(1962 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இராதையின் அருகில் அவள் தோழி சசி!
நீண்ட நேரமாக ஏதோ ஒன்றை அறிவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாள் சசி! அந்த முயற்சியில் ஒன்றன் பின் ஒன்றாகப் பல கேள்விகள் பிறந்தன அவளிடமிருந்து.
“இராதை”
“உம்!”
“ஏன் ஒரு விதமாக இருக்கிறாய்?”
“ஒன்று மில்லே! எப்பொழுதும் போல் தான் இருக்கிறேன்”
“இத்தனை நாளும் இப்படித்தான் இருந்தாயா?”
“வேறு எப்படி? இருந்தேனாம்!”
“அதோ நீரில் தெரியும் உன் முகத்தைப் பார்; அது உனக்குப் பதில் சொல்லும்..’
இராதை நீரைப் பார்த்தபடி பேசாமல் இருந்தாள். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு சசி பேசினாள்.
“இராதை!”
“உ…ம்…!”
“உண்மையைச் சொல்லமாட்டாயா? என்னடி உனக்கு நேர்ந்தது?”
இராதை ஒன்றுமே பேசவில்லை; வெறும் பார்வை ஒன்றைத் தோழி மீது படர விட்டாள்.
சசி திரும்பவும் தொடர்ந்தாள்.
“ஒன்றுமில்லை என்று சொல்கிறாயே இராதை! உன் கண்களேன் இப்படிப் பால்போல் வெளுத்துக் கிடக் கின்றன…?” மினு மினுக்கும் மேனியேன் புழுதி படிந்து கிடக்கின்றது? மூக்கின் நுனியிலே முத்துமுத்தாகக் வேர்த்து நிற்குமே வியர்வைத் துளிகள்! அவைகள் மறைந்து போன மாயமென்ன? இத்தனையும் உன்னில் வைத்துக் கொண்டு ஒன்றுமில்லையென்கிறாயேடி! இதை நான் நம்ப வேண்டுமா?”
சசியின் குரலில் கருணையும் கவலையும் கைகோர்த்து நின்றன.
இராதை. தலையைத் தூக்கித் தன் தோழியைப் பார்த் தாள். அவள் கண்களில் கண்ணீர் கரை கட்டி இருந்தது. கரகரத்த குரலில் மெல்லப் பேசினாள் இராதை.
“சசி! என்ன வென்று சொல்லேண்டி! ஒன்றுமே புரிய வில்லையே? உணவிலும் இன்பமில்லை. உரக்கத்திலும் அமைதியில்லை. உள்ளத்தை மத்துப் போட்டு கடைவது போன்ற ஒரு பாவனை! அந்தப் பாவனையிலே நான் பல மிழந்து போனது போன்ற ஒரு வேதனை. உடல் தளர்ந்து, உற்சாகமிழந்து உலகமே ஒரு இருட்டுக் குகை போன்று தென்படுகிறது! என்னடி செய்வேன் நான்?”
“இப்படியெல்லாம் உன்னைத் துன்புறுத்தி, உன் அழகை மங்க வைத்துக் கொண்டிருக்கிறதே ஒன்று! அது என்னவென்றுதான் உன்னைக் கேட்கிறேன்?”
இராதை தன் நெஞ்சில் உள்ள பாரத்தைக் குறைத்துக் கொள்வது போன்று ஒரு பெருமுச்சு விட்டாள். நெஞ்சு உயர்ந்து தணிந்தது.
“எப்படிச் சொல்வேன், என்ன வென்று சொல்வேனடி. நெஞ்சில் இருப்பது புரிகிறது, புரியாமலும் இருக்கிறது! எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிட நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகளை மறந்து விடுகிறேன், எல்லாம் தெரிந்தது போல் இருக்கிறது. தெரியாதது போலும் இருக்கிறது. என்னடி செய்வேன் நான்?”
இதைச் சொல்லி விட்டு இராதை சோர்ந்து போய் சசியின் தோள் மேல் சாய்ந்தாள். இராதையின் இந்த நிலையைக் கண்டு வெகுவாக கலங்கினாள் சசி! இவளுக்கு நோயா! அல்லது மனக்கவலையா? ஏன் ஏற்பட்டது; எதனால் ஏற்பட்டது? ஒன்றுமே புரியவில்லை அந்த அன்புள்ள தோழிக்கு.
“இராதை! ஒன்று செய்கிறாயா? என்னோடு வருகிறாயா?”
“எங்கேயடி என்னைக் கூப்பிடுகிறாய்?”
“எங்கே போனாலென்ன! பயமா இருக்கிறதா?”
“பயமில்லை சசி. ஏதோ இனம் தெரியாத ஒரு ஏக்கம்!”
“அந்த ஏக்கம் தான் என்னவென்று கேட்கிறேன் நீ சொல்ல மறுக்கிறாய், ஏதோ கனவுலகத்தில் பேசுவது போன்று பேசுகிறாய்! உனக்கும் புரியவில்லை எனக்கும் புரியவில்லை!! வேண்டாம் நீ சொல்ல வேண்டாம் எழுந்து வந்தால் போதும் வா!”
சசி இராதையின் கையைப் பிடித்து இழுத்தாள். இராதையும் அவளைப் பின் தொடர்ந்தாள். இருவரும் ஆடல் கூடத்தை நோக்கிச் சென்றனர். ஆடல் கூடத்தை நெருங்கியது. இராதை சற்றுத் தயங்கி நின்றாள்.
“என்ன இராதை!”
“ஆடல் கூடத்துக்கு அழைத்து வந்தால் என் மனக் கவலை மாறிவிடும் என்று நினைக்கிறாயா?”
“நீ கவலையில் சோம்பிக் கிடக்கிறாய். உன்னோடு சேர்ந்து நானும் உற்சாகமற்றுப் போகிறேன், இருவருக்கும் தெம்பூட்டத்தான் இப்படி உன்னை அழைத்து வந்தேன்.”
“சசி”
“ஒன்று செய்கிறாயா?”
“ஒன்பது செய்கிறேன்; என்னவென்று சொல்லேன் இராதை”
“நான் இப்படியே இந்த மேடையில் உட்கார்ந்து உங்கள் ஆட்டத்தைப் பார்க்கிறேன் நீ போய் ஆடுகிறாயா?”
“உன்னால் ஆட்டத்தில் கலந்து கொள்ள முடியாதா ராதை?”
“முடிந்தால் இப்படிச் சொல்லுவேனா சசி?”
“என்னமோடி? உன் மனக்கவலை நீங்கி நீ பழைய நிலைக்கு வந்தால் போதும், இந்த மாலைக் காடசயும் மங்கையர் ஆட்டமும் கடன் உள்ளத்தறகு இதம் அளிக்கிறதா பார்ப்போம்”.
இதைச் சொல்லிவிட்டு சசி ஆடல் கூடததை நோக்கி நடந்தாள். தனிமையில் விடப்பட்ட இராதை ஆட்டத்தைப் பார்க்கவில்லை; ஆகாயததைப் பார்த்துக் கொணடிருந்தாள். இரண்டொரு வெள்ளைத் துண்டுகள் கிழக்குத் திசையில் இருந்து மேற்குத் திசையை நோக்கி நகர்ந்தன. அவள் உள்ளமும் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்தது. குழப்பமடைந்து கொண்டிருந்த அந்த நெஞ்சிலே மெல்ல மெல்ல ஏதோ ஒன்று புரியத் தொடங்கியது.
நேற்று மாலை காற்றிலே மிதந்து வந்து அவள் காதுக்குள் புகுந்து இன்ப லாகிரியை ஊட்டியதே ஒரு ஓசை! ஆமாம் குழல் ஓசை ஒரு வினாடி நேரந்தான் அதன் பிறகு அது மறைந்து விட்டது. அவ்வளவுதான் அந்த நொடியிலேயே அவள் உடல் தளர்ந்து உள்ளம் நலிந்து இன்னொரு முறை அந்த ஓசையைக் கேட்கமாட்டோமா? என்று ஒரு ஏக்கம் அவள் உள்ளத்தைக் கௌவிக் கொண்டது. அது எப்படி? எங்கிருந்து வந்தது? புரியவில்லை இராதைக்கு. புரியாத புதிராக இருந்து அழித்து விட முயல்கிறது. அவள் அந்த ஆடல் கூடத்தினருகில் இருந்த மேடையில் அமர்ந்தபடி சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.
இருந்தாற்போலிருந்து அவள் உணர்ச்சியும் உடல் நரம்புகளும் குத்திட்டு நின்றன. காதுகள் இரண்டையும் கூர்மையாக்கிக் கொண்டு கவனித்தாள். இராதை! நேற்று மாலை கேட்ட அதே குழலோசை அவள் காதுக்குள் வந்து புகுந்தது! கண்கள் மலர நான்கு பக்கமும் பார்வையைச் சுழற்றினாள் இராதை! எங்கிருந்து வருகிறது ஓசை?
மேகத்தின் அசைவிலே. மென்காற்றின் நெளிவிலே, செடிகளின் கிளுகிளுப்பிலே அந்த ஓசை கேட்டது! தோழி களின் ஆட்டத்திலே அவர்கள் சிரிப்பொலியிலே அந்தக் குழலோசை கேட்டது இராதைக்கு! அவள் இரத்த ஓட்டத் திலே அந்த ஓசை கேட்டது! உள்ளத் துடிப்பிலே, உணர்ச்சிக் கொந்தளிப்பிலே அந்த ஓசை கேட்டது! உலகமே ஓசை யாக, ஓசையே உலமாகத் தோன்றியது அவளுக்கு.
சோகமும் சோர்வும் நீங்கியவளாக எழுந்து நின்றாள். இராதை; பெருவெள்ளம் தனக்குள் அகப்பட்டதையெல் லாம் இழுத்துச் செல்வது போல அந்தக் கான வெள்ளம் இராதையை இழுத்தது. அந்த இழுப்புக்குத் தன்னை அர்ப்பணித்து விட்டு மெல்ல நகர்ந்து கொடுத்தாள் இராதை! இராதை போய்க்கொண்டிருந்தாள். கிராமத் தின் எல்லையில் இருந்த கடைசி வீட்டையும் தாண்டிப் போய்க் கொண்டிருந்தாள். பார்த்த இடமெல்லாம் பச்சை நிறமாகத் தோன்றிய புல் தரையில் கால்களைப் பதியவைத்து நடந்து போய்க் கொண்டிருந்தாள்.
மேயச் சென்ற மாடுகள் தங்கள் மேய்ச்சலையும் கன்று களையும் விட்டுவிட்டு அந்தக் குழலோசையைக் கேட்டு நகர்ந்தன. இராதையும் நடந்தாள். அவள் உள்ளத்தில் மூச்சைத் தவிர வேரொன்றுமிருக்கவில்லை! கண்களிலே ஒளியிருந்தது. ஆனால்! உலகம் அவள் வரையில் மறைந்து விட்டது! காற்றைப்போல் அந்தக் கானமும் நிறைந் திருந்தது.
“இராதை!”
“என்னடி சசி?”
“எல்லாம் நிறைந்து விட்டதா?”
“குறை எப்போதடி இருந்தது எனக்கு?”
“உண்மை, உன்னையே நீ மறந்திருந்தபொழுது, வேறு எதைப் பற்றி ஞாபகம் இருக்கப் போகிறது?”
“அப்படி நான் என்னடி செய்தேன்?”
“நீயல்ல, உனக்குள் நீயாகவும், நீயல்லாமலும் இருந்ததே ஒன்று அது!”
தோழிகள் இருவரும் கலகலவென்று சிரித்தனர்.
“சசி! எண்ணியது கிட்டும் பொழுது இன்பத்தின் எல்லையே கிடைத்து விடுகிறதடி.!”
“ஆமாம் அந்த இன்பத்தின் எல்லையை நானும் கேட் டேன், இத்தனை நாள் எங்கேயடி இருந்தான்?”
“எனக்குள் தான் ரூபமாகவும் அரூபமாகவும் இருந் தான்! தெரிந்தவனாகவும் தெரியாதவனாகவும் இருந் தானடி! ஓசையாக ஓசையின் நாதமாக, அந்த நாதத்தின் ஓங்காரமாக இருந்து எனனை வாட்டி வதைத்து விட்டா னடி! அந்தக் குழலோசையின் லயிப்பிலே என்னை மட்டு மலல. எல்லாவற்றையும் புரிந்து கொண்டேனடி நான்.”
பித்துப் பிடித்தவள் போல் பேசிய இராதையின் பேச்சைக் கேட்டு”களுக்’ ‘ கென்று சிரித்தாள் சசி. இந்தச் சிரிப்பில் இராதை கலந்து கொள்ளவில்லை. அவள் தான் ஓசையில் லயித்திருந்தாளே?”
காலம் மெல்ல நகர்கிறது.
அந்தக் கிராமம் காடு, மேடு, களம் எல்லாமே அந்தக் கான வெள்ளத்தில் மயங்கிக் கிடக்கின்றன ராதை உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் அந்த ஊது குழலின் ஓசையையே உயிர் நாடியாகக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள் திடீரென்று அந்தப் பிரதேசமே செலயற்றுப் போயிற்று? கம்பியறுந்த வீணையின் நாதம் கடைப்படுவது போல் அந்த ஊது குழலின் ஓசை தடைப்பட்டது! கிராம மக்கள் தடுமாறினர். மேய்ச்சலை நிறுத்தி விட்டு ஆவினங் கள் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்றன. கோழிகள் குப்பையைக் கிளறவில்லை. பெண்கள் மத்துக் கயிரோடும் பால் செம்போடும் தெருவை நோக்கி வந்தனர். செய்த வேலைகளையெல்லாம் விட்டு விட்டு, ஆண் பெண் குஞ்சு குழந்தை என்று பேதமில்லாமல் எல்லாரும் தெருவில் நின்று வெகு தூரத்துக்கப்பால் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு நின்ற னர்.
இராதை சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் உடல் வியர்வையால் நனைந்தது. உள்ளம் துடித்தது. உயிர் பதறியது. மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க வெட்ட வெளி யைப் பார்த்துக் கொண்டு நின்றாள். இனம் தெரியாத ஏக்கம் இழப்பு அவள் உள்ளத்தில் பட்டு வெடித்தது. அந்த வெடிப்பிலே தன்னைத்தான் அழித்துப் புதைத்து விட்டது போன்று குமைந்து நின்றாள் அவள்.
“எங்கே ராதை?
சசி விசயம் புரிந்தவளாக இராதையின் வீட்டை நோக்கி ஓடினாள்.
“எங்கே இராதை? இராதை எங்கே?” வீட்டுக்குள் இருந்து கூக்குரல் கிளம்பியது! இராதையைத் தேடி வாச லுக்கு ஓடி வந்தாள் சசி!
அதோ இராதை ஓடுகிறாள்! வெறிபிடித்தோடுகிறாள். வீதியை விட்டுத் தெருவைக் கடந்து ஓடுகிறாள், முந்தானை காற்றில் பறக்க முடியவிழ்ந்து முகத்தை மறைக்க இராதை ஓடுகிறாள்! காற்றுக்கில்லாத வேகம் அவள் கால்களுக்கு எப்படி வந்தது? உடலையும் உலகத்தையும் மறந்து ஓடு கிறாள் இராதை! அவள் ஓட்டத்தைக் கண்டு தோழி சசீ அவளைப் பின் தொடர்கிறாள்.
“இராதை!”
“உ…ம்…”
“என்னடியம்மா அப்படி ஓடி வந்தாய்”
“ஓடி வந்தேனா?”
“இல்லை இல்லை! காற்றாய்ப் பறந்து வந்தாய்?”
இராதை தலையை சரித்துச் சசியைப் பார்த்தாள்.
“ஏன் அப்படிப் பார்க்கிறாய் இராதை? எதற்காக ஓடினாய்?”
“இதென்ன கேள்வி இது? இந்தக் கிராமமே செயலற்றுப் போன போது அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கச் சொல்கிறாயா? ஏன் ஓடினேன்? எதற்காக ஓடினேன்? எனக்கே புரியவில்லை சசீ! ஆயிரம் குதிரைகள் பூட்டி இழுத்த ஒரு வேகம்!”
“கண்டாயா அவனை?”
“உம்….”
“அதோ இரதம் ஒன்று போகிறதே! அதில் அவன் தான் போகிறானா?”
“உ…ம்…! “
“எங்கே போகிறான்?”
“கேட்காத கேள்விக்குக் கிடைக்காத பதில் தானடி அது!”
“இது என்ன இந்த முந்தானைக்குள்?”
“ஊது குழல்!”
“அவன் ஞாபகமாக இதை வைத்துக் கொள்ளச் சொல்லித் தந்தானா?”
“இது என்னடி! இப்படிச் சொல்கிறாய்? இதில் தானே என் உயிர் உறைந்து கிடந்தது!”
“காதலன் தந்த காணிக்கை! என்று சொல்ல வெட்கமாக இருக்கிறதா?”
“சசீ…!” இராதை ஆச்சரியத்தோடு அலறினாள். அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தடுமாறினாள்.
“கண்ணன் என் காதலனா?”
“ஊரும் மக்களும் அப்படித்தான் சொல்கிறார்கள்.”
“ஊரும் உலகமும் எப்பொழுதும் உண்மையைத்தான் பேசுகிறதா?”
“எனக்கென்னடியம்மா தெரியும்? காதில் பட்டதைச் சொன்னேன்”
“கண்ணன் என் காதலன்!” இராதை ஒரு புன் சிரிப்பை உதிர்த்தாள். பிறகு நெஞ்சு அதிரும்படி பேசினாள்.
“இராதை கண்ணனின் காதலி?”
“காலங்களை வென்று காலத்தையும் வென்றபின் காதலியாடி நான்? நாம் எல்லாவற்றையும் மறந்து துறந்து அவனைக் கண்டோமா? அவன் நம்மைக் கண்டானா? ஊது குழலின் ஓசையிலே நாம் மயங்கினோமா? அவன் மயங்கினானா?”
“காலிங்கனுக்கு எடுத்துச் சென்ற பால் குடங்களை கிராமத்துக் குழந்தைகளுக்கு, எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்ன பொழுது, மக்கள் அரசன் கட்டளைக்கு அடி பணிந்தார்களா அல்ல. அவனுக்கா? காலிங்கன் கக்கிய கொடிய நச்சுக் காற்றிலே சிக்கிச் சிதைந்தது உலகமா? அல்லது ஹம்சன என்ற கொடுமையா? இத்தனைக்கும் பிறகு உலகம் அவனாகவும் அவனே உலகமாகவும் வியா பித்து நின்ற பொழுது தலை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் யாருக்கு வந்தது? யாருக்கு வந்தது?” யாருக்கடி வந்தது?”
“இராதை1…!
சசியின் இந்த அலறலிலே ராதையின் ஆவேசம் சற்றுத் தணிந்தது என்றாலும் அவள் மேலும் பேசினாள்.
“சசி எனது இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பொழுது உலகத்துக்கும் உண்மை கிடைத்து விடும்”.
சசி அன்போடு இராதையின் தலையை வருடி விட்டபடி கேட்டாள். “ஒன்றுமில்லாத ஓட்டைக் குழலுக்காகவா? உன்னையே மறந்து ஓடினாய்!”
தோழியைப் பரிதாபத்தோடு பார்த்து முறுவலித்தாள் இராதை.
“சசி ஒன்றுமில்லாத ஒன்றிலே பிறந்தது தானேடி. கடவுள் என்ற தத்துவம், வெறும் ஓட்டைக் குழலின் ஒசையிலே இந்த உலகம் மயங்கவில்லையா? உலகத்தோடு சேர்ந்து நம் உயிரும் உறங்கவில்லையா? உலகமெனும் ஊசலிலே உயிர் கொண்ட மனிதர்களை உறங்க வைத்து உய்விக்க இந்த ஊதுகுழல் அவசியந்தான்! அதனால் தான் ஓடினேன். மீட்டு வந்தேன்! இதைவிட வேரொன்றும் அறியேனடி நான்! வா போகலாம்.”
இராதை யமுனைப் படுகையிலே அடியெடுத்து வைத்து நடந்தாள். புரிந்தும் புரியாதவளாக அவளைப் பின் தொடர்ந்தாள் தோழி சசி!.
– 1962, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்