உறவுகளை தேடி – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,756 
 

ராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார்.

… நான் தான் அப்பா பேசுறேன்..

ஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க.. அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம் பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்யமுடியல..

வார்த்தை தடுமாறி சோகம் இழையோட முதியவர் தழுதழுத்த குரலில் “நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்ப்பா. இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல, அதே நேரம் சொல்லாம இருக்க முடியல,

என்னப்பா ஆச்சு , என்னமோ மாதிரி பேசுறீங்க.. சீக்கிரம் சொல்லுங்கப்பா… அவசரப்படுத்தினான் மகன்.

முதியவர் தொடர்ந்தார், எனக்கும் உங்கம்மாவுக்கும் நாளை மறுநாள் விவாகரத்து.. இந்த வயதில் விவாகரத்து என்று நினைக்கும்போதே வேதனையாகவும், அசிங்கமாகவும் உள்ளது.. ஆனா வேற வழியில்லை பா..

அப்பாஆஆஆஆஅ… மகனிடம் இருந்து அதிர்வலைகள்.

இல்லப்பா, 28 வருட திருமண வாழ்க்கை.. வேதனைகள் அதிகம்.. சலிச்சு போச்சு.. போதும்பா.. இதுக்கு மேல வாழ ஒன்னும் இல்ல, வாழவும் பிடிக்கலடா… சரிப்பா இது பத்தி மேற்கொண்டு பேச எனக்கு மனசு ஒப்பல… அதனால, குவைத்ல இருக்க உன் தங்கச்சிக்கும் நீயே போன் போட்டு சொல்லிடு.. வைச்சுடறேன்..

அப்பா..அப்பா. அம்மா கிட்ட கொடுங்க.. அம்மா கிட்ட கொடுங்…. என்று மகன் அலறியதை பொருட்படுத்தாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்..

உடனடியாக குவைத்துக்கு போன் பறந்தது , தன் தங்கையை தொடர்பு கொண்டான்..

அண்ணா எப்படி இருக்கே.. குட் நியூஸ்.. எனக்கு 28% இன்கிரிமென்ட் வந்திருக்கு..

அவன் காதில தங்கை சொன்னது துளி கூட ஏறவில்லை.. அப்பா பேசினார் மா என்று ஆரம்பித்து, .. பதற்றத்துடன் அனைத்தும் சொல்லி முடித்தான்..

அடக்கடவுளே, என்ன ஆச்சு அவங்களுக்கு.. எதுக்கு இந்த முடிவு.. நம்ம இங்கே இருக்கறது மறந்து போச்சா.. ஆவேசப்பட்டாள் தங்கைக்காரி..

சரி சரி , நீ இரு.. நான் பார்த்துக்குறேன்.. கவலைப்படாதே, அப்பா கிட்ட பேசிட்டு, இன்னும் 5 நிமிசத்துல உனக்கு பன்றேன்…

உடனே ராமநாதபுரத்துக்கு போன் பறந்தது..

அப்பா.. என்ன இது , ஏன் இப்படி ஒரு முடிவு.. நல்லா தானே இருந்தீங்க.. என்ன திடிர்னு.. இதோ பாருங்கப்பா… நான் உங்க செல்லப்பொண்ணு தானே.. நான் சொல்றத கேளுங்க.. நான் இப்போவே அண்ணா கூட பேசறேன்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா.. உடனே கிளம்பி , நானும் அண்ணாவும் நாளைக்கு காலையில ராம்நாட் ல இருப்போம்.. ப்ளீஸ் பா.. அது வரைக்கும் பொறுமையா இருங்கப்பா .. ப்ளீஸ்.. பட பட வென பொறிந்து தள்ளினான்..

தொலைப்பேசி துண்டிக்கப்படுகிறது.

போனை வைத்துவிட்டு, முதியவர் தன் மனைவியிடம் திரும்பினார்… கவலைப்படாதேம்மா.. எல்லாம் நினைத்தபடியே நடக்கும்..நம்ம பசங்க ரெண்டு பேரும் தீபாவளியை நம்ம கூட கொண்டாட கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க..

மூணு வருஷமாச்சு புள்ளைங்கள பார்த்து.. சோகம் அப்பிய வெற்று சிரிப்புடன் இருவரும் காத்திருக்க தொடங்கினர் தங்கள் பிள்ளைகளின் வரவுக்காக..

வேலையிலிருந்து 2 நாள் விடுப்பெடுத்து உங்கள் உறவுகளை தேடி செல்வதால், உங்கள் தலையில் வானம் இடிந்து விழுந்து விடாது..

வேலை, பணம் தேவை.. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில்லை .. பணத்தையும் தான்டி உலகம் உள்ளது என்றூ உணருங்கள் நண்பர்களே..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *