உள்ளம் விரும்பும் உறவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 2,274 
 
 

(2011ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேன்மொழி அலுவலகத்திற்குள் நுழைந்து தன்னுடைய இருக்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மலர்மங்கை எதிர்ப்பட்டாள். 

‘எடிட்டர் ஒன்னை வரச் சொன்னார்ப்பா’ என்ற தகவலைத் தெரிவித்து விட்டு புன்னகை கூட இல்லாமல் சென்றாள். காலையில் எதிர்ப்பட்டவரிடம் காலை வணக்கம் தெரிவிக்கும் பழக்கம் கூட இல்லையே இவளுக்கு என்று நினைத்துக் கொண்டாள். தன்னுடைய பையை மேசையில் வைத்து விட்டு சற்றே அமர்ந்து அன்றைய வேலைகளை காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டாள். ஜன்னல் வழியாகத் தெரிந்த கோயில் கோபுரத்தை மனதால் வணங்கிக் கொண்டாள். 

ஆசிரியரின் அறைக்குச் சென்றாள். குட் மார்னிங் சார் என்றவளைப் பார்த்து நாற்காலியில் அமரும்படி சைகை காண்பித்து விட்டு கைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் ஆசிரியர் அரங்கநாதன். 

கதம்ப மாலை என்னும் வெகுஜனப் பத்திரிகையைப் பல வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருபவர் அரங்கநாதன். அவரே ஆசிரியர் அவரே வெளியீட்டாளர். வயதை எளிதில் கணித்து விட முடியாதபடியான தோற்றம். தேன்மொழி தன்னுடைய கைபேசியின் உயிரோட்டத்தை நிறுத்தி வைத்தாள். 

ஆசிரியர் கைபேசி பேச்சை முடித்துக் கொண்டு தேன்மொழியைப் பார்த்தார். இருவரும் அன்று செய்ய வேண்டிய பணிகள் குறித்துப் பேசினார்கள். அதன் பின்னர் ஆசிரியர் ‘அப்புறம் முத்துக் கிருஷ்ணனனோட நேர் காணலுக்கு ஒங்கள அனுப்பச் சொல்றாரு நாகராஜன்’, என்றார். 

‘அது எதனால்’ என்று கேட்க விரும்பினாள். பார்வையால் கேட்டாள். 

‘முத்துக்கிருஷ்ணனோட மகன் நமக்கு லெட்டர் போட்டிருந்தாரு. அவரோட நேர்காணலுக்கு வர்ற திங்கிட்கிழமை வரலாம்னு எழுதியிருக்காரு. நீங்க மட்டும் போறீங்களா? போட்டாகிராபர் வேணுமா? 

‘இல்ல சார். நான் மட்டும் போதும். சமாளிச்சுக்கறேன். இங்க இருக்கற வேலைகள்… நாகராஜன் சார்தான் அவரோட பேரைச் சொன்னாரு’. 

‘அவர்தான் நாடகச் சிறப்பிதழ் ஐடியா சொன்னரு.’ 

‘முத்துக்கிருஷ்ணனுடன் ஒரு நாள்… அவர் சொன்னதுதான்.. ஆனா’… என்று இழுத்தார் ஆசிரியர். 

‘தெரியும் சார். நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கும் சின்னத் திரைக்கும் போனவங்கள பேட்டி கண்டாகணுமே. திண்டிவனத்துக்கு போய் வயசானவரை பேட்டி எடுக்கத்தான் தேன்மொழி இருக்காளே…’ 

‘என் எதிரேயே இப்படி பேசறீங்களே…’ 

‘ஆமாம் சார். எல்லாரும் ஒங்க முதுகுக்குப் பின்னால் பேசுவாங்க. நான் ஒங்க முகத்துக்கு முன்னாலயே பேசறேன். கண்டிப்பாக இந்த அசைன்மென்ட்டை நான் நல்லா பண்றேன் சார். தேங்க் யூ’. 

தேன்மொழியின் பேச்சில் வெளிப்பட்ட இளமைத் துடிப்பையும் கோபத்தையும் ரசித்தார் அரங்கநாதன். அந்த இளம் பெண் அவருடைய அறைத் கதவைத் திறந்து கொண்டு வேகமாக போவதையே பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் துணை ஆசிரியர் நாகராஜன் அவரது அறைக்குள் நுழைந்தார். அரங்கநாதன் புன்னகை பூத்தார். வியப்பாக இருந்தது நாகராஜனுக்கு. 


‘என்னப்பா திண்டிவனத்துல ஒரு நாளாமே… போறத்துக்கு வண்டி தர்றாங்களா’? என்றாள் மலர்மங்கை. 

தேன்மொழி நிர்வாகத்தை விமர்சித்து பேசுவாள் என்று நினைத்து மலர்மங்கை கேள்வி தொடுத்தாள். வம்பா ? வேலையா? என்றால் பலரும் வம்பையே விரும்புகின்றனர். வேலைக்கு நடுவே வம்பு என்பது இல்லாமல் வம்புக்கு நடுவே வேலை. அவளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்து வாய் திறப்பதற்குள் மலர் மங்கையின் கைபேசி சிணுங்கியது. அவள் அங்கிருந்து நகர்ந்தாள். தேன்மொழி கம்ப்யூட்டரை இயக்கினாள். மின் அஞ்சல் பார்த்தாள்; வேலைகளில் மூழ்கிப் போனாள். 

மதிய நேரம். உணவருந்திவிட்டு இருக்கையில் அமர்ந்தாள். ராஜமாணிக்கம் அருகில் வந்தார். அவளது பார்வையில் ராஜமாணிக்கம் மிகச் சிறந்த உழைப்பாளி அனுபவம்மிக்க இதழாளர், எழுத்தாளர். கதம்பமாலை நிறுவனத்தின் தூணாக இருந்தும் அவர் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. ஊதியம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றி நினைக்காமல் அற்புதமாக பணிபுரிந்து வருபவர் அவர். ராஜமாணிக்கத்திடம் முதுபெரும் நாடகக் கலைஞர் முத்துக்கிருஷ்ணனுடன் நேர்காணல் பற்றி தேன்மொழி கூறினாள். ராஜமாணிக்கத்திற்குத் தெரியாமல் எதுதான் நடக்கும் இந்த அலுவலகத்தில்? 

‘தெரியும்மா. அதுக்காத்தான் அவரைப் பத்தி ஒரு ஆல்பம் தயார் பண்ணேன். அவரைப் பத்தி அந்தக் காலத்தில் வெளிவந்த விமர்சனங்கள் கட்டுரைகள், பேட்டிகள் எல்லாமே இதுல இருக்கு. அவரை மாதிரி பெரியவங்கள பார்க்க போகும்போது ஜாக்கிரதையா பேசுங்க. இளமைத் துடுக்குடன் பேசிடாதீங்க. நானும் கூட வரலாம். இங்க நிர்வாக பொறுப்புல மாட்டிக்கிட்டேனே’ என்றார் அவர். ‘ஒரு நாள் தானே சார் வாங்க. நான் எடிட்டர் கிட்டே பேசறேன்’. 

‘அவராவது என்ன அனுப்புறதாவது? நீங்க போய்ட்டு வாங்க. மலரை வேணா கூட்டிக்கிட்டு போங்க’. 

‘நல்ல ஆளைப் பார்த்தீங்க.’ 

ராஜமாணிக்கம் சிரித்துக் கொண்டே நகர்ந்தார். அவர் தந்த தகவல் தொகுப்பைப் புரட்டிப் பார்த்தாள். ராஜமாணிக்கத்தின் வேலை, அவளை அசர வைத்தது. அவள் பிறப்பதற்கு முன்பு வெளியான பல கட்டுரைகளைத் தேடிப்பிடித்து எடுத்து ஒட்டித் தந்துள்ளார். அவள் எழுந்து நின்று ராஜமாணிக்கம் அமர்ந்திருந்த திசையை நோக்கிக் கும்பிட்டாள். அவரைத் தவிர மற்ற அனைவரும் அவளைப் பார்த்தனர். அவர் வேலையில் ஆழ்ந்திருந்தார். 


அன்று மாலை, தேன்மொழி வீட்டிற்கு வந்தாள். அம்மா உமா தொலைக்காட்சிப் பெட்டியில் மூழ்கிப் போயிருந்தாள். அப்பா பரமசிவம் வீட்டிலும் கோப்புகளை மும்முரமாகக் புரட்டிக் கொண்டிருந்தார். தேன்மொழியின் அம்மா பேராசிரியை. அப்பா மாநில அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அதிகாரி. தேன்மொழி வீட்டிற்குள் வந்ததை இருவரும் கவனித்தனர். அவளுடைய முகத்தில் கோபக் குறி காணப்பட்டதால் இருவருமே அவளிடம் பேசுவதைத் தவிர்த்தனர். தேன்மொழி அறைக்குச் சென்றாள். உடை மாற்றி வெளியே வந்தாள். குளிர்ந்த குடிநீரை கடகடவென்று குடித்தாள். 

‘நான் ஒங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசணும்’ என்றாள். 

அப்பா அவருடைய இடத்தை விட்டு அம்மாவின் அருகில் அமர்ந்தார். 

‘நீங்க பேசறதைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு இல்ல. அதான் பேசணுங்கறா பேசுங்க. பொண்ணுகிட்ட.’ 

தேன்மொழியின் முகக் குறிப்பைக் கண்டு கொள்ளலாமல் கிண்டலாகப் பேச முற்பட்டாள் அவளுடைய அம்மா. 

‘ஒங்க அப்பா யாரும்மா?’ 

‘எங்க அப்பா ஒங்க தாத்தா காலேஜ் புரபசர் என்னை மாதிரியே. உனக்குத்தான் அவர் போட்டோ காமிச்சிரிக்கேனே. நாங்க அக்கா தங்கை எல்லாரும் இருக்கற குரூப் போட்டோவும் காமிச்சிருக்கேனே. நாங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து வருஷக் கணக்காச்சு. ஒரு பேமிலி கெட் டுகெதருக்கு ஏற்பாடு பண்ணனும்’. ‘ஆமாம் அது தான் இப்ப ரொம்ப முக்கியம்’ மகளின் நொடிப்பை பார்த்து அம்மாவுக்கு கோபம் வந்தது. 

‘ஒங்க அப்பா எங்க தாத்தா யாருப்பா?’ அப்பாவைப் பார்த்தாள். 

‘ஒங்க பரம்பரைப் பெருமையைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறா. விவரமா சொல்லுங்க’ டிவியை அணைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சமையலறையை நோக்கி நடந்தாள் உமா. 

‘அவர் ஒரு தமிழ் ஆசிரியர் விழுப்புரத்துல வேலை செஞ்சாரு. எங்க தம்பியோட அங்கதான் இருக்காரு இப்ப’. 

‘அவர் ஏம்பா இத்தனை வருஷமா என்னைப் பார்க்க வரலே?’ 

‘ரொம்பத்தான் ஏக்கம்’ சமையலறையிலிருந்து உமாவின் குரல் ஒலித்தது . ‘திண்டிவனம் போகணும்னு சொன்னியே. ஏன் அங்கல்லாம் அலைஞ்சுகிட்டு. அந்த வேலைய வேறு யாருக்காவது, கொடுத்துவிட வேண்டியது தானே? என்று பரமசிவம் பேச்சை மாற்றிப் பார்த்தார். 

தேன்மொழி புரிந்து கொண்டாள். எதுவும் பேசாமல் தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள். 


ஞாயிற்றுக்கிழமை. முத்துக்கிருஷ்ணன் என்னும் முதுபெரும் நாடகக் கலைஞரை சந்திப்பதற்காக தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள குறிப்புகளை தேன்மொழி எழுதிக் கொண்டிருந்தாள். இவள் வேலையில் மும்முரமாக இருந்ததால் பெற்றோர்கள் பேச்சுக் கொடுக்கவில்லை. தங்கை வசந்தா இவளைச் சிரிக்க வைக்க சீண்டிப் பார்த்து தோற்றுப் போய் டிவியில் ஐக்கியமாகிவிட்டாள். ‘சரியான முசுடுமமா உன் பொண்ணு ‘ தங்கையின் விமரிசனம் இவள் காதுகளில் விழுந்தது. லேப்டாப்பைத் திறந்தாள். நாடகச் சிறப்பிதழில் பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, தெருக் கூத்து ஆகியவற்றை பற்றிய விஷயங்கள் இடம் பெற்றால் நல்லது என்று தன்னுடைய கருத்தை ராஜ மாணிக்கத்திற்கு மின் அஞ்சலில் அனுப்பி வைத்தாள். 

வாசகர்களுக்கு அலுப்புத் தட்டாத வகையில் இவற்றைப் பற்றி எழுதக் கூடியவர்கள் இருக்கிறார்களா என்பது பற்றி தெரிவிக்கவும் என்று உடனே ஆசிரியர் இவளுக்கு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். ராஜமாணிக்கம் அவருக்கு வந்த கடிதத்தை ஆசிரியருக்கு வேகமாக ஃபார்வோர்ட் செய்து விட்டார். ‘ராஜ மாணிக்கம் ரெஃபரன்ஸ் மெடீரியல் வைத்திருக்கிறார். அவற்றைக் கொண்டு மலர்மங்கையை சுவையாக எழுதச் செய்யுங்கள். மலர்மங்கை நாடகச் சிறப்பிதழில் பங்கேற்காமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறாள். பானுமதி என்னும் பெண்மணி பொம்மலாட்டம் பற்றி இணையதளம் நடத்தி வருகிறார். அவரது பேட்டியைப் போடலாம் என்று ஆசிரியருக்குப் பதில் அஞ்சல் அனுப்பி வைத்தாள். எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் உலா வரும் மலர்மங்கையின் மூளைக்கு வேலை கொடுத்து விட்டோம் என்று நினைத்தாள். 

ஆசிரியரிடமிருந்து பதில் வந்தது ‘இந்தப் பணியை மலர்மங்கை சரியாகச் செய்வார் என்பது சந்தேகேமே. ஃப்ரீலான்ஸ் ரைட்டர் பெயரைக் குறிப்பிடவும்’. 

‘வங்கி வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் திறம்பட செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர் தீபக் ஆனந்தன் இப்பணிக்குப் பொருத்தமானவர்’ என்று பதில் அனுப்பினாள் தேன்மொழி. யாரிடம் என்ன வேலை வாங்க வேண்டும் என்ற நிர்வாகவியலை நன்கு அறிந்திருக்கிறார் ஆசிரியர் என்று நினைத்துக் கொண்டாள். மலர் மங்கை வேலை செய்யாமலே வேலை பார்க்கும் கலையைக் கற்று வைத்திருக்கிறாள் என்றும் நினைத்துக் கொண்டாள். 


‘என்னங்க’ என்றாள் மாலினி. 

‘சொல்லு’ என்று குரல் கொடுத்தார் அவளது கணவர் சேனாதிபதி. ‘சாப்பாடு டைனிங் டேபிள்ல வைச்சிருக்கேன். மீதி வைக்காம சாப்பிடுங்க நான் ஆபீசுக்குக் கிளம்பறேன். ஒங்க அறையிலிருந்து வெளியே வந்து வீட்டைப் பார்த்துக்குங்க’ என்று கூறிவிட்டு விடுவிடுவென்று புறப்பட்டாள் மாலினி. தன்னுடைய அறையிலிருந்து கூடத்திற்கு வந்தார் சேனாதிபதி. ‘செல்போன் எடுத்துக்கிட்டியா’. ‘எடுத்துக்கிட்டேன். இதோ ஒங்க அசிஸ்டன்ட் வந்துட்டாரு’ வாசலிலிருந்து மாலினியின் குரல் ஒலித்தது. 

‘குட் மார்னிங் பாஸ்’ என்றபடியே உள்ளே வந்தான் அவரது உதவியாளன் ஹனுமந்தையா. 

‘பாஸ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும்.’ 

‘என்ன பணம் வேணுமா? அவ ஏடிஎம் கார்டை கொடுத்துட்டுப் போகலியே!’ 

‘எனக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் குடுங்க.’ 

‘இந்த வேலைக்கு என்ன குறைச்சல்?’ 

‘குறைச்சல் என்னங்கறது உங்களுக்குத் தெரியாதா?’ 

‘எந்த ஆபீஸ்ல பாசே ஒனக்கு காபி போட்டுத் தருவாரு?’ 

‘எல்லா ஆபீஸ்லயும் சம்பளம் தருவாங்க பாஸ்.’ 

‘உன் கிட்ட இருந்தா என்ன என்கிட்ட இருந்தா என்ன?’ 

‘இது கேட்டு கேட்டு புளிச்சு போச்சு. சரி இன்னிக்கு எனக்கு என்ன வேலை?’ 

‘இன்னிக்கு ஷில்பா அட்வர்டைசிங் போய் அவங்க கம்பெனி பத்திய ஃபினான்சியல் டீடெய்ல்ஸ் வாங்கிட்டு வா.’ 

‘ஏன் அவங்க கிட்ட கடன் வாங்கப் போறீங்களா?’ 

‘நான் மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ங்கறதை மறந்துடற நீ. நான் அவங்க கம்பெனியோட வளர்ச்சிக்காக ஆலோசனைகள் சொல்லனும். வாங்கிட்டு வா.’

கைபேசி ஒலித்தது. ‘வணக்கம் சேனாதிபதி பேசறேன்.’ 

‘சார். கதம்பமாலை பத்திரிகையிலிருந்து பேசறேன்.’ 

‘சொல்லுங்கம்மா. என்னுடைய பேட்டி வேணுமா?’ 

‘இல்ல சார் எங்க எடிட்டர் பேசறார்.’ ‘நான் அரங்கநாதன் பேசறேன். என்னுடைய ஆபீசுக்கு வர முடியுமா? நான் உங்களைச் சந்திக்கணும்.’ 

‘இன்னிக்கே இப்பவே கிளம்பி வரேன்.’ 

‘நன்றி.’ 

‘ஹனுமந்தையா. என்னை சாதாரணமா நெனச்சியே. பெரிய மனுஷங்க என்னை தேடி வர்றாங்க. மயிலாப்பூர்ல கதம்பமாலை ஆபீஸ் இருக்கு, ஷில்பா அடவர்டைசிங் ஆபீஸும் அங்கதான் இருக்கு. நான் போய்ட்டு வந்துடறேன். நீ வீட்ல கிரிக்கெட் பார்த்துக்கிட்டு இரு.’ 

‘பாஸ். நானும் வர்ரேன். கதம்பமாலையில் கண்ணம்மா பதில்கள் நல்லா எழுதறாங்களே. அந்த மேடத்தை பார்க்கணும்.’ 

‘கண்ணம்மா மேடம் இல்ல சார்.’ 

‘அப்ப நான் கிரிக்கெட் பார்க்கறேன். எனக்கு வேலை இருக்கற மாதிரி ஒரு வேலை பாருங்க’. 

சேனாபதி கதம்ப மாலை அலுவலகத்திற்குள் நுழைந்தார். ஆசிரியர் இவரைப் பார்த்து விட்டு அறையிலிருந்து வெளியே வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் கை குலுக்கிக் கொண்டு அமர்ந்தனர். குளுகுளு அறை. ‘சேனாதிபதி ஒங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். என்ன பருகுவீங்க?’ 

‘டீயே கொடுங்க’. 

‘இவ்வளவு பெரிய நிர்வாகவியல் புலி ஜீனியஸ் ஏன் எந்த கம்பெயினியிலும் நிரந்தரமா இருக்க முடியல?’ 

‘எந்த கம்பெனிக்கும் கொடுத்து வைக்கல’ அரங்கநாதன் முகத்தில் புன்னகை. 

‘ஒங்களுக்கு என்ன வயசு இருக்கும்?’ 

‘இதை போன்லய கேட்டிருக்கலாமே?’ என்றார் சேனாதிபதி. ஆசிரியர் சிரித்தார். 

ஓர் இளைஞன் கதவைத் தட்டி விட்டு இரண்டு தேநீர் கோப்பைகளை மேசையில் வைத்துவிட்டுச் சென்றான். ஆசிரியர் ‘எடுத்துக்கங்க’ என்றார். 

‘சரி நான் விஷயத்துக்கு வர்றேன்’ என்று ஆசிரியர் பேசத் தொடங்கினார். ‘என்னோட ஸ்டாஃப் தேன்மொழின்னு பேர். கடந்த திங்கள் கிழமை முந்தா நாள் பிரபல நாடகக் கலைஞர் முத்துகிருஷ்ணனை பேட்டி எடுக்க திண்டிவனம் போனாங்க. இரண்டு நாளா தகவல் இல்லை. அவங்க அப்பா அம்மா என்னைத் துளைச்சு எடுக்கறாங்க. அந்தப் பெண்ணோட செல்போனும் ஆஃப்ல இருக்கு’. ‘நான் என்ன பண்ண முடியும்? நேர்காணல் காணப் போனவங்க காணோம்னு போலீஸ்ல சொல்லுங்க. இல்ல தனியார் டிடெக்ட்டிவ் இருக்காங்க. அவங்ககிட்ட சொல்லுங்க. இவ்வளவு பெரிய நிர்வாகம் நடத்தறிங்க. என்னை மாதிரி ஒத்தை ஆள் என்ன பண்ண முடியும்?’ 

‘முறைப்படி என்ன செய்யணுமோ அதை எல்லாம் செஞ்சுகிட்டுத்தான் இருக்கோம். ஒங்கள மாதிரி பக்குவமான ஒருத்தர் இதுல இறங்கினா நல்லது நடக்கும்னு நான் நெனக்கறேன்’. 

‘ஆனை அம்பு படை எல்லாம் உள்ளவங்க சாதிக்க முடியாததை நான் சாதிக்க முடியுமா? சரி நீங்க பெரிய மனுஷர். உங்களுக்காக ஒத்துக்கறேன். மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் துப்பறியும் சாம்பு ஆக முடியுமான்னு முயற்சி பண்றேன். அவங்க புகைப்படம் கொடுங்க. செல் நம்பர் கொடுங்க. அந்த சீனியர் நாடக நடிகர் வீட்ல விசாரிச்சிங்களா?’ 

‘அங்க வரலைன்னுதான் சொல்றாங்க’. 

‘எப்படி போனங்க. ஆபீஸ் கார்லயா?’ 

‘இல்ல அன்னிக்கு ஆபீஸ் கார் எல்லாமே பிசியா இருந்துச்சு…’ 

‘அந்த லேடி நான் பஸ்லேயே போறேன்னு கோபிச்சுகிட்டு பஸ்லயே போய்ட்டாங்க.’ 

‘சரியா சொல்லிட்டீங்க இந்தாங்க. இதுதான் தேன்மொழி போட்டோ. அவங்க செல் நம்பர். இது முத்துக்கிருஷ்ணன் வீட்டு முகவரி போன் நம்பர்.’ 

சரி நான் ஒங்க நேரத்தை வீணாக்க விரும்பல. இந்த பணிக்காக எனக்கு… ‘உங்களுக்கு ஃபீஸ் கண்டிப்பா தருவேன். முன் பணமா வேணும்னாலும் தரேன்.’ இருக்கட்டும். வேலைய முடிக்காம நான் வாங்கறதில்ல. வரேன்.’ 

‘நன்றி’ என்றார் ஆசிரியர். 

அடுத்த நாள், சேனாதிபதியும் ஹனுமந்தையாவும் மயிலாப்பூர் குளக்கரை அருகில் இந்தியன் வங்கி வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணி. வெய்யில் கடுமையாக இருந்தது. 

‘பாஸ். இங்க வாங்க நிழல்ல நில்லுங்க. சீனியர் சிட்டிசனா இப்படி வெய்யில்ல நிற்க வெச்சுட்டாரே அந்த தீபக்’ …என்றால் ஹனுமந்தையா. 

‘சீனியர் சிட்டிசனா’ … முறைத்தார் சேனாதிபதி. 

‘இல்ல… சீனியர் பர்சன்னு சொல்ல நெனச்சேன்… அக்கா ஒங்கள தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. அதனால தான் காணாமல் போனவங்கள் தேடற வேலையை இழுத்துப் போட்டுக்கிறீங்க. மீடியாக் காரங்க எல்லார் கண்லயும் விரலை விட்டு ஆட்றாங்க. அவங்க ஆள அவங்களால கண்டுபிடிக்க முடியலன்னா எங்கேயோ உதைக்குது பாஸ்’. 

‘சரி பேசிக்கிட்ட வேர்க்கடலை காகிதத்தை பேங்க் வாசல்ல போடறே. குப்பைத் தொட்டியில போட்டுட்டு வா. மதியம் உனக்கு சாப்பாடு கிடையாது. அதான் இவ்ளோ வேர்க்கடலைய சாப்பிட்டுட்டேயே. வயித்துக்கு ஓய்வு கொடு’. 

தீபக் ஆனந்தன் பைக்கில் வந்து சேனாதிபதி அருகே நின்றான். 

‘என்ன தீபக். சார் என்ன நம்மள மாதிரி யூத்தா? எவ்வளவு நேரம் வெய்யில்ல நிற்பாரு.’ ஹனுமந்தையா கேட்டான். ‘சாரி சார். பேங்க்ல வேலை ஜாஸ்தி’ என்றான் தீபக். 

‘நீங்க பேங்க் வேலையைத் தவிர மத்த வேலை தான் பார்க்கதீங்கன்னு பரவலா பேசிக்கறாங்க’, என்றார் சேனாதிபதி. 

‘ஆமாம். சார். நான் பத்திரிகையில எழுதறேன். விளம்பரங்கள் எழுதறேன் மேடை நாடகம் எழுதறேன். சினிமா வம்பு பேட்டி எல்லாம் எழுதறேன்.’ 

‘இன்னும் டிவி சீரியல் எழுதப் போகலை நடிக்கப் போகலேன்னு நெனக்கறேன்.’ ‘நேரம் கிடைக்கறப்ப பேங்க வேலையும் பார்க்கறேன்.’ 

‘சரி சரி. இதே மாதிரி எல்லார் கிட்டயும் சொல்லிடாதீங்க. புகார் போய் அதனால் உங்க பேங்க் வேலை போயிடப் போவுது.’ 

‘போனால் என்ன சார். நாம மூணு பேரும் சேர்ந்து பிசினெஸ் ஆரம்பிச்சுடுவோம்’ ‘சார் பிசினெஸ் ஐடியாஸ்தான் கொடுப்பாரு. பிசினெஸ்ல இறங்கறது அவர் பிசினெஸ் இல்ல. மூணு பேர் ஒண்ணாபோகக் கூடாதுன்னு சொல்லுவாங்க’ என்று ஹனுமந்தையா இடையில் வார்த்தைகளைக் கொட்டினான். 

‘சரி சொல்லுங்க. எதுக்கு என்னைப் பார்க்கணும் சொன்னீங்க. நான் அவசரமா..’ ‘மறுபடியும் ஆபீசுக்கு போகணுமா? 

‘இல்ல நடிகை மோகனாவை ஏவி எம்ல பேட்டி எடுக்க போகணும்.’ 

‘சார். நானும் இவரோட போய்ட்டு வர்றேனே’ என்றான் ஹனுமந்தையா. ‘வேலைய ரிசைன் பண்ணிட்டு அவரோட போய்ட்டு வரலாம்.’ 

‘வேணாம் சார். நான் அவர் எழுதற பேட்டிய பத்திரிகைல படிச்சுக்கறேன்’. 

‘தீபக். தேன்மொழி காணாமல் போய் இன்னியோடு நாலு நாள் ஆயிடுச்சு. அவங்க அப்பா அம்மா தங்கச்சி எல்லோரும் கலங்கி போயிருக்காங்க. ஏன் அந்தப் பொண்ணு இப்படி பண்ணிச்சு. ஏதாவது காதல் விவகாரமா இருக்குமோ?’ சேனாதிபதி கேட்டார். 

‘அந்தப் பொண்ணு ரொம்ப கெடுபிடியான பொண்ணு. அபூர்வமா சிரிக்கற பொண்ணு. ஆனா சின்சியரான பொண்ணு. என்ன தடை வந்தாலும் எடுத்த வேலைய முடிக்காமல் விடாது. எனக்குத் தெரிஞ்சு அந்தப் பொண்ணு காதல் வலைல விழல’ என்றான் தீபக். 

‘உங்க மீடியா வட்டாரத்துல என்ன பேசிக்கறாங்க?’ 

‘கதம்பமாலைல அவங்களோட உழைப்புக்கு அங்கீகாரம் இல்லன்னு சொல்றாங்க. நிர்வாகத்தை மிரட்ட இது மாதிரி நடவடிக்கையில் இறங்கி ஏதோ சிக்கல்ல மாட்டியிருக்காங்கன்னு நெனக்கறேன்.’ 

‘சரி அவங்களோட மற்றொரு செல் நம்பர் வைச்சிருக்கிங்களாமே. கொடுங்களேன்’ என்றார் சேனாதிபதி. ‘தெரிஞ்சா நானே பேசியிருப்பனே அவங்ககிட்டே. என்னோட வெல் விஷர் சார் அவங்க. எனக்கு எவ்ளோ புராஜெக்ட் கொடுத்திருக்காங்க. பல்லாங்குழி பத்தி ஒரு ஆராய்ச்சி கட்டுரை வைத்திருந்தேன். யாருமே போடல. கதம்பமாலையிலயும் ரிஜெக்ட் பண்ணாங்க. இவங்க அதை பப்ளிஷ் பண்ண வெச்சாங்க.’ 

‘அப்படிப்பட்ட பொண்ணோட ஆல்ட்டர்னேட் நம்பர் ஒங்க கிட்ட இல்ல…’ 

‘சார் விடுங்க. நான் வரேன். பார்ப்போம். வெய்யில்ல நிற்க வெச்சு பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.’ தீபக் ஆனந்தன் பைக்கில் ஏறி அமர்ந்து சில நொடிகளில் மறைந்து போனான். 

‘பாஸ். இந்த வெய்யில் மீட்டிங்ல என்ன பலன் கண்டோம்?’ ஹனுமந்தையா கேட்டான். 

‘தீபக் ஆராய்ச்சிக் கட்டுரையும் எழுதுவான். சினிமாக்காரங்கள பேட்டியும் எடுப்பான்னு தெரிஞ்சுகிட்டோம் இல்ல?’ 

‘சரி வாங்க வீட்டுக்கு போகலாம்.’ 

‘போய் என்ன பண்ணப் போறோம்?’ 

‘விமலா எங்கே சீரியல் பார்ப்போம்.’ இருவரும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தனர். 


மாலை நேரம். சென்னையிலிருந்து பயணப்பட்டு செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இறங்கினார்கள் சேனாதிபதியும் ஹனுமந்தையாவும். 

‘சார். மழை வரும்போல இருக்கு. திண்டிவனத்துக்குப் போன தேன்மொழிய செங்கல்பட்டில் எப்படி கண்டுபிடிக்க போறீங்க. வெத்திலைல மை தடவி கண்டுபிடிக்கறவங்க யாராவது இங்க இருக்காங்களா?’ ஹனுமந்தையா கேட்டான்.

‘அதைத் தான் செய்யணும்னு நெனக்கறேன். பசிக்குது. வா முதல்ல டிபன் சாப்பிடுவோம் யோசிக்கலாம்’ என்றார் சேனாதிபதி. 

பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்திற்குள் சென்று அமர்ந்தனர். தேவையான சிற்றுண்டியைக் கேட்டனர். ஹனுமந்தையா பேசினான் : 

‘சார். ஆர்டர் பண்ண சிற்றுண்டி வர்றதுக்குள்ள சொல்லுங்க. செங்கல்பட்டுக்கு ஏன் வந்திருக்கோம்? தெரிசஞ்சுக்கலேன்னா மண்டை வெடிச்சுரும்.’ 

‘ஹனுமான். இங்க என்னோட பழைய நண்பர் டாக்டர் கைலாசம் இருக்காரு. நான் சேகரிச்ச தகவலின்படி தேன்மொழி குடும்பம் ரொம்பகாலம் செங்கல்பட்டிலதான் இருந்திருக்காங்க. அப்ப மட்டும் இல்ல, அவங்களுக்கு இப்பவும் குடும்ப டாக்டர் கைலாசம்தான். என்ன யூகம்ன்னா.. திண்டிவனம் பயணப்பட்ட அந்த பொண்ணுக்கு வழியில உடல் சுகவீனம் ஏற்பட்டு இவரோட மருத்துவமனையில சேர்ந்திருக்கலாம்.’ 

‘சரி. அதை குடும்பத்துக்கு தெரிவிக்காம இருப்பாங்களா?’ 

‘அதுல ஏதோ காரணம் இருக்கலாம்’. 

‘தேன்மொழிதான் சொல்லலே. உங்க நண்பர் குடும்ப டாக்டர் கைலாசம் அவங்க அப்பா அம்மா கிட்ட ஒங்க பொண்ணு இங்க சௌக்கியமா இருக்காங்க. கவலைப்படாதீங்கன்னு தகவல் சொல்லியிருக்கணுமே’. 

‘தேன்மொழி ஏதோ திட்டத்துல செயல்படலாம். அவங்க டாக்டர் கிட்ட இப்போதைக்கு சொல்ல வேணாம்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டு இருக்கலாம்’. ‘இதெல்லாம் முழுக்க முழுக்க உங்க யூகம் தான் இல்லையா?’ 

‘ஆமாம்’. 

‘சரி. தேன்மொழி அம்மா அங்க இல்லேன்னா என்ன பண்ணப் போறோம்? ‘நான் தானே யோசிக்கணும் நீ ஏன் கவலைப்படறே. வா போகலாம்’. 

உணவகத்திலிருந்து வெளியே வந்தார்கள். ஹனுமந்தையா மாலை நாளிதழை வாங்கினான். 

‘நீங்க இன்னிக்கே சென்னை திரும்பியாகணும்’. 

‘ஏன்?’ 

‘ஒங்க நண்பர் தீபக் நடிகைய பேட்டி எடுக்க போன இடத்துல டைரக்டரோட சண்டை போட்டாராம். அதனால இப்ப ஜெயில்ல இருக்காராம்.’ 

‘அடப் பாவமே. பேப்பரைக் கொண்டா பார்ப்போம்.’ 

‘இவங்கள ஜாமீன்ல எடுக்க நீங்கதானே போவீங்க.’ 

‘ஆமா… பாவம்… தீபக் பொறுமையாகத்தான் இருப்பான். ஷூட்டிங் நேரத்துல இவன் போனது பிரச்சினை ஆயிருக்கலாம். சினிமா நிருபர் செய்தி சேகரிக்க பேட்டி எடுக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுல என்ன தப்பு?’ 

‘எங்கயுேம் போகாமலேயே உட்கார்ந்த இடத்துலேந்து எழுதறவங்க இருக்காங்களே. அது மாதிரி இருந்துட்டா கைகலப்பு ஜெயில் கம்பி எல்லாம் பார்க்க வேண்டாமே’.

‘அதிகப்பிரசங்கம் வேணாம்… நீ ஆட்டோவைக் கூப்பிடு’ என்றார் சேனாதிபதி. 


தென்றல் மருத்துவமனையின் வாசலில் ஆட்டோ நின்றது. இருவரும் இறங்கி உள்ளே சென்றார்கள். 

‘சார் ஒங்க ஃப்ரெண்டுக்கு ஒங்கள ஞாபகம் இருக்குமா? போன் கூட செய்யாம வந்துட்டீங்க’. 

‘என்னை பயமுறுத்துறதுக்குன்னே கூட வர்றியா போய் தகவல் சொல்லு.’ 

சேனாதிபதி அங்குள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்தார். சற்று நேரத்தில் டாக்டர் கைலாசம் அவரருகில் நின்றார். நரைத்த தலை. மீசை இல்லா முகத்தை நிறைத்த புன்னகை. 

‘வாங்க சேனாதிபதி.’ 

உற்சாகம் குறையாமல் இருக்கும் டாக்டரைக் கண்டு வியந்தார் சேனாதிபதி. 

‘எப்படி இருக்கீங்க? வாங்க. என் ரூம்ல உட்காருங்க. இதோ என் சன் வந்துட்டாரு. சிவகுமார் இவர்தான் என்னோட ஓல்டு ஃப்ரெண்ட் சேனா. மெட்ராஸிலிருந்து வந்திருக்காரு. நீ ரவுன்ட்ஸ் பார்த்துக்கறியா? நான் பழைய நண்பரோடு பேசிட்டு இருக்கேன்’ என்றார். அவரது மகன் தலையசைத்தான். 

சேனாதிபதி, ஹனுமந்தையாவை டாக்டர் கைலாசத்திற்கு அறிமுகப்படுத்தினார். 

மூவரும் டாக்டரின் அறைக்குச் சென்றனர். 


மறுநாள். பிற்பகல் மூன்றரை மணி. வடபழனி காவல் நிலையம். வழக்குரைஞர் தமிழ்த்தம்பியும் சேனாதிபதியும் காவல் ஆய்வாளருக்காகக் காத்திருந்தனர். ஆய்வாளர் வந்ததும் ஜாமீன் ஆணையைக் காண்பித்து தீபக்கை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆய்வாளர் எதுவுமே பேசாமல் தீபக் ஆனந்தனை விடுவிக்கும்படி உடன் பணி ஆற்றுபவர்களுக்கு சைகையால் ஆணையிட்டார். தீபக் வந்தான். மூவரும் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தனர். 

‘என்ன புள்ளேப்பா நீ. சினிமாக்காரங்களோட போய் கைகலப்புல இறங்கலாமா? தமிழ்த்தம்பி குத்திக் காட்டினார். ‘தமிழ்த்தம்பி விடுங்க. அவரை எதுவும் கேட்காதீங்க. நீங்க ஒங்க வண்டில அவர வீட்ல விட்டுறீங்களா?’ என்றார் சேனா.

‘இல்ல சார். பெரிய புள்ளி ஒருத்தர் முன் ஜாமீன் கேட்கணும்னு சொல்லிகிட்டு இருக்காரு. அந்த வேலைய பார்க்கணும். நீங்க இவரை கூட்டிக்கிட்டு ஆட்டோல போயிடுங்களேன்.’ 

‘சரி. தாங்க்ஸ். வாங்க தீபக் போகலாம்.’ 

‘தேன்மொழி பத்தி ஏதாவது தெரிஞ்சுதா சார்’. தீபக் கேட்டான். 

‘நிறைய தெரிஞ்சுது. அந்தப் பொண்ண சந்திச்சுட்டேன். அரங்கநாதனுக்கும் விஷயத்தை சொல்லிட்டேன். அவங்க பேரன்ட்சுக்கு இப்போதைக்கு சொல்ல வேணாம்னு தேன்மொழி சொல்றாங்க’. 

‘சரி. சார். அவங்க சௌக்கியமா இருக்காங்களே அதுவே போதும்.’ 

‘உங்களுக்கு ஒண்ணு சொல்லட்டுமா? வங்கி உத்யோகம் இருக்கும்போது ஒழுங்கு மரியாதையா அதைப் பார்க்காம எதுலயோ போய் மாட்டிக்கிட்டு வங்கி உத்யோக நேரத்தை வீணாக்கறீங்க. அவஸ்தைப்படறீங்க… ஒங்க மேனேஜரைப் பார்த்துப்பேசி சமாளிச்சு வெச்சிருக்கேன். அவர் மேலிடத்துக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்கறாரு. நாளைக்கே வேலைல சேர்ந்திடுங்க. அப்புறம் ஏதாவது பிரச்சினை நடவடிக்கைன்னு வந்தா பார்த்துப்போம். சினிமா பேட்டி, வம்பு தும்பு, கிசுகிசு எல்லாத்தையும் மூட்டை கட்டி வைங்க வங்கி வேலைல முழு கவனம் செலுத்துங்க.’ 

‘இப்படி எல்லாம் ஆகும்னு தெரியுமா சார். அந்த டைரக்டர் சுகேஷும் நானும் பேராசிரியர் தாமோதரன் நடத்தின நாடகப் பட்டறையில ஒண்ணா இருந்தோம். அவன் அடிச்சதோட நிற்காமல் போலீஸ்லயும் புகார் பண்ணுவான்னு எதிர்பார்க்கல’. என்றான் தீபக். 

‘நீங்க நல்ல எழுத்தாளான இருக்கலாம். சூரத்தனமான நிருபரா இருக்கலாம். நல்ல உத்யோகத்துல இருந்துகிட்டு நிருபராவும் பத்திரிகைக்காரனாகவும் இருக்கணும்னு நெனக்கறது தப்பு. நல்ல பிள்ளயா நல்ல கணவரா நல்ல அப்பாவா நல்ல ஊழியரா இருக்கப் பாருங்கள். இரண்டு குதிரைல சவாரி பண்ண முடியாது. இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்யக் கூடாது. அனுபவம் உங்களுக்கு பாடம் கத்து தந்திருக்கும் . நான் வேற ஏன் லெக்சர் பண்ணனும். வாங்க. போகலாம்.’ 

‘சார். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.’ நீங்க பல தடவை சொன்னிங்க நான் காதுல வாங்கிக்கல. இப்பத்தான் புரியுது. என் மனைவி என்ன சொன்னா?’ 

‘ஒங்கள டின்னு கட்டிடறேன்னு சொன்னாங்க. அந்த நடிகை ஒங்களுக்கு நேரமே தரலைன்னு சொல்றாங்க. நீங்க ஏன் அங்க போனிங்க? அதுவும் அன்னிக்கு பறப்பறன்று பறந்தீங்க’. 

‘சார். அவங்க பி.ஏ.தான் போன் பண்ணி மேடம் ஒங்கள ஏவி. எம்க்கு வரச் சொலறாங்கன்னு சொன்னான். நேபாகும்போது சுகேஷுக்கும் எனக்கும் பேச்சு முத்தி தகராறு ஆயிடுச்சு. ஆனா இந்த நடிகை வேடிக்கை பார்த்தா. நான் தான் வரச் சொன்னேன்னு ஒரு வார்த்தை சொல்லலே. என்ன சார் பேசிக்கிட்டே பஸ் ஸ்டான்ட்டுக்கு வந்துட்டீங்க. ஆட்டோல போயிடலாம் சார். 

‘ஒங்க மனைவி உருட்டுக் கட்டை வெச்சுக்கிட்டு காத்துக்கிட்டு இருக்காங்க.’ ஆட்டோக்காரர் எதிரே அடி வாங்கி சந்தி சிரிக்கணுமா. பஸ்லயே போகலாம் 

‘என்ன சார் இப்படி பயமுறுத்தறீங்க.’ 

‘முன்னாள் நண்பர் இயக்குநர்கிட்ட அடி வாங்குவீங்க. கட்டின மனைவி கிட்ட அடி வாங்க மாட்டிங்களா? பஸ் வருது. வாங்க போகலாம்.’ 


மாலை நேரம். 

அலுவலகப் பணியை முடித்துக் கொண்டு மாலினி வீட்டிற்கு வந்தாள். வீட்டில் அவரது கணவர் இல்லை. ஹனுமந்தையா காணப்பட்டான். நாற்காலியில் அமர்ந்தாள். 

‘என்னப்பா பண்றே?’ 

‘அக்கா… குப்பைகளைத் திறம்பட அகற்றுவது எப்படின்னு ஒரு கருத்தரங்கம் நடத்தறாரு சார். அதற்கான அழைப்பிதழ் வந்திருக்கு. சேர்றதுக்கு பணம் கட்டினவங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பணுமே அதான் முகவரி பார்த்து ஒட்டிக்கிட்டு இருக்கேன்.’ 

‘கருத்தரங்கத்துல பேசப் போறது யாரு? ஒங்க சார் தானா?’ 

‘இதுல நிறைய விஷயம் இருக்கு அக்கா. மக்கும் குப்பை, மக்காத குப்பை எப்படி டிஸ்போஸ் பண்ணணும், எலெக்ட்ரானிக் வேஸ்ட், டயரை எரிக்கறதுனால வர்ற ஆபத்து, குப்பைகளை சாக்கடையில போடறதுனால வர்ற ஆபத்து இப்படி நிறைய விஷயங்களை… ‘

‘ஒங்க சார் அலசப் போறாரா?’ 

‘நிபுணர்களை கூப்பிட்டு இருக்கார். அவங்க அலசி ஆராய்ஞ்சு சொல்லப் போறங்க.’ 

எல்லாரும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பேசுவாங்க. கேட்பாங்க. ஆனா எதையும் யாரும் கடைப்பிடிக்க மாட்டாங்க. ஏதோ ஒங்களுக்கு எல்லாம் பொழுது போகணும்.’ 

‘என்ன இப்படி சொல்லிட்டீங்க. குப்பைன்னு சாதாரணமான நெனக்காதீங்க… அதாவது..’ 

‘அப்பா! நீ இங்கேயே செமினார் நடத்தாதே. போய் ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா.’ 

‘இதோ வர்றேன் அக்கா’. 

ஹனுமந்தையா சமையலறைக்குச் சென்றான். 

சேனாதிபதி வீட்டின் உள்ளே நுழைந்தார். 

‘என்னோட ஆபீஸ் ஸ்டாஃப் நீ வேலை வாங்கலாமா? ஹனுமான் ரெண்டு காபியா போட்டு எடுத்துட்டு வா.’ 

‘ஸ்டாஃப்ன்றீங்க. ஆபீஸ்ன்றீங்க. எது ஒங்க ஆபீஸ்?’ 

‘இதுதான் என்னோட ஆபீஸ் வீடு எல்லாம்.’ 

‘இது நான் வாங்கின வீடு’ 

‘நீ வேற நான் வேறயா’ குழைந்தார் சேனாதிபதி. 

‘சார். நான் இன்னும் ட்யூட்டி முடிஞ்சு போகல்லே இந்தாங்க. காபி ரெண்டு பேரும் எடுத்துக்கங்க’ என்றான் ஹனுமந்தையா. 

‘சின்ன பையன் எதிரே எதுக்கு வழியறீங்க? மாலினி இடித்துப் பேசினாள். அவனும் குழையக் கத்துக்கணும் இல்ல’ என்றார் சேனா. 

‘சரி தேன்மொழி கதை என்ன ஆச்சு. நீங்க சொல்லவே இல்லையே?’ மாலினி கேட்டாள். 

‘அக்கா ஆர்வமாக கேட்கறாங்க இல்ல சொல்லுங்க பாஸ்’ என்றான் ஹனுமந்தையா. 

‘அது வந்து… நான் செங்கல்பட்டுக்கும் போனேன். டாக்டர் கைலாசத்தைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்த உடனே கட்டிப்பிடிச்சுக்கிட்டாரு.’ 

‘போதும். இதையே மூணு நாள்ல நூறு தடவை கேட்டுட்டேன்.’ 

‘மேல சொல்லவா?’ 

‘ஆள விடுங்க. நான் கொண்டு வந்திருக்கிற ஆபீஸ் வேலைய பார்க்கறேன். வெளில போனா சாப்பிட்டுட்டு வராதீங்க. நான் இங்க உங்களுக்காக சமைச்சு வெச்சுட்டு காத்துக்கிட்டு இருப்பேன்.’ 

‘பாருங்க. அக்காவுக்கு ஒங்க மேல எவ்வளவு காதல் அன்பு பரிவு… இப்படிப்பட்ட அன்பான மனைவி இருக்கும்போது பரிமளா வீட்டுக்கு அடிக்கடி நீங்க போகலாமா? பாஸ்’…என்றான் ஹனுமந்தையா. 

‘டேய்.. எதையோ சொல்லி பழி வாங்கிட்டியே. மாலினி. பரிமளா என்னோட கிளையன்ட். அவ்வளதான். அவன் பேச்சை நம்பாதே.’ அவள் அருகில் இருந்த டம்ளரைத் தூக்கி சேனாதிபதி மீது எறிந்தாள். ‘லேசான பொருளை எறியறீங்களே அக்கா’ … என்றான் ஹனுமந்தையா. 

மாலினி சிரித்து விட்டாள்… 


அன்று விடுமுறை நாள். காலை நேரம். சேனாதிபதி நடைப் பயிற்சிக்குப் போயிருந்தார். கூடத்தில் தரையில் அமர்ந்து செய்தித்தாட்களை விரித்துப் படித்துக் கொண்டிருந்தாள் மாலினி. திறந்திருந்த வாசல் பக்கம் யாரோ வந்து நிற்பது போல் தெரிந்தது. திரும்பிப் பார்த்தாள். 

தேன்மொழியின் அம்மா உமா நின்று கொண்டிருந்தாள். 

‘யாரு நீங்க என்ன வேணும்?’ 

‘என் பேரு உமா தேன்மொழியோட அம்மா. உங்க புருஷன் எங்கே?’ 

‘வெளில போயிருக்காரு. உள்ளே வாங்க. உட்காருங்க.’ 

‘நான் உட்கார்ந்து உறவாட வரலே. என் பொண்ண தேடப்போனவரு பெத்தவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேணாமா? புள்ள பெத்திருந்தா தானே தெரியும் ஒங்க ரெண்டு பேருக்கும் புள்ளையோட அருமை.’ மாலினியால் இந்த வார்த்தைகளைத் தாங்க முடியவில்லை. ஆனால், ஒரு தாயின் மன நிலையைப் புரிந்து கொண்டு மௌனமாக இருந்தாள். 

உமா மீண்டும் குரல் கொடுத்தாள் : 

‘என்னம்மா பேசாம இருக்கீங்க?’ 

சேனாதிபதி வந்தார். ‘நீங்க அவரைத்தானே தேடி வந்தீங்க. இதோ வந்துட்டாரு. அவரையே கேளுங்க. வேண்டாத வேலைய எல்லாம் இழுத்துப் போட்டுக்கிட்டிங்க. அவங்க வந்து பேசக் கூடாதது எல்லாம் போறாங்க. பதில் சொல்லுங்க’ மாலினி கோபத்துடன் பேசினாள். ‘நீங்கதான் சேனாதிபதியா?’ உமாவின் குரல் ஓங்கியது. 

‘வயசானவன்னு பார்க்காம என் பொண்ண கடத்திட்டேன்னு போலீஸ்ல சொல்றேன். அபப்பதான் உண்மைய சொல்லுவே நீ.’ 

‘அம்மா’…சேனாதிபதி பேச முற்பட்டார். 

‘யாரை அம்மான்ற.. நீயே அரைக் கிழவன்..’ 

‘மேடம்… ஒங்க டாட்டர் அவங்களே ஒங்கள வந்து பார்த்து பேசிக்கறேன்று சொல்லியிருக்காங்க.’ 

‘இப்ப வரணும்யா என் பொண்ணு இல்லேன்னா ஒங்க ரெண்டு பேரையும் என்ன செய்வேன்னே தெரியாது.’ 

‘இப்பவே வரணுங்கறாங்க அம்மா. வாங்க தேன்மொழி’, என்றார் சேனாதிபதி. தேன்மொழி மூடிய அறையின் கதவைத் திறந்து வெளிப்பட்டாள். 

‘என்னடி இது. நம்ம வீட்டை விட்டுட்டு இந்த ஆள் வீட்ல வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கே. என்ன ஆட்டம் போடறே. யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கு குடித்தனம் நடத்தறியா? இல்ல இவனையே கட்டிக்கிட்டியா?’ கத்தினாள் உமா. 

‘அம்மா முதல்ல உட்காரு. அவங்கள பத்தி ஏன் தப்பு தப்பா பேசறே. மாலினி மேடம் மன்னிச்சிடுங்க.’ 

‘பரவாயில்லைம்மா. நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. ஏங்க அவங்க பேசிக்கட்டும் வாங்க நீங்க’ என்றாள் மாலினி. இருவரும் அறைக்குள் சென்றனர். உமாவின் முகத்தில் கோபம் நீங்கி கண்ணீர் வெளிப்பட்டது. ஆற்றாமல் அழுத அம்மாவைத் தேற்றி அமர வைத்தாள் தேன்மொழி. 


தேன்மொழியின் வீடு. ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணி. வீடு அமைதியாக இருந்தது. தேன்மொழியின் அம்மா உமா சோபாவில் அமர்ந்திருந்தாள். முகத்தில் இறுக்கம். பரமசிவம் மேசை அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து வழக்கம் போல் கோப்புகளில் மூழ்கியிருந்தார். தேன்மொழியின் தங்கை வசந்தா, காபி கோப்பையுடன் வந்தாள். மேசையில் வைத்தாள். 

‘அப்பா காபி வைச்சிருக்கேன். ஃபைல்லேயே மூழ்கிடாதீங்க. வீட்டு நடப்பையும் கொஞ்சம் பாருங்க.’ 

‘என்னடி வார்த்தை இதெல்லாம்’ உமா பேசினாள். பரமசிவம் மௌனம் காத்தார். 

‘ஆமாம்… அக்கா வீட்டை விட்டுப் போய் ரெண்டு வாரம் ஆகுது. போய் கூட்டிக்கிட்டு வரணும்னு எண்ணமே இல்லையே ஒங்க ரெண்டு பேருக்கும். இடிச்ச புளி மாதிரி இருக்கீங்களே…’ 

‘பொண்ணரசி கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க’. உமாவின் குரல் பரமசிவத்தை உலுக்கியது. 

பரமசிவம் வாய் திறந்தார். 

‘வசந்தா கண்ணு செங்கல்பட்டுல கைலாசம் ஆஸ்பத்திரில இருந்துகிட்டு நமக்கு தகவல் சொல்லாம தவிக்க வைச்சா தேன்மொழி. அவ மெட்ராஸ் வந்தும் வீட்டுக்கு வராம சேனாதிபதி வீட்ல இருக்கான்னு விஷயம் தெரிஞ்சதும் ஒங்க அம்மா ஓடிப் போய் அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தா. வந்த ரெண்டு நாள்லயே நான் ஹாஸ்டல்ல போய் தங்கிக்கிறன்னு கிளம்பிட்டா. நாங்க என்ன பண்ண முடியும்’. 

வசந்தா சீறினாள் : ‘ஏன் அவளை தடுத்து நிறுத்த முடியாதா? அவ என்ன சொன்னா. தாத்தா இந்த வீட்டுக்கு வந்தாதான் நான் இங்க இருப்பேன்னு சொன்னா. அதுல என்ன தப்பு?’ 

பரமசிவம் உமாவைப் பார்த்தார். உமா வசந்தாவை முறைத்தாள். 

‘நீ முறைச்சுப் பார்த்தா நான் ஒண்ணும் சாம்பல் ஆக மாட்டேன். தப்பு உன் பேர்லதான்’ வசந்தா பேசிக் கொண்டே அவளுடைய அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். 

பரமசிவம் வாசற் கதவைத் திறந்து வெளியே வந்தார். இருளாக இருந்தது. படிகளில் ஏறி மொட்டை மாடிக்குச் சென்றார். வானத்தைப் பார்த்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால்… விழுப்புரத்தில் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருந்த உமாவுக்கும் வேளாண்மைப் பொறியியல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்த பரமசிவத்துக்கும் காதல் மலர்ந்தது. நூலகம் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. 

அரசாங்க பணியாளராக இருந்தாலும் கூத்தாடியின் மகனுக்கும் தம் மகளைத் தர மாட்டேன் என்று உமாவின் அப்பா ஒற்றைக் காலில் நின்றார். உமாவின் அக்காமார்கள் கெஞ்சிக் கேட்க, நெஞ்சை அறுக்கும் நிபந்தனையை விதித்தார் அவர். 

பரமசிவம் அவனுடைய தந்தை மற்றும் தம்பிமார்களின் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று உதறி வந்தால் உடனே திருமணம் என்பதே அந்த நிபந்தனை. 

பரமசிவம் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தார். உமாவை ‘சந்திப்பதைத் தவிர்த்தார். சில நாட்களில் தம்பிகளுக்கு பரமசிவத்தின் காதல், நிபந்தனை ஆகிய விவரங்கள் தெரிந்து அப்பாவிடம் கூறினார்கள். பரமசிவத்தின் தந்தை முத்து கிருஷ்ணன், காதலித்த பெண்ணை ஏற்றுக் கொள். நிபந்தனையை ஒத்துக் கொள் என்று பெருந்தன்மையுடன் பரமசிவத்திடம் வலியுறுத்தினார். 

உறவுகளை அறுத்துக் கொண்டு புதிய உறவைத் தேட மாட்டேன் என்று உறுதியாக சொல்லி வந்தார் பரமசிவம். சூதுமதி நிறைந்த உமாவின் அக்காமார்கள், உமா தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி வருகிறாள் என்று பரமசிவத்தின் தம்பி லட்சுமணனிடம் சொன்னார்கள். அவர்களுடைய உத்தி வெற்றி பெற்றது. பரமசிவம் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு திருமணத்திற்கு சம்மதித்தார். சுப நாளில் உமாவைக் கரம் பிடித்தார். வாழ்த்து சொல்ல பெற்றவரும் உற்றவரும் அவர் அருகில் இல்லை. 

தமது நடிப்பாலும் எழுத்தாற்றாலாலும் மேடை நாடக உலகில் கொடி கட்டிப் பறந்து, நற்கருத்துகளைப் பரப்பி ஆயிரமாயிரம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட முத்துகிருஷ்ணன் என்னும் மிகப் பெரிய கலைஞரை உமாவின் தந்தை பேராசிரியர் உலகநாதன், கூத்தாடி என்று முத்திரை குத்தியதும் திருமணத்திற்கு கொடிய நிபந்தனை விதித்ததும் பரமசிவத்தின் நெஞ்சில் முள் போல் உறுத்திக் கொண்டே வந்தது. ஆனால், வெளியே காட்டிக் கொள்ளலாமல், இல்லற தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகிறார். திருமண வாழ்வில் அவருக்குக் கிடைத்த இரண்டு புதல்விகள் இவரது நெஞ்சை நோக்கி இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். நீங்கள் செய்தது சரிதானா? என்று. சூழ்நிலைக் கைதி என்பதை எப்படி இந்தக் குழந்தைகளிடம் புரிய வைப்பேன்?…….. 

சிந்தனை வசப்பட்ட பரமசிவத்தை இளந்தளிர்க் கரம் அன்புடன் தீண்டியது. ‘அப்பா வாங்க சாப்பிடலாம்’ என்றாள் வசந்தா. 


சனிக்கிழமை. மாலைநேரப் பொழுதில் சென்னை தியாகராயநகரில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியின் அரங்கில் டிஸ்லெக்சியா குறைபாடு பற்றிய கருத்தரங்கத்தை சேனாதிபதி ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருந்தார். நல்ல கூட்டம் திரண்டிருந்தது. 

சேனாதிபதி தொடக்கவுரை ஆற்றினார் : 

டிஸ்லெக்சியா பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும்அவசியம். டிஸ்லெக்சியா என்பது சிறுவர் சிறுமியருக்குள்ள மொழி அடிப்படையிலான குறைபாடு. பல குழந்தைகள் தொடர்ந்து படிக்காமல் போவதற்குக் காரணம் இந்த குறைபாட்டை சரி செய்து கொள்ள வழிகாட்டிகள் கிடைக்காததுதான். டிஸ்லெக்சியா என்பதன் பொருள் ஆங்கிலத்தில் Difficulty with words என்பதாகும்… இது பற்றி பல பேச்சாளர்கள் உங்களுக்கு விளக்குவார்கள். அறிந்து கொள்ளுங்கள்.’ அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் பேச்சுகளை உன்னிப்பாகக் கேட்டனர். கருத்தரங்கம் முடிந்ததும் டிஸ்லெக்சியா பற்றிய தெளிவுடன் கலைந்து சென்றனர். எதிரே இருந்த தேநீர் அகத்தில் சேனாதிபதி அமர்ந்திருந்தார். தேன்மொழி அவரை நோக்கி வந்தாள். தேநீர் கோப்பைகள் வந்தன. 

தேன்மொழி தேநீர் பருகிக் கொண்டே பேசினாள்: 

‘நல்ல உபயோகமான கருத்தரங்கம் சார் இது.’ 

‘ஆமாம். புதுசா திருமணம் ஆனவங்க, பெற்றோர்கள்ன்னு நிறைய பேர் வந்திருந்தாங்கம்மா. ஏன் இல்லறத்தில் இணைய போகிற காதல் ஜோடிகள் கூட வந்திருக்காங்க.’ 

‘பீச்சுக்குப் போறவங்களை இங்க வரவழைச்சுட்டீங்களா, பெரிய ஆள் சார் நீங்க.’

‘நீங்களும் ஜோடியா வந்தா மாதிரி தெரிஞ்சுது. இல்ல… நான் தான் சரியாப் பார்க்கலையா…?’ 

‘அதைப் பத்தி அப்புறம் சொல்றேன். எங்க தாத்தா பத்தி நான் எழுதின ஃபீச்சர் படிச்சீங்களா? 

‘நாடகச் சிறப்பிதழ்ல நல்லா வந்திருக்கே முத்துகிருஷ்ணனை பத்தி பேட்டி தகவல் துளிகள்.. ஜமாய்ச்சீட்டீங்க.’ 

‘இரத்தம் இரத்தத்தை அடையாளம் கண்டு கொள்ளும்னு சொல்லுவாங்க அது இதுதான் போலிருக்கே. ஒங்க அப்பா, தாத்தாவப் பத்தி மூச்சு விடாட்டாலும் நீங்க கண்டு பிடிச்சிட்டீங்க.’ 

‘கடவுள் இணைச்சு வெச்சுட்டாரு சார்.’ 

‘நான் திண்டிவனம்போனபோது பயணம் உடல் சுகவீனத்தால தடை பட்டுச்சு. நான் விடறதா இல்லே. மறுபடியும் புறப்பட்டேன். திண்டிவனத்துக்கு போனேன். தாத்தா சித்தப்பா சித்தி எல்லாரையும் சந்திச்சுட்டேன். உணர்ச்சிப்பூர்வமான இருந்துச்சு. இப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா சார்.’ 

‘அப்ப வாங்க ஏதாவது நட்சத்திர ஓட்டலுக்கு போயிடலாம்.’ 

‘நான் நெனக்கறது நிறைவேறிட்டா கண்டிப்பா உங்களுக்கு நட்சத்திர ஓட்டல்ல ட்ரீட்’

‘அப்படி என்ன தான் கனவு?’ 

‘சென்னையில் பெரிய வீட்ல நான் எங்க அப்பா அம்மா தாத்தா சித்தப்பா சித்தி தம்பி வசந்தா எல்லாரும் கலகலப்பா குதூகலமாக இருக்கணும். என்னவரும் அங்கே தான் இருக்கணும்.’ 

‘அது யாரு?’ திரும்பிப் பார்த்தார் சோனதிபதி. 

ராஜ மாணிக்கம் அருகில் நின்று கொண்டிருந்தார். 

‘இவர் தானா? வாழ்த்துக்கள். என்ன… கருப்பு சாயம் பூசி நல்லா டிரஸ் போட்டு இளமையா காமிச்சுக்கணும் நீங்க…’ 

‘எனக்கு அவரோட வெள்ளை மனசு போதும் சார். நீங்க என்னோட பேச்சுல இடையூறு ஏற்படுத்தறீங்க!’ 

‘சரி சொல்லுங்க. ஒங்களவரும் வீட்டோட மாப்பிள்ளையா அங்க இருக்கணும். வசந்தாவோட வருங்காலக் கணவர் சதீஷும் அப்படியே இருக்கணும். இவ்வளவு கூட்டத்திற்கு யார் சமைக்கறது…’ 

‘அதைப் பத்தி உங்களுக்கு ஏன் கவலை?’ 

‘இத்தனை பேரும் ஜேஜேன்னு கல்யாண வீட்ல இருக்கறா மாதிரி எல்லோரும் நெறஞ்ச மனசோட எப்பவும் கலகலப்பா இருக்கணும்… இதெல்லாம் நடத்துட்டா…’ ‘எனக்கு நட்சத்திர ஓட்டல்ல ட்ரீட்டா?’ 

*நீங்க சொல்றத பார்த்தா புதுமணத் தம்பதிகளுக்கு தனியா சந்திக்க நேரம் கிடைக்குமா? சரி. எனக்கு ஏன் அந்த கவலை?’ 

தேன்மொழியின் அம்மா உமா இவர்களைப் பார்த்து அருகில் வந்தாள். 

‘வாங்க மேடம், கருத்தரங்கம் நல்லா இருந்துச்சா…? சேனாதிபதி கேட்டார்.’ ‘நல்லா இருந்துச்சு சேனாதிபதி சார். பல விஷயம் தெரிஞ்சுகிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க. அன்னிக்கு கோபத்துல அப்படி பேசிட்டேன்.’ 

‘பரவாயில்ல மேடம். தேநீர் பருகுவீங்களா? தேன்மொழி, அம்மாகிட்ட பேசுங்க’ என்றார் சேனாதிபதி. உமா தேன்மொழியைப் பார்த்தாள். 

‘தேன்மொழி நானும் எங்க அப்பாவும் செஞ்சது தப்புன்னு நீ பிரிஞ்சு இருந்து எனக்கு புரிய வெச்சுட்டே. வா. நாம போய் தாத்தாவை அழைச்சுட்டு வரலாம். எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்.’ 

‘அம்மா நீதான் பேசறியா? சரி. வா. உடனே புறப்படலாம்.’

‘அம்மா இவரு… ராஜமாணிக்கம் இவரைத் தான்… நான்…’

‘என்னடி பேரைச் சொல்றே… இப்படி… 

‘பேரை சொல்லாம எப்படி அறிமுகப்படுத்தறது…?’ 

‘சரி டேய்.. ராஜமாணிக்கம்னு கூப்பிடாமல் இருந்தா சரி.’ ‘நைசா நீங்க பேர் சொல்லிட்டீங்களே மேடம்’ …என்றார் சேனாதிபதி. 

அனைவருடைய முகங்களிலும் புன்னகை தவழ்ந்தது. 

ராஜமாணிக்கத்தின் கைபேசியில் குறுந்தகவல் ஒலித்தது. வாசித்துப் பார்த்தார். அவரது முகம் மாறியது. 

‘என்ன ஆச்சு மாணிக்கம் என்ன செய்தி?’ சேனாதிபதி கேட்டார். 

‘சார், அதாவது…தேன்மொழி திண்டிவனத்துல உங்க தாத்தா வீட்ல மின் கசிவால தீ விபத்து ஏற்பட்டு அவர் போயிட்டாராம். மத்தவங்க அபாயமான கட்டத்துல இருக்காங்களாம். மலர்மங்கை டிவில நியுஸ் பார்த்துட்டு எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்காங்க..’ என்றார் ராஜமாணிக்கம். தேன்மொழி அதிர்ந்து போனாள். நால்வரும் தேநீர் அகத்தை விட்டு வெளியே வந்தார்கள். தேன்மொழி தன்னுடைய தாயைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டாள். 

சேனாதிபதி இருவரையும் ஆட்டோவில் ஏற்றினார். ராஜமாணிக்கத்துடன் பின் தொடர்வதாகத் தெரிவித்தார். தேன்மொழி தாயிடம் பேசினாள். ‘பார்த்தியா அம்மா. நீ மனசு மாறியும் தாத்தாவோட இருக்க நமக்கு கொடுத்து வைக்கல. நான் ஒரு நாள் அவருடன் இருந்தேன். அது போதும் எனக்கு!’ அவள் குரல் தழுதழுத்தது. உமாவின் கண்களில் கண்ணீர் திரண்டது.

– 2011 ஆம் ஆண்டு எழுதப்பட்டது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *