உள்ளங்களும் உணர்ச்சிகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2021
பார்வையிட்டோர்: 4,615 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரவின் அமைதியைக் குலைப்பதுபோல ஒரு பறவை இனிமையாக அலறிக் கொண்டு சென்றது. சில இரவுகளில் இப் படி அந்தப் பறவை பாடிக்கொண்டு செல்வது வழக்கம்.

அதன் கூவலில் சத்தியன் சுய உணர்வுக்கு வந்தான்.

ஏதோ அவலத்தைக் கண்டு குரல் கொடுப்பது போல அப்பறவை அலறிக் கொண்டு சென்றாலும்…. அதிலும் ஓர் இனிமை இருந்தது.

இரவு உறங்கிக் கொண்டிருக்கிறது – சத்தியன் கட்டிலிற் புரண்டு படுத்தான். நேரத்தைப் பார்த்துவிட்டு, இனி உறங்க வேண்டும் என நினைத்தான். உறக்கம் வரமறுத்ததால் ஒவ்வொரு பக்கமாகப் புரண்டு படுத்துக் கண்களை மூடிப்பார்த்தான் கட்டிலின் சொகுசு அவளுடைய நினைவை இன்னும் இனிமை யுடன் கொண்டு வந்தது.

“வத்சலா” என மனதுக்குள்ளே ஆசையாக அழைத்து உணர்ச்சி வசப்பட்டான். அமைதி குலைந்த உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட பெருமூச்சு அந்த அறையின் அமைதியையும் குலைப்பதைப் போலிருந்தது…

…கொட்டு மேளம் கொட்ட, சுற்றி நின்ற பெரியவர்கள் மலர் தூவி வாழ்த்துரைக்க வத்சலாவின் கழுத்தில் தாலி ஏறு கின்ற காட்சி அவன் கண் முன்னே ஓடிவந்தது.

“பொருத்தமான சோடி!…” – வந்திருந்தவர்களின் பாராட்டு இது.

“சாய்!…என்ன அழகான பொம்புளை….தங்க விக்கிரகம் மாதிரி!”

“அவ…குனிந்து…பணிந்திருக்கிற பண்பும்…அழகும்…மாப்பிள்ளைப் பெடியன் குடுத்து வைச்சிருக்க வேணும்”

“பொம்புளையெண்டால்…..இப்படித்தான் இருக்க வேணும்!…இந்தக் காலத்திய பெட்டையள் ஆடுற ஆட்டங்களைப் பார்க்க வேண்டுமே…!”

வத்சலாவின் கலியாணத்துக்கு வந்திருந்தவர்கள் மனம் நிறைந்து பாராட்டியது சத்தியனின் மனதில் பட்டும் படாமலும் தட்டிக் கொள்கிறது.

வத்சலாவுக்கு, (திரு) மணம் முடிந்து விட்டது. மண வீட்டுக்கு சத்தியனும் சென்றிருந்தான். வத்சலா அவனைக் கவனிக்காதது போலவே இருந்து விட்டாள். அது அவனுக்குப் பெரிய தவிப்பாக இருந்தது. எப்படியும் அவளைக் கண்டு கதைக்கவேண்டும் போலத் துடிப்பு மேலிட்டது.

இரவு மீண்டும் சென்றான். கலியாண வீட்டுச் சந்தடி அடங்கி விடவில்லை. ஆயினும் வத்சலாவும் கணவனும் தனிமையிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

…தன் தோளினால் மெல்ல அவள் தோளிலே தட்ட, அவள் நளினமாகத் திரும்பும் நேரம் பார்த்து… கன்னத்திலே சட்டெனக் கிள்ளி, அதனால் அவள் சிணுங்குவதை அவன் ரசித்துக் கொண்டிருக்கும் ஓர் இக்கட்டான நேரத்தில் போகவேண்டி ஏற்பட்டுவிட்டதால்…சத்தியன் செருமிக்கொண்டான்.

சத்தியனைக் கண்டதும், ஏதோ தவறு செய்து விட்டவளைப் போல அவசரமாக எழுந்து நின்றாள் வத்சலா. சத்தியனுக்குக் கவலை பொங்கிக் கொண்டு வந்தது. அவனது கண்கள் கலங்கி கண்ணீர் இமைகளில் முட்டியது. இன்னொருவனுடைய அணைப்பில் வத்சலாவைக் கண்டதும் உள்ளம் குமுறியது. அவள் கண்கள் அவனது கண்களை ஊடுருவிச் சென்ற பொழுது கண்ணீர் பொலு பொலுவென கன்னத்தில் வழியத் தொடங்கியது. வத்சலாவின் முகமும் சிவந்தது – கண்கள் கலங்கின.

“சத்தியா!”

சத்தியனால் கதைக்க முடியவில்லை. கதைக்க எத்தனித் தால் அழுகை வெடிக்கும் போலத் தோன்றியது. அந்த அளவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டிருந்தது.

வத்சலா மீண்டும் கூப்பிட்டாள்.

“தம்பி…! ஏன் அழுகிறாய்..? நீ அழுதால் எனக்கும் அழுகை வருகுது… சத்தியா அழாதை!”

பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிச்சத்தம், அவன் தலையைச் சிதற உடைப்பது போன்ற அதிர்ச்சியில் அவளைத் திரும்பிப் பார்க்கிறான்.

வெளியே விளையாட்டு நடக்கிறது. ‘அவளும் என்ன, தன்னோடு விளையாடுகிறாளா?’. “தம்பி…” என அவள் அழைத்தது மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்க…

ஓடுவது போல் ஜாலவித்தை காட்டிக் கொண்டிருந்த வர்ணவிளக்குகள் அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருக்கிறது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“தம்பி!…ஏன் அழுகிறாய்?…” – வத்சலா மீண்டும் தேற்றினாள். அவனை ஆதரவாக அணைத்துக் கண்ணீரைத் துடைத்து விட வேண்டும் போல் அவள் கைகள் துடிக்கின்றன. தனிமையிலென்றால் அவனும் அப்படியொரு ஸ்பரிசத்தை எதிர் பார்த்திருப்பான்.

“அக்கா… எல்லாரும் உங்களுக்குப் பெரிய பரிசெல்லாம் தந்தினம்…நான் என்னத்தைத் தரமுடியும்?” – அவளுடைய பாணியிலேயே அவன் கதைக்கிறான்.

“சத்தியா!…துக்காகவா அழுகிறாய்?…நீ எனக்குத் தம்பியாகக் கிடைத்ததே ஒரு விலைமதிப்பற்ற பரிசு தானே.”

“இல்லையக்கா…இனி நீங்கள் என்னை மறந்திடுவீங்கள்..அதை நினைக்கயிக்கைதான் பெரிய கவலையாயிருக்கு.”

“இல்லை சத்தியா…நான் எங்கேயும் போகமாட்டன் இங்கேதான் இருப்பன்…நீ எந்த நேரத்திலும் என்னை வந்து பார்க்கலாம்.”

அவர்கள் இருவரையும் பார்த்தவாறு அதிர்ச்சியடைந்தவன் போலிருந்தான் அவள் கணவன் – அவள் அறிமுகம் செய்து வைத்தாள்.

“சத்தியன். முன் வீட்டிற்தான் இருக்கிறான். அக்கா. அக்கா என்று சதா இங்கேயே கிடப்பான். பாவம், கலியாணச் சந்தடியில் ரெண்டு நாளாய்ப் பார்க்கவேயில்லை.”

அந்தப் பறவை மீண்டும் இனிமையாக அலறிக் கொண்டு செல்கிறது. சத்தியனுக்குச் சிரிப்புத்தான் வருகிறது. அந்த அவலமான பாடலை இதமாக ரசித்தான்.

நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் சத்தியன் முதலில் வத்சலாவைக் காண நேர்ந்தது. அப்பொழுது அவன் தந்தை வேலை மாற்றலாகி கொழும்புக்கு வந்த பொழுது, அவர்கள் குடும்பத்துடன் வெள்ளவத்தைக்குக் குடிவந்தார்கள். அவன் இருந்த ஒழுங்கையிலேயே முன்வீட்டில் அவளும் இருந்தாள். கொழும்பு வந்த புதிது – புதுமைகளை இரசிப்பதில் ஒரு துடிப்பு இருக்கும்!

வத்சலாவும் அவன் கண்களுக்கு ஒரு புதுமையான அழகிலே தென்பட்டாள். குலுங்குகின்ற உடல் கொப்பளித்துத் தெரியக் கூடியதாய் இறுக்கிய உடைகள் தான் அணிவாள். கேசம்… சுருண்டு தோளிலே தவழ்ந்து கொஞ்சும்! கண்களை மூடி நிற்கும் கறுப்புக் கண்ணாடி கவரும்! கால்களில் ஒளி மஞ்சளாகப் பட்டுத் தெறிக்கும். நடக்கும் பொழுது முழங்கால்கள் இரண்டும் தட்டிக் கொள்ளும்… கொள்ளை அழகு!

அவளுடன் கதைக்க வேண்டும்…பழக வேண்டும் என விரும்பினான் சத்தியன். அதுவும் வீண்போகவில்லை. ஒரு வெள்ளிக்கிழமை கோவிலில் காண நேர்ந்த பொழுது, அவளே வந்து சத்தியனுடன் கதைத்தாள். தங்கள் வீட்டுக்கும் அவனை அழைத்தாள்.

அடுத்தநாள் சத்தியன் அவள் வீட்டுக்குப் போன பொழுது. எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தாள். அதன் பின்னர் அடிக்கடி அவள் வீட்டுக்குச் சென்று வருவது வழக்க மாகிவிட்டது.

வத்சலாவும் சத்தியனும் கரம் விளையாடிக் கொண்டேயிருப்பார்கள். அவள் .. அவனைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். கண்களினாற் கலந்து, சொண்டுக்குள்ளே சிரிப்பாள். சத்தியன் கூச்சத்திலே தன் கால்களை இழுத்துக் கொள்வான். மலரிலும் மென்மையாக , அவள் தன் கால்களினால் அவன் கால் களுக்குக் கொடுத்த காதல் இன்பம், சத்தியனுக்கு இழக்க முடியாத தொன்றாய்ச் சுவைத்தது. அதனால் …அவனே திரும்பவும் தன் கால்களை அவள் பக்கமாகக் கொண்டு செல்வான்.

அந்த நாட்கள் இனிமையாக வளர்ந்தன….ஒரு வெள்ளிக்கிழமை மாலை, சத்தியனைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தாள் வத்சலா. அவன் சென்ற பொழுது வீட்டில் அவள் மாத்திரம் இருந்தாள். மற்றவர்கள் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள். வத்சலா, தனக்குத் தலையிடி ‘என சாட்டுச் சொல்லி விட்டுச் செல்லாமல் நின்றிருக்கிறாள். எதற்காகத் தன்னை வரச்சொல்லியிருக்கிறாள் என சாத்தியனுக்கு ஓரளவு புரிந்தது.

பயமும் இன்பமும் கலந்த உணர்வொன்று அவள் மனதை ஆட்கொண்டது. அன்று தன்னைச் சற்று அதிகமாகவே அலங்கரித்திருந்தாள் வத்சலா! சத்தியனைக் கண்டதும் மலர்ச்சியுடன் ஓடி வந்தாள்; பின்னர் நாணமடைந்தவள் போல சிவந்த முகத்துடன் நின்றாள். சத்தியனும் செய்வதறியாது நின்றான்.

“வாங்கோ… சத்தியா!”

சத்தியன் அவளைத் தொடர்ந்தான்.

அவசர அவசரமாக அவனுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். தேநீரின் சுவை வழக்கத்தை விட அப்பொழுது இனிப்பு அதிகமாக இருப்பது போலத் தெரிந்தது.

“சத்தியா, நீங்கள் ….. நல்ல ‘ஸ்மாட்’ ஆக இருக்கிறீங்க!”

“என்ன? இண்டைக்கு மாத்திரமா அப்படி இருக்கிறேன்” – என சிரிக்க முயற்சித்தான் சத்தியன்.

“இல்லை என்றுமே!” என அவள் அழகு காட்டினாள்.

“நீங்களும் தான்”

“என்ன… நானும்?”

“அழகின் சிகரம்!”

அவளுக்கு உடல் சிலிர்த்தது. அவனை இழுத்து அணைத்துக் கொள்ளவேண்டும் போல ஓர் உணர்ச்சி பிறந்தது.

“நல்லாய்க் கதைக்கிறீங்க சத்தியா… இப்படிக் கதைக்க எங்கை பழகினீங்க?” என்றவாறே அவன் கைகளைப் பிடித்தாள் வத்சலா.

சாதுவான நடுக்கம்..ஒரு பக்கம் இன்ப உணர்வு.. வியர்வை – சத்தியன் படபடத்தான்.

“என்ன பயப்படுறீங்களா?”

“இல்லையே!”

சத்தியனின் கையைப் பிடித்து உள் அறைப்பக்கம் கூட்டிச் சென்றாள். உள்ளே அறையில் ஒரு நிலைக்கண்ணாடி இருந்தது. அதன் முன்னே அவனை இழுத்துச் சென்று பக்கத்திலே தானும் நின்றாள். அவள் கை சத்தியனின் இடுப்பை முதுகுப்பக்கமாக வளைத்துக் கொண்டு வந்தது.

“சத்தியா, பாருங்கள்!…எவ்வளவு வடிவாய் இருக்கிறம் ?….உங்களுக்குப் பக்கத்திலை நின்று அழகு பார்க்க வேண்மென்று எவ்வளவு நாளாக ஆசைப்பட்டேன்…” என கண்ணாடியைக் காட்டினாள்.

சத்தியன் கண்ணாடியைப் பார்த்துவிட்டுத் திரும்பி அவள் முகத்தை நோக்கினான்.

“சத்தியா….பிளீஸ் என்னை அணையுங்க”

இப்பொழுது மெதுவாக அவன் கைகள் அவள் இடுப்பில் ஊர்ந்தன. அறையில் இருந்த கட்டிலில் அவனையும் அணைத்துக் கொண்டு இருந்தாள்.

“சத்தியா!” அவள் கைகள் அவன் முதுகைச் சுற்றி வளைத்து இறுக்கின. இன்னும் நெருக்கமாக….வந்து கொண்டிருந்தாள்..இதழ்கள் துடித்தன.

இன்னும் நெருங்கிக் கொண்டே வந்து..நெருங்கிக் கொண்டேன்

“சத்தியா !.. பிளீஸ் ..”

“என்ன வத்சலா?”

தன்னை முத்தமிடுமாறு கண்களினால் உணர்த்தினாள். சத்தியனின் அணைப்பும் இறுகியது.

“வத்ஸீ..” என ஆசை பொங்க அழைத்த பொழுது அந்த ஓசையையும் மீறிக்கொண்டு பெரிதாக மூச்சுக்கள் வெளிப்பட்டன.

அவள் தடவியிருந்த நறுமணப் பவுடரின் வாசம் அவன் மேலும் வீசத் தொடங்கியது.

சத்தியன் கேட்டான், “வத்சலா…இது பிழையல்லவா?”

“இல்லை சத்தியா, வெளியிலே தெரிந்தாற்தானே தவறு என்று சொல்லுவினம்” – எனச் சமானத்தாள்.

“வெளியிலை தெரியவந்தால்?”

“நீங்கள் சொல்லாதவரை ஒருக்காலும் தெரியவராது”.

சத்தியன் சிறிது நேரம் மௌனமாயிருந்தான். பின்னர் கேட்டான்;

“வத்சலா…உங்களுக்கு ஒண்டும் நடக்காதா?”

“நீங்கள் என்ன கேக்கிறீங்கள் எண்டு விளங்குது, அப்படி ஒன்றுமே எனக்கு நடக்காது.”

“எப்படி? – இவன் ஆச்சரியப்பட்டான்.

“என்னைப் பாதுகாத்துக்கொள்ள எனக்குத் தெரியாதா?”

சத்தியன் மௌனமாகிவிட்டான்.

அதன் பின்னரும் ஒருசில வெள்ளிக்கிழமைகளில் வத்சலாவுக்குத் தலையிடி வருவது வழக்கமாகிவிட்டது.

“அவ….குனிந்து பணிந்திருக்கிற பண்பும் அழகும் மாப்பிள்ளைப்பொடியன் குடுத்து வைச்சிருக்க வேணும்!” – மண வீட்டிற்கு வந்திருந்தவர்களின் கருத்து மீண்டும் சத்தியனின் காதில் ஒலித்துக்கொள்கிறது…

இப்படி எத்தனை கேவலங்கள் தான் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கின்றனவோ! ‘சோசல் மூவிங்’ எனும் பண்பான பெயரில் எத்தனை பண்பற்ற காரியங்கள் நடந்து முடிகின்றன. ஆடைக்குறைப்பு தமிழர் பண்பாட்டைப் பாதிக்கிற தென்றால், அது காலத்துக்கேற்ற மாற்றம் என்கிறார்கள். ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் உள்ளங்களும் உணர்ச்சிகளும் கூட காலத்துக்கேற்றவாறு மாறவேண்டுமா?’

பெண்கள் பூப்போல இருக்கவேண்டியவர்கள், பருவத்தில் எல்லோருக்கும் காம உணர்ச்சி இருப்பது இயற்கைதான். அதை உணர்ந்து…உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வாழ்க்கையில் வெல்வதிலன்றோ பெருமை இருக்கிறது. ‘பெண்மை’யே கற்பைக் காத்துக் கொள்வதிற்தானே தங்கியிருக்கிறது?’

ஏதோ ஞானம் பிறந்துவிட்டவனைப்போல் இப்படியெல்லாம் சிந்தித்தான். மறுகணமே வத்சலாவின் நினைவு வந்ததும் உணர்ச்சிவசப்பட்டான். ‘அவள் எங்கேயும் போகமாட்டாளாம். எந்த நேரத்திலும் வந்து சந்திக்கலாமாம்’…என ஆனந்தமாக நினைத்தான்.

‘மனிதர்களுடைய சுபாவம் தான். தன்னைப் பாதிக்காத வரையில், எவ்விதமான இலாபங்களையும், சுகங்களையும் தட்டிக் கொண்டு போகக் காத்திருக்கும் சுயநலமான எண்ணங் கொண்ட ஆண்களும் உள்ளவரை இது போன்ற சீர்கேடுகள் மறையப் போவதில்லைத்தான்’ எனும் நியாயம் தோன்றினாலும் அதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

கட்டிலின் சொகுசு அவளுடைய நினைவை இன்னும் இனிமையாகக் கொண்டு வருகிறது.

அந்தப் பறவை இனிமையாக அலறிக்கொண்டு செல்கிறது.

– பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, ,தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *