கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 5,377 
 

நான் விமான நிலையத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன்.

‘அமெரிக்காவிலிருந்து வெடி வர போகின்றதா..? இடி வர போகின்றதா..?’- என்று எனக்குள் கலக்கம்.

இப்படி ஏடாகூடமாக ஏதாவது நடக்குமென்று எனக்கு முன்பே தெரியும்.

அண்ணன் பையன் அமெரிக்காவில் பொறியியல் படிப்பு படிக்கின்றான். தங்கை பெண் இந்தியாவில் மருத்துவம் படிக்கிறாள். உறவு முறையை வைத்து இருவருக்கும் முடிச்சுப் போட்டுவிட்டார்கள். நிச்சயதார்த்தம் செய்து விட்டார்கள்.

அதுவும் எத்தனை வருடம்…? மூன்று வருடங்கள் தள்ளி திருமணம்.!!

பையனும், பெண்ணும் பெரிய படிப்பு படிக்கிறார்கள். அழகு, அந்தஸ்த்துகளில் குறைவில்லை. உறவு விட்டுப் போய்விடக்கூடாது. தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து பத்துகளைத் தங்கள் வாரிசுகளே ஆள வேண்டும் என்று திட்டமிட்டு… அங்கேயும், இங்கேயுமான பையன், பெண்ணிற்குச் சேதி சொல்லி, சம்மதம் வாங்கி…. வீட்டில் ஜாம் ஜாமென்று நிச்சயத்தை முடித்து விட்டார்கள்.

திருமணம் இவ்வளவு கால இடைவெளி என்றதும் எனக்குச் சொரக்கென்றது. மாப்பிள்ளையின் மைத்துனன் உயிர் நண்பன். எல்லோருமே எனக்கு வேண்டியப்பட்டவர்கள்.

அதனால்…இவனைத் தனியே இழுத்துக் கொண்டு வந்து , …

“என்னடா இப்படி பண்ணி இருக்கீங்க….?” கேட்டேன்.

“என்ன…?” அவன் புரியாமல் பார்த்தன்.

“இ…இடைவெளி…!” இழுத்தேன்.

“அதுக்கென்ன….? ”

“இந்த மூன்றாண்டு கால இடைவெளியில் யாருக்கோ ஒன்று என்றால் என்ன பண்ணுவீங்க…? இல்லே, யாரோ ஒருவர் திசை மாறிட்டா என்ன செய்வீங்க…?” என்றேன்.

“அதெல்லாம் நடக்காது என்கிற நம்பிக்கைதான். நம்பிக்கைதானே வாழ்க்கை..!” என்றான்.

பேசாமல் அவனைப் பார்த்தேன்.

“நடராஜ் ! நாம ஏன் எதிர்மறையான யோசிச்சு, நினைச்சு குழம்பனும்..? சாதகமாகவும் நினைச்சுப் பார்த்துச் சந்தோசப் படலாம். இப்போ நிச்சயம் செய்த ஆணும், பெண்ணும் தாலி கட்டாத கணவன் மனைவி. கட்டிப் பிடிக்க முடியாத காதலர்கள். நெருங்கிப் பழகும் அளவிற்கு நிறைய பேசலாம். கை பேசி வாட்ஸ்சப்பில் கொஞ்சிக் குலவலாம். ஆனால் தொடமுடியாது. காதலிக்கலாம். கை விட முடியாது. திருமணம் வரை இவர்கள் காதலித்துக்கொண்டே இருக்கலாம். திருமணம் முடிக்கும் காலம் வரை மனம் விட்டுப் பேசி தங்கள் குறைகளை ஒதுக்கி செதுக்கி….வாழ்க்கையில் நல்ல கணவன் மனைவியாக வாழலாம். இன்னும் சொல்லப் போனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்படித்தான் நிச்சயம் செய்து திருமணம் முடிக்கணும்ன்னு என் மனசுக்குப் படுது. மூணு வருச காதல் சுவையாகவும் இருக்கும். ஒருவருக்கொருவர் குறை மாறி வாழ்க்கை ருசிக்கும்.” நண்பன் கனவில் மிதந்து சொன்னான்.

இவன் பார்வை எனக்குப் பிடித்திருந்தது. புரிந்தது. ஆனால்… நினைப்பது போல் எதுவும் நடப்பதில்லையே..?!

ஓராண்டிருக்குப் பிறகு சிக்கல் ! !

ஒரு நாள் மணப்பெண் ஜீவிதா என்னைத் தேடிக் கொண்டு அலுவலகம் வந்தாள்.

“என்னம்மா…?” ஏறிட்டேன்.

“ஒ… ஒரு விசயம் மாமா..”

“சொல்லு,..? ”

“வெளியில வாங்க…” எழுந்து அலுவலகத்தை விட்டு நடந்தாள் .

நான் தொடர்ந்தேன்.

பூங்காவில்… நின்றாள்.

“என்னம்மா..? ”

“என் நிச்சயித்த திருமணத்தை நிறுத்தனும்…”சொன்னாள்.

“ஏன்…???” அதிர்ச்சியாய்ப் பார்த்தேன்.

“நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன்..! ”

“ஏய்….!!” அலறினேன்.

“நானும் இவரும் ஒன்னா மருத்துவம் படிக்கிறோம். தினமும் பேசி பழகி காதலிச்சாச்சு…”

“எப்படி எப்படி ஜீவிதா..? நிச்சயம் உன் நினைவில் இல்லையா…? ”

“அது தலை நிறைய இருக்கு. தினம்… நிச்சயம் செய்த பவித்ரன் கை பேசியில் தொடர்பு கொண்டு பேசறார். அதனால் அது மறக்காமல் மூளை நிறைய படிஞ்சிருக்கு. இருந்தாலும் தினம் நாங்கள் ஒன்னா உட்கார்ந்து பேசி, பழகியதால் மனம் இப்படி ரெண்டு பேருக்குமே மாறிப் போச்சு. இனி.. நாங்கள் மறக்கிறது கஷ்டம். மறந்தாலும் வாழறது கஷ்டம். எல்லாத்தையும் நினைச்சுப் பார்த்தால்… நிச்சயம் செய்த திருமணத்தை நிறுத்தி, வெட்டி, நாங்க சேர்றதுதான் சரி. இந்த திருமணத்தை நிறுத்திடுங்க. நீங்க நினைச்சா முடியும்..! ”

“எப்படி ஜீவிதா..? ”

“உங்க நண்பர் காதில் இந்த விசயத்தைப் போட்டு ரெண்டு வீட்டுக்கும் கலாட்டா, வலி , வருத்தம் இல்லாம, எங்களுக்கும் பாதகம் இல்லாம எப்படியாவது நிறுத்திடுங்க. அப்படி முடியலைன்னா… நாங்க எங்க விருப்பத்துக்குத் திருமணம் செய்ய வேண்டி வரும். இது உறுதி !” கறாராகச் சொன்னாள்.

‘இனி எந்த புத்திமதியும் இவர்களுக்கு எடுபடாத விசயம்!’- எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

“சரி. முயற்சி செய்கிறேன்.!”சொன்னேன்.

“முயற்சி வேணாம். முடிங்க..!” சொல்லி அவள் அகன்றாள்.

‘எப்படி முடிக்க..?’ எனக்கு இரவு முழுக்க யோசனை.

அந்த வீடு, பெண் வீடு… எங்கு, எப்படித் தொட்டாலும் சத்தியமாக கலவரம். பேசி முடியாது. எனக்கு புரிந்தது.

நிறைய யோசனைக்குப் பிறகு…

அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளையையே கைபேசியில் தொடர்பு கொண்டு விலாவாரியாக விசயத்தைச் சொன்னேன்.

“உங்க ரெண்டு வீட்டுக்குள்ள எந்தவித கலாட்டாவும் இல்லாம பக்குவமா பேசி அந்த புள்ளைங்களைச் சேர்த்து வை பவித்ரன் !..”வேண்டினேன்.

நிலமையைப் புரிந்து கொண்ட அவன்….

“நான் வந்து கச்சிதமா காரியத்தை முடிக்கிறேன். நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க” சொன்னான்.

இதோ வரவு…

அவன் வரவிற்காக நான் காத்திருப்பு.

சிறிது நேரத்தில் அமெரிக்க விமானம் தரை இறங்கியது.

பயணிகள் கொஞ்சம் கால அவகாசத்தில் தங்கள் பெட்டி, பைகளுடன் பைகளுடன் வெளி வந்தார்கள்.

பவித்ரனும் அப்படி வெளி வந்தான். ஆனால்….அவன் வெள்ளைக்காரப் பெண்ணுடன் கை கோர்த்து வந்தான்.

சிரித்துக் கொண்டே வந்து என்னை நெருங்கியவன்…

“இது டெய்சி. என் மனைவி !” அவளை அறிமுகப்படுத்தினான்.

‘ஓ..! நீயும் பாதை மாறியதால்தான்… வந்து முடிக்கிறேன் சொன்னாயா…?’ பார்த்தேன்.

“நான் இப்படித்தான் இவளை…. என் அப்பா, அம்மா, அத்தை, மாமாவுக்கெல்லாம் அறிமுகப்படுத்தப் போறேன்” சொன்னான்.

“பவி…!!…”

“ஆனா… உண்மையில் இவள் என் மனைவி கிடையாது. என்னோடு படிக்கும் மாணவி. நல்ல தோழி. இந்தப் பிரச்சனையை இப்படித்தான் முடிக்கணும்ன்னு இவளிடம் விபரம் சொல்லி அழைச்சு வர்றேன். சார் ! ஆண் பாதை மாறுவதை இந்த சமூகம், உறவு, சுற்றம், நட்பெல்லாம் சுலபமா ஏத்துக்கும். பெண்ணை ஏத்துக்காது. சங்கடப்படும். அவளை விரோதியாய்ப் பார்க்கும், விரட்டி அடிக்கும். மூணு வருட படிப்பு முடிச்சி இந்தியா திரும்பும்போது இவள் இல்லாமல் திரும்புவேன். கேட்டால்.. விவாகரத்து ஆகிடுச்சு சொல்லுவேன். விருப்பப்பட்டால் இவளையே திருமணம் முடிச்சித் திரும்புவேன். அது காலம் செய்ய வேண்டிய முடிவு. இப்போ காதலர்களை சேர்த்து வைக்கிறது நம்ம கடமை. வாங்க போகலாம்…” நடந்தான்.

என்ன தெளிவான நடை, சிந்தனை! – நான் வாயைப் பிளந்தேன்.

‘இப்போதுள்ள… சின்னஞ்சிறிசுகள் தங்கள் பாதைகளில் சரியாக இருக்கிறார்கள். தவறிருந்தால் திருத்திக் கொள்கிறார்கள், மன்னிக்கிறார்கள், மறக்கிறார்கள். காலம் இவர்களைச் சரியாகவே செதுக்கி இருக்கிறது. சிலரைத்தான் சின்னாப் பின்னப் படுத்தி இருக்கிறது ! – புரிய…நான் மெளனமாக அவர்களைத் தொடர்ந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *