கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 3,643 
 
 

(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இவள் இறந்துபோய் விட்டால் எனக்கு நிம்மதி! எப்போது சாவாள்? எனக்கு எரிச்சல் வருகிறது. பக்கத்துப் படுக்கையைப் பார்க்கிறேன். இரவு விளக்கின் மங்கிய ஒளியில் அவள் கொட்டக்கொட்ட விழித்தபடி படுத்திருப்பது தெரிகிறது. சனியன்…இன்னும் தூங்காம விழித்துக் கொண்டிருக்கிறாள்!’

அவள் மெல்லத் திரும்பி என்னைப் பார்க்கிறாள்.”இன்னும் நீங்க தூங்கவில்லை? எனக்குத்தான் இந்தப் பாழாய்ப்போன வியாதி, தூங்க விடாம இம்சை பண்றது? நீங்க தூங்கக் கூடாதா?”

அவள் இருமியபடி மெல்ல என்னிடம் கேட்கிறாள்.

எனக்கு ‘ஷாக்’ அடிக்கிறது.

“சீ…சீ… என்ன வசு இப்படிச் சொல்லிட்டே…. பன்னீரண்டு மணிக்கு உனக்கு ‘ஆண்டிபயாடிக்’ தரணும், அப்புறம்…”

“ஆமாம்… அப்புறம் ரெண்டு மணிக்கு ஹார்லிக்ஸ் தரணும். மறுபடியும் நாலு மணிக்கு மருந்து.. இப்படியே மணிக்கணக்கா ‘நர்ஸ்’ மாதிரி மருந்தும் ஹார்லிக்ஸும் தந்துண்டு இருக்கேளே…எப்போ விஷம் தரப்போறேள்?”

அவள் அழுகிறாள். எனக்குப் பாவமாக இருக்கிறது. அவன் தலையை மெல்ல வருடுகிறேன், மயிரெல்லாம் கொட்டித் தலையெல்லாம் சொட்டை சொட்டையாக…உடம்பைத் தொடுகிறேன்…சதையெல்லாம் வற்றி எலும்பு எலும்பாக… அந்த உள்ளம்?.. அதைத்தான் நாள் ரொம்ப வருஷங்களுக்கு முன் தொட்டு விட்டேன்!

அருவருப்பை என் மனத்துன் அழித்துக் கொண்டு அவளைப் பார்க்கிறேன்.

வசுமதி என்கிற வசு அழகாக, இளமையுடன், சதைப் பிடிப்புடன் ‘கல்கல்’ என்ற சதங்கை ஒலியுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறாள்!

நீள நீளமான விரல்கள், அதில் பூசப்பட்ட ‘ஆஸ்டா’வில் விரல்கள் இன்னும் அழகாக இருக்கின்றன. அவள் சிரிக்கும்போது ‘லிப்ஸ்டிக்’ சிவப்புக்கு இடையே பற்கள் பளீரென்று மின்னுகின்றன. அவள் பரதநாட்டிய உடைகளுக்கு நடுவே சின்ன இடை வெண்மையாகச் சிரிக்கிறது. கால்களைத் தூக்கி அவள் ஆடும்போது பஞ்சுப் பாதங்கள் கொஞ்சும் சலங்கையுடன் ‘தாம் தீத்தாம்’ போடுகின்றன. “தெருவில் வாரானோ?”- என்று அவள் மேடையில் தேடினால், என்னைத் தான் தேடுவதாக நினைத்துக்கொள்வேன்.

“பாலும் கசந்ததடி, படுக்கை நொந்த தடி” – என்று அவள் முகத்தை பாவத்துடன் கழிக்கும்போது-“நான் வரட்டுமா?” என்று எனக்குள் கேட்டுக் கொள்வேன்.

“நீல மயிலே. கோல் மயிலே” என்று அவள் மயிலைத் தூது விடும்போது அவளைச் சிவகாமியாகவும், என்னை மாமல்லனாகவும் சுற்பனை செய்து கொண்டு மகிழ்வேன்.

நான் ஒரு சபாவின் செக்ரட்டரி. எங்கள் சபாவில் குமாரி வசுமதியின் நடனங்கள் அடிக்கடி. நடந்து கொண்டே இருக்கும். நானும் அவள் வீட்டுக்கு அடிக்கடி நடப்பேன். நான் அழகாக இருப்பேன்.. சிவப்பாக.. ராஜபார்ட் களை முகத்தில்.

நாடக அனுபவங்கள் இதயத்தில் நளினங்கள் என் இயல்பில் விரிசல்கள் என் வாழ்வில்!

ஆரம்பத்தில் தன் நடனக் கச் சேரிகளுக்குக் கறாராக அவள் ‘ரேட்’ பேசினாள். அப்புறம் சிரித்தாள். அப்புறம் கொஞ்சம் தன் கண்டிஷன்களைத் தளர்த்திக் கொண்டாள். அப்புறம் காப்பி டிபன் தந்தாள் எனக்கு, அப்புறம் நான் சன்மானத் தொகையுடன் சில பரிசுகள் என் செலவில் வாங்கித் தந்தேன், அப்புறம் சன்மானத் தொகையே தராமல் பரிசுகள் மட்டும் தந்து கொண்டிருந்தேன்.

அப்புறம்…..

அவள் படுக்கை அறையில் எனக்குப் பரிசுகள் தர ஆரம்பித்தாள்.

தப்பிதமாக நினைக்காதீர்கள், எங்களுக்குத் திருமணமாகி விட்டது.

குமாரி வசுமதி மிஸஸ் வசுமதி ராமச்சந்திரன் ஆனாள்.

அடியேன் பெயர்தான் ராமச்சந்திரன்,

ஆரம்பத்தில் அவள் கச்சேரிகள் சுவைத்தன, மூன்றாம் மனிதனாக மூன்றாவது வரிசையில் அமர்ந்து கொண்டு அவள் நடனத்தைக் கண்டு களித்த நான், இப்போது உரிமையுடன் முதல் வரிசையில் அமர்ந்து உற்றுப் பார்த்து ரசித்தேன்.

ஆனால் என்னால்தான் அதே மாதிரி அமர்ந்திருக்க முடியவில்லை.

என் பெண்டாட்டியின் உடம்பை அத்தனை பேரும் ரசிக்கிறீர்கள் என்கிற நினைப்பு: “பாலும் கசந்ததடி” – என்று அவள் பாடினால் யாராவது ஒருவன் முன்பு நான் நினைத்த மாதிரியே நினைப்பானே என்று குறுகுறுப்பு!

மொத்தத்தில் உறவின் வட்டம் அதிகமாக, நான் சுருங்கிப் போனேன்.

அப்போதுதான் அந்தத் தடை உத்தரவை அவளுக்குப் போட்டேன்.

“இனி நீ மேடையில் நடனமாடக்கூடாது.”

இதைக் கேட்ட அவள் ஆடிப்போனாள், அதிர்ந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஒரேயடியாக அவள் வாழ்வே ஆட்டம் கண்டது. அவன் ஆடுவதை நிறுத்திவிட்டாள். ஆனால் இப்போது நான் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஆமாம். திடீரென்று ஒரு அட்டாக்!

திடீரென்று கைகால்கள் மரத்துப் போய் விட்டன என் வசுவுக்கு. அன்று படுக்கையில் வீழ்த்தவள்தான்..

அவள் காலில் அடிபட்டிருந்தால் கூடக் குணமாகி ஆடியிருப்பாள்.

நாள் போட்ட தடையுத்தரவு அவள் இதயத்தில் வீழ்ந்த அடி…

வாழ்வில் வீழ்ந்த அடி….!

நானும் இத்தனை பெரிய பின் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை.

கைகால்களை அசைக்க முடியவில்லை.. உடம்பே மரத்துப் போன மாதிரி ஆகி விட்டது! எனக்கு உறுத்தியது.

“என்னால்தான் உனக்கு இந்தக் கத்தி…உன்னை ராப்பகலாகக் கவனித்துக் குணமடையச் செய்து மறுபடியும் உன்னை மேடையில் நடனமாட வைப்பது என் பொறுப்பு” என்று அவள் மெலிந்த கரங்களைப் பிடித்துக் கொண்டு சத்தியம் செய்தேன், அவள் விரக்தியாகச் சிரித்தாள்.

நர்ஸ் போடாமல் நாலே அவள் தேவைகளைக் கவனித்தேன். ஆனால்? இப்போது கொஞ்ச நாட்களாக எனக்கு எரிச்சல் வர ஆரம்பித்திருக்கிறது.

என் உறுத்தல்கள் மறைந்து இவள் செத்துத் தொலைக்க மாட்டாளா என்கிற ஆத்திரம் வர ஆரம்பித்திருக்கிறது. நான் தூங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன!

இவள் படுக்கையில் வீழ்த்ததிலிருந்து நான் எழுந்து உட்கார்ந்து விட்டேன். டாக்டர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத வியாதி!

என் தூக்கத்தையும் பணத்தையும், இளமையையும் பலி கேட்கும் வியாதி!

நான் ஏன் பைத்தியக்காரனைப் போல் “நர்ஸ் வேண்டாம்.. நானே கவனிக்கிறேன்” என்று சொன்னேன்?

அதன் விளைவுதான் – காலையில் அவளுக்குப் பல் தேய்த்து விட்டு; மருந்து தந்து, காப்பி தந்து, ரொட்டி, வாட்டித் தந்து… உடம்பைத் துடைத்துவிட்டு. டெம்பரேச்சர் பார்த்து ‘சார்ட்’ எழுதி. வேளைப்படி எல்லாம் செய்து..

எனக்கு அலுத்து விட்டது.

இப்போது அந்த உடம்பில் உயிர் மட்டும் எங்கோ ஒட்டிக் கொண்டிருந்தது. என் உள்ளத்தில் பாசமில்லை.

படுக்கையைச் சுத்தம் செய்து அவளைப் படுக்கையில் கிடத்தினேன். அவள் – ஆயாசத்துடன் சாய்ந்தாள்.

“நாளைக்கு என்ன நாள்….? ஞாபக மிருக்கா?” – அவள் மெல்லக் கேட்டாள்.

“என்ன நாள்? எனக்கு இப்போ ஒரு எழவும் ஞாபகம் வரதில்லை.”

நிஜமாகவே கொஞ்சம் கோபமாகச் சொல்லி லிட்டேன் போலிருக்கிறது. அவள் விம்முகிற சப்தம்.

‘சட்’டென்று திரும்பிப் பார்த்தேன்.

“நாளைக்கு இழவு நாள்தான். எனக்கில்லை…. உங்களுக்கு,”

“என்ன பேத்தறே? ஸாரி வசு..ஏதோ கோபத்துலே..” – நான் குழைந்தேன்.

“உங்க கோபத்துக்கு நியாயம் இருக்கு, நாளைக்கு நம்மளோட வெட்டிங் அன்னிவர்சரி டே. உங்களைப் பொறுத்தவரை என்னைக் கல்யாணம் பண்ணிண்டதுதான் உங்களோட துன்பத்துக்குக் காரணம். அது இழவு நாள்தான்…”

நான் அவள் கண்களைத் துடைத்தேன். ”என்ன வசு இது? நீ கூடிய சீக்கிரம் குணமாகத்தான் போறே… பழையபடி டான்ஸ் ஆடத்தான் போறே. நான் முதல் வரிசையிலே உட்கார்த்து ரசிக்கத் தான் போறேன்…”

-என் குரலில் பொய் என்னைக் காட்டிக் கொடுக்குமோ என்ற பயம் எனக்கு. ஆனால் ஒரு நிமிடம் வசு பேசாமல் இருந்தாள். அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாளோ என்னவோ?

“இனிமேல் நான் குணமாகணும்கிறது வெறும் கற்பனை. என் சாவுலேதான் இனிமே பரிபூரண குணம்… உங்ககிட்டே ஒரு சின்ன வேண்டுகோள்….நான் கூடிய சீக்கிரம் உங்களுக்குத் தொல்லை கொடுக்காமப் போயிடுவேன்னு நினைக்கிறேன், அப்புறமா நீங்க சந்தோஷமா இருக்கணும், இன்னொரு கல்யாணம்.”

நான் சட்டென்று அவள் வாயைப் பொத்துகிறேன்.

“சரி, சரி. அதையெல்லாம் பற்றி அப்புறமாப் பேசலாம். நாளைக்கு நம்ம வெட்டிங் அனிவர்சரி… அதை முதல்லே சந்தோஷமாக் கொண்டாடுவோம்…”

அவளை மெல்ல என் தோள்களில் சாய்த் துக்கொண்டு தட்டித் தூங்கப் பண்ணுகிறேன். குளிருக்கு அடக்க ஒடுக்கமாகப் படுத்துக் கொண்டிருக்கும் பூனைக் குட்டி போல் அவள் என் தோள்களில் கைகளை முடக்கிக் கொண்டு ஒடுங்கிப் படுத்துக் கொண்டாள், சோளத்தட்டை மாதிரி எத்தனை இலேசாக இருக்கிறன் இவள்!

ஆனால்…?

காலையில்…?

அவள் ரொம்பக் கனத்தாள், என் தோளிலிருந்து அவளை விலக்க முடியவில்லை.

என் தோளை அழுத்தியபடி, என் கைகளைக் கட்டியபடி… என் வசு உறங்கிப் போனாள், ஒரேயடியாக உறங்கிப் போனாள்…!

அவள் சொன்னது நிஜம்தாள், மறுநாள் எனக்கு இழவு நாள்! என் வசு செத்துப் போன இழவு நாள்!

ஆனாலும் என் மனத்துள் நிம்மதி….

இனி வசுவின் துன்பம் இல்லை. பிக்கல் இல்லை. பிடுங்கல் இல்லை…. தூக்கம் விழிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கூடிய சீக்கிரம் திருமணம். ஆமாம்…அதற்குள் பெண் கேட்டு வர ஆரம்பித்து விட்டார்கள். நான்தான் போலி நடிப்புக் காட்டிய வண்ணம் இருக்கிறேன்.

கூடிய சீக்கிரம் வேறு திருமணம் செய்து கொண்டு…..

ஆனால்….?

இப்போதெல்லாம் இரவு தூக்கம் வர மாட்டேன் என்கிறது. திடீர் திடீர் என்று ராத்திரி பன்னிரண்டு மணிக்கும் இரண்டு மணிக் கும் நான்கு மணிக்கும் விழித்துக் கொள்கிறேன்.

கண்களை மூடினால்…

“தண்ணி…”

“மருந்து தரேளா?”

“தாகமாக இருக்கு”

வசு எங்கிருந்தோ குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள், திடீர் திடீரென்று தூக்கி வாரிப் போடுகிறது.

தோள்கள் கனக்கின்றன…. ‘சட்’டென்று விழித்துக் கொள்கிறேன்.

“என் கைகளை யாரோ பிடிக்கிற மாதிரி..

“வசு! வசு!..நீ எங்கிருக்கிறாய்?”

நான் புலம்புகிறேன். நான் தூங்கி ரொம்ப நாட்களாகி விட்டன.

என் வசு வெளியில் இல்லை. என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறாள். அந்த உறுத்தல் இருக்கும்வரை நான் உறங்க முடியாது!

காலியாகக் கிடக்கும் பக்கத்துக் கட்டிலைத் தடவியபடி ‘வசு.. வசு!’ என்று பிதற்றியபடி, இப்போதுதான் எதையோ புதிதாகப் புரிந்து கொண்டவன் போல், தூக்கமில்லாமல், ‘உறுத்தல்’ இரவுகளை ஒவ்வொன்றாகக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.

– 1980-02-24

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *