உள்ளம் உன் வசமானதடி

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2023
பார்வையிட்டோர்: 6,226 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10

ஒரு நாள் மதியம் அவளுக்கு ஃபோன் வந்திருப்பதாக வேலையாள் கூறிய போது எடுத்தால், லிங்கம்தான் பேசினார்.

“மிருணா! பெரிய மாப்பிள்ளைக்கு ஆக்சிடெண்ட் ஆகி, ஆஸ்பத்திரியில சேத்துருக்கோம்மா! நான்தான் கூட இருக்கேன். மீனா பாவம், ரொம்ப அழறா! நீ கொஞ்சம் வந்து அவளை அழைச்சிட்டுப் போறியா? சின்ன மாப்பிள்ளைக்கு இப்பத்தான் ‘செல்’லிலப் பேசினேன்” என்றார் பதட்டத்துடன்.

“நான் உடனே வரேம்ப்பா” என்றவள் எந்த மருத்துவமனை என்று தெரிந்துகொண்டு வைத்தபோது, மீனாவை நினைத்து மனதில் எழுந்த வேதனை, கண்ணீர்த் துளிகளாய்ச் சிதறின.

அவள் அழுவதைக் கண்டு அருகில் வந்த தமிழரசி, “எங்கேருந்து ஃபோன் வந்தது? ஏன் அழறே?” – என்று அவசரமாகக் கேட்டார்.

“அத்தை! எங்க அக்கா வீட்டுக்காரருக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சாம். அப்பாதான் பேசினாங்க அக்காவை நினைச்சா ரொம்பக் கஷ்டமா இருக்கு. நான் போகணும்” கண்ணீருடன் கூறினாள்.

“அப்படியா? அடப்பாவமே… முன்னாடி குழந்தை இறந்தது. இப்ப இப்படி ஒரு கஷ்டம்! நீ உடனே தம்பிக்குப் போன் பண்ணி வரச் சொல்லு “

அவர் கூறும்போதே வாசலில் கார் சப்தம் கேட்டது.

வேகமாக உள்ளே வந்த முகிலன், “அழக்கூடாது மிருணி… தைரியமா இருக்கணும்! வா.. போகலாம்…அம்மா! கணக்குப்பிள்ளை வருவார். திராட்சைத் தோட்டத்துக்கு மருந்தடிக்கப் பணம் குறையுதுன்னாரு… பத்தாயிரம் ரூபா எடுத்து அவர்கிட்டக் கொடுத்துடுங்க” அவசரமாகக் கூறிவிட்டுக் கிளம்பினான்.

காரில் செல்லும்போது அழுதுகொண்டே வந்தவளிடம், “மிருணி! உங்க அக்காவுக்கு நீ தைரியம் சொல்லுவியா.. அதை விட்டுட்டு நீயும் சேர்ந்து அழுதா அவங்க பயந்திட மாட்டாங்க? முதல்லே கண்ணைத் துடை!” என்று தன் கர்ச்சிப்பை எடுத்துக் கொடுத்தான்.

மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, தங்கவேலுவுக்கு கையிலும் இடுப்பிலும் நன்றாக அடிபட்டிருப்பது தெரிந்தது.

அழுது கொண்டிருந்த மீனாவைத் தேற்றியவள், “நீ கவலைப்படாதேக்கா! கடவுள் உன்னைக் கைவிட மாட்டார்” என்று ஆறுதல்படுத்தினாள்.

“எவ்வளவு செலவாகும்னு வேற தெரியலையே?”

அவள் தவிப்புடன் கூறியபோது அதைக் கேட்டுக் கொண்டிருந்த முகிலன், “ஒரு நிமிஷம்! அதைப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க… நாங்க எல்லாம் பாத்துக்கறோம். அவரு எனக்கு அண்ணன் மாதிரிதான்” என்று கூறியபோது, உடைந்து போய் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள் மீனா.

அவளை வீட்டில் விட்டுவிட்டுப் புறப்பட்டனர்.

தங்கவேலு உடல்நிலை தேறி மருத்துவமனையிலிருந்து திரும்பி வர, இரண்டு வாரங்களாகின.

அவனுக்கான எல்லாச் செலவுகளையும் லிங்கமே பார்த்துக் கொள்வதாகக் கூறி விட்டார்.

ஒரு மாப்பிள்ளைக்காக இன்னொரு மாப்பிள்ளையிடம் கடன் பெற, அவர் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், தெரிந்த டாக்டரென்பதால், அவரிடம் பேசி மருத்துவச் செலவில் ஒரு பகுதியை குறைக்கச் செய்திருந்தான் முகிலன்.


மாதக் கடைசியில் தன் பீரோவிலிருந்த பணத்தைக் கணக்குப் பார்த்த சுந்தரபாண்டியன், பத்தாயிரம் ரூபாய் குறைவதைக் கண்டு முகிலனிடம் கேட்டார்.

“முகிலா! என் பீரோவிலிருந்து எதுக்காவது பத்தாயிரம் ரூபா எடுத்துக் குடுத்தியா? கணக்குல பணம் குறையுதே!”

“இல்லியேப்பா!” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த தமிழரசி “என்னங்க… ஏதாவது வேணுமா?” என்றார்.

“பீரோல வெச்சிருந்த பணம் கொஞ்சம் குறையற மாதிரித் தெரிஞ்சது.அதான் கேட்டுட்டிருந்தேன்” யோசனையுடன் கூறினார் பாண்டியன்,

“ஒருவேளை நம்ம மருமகப் பொண்ணு எடுத்து அவங்க மாமாவோட வைத்தியச் செலவுக்குக் கொடுத்திருப்பாளோ?” தணிந்த குரலில் தமிழரசி கேட்டபோது, முகிலனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“அம்மா என்ன பேசறீங்க? மாமா, என்கிட்டே ஒரு பைசாகூட வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க! எப்படிப் பட்ட குடும்பம் அது! மிருணி நீங்க பேசியதைக் கேட்டா எவ்வளவு வருத்தப்படுவா? எதையும் பேசறதுக்கு முன்னாடி யோசிச்சுப் பேசுங்க”.

தாழ்ந்த குரலில் சீறிவிட்டுத் திரும்பியபோதுதான். அறை வாசலில் அசைவற்று நின்றிருந்த அந்தப் பாதங்களைக் கவனித்தான் அவன்.

மெதுவாகப் பார்வையை உயர்த்தியபோது, காபி டம்ளர்களை ஏந்திய ட்ரேயுடன் சிலையாகச் சமைந்திருந்தவளின் விழிகளில், காயம்பட்ட தடம் மிக ஆழமாய்!

அடுத்த நிமிடம் வேகமாக நடந்து வந்து அங்கிருந்த டீப்பாயில் அந்த ட்ரேயை வைத்தவள், உடனே வெளியில் சென்று விட்டாள்.

தன் மீது அநியாயமாகக் குற்றம், சுமத்திய மாமியாரை நினைத்து மனம் சிதறி விழிகள் நிறைந்தன. ஏனோ உடலி லிருந்த பலம் முழுவதும் உறிஞ்சப்பட்டது போல் ஒரு. தளர்வு நிலை வந்தது.

கட்டிலில் அமர்ந்து கண்களை இறுக மூடி அழுகையை அடக்கியபோது, அருகில் வந்தது அழுத்தமான காலடியோசை!

“மிருணி!” அவனுடைய ஆழ்ந்த குரல் காயம்பட்ட மனதிற்கு மயிலிறகாக ஒத்தடம் தருவதாய்!

அவள் மெதுவாகக் கண்களைத் திறந்தபோது, “சாரி! அம்மா ஏதோ தெரியாமப் பேசிட்டாங்க! எனக்காக அதை நீ மனசில வெச்சிக்கக் கூடாது. அம்மா பேசினது – தப்புதாள், நான் உன்னை சமாதானப்படுத்தணுமேன்னு உடனே இங்கே வந்துட்டேன் அம்மாகிட்ட இதுபத்திட்ட பேசறேன். இனிமே, இந்த வீட்டிலே யாருமே உன் மன புண்படற மாதிரி நடத்துக்க மாட்டாங்க” வருத்தத்துடன் கூறினான்.

“நான் புதுசுதானே. அதுதான், என்னைப் பத்தி அவங்க சரியா புரிஞ்சுக்கலை. பரவாயில்லை! அத்தை தானே சொன்னாங்க!” என்றபோது அவள் குரல் கம்மியிருந்தது.

அப்போது, அறைக்கதவை மெலிதாகத் தட்டிவிட்டு உள்ளே வந்த சுந்தரபாண்டியன்,

பின்தொடர்ந்து வந்த தமிழரசியிடம், “பாத்தியா உன் மருமகளோட பெருந்தன்மையை! என்ன சொல்லுது பார் அந்தப் பொண்ணு! எவ்வளவு பெரிய குற்றத்தை அவள் மேல சுமத்தினே? போய் அவளைச் சமாதானப் படுத்து” என்றபடி வெளியில் சென்றார்.

“அன்னிக்கு அந்தப் பணத்தை பூச்சி மருந்து அடிக்க கணக்குப்பிள்ளைகிட்டே நான்தான் எடுத்துக் கொடுத்திருக்கேன், மறந்திட்டேன்!” என்றார் தமிழரசி தர்ம சங்கடத்துடன்.

அவளுடைய தோளைப் பிடித்து அழுத்திய கைகளின் மௌனச் செய்தியும், அவர் விழிகளில் தெரிந்த சங்கடமும், அவளை அமைதிப்படுத்தின.

“நீங்க என்னைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டா அதுவே போதும்” என்றாள் மிருணாளினி. மென்மையாக.

பிறகு அவர் கீழே இறங்கிச் செல்ல, பிறருக்காக விட்டுக் கொடுப்பதில் கூட ஒரு சுகமிருப்பதை அன்றுதான் உணர்ந்தாள் மிருணா.

முகிலனிடம் திரும்பியபோது, வார்த்தைகளில் வராத பெரும் நன்றியுணர்ச்சி, அவன் விழிகளில் தெரிவதாய்!


மாலையில் வீட்டிற்கு வந்த முகிலன், பெரும் யோசனையிலிருப்பது போலத் தெரிந்தது.

காபி, டிபன் கொடுத்துவிட்டு மாடிக்குச் சென்றபோது அவளைப் பின் தொடர்ந்து வந்தவன். “மிருணி! உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றான்.

கேள்வியாகத் திரும்பியவளிடம், “இன்னிக்கு டாக்டர் புருஷோத்தமன் எனக்கு போன் பண்ணி இருந்தாரு. உங்க மாமாவுக்கு இடுப்புல அடிபட்டதில் ஏதோ நரம்பு பாதிக்கப்பட்டு அவரு இனிமே இயல்ப..ம்.. அவருக்கு இனிமே குழந்தையே பிறக்க வாய்ப்பில்லைன்னு சொன்னாரு. கஷ்டமா இருந்தது! ஆனா, உன்கிட்டே இதை மறைக்க வேணாம்னு தோணுச்சு!” மெதுவாகக் கூறினான்.

இதயம் மீனாவிற்காக அழ ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாய் இமைகள் நனைந்தன.

“இதை யார்கிட்டேயும் சொல்ல வேணாம். சொல்லணும்கிற அவசியம் வந்தா அப்பப் பாத்துக்கலாம்” என்று கூறிவிட்டு, மௌனமாக அவன் அமர்ந்திருக்க – மிருணாவின் மனதிற்குள் பெரும் அதிர்வுகள்!

வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு, விடைகள் புதிர்களாய்!

உடனே அந்தப் பெண் எஸ்தரின் நினைவு வர, மீனாவிற்கு குழந்தை இறந்து பிறந்த அன்றே. அவளுக்குள் இந்தக் குழந்தையும் ஜனித்திருக்குமோ என்ற கேள்வி, நெருடலாய்!

இப்போது எஸ்தருக்கு ஏழு மாதமாவது இருக்குமே என்ற ஞாபகம் உள்ளத்தில் மையம் கொண்டு பல குழப்பங்கள் மனதைத் தாக்க, தலை விண்ணென்று தெறித்தது.


வாழ்க்கைப் பாதை தெள்ளிய நீரோடையாய் தடம் பதித்துச் சென்றது.

தலைதீபாவளியன்று முகிலனின் வீட்டில் பூஜையை முடித்துவிட்டு அவள் வீட்டிற்குச் சென்று கொண்டாடிய போது, மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது. லிங்கம் தலைதீபாவளிச் சீரையும் எந்தக் குறையுமின்றி நிறைவுடனே செய்து முடித்தார்.

டிசம்பரில் செமஸ்டர் எக்ஸாம் வருவதால், படிப்பில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள் மிருணா.

அன்றும் காலையில் முகிலன் கிளம்பிச் சென்றதும் அது போல் தங்கள் அறையில் அவள் படித்துக் கொண்டிருந்த போது பதினோரு மணியளவில் வேகமாக உள்ளே வந்தான் முகிலன்.

“மிருணி…அந்த எஸ்தருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்காம். ஆனா, அந்தப் பொண்ணு பாவம் இறந்து போயிடுச்சின்னு இப்பத்தான் போன் வந்தது. என்ன செய்யலாம்? கடைசிச் செலவை நான் ஏத்துக்கறேன்னு ஃபாதர்கிட்ட சொல்லிட்டேன்” யோசனையுடன் கேட்டான்.

சட்டென்று அவள் விழிகள் நிறைந்து குளம் கட்டின.

“ப்ச்… பாவம்ங்க அந்தப் பொண்ணு! எனக்கு ஒண்ணு தோணுதுங்க. நாம நேரா எங்க அப்பாகிட்ட போய் முதல்லே இதைப்பத்திப் பேசுவோம். அப்புறம்…. அக்கா விருப்பப்பட்டா இந்தக் குழந்தையை லீகலா தத்தெடுத்துக்கட்டும். ஒத்துக்கலைன்னா மாமாவைப்பத்தி சொல்லிச் சம்மதிக்க வைக்க வேண்டியதுதான்”

“சரி…வா! ஆனா, நீதான் பேசணும்…. மாமாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம் எதுவும் இல்லையே? தங்கவேலுவுக்கு இனிமே குழந்தை பிறக்காது.. ஆனா, எஸ்தருக்குப் பிறந்திருக்கற குழந்தைக்கு அப்பா அவர்தான்னு தெரிஞ்சா அதிர்ச்சியா இருக்குமே!”

“அதுக்காகச் சொல்லாம இருக்க முடியாதே! இந்த விஷயத்துல அவர்கிட்டேயும் அக்கா – மாமாகிட்டேயும் தானே யோசனை கேட்டாகணும்!” என்றபடி உடை மாற்றிக் கிளம்பினாள் மிருணா.

ஆனால், வீட்டிற்குச் சென்ற பிறகு, அவரிடம் இதைப் பற்றி எப்படிப் பேசுவது.. என்ன கூறுவதென்று புரியாமல் தவித்தவள், அம்மாவைப் பின்புறம் அழைத்துச் சென்றாள்.

மெதுவாக, மீனாவிற்கு பிரசவவலி எடுத்த அன்று. அவள் வீட்டில் தான் கண்ட துரோகத்தையும், விபத்தில் தங்கவேலுவுக்கு நேர்ந்த இழப்பையும் கூறியபோது, எதையுமே நம்ப முடியாத அதிர்ச்சியுடன் உடைந்து போனார் தேம்பாவனி.

“அம்மா! இப்ப அந்த எஸ்தருக்குக் குழந்தை பிறந்திருக்கு! அது நம்ம மாமாயோட குழந்தைன்னு இப்ப நமக்கு மட்டும்தான் தெரியும். அந்தப் பொண்ணு பாவம் இறந்துடிச்சி! ஒரு அநாதைக் குழந்தையைத் தத்தெடுத்த மாதிரி, இப்போ அதை அக்காவுக்கு அடாப்ட் பண்ணிடலாமே? அதான் உங்க ரெண்டு பேர்கிட்டேயும் முதல்லே யோசனை கேக்கலாம்னு வந்தோம்!”

வெகுநேரம் குலுங்கிக் குலுங்கி அழுதவர். “நம்ம குடும்பத்துக்கு மட்டும் ஏன்டி இந்த மாதிரி சோதனை எல்லாம்! பயங்கரக் கதை மாதிரி இருக்குடி மிருணா – நீ சொல்றதைக் கேட்டா! மீனா இதைத் தாங்குவாளா.. எப்படி இதைப்பத்தி அவகிட்டப் பேசறது?” கண்ணீருடன் கூறினார் அவர்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

1 thought on “உள்ளம் உன் வசமானதடி

  1. மயக்கமா கலக்கமா சிறுகதை அருமை ! எழுயியவருக்கு பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *