“டேய் கோவாலூ! ஜல்தி ஆடுங்கள கெளப்புடா. கூழு குடிச்சிட்டியா?.”
“ஆச்சிப்போவ்.”
“எந்தப் பக்கம் மேச்சலுக்கு ஆட்ட மடக்கிற?.”
“சுமங்கலி ஏரியில. எல்லாந்தான் தண்ணியில்லாம மொட்டுன்னு கெடக்குதே.”
“சரி..சரி..ஓட்டு. இன்னிக்கு கழனியில பொன்னி நடவு கீது. அத பார்த்துப்புட்டு மதியம் உனுக்கு கஞ்சி கொண்டார்றேன்.” – பையன் அம்மாக்காரி கிட்ட சொல்லிட்டு படலையை திறந்து ஆடுகளை கிளப்பினான். அம்மாக்காரி ஆம்பள பொறப்பு மாதிரி. எல்லா நுணுக்கங்களும் தெரியும். அடுப்பு வேலையையும் பார்த்துக்கிட்டே தயிரை கடைந்துக் கொண்டிருந்தாள். வீட்டில் மூணு எருமை மாடுங்க இருக்குது. அதில ரெண்டு கறக்குதுங்க. இதுக்கு மேல வூட்டுக்காரனுக்கு சாப்பாடு போட்டு அவனை கழனிக்கு தொரத்திட்டு மோர் பானையை தூக்கிக்கிட்டு தெருத் தெருவா போய் கூவணும். ரெண்டு மூணு தெரு சுத்தினால் மோரு காலியாயிடும். அய்யம்மாரு தெரு பக்கம் போனால் மொத்த நெய்யும் வித்துப்புடும். வித்துப்புட்டு வந்து நடவு நட்ற ஆளுங்களுக்கு சாப்பாடு செய்யணும். அது ஒண்ணும் கஷ்டமில்ல. கூலியாட்களுக்கு தண்டியா சோற்றை வடிச்சிக் கொட்டி, காரசாரமா ஒரு கருவாடு கத்தரிக்காயி கொழம்பு வெச்சிட்டா போறும். சாணி வேற சேர்ந்து போயி கிடக்கு. மத்தியானமாவது எரமுட்டை தட்டியாவணும். விஸ்வநாத அய்யரு வூட்டு அம்மா மூணு நாளா அம்பது எரமுட்டை வோணும்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க.
வீட்டுக்காரன் தர்மன் சாப்பிட உட்கார்ந்தான். அவன் எதிரே கூழை கரைச்சி வெச்சிட்டு, கடிச்சிக்க உப்புக்கண்டத்தை கொண்டு வந்து வைத்தாள்.
“என்னாடீ உன் மூத்தாரு புள்ளைக்கு பொண்ணு பாக்கறாப்பல கீது?..”
“அய்யே அத உன் அண்ணன் புள்ளைக்குன்னு சொல்ல வராதா?. அது என்ன என் மூத்தாரு. `மூத்திரம் பேயறதுக்குள்ள முப்பத்தியெட்டு குணம்மே உனுக்கு.”
“டியாய்! அந்த பொறுக்கி பசங்க பேச்சை எடுக்காத. ராஸ்கோலு என் மேலேயே கையை வெச்சிப்புட்டாங்களே. இன்னும் எனுக்கு ஆறலே. அதனாலதாண்டீ அவனுங்க சவகாசமே கூடாதுன்னுதான் அஞ்சி வருசமா ஒதுங்கி கீறேன்.”
“அய்யே! எனுக்குத் தெரியாதாங்காட்டியும். தே! சொல்றதைக் கேளு. அவங்க வந்து நீதான் வந்து பொண்ணை பேசி முடிக்கணும்னு கூப்பிட்டாங்கன்னா ரொம்ப பிகு காட்டாத. சர்தான் சர்தான்னு போ.”
“அந்தப் பேச்சை வுடுடீ. அவங்க நமநாத்தமே ஆவாது.”
“ஹும்! புடிவாதக்காரனுக்கு புத்தி சொல்றதும், பைத்தியத்துக்கு பல்லை விளக்கி விட்றதும் ஒண்னுன்னு சும்மாவா சொன்னாங்க.” – அவள் முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போனாள்.
தர்மனுடைய அண்ணன் எட்டு வருஷத்துக்கு முன்னாலயே காலமாயிட்டாப்பல. அவருக்கு மூணு புள்ளைங்க. மூணும் தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைங்க. அண்ணன் செத்தப்புறம் அதுவரைக்கும் பாகம் பங்கிடாமல் ஏகக் குடும்பமாய் இருந்த சொத்துக்களை பாகம் பங்கிட எடுப்பு எடுத்தார்கள். அப்போது தகறாரு வந்துடுச்சி. அண்ணனுக்கு சிரேஷ்ட பாகம்னு ஒரு பங்கு கூட ஒதுக்கணும்னு அண்ணிக்காரி சொன்னாள். அண்ணன் போயிட்ட பின்னால சிரேஷ்ட பாகம்லாம் கிடையாதுன்னு தர்மன் தகறாரு பண்ணான். பேச்சு முத்தி ஒரு கட்டத்தில கைகலப்பு ஆகிற கட்டத்தில தர்மன் பேர்லதான் தப்பு. முதல்ல கையை நீட்டினது தர்மன்தான். தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைங்க மேல கை வைக்கலாமா?. வெச்சிப்புட்டான். அவனுங்களும் சித்தப்பனாச்சேன்னு வெச்சிப் பார்க்காம பொத்து பொத்துன்னு பொத்திப்புட்டாங்க. தர்மனுக்கு சப்போர்ட்டுக்கு யாருமில்ல. புள்ளை கோவாலு பன்னிரெண்டு வயசு பையன். பொண்ணை அசலூர்ல கட்டிக் குடுத்தாச்சி. அதுல பிரிஞ்ச குடும்பம் அஞ்சி வருஷமா பகையாளிங்களா போயிட்டாங்க. பக்கத்து பக்கத்து வீடுதான் ஆனால் பிரிவினைப் பட்டு கிடக்குது.
பையன் கோபாலை பள்ளிக்கூடம் அனுப்பல. ஆடுங்களே அவன் வாழ்க்கைன்னு முடிவு பண்ணியாச்சி. அவன் பொறுப்புல அம்பது செம்மறி ஆடுங்க கணக்கு. ஒன்பது வயசுல இருந்தே ஆடு மேய்க்க ஆரம்பிச்சிட்டான். இந்த மூணு வருஷத்தில ஆடுங்க குணம், அதுங்களோட பாஷை, அதுங்களை இனம் பிரிச்சிப் பார்க்கிறது, அதுங்களுக்கு நோவு தாங்கினால் அதுக்கு செய்ய வேண்டிய வாகடம் முறைகள், இப்படி எல்லாத்திலேயும் அத்துபடி ஆயிடுச்சி அவனுக்கு. எல்லாம் அப்பன்கிட்ட இருந்து கத்துக்கிட்டது.
பொழுதுசாய ஆட்டு மந்தையை ஓட்டிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தான். எல்லாத்தையும் பட்டியில அடைச்சிட்டு படலையை சாத்திப்புட்டு ஆடுங்களை ஒருதபா எண்ணி கணக்கு சரியா இருக்கான்னு பார்க்கிறது அவன் வழக்கம். எண்ணியதில் ஒண்ணு குறையுது. மறுபடியும் இனம் பிரிச்சி எண்ணிப் பார்த்தான் அப்பவும் ஒண்ணு குறையுது. ஆட்டுக்காரங்க ஆடுகளை அதன் நிறம், உருவ அமைப்புகளை வெச்சி பிரிச்சி பேர் வெச்சிருப்பாங்க. கருப்பும் வெள்ளையும் கலந்த நிறம் – கரிச்சலாடு, காது சின்னதா இருந்தா – சில்லி ஆடு, சிவப்பு நிறம் வயிற்றில வெள்ளை புள்ளிங்க இருந்தா அது – சல்லி, சிவப்பு நிறம் – சேம்பாடு, சிவப்பு வயிற்றில் வெள்ளை – மறையாடு, வெள்ளையில் சிவப்பு புள்ளி – காரசில்லியாடு, இப்படி அததுக்கு ஒரு பேரு.. மந்தையில ஒவ்வொரு ரகத்திலேயும் எத்தனை ஆடுங்க இருக்குதுன்னு கூட அவனுக்கு அத்துப்படி.
தர்மன் நாத்து நட்ட கூலியை கணக்குப் பார்த்துக்கிட்டிருந்தார். மொத்தத்தில ஒரு கூலி துட்டு குறையுது. யாருக்கோ ரெண்டு கூலி குடுத்திட்டிருக்காரு. வாங்கின முண்டைகளும் நான் ஏற்கனவே வாங்கிட்டேன்னு சொல்லத் தேவல. சொல்லுமா அதுங்க. நாமதான் ஜாக்கிரதையாக இருந்திருக்கணும். அந்நேரத்துக்கு கோவாலு எப்பா..எப்பான்னு கத்திக்கிட்டே ஓடிவந்தான்.
“எப்போவ்! மந்தையில ஒரு உருப்படி கொறையுது.”
“இன்னாடா நல்லா பார்த்தியா?”.
“பார்த்துப்புட்டேன். காரசில்லில ஒண்னை காணோம். அது செனையாடுப்போவ்”. இதை அவன் சொல்லும்போது ராத்திரி ஏழு மணியாயிப்போச்சி. அப்பங்காரன் தலைதலைன்னு அடிச்சிக்கிட்டு ராந்தலை கொளுத்தி எடுத்துக் கிட்டு கையில கோலோடு ரெண்டுபேரும் கிளம்பிட்டாங்க. அமானியா இருக்கிற ஏரியில எங்கன்னு தேடுவது?. தேடித் தேடி கடைசியா அப்பன்காரன் குரல் கொடுத்தான்.”அ.ழ்.யே…உவ்வே…. அ.ழ்.யே… உவ்வே….”—-கட்டைக் குரலும் இல்லாம கீச்சிக் குரலும் இல்லாம கலவையான் குரலில் ஒரு ராகம் அது. ஆட்டுக்காரனுக்கும் ஆடுகளுக்கும் உள்ள பரிபாஷை இது. இந்தக் குரலைக் கேட்டால் அதுங்க எங்கிருந்தாலும் ஆட்டுக்காரன் கிட்ட வந்து நின்னுப்புடும். பயிற்சி. இப்போது சற்று துரத்தில் ஆடு செதும்பும் குரல் கேட்டது. அவர்கள் குரல் வந்த திசையில் விரைந்தார்கள். மதகுப் பக்கம் மலங்க மலங்க முழித்துக் கொண்டு கார்சில்லி ஆடு நின்றுக் கொண்டிருந்தது. ஆட்டுக் குட்டியை ஈன்றுவிட்டு நிற்கிறது. பக்கத்தில் கீழே குட்டி சுருண்டு படுத்திருந்தது. குட்டி ஈன்று எப்படியும் ரெண்டு மூன்று மணி நேரம் ஆகியிருக்கும்.
“ஏன்டீ வெள்ளச்சி! வூட்டுக்கு வழி தெரியாது உனுக்கு?. வாடி வா.”—–தர்மன் குட்டியை துக்கி தோளில் போட்டுக் கொண்டு நடக்க கூடவே தாயும் ஓடி வந்தது. இந்நேரம் வாசனை பிடித்துக் கொண்டு நரி வந்து குட்டியை தூக்கிப் போயிருக்கும்.. நல்ல வேளை நரியோ, குள்ள நரியோ வரவில்லை. அவர்கள் ஆட்டையும், குட்டியையும் பட்டியிலடைத்து விட்டு போய் சாப்பாட்டில் கை வைக்க ராத்திரி பத்து மணி ஆயிப்போச்சி.
மறுநாள் காலையில கோவாலு ஆட்டைக் கிளப்பும் முஸ்தீபுகளிலிருந்தான்.
“இன்னாடா இன்னைக்கு எந்தப் பக்கம் போற?.”
“சுமங்கலி ஏரிக்குள்ளதான். அங்கதான் மேய்ச்சலுக்கு தோதா கீதுப்போவ்.”
“சரி…சரி…ஜாக்கிரதை…ஜாக்கிரதை. அங்க ஏரி பாய்ச்சவாரியில ரெண்டு தரத்தாருது வெள்ளாமை கீது. ஆடுங்க விளைச்சல் பக்கம் போவப்போகுது ஜாக்கிரதை.”
“ஆமாப்போவ்! அன்னிக்கி ரெண்டு சேம்பாட்டுக் குட்டிங்க சின்ன கரம்பு குப்பன் பயிர்ல வாயை வெச்சிடுச்சின்னு அப்பிடி திட்டினாம்பா. என்னை அடிக்க ஓடியாந்தான் கம்மனாட்டி.”
“டேய்…டேய்..! பொல்லாப்பு பேசாதடா ராஸ்கோலு. அந்தமாதிரி நேரத்தில சாமீ கூத குட்டிங்க சாமீன்னு சொல்லு. ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க.” – நோய் தாங்கின ஆடுகளுக்கு கூதன்னு சொல்றது. கூத ஆடுங்க பயிரை மேஞ்சாலும் ரொம்ப மேயாது ஒண்ணுரெண்டு பச்சையைக் கடிக்கும் அவ்வளவுதான். பயிர்களுக்கு சேதாரமில்ல. அதனால கூத ஆடுன்னா சம்சாரிகள் ஒண்ணும் சொல்றதில்லை.
“டேய் கோவாலு! காத்தாலயே பட்டியாண்ட போய் பார்த்துட்டேன். மந்தையில மறையாட்டுக் குட்டிங்க ரெண்டு சோர்ந்து நிக்கிதுங்கடா. இரை எடுக்கல. நோவு தாங்கியிருக்கும். உஷாரா பார்த்துக்கோ. அதுங்களை மட்டும் தோது பார்த்து யாரும் இல்லன்னா கொஞ்ச நேரம் பயிகள்ல மேயவுடு. யார்னா பார்த்துப்புட்டா கூத குட்டி சாமீன்னு அடக்கமா சொல்லணும்.தெர்தா?. சாயரட்சையா பச்சிலை அரைச்சி ஊத்திக்கலாம். ”
அந்த நேரம் வாசப்பக்கம் யாரோ கதவைத் தட்றாங்க. அவர் விரைந்தார். தெருவில் தன் அண்ணன் பிள்ளைங்க மூன்று பேரும் நிக்கிறாங்க. விருட்டென்று கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தார். அவருக்கு சுரு சுருவென்று கோபம் தலைக்கேறியது.
“அய்யே தர்மா! கதவைத் திற.” – அவருடைய அண்ணிக்காரியின் குரல் கேட்கிறது. திறந்தார். முகத்தை சீரியஸ்ஸாக வைத்துக் கொண்டார். “என்னா?.” —-அதற்குள் அண்ணியும், அவளுடைய மூணு புள்ளைங்களும் திமுதிமுவென்று உள்ளே வந்து விட்டார்கள்.
“பெரியவன் வெங்கிடேசனுக்குப் பொண்ணு பார்த்திருக்கோம். இன்னைக்கு பொண்ணு வீட்டார் கையை நனைக்க வர்றாங்க. உன்னைவிட்டா எங்களுக்கு யாரு?. நீங்க எல்லாரும் வந்திருந்து பேசி முடிச்சி அலுவலை முடிச்சி வையுங்கப்பா.” “ நானா?. அவ்வளவு மரியாதை வெச்சிருக்கீங்களா என்ன?. எந்த மூஞ்சிய வெச்சிக்குணு என்னை கூப்பிட வந்தீங்க?. நான் வர்றதுக்கில்லை. போங்க போங்க.” – புள்ளைங்க மூணு பேரும் வேகமாக வந்து அவருடைய கையைப் பிடிச்சிக்கிட்டாங்க.
“சித்தப்பா…சித்தப்பா…! நாங்க செஞ்சது தப்புத்தான் மன்னிச்சி மறந்துட்டு வாங்க சித்தப்பா.”
“போதும்டா அப்பா. அன்னிக்கு நடந்ததை என்னைக்கும் மறக்க மாட்டேன். எத்தனா வெச்சிப் பார்த்தீங்களா?. மூணு பேரும் என் மார்மேல வளர்ந்தவங்கடா கம்மனாட்டிங்க.”—அதற்கு மேல பேச்சு வராமல் கண்கலங்க நின்றார். “நான் வர்றதுக்கில்லை போங்க போங்க.” – அதற்குள் தர்மன் பொண்டாட்டி வந்துவிட்டாள்.
“உள்ள வாங்கக்கா. அய்யே தே! வந்தவங்க எதிரியா இருந்தாலும் வந்துட்டாங்க. உள்ள கூப்பிட்றதை வுட்டுப்புட்டு தெரு வாசப்படியில நிக்க வெச்சி பேசனா இன்னா அர்த்தம். எக்கா வா. எல்லாரும் வாங்க. தர்மன் பொண்டாட்டி தன் ஓரகத்தியின் கையைப் பிடித்து இழுத்தாள். தர்மன் கொஞ்சமும் இளகவில்லை.
“இதோ பாருங்க தொந்திரவு பண்ணாதீங்க. நான் வர்றதுக்கில்லை. போங்க..போங்க”. அண்ணிக்காரி சற்று வெகுண்டாள். “டேய் தர்மா! நடந்ததையே நெனைச்சிக்கிட்டு இருக்காதப்பா. பாழசை நெனைச்சிப் பார்த்து வா. அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு எம்புள்ளைங்க மறுநாளு எங்கிட்ட சொல்லி அழுதாங்க. அது தெரியுமா உனக்கு?. நீ அவங்களை பாசமா வளர்த்தது எதையும் அவங்க மறக்கலப்பா. ஏதோ கெட்ட நேரம். கெட்டதை அப்பவே மறந்திடணும்னு சொல்வாங்க. நீயும் மறந்துடுப்பா. சிரேஷ்ட பாகம்னு ஏரி மோட்டாங்கால்ல ஒதுக்கின எண்பது செண்ட்டுல நாப்பது செண்ட்டை இப்பவே உனுக்கு எழுதி வெச்சிட தயாரா இருக்கோம். என்னவோ புத்தி கெட்டுப் போயி அன்னைக்கு அப்படி ஆயிடுச்சி. மறந்துடு தர்மா.” “எனுக்கு மனசு ஏத்துக்கல. போங்க நான் வர்றதுக்கில்லை.”——அதைக் கேட்டுவிட்டு அவன் பொண்டாட்டி முணுமுணுத்தாள். “ஹும்! ஏற்கானவே கோணவாயி; அதுல கொட்டாவி வேற வுட்டா எப்படி இருக்கும்?.”
“டேய் தர்மா! இவ்வளவு சொல்றேன் ரேங்கறீயே இன்னா?. இவனுங்க மூணு பேரும் உன் மார் மேல வளர்ந்தாங்கதான், இல்லேங்கல. நீ என் மடியில வளர்ந்தவண்டா. அது மறந்துப் போச்சா உனுக்கு.?. டேய்! மூணு பேரும் சித்தப்பன் கால்ல விழுங்கடா.” – அப்போதே மூணு பெரும் சாஷ்டாங்கமாக சித்தப்பன் கால்ல விழுந்தார்கள். சித்தப்பன் அவர்களை தடுத்து ஏந்திக் கொண்டார். எல்லோரும் கண்கலங்க நின்றார்கள். தர்மன் பொண்டாட்டி எல்லாரையும் உள்ளே வரவேற்றாள். பாய் போட்டு எல்லாரும் உட்கார்ந்தார்கள். உறவு கலந்து போனதுக்கு அத்தாட்சியாக தர்மன் பொண்டாட்டி எல்லாருக்கும் மோர் கொண்டாந்து கொடுத்தாள். அத்துடன் கோபதாபமெல்லாம் கழிந்து போனது.
அடுத்து நாலாம் நாள் வந்த பெண் வீட்டாரை சித்தப்பன் தலைமையில் பிள்ளை வீட்டார் வரவேற்றார்கள். பின்கட்டில் தர்மன் பொண்டாட்டி மேற்பார்வையில் ஊரு ஆளுங்க மூணு பேரை வெச்சிக்கிட்டு முட்டுத்தளி போட்டு விருந்து சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. இரு வீட்டாரும் இணைந்திருக்க வீடு முழுக்க குதூகலம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஆனால் அன்றைக்கும் காலையிலேயே கோபாலு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு கிளம்பிட்டான். ஆடுகளைப் பட்டினி போட முடியாதே. இதுதான் ஆட்டுக்காரன் பிழைப்பு நாளு கிழமையில கூட லீவுன்னு எடுக்க முடியாது. அவன் வாழ்க்கை என்பது ஆடுகளின் பின்னால்தான். சரி ஆத்திரம் அவசரத்துக்கு என்னா பண்றதுன்னா வேற யாரையாவது ஆள் மாத்தி அனுப்பிட்டுத்தான் லீவு எடுக்க முடியும். அவன் விருந்து சாப்பாட்டை சாயந்திரம் வந்து சாப்பிட்டுக்குவான்.
சித்தப்பனே நேரில் போய் அழைத்ததால் ஊரு பெருந்தனக்காரர்கள், அக்கம் பக்கம் என்று நிறையபேர் ஆஜராகியிருந்தனர். சாப்பாட்டு மெனு—ரெண்டு இனிப்பு, மூணு பழதினுசு. ரெண்டு பொறியல், ஒரு கூட்டு, சிப்ஸ், வடை பாயாசம், ஐஸ்கிரீம், பீடா வரைக்கும் சித்தப்பன் நேர்த்தியாக ஏற்பாடு செஞ்சிருந்தார். தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண அனுபவம். பரம வைரியாய் இருந்தவர்கள் ஒரே நாளில் இணைந்ததும், இணைந்தபின் விசேஷ நிகழ்ச்சியை நடத்துவதையும் பார்த்து ஊரே முக்கின் மேல் விரல் வைத்தது. தாம்பூலம் மாத்தி பெண்ணை நிச்சயம் பண்ணிட்டப்புறம் இலையை போட்டாங்க. மூணு பந்தி நடந்தேறியது. எல்லாம் முடிந்தது. கூட்டம் கலைந்து விட்டது. சாயங்காலம் கோபாலு ஆடுகளை ஓட்டிவந்து பட்டியில அடைச்சிட்டு குளிச்சிட்டு விருந்து சாப்பிட ஆசையாய் பெரியப்பன் வீட்டிற்கு போனபோது சாப்பிட சோறும் சாம்பார், ரசமும்தான் மிச்சமிருந்தன. எல்லாம் காலி. அவன் சாப்பிட்டு முடிக்கையில அம்மாக்காரி அவனுக்காக எடுத்து வெச்சிருந்த ஒரு லட்டை கொடுத்தாள்.
நன்றி – கணையாழி மார்ச் 2021 இதழ்