உறவுப் பிரிகை

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,461 
 

பின்னிரவாகியும் சதாசிவ தாத்தாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. முள் விழுங்கினாற் போல நெஞ்சுக்குள் குத்தியது. பேத்தி அபியாவுக்குக் கல்யாணம். எல்லா உறவுகளையும் கடைசியாய் ஒருமுறை கல்யாணத்தில் பார்த்து விடலாமென நம்பியிருந்தவருக்கு, மகன் நரசு “உறவில் யாருக்கும் அழைப்பில்லை’ என்று சொன்ன தகவல் பேரிடியாக இறங்கியது.

உறக்கமின்றிக் கிடந்தவருக்கு மனைவி லட்சுமியின் நினைவுகள் நிரிந்தன. அவளிருந்தால் இந்நேரம் “தப்பு நரசு, பந்தங்கள் அறுந்துடாமப் பார்த்துக்கறது நம்ம கடமை. உறவுகளைக் கொண்டாடாம உலகைக் கொண்டாட முடியாது. ஒருத்தர் விடாம எல்லாரையும் அழைடா…’ – என்று வாதம் செய்திருப்பாள்.

குடும்ப உறவுகளை வாழ்வின் ஆதார சுருதியாக பாவித்தவர்கள் சதாசிவமும் லட்சுமியும். அந்த அளவு இருவரும் சொந்த பந்தங்களில் ரத்தமும் சதையுமாக மூழ்கித் திளைத்து வலம் வந்தார்கள். சொந்தக்காரர்கள் இல்லாது போயிருந்தால் அவர்களிருவரும் கல்யாணம் செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

லட்சுமியின் அப்பாவோடு பிறந்தவர்கள் பதினொருபேர். மிகப் பிரம்மாண்டமான குடும்பம். கொடுத்துக் கட்டிய வகையறாக்கள் எல்லாம் சேர்ந்தால் ஒரு கிராமம் போல் இருக்கும் உறவுக் கூட்டம். அண்டா அண்டாவாய்ச் சமைப்பார்கள். சத்திரம் போல இருக்கும் அவர்கள் வீட்டுச் சாப்பாட்டுப் பந்தி. எந்நேரமும் உறவுகள் சூழ்ந்த வீடு. சதாசிவம் பக்கமும், கூடப் பிறந்தவர்கள் ஐந்து பேர் மற்றும் ஏழு சித்தப்பாக்கள், ஆறு அத்தைகள் என்று பெரிய பட்டியலுண்டு. அந்த உறவுகள்தான் அவர்களை இணைத்தது.

இளமைக்கால சதாசிவத்துக்கு சேக்காளிகள் சரியாக அமையவில்லை. அவ்வளவு பெரிய உறவு மந்தைக்கே கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு குடிகாரனாக மாறியிருந்தார். விஷயம் வெளியே கசிந்தபோது வெகுண்டெழுந்தவர் அவரது பெரியப்பா. நடு வீட்டில் எல்லோர் முன்பாகவும் சதாசிவத்தைப் போட்டு புரட்டி எடுத்தவர், அன்று மாலையே பெரிய அத்தை வீட்டுக்கு அவரைப் பொட்டலம் கட்டி அனுப்பிவிட்டார். ஆறுமாதம் போல் அங்கேயே சிறைப்பட்டு குடியை மறந்திருந்தார் சதாசிவம். பிறகு நெருங்கிய உறவில் ஒரு திருமணம் என்றுதான் சொந்த ஊருக்கு வரவே “விசா’ கொடுத்தார்கள்.

வந்து பார்த்தால் லட்சுமியின் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. முகூர்த்த நேரம், மணப்பெண் லட்சுமி அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டு திறக்க மறுத்தாள். ஜன்னலிடுக்கில் கவனித்தால், மேஜை மீது நின்று விசும்பலோடு மின் விசிறியில் சேலையை முடிந்து கொண்டிருந்தாள். சட்டென நிலைமையைச் சுதாரித்துக்கொண்டு, எல்லோருமாய்ச் சேர்ந்து கதவை உடைத்து அவளை வெளியே இழுத்துப் போட்டு விசாரித்தார்கள்.

பக்கத்து கிராமத்தில் ஒருவனைச் சொல்லி அவனோடு காதலென்றாள். அதுநாள் வரை காதலித்துத் தொட்டுத் தொட்டு பழகியவன், திருமணம் நிச்சயமாகிவிட்டது, வீட்டில் வந்து பேசு என்றதும் ஓடி ஒளிகிறானாம். ஓ வென்று அழுதவளின் முதுகில் அறைந்தார், அவள் குறிப்பிட்ட அதே ஊரில் இருந்து வந்திருந்த மாமா ஒருவர். அந்தப் பயலுக்கு சதா அதேதான் வேலை என்றவர், ஊருக்கு ஒரு பெண்ணோடு அவன் பழகி வந்ததை ஆதாரங்களோடு எடுத்துச் சொன்னார். சொந்த பந்தங்கள் சுற்றிலும் உட்கார்ந்து லட்சுமிக்கு வகுப்பெடுத்தார்கள். எல்லாம் புரிந்து அமைதியானாள் லட்சுமி.

களேபரங்கள் முடிந்து பார்த்தால் மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டாரைக் காணவில்லை. மின் கம்பியில் அடிபட்ட தங்களில் ஒருவரைச் சுற்றி, பறந்து பறந்து அலறும் காக்கைக் கூட்டமாகப் பரபரத்தார்கள் உறவுக்காரர்கள். அடுத்த நகர்வு என்ன என்று அனைவரும் கைபிசைந்து நின்ற நேரம், சதாசிவத்தின் அப்பா எழுந்து கேட்டார்.

“ஏம்பா லட்சுமியை என் பையனுக்குத் தருவீர்களா…?’
அவரது பங்காளிக்கு அக்கா மகள்தான் லட்சுமி. உடனே சபையிலிருந்து ஒரு பெரியவர் ஓங்கிக் கேட்டார்.
“ஏம்ப்பா பின்னும் பிறகுக்கு பொண்ணோட நடத்தை பத்தி தாறுமாறாகப் பேசமாட்டியே?’

“ஏன் பேசக் கூடாது? இங்க நடந்ததைக் காலம் முழுதும் பேசுவேன். சம்மதம்னா பெண் குடுங்க’ – சதாசிவம் அப்பா அப்படிச் சொன்னதும் அங்கே குழப்பமான அமைதி. அவரே குறுகுறுப்பான புன்னகையோடு மேலும் சொன்னார்.
“யாரோ ஒருத்தனை நினைச்சுட்டு உயிரையே மாய்ச்சுக்கப் போனவ, உறவுக்காரங்க எடுத்துச் சொன்னதும் உடனே மனசை மாத்திட்டாளே மகராசி.. சொந்தபந்தங்கள் மேல இப்படியொரு மரியாதை வெச்சிருக்கிற சொக்கத் தங்கத்தைப் பத்தி சாகிற வரைக்கும் பேசிட்டுத்தான்யா இருப்பேன்.’

பிறகென்ன, அதே முகூர்த்தத்தில் கனஜோராக சதாசிவத்துக்கும் லட்சுமிக்கும் திருமணம் நடந்தது.

நரசு படிப்பு முடித்து வேலைக்காகப் புலம் பெயர்த்தபோது, தொண்டை அடைக்க உறவுகளைப் பிரிய நேர்ந்தது. ஆனாலும் பொசுக்கென்றால் ஊர்ப் பக்கம் கிளம்பிவிடுவார்கள். இப்போது போல் சுதாசிவம் புரண்டு படுத்தாரானால், மறுநாள் ஊரைப் பார்க்க பயணம்தான். ஊரில் நடக்கும் ஒரு விசேஷத்தையும் விட்டுவிட மாட்டார்கள். யாரேனும் அழைப்பு வைக்க மறந்திருந்தாலும், “எங்களுக்கு இன்னும் அழைப்பு வரலையே…?’ என்று யார் மூலமாவது தகவலைக் கசிய விட்டுவிடுவாள் லட்சுமி. பிறகென்ன, பதறியடித்துக் கொண்டு அழைப்பு வரும், புறப்பட்டுவிடுவார்கள்.

ஆனால் அபியா பிறந்ததற்கப்புறம் ஒரு முறை அப்படிச் செய்தபோது அவள் அம்மா வாணி காறி உமிழாத குறையாகப் பேசிவிட்டாள். “கிழங்களுக்கு இப்படி வலியப் போய்த் தலை வாழை இலை போட்டு நக்கலேன்னா முடிய மாட்டேங்குதோ?’ வாணி கேட்பதில் நியாயமிருப்பதாக நரசுவும் வாதாடினான்.
“விருந்து விசேஷம் என்றால் ஆயிரம் ஏற்பாடுகள் இருக்கும். அவசரத்தில் ஓரிரண்டு அழைப்புகள் விடுபடுவது சகஜம். ஞாபகப்படுத்தினால் ஓடி வந்து அழைத்து விட்டுப் போகிறார்கள். நாளைக்கு நம்ம கிட்டேயும் இதே மாதிரி விட்டுக் கொடுத்து நடந்துட்டுப் போறாங்க? எல்லாம் உரிமையுள்ள உறவுகள்தானே?’ என்பாள் லட்சுமி.

“அதெதுக்கு..? நம்மளை மறக்கறவனை நம்ம காரியத்தில் நாமளும் மறந்துட்டுப் போக வேண்டியது தானே…?’ என்பான் நரசு.

ஒருமுறை உறவினர் மூன்று பேர் திருமணத்துக்கு அழைக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் நரசு குழுவினர் அப்படியொரு முகச் சுழிப்பைக் காட்டினார்கள். “நூறு ரூபா மொய்க்காக இரு நூறு ரூபா செலவு பண்ணி வந்திருக்கீங்களே? இனிமே இதுக்கெல்லாம் ஒரு ஃபோன் பண்ணினாப்போதும். இங்கே சிட்டியில் எல்லாம் அப்படித்தான்’ என்றான் நரசு.

சாப்பாட்டு மேஜையில் வாணி, “நீங்க வர்றதா ஃபோன் பண்ணியிருந்தா, நாங்க வேண்டாம்னுதான் சொல்லியிருப்போம்… ஏன்னா நான் பீரியட்ஸ்ல இருக்கேன். எங்களுக்கே ஓட்டல்தான் எடுத்திருப்போம். பரவாயில்ல நீங்க சாப்பிடுங்க’ என்றவாறே பரிமாறினாள்.

அவர்கள் உறங்க ஒரு அறையை ஒதுக்கிக் கொடுக்க அத்தனை அலட்டிக் கொண்டார்கள். நரசுவும் வாணியும் அவர்களின் அறையை விட்டுத்தர மறுத்துவிட்டார்கள். தாங்கள் ஏ.ஸி. போட்டு ரிலாக்ஸாகத் தூங்கவில்லையானால் மறுநாள் அலுவலக வேலைகள் சொதப்பலாகி நிறைய லாஸாகும் என்றார்கள். அபியா என்னடாவென்றால் “பாய் ஃப்ரெண்ட்ஸ் ஃபோன் செய்வாங்க. நான் பிரைவஸியா இருக்கணும்’ என்று கிசுகிசுப்பாய் அறை தர மறுத்தாள். அவர்களை ஹாலில் படுக்க வைக்கலாம் என்றால் அங்கே வழக்கமாகப் படுக்கும் நாய் புதியவர்களைப் பார்த்து விடிய விடியக் குரைத்துக் கொண்டிருந்தால் யாருமே தூங்க முடியாது என்றால் வாணி.
கடைசியாக, சதாசிவமும் லட்சுமியும் முன் அறையில் படுத்துக் கொள்ள, அவர்களின் குட்டியூண்டு அறையில் வந்தவர்கள் தங்கினார்கள். அங்கே நெட்டாகப் படுத்தால் இருவர்தான் (சதாசிவம்-லட்சுமி) படுக்கலாம். மூவர் படுக்க வேண்டியிருந்ததால் குறுக்காகப் படுத்து, கால் நீட்டவும் வழியின்றிக் குறுகிக் கிடந்தார்கள்.

அன்றிரவு சதாசிவமும் லட்சுமியும் கொந்தளித்துப் போனார்கள்.
“ஏங்க… உறவுகளை இப்படிக் கத்தரித்துக் கொள்ளும் ஆணவம் எங்கிருந்து வந்துச்சு இன்றைய மனுசர்களுக்கு? கல்யாணம் சீருன்னு வரும்போது வீடியோவையும் ஃபோட்டோ ஆல்பத்தையும் நிறைக்க மட்டும் உறவுகள் இருந்தால் போதும்ஷ, நினைக்கறாங்களா ஜனங்க.’

“முக்கோணப் பெட்டகம் வழியா ஒளியைப் பார்த்தா நிறப்பிரிகை ஆகுமே. அதுபோல பணப்பெட்டி வழியா மனுசனைப் பார்த்ததும் உறவுப் பிரிகை ஆகிருச்சு லட்சுமி.’

“ரெண்டொரு உறவுக்காரங்க வந்தாக்கூட கவனிக்க முடியாதவங்களா ஆயிட்டாங்களே இவங்க. பண்பாடெல்லாம் இவங்களுக்கு நான்சிலபஸ் லட்சுமி. அதைத் தெரிஞ்சுக்கவெல்லாம் நேரமில்லை இப்போ. மனித நேரங்களை முழுசா நக்கியெடுத்துருச்சு இந்த வியாபார உலகம்.’
“ஏங்க, எல்லாரும் உறவுகளோட வாழணும்ணு ஒரு சட்டம் போடலாமில்லை இந்த அரசாங்கத்துக்குப் பங்கில்லையா?’ என்று புலம்பத் தொடங்கினாள். கடைசிவரை, அவர்கள் நினைத்தது நடக்கவே இல்லை. மாறாக, நரசுவின் சட்ட திட்டங்களுக்குள்தான் தங்களை அடக்கிக் கொள்ள நேர்ந்தது. ஒரே மகன் என்று பிரிய மனமின்றி அவனோடே கிளம்பி வந்தாயிற்று. இனி அவனைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கலாமே தவிர எதிர்க்க முடியாது. தங்கள் முயற்சி தோற்றபோது, கொஞ்சம் கொஞ்சமாகப் பிரயாசைகளை விடத் தொடங்கினார்கள் பெரியவர்கள்.

பாவம் லட்சுமி, உறவுகளைச் சேர்த்துக் கொண்டாட நினைத்த தன் எண்ணம் நிறைவேறாமலே ஒரு நாள் இம்மை வாழ்வை நீத்துக் கொண்டாள். அவளின் தீராத உறவு வேட்கை மட்டும் ஒரு சமூக லட்சியமாக மாறிக் கனத்துக் கொண்டிருக்கிறது சதாசிவத்துள். இதோ பேத்தி அபியாவின் கல்யாணத்தில் வந்து நிற்கிறது காலம். இது சதாசிவத்தின் கடைசி ஆயுதம். லட்சுமியின் எண்ணங்களை உயிர்ப்படுத்தி சொந்தங்களைக் கோர்த்து நரசு குடும்பத்தை உறவுக் கதம்பமாக்க இனியொரு சந்தர்ப்பம் வரவா போகிறது?

எப்போது தூங்கினாரென்று தெரியவில்லை, காலையில் அபியா வந்து காபி தர எழுப்பியதும்தான் விழிப்புத் தட்டியது. அந்த அதிகாலையிலேயே குளித்து முடித்த வெளியே கிளம்பும் எத்தனிப்பில் இருந்தாள் அபியா. வழக்கத்துக்கு மாறாகப் பேசினாள்.

“உடம்பை நல்லாப் பாத்துக்கோ தாத்தா.’

“வெளியூர் எங்கியும் போறியா?’

“இல்லே…’ தலையை ஆட்டியவள் தொடர்ந்து “இவங்க உறவே எனக்கு வேண்டாம் வெட்டிக்கப் போறேன் தாத்தா’ என்றாள் கண்கள் சிவக்க…

“நிதானமாப் பேசு அபியா. வெட்டறதுக்கு இதொன்னும் முள்ளுச் செடியில்லை, குடும்பம்..’

“ஆமா.. வக்கணையாச் சம்பாதிக்கிறவன்தானே புத்திசாலி. அதை அவர் எப்படிச் சம்பாதிச்சா இவங்களுக்கு என்ன?’

“புரியும் படியா சொல்லும்மா. உனக்கு நான் உதவறேன்.’

“ப்ச்… நீயே ஒரு டஸ்ட்பின். எல்லாம் நான் பாத்துக்கறேன்…’
நகரப் போனவளைக் கையமர்த்திச் சொன்னார்.

“அவசரப்படாதேம்மா. எதுவானாலும் பேசித் தீர்த்துக்கலாம்.’
அபியா போய்க்கொண்டே இருந்தாள்.

மாலை நரசுவுக்காக ஹாலில் காத்திருந்தார் சதாசிவம். நரசுவும் வாணியும் வந்து முகம் கழுவி ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் ஆரம்பித்தார்.

“நரசு இந்தக் கல்யாணத்தில் அபியாவோட சம்மதத்தைக் கேட்டுட்டியா…’

“அவளுக்கு என்ன தெரியும், கல்யாணத்துக்காக மட்டும் பத்து லட்சம் கையிருப்பு வெச்சிருக்கோம்… வரதட்சனையாத் தர இருபது லட்சம் பேங்க்ல போட்டிருக்கோம். ஆனா, நம்ம குடும்ப மரியாதை தெரியாம அவ யாரோ ஒரு பொறுக்கியைக் காதலன்னு கையைக் காட்டறா. ஆமா, உங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம் தானேப்பா?’

“குடும்பத்துல ஒருத்தருக்கொருத்தர் கருத்து வேறுபாடு வந்துட்டா, பிரச்னையைப் பொதுமைப்படுத்தி, நெருக்கமான உறவுகளைக் கூப்பிட்டுப் பேச வைக்கணும். அதைவிட்டுட்டு எல்லாத்தையும் நீங்களே கையாண்டா வீபரீதமாத்தான் போகும்.’

“இல்லப்பா. இப்ப மட்டுமில்லை. அபியா கல்யாணம் முடியற வரைக்குமேகூட உறவுக்காரங்க யாரும் இல்க வரவேண்டாம்.’

“ஏம்ப்பா…?’

“காரணமாத்தாம்பா. அவளுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை எங்க கிளப் மெம்பரோட மகன். நம்ம ஜாதியில்லை.’

“அட அதனால என்னப்பா.. காதல் கலப்புத் திருமணமெல்லாம் இப்ப சகஜமாயிருச்சு… நம்ம மனுசங்களை அழைச்சுப் பேசுவோம். கூடிப் பேசறதுதான் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நல்லது.’

“அதில்லேப்பா… மாப்பிள்ளை மாசம் எண்பதாயிரம் சம்பாதிக்கிறார். பெங்களூர்ல ஒரு கோடிக்கு பிளாட் வெச்சிருக்கிறார். என்னென்னவோ ஜகஜ்ஜாலமெல்லாம் பண்ணி இந்தச் சம்பந்தத்தைப் பிடிச்சிருக்கேன். என்னைப் பரம்பரைப் பணக்காரன் மாதிரி பேசி வெச்சிருக்கேன். இந்த நேரத்தில் சொந்தக்காரங்களை உள்ளே விட்டா, எல்லாமே கெட்டுடும்.’

“உறவுகளை ஏதோ வரவு செலவு மாதிரி பேசறியேப்பா?’
சதாசிவம் முடிக்கவில்லை, நரசுவின் செல் அலறியது. எடுத்துப் பேசிய அவன் முகம் இறுகிப் பாறையானது. வாணி ஓடிவந்து உலுக்கினாள். ஓவென்று கதறினான் நரசு.

“ஐயோ… நம்ம அபியாவும் அந்த பிரௌசில் சென்டர் பையனும், ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களாம் வாணீ.’

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து உட்கார்ந்தாள் வாணி.
“ஐயோ, அவன் பல பொண்ணுங்களைச் சீரழிச்சவன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேனே’ பலூனை உடைத்துக் கொண்டு அழும் குழந்தையைப் போலத் தேம்பினான் நரசு.

“குடும்ப மரியாதைக் குழி தோண்டிப் புதைச்சுட்டியே அபியா’ வாணியின் கேள்வி காற்றில் கதறியது.

“கையிருப்பும் வங்கியில் போட்ட தொகையும் அப்படியே இருக்கும் போது, <<உங்கள் குடும்ப மரியாதை எப்படிப் புதைந்து போகும்?’ என்றுதான் கேட்க தோன்றியது சதாசிவத்துக்கு.

– தாண்டவக்கோன் (மே 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *