கிராமத்து பகுதியில் நகர வாசமே சிறிதும் அறிந்திராத குடும்பத்தில் பிறந்த மாயனுக்கு ஆடு, மாடு, மாட்டு வண்டி வாங்க வேண்டும், சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும், அத்தை மகளைத்திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனதில் ஆசை தோன்றிய அளவுக்கு படிக்க வேண்டும், வேலைக்குச்செல்ல வேண்டும், பதவி பெற வேண்டும் எனத்தோன்றாததற்கு காரணம் அப்படிப்பட்ட நோக்கமுள்ளவர்களுடன் அவனது குடும்பத்தினர் யாருக்கும் பழக்கமில்லாததே காரணம்.
மாயன் ஒரு வீரனைப்போன்ற துணிச்சல் கொண்டவன். ‘முரடன்’ எனும் பெயர் கூட அவனுக்கு உண்டு. ‘கிணற்றில் குதி’ என நம்பிக்கைக்குரியவர்கள் கூறி விட்டால் உடனே குதித்து விடுவான்.
“சீர்ற பாம்ப கால்ல முதிக்கிற வயசுங்கிறது மாயனப்பொறுத்த வரைக்கும் செரியாத்தான் இருக்குது. எளங்கன்னு பயமறியாதுங்கற மாதர அவம்போற போக்கப்பாத்தா பயமா இருக்குது” என மாயனின் தாய் மாரியம்மா பேசி வருந்தினாள்.
“நானுந்தா சின்ன வயசுல அவனாட்ட இருந்தேன். உன்னகண்ணாலம் பண்ணுன பின்னால பொட்டிப்பாம்பாட்ட அடங்கிப்போலியா...? அத மாதர அவனுக்கும் ஏதோரு பொண்ணப்பாத்து ஒரு கால் கட்டப்போட்டா எல்லாஞ்செரியாப்போகும் புள்ளே…” தந்தை மாரனின் பேச்சை மட்டும் ரசிக்கவில்லை மாயன்.
“பத்தேக்கரா காடு, பண்டங்கன்னு அம்பது உருப்படி, மாட்டு வண்டி, ஓடு போட்ட ஊடு இல்லாம கண்ணாலங்கெடையாது, ஒன்னுங்கெடையாது. சிங்காரி அத்த புள்ள பொங்கிய என்ற மனசுக்கு புடிச்சிருக்குது. அவிங்களுக்கு பத்தேக்கரா இருக்கறதுனால நம்முளுக்கும் இருந்தாத்தா பொண்ணு கேட்கவே வரோணும்னு அவளோட அப்பங்காரன் கண்டிப்போட சொல்லிப்போட்டான்னு நேத்து கல்லாங்காட்டுக்குள்ள ஆட்டுக்கு தள வெட்ட வந்தவ நேராச்சொல்லாம சாடையா தூரமா நின்னு சொல்லிப்போட்டுப்போறா….”
“இப்பவே காடு வாங்கோணும்னா காசுக்கு திருடத்தாம் போகோணும். காசத்திருடுனா போலீஸ் புடிச்சிட்டு போயிரும்…. அதுக்கு பொங்கியவே திருடீட்டா…?”
“நீ என்னம்மா அருத்தமில்லாம ஒளர்றே….? அவள திரட முடியுமாக்கு....?”
“ஏண்டா திருட முடியாது….? தூங்கீட்டு இருக்கற போது தூக்கீட்டு வந்து தாலியக்கட்டிப்போடு… அவ உன்ற பொண்டாட்டியாயிட்டா அத்தைக்காரி புருசன் வித்தகாட்ட முடியாது. அப்பறம் அவள ஒரு பையங்கட்ட வர மாட்டாங்கிறதுனால பொண்ணோட சொத்தும் கெடைச்சுப்போகும். பஞ்சத்தோட வாழற நாம பண்ணையாரு மாதர வாழ்ந்து போடுலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்ச மாதர இருக்கும்ல… என்ன நாஞ் சொல்லறது….?”
“நீ சொல்லறது என்னுமோ நல்லாத்தா இருக்குது. எனக்கு பொங்கியப்பாத்து தூரமா நின்னு பேசுனாலே ஒடம்பெல்லாம் நடுங்கி ஒதரலெடுக்குது. அவளோட அப்பம்பக்கத்துல தான் அவ ஒன்னங்கொழந்தையாட்ட படுத்து தூங்குவாளாமா. அவரு பெருசா ஒரு கொடுவாள தலகிணிக்கடில வெச்சுட்டுத்தாந்தூங்குவாராமா… இவளத்தூக்கறதப்பாத்துட்டாருன்னா என்ற தலைய சீவிப்போடுவாரு… உன்ற ரோசன எனக்கு சரீன்னு படுல… வேற ஏதாச்சும் வழி இருந்தாச்சொல்லு பாத்துக்கறேன்…”
“இப்படி பக்கத்தாடி வா சொல்லறேன்” என அழைத்த தாய் தன் மகன் காதில் எதையோ கிசு கிசுக்க மாயனது முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.
‘பணத்தத்திருடுனா போலீஸ் புடிக்கும், பொங்கியத்திருடுனா அவளோட அப்பம்புடுச்சிடுவான். அவளோட மனசத்திருடுனா…. அவளுக்கு நம்மளப்புடிச்ச பின்னால சொத்து பத்து, காடு தோட்டம் எதுவுமே தேவையில்லை. புடிச்சதுனாலதான் எங்கபாத்தாலும் ரெண்டு வார்த்தையாச்சும் பேசறா. கண்ணாலம் பண்ணற அளவுக்கு ஆசை இருந்தாலும் அப்பன எதித்து வார அளவுக்கு ஆசையிருக்குதான்னுதாந்தெரியல. நாம அவளத்தேடிப்போறதுக்கு பதிலா அவ நம்மளத்தேடி வர்றது தான் நல்லது. அம்மாவோட ரோசனையும் செரிதான்… ஒடனே காரியத்துல எறங்கிடுவோம்…. காதல் பண்ண ஆரம்பிச்சிடுவோம்..’ என திட்டமிட்டவனாய் ‘ஊரில் நடக்கும் உரியடி போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதால் விழாவுக்கு வரும் பொங்கி மனதில் இடம்பிடிக்கலாம். கோவிலில் உறியடி, பொங்கியை கைபிடி’ என நினைத்து உற்சாகம் மனதில் பொங்க நண்பர்களைப்பார்த்து தான் கலந்து கொள்ளும் செய்தியைச்சொல்ல ஓடினான்.
மாயன் உறியடிக்கப்போகும் செய்தியறிந்து அவன் வெற்றி பெற வேண்டுமென பொங்கியும் அம்மனிடம் வேண்டிக்கொண்டாள். அவளுக்கு மாயன் மீது சிறுவயதிலிருந்தே பிரியம் இருந்தாலும் தந்தைக்கு பயந்தே வெளிப்படுத்தாமல் இருந்தாள்.
‘மாமன் மகன் எனும் அளவுக்கு மாயனை பொங்கி நினைத்தாலும், தந்தை சொல்படி அவர் சொல்லும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டும் எனும் முடிவில் இருந்ததாலும், அது மாயனாக இருக்க வேண்டும் என நினைத்ததாலும், தன் தந்தையின் வசதி மாயனின் தந்தைக்கு இல்லாததால் கண்டிப்பாக மாயனைத்தவிர வேறு வசதியான மாப்பிள்ளை தான் பார்ப்பார்’ என நினைத்ததில் வருத்தம் மேலோங்கியது.
‘பெற்று வளர்த்த அப்பாவின் சொல்லை மீற முடியாது. ஆனால் உறியடியில் அப்பா வெறி பிடித்தவர். சிறு வயதிலிருந்து பல முறை வெற்றி பெற்று பரிசு வாங்கியவர். தற்போது வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கொடுத்து பாராட்டப்போகிறவர். வெற்றி பெறுபவரை அவருக்கு கண்டிப்பாக பிடிக்கும். மாயனாக இருந்தால் , அவனது வசதியில்லாத, படிக்காத நிலையை மறந்து பெண் தர ஒத்துக்கொண்டால் சந்தோசம்’ என விழாவில் கலந்து கொள்ள தயாரானாள் பொங்கி.
பொங்கி பேரழகி. தேக்கு மரம் போன்ற உடல் வாகு. பட்டுப் பாவாடை தாவணியில் எட்டு வைத்து நடந்து வீதியில் சென்றாலே சொர்க்க லோகத்து ரம்பை பூலோகத்தில் நடப்பதாக பெண்களே பேசிக்கொள்வர். ஜமீன் போல வசதியாக வாழும் தன்ஸதந்தை ஒரே பெண்ணான தன்னை இளவரசியைப்போல் வளர்த்துள்ளார். உயர் படிப்பு படித்தாலும் தந்தை சொல் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத பெண்ணாகவே தற்போதும் தான் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தைக்கொடுத்திருந்தது என்பதையும் தெரிந்திருந்தாள்.
நண்பர்களுடன் உறியடிக்கும் பகுதிக்கு ஒரு வெற்றி வீரனைப்போன்ற மிதப்பில் நிமிர்ந்து திமிராகச்சென்று நின்றவன் பொங்கியின் தந்தையைக்கண்டதும் ஒரு சாணாகக்குறுகினான். திடீரென அவரது காலில் விழுந்து ‘ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா’ என்றவனை கைகளைப்பிடித்து தூக்கியவர், “என்ன மாப்ளே… இப்படி பொசுக்குன்னு என்ற கால்ல உழுந்துட்டே….? உன்ற வயசுக்கு வசதிக்கேத்த மாதர ஒரு பொண்ணப்பாத்து கண்ணாலத்தப்பண்ணீட்டு வந்து கால்ல உழுந்திருந்தீன்னா நூறோ, ஐந்நூறோ வெத்தல பாக்குல வெச்சுக்குடுத்திருப்பனில்ல. ஒரு வார சோத்துக்கு ஆகுமில்ல…” தற்போதும் கூட’வசதிக்கேத்த பொண்ணப்பாத்து’ என பொங்கியின் தந்தை பேசியதும்,’சோத்துக்கு ஆகுமில்ல’ என தனது ஏழ்மை நிலையை சுட்டிக்காட்டுவதோடு, ‘பொங்கியை நினைத்து விடாதே…’ என எச்சரிப்பதாகவும் மனதில் பட்டதால் அவமானமும், வேதனையும் ஒரு சேரக்கொண்டவனாய் உற்சாகம் இழந்து சோர்ந்து போனான்.
மாயன் உறியடிக்கச்செல்லும் போது தனதருகில் அமர்ந்திருந்த பொங்கி கை தட்டி உற்சாகப்படுத்தியதால் அவனது சோர்ந்த முகம் மலர்ந்தது. அவளது தந்தை வெங்கி மட்டும் மகள் கைதட்டியதை ரசிக்கவில்லை. மாறாக அவளது கையைப்பிடித்து தட்டுவதைத்தடுத்தார்.
பல இளைஞர்கள் ‘தங்கள் மீது பொங்கியின் பார்வை படாதா?’ என பல வகையில் முயன்றும் தோற்றுப்போக, மாயன் மாயமாகச்சென்று உறிச்சட்டியை காயமாக்கிய போது அவன் மீது மேடையிலிருந்து ஓடிச்சென்று கையில் வைத்திருந்த சாயத்தை ஊற்றி பாராட்டை வெளிப்படுத்திய பொங்கியின் செயலால் மாயன் குடும்பத்தினர் மகிழ்ந்தாலும் பொங்கியின் தந்தையின் முகத்தில் ஈயாடவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக உறியடித்து வெற்றி வாகை சூடிய மாயனின் இரும்பு போன்ற கைகளை பொங்கி ஓடிச்சென்று தனது தாமரை மலர் போன்ற கைகளால் கைபிடித்து மேடைக்கு அழைத்து வந்த போது ஊரே ஆச்சர்யப்பட்டு நின்றது.
வேறு வழியின்றி பரிசைக்கொடுத்த பொங்கியின் தந்தை வெங்கி, சடாலென தன் மகளின் கையைப்பிடித்து இழுத்தபடி வேகமாக மேடையிலிருந்து கீழே சென்றவர், தனது புல்லெட்டில் மகளை அமரசச்செய்து புழுதி பறக்க வேகமாக வீடு நோக்கி ஓட்டிச்சென்றார்.
தனது மனைவி மாயனின் தந்தையின் சகோதரியாக இருந்தாலும் அழகி என்பதற்க்காக மனம் கவர்ந்ததால் திருமணம் செய்தாரே தவிர திருமணத்துக்குப்பின் மாமனாரின் குடிசைப்பக்கம் தான் செல்வது தவிர மனைவி, மகளையும் அனுப்பாமல் கட்டுப்படுத்தியதோடு மனைவி குடும்பத்தினரையும் தன் வீட்டிற்கு வராமல் பார்த்துக்கொண்டார் வெங்கி. அப்படிப்பட்ட தான் வெறுக்கும் வீட்டிற்கு தன் மகளைக்கட்டிக்கொடுக்க சிறிதும் விரும்பாதவராகவே இருந்தார்.
“இவம்புள்ள இல்லீன்னா ஒலகத்துல பொம்பளப்புள்ளையே இல்லியா…? என்ற பையனிருக்கற லட்சணத்துக்கு ஊன்னு சொன்னா அம்பது பேர் வரிசகட்டி நிப்பாங்க” புலம்பியபடி உறியடித்து பரிசு வாங்கி வந்த மகனுக்கு கருப்பட்டி அல்வாவை ஊட்டி விட்டாள் மாயனின் தாய் மாரியம்மாள்.
“நாஞ்சொன்னனில்ல… நீ கேட்டயா…? அவம்புத்திய மாத்த முடியாது. தெக்கையோ வடக்கையோ ஒரு பொண்ணப்பாத்தாப்போது… ஒன்னொருக்காப்பொறக்கவா போகுது…” தன் பங்கிற்கு பேசினார் மாயனின் தந்தை மாரன்.
தன்னை கோபத்தில் தந்தை அடித்து விடுவாரோ எனும் பயத்தில் தனது அறைக்குள் சென்று அறையை உட்பக்கமாகத்தாழிட்ட பொங்கி சோர்வில் உறங்கிப்போனாள்.
நெடு நேரத்துக்குப்பின் கதவு தட்டப்பட்டதும் புலியிடம் சிக்கிய மானைப்போன்ற அச்சத்தில் கதவைத்திறந்த போது ஆனந்தமான ஆச்சர்யம் காத்திருக்குமென அவள் நினைத்திருக்கவில்லை. வரவேற்பறை எனும் ஆசாரத்தில் உள்ள இருக்கையில் மாயன் தன் தாய், தந்தையுடன் அமர்ந்திருந்தான். அவர்களுக்கெதிரில் தந்தை வெங்கி அமர்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார். கதவைத்தட்டிய தாயின் முகத்தில் முதலாக மகிழ்ச்சியைக்கண்டாள்.
“ஒரு தைரியமான வீரனுக்குத்தான் என்ற பொண்ணக்கொடுக்கோணும்னு நெனைச்சிட்டிருந்தேன். என்ற சொத்தே பத்து தலைமுறைக்குத்தாட்டும். எனக்கு ஒரு வாரிசு அழகா வேணும்னு தான் உங்க ஊட்ல பொண்ணெடுத்தேன். அதே மாதர பொங்கி அழகாப்பொறந்தா. எனக்குள்ள இருக்கற வசதிங்கிற திமிரு இத்தன காலமா உங்கள வெறுக்க வெச்சிருச்சு. எனக்கு சமமான வசதியான ஊட்டுப்பசங்க கோழையா இருக்கறாங்க. ஏழையா இருந்தாலும் கோழையா இருக்கப்படாதுன்னு நெனைக்கிறவன் நானு. கோழத்தனம் மாயங்கிட்ட கொஞ்சமும் இல்ல. அதனாலதான் உங்கள பொங்கிய மாயனுக்கு பொண்ணுக்கேக்க வரச்சொன்னேன்..” என தந்தை கூறியதைக்கேட்டதும் முதலாக மாயனை நேராகப்பார்த்து முகஸ்துதியால் தனது காதலை வெளிப்படுத்தி பொங்கி கண் சிமிட்டிய போது உலகமே தன் வசமானது போன்ற உணர்வு ஏற்பட்டது மாயனுக்கு.