந்த உலகத்தை நேசிக்கக் கூடாது. மலரும் பூவை ஏன் ரசிக்கக் கூடாது ? சிரிக்கும் மழலையில் ஏன் மயங்கக் கூடாது ? குயிலின் குரலை ஏன் கேட்கக் கூடாது ? கடலின் அலையில் கால்களை ஏன் நனைக்கக் கூடாது ? வாழ்வின் சுவையை ஏன் சுவைக்கக் கூடாது ? இந்த உலகத்தில் நான் வாழ்வது என் கையில் இல்லையா ? மற்றவர்களா அதை முடிவு செய்வது ?

ஏதோ முடிவெடுத்தவள் போல் அவனை நோக்கி நடந்தாள். அரச மரமும் புங்க மரமும் இலைகளை அசைப்பதை நிறுத்தி விட்டு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தன. விஷயம் சூடு பிடிக்கும் போலிருக்கிறதே ?

அவனருகில் சென்று “ மாத்திரையை மறக்காம சாப்பிட்டீங்களா ? என்றாள் புன்னகையுடன்.

சற்றும் எதிர்பாராத அவன், ” ம்ம்… சாப்பிட்டேன். தேங்க்ஸ் ! உங்க கர்சீப் என் கிட்ட இருக்கு என்றான்.

என் கர்சீப்புதான்னு எப்படி தெரியும் ?

தெரியும்.

அதான் எப்படின்னேன் ?

மனம் இருந்தால் மார்க்கமுண்டு. தெரிஞ்சுக்கணும்னு மனசு வச்சா தெரிஞ்சிக்கலாம்.

தெரிஞ்சதுன்னா குடுத்துட வேண்டியதுதானே ?

கேட்டா குடுத்துடலாம் ?

அப்ப எதையுமே கேட்டாதான் குடுப்பீங்களா ?

இரண்டு பேரும் மனம் விட்டு சிரித்தனர்.

அப்போது அடித்த காற்றில் அரச மரம் தன் இலைகளை அசைத்த ஓசை மங்கல இசை போலவும், புங்க மரம் தன் இலைகளில் தேங்கியிருந்த மழைத்துளிகளை சிறு சிறு துளிகளாக அவர்கள் மேல் தெளித்தது அட்சதை போலவும் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *