உள்ளம் உன் வசமானதடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 11, 2023
பார்வையிட்டோர்: 9,220 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

தன் முகத்தில் சில்லென்ற பளிதீரை யாரோ பளிச்சென்று அள்ளித் தெளித்தது போன்ற விதிர்ப்புடன் விழித்த மிருணா, வேகமாக அவனை விலக்கித் தள்ளி விட்டு, குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

இதயம் தாறுமாறாகத் துடிக்க, ஆரம்பித்து தன்னிலை இழக்க, கன்னத்தில் பதிந்த அந்த ஈரப் பதிவு இதயத்திலும் ஆழமாய் பதிவதாய்!

தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவள், மெதுவாகப் பல் துலக்கி குளித்துவிட்டு வெளியில் வந்தபோது, நல்ல வேளையாக முகிலன் அங்கு இல்லை.

அன்று காலையிலேயே அவளை அழைக்க வருவதாக லிங்கம் கூறியிருந்தார்.

சில்க் காட்டன் புடவையணிந்து, முடியைத் தளரப் பின்னித் தயாராகிக் கீழே வந்தபோது, வாக்கிங் முடிந்து வந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள் அவன்.

அவளைக் கண்டதும் குறும்புடன் “குட்மார்னிங்” என்று கூறி ஒற்றைக் கண் சிமிட்ட, பார்வையை சட்டென்று தழைத்தவள், பதிலுக்கு மெதுவாக ‘காலை வணக்கம்’ கூறினாள்.

பிறகு, தப்பித்தோம், பிழைத்தோம் என்பது போல் அவசரமாக உள்ளே சென்றபோது எதிரில் வந்தார் தமிழரசி.

“பூஜை அறையில் போய் சாமி விளக்கை ஏத்திடு… உங்கப்பா அம்மா வர நேரமாச்சு! வந்தவுடனே நீ கிளம்பணுமே!” என்றார்.

“சரி அத்தை!” என்றபடி சென்றவளைப் பார்த்த போது. தான் விரும்பியதைப் போல், சீரும் நகைகளுமாய் பெரிய பணக்கார வீட்டுப் பெண் மருமகளாக வந்திருந்தால், இது போலத் தன் பேச்சைக் கேட்டிருப்பாளா என்ற ஐயமும் அவருக்குள் மெதுவாக எழுந்தது.

லிங்கமும், தேம்பாவனியும் வந்தவுடன் மற்றதெல்லாம் மறந்து போனது.

அவர்களுக்கு டிபன் வைத்த பிறகு, ஆர்வமாகக் கிளம்புவதில் ஈடுபட்டது மனம்!

மாமனார் – மாமியாரை வரவேற்று அன்புடன் பேசிக் கொண்டிருந்த முகிலனைப் பார்த்தால், அவளுக்குள்ளே மெலிதாய் ஒரு உயிர்ப்பூவின் மலர்வு!

சுந்தரபாண்டியனும் தமிழரசியும் சம்பந்திகளிடம் இயல்யாகப் பேசிப் பழக. தன் குடும்பத்தாரை அவர்கள் ஏற்றுக் கொண்ட விதம் நெஞ்சை நெகிழ்த்துவதாய்! பெரியவர்களின் கால்களில் விழுந்து நமஸ்கரித்த பிறகு, மாடிக்குச் சென்று தன் சூட்கேஸை எடுத்தபோது, முகிலனின் குரல் தடுத்தது.

“ஒரு மாசம் கழிச்சு நீ வரவரைக்கும் நினைவில் இருக்கிற மாதிரி, எனக்கு ஏதும் ஸ்பெஷல் கிடையாதா?”

இரு புருவங்களையும் உயர்த்தியபடி கேட்க அவள் நிமிர்ந்தபோது, அவன் பார்வை வெகு கூர்மையாய்!

அவளுக்குள் இனம் புரியாத ஓர் உணர்வை சிற்றுளியாய்ச் செதுக்கியது அவன் பார்வை!

உடனே குளித்தவன் “புரியலை” என்றாள் மெதுவாக.

“ம்… உண்மையா புரியாதவங்களுக்கு சொல்லித் தரலாம். ஆனா புரியாத மாதிரி நடிக்கிறவங்ககிட்டே என்ன பண்றது? மாமா எடுத்துட்டு வந்த டாக்ஸிய அனுப்பிட்டேன். நானே உங்களை விட்டுட்டு வந்திடறேன்“ என்று கிளம்பினான்.

வீட்டிற்கு வந்து அவர்களை இறக்கி விட்ட பிறகு அவன் கிளம்பியதும், வழியனுப்ப வெளியே வந்தாள் மிருணா.

“ம்… இந்த ஒரு மாசமும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறேன். உன்னைப் பாக்க நான் இங்கே வரலாமில்லை…?”

தாழ்ந்த குரலில் அவன் கேட்க, மெதுவாகத் தலையசைத்தாள்.

பிறகு, அவனுடைய கார் கண்ணை விட்டு மறையும் வரை நின்று பார்த்திருந்தவளுக்கு, நெடுநாள் பழகிய ஒரு நண்பனைப் பிரிவது போன்ற ஒரு உணர்வு!

சிறிது நேரத்தில் மீனாவும் வந்து விட மனம் இயல்பான மகிழ்ச்சியுடன் அங்கு தன்னை இணைத்துக் கொண்டது.

இடையிடையே அந்தப் பைத்தியக்காரப் பெண்ணின் நினைவு வந்தாலும், பிடிவாதமாக அதை மனதின் ஓரம் தள்ளி வைத்தாள் அவள்.

“இப்போ எப்படி இருக்காரு மீனா உன் வீட்டுக்காரரு..?”

தேம்பாவனி கேட்டதும், “அம்மா…” எச்சரிக்கும் தொனியில் மீனா விழிகளை தங்கையிடம் திருப்பினாள்.

“அவளுக்கும் தெரியட்டும்டி… இப்பத்தான் கல்யாணமாயிடுச்சே. அவ என்ன சின்னப் பெண்ணா?” பீடிகையுடன் கூறினார் அம்மா.

“என்னக்கா.. என்ன பிரச்னை?”

ஆதரவாகக் கேட்டவளின் மடியில் சரிந்து அழ ஆரம்பித்த மீனா, தங்கவேலுவைப் பற்றிய உண்மைகளை எல்லாம் கூற. மிருணாவின் மனதில் யாரோ சாட்டையால் அடித்தது போன்ற ஒரு வலி!

உடைந்து போயிருந்தவளைச் சமாதானப்படுத்திய மிருணா, “அக்கா தைரியமா இரு… எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதே!” – என்று தேறுதல் கூறி, சாப்பிட வைத்து அனுப்பி வைத்தாள்.

அன்றிரவு, மிருணாவை அழைத்த விங்கம் ஒரு பாங்க் பாஸ் புத்தகத்தை எடுத்து நீட்டினார்.

“இந்தாம்மா உன் பெயரிலே என்னால முடிஞ்ச ஒரு தொகையை ஃபிக்ஸ்ட் டெபாசிட்’டிலே போட்டிருக்கேன்”

சிறு முறுவலுடன் கூறினார்.

“இப்ப ஏன்ப்பா இதெல்லாம்?” அவன் கேட்டாள்.

“நம்ம நிலம் ஒண்ணை பக்கத்து ஊர்க்காரன் ஆக்ரமிச்சிட்டு தகராறு பண்ணிட்டிருந்தான் இல்லையா? நம்ம சின்ன மாப்பிள்ளைதானே அதைப் பேசி முடிச்சு வேற ஒருத்தருக்கு விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணித் தந்தாரு”

“அந்தப் பணத்தை மூணா பங்கிட்டு உங்க மூணு பேருக்கும் பாங்க்லே போட்டிருக்கேன். ஆனா, மீனாவோடதை மட்டும் நானே வச்சிருக்கேன், உங்கம்மாவுக்கு அப்புறம், அந்தத் தொகையும் அவளுக்கே போய்ச் சேர்ற மாதிரி செஞ்சிருக்கேன். இதிலே உனக்கு ஏதும் வருத்தமில்லையே மிருணா?” ஒரு பெருமூச்சுடன் கேட்டார்.

“ஏன்ப்பா இப்படிக் கேக்கறீங்க? இந்தப் பணத்தையும் அக்காவுக்கே குடுத்திருந்தீங்கன்னா, நான் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன். என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க. உங்க மாப்பிள்ளை பாத்துப்பாரு! அக்காவுக்குத் தான் இப்போ ஒரு பாதுகாப்பு தேவை!” என்றாள் மிருணா.


மறுநாளே அவளைக் காண வந்த முகிலன், அவளைத் தனியே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.

“மிருணி! இப்ப அந்தப் பைத்தியத்தோட குழந்தைக்கு யார் காரணம்னு ஆராயரதைவிட, அதுக்கு ஏதாவது உதவி செஞ்சா நல்லதுன்னு நான் நினைச்சேன். அப்பாவும் அதான் சொல்றாங்க!’

“பக்கத்து ஊரில அப்பாவோட ஃப்ரெண்ட் மைக்கேல் தான் பாதிரியாரா இருக்காங்க. அங்கே ஒரு கருணை இல்லத்தையும் அவங்க நடத்திட்டு வராங்க. அதனால் அந்தப் பொண்ணை அங்கேயே சேத்துடலாம்னு அப்பா சொன்னாங்க!”

”அங்கே எல்லாரையும் சேத்துப்பாங்களா?” அவள் சந்தேகத்துடன் கேட்டாள்.

“அப்பா, மைக்கேல் அங்கிள்கிட்டப் பேசிட்டாங்க. அங்கே மன வளர்ச்சி இல்லாதவங்களும், அநாதைங்களும் தான் நிறைய இருக்காங்க. அந்தப் பொண்ணும் அங்கேயே இருக்கட்டும்… பிரசவம் ஆகட்டும்.. பாப்போம்” என்றான் யோசனையுடன்.

முகிலனையே பிரமிப்புடன் நோக்கிக் கொண்டிருந்தவளுக்கு, அந்த நிமிடம் தங்கவேலுவுக்கும். அவனுக்கும் இடையே இருந்த மலையளவு வித்தியாசம் புரிவதாய்!

‘என்ன அற்புதமான மனிதன்… மனித நேயம் மிகுந்தவன்! எல்லாவற்றையும் விட இவன் என் கணவன்’ என்ற பெருமை, மனத்திற்குள் புது சிலிர்ப்பை ஏற்படுத்த முகம் மலர்ந்து விகசித்தது.

“என்ன… மகாராணி இந்த சாம்ராஜ்யத்துல, ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரித் தெரியுது?” குறும்பு கசிந்தது அவன் குரலில்.

“ம்… கண்ட்ரோல் பண்ண ராஜா இல்லாம, சுதந்திரமா இருக்கா இல்லையா? அதான்!”

வார்த்தைகள் அதே வேகத்தில் வந்துவிட, தன்னால் கூட அவனுடன் இணைந்து இப்படி ரசனையுடன் பேச முடிகிறதேயென்ற ஆச்சர்யமும், பரவசமும், ஒருங்கே எழுந்தன.

முகிலன் கண்கள் இடுங்க, அவளையே குறுகுறுத்த விழிகளால் வருடினான்.

“ஏய்…. என்ன இங்கே வந்ததும் பேச்சு ரொம்ப நல்லா வருது? அங்கே, பாதி நேரம் வெறும் காத்துதான் வரும்!” என்றான் கேலியாக

தவிப்புடன் தலைகுளிந்தவள், “உள்ளே வாங்க… அம்மா உங்களுக்காக ஏதாவது டிபன் செஞ்சிருப்பாங்க!” என்றாள்.

“பாவம்…. அவங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். நான் கிளம்பறேன்” என்றவனிடம், “லேண்ட் விஷயமா நீங்கதான் உதவி செஞ்சதா அப்பா சொன்னாங்க ரொம்ப தேங்க்ஸ்.” என்றாள் அவள்.

கண்கள் மின்ன, “இந்தச் செப்பு வாயால வெறும் ‘தேங்க்ஸ்’ மட்டும்தான் உனக்குச் சொல்லத் தெரியுமா?” சீண்டலாகக் கேட்டு விட்டு முகிலன் உடனே கிளம்பினான்.

அன்று அவன் நீங்கிச் சென்றவுடனே, ஒரு கணம் அவள் உலகமே இயங்காது நின்றதைப் போல், ஏதோ ஒரு உணர்வு!


அந்த வாரம் முழுவதுமே. எதையோ இழந்து விட்ட உணர்வுடன் நத்தையாய் நகர்ந்து செல்ல, ஒரு நாள் அதிகாலையில் அவளுக்கு ஃபோன் செய்தான் முகிலன்.

“ஹலோ” அவனுடைய ஆழ்ந்த குரல் சுகமாக அவள் மனதில் சாமரம் வீசியது

“மிருணி! இன்னிக்கு என்ன ஸ்பெஷல் தெரியுமா? உன் மாமியாரோட பையனுக்குப் பிறந்த நாள்! அந்தக் குட்டிப் பையனை ‘விஷ்’ பண்ண மாட்டியா?” சீண்டலாக அவன் கேட்டபோதுதான். அவன் கூறியதன் பொருளே உரைத்தது.

“ஓ..! ஹேப்பி பர்த்டே… மெனிமோர் ஹேப்பி ரிடர்ன்ஸ்” என்றாள் மகிழ்ச்சியுடன்.

“இன்னிக்கு உண்மையா ஹேப்பி பர்த்டேயா நான் உணரணும்னா, என்கூட நீ நாள் முழுக்க இருக்கணும். உங்க வீட்டில உள்ள எல்லாருக்கும் நம்ம வீட்டிலதான் மத்தியானம் சாப்பாடு…!

ஆனா உனக்கும் எனக்கும் காலையில கொஞ்சம் வேலை இருக்கு. எட்டு மணிக்கு நான் அங்கே வருவேன். நீ ரெடியா இரு… ஒரு இடத்துக்குப் போறோம்.”

“எங்கே…?”

அவள் ஆவலுடன் கேட்க, “அது சர்ப்ரைஸ்! ஆனா நமக்கு அங்கேதான் டிபன்! மாமாகிட்ட அப்பா பேசணுமாம்… போனை அவர்கிட்டக் கொடு” என்றான்.

அப்பா அம்மா இருவரும் அவளை வாழ்த்திய பிறகு, குளித்துத் தயாரானவள். அவன் கோவிலுக்கும். ஹோட்டலுக்கும் தன்னை அழைத்துச் செல்வானோ என்ற யோசனையுடன் காத்திருந்தாள்.

அவசரமாக ஸ்வீட் மட்டும் செய்து வைத்துவிட்டு அனைவரும், அவனை எதிர்பார்த்திருக்க, ஜீன்ஸிலும், டி-சர்ட்டிலும் அம்சமாக வந்து இறங்கினான் முகிலன்.

முதன் முதலாக அவனை அந்த உடையில் பார்த்தபோது, மூச்சடைத்துப் போனது, மிருணாவுக்கு!

நேரிலும் அவனை வாழ்த்திவிட்டு இனிப்பைத் தந்து, முகிலன் சாப்பிட்ட பிறகு, ஒரு மோதிரத்தை லிங்கம் பரிசளிக்கக் கிளம்பினார்கள்.

அவனையே அடிக்கடி ஓரக்கண்ணால் நோக்கியபடி அலைப்புறுதலுடன் அமர்ந்திருந்தவளை, அவன் கவனித்து விட்டான்.

அவர்களிடம் விடைபெற்று, இருவரும் காரில் போய்க் கொண்டிருக்கும்போது கேட்டான்:

“என்ன? என்கிட்ட ஏதாவது கேக்கணுமா? அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?”

தயக்கத்துடன் நிமிர்ந்தவள், “நீங்க ஏன் தினமும் இந்த மாதிரி டிரஸ் பண்ண மாட்டேங்கறீங்க?” கேட்கக் கூடாதென்று நினைத்தாலும் கேட்டு விட்டாள்.

“….நான் கலெக்டர் வேலை பாக்கலைம்மா? வயலுக்கும் தோப்புக்கும் போறதுக்கு. வேட்டி சட்டைதான் சரி… நம்ம பாரம்பரிய உடையே அதுதானே! முக்கியமான நாள்னா, வெளியூர் போனா மட்டும்தான் இப்படி!”

அவனுடைய கார் கோவிலையும் தாண்டிச் செல்ல, யோசனையுடன் அவள் மெளனமாக அமர்ந்திருந்தாள்.

கார் நேரே பக்கத்து ஊருக்குச் சென்று அந்தக் கருணை இல்லத்தின் வாசலில் நின்றது.

ஆச்சர்யத்துடன் திரும்பியவளிடம், “ஒவ்வொரு வருஷமும் என் பிறந்த நாளுக்கு இங்கேதான் காலையில டிபன் சாப்பிடுவோம். இங்க எல்லாருக்கும் நம்ம செலவுல நான் இன்னிக்கு சாப்பாடு, டிபன் எல்லாம்! இந்த தடவை தான் அப்பாவும் அம்மாவும் உன்னை அழைச்சிட்டுப் போகச் சொல்லிட்டாங்க” இயல்பாகக் கூறினான்.

உள்ளே சென்று ஃபாதர் மைக்கேலைப் பார்த்துப் பேசி. விட்டு, அவருடன் சாப்பிடும் அறைக்குச் சென்றனர்.

“எஸ்தர்! இங்கே வா… யார் வந்திருக்காங்கள்னு பாரு” என்று அழைத்தார் ஃபாதர்.

“எஸ்தரா? யார் ஃபாதர் அந்தப் பொண்ணு?” என்றபடி முகிலன் திரும்பினான்.

தலைமுடி ‘பாப்’ செய்யப்பட்டு, ஒரு நீண்ட நைட்டியைப் போன்ற உடையணிந்து, அந்தப் பைத்தியம் அங்கு நின்றிருந்தாள்.

“இவர்தான் உன்னை இங்கே சேர்த்து விட்டவர்… இவங்களுக்கு வணக்கம் சொல்லு!”

அவர் கூற, இரு கைகளையும் இணைத்து கோணலான சிரிப்புடன் அவள் வணங்கியபோது, பரிதாபமாக இருந்தது.

“நீ இவளை அழைச்சிட்டு வந்து இங்கே சேர்த்தவுடளே இவளுக்கு ‘எஸ்தர்’னு பேர் வெச்சிட்டோம்ப்பா” சிறு புன்னகையுடன் ஃபாதர் கூறினார்.

இத்தனை நாள் அவளுக்கென்று ஒரு பெயர்கூட இல்லாமல் அந்தப் பெண் தன் சுயத்தைத் தொலைத்து நின்றதும், அவளைப் பற்றி யோசிக்கும்போதுகூட அனைவரும் ‘பைத்தியம்’ என்றே நினைவு கூர்ந்ததையும் நினைத்தால், மனதின் ஓரம் சுரீரென்று ஒரு வலி எழுந்தது மிருணாவிற்கு..!

முதலில் சிறு பிள்ளைகளுக்கு உணவளித்து விட்டு, பிறகு பெரியவர்களுடன் அவர்களிவரும் அமர்ந்து சாப்பிட்டபோது, அவர்கள் அனைவரும் கூறிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவள் மனதைக் கசியச் செய்தன.

அங்கிருந்த மனவளர்ச்சி குன்றிய சில மழலை மலர்களைப் பார்த்தபோது பிறரை அழிக்கும் வக்கிரங்களின்றி மனதின் மாகபடாமல் மானுடம் வென்ற மனிதர்களாய்…வெகுளித்தனமும், புன்னகையும் மட்டுமே சுமந்த ஒருவித தெய்வ நிலையாய்த் தோன்றியது.

மனம் நிறைந்ததில் விழிகள் பளபளக்க நிமிர்ந்தவள் “தேங்க்யூ முகில்” என்றாள் உணர்ச்சிகள் நிறைந்த குரலில்.

“வெல்கம்! நீ எனக்குக் கொடுத்த அருமையான பர்த்டே கிஃப்ட் எது தெரியுமா? இப்ப சொன்னியே அழகா….. ‘முகில்’னு… அதான்” கூறியவனின் விழிகளில் மகிழ்ச்சிப் பூக்கள் மலர்ந்திருந்தன.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *