உஷா சுற்றும் முற்றும் பார்த்தாள்.
மூலைச் ‘சீட்டில்’ முடங்கிக் கொண்டு குறட்டை விடும் கிழவனைத் தவிர, பஸ் காலி. கொண்டக்டர் கேள்விக் குறியுடன் அவளைப் பார்க்கிறான். எங்கே இறங்கப் போகிறாய் என்று அவன் கேட்டால் அவளால் பதில் சொல்ல முடியாது, அவளுக்கே தெரியாது எங்கே இறங்குவதென்று.
அவள் இப்போது இறங்கவில்லையென்று நிச்சயப்படுத்திக் கொண்ட பஸ் கொண்டக்டர் மணியடிக்க பஸ் புறப்படுகிறது,
அடுத்த ஸ்டாப்பில் ஒருவரும் ஏறாமல் விட்டால் அந்த மூலையில தூங்கிக்கொண்டிருக்கும் கிழவனும் இறங்கிவிட்டால், அவள் தனியாக இருந்தால் அந்த கறுப்பினக் கொண்டக்டர் வந்து ‘எங்கே இறங்கப் போகிறாய்’என்று கேட்கத்தான் போகிறான்.
இதுவரையும் பஸ்ஸில் இருந்த சன நெரிசலில் அவளை ஒருத்தரும் கவனிக்கவில்லை. பயத்துடன் பரபரப்புடன் அவளின் கலங்கிய கண்கள் போராடுவதை யாரும் அக்கறைப்படுத்தவில்லை. இப்போது அவள் கிட்டத்தட்ட தனியாளாகிவிட்டான். அவள் நினைத்தது சரி. லண்டனில் கிழக்கில் தொடங்கி வடக்கு வரை போகும் பஸ் அது. ஐம்பத்து மூன்றாம் நம்பர். பஸ்ஸில் எப்போதும் சன நெருக்கமாய் இருக்கும். ஏனெனில் லண்டனில் உல்லாச புரியான பிக்கடிலிக்குக் கடைகளுக்குச செல்ல வருபவர்கள் ~வேறு| காரணங்களால் வருபவர்கள்,. அத்துடன் இந்த இரவில் படம் பார்கக் வருபவர்களைத்தவிர யார் வருவார்கள்?
உஷா பஸ்ஸிருந்து இறங்கிக் கொண்டாள். இவ்வளவும் பஸ்ஸில் இருக்கும் போது சூடாக இருந்தது, இப்போது ஊசிமுனைகள் போன்று குளிர் காற்றின் நாக்குகள் உடம்பைத் துளைக்கின்றன. உஷாவின் கண்களுக்கு முன்னால் பிக்கடிலி சேர்க்கஸ் கார்னிவல் காட்சியாகத் தெரிகிறது. கொஞ்ச தூரத்தில் கிரேக்கிய காதற்கடவுள் ஈரோஸின் சிலை இவளை உற்றுப் பார்ப்பதுபோலிருக்கிறது.
பகட்டான விளக்குகுள் படாடோபமான கடைகள். நடமாடும் சிலைபோல் திரியும் அழகிய பெண்கள், ஏதேதோ அர்த்தத்தில் அவர்களை எடைபோடும் ஆண்கள். இத்தனையும் அவளுக்குப் புதிது உஷாவுக்கு. லண்டனில் பன்னிரண்டு வருடமாய் வளர்ந்தும் பிக்கடிலி சேர்க்கஸ்; புதிது அவளுக்கு. தாய் ஒன்றிரண்டு தரம் ஒக்ஸ்போhட்ட றீஜன்ட் வீதி கடைகளுக்கு கூட்டி வந்திருக்கிறாள்.
பிக்கடிலிப் பக்கம் அதிகம் வந்ததில்லை. றீஜன்ட் பாhர்க் மிருகக் காட்சிச் சாலைக்குப் போகும்போது ஐம்பத்து மூன்றாம் பஸ்ஸின் ஜன்னல்களால் எட்டிப்பார்த்து ரசித்த பிக்கடிலி சேர்க்கஸ் அவள் முன்னால் விரிந்து கிடக்கிறது,
எங்கே போவது?
யாரைத் தெரியும் அவளுக்கு?
யாரைக் கேட்கலாம் பெண்கள் விடுதி எங்கேயாவது இருக்கிறதா என்று?
பொலிஸ்காரர் ஒருவர் உஷாவை உற்றுப் பார்க்கிறார். தாண்டிச் செல்லும்போது கேட்கலாமா? உதவி கேட்கலாமா? உஷாவுக்கு பகீரென்றது. பொலிஸ் காரனைக் கேட்பதாவது? முதல் வேலையாகத் தன் தாய், தகப்பனுக்கு உஷா வீட்டைவிட்டு ஓடிவிட்டாள என்பதை அறிவிப்பதாக இருக்கும் பொலிஸ்காரரின் கடமை.
தாய் தகப்பன்! அவர்களின் நினைவு அவளைத் தாக்குகிறது. குளிர்காற்றால் மட்டுமல்ல தாயின் நினைவு வந்ததும் கண்களில் நீர் வடிகிறது, கடந்த இரண்டு மூன்று நாட்களாக அழுது அழுது அவள் கண்களில் நீர் வற்றியிருந்தாலும் இப்போது தாயை நினைத்துக் கொண்டதும் மடை திறந்தாற்போல் வருகிறது,
போட்டிருந்த ஓவர்கோட் கைக்குள்ளால் எடுத்த பேப்பர் கைலேஞ்சியால் கண்களைத் துடைத்து மூக்கையுறுஞ்சிக் கொள்கிறாள். பேப்பர் கைலேஞ்சியைக் குப்பை வாளியில் போட திரும்பிய போது தன்னைத்தாண்டிச் சென்ற பொலிஸ் காரர் ‘பீட்டர் லோர்ட்”என்ற கடைக்கு முன்னால் நின்று கொண்டு தன்னையுற்றுப் பார்ப்பது தெரிகிறது.
எங்கே போவது மீண்டும் அழுகை வருகிறது. உஷாவுக்கு. அவள் இங்கிலிஷ் சிநேகிதிகள் இந்த வருடத்தில்; தனியாக ஐரோப்பிய நகரங்களுக்கு உல்லாசப் பிரயாணம் போகிறார்கள். உஷா தன் பெற்றோர்களையோ சகோதரர்களையோ விட்டு இதுவரை எங்கும் போக அனுமதிக்கப்படவில்லை. தாயின் நிழலில் நடந்தவள்.
இன்று! மெல்லக் கொஞ்சத்தூரம்; நடந்தாள். கண்கள் எங்கும் சுற்றி அலைந்தன. ஏதும் பெண்கள் விடுதியின் பெயரைத் தேடின அவளது சோகம் நிறைந்த கண்கள்.
கடை வீதியில் சினிமாத் தியேட்டர் நிறைந்த பகுதிகளில் எந்த விடுதியும் இருக்காது, என்பது விளங்க, கொஞ்ச தூர நடையும், துயர் படிந்த சில நிமிடங்களும் எடுத்தன அவளுக்கு. திருவிழாக் கோலத்தில் இருக்கும் பிக்கடிலிச் சேர்க்கஸின் மூலைகளின் தெரியும் சந்து பொந்து ரோட்டுகளைப் பர்க்க அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது, இவள் தனியாகத் திரிவதை உப்பு மூட்டைகள் போன்ற சில உடம்பு பெருத்த மனிதர்கள் உற்றுப் பார்ப்பதை பார்க்க அவளுக்கு உடம்பை என்னவோ செய்கிறது, ஜன்னலுக்கப்பால் உலகத்தைப் பார்க்கத் தெரியாதவள் உஷா.
வீட்டில் என்ன செய்வார்கள்?
அவள் வீட்டைவிட்டு ஓடிவிட்டாள் என்ற விசயம் தெரிந்திருக்குமா,
அம்மா ராதாகிருஷ்ணன் படத்துக்கு முன்னால் விழுந்து கண்ணீரும் கம்பலையுமாக அழுவாள் .
தகப்பன் கோபத்தில் பெரியதம்பி யோகேசைப்; போட்டு அடித்துக்கொண்டிருப்பாரா?
சின்னத்தம்பி தினேஷ் வீட்டில் நடக்கும் ரகளைகளைப் பார்த்து விடாமல் ஒப்பாரி வைப்பான்.
‘தினேஷ் உன்னை எப்படியடா பிரிந்து இருப்பான்.” உஷா வாய்விட்டுச் சொல்லத் துடிக்கிறாள். தம்பி தினேஷ் பிறந்து கொஞ்ச மணித்தியாலங்களில் தாய் உயிருக்குப் போராடினாள். அந்த நோய் குணமடைய மாதக்கணக்கில் எடுத்தது, அந்த நாட்களில் பதினோரு வயதில் தாயைப்போல பராமரித்தாள் உஷா தினேஷை.
குழந்தைக்கு எப்படிப் பால் தயாரிப்பது என்று தகப்பனுடன் சேர்ந்து பால் தயாரித்து அழும் குழந்தையை ஆதரித்து வளர்த்தாள்.
‘தினேஷ் உங்களையெலலாம் விட்டுப் பிரிய எனக்குன் இந்தவிதி”. ஊஷாவின் நடை தளர்கிறது. ஒரு நோக்கில்லாமல் எத்தனை தூரம் அலைவது.
கண்ணுக்கு முன்னால் பிடிக்கடிலி சேர்க்கஸ் அண்டர் கிரவுண்ட் ஸ்ரேஷன் தெரிகிறது,
போகலாமா? அண்டர் கிரவுண்ட் வாசல் இருள் குகை போலத் தெரிகிறது.
ஸ்ரேசனுக்குள்ப் போனால் ஓன்று குளிர் குறைய இருக்கும். அடுத்தது லண்டனுக்கு வரும் பெண்களிடம் ஏதும் பெண்கள் விடுதி விலாசம் தெரியுமா என்று விசாரிக்கலாம். இபப்டித் திரிந்து கொண்டிருந்தால்- தகப்பனார் தேடி வந்;தால் சிலவேளை அவர் கண்களில் அகப்படலாம். அகப்பட்டால் அவளை வீட்டுக்கு கொண்டு போய் அடி அடியென்று அடித்துவிட்டு இன்னும் இரண்டு நாள்களில் நடக்கப்போகும் அவள் கல்யாணத்தை நடத்திவிடலாம்.
அவளின் கல்யாணம்.
போன கிழமைதான் உஷாவைப் பெண் பார்த்தார்கள். மாப்பிள்ளை இந்தியாவிலிருந்து வரவழைக்கப்ட்டிருந்தார்.
உஷா எப்படி ஒரு உயர்ந்த இந்துப் பெண்ணாக இருக்க வேண்டுமென்று தாங்கள் விரும்புவதாகதாய் கடந்த மூன்று வருடங்களாக உஷாவிடம் அவள் தாய் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறாள்.. உஷா மௌனத்துடன் கேட்பாள். அவளின் இங்கிலீஷ் சிநேகிதி போல் உஷா வாயாடி அல்ல. தாங்கள் குழந்தைகளுக்காகத்தான் எல்லாம் செய்வதாக தாயும் தகப்பனும் சொல்லியிருக்கிறார்கள். தகப்பன் இரவு பகல் என்று பாராமல் உழைத்து லண்டனில் இரண்டு வீடு வாங்கியிருக்கிறார். தாய் தகபப்ன் தங்களுக்கு சரியானவைதான் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். உஷா தாயையோ தந்தையையோ எதிர்த்து இதுவரை எதுவும் பேசியதில்லை.
அவளின் சிநோகிதிகளுடன் ஆங்கில ‘பொப்’பாட்டுக்காரரின் நிகழ்ச்சியைப் பார்க்க ஆசை என்று சொன்னபோது உஷாவின் தாயின் கண்களில் நீர் வந்துவிட்டது. இப்படிக் கேவலமான செய்திகள் பார்த்துத்தான் வெள்ளைக் காரர்கள் இப்படிச் சீரழிகிறார்கள் என்று மகளின் தலைக்கு எண்ணெய் தடவும்போது உணர்சச்p வசப்பட்டுச் சொன்னாள். உஷா மறுவார்த்தை சொல்லவில்லை. டி.வியில வரும் வால்ட் டிஸ்னியின் “மிக்கி மவுஸ்” படங்கள் போன்ற கார்ட்டுன் சித்திரப் படங்களை தம்பிகளுடன் இருந்து பார்க்க அப்பா விடுவார். செய்திகளும் சிலவேளை பார்ப்பதுண்டு. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தாய் நிPண்ட நேரம் சொல்லியிருக்கிறாள்.
வெளியில் பனி பெய்யும் அந்த மெல்விய ஓசையில் தாயின் உபதேசம் உஷாவைத் தாலாட்டிக் கொண்டு நித்திரையாக்கும். ‘தாங்கள் தங்கள் தாயுடன் ஒரு அறையில் படுத்ததாக நினைவு தெரியவில்லை’ என்று வெள்ளைக்கார சினேகிதிகள் சொன்னபோது அவள் ஆச்சரியப்பட்டாள். சில வேளைகளில் தனக்கும் ஒரு தனியறை கேட்க வேண்டும் என ஆசையாக இருக்கும். ஆனால், வீடு நிறைய ஆட்கள் வாடகைக்கு இருக்கின்றார்கள். அவர்களால் நல்ல உழைப்பு. அப்படி உழைத்துத்தான் பிள்ளைகளை நல்ல நிலையில் வைத்திருப்பதாக அப்பா சொன்னார்.
வாழ்க்கையில் என்றைக்காவது தனக்கொரு தனியறை கிடைக்கும் என உஷாவுக்குத் தெரியாது. கல்யாணம் முடித்து கணவருடன், அதன்பின்,பின் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுடன படுக்கவேண்டும்.
இப்போது உஷாவுக்கு கல்யாணம் பேசி முடிவு கட்டிவிட்டார்களாம். போன கிழமைதான் உஷாவுக்குச் சொன்னார்கள். அவள் எதிர்த்து ஒன்றும் பேசவில்லை. அழகாக உடுத்துக்கொண்டு மாப்பிளை பார்த்தாள் உஷா. அவளுக்கு மாப்பிளையைக் கண்டவுடன்,எங்கேயாவது ஓடிப்போய் தனியாக இருந்து அழவேண்டும் போல இருந்தது. முறுக்கிய மீசையும், ஆணவத்தோற்றத்துடனுமிருந்தான். ரமேஸ் எனற பெயரில் வந்த அவள் மாம்பிள்ளை.
ரமேஸ் போன்ற பெரிய மனிதர்களின் குடும்பத்தில்,உஷாவின் பெற்றோர்கள் சம்பந்தம் வைத்துக்கொள்ள அதிர்ஷ்டம் வேண்டுமாம். ஆப்படி ஒரு அதிர்ஷ்டம் உஷாவுக்குக் கிடைத்தது அவர்கள் வணங்கும் கிருஷ்ணனின் மகிமையே என்று உஷாவின் தாய் பெருமைப்பட்டாள்.
மாம்பிள்ளைக்கு லண்டனில் ஒரு கடை போட்டுத்தந்தாற்போதுமாம். அதற்குப் பிரதியுபகாரமாக உஷாவின் பெயரில் மாம்பிள்ளை வீ;ட்டார் நிறையப் பணம் போடப்போகிறார்களாம்.உஷா அவர்களின் பேச்சை மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அன்று இரவு மிகத் தயக்கத்துடன்,தன்னைப் பார்க்க மாம்பிள்ளையைத் தனக்குப் பிடிக்கவில்லை அவளின் தாய்க்குச் சொன்னாள் உஷா.அதைக் கேட்ட தாய் அடிபட்ட நாகமபோற் துடித்தெழுந்தாள்.இருளில் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த மகளுடன் சமர் செய்ய லைட்டைப் போட்டாள்.கண்ணீரும் கம்பலையுமாகவிருக்கும் தனது மகளைக் கண்டு திடுக்கிட்டு விட்டாள்.உஷா இப்படி அழுது அவள்தாய கண்டதில்லை.
‘என்ன குறை மாம்பிள்ளைக்கு? உன்னை விடப் பன்னிரண்டு வயது வித்தியாசம். அது ஒன்றும் பெரிய விடயமில்லை. எனக்கும் உனது; அப்பாவுக்கும் பதினைந்து வயது வித்தியாசம். இதெல்;லாம் எங்கள் கலாச்சாரத்தில் சாதாரண விடயங்கள்.ஆமாம்,உனக்கு வரப்போகும் மாப்பிள்ளைக்கு ஆங்கிலம் சரியாக வராதுதான். அதெல்லாம் லண்டனில் செடு;டீல் பண்ணிக் கொஞ்சக்காலத்தில சரியாகப்போகும்.; உனக்கு எங்களின்ர மொழி தெரியும்தானே,அப்படியிருக்கும்போது என்ன பெரிய பிரச்சினையைக் கண்டாய்? நீpங்கள் போடப்போகும் கடையில் இங்கிலிஸ் தெரிந்த இந்தியர்களை வேலைக்கு வைத்துக்கொண்டாற் சரிதானே’ தாய் பல விடயங்களை ஒரே மூச்சில் பொரிந்து தள்ளினாள்.
உஷாவால் தாய்க்கு எதிராகப் பேசி ஒன்றும் நடக்காது என்று அப்பட்டமாகத் தெரிந்தது.அவளின் கேள்விகளுக்கு அவளின் தாய் தகப்பன் பல விளக்கங்களைத் தரத் தயாராகவிருந்தார்கள்.
ஓருசில நாட்களில், மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து,’உஷாவைத் தங்களுக்குப் பிடித்து விட்டதாகச்’ செய்தி கிடைத்ததும் உஷாவின் தாய்தகப்பன் அவளைக் கட்டிக்கொண்டு சந்தோசம் கொண்டாடினார்கள்.
லண்டனில் உஷாவைத் திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை வீட்டார்,இந்தியாவில் உஷாவுக்காகக் கொடுத்த நிலத்தை எப்படிப் பாவிக்கலாம் என்பதில் உஷாவின் தகப்பனார் தனக்குத் தெரிந்த பலரைத் தொடர்பு கொண்டார்.அவர் லண்டனில்,மகளின் பெயரில் ‘கடை’ ஒன்று கொடுக்க,அவர்கள் அதற்குப் பிரதியுபகாரமாக இந்தியாவில் நிலம் கொடுக்கிறார்கள்.
லண்டனில் பெண் வைத்திருந்தால் எப்படி ஒரு நல்ல ‘வியாபாரம்’நடக்கிறது? உஷா தன் தiவிதியை நொந்து கொண்டாள்.இந்தியாவிலிந்து லண்டன் வருவதற்கு’என்ன விலை கொடுத்தும்’ பெண்எடுக்கப் பலர் தயாராகவிருக்கிறார்கள் என்று வெளிப் படையாகப் பேசிக்; கொண்டபோது, அழுத கண்களுடன் தவிக்கும் மகளின் நிலை அவர்களின் கண்களிற் படவில்லை.
‘அவர்கள்; இப்போது என்ன செய்வார்கள? என்னதான் நடந்தாலும் நான் இனி வீட்டுக்குத் திரும்பப்போவதில்லை.எனக்குகு; கொஞ்சம் படிப்பிருக்கிறது. ஓரு வேலை எடுத்துக் கொண்டால் நான் பிழைத்துக் கொள்வேன்’ உஷா தனக்குத் தானே முணுமுணுத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்..’இரவிரவாக் இந்த அண்டர்கிரவுண்ட் ஸ்ரேசனைச் சுற்றிக் கொண்டு நிற்கமுடியுமா? ஓரு லேடி ஹொஸ்டலைத் தேடவேண்டும்’.
தூரத்தில் ஐஸ்கிறிம் விற்கும் அமெரிக்கன் கடையைமூடும் ஆரவாரம் நடக்கிறது.அவளைச் சுற்றி நடமாட்டம் குறைகிறது.
‘ஹலோ ஸிஸ்டர்’ அவள் கனவுலகத்திலிருந்து விடுபட்டதுபோல்,தனக்கு முன்னால் நிற்கும் வாலிபனைப் பார்க்கிறாள்.கலப்பு நிறவாலிபன், பூனைக்கண்களுடன் இவளை ஊடுருவிப் பார்க்கிறான்.
அவனுக்கு மிகவும் கருமையான,சுருண்டதலைமுடி ஒரு கூடாரம்போற் தெரிகிறது.அவனின் சிரிப்பைப்பார்த்தால் அவனொரு கெட்டவனாக அவளுக்குத் தெரியவில்லை.இதுவரையும் எந்த அன்னியனுடனும் தனிமையில் பேசிப் பழக்கமில்லாததால்,அவனுடன் அருகில் நிற்பதே தர்மசங்கடமாகி உஷாவின் முகம் குப்பென்றுசிவக்கின்றது.
‘ஹலொ’ அவன் இன்னும் தன்னடைய புன்முறுவலுடன் அவள் முன்னால் நிற்கிறான்.அவள் அவனை நேரே பார்க்காமல் தர்மசங்கடத்துடன் அங்குமிங்கும் பார்த்தாள். எங்கோ போவது?
‘யாரையும் எதிர்பார்த்துக்கொண்டு நிற்கீறுpர்களா ஸிஸ்;டர்?’ அவன் குரலில் பரிவு தெரிந்தது.
‘ஆம் என்று சொல்லி விட்டால் அவனின் கேள்விகளிலிருந்து தப்பலாம் என்று அவள் அவனின் கேள்விக்குத் தலையாட்டினாள்.
‘நானும்தான் எனது சினேகிதனைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன்’ அவனின் பற்கள் மிகவம் வெண்மையானவை.,வெளிச்சத்தில் பளிச்சிட்டது.
‘அப்படியானால் இவனும் இதே இடத்தில் நிற்கப்போகிறானா?
அண்டர்கிரவுண்ட் ரெயில்வே ஸ்ரேசன் ஆள் நடமாட்டம் குறைந்து கிட்டத்தட்ட அமைதியாகிக் கொண்டுவந்தது.இனியும் இந்தப் பக்கம் நின்று என்ன செய்வது?
இரவு பதினொரு மணியாகப்போகிறது.
இவள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்று இப்போது தெரிந்திருக்கும். அப்பா தேடிவந்தால் அவள் கெதி என்ன?
ஏதும் லேடிஸ் ஹொஸ்டல் இருக்கிறதா என்று தேட அவள் கொஞ்ச தூரம் நடந்தாள்.ரெயினால் வெளிவருபவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்தார்கள். அவர்களிடம் லேடிஸ் ஹொஸ்டல் பற்றிக் கேட்க அவள் விரும்பவில்லை. அவர்களுக்கும்; இந்த இடமே புதிதாகவிருக்கலாம்.
அவளுக்கு அழுகை வருகிறது.
தனக்குப் பிடிக்காத திருமணத்தைத் தனது தலையில் கட்ட நினைத்து இப்படித் தன்னைத் தவிக்கும் நிலைக்குத் தள்ளிய பெற்றோர்களில் ஆத்திரம் வருகிறது.
பாசத்தை மறைத்த பணத்தாசையால் தனக்கு நேர்ந்த நிலையால் அவள் இன்று நடுச்சந்தியில் நின்றழுகிறாள்.
‘நடுரோட்டில ஒரு பெண் அழுது கொண்டிருந்தால் போலிஸ்காரன் வந்து ஸ்ரேசனுக்குக் கூட்டிக்கொண்டுபோய் விசாரிப்பான்’ உஷா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன் தன்னை ஹலோ ஸிஸ்டர் என்று கூப்பிட்ட கலப்பு நிறத்து வாலிபன் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான்.
அவளுக்குத் திடிரென்று வெளியுலகத்தில் பயம் வந்தது. ‘ஏன் இவன் என்னைப் பின் தொடர்கிறான்’?
அவள் கோபத்துடன் அவனைப் பார்க்கிறாள்.
‘தேடி வந்தவர்களைக் காண முடியாவிட்டால் வீடு திரும்பிப்போவது பாதுகாப்பானதும் புத்திசாலித்தனமான விடயமுமாகும்,நடுச்சாமத்தில் தெருவில் நின்றழுவதால் என்ன பிரயோசனம்?’
அவன் முகத்தில் புன்முறுவல் இப்போதில்லை. குரல் மிகவும் சீரியசாகவிருக்கிறது.
‘நான் இந்த இடத்திற்குப் புதிது. இந்தப் பக்கம் ஏதும் லேடிஸ் ஹொஸ்டல் கிடைக்குமா என்று தேடுகிறேன்’ அவள் நேரடியாக உணமையைக் கொட்டுகிறாள்.
அவன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு தனது தலையைச் சொறிந்து கொண்டான்.
‘இந்த நேரத்தில் லேடிஸ் ஹொஸ்டல் தேடுவது கஷ்டம் அதிலும் பிக்கடிலி சேர்க்கஸ் ஏரியாவில் ஒருபெண் தனியாகத் திரிவது மிக மிக அபாயமான விடயம்’ அவன் குரலில் அக்கறை தொனிக்கிறது.
இந்த நேரத்தில் தனியாக ஒரு டாக்ஸியில் ஏறிப்;போயத் தங்குவதற்கு இடம் தேட அவள் மனம் நடுங்குகிறது..
‘இடம் எங்கேயிருக்கிறது என்று போலிசாரிடம் கேட்டால் என்ன’ அவள் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு அவன் கேட்கிறான்.
‘வேண்டாம…வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்வோம்’ அவள் படபடக்கிறாள்.
‘ஏன் வீட்டை விட்டு ஓடி வந்தாயா?’ அனுபவ முத்திரை படிந்தது அவனின் கேள்வி.
அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஏவ்வளவு நேரம் மறைப்பது?
அவள் கண்கள் மீண்டும் மடை திறக்கின்றன.அவள் வேதனையில் அவள் நெஞ்சம் எகிறிப் பெருமூச்சு விடுவது அவளின் ஓவர்க்கொட்டைத்தாண்டி விம்முகிறது.
‘கோபத்தில் ஓடிவந்தாயிற்று,இப்போது கோபம் தளர்ந்து வீடடுக்குப் போவதாகச் சொன்னால் லண்டன் போலிசார் கட்டாயம் உதவி செய்வார்கள்” அவன் கனிவான குரலில் அவளின் முகத்திலிருந்து தன் பார்வையை எடுக்காமற் சொல்கிறான்;.
‘கடைசி வரைக்கும் வீட்டுக்குப் போகமாட்டேன்.’அவள் குரலடைக் கதறுகிறாள்.
முழிந்த பார்வையும் முறுக்கிய மீசையுடனிருந்த அவளுக்குக் கணவனாகத் தெரிவு செய்யப் பட்ட ரமேஸ்; முகம் அவள் மனத்தில் படம் காட்டுகிறது..
‘என்ன நடந்தாலும் வீட்டுக்குப் போகமாட்டேன்’ உஷா இரண்டாம் தடவை உறுதியாகச் சொல்கிறாள்.
‘இரவிரவாக இந்தப் பக்கம் சுற்றித்திரிந்தால் போலிசார் ஸ்ரேசனுக்குக் கொண்டுபோய் விசாரிப்பார்கள்,பின்னர் உன்னை வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பார்கள்..’ அவன் குரலில் ஒரு எச்சரிக்கை,பார்வையில் கூர்மை. அவளை எடைபோடுகிறான். வயது என்ன பதினேழு இருக்குமா?
அழுது வீங்கிய கண்கள் என்றாலும் அதிலுமொரு கவர்ச்சி, கள்ளம் கபடமற்ற தூய்மையான பெண்ணழகு.
‘உனக்கு போய்பிரண்ட இருந்தால் போன்பண்ணிக் கூப்பிட்டால் வரமாட்டானா’?
அவளின் நிலையை ஆழம்பார்க்கும் கேள்வியது என்பதை அறியாத பேதைப் பெண்மை திடுக்கிட்டுப்போய்,அவனின் முகத்தை ஊறிட்டுப் பார்க்கிறாள்.’எனக்கு போய்பிரண்ட் கிடையாது’ அலறாத குறையாகப் பதில் சொல்கிறாள்.
அவனின் முகத்தில் ஒரு நிம்மதியான சிரிப்பு தோன்றி மறைவதை அவள் கவனிக்கவில்லை..
‘சரி இந்த இடத்திலேயே நிற்காமல் கொஞ்ச தூரம் நடந்து பார்ப்போம் ஏதும் லேடிஸ்ஹொஸ்டல் கண்ணிற் பட்டாலும் படலாம்’அவன் முன் நடக்கிறான். அவனைத் தொடர்வது தர்மசங்கடமாகவிருந்தாலும் வேறு வழியில்லாமல் அவள் அவனைப் பின் தொடர்கிறாள்.
‘எங்கே வந்து விடடோம்?’ அவளக்கு எங்கே போகிறோம் என்பதே தெரியவில்லை.சிலவேளை வீட்டுக்குத் திரும்பிப்போவதேன்றாலும்,(அந்த யோசனை இப்போதைக்கில்லை) உதவிக்கு இவனின் காலைத்தான் பிடிக்கவேண்டும்.
போகும் ‘வழி’காட்ட யாரும் இல்லை அவளுக்கு!
‘யார் இவன்? ஏன்னோடு சுற்றித் திரிகிறானே,வீடு வாசல் இல்லையா போய்ச்சேர?’
‘தான் தனது நண்பனை எதிர்பார்த்து நிற்பதாகச் சொன்னானே,என்ன நடந்தது இவன் எதிர்பார்த்து நின்ற நண்பனுக்கு’?
உஷாவின் மனத்தில் ஆயிரக்கணக்கான யோசனைகள் ஓடிமறைந்தன.
‘நாளைக்கு என்ன செய்வது’?
‘கையிலிருக்கும் பணம் செலவழிந்து முடியமுதல் ஏதோ ஒரு வேலை தேடிக்கொள்ள வெண்டும்’
‘தாய் தகப்பன் இப்போது என்ன செய்வார்கள்? போலிசுக்கு அறிவித்திருப்பார்களா? எனது படத்தைப் போலிசாரிடம் கொடுத்திருப்பார்களா? அப்படியானால் ஒரு வேலையிற் சேருவது எப்படி? அவர்களின் கண்களிற் படாமல் கொஞ்ச நாளைக்கு மறைந்து வாழ வேண்டும்’?
தனக்குள்த் தானே யோசித்துக் கொண்டிருந்தவளுக்குத் தன் தனிமையான போராட்டம் தாங்கமுடியாத வேதனையைத் தந்தது. இவளுக்கு இடம் கொடுத்துப் பாதுகாக்குமளவுக்கு இவளுக்கு எந்த சினேகிதியும் கிடையாது.
‘என்ன பெரிய யோசனை?’ அவன் கரிசனையுடன் கேட்டான். என்ன பதில் சொல்வது? ஏத்தனை என்று சொல்வது? அவள் அவனுக்கு மறுமொழி சொல்லாமல் மவுனமாக நடந்தாள். அவளின் கண்கள் பர பரவென்று லேடிஸ் ஹொஸ்டலைத் தேடிக்கொண்டிருந்தது.
கால்கள் குளிரில் விறைத்தன். வயிறுவேறு பசியில் முரண்டு பிடித்தது. தாய் தகப்பனிலுள்ள கோபத்தில் கடந்த இரண்டு நாட்களாக அவள் சரியாகச் சாப்பிடவில்லை.
‘என்ன சத்தியாக்கிரகமா?’ என்று மகளைக் கிண்டலடித்த தாயார்,இவளின் போராட்டத்தைப் பெரிதாக எடுக்கவில்லை. தாய் தகப்பனுக்கு உஷாவின் கல்யாண ஏற்பாட்டு வேலைகள் தலைக்குமேற் கிடந்தன,அந்த அவசரத்தில் மகளைச் சாப்பிடச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருக்கவில்லை.
‘ஏதும் சாப்பிடலாமா?’ இவளுட்ன் வந்து கொண்டிருக்கும் கலப்பு நிறவாலிபன் அன்புடன் கேட்டான்.
அவள் மறுதலிக்கவில்லை. பசி வந்தாற் பத்தும் பறந்துவிடும் என்ற உண்மை அவளுக்குப் புரியத் தொடங்கி விட்டது.
அவர்கள் ஒரு சாப்பாட்டுக் கடையின் படிகளில் இறங்கியபோது ஏதோ ஒரு பாதாள உலகத்துக்குள்ப் போவது போலிருந்தது.
அந்தக் கடையின் மெல்லிய வெளிச்சத்தில்,அமைதியான இசையில் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதுவரையும் ஒரே சனக் கூட்டத்துடன் மாரடித்து விட்டு இப்படியான ஒரு இடத்திற்கு வந்தது அவளுக்கு நிம்மதியாகவிருந்தது.
இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.வெளிக் கடைகளில் சாப்பிட்டு அவளுக்கு அதிகம் பழக்கமில்லை. அவளின் தாயுடன் போன வருடம்,’செல்பிரிட்ஜஸ்’ கடைக்கு ஒக்ஸ்போர்ட் ஸ்ரீட்டுக்கு வந்தபோது ஒரு கடையில் பொரித்த உருளைக் கிழங்கும் முட்டையும் சாப்பிட்டிருக்கிறாள்.
‘என்ன வேணும் சாப்பிட’ அவன் கேட்கிறான்.
‘ஏதும் வெஜிடபிள..நான் முட்டை சாப்பிடும் வெஜிடேரியன்’ அவள் தன கைப்பையைத் திறந்தபடி சொல்கிறாள்.அதிகம் செலவழிக்க அவள் தயாராகவில்லை.ஒரு வேலை கிடைககுகம் வரைக்கும் தனது கையிலுள்ள பணத்தைக் கவனமாகச் செலவழிக்கத் திட்டமிட்டிருக்கிறாள்.
அவளக்கு முடடையும் உருளைக்கிழங்கு’சிப்சும்’ ஓர்டர் பண்ணும்போது தனக்கு, வதக்கிய பன்றியிறைச்சியும்,பொரித்த உருளைக்கிழங்கும் சலட்டும் ஓர்டர் பண்ணிக் கொள்கிறான்.
‘தங்குவதற்கு ஹொஸ்டல் கிடைக்காவிட்டால் என்ன செய்வதாக யோசனை?’அவனின் கேள்விக்குப் பின்னால் அவளின் இருண்ட எதிர்காலம் அவளுக்குப் புரிகிறது.அவள் தலை குனிந்து கொண்டு மேசையைச் சுரண்டுகிறாள்.
‘ ஏன் இந்தக் கஷ்டம் ஸிஸ்டர்,திரும்பிப்போகப் பணமில்லையென்றால் நான் தருகிறேன,இப்போது போனாலும் கடைசி பஸ்ஸைப் பிடிக்கலாம்.;’ அவனின் குரலில் ஆதரவுத் தொனி(?) வழிகிறது.
‘நான் கடைசி வரைக்கும் வீட்டுக்குத் திரும்பிப் போகமாட்டன்’ அவள் குரலில பிடிவாதம்.
‘ஏன் திரும்பிப் போகமாட்டாய் என்று அவன் கேட்கவில்லை.
இருவரும் மவுனமாகச் சாப்பிடுகிறார்கள்.
‘தங்களின் பிள்ளைகளாகப் பிறந்த குற்றத்திற்காக,தாங்கள் நினைத்தபடி தங்கள் குழந்தைகள் நடக்கவேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பத எவ்வளவு கொடுமை?’ அவள் தனக்குத் தானே சொல்வதுபோற் சொல்லுவதை அவன் கேட்டுக் கொண்டிருந்து விட்டு,
‘பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளக்கு நல்ல காரியங்களைத்தான் செய்ய முன்வருவார்கள்’அவன் பன்றியிறைச்சியை மென்று கொண்டு சொல்கிறான்.
‘பிடிக்காத மனிதனைக் கல்யாணம் செய்யச் சொல்லி வதைப்பதா குழந்தைகளக்குச் செய்யும் நல்ல விடயம்?’ அவள் குரலில் ஆத்திரம்.
ஓ,அதுவா பிரச்சினை? அதுதான் வீட்டை விட்டு ஓடி வரக்காரணமா?
அவன் இப்படி வாயாற்; கேட்கவில்லை ஆனால் அவனின் முகபாத்திலிருந்து பல கேள்விக்கணைகள் அவளைத் தாக்கின.
‘நான் ஒ லெவல் படித்திருக்கிறேன். வேலை செய்து பிழைக்கமுடியும்,ஏன் நான் ஏன் எனக்குப் பிடிக்காத ஒருத்தனுடன் மாரடிக்கவேண்டும்,வாழ்க்கை முழுதும் என்னவென்று பிடிக்காத மனிதனுடன் வாழ்வது?’அவள் அவனுக்குத் தன் நிலையை விளங்கப் படுத்துகிறாள்.
அவள் சாப்பாட்டுக்காசு கொடுக்கத் தனது கைப்பையைத் திறந்தாள்.
அவன் வேண்டாம் என்று சைகை செய்தான். அவளுக்குத் தர்மசங்கடமாவிருக்கிறது. அவளது வாழ்க்கையில் இதுவரை யாரிடமும் இரவலாகச் சாப்பிட்டது கிடையாது. அவள் பிடிவாதமாப் பணத்தை எடுப்பதை அவன் தடுக்கிறான். பக்கத்து மேசையில் இருந்தவர்கள் இவர்களின் தர்க்கத்தை வேடிக்கை பார்க்கிறார்கள்.’புதுச் சோடிபோலும்’ என்று தங்களுக்குள் முணு முணுத்துக் கொள்கிறார்கள்.
இருவரும் வெளியில் வந்தபோது சன நடமாட்டம் கிட்டத் தட்ட வெறுமையாகவிருந்தது.
‘எங்கே இருக்கிறோம்?’
அவன் அந்த இடத்திலிருந்து பிரிந்தால் என்ன பண்ணுவது என்ற அவளுக்குத் தெரியாது. தூரத்தில் ஒரு போலிசார் இவர்கள் பக்கமாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்.
‘ அந்தப் போலிஸ்காரன் ஏதும் கேட்டால் நான் உனது போய்பிரண்ட என்று சொல்’ அவன் குரலிற் கடுமையான தொனி அவளைத் திடுக்கிடப்பண்ணுகிறது.
‘என் பெயர் கொலின் ஹில். உன் பெயர் என்ன?’
இவனை எனது போய் பிரண்ட என்று சொல்வதா?
அவள் மிரண்டு போய் அவனைப் பார்க்கிறாள்.’இளம் பெண்கள் பிக்கடிலி சேர்க்கஸ் பக்கம் தனியாக இரவில் நடமாடினால் போலிசார் பல கேள்விகளைக் கேட்பார்கள்..உன் பெயர் என்ன?’ அவன் குரலிற் கடுமை.
உஷா தடுமாறுகிறாள். போலிசார் இவர்களைப் பார்த்தபடி வந்து கொண்டிருக்கிறார்.
‘என் பெயா உஷா’அவள் குரல் நடுங்குகிறது.
இவர்களை நோக்கி வந்த போலிசார் கொலினை ஏற இறங்கப் பார்த்து விட்டு நகர்கிறார்.
‘இந்தப் போலிசாரில் பலர் இனவாதிகள். கறுப்பு நிறத்தவர்களையோ,கலப்பு நிறத்தவர்களையோ இந்த வெள்ளை நிறப் போலிஸ்காரர்களுக்குப் பிடிக்காது.எப்போது என்ன சாட்டுப் போக்குச் சொல்லி எங்களைப் பிடித்து அடைக்கலாம் என்று திரிகிறார்கள்.’ கொலின் பொரிந்து தள்ளுகிறான்.
‘அது சரி இப்போது என்ன செய்வது?’ அவள் பயத்துடன் அவனைக் கேட்கிறாள்.
”ம் ம் உனக்கு அந்த இடம்; பிடிக்குமோ தெரியாது.எனக்குத் தெரிந்த இடமொன்றிருக்கிறது.அவ்வளவு வசதியான இடமில்லை. இந்த நேரத்தில் வசதியான இடங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ அவன் குரலிற் தயக்கம்.
‘எனக்குப் பிடிக்குமா என்பது பிரச்சினையில்லை.பிளிஸ் என்னை அந்த இடத்திற்குக் கூட்டிக்கொண்டு போங்கள்.’அவள் கெஞ்சுகிறாள்.
அவன் கொஞ்ச நேரம் யோசனையிலிருப்புதுபோல் பாவனையிலிருந்து விட்டு,’கனதூரம் போகவேணும்,,இடமிருக்குமா என்று போன்பண்ணிப் பார்த்து விட்டுப்போனால் நல்லது ஏன் சும்மா போய் அலையவேண்டும்?’
அவன் பக்கத்திலிருக்கும் டெலிபோன் பூத்துக்கள் நுழைகிறான்.
‘எவ்வளவு நல்ல மனிதன்,இப்படி ஒரு அபலைப் பெண்ணுக்கு உதவி செய்யும் மனப்பான்மை எத்தனைபேருக்கு வரும்?’ அவள் நன்றியுணர்வுடன் யோசிக்கிறாள்.
உஷாவின் பெற்றோர் ஒரு நாளும் எந்தக் கறுப்பு மனிதர்களுடனும் உறவு வைத்துக் கொள்வதில்லை.’அவர்கள் எங்களைப் போல புத்திசாலிகளல்ல, அவர்களின் பழக்க வழக்கங்கள் வித்தியாசமானவை.’ எனறெல்லாம் பல விடயங்களை அவளுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
‘இப்போது தெரிகிறது யார் நல்ல பழக்க வழக்கமுள்ளவர்கள் என்று’ உஷா தனது பெற்றோரை மனதுக்குள் வைது கொள்கிறாள்.
‘முன்பின் தெரியாதவனை எனது தலையிற் கட்ட நினைத்த பேற்றோரா அல்லது முன்பின் தெரியாத எனக்கு உதவி செய்யும் இந்தக் கலப்பு நிறத்தவனா நல்ல மனிதர்கள்?’ அவனில் உள்ள நன்றியால் அவள் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது.
கொலின் திரும்பி வருகிறான்.’உம்முடைய அதிர்ஷடம், ஒரு இடம் காலியாகவிருக்கிறதாம்,ஒன்றிரண்டு நாட்களுக்கு நீர் அங்கு நிற்கலாமாம்’ கொலின் சொன்னதும் அவள் மகிழ்ச்சியடைகிறாள்.
இப்போதுதான் ஒரு புன்னகைக் கீற்று அவளின் அழகிய இதழ்களிற் தோன்றி மறைவதை அவன் ரசித்தான்.
அவர்கள் nகுhஞ்ச தூரம் நடந்ததும் ஒரு டாக்ஸி கிடைத்தது.
டாக்ஸி ஓடிக்கொண்டிருக்கிறது.தெருவில் ஒன்றிரண்டு பெண்கள் ஆண்களின் அணைப்பிற் போய்க் கொண்டிருக்கிறார்கள்.’இவர்களில் எத்தனைபேர் என்னைப்போல் வீட்டை விட்டு ஓடிவந்தவர்கள்?
‘ஏன் கலாச்சாரத்தையம் குடும்பத்தையும் நம்பும் எங்கள் போன்ற பெண்களுக்கு இந்த நிலை வருகிறது?
அன்று ஒரு நாள் உஷாவின் சினேகிதி ஒருத்தி, குடும்பப் பிரச்சினைகளில் வீட்டை விட்டு ஓடிப்போகும் இந்திய இளம் பெண்களைப் பற்றி டெலிவிஷனிற் காட்டியதாகச் சொன்னாள், அவைகளால் என்ன பிரயோசனம்? கலாச்சாரம் என்ற பெயரில் எத்தனையோ பெண்கள் எப்படியான இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்று எத்தனைபேருக்கும் தெரியும்?
‘கலாச்சாரத்தின் பெயரில் நடக்கும் பல தரப்பட்ட கட்டாயக் திருமணங்கள் பற்றி எத்தனைபேருக்கத் தெரியும்? இவர்களிடம் என்ன கேட்டேன்? எனக்குக் கல்யாணம் வேண்டாம் என்னைப் படிக்க விடுங்கள் என்றுதானே கேட்டேன்? எனது உணர்ச்சிகளை ஏன் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை?ஏன் என்னை உணர்ச்சியற்ற ஜன்மமாக நினைக்கிறார்கள்?
‘ உஷா இதுதான் அந்த விடுதி. போனில் எல்லாம் பேசியிருக்கிறேன்.வேலைக்குப் போகும் யோசனையை விட்டு விட்டு ஒன்றிரண்டு நாட்கள் ஓய்வெடுத்தால் நல்லது.நான் கெதியில் வந்து உன்னைப் பார்க்கிறேன்.’
கொலினின் அனபுக்கு நன்றி சொல்லி விட்டு அவள் உள்ளே செல்கிறாள். அடுப்பிலிருந்து தப்ப நெருப்பிற பாய்ந்தது தெரியாத பெண்மை தனது புது உலகத்தில் காலடி எடுத்து வைக்கிறது.
‘என்ன இரண்டு மூன்ற கிழமையாகப் பழைய சரக்குகளையே பொறுக்கிக கொண்டுவருகிறாய்? இன்னும் இரண்டு நாளையில் ஒரு அரேபிய பணக்காரன் வருகிறான் தனக்கு ஒரு வேர்ஜின் வேண்டுமென்று சொல்லியிருக்கிறான்.பிடித்துக் கொடுத்தால் சில நூறு பவுண்ஸ்கள் கிடைக்கும்’ கொலினின் ‘வியாபாரத் தோழன்’ இன்று பின்னேரம்தான் கொலினுடன் இப்படிப் பேசிக் கொண்டிருந்தான்.
உஷா என்ற புது மலரால் இன்னும் சில நாட்களில் அவர்களுக்குச் சில நூறு பவுண்ட்ஸ் பணம் கிடைக்கும்!
லண்டன் 1973–
வீரகேசரி இலங்கை பிரசுரம்—27.11.1994— (யாவும் கற்பனையே)
(இக்கதை நாற்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவலிருந்த ஆசியநாட்டுப் பெண்களின் எதிர்காலப் பிரச்சினையைப் பற்றி எழுதியது. இன்றைய நிலையில் 2012லிருந்து கட்டாயக் கல்யாணங்கள்,மனித உரிமை மீறலான குற்றமாக்கப் பட்டிருக்கிறது. ஆப்படித் தங்கள் குழந்தைகளைக் கட்டாயக் கல்யாணம் செயயப் பண்ணும்; பெற்றோர் சிறைத்தண்டனை காத்திருக்கிறது.)