கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 3,229 
 

அதன் வருகையை சற்றும் எதிர்பார்த்திராத ஒரு வெள்ளிக்கிழமை அந்தியில் தான் அது எங்கள் வீட்டிற்கு வந்தது.

‘தில்லை காளியம்மன் துணை’ என்று முன்பக்க கண்ணாடியில் எழுதப்பட்ட ஒரு குட்டி யானையில் தான் அது கொண்டு வர பட்டது. அப்பாவும் அவருடன் மூன்று கனவான்களும் அதை குட்டி யானையில் இருந்து இறக்கி கொண்டிருந்தார்கள். அதை லாவகமாக தூக்கி வந்து பழைய மர பீரோ அருகில் வைத்தார்கள். அப்படி தான் எங்கள் வீட்டிற்கு அந்த தையல் மிஷின் வந்தது.

எனக்கு யூனிஃபார்ம் தைத்து கொடுத்த அந்த சிடுமூஞ்சி விமல் கடையில் நான் இரண்டு மூன்று தடவை பார்த்திருக்கிறேன். கிட்டதட்ட என் வகுப்பு பையன்கள் எல்லோருமே வமலிடம் தான் யூனிஃபார்ம் வைக்கிறார்கள். அதில் யாருக்குமே

அவரை பிடிக்காது.

அவ்வளவு ஏன், இப்போதும் வகுப்புக்கு இரட்டை சிண்டு போட்டு வரும் பார்கவிக்கு கூட அவரை பிடிக்காது. போன புதன் சாப்பாட்டு பிரேக்கில் இரண்டு சிண்டுகளையும் ஆட்டிய படியே அவள் இதை என்னிடம் சொன்னாள். இதுபோக இன்னொரு முக்கியமான விஷயமொன்றும் சொன்னாள். அவர் அப்படி இருக்க காரணமே அந்த தையல் மிஷின் தானாம், அதில் இருக்கும் ஏதோ ஒரு சாத்தான் தான் அவரை இப்படி சிடுமூஞ்சியாக மாற்றி விட்டதாம். அது வாங்குவதற்கு முன்னாள் அவர் நல்லவராகவும், எங்கள் வயது குழந்தைகளிடம் அன்பாக பேசும் ஆளாக தான் இருந்தார் என்றும் சொன்னாள். இது பொய்யாக இருக்காது.

பார்கவி சொன்னால் அது நிச்சயம் உண்மையாக தான் இருக்கும்.

அவள் சொன்னதை நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அம்மா ஏதோ கை குழந்தையை பார்ப்பது போல அந்த மிஷினை தொட்டும் தடவியும் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் கலந்து கொள்ளாத அம்மாவின் கல்யாண புகைப்படத்தில் தான் அம்மாவை இத்தனை மகிழ்ச்சியாக பார்த்தது. நேரில் இப்பொழுதுதான் பார்க்கிறேன். இதை வைத்து அம்மாவுக்காக தான் அந்த மிஷின் வாங்கப்பட்டது என்று தெரிந்து கொண்டேன். அது ஒரு சாத்தான்

என்று தெரியாமல் அம்மா அதற்கு ஒரு முத்தமிட்டாள். பார்கவிக்கு தெரிந்தது கூடவா அம்மாவுக்கு தெரியவில்லை?

இல்லை அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம். அது ஒரு சாத்தான் என்று தெரிந்தால் கூட அம்மா அதற்கு முத்தம் கொடுப்பாள்.

நான் தான் தையல் மிஷினிடமிருந்து அம்மாவைக் காப்பாற்ற வேண்டும்.

ஆனால் எனக்கு அதன் மேல் துளியும் பயம் இல்லை. இதை பார்கவியிடம் சொல்லிவிட்டால் போதும், அவளுக்கு நிச்சயம் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்கும்.ஆமாம். பார்கவிக்கு தெரியாதது எதுவுமே இல்லை.

வந்த நாள் இரவே அந்த தையல் மெஷின் அதன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. அதன் வருகையால் நான் தினமும் படுத்து உறங்கும் இடம் மாற்றப்பட்டது. ஓட்டு வரிசைகளின் மையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிக்கு நேர் கீழே படுத்து உறங்கி தான் எனக்கு பழக்கம். அந்த சதுர வடிவ கண்ணாடி எங்கோ தூரத்தில் உள்ள நிலாவையும் நட்சத்திரங்களையும் காட்டி என்னை தினமும் தூங்க வைக்கும். இனிமேல் தினமும் அங்கு தான் தூங்கியாக வேண்டும் என்று அப்பா உத்தரவு போட்டார். அந்த சபிக்கப்பட்ட இரவில், இனி இந்த தையல் மிஷினால் என்னென்னவெல்லாம் பார்க்க வேண்டி வருமோ என்று யோசித்தபடியே தூங்கிப் போனேன்.

மறுநாள் சாப்பாட்டு பிரேக்கில், முதல் நாள் நடந்ததை எல்லாம் பார்க்கவியிடம் சொல்லி தேம்பித் தேம்பி அழுதேன். அழுகையின் ஊடே திக்கி திக்கி கேட்டேன்

“அது என்…என் அம்மாவையும்… சிடுமூஞ்சியாக்கிடுமா?”

பார்கவி அவளுடைய குட்டி ஆரஞ்சு பூ போட்ட கர்ச்சீப்பால் என் கண்களை துடைத்து விட்டாள். வகுப்பு பையன்கள் அந்த கர்ச்சீப்பை தொட்டாலே “எருமமாட்டு பயலே” என்று கூப்பாடு போடும் அவள் அதை வைத்து என் கண்களை துடைத்தது பெருமகிழ்ச்சியாக இருந்தது எனக்கு. ஆனால் அதை நான் காட்டிக் கொள்ளும் சூழலில் இல்லை.

கர்ச்சீப்பை நான்காய் மடித்து ஜோப்புக்குள் வைத்தபடி சொன்னாள்

“இதற்கெல்லாம் போய் அழுவாங்களா”

நான் எதுவும் பேசவில்லை.

அவளும் மௌனமாகி விட்டாள். நாங்கள் அமர்ந்திருந்த சிமெண்ட் பெஞ்சின் எதிரில் மண்டி கிடந்த ஆவாரம் பூக்களை வெறிக்க பார்த்தபடியே சிந்தனையில் ஆழ்ந்தாள்.

சில நிமிடங்களில் எதையோ கண்டு கொண்டவளாய் என் பக்கம் திரும்பி விரிந்த கண்களுடன் நிதானமாக சொன்னாள்

“அதில் இருக்கிற ஊசியை உடைச்சுடு, அதை உடைச்சுட்டா அதுக்கு பெறவு தைக்க முடியாது”

அவ்வளவுதான். பார்கவியே சொல்லி விட்டாள். மறுபேச்சே கிடையாது. நானும் வேலையை தொடங்கி விட்டேன். இதற்காக பார்கவி தலைமையில் ஒரு மாபெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டது.

அந்த திட்டம் இதுதான். வரும் செவ்வாய் மதியம் அம்மா பாட்டி வீட்டிற்கு செல்கிறாள். மறுநாள் காலையில் திரும்பி விடுவதாக சொன்னாள். செவ்வாய் இரவில் ஊசியை உடைப்பது என்று முடிவாயிற்று. அப்பொழுது அப்பா மட்டும்தான் வீட்டில் இருப்பார்.

அப்பாவின் உறக்கத்தை பூகம்பம் வந்தாலும் கெடுக்க முடியாது. அடித்துப் போட்டது போல் தூங்குவார். அப்பா உறங்கும் போது காரியத்தை வெகு எளிதாக நிறைவேற்றிவ விடலாம்.

ஒரு சரளை கல்லை, ஈரத்துணியால் சுற்றி இரண்டு அடி அடித்தால் உடைந்து விடும் என்று பார்கவி சொன்னாள்.

பார்கவி சொன்னால் அது நிச்சயம் உண்மையாக தான் இருக்கும்.

இதற்காக மாப்படுகை ரயில் கேட்டு அருகில் இருந்த ஒரு சரளை கல் தேர்ந்தெடுக்கப்பட்டு, சதித்திட்டமும் பிழையின்றி நிறைவேற்றப்பட்டது.

குட்டி கார் பொம்மை வாங்கிக் கொடுத்தாலே அதை பொக்கிஷமாக பாதுகாக்கும் என்னால் எப்படி ஊசியை உடைக்க முடியும்? ஆக பழி என் மேல் விழாது. வேண்டா வெறுப்பாக வாங்கித் தந்தாலும், வாங்கி தந்த அப்பாவே உடைப்பாரா? அப்பா மேலும் பழி விழாது. கெட்டிக்காரி பார்கவி.

காரியத்தின் வெற்றியை மறுநாள் பார்கவியிடம் சொன்னேன். வழக்கம்போல் அவள் தலையுடன் சேர்ந்து இரண்டு சிண்டுகளும் ஆட என்னை பார்த்து சிரித்தாள்.

எதையோ பெரிதாக சாதித்த வெற்றி களிப்பில் வீடு திரும்பினேன். வீட்டுக்குள் நுழையும் முன்னே அப்பாவின் குரல் பலமாக கேட்டது

“….ஒழுங்கா தைக்க தெரிந்திருந்தா மட்டும் மிஷின வாங்கி தொலச்சிருக்கனும்”

கையில் இருந்த டம்ளரை தூக்கி எறிந்தவர், வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டு எங்கோ போய்விட்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது, அம்மா சுவரில் சாய்ந்து தலை குனிந்த படி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். புரிந்துவிட்டது.

அம்மாமேல் பழி விழுவதைப் பற்றி நான் சிறிதும் யோசிக்கவில்லை. அம்மா மீது பழி சுமத்த அப்பாவும் யோசிக்கவில்லை. பழி ஏற்க படைக்கப்பட்ட ஜீவன்கள் தான் அம்மாக்கள் என்று தோன்றியது.

அம்மாவை என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் நான் மௌனமாக அமர்ந்திருந்தேன். கோபத்துடன் வெளியில் சென்ற அப்பா அந்தக் கோபம் சற்றும் குறையாமல் வீடு திரும்பினார். அப்போதும் அம்மா அதே இடத்தில் உட்கார்ந்து கண்களை கசக்கி கொண்டிருந்தாள். சோகத்தில் சமைக்க மறந்து இருந்த அம்மாவுக்கு மேலும் திட்டு விழுந்தது. முந்தானையில் முகம் துடைத்தபடியே அம்மா அடுப்படிக்குள் போனாள்.

அம்மா அழுதபடியே சமைத்ததால் அன்றிரவு சாப்பாட்டில் வழக்கத்தை விடவும் கொஞ்சம் அதிகமாக உப்பேறியிருந்தது. கண்ணீரின் உப்பு தனிச்சுவையானது. கடைசி வரை உண்மையை ஒப்புக் கொள்ளாத என் கல் மனதுக்கு சொரணை கூட்ட அந்த உப்பு தேவையானது தான்.

படுத்தால் துளியும் தூக்கமில்லை. அம்மா கண்ணீரின் உப்பு என் தொண்டையிலேயே தங்கி, தேங்கி ஒரு பெரும் முள்ளாக மாறி ஓயாமல் குத்திக் கொண்டிருந்தது.

மறுநாள் சிமெண்ட் பெஞ்சில் வைத்து பார்கவியிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். அவள் முகம் வெளிறிவிட்டது. தன்னால்தான் இவை அனைத்தும் நிகழ்ந்துவிட்டது என்று குற்ற உணர்ச்சியால் பாவம் வாடிப் போய்விட்டாள். விரிந்த கண்களிலிருந்து பொங்கிய கண்ணீர், சொட்டு சொட்டாக கன்னங்களை தாண்டி வழிய தொடங்கியது. அதைத் துளியும் தாங்க முடியவில்லை என்னால். நேற்று அம்மா இன்று இவள்.

பெண்களின் கண்ணீர் கணம் மிக்கதாக இருந்தது.

அவள் அழுகையை நிறுத்துவது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியமில்லை. எந்த பொருள் எடுத்து வந்தாலும் அதில் சூடத்தின் நெடியடிக்கும் சேது, நேற்று லீலாவதி டீச்சரிடம் அடி வாங்கிய நிகழ்வைப் பற்றி பேச்சை திருப்பினேன். அவள் லேசாக புன்முறுவல் செய்தால். நான் பேசிக் கொண்டே போனேன். புன்முறுவல் ஒரு முழு சிரிப்பானது. இன்னும் பேசினேன். இதழ்கள் நன்கு விரிந்து, கன்னம் மொத்தமும் ஓரிடமாய் கண்களின் கீழ் குவிந்து அது ஒரு பெருஞ்சிரிப்பானது. கீழ் கன்னத்தில் விழுந்த குழியில் சற்று முன் வழிந்த கண்ணீர் துளி ஒன்று வந்து அமர்ந்து கொண்டது. இப்படி அழுகையும் சிரிப்புமாக அவள் அன்று ஒரு முழு வானவில்லாக மாறி இருந்தாள்.

மாலை அப்பாவின் பால்ய கால நண்பர் ஒருவர் தையல் மிஷினை ‘ரிப்பேர்’ செய்ய அழைத்து வர பட்டார். அந்த நெட்டையான ஆள் தன்னைவிட பன்மடங்கு கனமான ஒரு கட்டை பையுடன் வந்திருந்தார். அது முழுதும் எக்கச்சக்க பழுது பார்க்கும் சாமான்கள் நிறைந்திருந்தது. வெற்றிலை அரைத்த வாயுடன் என் பக்கம் திரும்பி கேட்டார்

“என்ன படிக்குற?”

“ரெண்டாப்பு”

“நானும் உங்கப்பனும் கிளாஸ் மேட்ஸ்”

“ம்ம்”

அவர் மேலே பேசுவதற்கு முன் நான் அடுப்படிக்குள் ஓடி விட்டேன்.

அவர் அப்பாவுடன் பேசத் தொடங்கி விட்டார். அப்பாவும் அவரும் பால்யத்தில்

விளையாடிய புனுகு ஈஸ்வரர் கோவில், விபத்தில் உயிரிழந்த நண்பன், கிரிக்கெட், சினிமா, அரசியல் என ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அவரே பேசினார். அப்பா தலையாட்ட மட்டுமே செய்தார். வேலை முடிக்கும் வரை முழுதாய் ஒரு நிமிடம் கூட அவர் அமைதியாக இருக்கவில்லை. அவ்வளவு பேசக்கூடிய ஆளை அதுவரை நான் பார்த்ததே கிடையாது. ஆனால் ஆள் பேச்சைப் போல வேலையிலும் கெட்டி.புது ஊசி பொருத்தப்பட்டு மீண்டும் தையல் மிஷின் தைப்பதற்கு தயாரானது. எனக்குள் மீண்டும் அந்த சாத்தான் மேல் பயம் கிளம்பிட்டேன்.

இது நடந்து இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் பெரிய வெடிகுண்டை போட்டது அந்த சாத்தான் தையல் மிஷின். அன்று வீட்டு ஓனர் வருவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. வீட்டுக்குள் முதல் அடி எடுத்து வைக்கும் போதே அவர் கண்ணில் தையல் மெஷின் பட்டு விட்டது. வாடகை

பாக்கி கேட்க வந்தவர் அடிக்கடி அதை திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதே நாங்கள் நடக்கப் போவதை கணித்து விட்டோம்.

அவர் வீடு பக்கத்து தெருவில் இருந்தது. மறுநாள் அவர் வரவில்லை. அவர் அனுப்பியதாக சொல்லி ஒரு ஆள் சைக்கிளில் வந்து துண்டு சீட்டு ஒன்றை கொடுத்தார்.அதில் ‘இந்த மாதத்திலிருந்து வீட்டு வாடகை எழுநூறு ரூபாயாக ஏற்றப்படுகிறது’

என்று எழுதப்பட்டிருந்தது. எல்லாம் எதிர்பார்த்ததுதான். சென்ற முறை எனக்கு சைக்கிள் வாங்கிய போது வாடகை ஏற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் தையல் மிஷின் மேலும் அம்மா மேலும் அப்பாவுக்கு இன்னும் வெறுப்பு அதிகமானது. ஆனால் அம்மா இம்முறை அழவில்லை. முகத்தில் சோகத்தின் அடையாளம் கூட இல்லை. மிகுந்த தெளிவுடன் இருந்தாள்.

அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நினைத்ததை விட அதிகமானதால் மூன்றாம் வகுப்பு A,B என்று இரண்டு பிரிவுகளானது.

அப்படி பிரிக்கப்பட்டதில் நான் B பிரிவிலும் பார்கவி A பிரிவிலும் மாற்ற பட்டோம்.

கோடை விடுமுறை முடிந்து வகுப்புகள் தொடங்கும் முதல் வாரத்தில் ‘டஸ்டர்’கள் தைப்பது என்பது பள்ளிகளின் பாரம்பரியம். தொன்று தொட்டு நடத்திவரப்படும் இந்த பாரம்பரிய நிகழ்வில், டீச்சர்கள் எந்தெந்த மாணவரின் பெற்றோர் தைப்பார்கள் என்று விசாரித்து, அதில் ஒருவருக்கு ‘டஸ்டர்’ தைத்து வரும் பணி ஒப்படைக்கப்படும். அப்படி வீட்டில் சொல்லி டஸ்ட்டர் தைத்து வருபவனுக்கு அந்த வாரம் முழுவதும் ஒரு தனி மரியாதை இருக்கும். டீச்சர்கள் கௌரவத்துடன் அவனை நடத்துவார்கள். அந்த வாரத்தில் அவன் ஹோம் வொர்க் செய்யாமல் வந்தால் கூட அவனுக்கு திட்டோ அடியோ விழாது. ‘டஸ்டர்’ தைத்து வந்ததற்காக டீச்சர்கள் அவனுக்கு எல்லா மாணவர்களையும் கைதட்ட சொல்வார்கள். அந்த வாரம் முழுவதும் அந்த வகுப்புக்கே அவன் ராஜாவாக திரிவான். மறுவாரத்தில் எல்லாம் மறக்கப்பட்டு அவனும் சக மாணவன் ஆகிவிடுவான் என்றாலும் கூட அந்த ஒரு வாரத்தின் மேல் எல்லோருக்கும் ஆசை இருந்தது.

வழக்கமாக இந்த டஸ்டர் தைக்கும் பணி கண்ணாடிக்காரன் கௌதமுக்கு தான் தரப்படும். சென்ற மாதம் அவன் குடும்பத்தோடு விருதுநகருக்கு இடம் மாறிவிட்டதால் போட்டியின்றி பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சாத்தான் தையல் மிஷின் தைப்பதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், ஒரு வாரம் வகுப்புக்கே ராஜா என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது?

விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன். அன்றிரவே ஒரு சிமெண்ட் கலர் டஸ்டர் தைக்கப்பட்டு அது தொலையாமல் இருக்க அம்மாவே அதில் “3-B” என்று எழுதி தந்தாள்.

மறுநாள் வகுப்பு தொடங்கும் முன் கயல்விழி டீச்சரிடம் டஸ்டரை நீட்டினேன். வாங்கிக் கொண்ட டீச்சர் என் கன்னத்தை கிள்ளி ஜோப்புக்குள் இரண்டு மிட்டாய்களை திணித்தார்.

(இதுவரை டஸ்டர் தைத்து வந்த யாருக்கும் மிட்டாய் கிடைத்ததில்லை. அதுவும் ஒன்று இல்லை இரண்டு மிட்டாய்கள்) டீச்சர் சொல்லிக் கொண்டதன் பேரில் எல்லோரும் எனக்கு கைதட்டினார்கள். எத்தனையோ முறை நான் நின்று கொண்டிருந்த அதே இடத்தில் வகுப்பை கவனிக்காமல் பல்பம் தின்றதற்கும், மழையை வேடிக்கை பார்த்ததற்கும், நான் அமைதியாக இருந்த போதும் பழைய பகையில் வகுப்பு லீடர் பூஜா போர்டில் என் பெயர் பக்கத்தில் V.V.V.TALK என்று எழுதியதற்கும் காதுகள் திருக்கப்பட்டு, ஸ்டீல் ஸ்கேல் அடியால் உள்ளங்கை சிவந்து நான் தேம்பித் தேம்பி அழும் காட்சியை பார்த்து இவர்கள் கைதட்டி சிரித்திருக்கிறார்கள்.

அப்படி ஒருமுறை, முதல் வகுப்பின் முதல் நாளில் என் வகுப்பில் படித்த ஹெட் மாஸ்டர் பேரன் அருண் வைத்திருந்த ‘லெட்’ பென்சில் காணாமல் போனதற்கான பழி என் மேல் விழுந்தது. அப்படி ஒன்று இருப்பதே எனக்கு அன்று தான் தெரியும். சொன்னது ஹெட் மாஸ்டர் பேரன் என்பதால் சித்ரா டீச்சர் என்னை பேசக்கூட விடவில்லை. நான் பேச வாய் திறந்த அதே கணத்தில் என் கன்னத்தில் மிக பலமான ஒரு அறை விழுந்தது. என் பெஞ்சில் இருந்து வெளியில் இழுக்கப்பட்டு, இரண்டு காதுகளும் திருகப்படும் போது நான் வலியில் “டீச்சர்…டீச்சர்…” என்று அலறினேன். எல்லோரும் சிரிக்க தொடங்கி விட்டார்கள். அதன் பிறகு முதுகில் ‘பலார் பலார்’ என நான்கைந்து அடிகள் விழுந்தது. அத்தனை பலத்தை என் முதுகு அதுவரை கண்டதே இல்லை. டீச்சர் மர ஸ்கேலை எடுத்தவுடன் நான் வகுப்புக்குள்ளேயே ஓடத் தொடங்கி விட்டேன். சிரிப்பு சத்தம் இன்னும் கூடியது. என்னை துரத்த தொடங்கிய டீச்சரிடம் ஒரு கட்டத்தில் பிடிபட்டேன். மர ஸ்கேலால் அசுர வேகத்தில் என் உள்ளங்கையில் அடி விழுந்தது. அனேகமாக அந்த இடத்தில் தான் என்னுடைய அழுகை சத்தமும் மற்றவர்களுடைய சிரிப்பு சத்தமும் ஒரே நேரத்தில் உச்சத்தை தொட்டது. டீச்சர் சென்ற பிறகும் நான் வெகு நேரம் அழுது கொண்டுதான் இருந்தேன். நான் வாங்கிய அடிகளின் எண்ணிக்கை பதினைந்தா இல்லை பதினாறா என்று வகுப்பு பையன்கள் எல்லோரும் அவர்களுக்குள் பேசி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்று சாப்பாட்டு பிரேக்கில் என் பக்கத்தில் கூட யாரும் வந்து உட்காரவில்லை. அழுகையும் நின்ற பாடில்லை. அப்போது மிகக் குட்டியான ஐந்து விரல்கள் என் கண்களையும் கன்னத்தையும் துடைத்து விட்டது. தெளிவான கண்களால் அந்த விரல்களை கொண்ட முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். அப்படித்தான் நான் முதல் முதலாக பார்கவியை சந்தித்தேன். அவள் எங்கள் பள்ளிக்கு புதிதாக வந்திருப்பதாய் சொன்னாள். அதன் பிறகு எண்ணற்ற முறை அவள் கண்ணீர் தேங்கிய என் கண்களை துடைத்திருக்கிறாள். இப்போது எல்லோரும் எனக்காக கை தட்டும் போது அவள் என் வகுப்பில் இல்லாதது எனக்கு வருத்தமாய் தான் இருந்தது. மதியம் சாப்பாட்டு பிரேக்கில் அவளை சிமெண்ட் பெஞ்சில் சந்தித்தபோது டஸ்டர் தைத்ததையும் கைத்தட்டலையும் பற்றி சொன்னேன். அவளுக்கு எக்கச்சக்க சந்தோஷம். அவள் கொஞ்சம் யோசித்து விட்டு சொன்னாள், “அப்படியென்றால் அந்த தையல் மிஷின் சாத்தானாய் இருக்காது”.

பார்கவி சொன்னால் அது நிச்சயம் உண்மையாக தான் இருக்கும்.

கைத்தட்டல் சத்தம் கேட்ட நொடியிலேயே எனக்கும் தையல் மிஷின் மேலிருந்த பாதி வெறுப்பு குறைந்திருந்தது. பார்கவி சொன்னதும் அது சாத்தான் என்ற எண்ணம் முழுதாக போய்விட்டது.

நான் வீட்டுக்கு சென்ற போது அம்மா ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள். டஸ்டரால் எனக்கு கிடைத்த மரியாதையையும் கைதட்டலையும் பற்றி அம்மாவிடம் சொன்னேன். சிரித்தபடியே என் தலையை அவள் கையால் தாழ்த்தி நெற்றியில் முத்தமிட்டாள். அதன் மேல் இருந்த வெறுப்புணர்வுகள் உதிர்ந்து போன பின் தையல் மிஷினை எனக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டது. ஒரு சாத்தான் கடவுளாக மாற சிறிய அவகாசம் போதும் என்று தோன்றியது.

நாள் போக்கில் தெருக்காரர்கள் நிறைய பேருக்கு அம்மா தைப்பது தெரிந்து அவர்கள் வழக்கமாக தைக்கும் கடைகளை மாற்றி அம்மாவிடம் துணிகள் தைக்க கொடுத்தார்கள். என் வகுப்பு பையன்களுக்கும் தெரிந்ததால் அவர்களின் அம்மாக்களும் எங்கள் வீட்டுக்குத் தான் துணிகள் தைக்க வந்தார்கள். அம்மா பெண்களின் துணிகள் மட்டும்தான் தைப்பாள் என்றாலும் கூட கூட்டத்திற்கு குறைவில்லை. தையல் மிஷின் வந்த மூன்றாவது வாரத்திலேயே அடுக்கடுக்காக துணிகள் வந்து குவிந்தன. ஒரம் அடிக்கப்பட

வேண்டிய புடவைகள், ஜாக்கெட்டுகள், சுடிதார், தாவணி, குட்டி கவுன், பெரிய கவுன் என வீட்டில் எங்கு பார்த்தாலும் பெண்களின் ஆடைகள் தான். வீட்டின் வருமானத்தில் பெருமளவு பங்காற்ற தொடங்கியது தையல் மிஷின். இருந்த போதும் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை. அம்மா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஓயாமல் தைத்த வண்ணம் இருந்தாள். சமைப்பது, குளிப்பது தவிர மற்ற நேரம் எல்லாம் தையல் மிஷினிடம் தான் செலவிட்டாள்.

அம்மாவிடம் இல்லாத நூல்கண்டு கலரே கிடையாது. ஒரு கட்டத்தில் பக்கத்து கடைகளில் இருந்த எல்லா கலர் நூல் கண்டும் அம்மாவிடமும் இருந்தது. நூல்கண்டுகள் வைப்பதற்காகவே இரண்டு பெரிய பெட்டிகள் வைத்திருந்தாள்.

இரண்டு மூன்று மாதங்களிலேயே அம்மா எங்கள் ஊரின் பிரபலமான ‘டெய்லர்’ ஆனாள். சுற்றியுள்ள நான்கு தெருக்களில் அம்மாவிடம் தைத்திராத ஆளே கிடையாது. ஒரு கட்டத்தில் காலையில் சேவல்கள் கூவும் முன்னே தையல் மிஷின் தைக்கும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அந்த சத்தம் இரவு அப்பா வேலை முடித்து வரும் வரை ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்க அப்பாவுக்கு வேலை போய்விட்டது. ஆனால் இது எங்களுக்கு மிகவும் பழகிப்போன ஒரு விஷயம் தான். பண்டிகைகள் நெருங்கி விட்டால் வேலையாட்களுக்கு ‘போனஸ்’ காசு கொடுக்க மனம் வராத முதலாளிகள் அவர்களை வேலையை விட்டு நிறுத்தி விடுவது வழக்கம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கிட்டத்தட்ட எந்த தீபாவளியிலும் அப்பாவுக்கு வேலை இருந்ததில்லை. நரகாசுரன் கொல்லப்படாமலே இருந்திருக்கலாம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

ஆனால் இம்முறை தீபாவளியில் வறுமையால் அதன் தலைவிரி கோல ஆட்டத்தை எங்கள் வீட்டில் அரங்கேற்ற முடியவில்லை. பண்டிகை காலம் என்பதால் தைக்க வரும் துணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அலமாரி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அம்மா தவிர டைலரே ஊரில் வேறு யாரும் இல்லை என்பது போல் மூட்டை மூட்டையாய் துணிகள் வந்து குவிந்தன. எப்போதும் வீட்டை சுற்றி ஆட்கள் நின்ற வண்ணம் இருந்தார்கள். பெண்கள் என்றாலே முகத்தில் வெறுப்புணர்வேரும் அப்பாவுக்கு கால் வைத்த இடத்தில் எல்லாம் பெண்களின் ஆடைகள் என்பது பெரும் அடியாய் போயிற்று. ஆனால் தையல் மிஷினின் வருமானத்தில் தான் வீடு ஓடிக்கொண்டிருந்தது என்பதால் அப்பாவால் எதுவும் செய்ய முடியவில்லை.

வீட்டு செலவுகள் போக மிச்சம் இருந்த பணத்தில் அம்மா எனக்கு என் வாழ்க்கையின் முதல் ராக்கெட்டை வாங்கி தந்தாள். தீபாவளி நாள் முடியும் நேரத்தில் ‘யார் வீட்டு வாசலில் அதிக குப்பைகள் இருக்கிறதா அவர்கள் தான் பெரியாள்’ என்ற போட்டியில் எல்லா வருடமும் கடைசியில் இருக்கும் எனக்கு தெரு சிறுவர்களின் கேலி பழகிப்போன ஒன்று. இம்முறை அவர்கள் வைத்த புஸ்வானத்தின் உயரம் வீட்டு கூரையோடு நின்று விட நான் என் கைகளால் பற்ற வைத்த ராக்கெட் வான் உச்சி அடைந்து, வெடித்து, அதன் ஒளி சிதறல்கள் என் கருவிழிகளில் பிரதிபலித்த அந்த நொடி என் வாழ்க்கையில் மிகவும் உன்னதமானது.

வழக்கமாக தைக்க கொடுக்கும் டெய்லரும் ஊர் மாறி போனதால் வேறு வழியே இல்லாமல் ஹவுஸ் ஓனர் வீட்டுக்காரியும் அம்மாவிடம் தான் தைக்க கொடுத்தாள். அவள் கேட்டுக் கொண்டது போலவே இரண்டு ஜாக்கெட்டுகள் தைக்கப்பட்டு, மூன்று புடவைகளுக்கு ஓரம் அடிக்கப்பட்டது.

ஹவுஸ் ஓனர் வீட்டுக்காரி கேட்டாள்

“மொத்தம் எவ்வளவாச்சு?”

“எண்பது”

பின் மனதுக்குள் எதையோ ஞாபகப்படுத்திக் கொண்ட அம்மா உரக்க சொன்னாள்

“இல்ல…இல்ல…நூறு ரூவாயாச்சு..நூறு”

இப்படி தையல் மிஷின் இன்னுமும் எங்களுக்கென்று எஞ்சி இருக்கும் கொஞ்சமே கொஞ்சூண்டு வைராக்கியத்தை காக்க சதா அது தன்மேல் உள்ள துணியுடன் சேர்த்து தன்னையும் ‘சரக் சரக்’ என்று ஊசியால் ஓயாமல் குத்திக் கொண்டிருந்தது. அம்மா, கல்யாணத்திற்கு பிறகு தொடர்புகளற்றுப்போன தன் பால்ய கால சகியைப் போல் தையல் மிஷினை பார்க்கத் தொடங்கி விட்டாள். அம்மா அதன் பாஷையை கூட கற்றுக் கொண்டாள். அதன் மொழியில் ‘சரக் சரக்’ என்ற வார்த்தைகளே திரும்பத் திரும்ப வரும் என்றாலும் அது காட்டிய அர்த்தங்கள் ஒவ்வொரு நாளும் வேறுபட்டது. யாருமில்லாத சமயங்களில் அம்மா அதனுடன் பேசுவதைக் கூட பார்த்திருக்கிறேன். அது வெறும் பேச்சல்ல புலம்பல். அழுகை.

பார்கவியின் அம்மா அவர்கள் வீட்டில் வளர்க்கும் பூனைக்குட்டி இடம் ஏதேதோ சொல்லி அழுவதை அவள் எக்கச்சக்க தடவை பார்த்திருப்பதாக சொல்லி இருக்கிறாள்.

அழுது புலம்புவதற்கு கூடவா ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள் அம்மாக்கள்? என்று எனக்கு தோன்றும்.

இரண்டு மாதங்கள் கழித்து அப்பா ஒரு செட்டியாரிடம் ரைஸ் மில்லில் வேலைக்கு சேர்ந்தார்.

அந்த மாத கடைசி நாளில் நடராஜன் மாமாவின் சொந்த ஊரில் காவடி பார்க்க போக வேண்டி இருந்தது. தைக்கும் வேலை இருப்பதாக சொல்லி என்னை மட்டும் மாமாவுடன் அம்மா அனுப்பி வைத்தாள்.

முதன்முதலாக அம்மாவை விட்டு பிரிந்து தூரத்தில் இருந்த அந்த இரவு இதுவரை பார்த்த எல்லா நாட்களையும் விட மிக நீளமாக இருந்தது. காவடியில் கிடைக்கும் நீர் மோருக்கும் பாணகத்துக்கும் ஆசைப்பட்டு வந்தது பெருந்தப்பாய் போனது. தினம் பார்த்து பார்த்து நெற்றி சுருக்கத்திலிருந்து பாதத்தின் பித்த வெடிப்புகள் வரை அச்சாய் கருவிழிக்குள் பதிந்த ஒரு உருவம் புரண்டு படுக்கும் போது பக்கத்தில் இல்லை என்பது பெரும் கொடுமை தான். நான் சந்தித்ததிலேயே மிகக் கொடுமையான நாள் சித்ரா டீச்சரிடம் அடி வாங்கிய நாளோ வறுமையான தீபாவளியோ இல்லை. இல்லவே இல்லை. கெட்ட கனவு கண்டு அதிர்ந்து விழித்தெழுந்த போது இறுக்கிப்பிடித்துக் கொள்ள அம்மாவின் விரல்களில்லாத இரவு தான்.

அப்படி அம்மாக்கள் எல்லாம் இறுகப்பற்றிக் கொள்ள விரல்கள் இல்லாததால் தான் தையல் மிஷினிடமும் பூனைக்குட்டியிடம் புலம்புகிறார்கள் என்று தோன்றியது.

காவடி முடிந்து ஊர் திரும்பிய போது எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருந்த தையல் மிஷின் சத்தத்திற்கு பதிலாக சுடுகாட்டு அமைதி. நான் மெல்ல அடி வைத்து உள்ளே நுழைந்தேன். அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த துணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி, இரண்டு நூல்கண்டு டப்பாவும் உடைந்து நொறுங்கி எல்லா கலர் நூல்கண்டுகளும் தரை எங்கும் பரவி கிடந்தது. அம்மாவை தேடி பார்க்க கூட தேவையில்லை. இதுவரை பார்த்ததை வைத்தே சொல்லிவிடலாம் இரவு ஏதோ பெரிய சண்டை நடந்திருக்கும். நினைத்தது போலவே அம்மா சுவரில் சாய்ந்து தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள். சிலை என்று சொன்னால் நம்பும் அளவுக்கு கண்கள் தலை முடியில் கூட அசைவில்லை.

நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெகு நேரம் கழித்து எழுந்த அம்மா வீடெல்லாம் கூட்டி சிதறி கிடந்த நூல்கண்டுகளை அள்ளி குப்பையில் போட்டாள். பின் எதுவுமே நடக்காதது போல தன் வேலைகளில் அம்மா மும்மரமானது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் அன்று முழுவதும் தையல் மிஷினில் கைகூட வைக்கவில்லை.

இரவு நடந்த எல்லாவற்றையும் பார்த்து அதன் காட்சிகளை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, அசைவின்றி மௌன சாட்சியாய் ஒரு ஊதா நூல்கண்டு தையல் மிஷின் மேல் நின்று கொண்டிருந்தது. குப்பையில் எரியாமல் அதை மட்டும் அம்மா விட்டு வைத்திருந்தாள். அன்று இரவு உறங்கப் போகும் முன், என்ன நடந்தது என்று அம்மாவிடம் கேட்டேன். பதிலில்லை.

மறுநாளும் அம்மாவின் கை தையல் மிஷின் மேல் படவில்லை. “என்ன ஆச்சு”

கேட்டேன். அதே அமைதி.

ஒரு வாரம் கழிந்தது. கேட்டேன். காதில் பட்டதாக கூட காட்டிக் கொள்ளவில்லை. தைக்கவும் இல்லை. தைக்க கொடுக்க ஆட்களும் வரவில்லை.

மாதங்கள் ஆக ஆக அம்மா வழக்கம்போல் பேசினாலும் தையல் மிஷின் பேச்செடுத்தால் கடல் ஆழத்தின் அமைதி அம்மா முகத்தில் படரும்.

எது பற்றியும் கவலை கொள்ளாத காலநதி அதன் போக்கினை இன்னும் விரிவாக்கி ஆண்டுகளாய் ஓடத் தொடங்கியது. தையல் மிஷின் மேல் அசைவற்று நின்று கொண்டிருந்த ஊதா நூல்கண்டு, அதை தொட்டு செல்லும் காற்றிடம் கூட அன்றிரவு அது கண்ட காட்சியை சொல்லாமல்

மூடி மறைத்து வந்தது. வீடு முழுவதும் டிவி, ரேடியோ சத்தத்தில் அதிரும்போதும் ஊதா நூல்கண்டு அதன் அமைதி சற்றும் கலையாமல் அசைவின்றி நின்றிருந்தது

அம்மாவின் ஸ்பரிசத்தையே மறந்து போன தையல் மிஷின் அதன் உடலை சிலந்திகளுக்கு தானமளித்தது.

ஊதா நூல்கண்டு ஆண்டுகள் கடந்து வீட்டின் எல்லா நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருந்தாலும், அதன் நினைவு அந்த இரவிலேயே தங்கி விட்டதாய் தோன்றும். ஊதா நூல்கண்டு பாட்டி தாத்தா என இருவரின் மரணத்தையும் கூட அதன் மயான அமைதி துளியும் கலையாமல் பார்த்து நின்றது.

தையல் மிஷினிடம் புலம்புவதை நிறுத்திவிட்ட அம்மா அவ்வப்போது ஊதா நூல்கண்டை ஏறிட்டு பார்ப்பாள்.

அன்றிரவு அது பார்த்ததை ஒரு நாள் சத்தம் போட்டு சொல்லி விடாதா? என்பது போல் தான் அந்த பார்வை இருக்கும்.

அந்த இரவு முடிந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பின் வந்தது போலவே ஒரு வெள்ளிக்கிழமை அந்தியில் தையல் மிஷினை எடுத்து செல்ல ஆட்கள் வந்தார்கள். இம்முறை ‘அங்காளம்மன் துணை’ என்று எழுதப்பட்ட குட்டி யானையில்.

எந்த அம்மனும் துணை நிற்காத அம்மா தையல் மிஷின் ஏற்றப்படுவதை மரத்துப்போன கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முதன்முதலாக எனக்கு கைத்தட்டல் வாங்கி தந்த, என்னையும் ராக்கெட் விட வைத்த தையல் மிஷின் ஏற்றப்படும் போது என் கண்கள் நிரம்பி விட்டன.

எது குறித்தும் கவலை கொள்ளாத அப்பாவின் தலைக்கு மேல் இரண்டு கொம்புகள் முளைத்ததாக தோன்றியது. சாதா கொம்புகள் அல்ல. இரண்டாயிரம் வருஷத்து கொம்புகள்.

ஏதோ ஞாபகம் வந்தது போல் அசைவற்ற கண்களை சிமிட்டிய அம்மா வேகமாக சென்று பாதி ஏற்றப்பட்ட தையல் மிஷின் உச்சியில் இருந்த ஊதா நூல்கண்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று சாமி படங்கள் நிறைந்த அலமாரியில் அதை நிற்க வைத்தாள்.

மறுநாள் என் புலம்பல்களை கேட்பதற்காகவே படைக்கப்பட்ட பார்கவியை எங்களை சுமப்பதற்காகவே கட்டப்பட்ட சிமெண்ட் பெஞ்சில் சந்தித்தேன்.

பார்கவியின் இரண்டு சிண்டுகளும் பொங்கி, பெருகி, பின் விழுந்து முதுகின் மேல் இரண்டு ஜடைகளாக தொங்கும் அளவிற்கு கால நதி ஓடியிருந்தது.

வழக்கம்போல் நடந்ததை எல்லாம் சொன்னேன். விரிந்த கண்களை துளியும் இமைக்காமல் சொன்னாள்

“ஒருத்தரோட பெரிய பெரிய பிரச்சினை, அழுகை, துன்பத்த எல்லாம் பார்த்துட்டு அதை யார் கிட்டயும் சொல்லிக்காம தனக்குள்ளேயே வெச்சுக்கிட்டு, காலம் முழுக்க அவங்க வலிக்கு சாட்சியாய் இருக்குற எல்லாம் சாமியாகிடும். அதனால ஊதா நூல்கண்டும் சாமியாகிருச்சு. ஒட்டுமொத்த பொம்பளைங்களோட சாமி.”

பார்கவி சொன்னால் அது நிச்சயம் உண்மையாக தான் இருக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *