உலகம் பரந்து கிடக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 2,729 
 
 

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கடிதத்தை வாசித்து நிமிர்ந்தபோது என் கண்கள் கலங்கியிருந்தன. எதற்கோ வாய்விட்டு அழவேண்டும்போல மனத்தினில் தவிப்பு; கடிதத்தை மடித்து உறையிலிடுகிறேன். கைகளில் நடுக்கம்; நினைவுகள் கடிவாளமிடுகின்றன. 

குழந்தைக் கனவுகள்! 

கந்தையா; எனது ஒரேயொரு தம்பியின் பெயர் அதுதான். என்னிலும் ஏழு வயது இளையவனான அவனை நாரியில் தூக்கித் திரிந்த நினைவுகள் மனதில் கிளர்கின்றன. அவன் பிறந்தபோது, அப்பாச்சி வெளியே வந்து “டேய் முருகையா உனக்கு ஒரு தம்பி பிறந்திருக்கிறானடா” என்று சந்தோஷத்துடன் சொன்னபோது நான் ஐயாவின் ஒருகையைப் பிடித்துக் கொண்டு, முற்றத்துப் பலாமரத்தின் கீழ் நின்றிருந்தேன். ஐயா வேப்பங்குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்தார். 

நான் ஐயாவின் கையை உதறிவிட்டு, எனக்குத் தம்பி பிறந்த செய்தியை என்னுடைய நண்பர்களுக்குச் சொல்ல ஓடியது இப்போதும் நினைவிருக்கிறது. ‘எனக்கல்லோணை ஒரு தம்பி பிறந்திருக்கணை’ என்று ‘வீரம்’ காட்டிச் சொன்னதும் இப்போதும் நினைவிருக்கிறது. 

அந்தக் கடிதத்தைப் படித்ததினால் அந்தக் கடிதத்தோடு தொடர்பற்ற ஆனால் அவனோடு தொடர்புள்ள பழைய நினைவுகள் மனத்தில் மிதக்கின்றன. அவனா அந்தக் கடிதத்தை எழுதினான்? 

அவன் இப்போது இருபத்திரண்டு வயது வாலிபன். அவன் வளர்ந்த கதையின் சில மங்காத நினைவுகள் மனதில் இழையோடுகின்றன. குழந்தைப் பருவத்தில் கைதட்டி ஓடி விளையாடிய போது அவனது புலிப்பல்லுச் சங்கிலி அறுந்து தொலைந்தது; முற்றத்துப் பலாமரத்தின் அடிப்பகுதியில் காய்த்த மூன்று பலாக்காய்களைப் பிடுங்கிவிட்டு நாங்கள் பிடுங்கவில்லை யென்று பொய் சொன்னது; கிராமத்துப் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த அவனை நான் கூட்டிச் சென்று, நான் படித்த கல்லூரியில் சேர்த்தது; கல்லூரிக்குப் போகும் வழியில் களவாக விளாங்காய் பிடுங்கும்போது அகப்பட்டது; பருவ இயல்பினால் நான் ஒருத்தி மீது ‘சலனம்’ கொண்டிருந்தபோது அவளும் என் மீது சலனம் கொண்டிருக்கின்றாளென்று தெரிந்தபோது அவளை அண்ணி என்று அழைத்தது….; 

அந்த அவனா, என் தம்பியா இந்தக் கடிதத்தை எழுதியிருக்கின்றான். இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் காதலித்தவளை கைபிடிக்க முனைந்தபோது அவளொரு சிங்களப் பெண் என்ற காரணத்திற்காக, என் பெற்றோர் அதை எதிர்த்தபோது நான் மிக உணர்ச்சி வசப்பட்டிருந்தேன். பெற்றோரின் உணர்ச்சிகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து அவளை ‘மறந்து’விடுவதா அல்லது அவர்களை மீறி எனக்காகப் பிறந்தவளைக் கைப்பிடிப்பதா என்று எனக்குள்ளே நான் போராடினேன். எமது குடும்பச் சூழலின் ‘பாரம்பரிய ஒழுக்கக் கோட்பாடுகளில்’ நம்பிக்கைவைத்து, ‘பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக’ நான் வளர்ந்திருந்தேன். அதே நேரத்தில், உத்தியோக காரணத்தினால் எனது குடும்பத்தை, எனது கிராமத்தை விட்டு, ‘வெளியுலகைத்’ தரிசித்த நான், புதிய சூழல் நண்பர்களின் தாக்கத்தினால் புதிய கொள்கைகள் புரட்சிக் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப் பட்டிருந்தேன். 

அந்தச் சூழலில் அவள் அறிமுகமாயிருந்தாள். நான் அவளால் கவரப்பட்டேன். அவளுந்தான்…..; 

நான் அவளை மணக்கக்கூடாது என்பதற்கு, எனது பெற்றோர் காட்டிய நியாயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ‘ஒரு சிங்களப் பெண்ணால் ஏன் ஒரு நல்ல மனைவியாக இருக்க முடியாது’ என்று நான் அவர்களைக் கேட்டேன். அம்மா, பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் குலப் பெருமைகளைச் சொன்னாள். எங்களினத்தில், எங்களினத்தில்தான் நாங்கள் மணத்தொடர்புகள் வைத்திருக்க வேண்டும்; அப்படித்தான் இதுவரை வைத்திருந்தோம் என்றும் சொன்னாள். ‘சாதி கெட்டதுகள் பிரியனுக்கு அடங்கிய பெண்சாதியாக மாமியாருக்கு அடங்கிய மருமகளாக இருக்கமாட்டாளவை’ என்று வாதாடினாள். எனக்காக எத்தனையோ பெரிய இடங்களில், எத்தனையோ ‘குணபூஷணிகள்’ – அழகு சுந்தரிகள் காத்திருக்கிறார்களென்றும் எவ்வளவோ சொத்துக்கள் எனக்கு வந்து சேருமென்றும் சொன்னாள்; மன்றாடினாள்; வயதான காலத்திலை எங்களை வருத்தாதையடா’ என்று அழுதாள். 

எனக்கு இதொன்றும் பிடிக்கவில்லை. நான் அம்மாவுக்குச் சொன்னேன். 

‘அம்மா, காலம் மாறமாற அதுக்கேற்ப மனிசனும் மாறத்தானே வேணும். இந்தப் பரந்து விரிஞ்ச உலகத்திலை தமிழன், சிங்களவன், சோனகன், பறங்கி எண்ட வித்தியாசங்களெல்லாம் இனிமேல் இல்லாமல் போகும். மனிதனெண்ட ஒரு சாதியும், அதன் வாழ்க்கைப் போராட்டங்கள், உணர்ச்சிகளும் தானம்மா இனி இருக்கும்; அந்த மனித சாதியுக்கை நான் எனக்கொரு அடிமையைத் தேடேல்லை. எனக்குப் பிடித்த ஒரு மனைவியை – என்னுடன் வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொள்ளத் தோதான ஒருத்தியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.” 

அம்மா என்னை முழிசிப் பார்த்துக்கொண்டு, எங்கடை விருப்பத்திற்கு மாறாய்ப் போனா, நீ எங்களுக்குப் பிள்ளை இல்லையெண்டு சொன்னாள். பின் குலுங்கிக் குலுங்கி அழுதாள். 

நான் எனக்குள் போராடினேன். என் பெற்றோரின் என்னைப் பற்றிய ஆசைக் கனவுகள் எப்படி எப்படியிருக்குமென எனக்குள் எண்ணிப் பார்த்தேன். அவற்றையெல்லாம் நான் சிதைக்கத்தான் வேணுமா? 

என்மனத்தில் அவள் புன்முறுவல் கோலந்தெரிந்தது. அந்த நளினத்தில் – அந்த அழகோவியத்தில் அந்தக் குணாதிசயத்தில் மாறுகின்ற காலத்தின் கோலங்களைப் புரிந்துகொண்ட அந்த மனப்பக்குவத்தில், நான் என்னையே மறந்துவிட… இல்லை இழந்துவிட…

அவள் எனக்கேற்றவள்; அவளேதான் எனக்கேற்றவள். 

பழைய தலைமுறையினரின் அழிவும் புதிய தலைமுறையினரின் தோற்றமும், பழைய நம்பிக்கைகளின் அழிவும் புதிய நம்பிக்கைகளின் தோற்றமும்; பழைய கருத்துக்களின் வீழ்ச்சியும் – புதிய கருத்துக்களின் எழுச்சியும்…. 

அன்றைய மங்கலான மாலையில், கையில் ஒரு சூட்கேசுடன் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். எங்கள் சின்னவீட்டின் குசினி அறையிலிருந்து விம்மல் சத்தம் கேட்டது. கிழவனின் இருமல் சத்தம் கேட்டது; ஆட்டுக்குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டது; முற்றத்துப் பலாமர இலைகள் காற்றில் அசையும் சத்தம் கேட்டது. 

அப்போது வாசல் கதவின் நிலைப்படியைப் பிடித்துக் கொண்டு, அவன் – என் தம்பி சொன்ன அந்த வார்த்தைகள்……. 

“அண்ணா நீ போகிறாய், புரட்சிகள், புதுமைகள் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறாய்; நேற்றுச் சந்தித்த யாரோ ஒருத்திக்காக, காலங்காலமாக இரத்தத் தொடர்போடு கூடிய, பாச உணர்ச்சி இழைகளை அறுத்துக்கொண்டு போகிறாய். உனது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக உனது சுய திருப்திக்காக – உன்னைப் பெற்று வளர்த்து, உருவாக்கிய தெய்வங்களின் உணர்ச்சிகள் ஆசைகளை அழித்து அந்த அடிப்படையில் நீ வாழப்போகிறாய் அண்ணா; ஆனால் இந்தத் தம்பி உன்னைப்போல உணர்ச்சி, காதல் என்பவற்றைப் பெரிதாக மதித்து தன் நன்றியை – செய்ய வேண்டிய கடமைகளை மறந்து ஓடிவிடமாட்டான்;” 

அப்போது அவனுக்கு இருபது வயது; எனக்கும் துக்கமாகத் தான் இருந்தது; கண் கலங்கிக் கண்ணீரும் வந்தது. அவன் வார்த்தைகளைக் கேட்ட நான், அந்தத் துக்கத்திலும் சந்தோஷப்பட்டேன். எனது பெற்றோருக்கு நான் கையாலாகாதவனாகப் போனாலும் -என் தம்பி அவர்களைக் கைவிடமாட்டானென எண்ணினேன். 

அவனா அன்று அப்படிச் சொன்ன என் தம்பியா இக்கடிதத்தை எழுதியிருக்கிறான். கைகள் நிலைகொள்ளாது நடுங்க – உறைக்குளிருக்கும் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படிக்கிறேன். 

‘அண்ணாவுக்கு……!’ 

அன்புள்ள அண்ணாவுக்கு என்றுகூட அவன் எழுதவில்லை. என்னை ஓர் அன்புள்ள அண்ணனாக அவன் கருதியிருக்க முடியாதுதான். அன்று அந்த மங்கிய மாலை நேரத்தில், அம்மாவின் வில்லைக் கேட்டுக் கொண்டு, ஐயாவின் தாளாத இருமலைக் கேட்டுக்கொண்டு, தம்பி உணர்ச்சிவசப்பட்டுச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியவன் பின் அவர்களுடன் எதுவித தொடர்புகளுமே கொள்ளவில்லை; அவர்கள் சுக துக்கங்களில் பங்குகொள்ள வில்லை. சுமணா -என்மனைவி எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும்கூட, வெறும் வீம்பில் சும்மா இருந்துவிட்டேன். நான் எங்ஙனம் ஓர் அன்புள்ள அண்ணனாக, அருமை மகனாக இருக்கமுடியும்? 

“இந்தக் கடிதம் உனக்குத் திகைப்பை ஏற்படுத்தலாம். அன்று நீ வீட்டைவிட்டு வெளியேறிய போது, நான் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ சொல்லியிருந்தேன். ‘காலச் சிலந்தி வலைபின்னி ஓடுகின்ற ஞாலத்’தின் போக்குகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்காது, வெறும் சம்பிரதாய பழைய மரபுகளையும் நம்பிக்கைகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டு வாழமுடியாது என்பதை நான் இப்போது உணர்ந்துகொண்டேன். அன்று நீ செய்தவை நியாயமானவை என்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன்’. 

ஏற்கனவே, ஒரு முறை படித்திருந்தபோதிலும் கூட, இப்போதும் அந்தத் ‘தவிப்பு’ மனதைக் குமைக்கின்றது. அவனும், என் தம்பியும் அவர்களைக் கைவிட்டுவிட்டானா? அவர்கள் எப்படித்தான் வாழப் போகிறார்களோ……? 

“அண்ணா, உலகத்தில் காலநிலை சரியில்லாவிட்டாலும், இயற்கைநிலை சரியில்லாவிட்டாலும், புயல் அடித்தாலும், வெயில் எறித்தாலும் அவற்றையெல்லாம் இலட்சியம் செய்யாமல் தன்பாட்டிலேயே வளர்கின்ற ஒரு ‘வஸ்து’ இருக்கிறது. வட்டி அண்ணா வட்டி; எவ்வளவு காலத்துக்குத்தான் உள்ள சொத்துக்களைக் காட்டி, காட்டி கடன்பட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கமுடியும். வட்டி கூட கொடுக்கமுடியாதபோது எவ்வளவு காலத்திற்குத்தான் மற்றவர்கள் கடன் தருவார்கள். இந்தச் சூழலில் என் படிப்புக்குத் தக்க வேலை கிடைக்காவிட்டாலும், நான் தொழில் செய்ய முனைந்தேன். வீரசிங்கத்தின் சுருட்டுக் கொட்டிலில் சுருட்டுச் சுற்றப்போனேன்.” 

“வீட்டில் பூகம்பம் நிகழ்ந்தது. அம்மாவும் ஐயாவும் சண்டைக்கு வந்தார்கள். எமது கௌரவம் என்ன? குலப்பெருமை என்ன என்று என்னைக் கேட்டார்கள். சபை சந்தியிலை எங்களை மதிப்பினமே, என்று அம்மா கேட்டாள்; ‘ஆளைக் கண்டிட்டு, சால்வையைத் தூக்கிக் கமக்கட்டுக்கை வைக்கிறவங்கள் நாளைக்கு எங்களை மதிப்பினமோ” என்று ஐயா கேட்டார். பரம்பரை பரம்பரையாக விதானையாக இருந்தவர்கள் கல் வீட்டுக்காரராக வாழ்ந்தவர்கள், மற்றவர்களுக்கு கீழை வேலை செய்யக்கூடாதென்று ஐயா சொன்னார். நான் வேலையை விட்டுவிட்டேன்”. 

“அண்ணா, பசிக்குச் சாப்பிடாவிட்டால், அந்த நேரத்துச் சாப்பாட்டை பின்பு சாப்பிடத் தேவையில்லைத்தான். ஆனால், எத்தனை நாளுக்குத்தான் அரைப்பட்டினியாகவும், முழுப்பட்டினியாகவும் காலத்தைத் தள்ளவேண்டுமென்று யோசித்தேன். இந்த மலைமாதிரி உடம்பை வைத்துக்கொண்டு, நான் ஏன் சும்மாயிருக்கவேண்டும். பழைய கௌரவங்களும், அந்தஸ்துகளும், குலப்பெருமைகளும் எங்களுக்குச் சோறுபோடாது என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். நான் எங்கேயாவது சென்று, வேலைசெய்து உழைக்க வேண்டுமென்று சொன்னேன்.” 

“ஐயா சொன்னார்; ‘ஒரு பிள்ளை கட்டை அறுத்துப்போட்டுப் போட்டுது; நீயும் உன்ரைபாட்டிலை போ; நாங்கள் பசி கிடந்தாலும், கௌரவத்தோடை சாவோம்”. 

என் கைகள் நடுங்கின. இவர்கள் ஏன் இப்படி இருக்கவேண்டும்? பசி கிடந்தாலும் கௌரவத்துடன் சாவார்களா? நல்ல கெளரவம்; ஏன் பசி கிடக்க வேண்டும். பழைய வரட்டுக் கௌரவங்களையும் பரம்பரைக் குலப் பெருமைகளையும் விட்டு, காலத்தோடு இவர்கள் ஏன் ஒத்துப் போகக்கூடாது. பழைய தலைமுறைக் கருத்துக்களின் இறுதிச் சின்னங்களா இவர்கள்? 

“அண்ணா! எனக்கு இருபத்தியிரண்டு வயதாகின்றது. என்றாலும், வெட்கத்தை விட்டு உனக்கொன்று சொல்கிறேன். நானும் கலியாணம் செய்யப் போகிறேன் அண்ணா; இந்தப் பரந்த உலகத்தில், எனக்குத் துணையாய் வர ஒருத்தி காத்துக்கொண்டு இருக்கிறாளண்ணா; இதுகூட அவர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் இதற்குக்கூட அவர்கள் சம்மதிக்கமாட்டார்கள்; இங்கும் குலப்பெருமைகளும், கௌரவப் பிரச்சனைகளும் தலையெடுக்கும். இதைப்பற்றி யோசித்தபோது உன் நிலைமையை நான் புரிந்துகொண்டேன்”. 

”இந்தக் கட்டுப்பட்ட வேதனைகள் நிறைந்த வாழ்க்கையைவிட்டு, வாழ்க்கையின் அர்த்தங்களும், நம்பிக்கைகளும் நிறைந்த பரந்த உலகத்தில் நான் காலடி எடுத்து வைக்கப்போகின்றேன். என்னுடன் கைகோர்த்துக்கொண்டு அவளும் வருவாள். என்னால் வேறெதுவும் செய்யமுடியாது. எனக்கும் வாழ்க்கை பற்றிய ஆசைகளும், அர்த்தங்களும், நம்பிக்கைகளும் உண்டு”. 

என் கரங்கள் நடுங்கினாலும், எனது மனம் வேதனைப்பட்டாலும், நான் அவர்களை விட்டுப் பிரிந்த – அந்த மங்கிய மாலை நேரத்துச் சூழல் மனத்தில் விரிந்தாலும் நானென்ன செய்யமுடியும்; காலத்தின் கருத்துக்களோடு ஒட்டி நாங்களும் வாழத்தானே வேண்டும். அவர்களும் தங்கள் நம்பிக்கைகளுடன் இன்னும் எத்தனை காலந்தான் வாழ்வார்களோ….? 

மனத்தில் ஏதோ ஊருகின்ற மாதிரியான வேதனை; கையிலிருக்கும் கடிதம் காற்றில் பரபரக்கின்றது. என் கண்களுக் கப்பால் உலகம் பரந்து கிடக்கின்றது. 

“ஒருமுறை சென்று அவர்களை என்னுடன் வரச்சொல்லிக் கேட்டுப் பார்க்கலாந்தான்! அவர்கள் வருவார்களா…?”

– வாணி இதழ், 13.10.1972

– கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்க கலாசாரப் பெருமன்றம் வெளியிட்ட உயிர்ப்புகள் தொகுதியில் இடம்பெற்றது.

– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.

Print Friendly, PDF & Email
ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு 1 ஆகத்து 1946 – 24 ஏப்ரல் 2023, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். ஜீவநதி 2022.06 (174) (குப்பிழான் ஐ. சண்முகன் சிறப்பிதழ்)https://noolaham.net/project/1029/102876/102876.pdf இவரது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *