உள்ளம் உன் வசமானதடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2023
பார்வையிட்டோர்: 5,638 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9

இருவரும் வீட்டிற்கு வந்தபோது, மிருணாவின் பெற்றோருடன் மீனாவும் வந்திருந்தாள்.

ஆனால் தங்கவேலு மட்டும் வரவில்லை.

அன்று சமையலுக்கு. அவளும் மீனாவும் உதவி செய்ய, பொழுது இனிமையாகச் சென்றது.

விருந்து சாப்பிட்ட பிறகு அவர்கள் விடைபெற, மிருணாவை மாலையில் கொண்டு வந்து விடுவதாகக் கூறினான் முகிலன்.

மாலையானதும் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விட்டு அவளை வீட்டில் இறக்கிவிட வந்தபோது. காரியிருந்து இறங்கும்முன் அவனைப் பிரிய மனமின்றித் தவித்துப் போனாள் மிருணா.

“சரி! உங்க பர்த்டேக்கு என்னால கிஃப்ட் ஒண்ணுமே குடுக்க முடியலை” குற்றவுணர்வுடன் கூறினாள்.

“ஏன்… நீ நினைச்சா இப்பக்கூடக் கொடுக்கலாம். நானும் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருக்கேன்… மத்த எல்லாத்தையும் விட விலை மதிப்பில்லாதது அது” குறும்புடன் கூறினான்.

முதலில் புரியாமல் விழித்தவள், சட்டென்று முகிலனின் கையைப் பற்றிப் புறங்கையில் மெதுவாகத் தன் இதழ் பதித்தாள்.

“ப்ச்… இவ்வளவுதானா? நான் நிறைய எதிர்பார்த்திருந்தேன்! ஏ… மீசை குத்தும்னு பயமா இருக்கா? வேணும்னா அதை எடுத்திடவா?”

“ஊஹும்… வேண்டாம்! இப்பல்லாம் எனக்கு உங்க கிட்ட ரொம்பப் பிடிச்ச…” சட்டென்று உதட்டைக் கடித்து நிறுத்தியவள் வேகமாக இறங்கினாள்.

“ஏய்…இரு…”

அவள் கையைப் பிடித்துத் தடுத்தவன், “ஒழுங்கா சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிட்டுப் போ!” என்றான் விடாமல்.

“கையை விடுங்க… நான் போகணும்!”

அவளிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டு இறங்கி வெட்கத்துடன் நிமிர்ந்தபோது அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த தங்கவேலுவின் முகத்தில், தாங்க முடியாத கோபம் தெரிந்தது.

அவனைக் கண்டதும் இறங்கி வந்த முகிலன், ”ஏன் இன்னிக்கு நீங்க நம்ம வீட்டுக்கு வரலை? உங்களை எதிர் பார்த்துட்டிருந்தோம்” இயல்பாகக் கேட்டான்.

“ஏன் சார் பொய்யெல்லாம் சொல்றீங்க? என்னையா எதிர்பார்த்திங்க.. நான் ஒரு ஏழை வாத்தியாராச்சே?” நக்களாக கூறினான்,

“இந்த மாதிரி ‘சார்’ங்கிற மரியாதை எல்லாம் வேணாம். பெயர் சொல்லியே கூப்பிடலாம். எனக்கு எப்பவுமே, ஏழை பணக்காரங்கள்ற பாகுபாடே கிடையாது “

“ஓ.. அதான் பாகுபாடே இல்லாம அந்தப் பைத்தியத்தை ஏதோ பண்ணிட்டு இப்ப நல்லவர் மாதிரி இல்லத்துல சேத்திருக்கீங்களா?” வார்த்தைகளில் திராவகத்தை வீசியபடி மிருணாவையே வன்மத்துடன் பார்த்தான்.

உடனே கோபத்துடன் நிமிர்ந்தவள், “மாமா! யார்கிட்ட என்ன பேச்சு போறீங்க? ஒருத்தர் நல்லது செஞ்சா, அதை இப்படித்தான் தப்பா பேசுவீங்களா? எனக்குத் தெரியும், அதுக்கு யார் காரணம்னு தேவையில்லாமப் பேசி உங்களையே அசிங்கப்படுத்திக்காதீங்க” தாழ்ந்த குரவில் சீறினாள்.

உடனே முகம் மாறி, விருட்டென்று அவன் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு சென்றான்.

முகிலனிடம் திரும்பியவள், “சாரி! அவருக்காக நான் உங்ககிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றபோது அவள் விழியோரங்களில் மெல்லிய நீர்க்கசிவு.

“மிருணி நீ ஏன் அழறே? எப்பவுமே தப்பு பண்ணினவங்க அதை மத்தவங்க கண்டு பிடிச்சிடுவாங்களோங்கற பயத்துல ஏதாவது பேசத்தான் செய்வாங்க. அதைப் பெரிசா எடுத்துக்கக்கூடாது..”

உடனே அதிர்ந்தவன், “உங்களுக்கு ?” கேள்வியாய் நிறுத்தினாள்.

“எனக்குத் தெரியும். உனக்குத் தெரிஞ்சா நீ வருத்தப் படுவேன்னுதான் சொல்லலை. அந்த எஸ்தரோட இவர் தப்பா பழகினது தெரிஞ்சு காசியண்ணன்தான் என்கிட்டே சொன்னாரு! விடு… உன் அக்காவுக்குத் தெரிய வேணாம்… பாவம் அவங்க!” என்றாள்.

“தேங்க்யூ முகில்! என் குடும்பத்துக்காக இவ்வளவு அக்கறையா யோசிச்சுச் செயல்படுற உங்களை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு! ஆனா சின்னத் தப்பைக்கூட நீங்க சகிச்சுக்க மாட்டீங்கன்னு சொல்லுவாங்க. ஏன்…?”

விழிகள் சட்டென்று பளித்தன.

“ஏனா? எல்லாம் என் மனைவிக்காகத்தான்! அவ சந் தோஷமா இருந்தாத்தானே நான் நிம்மதியா இருக்க முடியும்”

அவனுடைய பதில், மெல்லிய பூஞ்சிறகின் வருடலாய்!

‘இதற்கு பதிலாக இவனுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்’ என்று யோசிக்கும் போதே. அவனுடைய குரல் அவளைக் கலைத்தது.

“பொதுவா பெண்களை ஒரு புதிர்னு சொல்லுவாங்க! ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் பொண்ணுங்கிறவ ஒரு புதையல் மாதிரி! தாய் நிலத்துல கிடைச்சாலும் உரிமை கொண்டாட முடியாம, வேற இடம் போற புதையல்!” அவன் வார்த்தைகள் மனதில் கல்வெட்டாய் பதித்தன.

‘உள்ளே புதைந்து போயிருந்த என் மென்மையான உணர்வுகளைப் புதையலாய்க் கண்டெடுத்துப் புதுப்பித்தவனோ நீ…’ என்று அவனிடம் கேட்க வேண்டும் போல்!

ஆனால் பேசுவதற்கு வார்த்தைகள் வராமல், தொண்டைக்குள்ளேயே சிக்கி மடித்தன.

“நான் கிளம்பறேன் மிருணி!!”

அவள் கையை மெல்ல அழுத்தி அவள் விடை பெற்ற போது, அவனுடைய ஸ்பரிசம் சிலிர்க்கச் செய்வதாய்!

காரின் வெளிச்சம் தூரத்தில் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்று விட்டு உள்ளே வந்தபோது உள் அறையில் மீனா அழுது கொண்டிருக்க. அப்பாவும் அம்மாவும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

“என்னம்மா.. என்னாச்சு?” அவள் பதறிப்போய் கேட்டாள்.

“உங்க வீட்டுக்கு ஏன் போனான்னு எங்க கண்ணு முன்னாடியே அடிச்சி சித்ரவதை பண்ணிட்டுப் போறாருடி இவ புருஷன்!” கூறிய தேம்பாவனி தாங்க முடியாமல் விம்ம ஆரம்பித்தார்.

தளர்ந்த நடையுடன் லிங்கம் அறையை விட்டுச் செல்ல, மீனாவை சமதானப்படுத்தி விட்டு வெளியே வந்தால், அப்பா கண்மூடி சாய்ந்து அமர்ந்திருப்பது தெரிந்தது. அவரருகில் சென்று ”அப்பா!” என்றழைத்தபடி அவர் தோளில் சாய்ந்தபோது, அவள் தலையைப் பாசமாக வருடினார் அவர்.

‘நீயாவது நிம்மதியா இருக்கணும்டா! ஒரு அப்பாவுக்கு வேற என்ன வேணும்? தன் குழந்தைங்க சந்தோஷமா இருக்கறதைப் பாக்கணும் அவ்வளவுதான்! மீனா விஷயத்தில நாம விசாரிக்காம தப்பு பண்ணிட்டோமோன்னு ரொம்ப பயமாயிருக்கு” என்றார் சோகமாக.

“கவலைப்படாதீங்கப்பா… எல்லாம் சரியாயிடும்” என்றாள் அவள்.

“உன்கிட்டே ஒண்ணு கேக்கறேம்மா! சின்ன மாப்பிள்ளை ரொம்ப அருமையானவரு. அவங்கம்மா கொஞ்சம் பணக்காரத் தோரணையில் இருந்தாலும், நீ அவருக்காக அனுசரிச்சிட்டுப் போகணும் புரியுதா?” நெகிழ்ந்து போய் கேட்டார்.

“சரிப்பா… என்னால உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. உங்க மாப்பிள்ளை வரவிடவும் மாட்டார்” என்று கூறி எழுந்தபோது, தனக்கு அவன் மேல் தகர்க்க முடியாத நம்பிக்கை வந்திருப்பது புரிவதாய்!


மறுநாளே. தங்கவேலுவிடம் பேசி சமாதானம் செய்து, மீனாவை அங்கு விட்டு வந்தார் லிங்கம்.

இப்போதெல்லாம் அடிக்கடி மிருணாலைப் பார்க்க வந்து விடுவான் முகிலன்.

அவனுடைய புல்லட்டின் ஓசை கேட்டாலே இப்போதெல்லாம் அவள் இதயம் படபடக்க ஆரம்பித்திருந்தது.

அவனுக்காகவே தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருப்பது, ககமான ஒரு உணர்வாய்!

அவன் வந்தவுடனே டிபன், காபி சாப்பிட்டு விட்டு இருவரும் தோட்டத்திற்குச் சென்று விடுவார்கள்..

கிணற்று மேடையில் அமர்ந்து எல்லா விஷயங்களையும் இயல்பாக அவனுடன் பகிர்ந்து கொள்ளும்போது மனதிற்குள் ஆச்சர்யம் ஊற்றெடுக்கும்.

ஆறுமாதத்திற்கு முன்னால் இவனுடன் தனித்து அமர்ந்து மனம் விட்டுப் பேசுவாய் என்று யாராவது கூறி இருந்தால் நம்பியிருப்போமா என்று, மனம் கேள்வி கேட்கும்.

முன்பெல்லாம். முகிலனைக் கண்டாலே தான் நடுங்கியதை நினைத்தால் இன்று சிரிப்பாய்!

திடீரென்று அவள் தனக்குள்ளேயே சிரிக்கவும், “ஏய்… என்ன தனக்குத் தானே சிரிச்சுக்கறே? அதுக்குப் பேரு என்ன தெரியுமா?“ சிறு கேலியுடன் கேட்டான்.

“ஒண்ணுமில்லை. ஆறு மாதத்துக்கு முன்னாடி உங்களைப் பாத்தாலே பயந்து ஓடுவேன். இப்ப இப்படிப் பக்கத்துல உக்காந்து சிரிச்சிப் பேசிட்டிருக்கேனே அப்படின்னு நினைச்சேன்…அதான்!” என்றாள்.

“இப்ப நான் இல்லை பயந்துட்டிருக்கேன்! மனசுல ஆயிரம் ஆசை இருக்கு… ஆனா கிட்ட வந்தா அடிச்சிடுவியோன்னு பயமா இருக்கே!” என்றான் வேடிக்கையாக.

“ம்…அந்த பயம் இருக்கட்டும்.”

ஒற்றை விரலைக் காட்டி கேலியாக மிரட்டிவிட்டு அவள் குறும்பாய்ப் புன்னகைக்க, சட்டென்று அந்த இடத்தை விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தான் முகிலன்.

உதட்டிலேயே உறைந்து நின்ற சிரிப்புடன் அவனைத் தொடர்ந்தவள், ‘ஏன் திடீர்னு கிளம்பிட்டீங்க” என்றாள் சோர்வுடன்.

“இல்லை. ஒரு வேலை இருக்கு. இப்பத்தான் ஞாபகம் வந்தது” என்றபடி உள்ளே சென்று மாமனார் மாமியாரிடம் விடைபெற்று உடனே கிளம்பி விட்டான்.

அவன் வராத நேரங்கள், அம்மாவுடன் கதையளப்பதிலும், தூங்குவதிலும், பாடப் புத்தகங்கள் படிப்பதிலும் சென்றன.

ஆனால் மனம் மட்டும் அவன் வருகின்ற வழியை எதிர்பார்த்துத் தவிப்புடன் காத்திருக்க ஆரம்பித்தது.


ஆடி முடிந்து நல்லநாள் பார்த்து அவளை முகிலனின் வீட்டிற்கு விட்டுச் செல்ல வந்த லிங்கமும், தேம்பாவனியும், பலகாரங்களையும் சீர்களையும் சம்பந்தியிடம் அளித்தனர்.

தனிமையில் சுந்தரபாண்டியனிடம் பேசிய லிங்கம், “சம்பந்தி! எங்களால முடிஞ்ச அளவுக்கு சீர்களை செஞ்சிருக்கோம். உங்க வசதிக்கு இது குறைச்சல் தான்! தப்பா நினைச்சிக்கக்கூடாது.” என்றார் மெல்லிய குரலில்.

“லிங்கம்! நான் இதெல்லாம் எதிர்பாக்கறதேயில்லை. மிருணாளினி இப்ப எங்க வீட்டுப் பொண்ணு. அவளுக்கு நீங்க செய்யறதிலே, நான் என்ன கணக்குப் பாக்கறது?” என்றார் பெருந்தன்மையுடன்.

ஆனால், தமிழரசியின் முகம் சுருங்கிப் போயிருந்தது.

எப்போதும் காலையில் ஒன்பது மணிக்குச் சரியாகக் கிளம்பி விடுபவன், அன்று தன் பெற்றோருக்காக வேலைகளை ஒதுக்கியிட்டு வீட்டிலிருந்து அவர்களிடம் அன்பாகப் பேசிக் கொண்டிருந்தது மிருணாளினிக்குப் பெரும் இதமாய்!

ஆனால் அன்றிரவு, தரையில் பாய் விரித்து அவள் கீழே படுத்ததும் அந்த இதம் பெரிதும் தொலைந்து போனது. அவனுக்குள்!


மறுநாள் காலையில், சமையல்காரம்மாவின் உறவினர் இறந்து விட்டதால், அவர் ஊருக்குச் செல்லும்படியானது.

காலை டிபன் மட்டுமே முடிந்திருந்தது.

முகிலன் வெளியே செல்லும்போது, “என்னம்மா? மதியத்துக்கு எப்பவும் போல சாப்பாடு மெஸ்ஸில சொல்லிடவா?” என்று கேட்டான்.

அவரும் சரியென்று கூறிவிட்டுச் செல்ல, “ஏன்? சமையல்காரம்மா இல்லைன்னா, வீட்டில் சமைக்க மாட்டீங்களா?” மெதுவாகக் கேட்டாள் அவள்.

“அம்மாவுக்கு முடியாது! பி.பி. ஷுகர் எல்லாம் அதிகம்! சமையலறையில் ரொம்ப தேரம் நிக்க முடியாது. அதனால் மெஸ்ஸில சொல்லி வாங்கிடுவோம்”

“இன்னிக்கு நான் சமைக்கவா?”

அவள் ஆர்வத்துடன் கேட்க, “உன்னால முடியுமா? பத்துப் பேருக்குச் செய்யணுமே?”

“ம் செய்வேன்! கூட துணைக்கு ஹெல்ப் பண்ணத்தான் செல்லாயி இருக்காங்களே!” என்றவள் “ஒரு நிமிஷம்! உங்களுக்கு என்ன பிடிக்கும்?” மெதுவாகக் கேட்டாள்.

“எனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லிடுவேன். ஆனா உனக்குக் கோபம் வந்துடும்.”

“இல்லை… வராது! நான்-வெஜ் சமைக்கறதுக்கு எப்படியாவது நான் கத்துக்கறேன்.!”

அவசரமாகக் கூறியபோது, “நான் அதைச் சொல்லலை!. நீ என்ன செஞ்சாலும் எனக்குப் பிடிக்கும்! நான் வரேன்” என்று கிளம்பினான்.

நேரே மாமியாரிடம் சென்றவள், “அத்தை! உங்களுக்கும் மாமாவுக்கும் என்ன காய் பிடிக்கும்னு சொன்னீங்கன்னா நானே இன்னிக்கு சமைச்சிடறேன்” என்றாள்.

“அதெல்லாம் வேணாம்! தம்பி மெஸ்ஸில சொல்லிடும்.!” என்று மறுத்தவரிடம், “இல்லத்தை! நான் சமைக்கறதா அவர்கிட்ட சொல்லிட்டேன்.” – மெதுவாகக் கூறினாள்.

“மாமாவுக்குக் கீரை வேணும்.. ஒரு கூட்டு, ரசம் வச்சிடு போதும். கஷ்டப்படுத்திக்க வேணாம். ரெண்டு நாளிலே மாதவி வந்திடுவா!”

‘சரி’யென்றபடி சமையலறைக்குள் சென்றவள், செல்லா யியை உதவிக்குச் சேர்த்துக் கொண்டு சமைக்க ஆரம்பித்தாள்.

வெங்காய சாம்பார், புடலங்காய் கூட்டு, கீரை, உருளை வறுவல், ரசம் எல்லாம் செய்து முடித்து விட்டு, அவளை அந்த இடத்தைச் சுத்தம் செய்யும்படிக் கூறியவள், மாடிக்குச் சென்று முகம் கழுவிக் கீழே வந்தாள்.

அன்று சாப்பிட்டுவிட்டு ஆண்கள் இருவரும் அவளை வெகுவாகப் புகழ, தமிழரசி மட்டும் அமைதியாகவே சாப்பிட்டாலும், மிருணாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாய்!

தன்னால் அவனுக்கு இந்த சந்தோஷத்தையாவது அளிக்க முடிந்ததே என்று பரவசமாய்!

தான் ஏன் அவனிடம் இன்னும் விலகியே இருக்கிறோம் என்ற கேள்விக்கு, அவளிடம் விடைதான் இல்லை.

சிறு வயதிலிருந்தே அவன் மேல் கண் மூடித்தனமாக வளர்த்திருந்த பயமும், வெறுப்பும் இப்போது அவனுடன் பழகப் பழகச் சூரியனின் சுவாசச் சூட்டினால் மறைகின்ற பனித்துளியைப் போய் மெல்ல மெல்ல விலகினாலும் ஏனோ முழுதாய் ஒரு நம்பிக்கை மட்டும் வர மறுத்தது.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *