உறவு சொல்ல வேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 8,136 
 

வாசல் வரை வந்து வழியனுப்பினாள்.

“பார்த்து நடந்துக்குங்க! கோபப்பட்டுராதீங்க!” எனக்குள் சுள்ளென்றது.

“எனக்குத் தெரியாதா?” என்றேன் எரிச்சலுடன்.

கையில் கனத்துக் கொண்டிருந்த பை உள்ளே எவர்சில்வர் சம்படத்தில் இனிப்பும், முறுக்கும். அவ்வளவும் சித்தப்பா வீட்டுக்கு.

மூன்று நான்கு வருடங்களாய்ப் பேச்சு வார்த்தை அற்றுப் போன குடும்பங்கள். என்னவோ திடீர் ஞானோதயம்! போன ஞாயிறு பகல், சாப்பாடு ஆனதும் பேசிக் கொண்டிருந்தபோது தோன்றியது.

“ஏம்மா! நம்ம சித்தப்பாவோட போக்குவரத்தே நின்னு போச்சே?”

டி.வி சீரியலில் ஏதோ பழைய படக் காட்சி. கோபத்தில் பிரிந்து பின் ஒன்று சேர்ந்தார்கள். பிழியப் பிழிய அழுகை. எங்களுக்குள்ளும் மனப் பாறை இளகியது. உடன் சித்தப்பா நினைவும்.

“என்னவோ ஒரு வார்த்தை சொல்லிட்டார்னு முறைச்சுகிட்டு போயிட்டாரு.”

“அதான் அப்பாவே தவறிப் போயாச்சு. இன்னுமா வீம்பு?”

“சாவுக்கே வரமாட்டார்னு நினைச்சேன். வந்தாரு… நின்னாரு… காரியம் முடிஞ்சதும் போயிட்டாரு.”

அம்மாவிடம் கண்ணீர். சித்தப்பா கல்யாணமே அம்மா பார்த்து வைத்த பெண்தான்.

“நான் வேணா போய்ப் பார்க்கட்டுமா” என்றேன்.

“நீயா”

“ஆமா. என்ன இருந்தாலும் அவர் பெரியவர். நான் தழைஞ்சு போறதுல தப்பில்ல. வர புதன்கிழமை எனக்கு லீவுதான். போயிட்டு வரேன்.”

தீர்மானித்தபடி கிளம்பி விட்டேன். ஜானகிதான் ‘வெறுங்கையாய்ப் போகாதீர்கள்’ என்று பலகாரம் செய்து கொடுத்தாள். பாபு தானும் கூட வருவதாய் அடம் பிடித்தான். சின்ன தாத்தாவைப் பார்க்க வேண்டுமாம்.

“முதல்லே அப்பா மட்டும் போயிட்டு வரட்டும். அப்புறம் நாம எல்லாருமாய் போகலாம்” என்று சமாதானப்படுத்தினாள்.

எனக்குத்தான் லேசாய் நடுக்கம். என்ன மாதிரி வரவேற்பு கிடைக்குமோ?! நிச்சயமாய் வார்த்தைகள் தடிக்காது. சின்ன முகச் சுளிப்பு, முகந்திருப்பல் போதுமே. என்னைப் பூவிதழ்களாய்ப் பிய்த்து எறிந்து விடுமே!

வாசல் கதவு திறந்துதான் இருந்தது.

உள்ளே போய் விடுவதா… அல்லது அழைப்பதா?

என்னவென்று அழைப்பது? சித்தப்பா எனக் கூப்பிடத் தோன்றாமல் ஏதோ கூச்சம். பழக்கம் விட்டுப் போனதால் வந்த தயக்கம்.

தடுமாறி நின்றேன். இது என்ன சோதனை! யாராவது வெளியே எட்டிப் பார்க்க மாட்டார்களா! இப்படியா வீட்டைத் திறந்து போட்டுவிட்டுப் போவார்கள்!

“யாரு?”

நல்லவேளை குரல் கேட்டது. சித்தியா??

“நாதான் கதிரேசு”

கூடவே பெயரையும் சேர்த்துக் கொண்டேன். புரியாமல் போய் விடப் போகிறது என்கிற நினைப்பில்.

சித்தி வெளியே வந்தாள்.

“நீயா!”

என் முகத்தில் சிரிப்பும் குழப்பமும் போட்டியிட்டன.

“சித்தப்பா இருக்காரா”

சுதாரித்துக் கொண்டு அழைத்தாள்.

“வா உள்ளே!” அவள் குரலில் லேசாய் நடுக்கம்.

என் வருகை பிடிக்கவில்லையா? ஏன் என்னவோ போல் இருக்கிறார்?

ஹாலைக் கடந்து தனியறைக்குள் போனாள். பின்னாலேயே போனேன். அறைக்குள், கட்டிலில் சித்தப்பா படுத்திருந்தார்.

பழைய கம்பீரம் தொலைந்து நோய் தாக்கிய முகம். கண்களில் கலக்கம்.

“ஒரு வாரமாய் படுத்திருக்கார். தெனம் ரெண்டு வேளையும் ஊசி போடறாங்க. மூணு நாளா ஒரே புலம்பல். உங்களை எல்லாம் பார்க்கணும்னு. எப்படி தகவல் சொல்லி விடறதுன்னு புரியாம” சித்தி விசும்பினாள்.

அருகில் சென்று அமர்ந்தேன்.

“உங்களுக்கு எதுவும் இல்லை சித்தப்பா! பழையபடி நல்லா ஆயிருவீங்க.”

இடிக்கவே முடியாத வஜ்ரம் போல் தோன்றிய பிளவுச் சுவர் அந்த வினாடி தகர்ந்து பொடிப் பொடியாகிப் போன பிரமை எனக்குள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)