ஊனமுற்ற மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 4,177 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இன்று பெண் பார்க்க வருகிறர்கள் என்று தரகர் ஏற்கனவே அறிவித்தல் தந்திருந்தார். இது ரேணுகாவிற்கு முதல் முறையல்ல. இதோடு எத்தனை தரம் எத்தனை ரகமான மாப்பிள்ளைகள் மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து அவளைப்பார்த்துவிட்டு – தேநீர் குடித்துவிட்டு – கதைபரிமாறிவிட்டு – எதற்கும் போய்க்கடிதம் போடுகிறோம் என்று நாகரீகமாகச் சொல்லிவிட்டனர். ஆனால் அவ்வாறு கடிதம் எழுதினார்களா? என்று கேட்டால் அதுவும் இல்லை. தமிழ்ப்பண்பாடு நல்ல பண்பாடு தான். ஒருவருக்கு ஒரு செய்தியை எப்படி மனம் நோகாமல், தாமும் தப்பிக் கொள்ளக்கூடிய முறையில் ஒருவருக்கு வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான். இது ரேணுவின் பெண்பார்க்கும் படலங்களிலிருந்து அவள் அனுமானித்துக் கொண்டவை!

இன்றைக்கு மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்று ரேணுகாவின் அம்மா. அப்பா, சகோதரர்கள் இது தான் முதற்தடவை மாதிரி ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் பரிதாப நிலையைப் பார்த்து அவள் – மாப்பிள்ளை வீட்டார் வந்தால் வந்துவிட்டுப் போகட்டுமே. அதற்கேன் இந்தத் தடல்புடல்? அவர்களும் பூலோக வாசிகள்தானே? இவ்வாறு ரேணுவின் மனம் கேட்டு க்கொண்டேயிருக்கும். என்னவோ பெற்றேரின் திருப்திக்காகவே “பெண்பார்க்க” அவள் ஒப்புக்கொண்டாள். அலங்காரம் செய்து உட்காருவதும் அவர்கள் தன்னை கால்முதல் தலைவரை பார்ப்பதும், பின்னர் பக்கத்தில் உள்ளோருடன் சுரண்டி கையாற் கதைப்பதும் அவளுக்கு வெறுத்துவிட்டது. சிலர் சீதனத்தை விரும்பி வந்தனர். அது பற்றாமற் போகவே பதில் தராமல் விட்டமை அடுத்த கிழமை சொல்கிறோம் என்ற வாய்ப்பாடெல்லாம் அவளுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.

ரேணுகாவுக்கு அப்போது பதினேழு வயதிருக்கும் பாடசாலையொன்றில் ஏ.எல் செய்துகொண்டிருந்தாள். அவளது அப்பாவின் தங்கையின் மகன் தயாளன் ரேணுகாவின் வீட்டுக்கு வந்து மாமா, மாமி உறவு கொண்டாடிச் செல்வான். இவன் மருதானையில் கடையில் தகப்பனாருடன் வே லை செய்தாள். தீபாவளி, வருடப்பிறப்பு, பொங்கல் என்று ஊருக்கு வரும்போது ரேணுவின் வீட்டுக்கு செல்லத் தவறுவதில்லை. ரேணுவகாவைவிடப் பத்து வயது முத்தவன். ரேணுவிற்கு அவனைக் கண்டாற் பிடிக்காது. ஆனால் தயாளனோ எந்நேரமும் மச்சாள் மச்சாள் என்றும் பெண்டாட்டி என்றும் அவளைக் கேலிசெய்வான். தான் ஒரு முதலாளியின் மகன் என்றும் தனக்கு எத்தனைபேர் பெண் கொடுக்க வருவார்கள் என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிவான். அவனிடம் போதியளவு காசு இருந்தது. அதற்காக எல்லாப் பெண்களும் தன்னை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா ? இது அவனது அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். காலம் செல்ல ரேணுவும் பாடசாலை படிப்பை நிறுத்தி அம்மாவுக்கு உதவியாகச் சேர்ந்து கொண்டாள். அவளுக்கு வீட்டில் பொழுது போவது கடினமாக இருந்தபோது தையல்வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

நாட்கள் நகர்ந்தன . ரேணுகாவிற்கு திருமணப் பேச்சு எடுத்தபோதெல்லாம் மாமாவின் மகன் தயாளன் நானே ரேணுவைத் திருமணம் செய்யப் போகிறேன். அதற்குத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கூறி அவளுக்குச் சவால்விட்டுக் கதைப்பான். அவளது அப்பாவுடன் கதைத்து அவரைத் தன்வசப்படுத்திவிட்டான். ரேணுவுக்கு உள்ளுர விருப்பமேயில்லை. சீதனமில்லாமல் செய்வேன் என்றபடியால் அவளது தந்தையும் அதனைச் சாதகமாக்கிவிட்டார். ஒன்றும் செய்யமுடியாத ரேணு சீதனத்தை எண்ணிப் பெருமூச்சு விட்டு இந்தச் சீதனத்தினாந்தானே என்னை இந்தக் கல்யாணத்திற்கு அப்பா பலியாக்க முயன்றுள்ளார் என்று மனம் நொந்தவண்ணம் ஒப்புக்கொண்டுவிட்டாள்.

ஒரு பெண் ஒருவரை மாப்பிள்ளையாக ஏற்கும்போது உள்ளுர விருப்பம் இருக்கவேண்டும். ஆனால் ரேணுவுக்கோ தயாளனை எந்நேரமும் கண்டு அவர் குணநடைகளை அறிந்து, பழக்கவழக்கத்தைப் புரிந்தபின் மாப்பிள்ளை யென்றே, கணவனென்றே ஏற்க மனம் சங்கடப்பட்டது. இருந்தாலும் பெற்றோரின் விருப்பத்திற்காக அவள் சம்மதித்தாள். கலியாணமும் சிறப்பாக நடந்து நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன . ஒரு மாதத்தின்பின் தயாளன் தனது தொழிலைத் தொடங்குவதற்கு ஆயத்தமானான். ஆனால் மனைவியைவிட்டுப்பிரிய மனம் சங்கடப்பட்டது. இருந்தாலும் போகவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி மனைவியிடம் விடை பெற்றுச் சென்றன். அவ்வாறு செல்லும்போது எங்கிருந்தோ வந்தலொறி ஒன்றினால் மோதப்பட்டு அவ்விடத்திலேயே தனது இல்வாழ்க்கையை மட்டுமன்றி பூலோக வாழ்வையும் முடித்துக் கொண்டான். துாண்டிய திரிதூண்டி சுடர்விடுமுன் எண்ணெய்க்குள் அமிழ்ந்து தணிந்ததுபோல் ரேணுவின் வாழ்வு அஸ்தமித்துவிட்டது. மணமாகி ஒரு மாதத்தில் மணவாழ்க்கையை இழந்தாள். அன்று தொடங்கிய பெண்பார்க்கும் படலம் இன்றுவரை நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவராவது அவளை மனைவியாக ஏற்க இன்னும் முன்வரவில்லை.

“தாலி அறுத்தவள்” என்ற பட்டப்பெயர் அவளது மறுகல்யாணத்திற்கு முன்வந்து தடையாக நிற்கும். ஆனால் அவளது கல்யாணத்தின்போது தயாளன் அரசியற் கலகம் காரணமாக ஊரடங்குச்சட்டம் இருந்தபோது தாலிகட்டாமலேயே திருமணம் செய்து கொண்டான். ஆறு மாதத்தின்பின் தாலியைக் கட்டலாமென ஒத்திவைத்து ஏனைய சடங்குகள் முறையாகச் செய்தனர். ஆனால் இப்போது தாலி அறுத்தவள் என்ற ஒரு பெயரைச் சுமந்த வண்ணம் இருக்கிறாள் ரேணுகா. ரேணுகாவிற்கு மனதில் ஒரு கேள்வி எழுந்தது. நான் களங்கப்பட்டவள் என்று ஏன் இந்தச்சமுதாயம் கருதுகிறது? இயற்கையின் தீர்ப்பு, கடவுளின் செயல் என்றும் இவள் என்னதவறு செய்தாள் என்றும் ஒரு உயிராவது நினைக்கிறதா? என்பதாகும்.

வேண்டா வெறுப்பாக நீ செய்த கல்யாணம் அப்படியே போயிற்று என அவளது தாய் நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். மறுபக்கம் ஊராரின் கதைகள் . இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு ரேணு எப்படி வாழ்வது? இருந்தும் அவளது அப்பா எவனாவது கட்டவருவான் என தனது முயற்சியைத் தளரவிடாது செயற்பட்டுவந்தார். அதன் பிரதிபலிப்புத்தான் இன்று மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள்.

மாப்பிள்ளை ஏ.எல் படித்துமுடித்துவிட்டு யூனிவ சிற்றிப்பிரவேசம் கிடைத்தது. படிக்காமல் ஜேர்மன் போய்விட்டாராம். இப்போது பிரச்சனையெல்லாம் முடிந்ததும் முடியாததுமான நிலையில் ஊருக்கு வந்திருக்கிறர். வயது முப்பத்தெட்டு என்றும் தரகர் சொன்னார். சாதகமும் பொருந்தியிருக்கிறது. எல்லாம் சரி. சீதனத்தைப் பேசினர். ரேணுகாவின் கடந்த காலத்தின்மேல் தந்தையார் ஒருமுறை பேச்சோடு பேச்சாக உரசினார். உடனே மாப்பிள்ளையின் பெற்றோர் துள்ளிக்குதித்து எழும்பி பிறகு சொல்கிறேம் எனச்சென்றுவிட்டனர். இது ரேணுகாவுக்கு வாழ்க்கைத் தளிரைக் கிள்ளியெறிந்தது போலிருந்தது.

இரண்டு கிழமைகளின் பின்னர் ரேணுவின் தமையனின் நண்பனின் மூலம் இந்த மாப்பிள்ளை பற்றித் தகவல் கிடைத்தது. மாப்பிள்ளை ஜேர்மனியில் இருக்கும்போது ஒரு ஜேர்மன் பெண்ணுடன் நட்பாக இருந்து திருமணம் செய்ய முடிவெடுத்தபோது அவள் மாறிவிட்டாள் என்று செய்தி கிடைத்தது. இதைக் கேட்ட ரேணுவின் மனம் கொதித் தது. அந்த மாப்பிள்ளை அப்படி வாழ்ந்துவிட்டு என்னை ஏளனம் செய்ய எப்படி மனம் வந்தது? மாப்பிள்ளை பிழைவிடலாம். அதுவும் தெரிந்துகொண்டு தவறுசெய்யலாம். பெண்கள் தெரியாமலும் பிளைவிடக்கூடாது. இதுதான் நம் ஆண்களின் கொள்கை. என்று நொந்த வண்ணம் தனது வேலையான தையலில் பழையபடி மூழ்கிவிட்டாள்.

சில தினங்களின் பின்னர் ரேணுகாவின் பாடசாலைத் தோழி மாலதி அவளிடம் வந்தான். மாலதி திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கத் தாயாகிவிட்டாள். தனது பாலிய நண்பி ரேணுவின் வாழ்க்கை இப்படிப் பூத்துக் குலுங்காமலிருப்பது அவளுக்கு வேதனையாக இருந்தது. “என்ன ரேணு அன்று மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன செய்தி” என்று கேட்டாள். “அதையேன் பேசுவாள்? ஏதோ என்னுடைய குறையைச் சொல்லி நழுவிவிட்டார்கள். என் தலையெழுத்து இது. மாப்பிள்ளை ஜேர்மனியில் இருந்தபோது ஜேர்மன்காரியைத் தான் திருமணம் செய்ய இருந்தவராம். பின்னர் சரிவரவில்லையென்று இங்கு வந்திருக்கிறாராம்” என்றாள் ரேறு. இதைக்கேட்ட மாலதி “நீ என்ன சொல்கிறாய்? தானும் தப்புச் செய்துவிட்டு மகாலெட்சுமி மாதிரியுள்ள உன்னை குறைகூறி மறுத்துவிட்டார்களே. மாப்பிள்ளைமாருக்கு தவறுகள் பிழைகள் விட்டாலும் அதுவும் தெரிந்து பிழைகள் விட்டாலும் அவர்களுக்கு மேலதிக நன்னடத்தைச் சான்றிதழ்களைச் சமூகம் வழங்குகிறது” என்று கோபத்துடன் ஏசினார். “ஜேர்மனியில் எட்டுவருடம் இருந்தாரென்றால் – அங்குள்ள பன்பாட்டை, உலக அறிவை அவர் அறியவில்லையா? அனுபவிக்கவில்லையா? காணவில்லையா? பெண்களுக்கு அவர்கள் காட்டும் சமத்துவம் மரியாதை என்பவற்றைப் பார்க்கவில்லையா?” எனக் கொதித்தாள். மாலதி ஏன் கோவப்படுகிறாய்? என் தலைவிதி இப்படியிருக்கும் போது அதைப்பிரமனாலும் அழித்தெழுத முடியாது. இல்லை ரேணு பிரமன் எழுதியதாகப் பலவற்றையும் ஏன் எல்லாவற்றையுமே எம் சமுதாயம் செய்துவிட்டு பிரமனைச் சாட்டுக்கு இழுக்கிறது. உனக்குத் தெரியாது. ஏன் என் கணவரும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியிலிருந்து உழைத்தவர் என்று உனக்குத் தெரியும் தானே? அவர்தான் எல்லாம் முன்பு சொல்லியிருக்கிறார். ரேணு எத்தனை ஆன்கள், எத்தனை பெண்கள் பிழை செய்கிறார்கள்தான். அது சில வேளை பலாத்காரம். அறியாப்பருவம், விதி, தலையெழுத்து. அது இது என்றிருக்க லாமல்லவா? தற்செயலாக நடந்த ஒன்றுக்கு ஒரு பெண்னானவன் ஆயுள்த் தண்டனை பெற்ற கைதிபோல தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? எத்தனையோ காதலர்கள் திசைமாறி வேறு திருமணம் செய்யவில்லையா? இன்னும் அருமையாக விதவைப் பெண்களை சில ஆண்கள் திருமணம் செய்யவில்லையா? என்று யோசித்துப்பார். மேலும் சொன்னால் திருமணமாகிய பின் கணவளில்லாத வேளையில் மனைவியை யாரோ ஒருவன் வந்து களங்கப்படுத்திச் சென்றுவிட்டான் என்றால் அக்கணவன் மனைவியை வெறுப்பானா? அல்லது களங்கப்படுத்தியவனைக் கொல்ல வாளை தூக்குவானா? எதைச் செய்வான்? வாள்தான் தூக்குவான். அப்படியென்றால் அந்த இடத்தில் மனைவி களங்கப்பட்டவள் என்று அவன் நினைப்பதில்லையே. அவள் களங்கப்படவில்லையா? ஒரு பெண்ணுக்கு கல்யாணத்திற்குப்பின் தவறுதலாக ஏதும் நடந்தால் களங்கப்படாதவள். கற்பைக்காக்கப் போராடினார் என்று யார் சொன்னார்கள். ஒட்டுமொத்தமாக நோக்கினால் கல்யாணத்திற்கு முன்போ, பின்போ தவறினால் இரு நிலையிலும் பெண் களங்கப்பட்டிருக்கிறாள் என்பது முடிவாக இருக்கும்போது முன்னக்கொரு மாதிரியாக, பின்னுக்கொருமாதிரியாக சமுதாயம் பெயரைக் கொடுத்துக் கொண்டடிருக்கிறது . என்று ஏசிய மாலதி நீ ஒன்றுக்கும் கவலைப் படவேண்டாம். உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் .ரேணு ஒரு விடயம் உன்னுடன் கதைக்க வேண்டியுள்ளது. நீ என்ன நினைப்பாயோ தெரியாது. உனக்கு விருப்பமென்றால் நான் செய்வேன். அல்லாவிட்டால் விட்டுவிடுவேன். உனது பிரச்சனைகள்பற்றி எனது ஒன்றுவிட்ட அண்ணனுக்கு அடிக்கடி சொல்வேன். அவரைப்பற்றி முன்பும் உனக்குக் கூறியிருக்கிறேன் .அவர் கடையொன்றில் வேலை செய்கிறார். நல்ல மனம் படைத்தவர். அவர் தனக்குக் கல்யாணம் வேண்டாமென்று பிடிவாதமாக இருக்கிறர். அவருக்கு இடையில் ஏற்பட்ட கோளாறினால் ஒரு கால் ஊனம். இதனால் தனக்குக் கல்யாணம் வேண்டாமென்று சொல்லிவிட்டார். நீ சம்மதித்தால் நான் அவரை வழிக்குக் கொண்டுவருவேன். அது உன் சொந்த விருப்பம். இப்படிக் கேட்கிறேன் என நினைக்காதே. அவரும் பாவம். அவர் வேண்டாமென்று இருந்தாலும் அவருக்கு ஒரு துணை தேவையென நான் கவலைப்படுவேன். உன்னையும் நினைத்து நான் கவலைப்படுவேன். இது இணைந்தால் இரண்டு கவலையும் எனக்கில்லை. என்று மாலதி கூறி முடிக்குமுன் ரேணுகா அழுதுகொண்டு மாலதி நீ சொன்னதை நான் ஏற்கவேணுமா? என்றாள். அப்போது மாலதி இது உன் விருப்பம் எப்படியோ? அப்படியே செய். உன் முடிவைப் பொறுத்தது என்றாள். இல்லை இல்லை மாலதி உன் அண்ணனும் பெண் பார்க்க விரும்புவார். ஏனென்றால் அவரும் ஆண்மகன்தானே. நான் சம்மதிப்பேன். வீட்டார் அவரைப் பார்த்துவிட்டுச் சம்மதிக்க மாட்டார்கள். அதற்காகத்தான் பின்னிற்கிறேன் என்றாள். அதற்கு மாலதி அவர் பெண் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நான் சொன்னாற் சரி என்றாள். எத்தனையோ ஆண்கள் வந்து என்னைப் பார்த்து… கோவில் மாட்டைப் பார்ப்பது போல் பார்த்து…. சீதனம் பேசிப்பேசி இதுவரை சென்றுவிட்டனர். என்னையே பார்க்காமல் ஒரு உயிர் என்னைக் கல்யாணம் செய்ய உடன் படுமானால் அந்த உயிருக்கு என்னுயிரை அர்ப்பணிப்பேன். இரண்டு தைரியமான கால்களில் நின்று கொண்டு மனம் ஊனமுற்ற ஆடவரை மணப்பதிலும் பார்க்க சாதாரண கால் ஊனமுற்றவரை மணப்பது ஆயிரம் மடங்கு சிறப்பானது. இன்று நாட்டில் எத்தனையோ தியாக உள்ளங்கள் போரினால் உறுப்புகள் ஊனமுற்று வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை எண்ணிப் பார்க்கவேண்டாமா? எத்தனையோ பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறர்கள். இவர்கள் இனி வாழக்கூடாதா? மாலதி எமக்குப் பிறக்கும் குழந்தையும் ஒற்றைக் காலுடன்தான் பிறக்குமா? இல்லையே. அவருக்கு அது இடையில் ஏற்பட்ட கண்ணுக்குத் தெரியக்கூடிய ஊனம் . எனக்கோ…என் உடம்பிற்கு கண்ணுக்கு தெரியாத குறை என்று சமுதாயம் சூட்டிய ஊனம். அப்படித்தானே என்றாள் ரேணு. ரேணுகா தன் வாழ்க்கையை ஒரு தியாகச்செம்மலுக்கு அர்ப்பணித்து அவனுக்கு ஊன்றுகோலாகப்போய் நிற்கப்போகிறான் இனி இந்த முடச்சமூகம் என்ன சொல்லி அவளை வாய்க்குள் அசைபோடப் போகிறது?

– தூண்டில் 1988.07 (07)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *