(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜெயசுதாவிற்கு முதலில் கோபம் வந்தாலும் தன் சந்தேகம் சரிதானா என்று உறுதிப் படுத்திக் கொள்ள நினைத்து முதலில், கணவர் ராஜன் வேலை செய்யும் ஆபீசுக்கு போன் பண்ணி அவர் விடுப்பு எடுத்துக் கொண்டு போனதை கேட்டதும், எதிர் வீட்டு வாசலுக்கு வந்து ‘காலிங் பெல்’லை அழுத்தினாள்.
மாலினியின் அம்மா கதவைத் திறந்து “என்ன சுதா?” என்று கேட்க, “மாலினி எங்கே?” என்றாள் ஜெயகதா.
“ஆபீசுக்கு போயிருக்கா?”
“கொஞ்சம் போன் பண்ணி ஆபீசுலே இருக்கிறாளாண்ணு கேட்கிறீர்களா?”
“என்ன சுதா என்ன விஷயம்?”
‘என்ன விஷயமா? பொண்ணை கண்டிச்சு வளர்க்காமல் எதிர்த்த வீட்டு ஆம்பிளைகூட கூத்தடிக்க அனுப்பி வைச்சிட்டு இப்போ என்ன விஷயம் என்று கேட்கிறீர்களாக்கும். சீ! நீ எல்லாம் ஒரு பொம்பிளை’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டவள், “என் பாங்கில் ஒரு செக் புக் வாங்கிக் கொண்டு வரச் சொல்லணும்” என்றாள்.
“அப்படியா?” என்ற மாலினியின் அம்மா அவளும் ஆபீசுக்கு போன் பண்ணி விட்டுத் திரும்ப வந்து, “யாரோ பிரண்டுக்கு சுகமில்லைன்னு லீவு போட்டு விட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காளாம்மா” என்றாள் தேவி-மாலினியின் அம்மா.
“நான் நினைச்சதெல்லாம் சரியாப் போச்சு” கோபத்திலும், குபுக்கென்று கண்ணீர் பொங்கி வழிய ஆரம்பித்தது ஜெயசுதாவுக்கு.
“என்னம்மா என்ன நினைச்சே?”
“நான் என்னத்தச் சொல்ல?”
“ஏம்மா. அழுகிறே”.
“ஐயோ நான் எல்லாத்தையும், இழந்துகிட்டு நிக்கிறேனே..?”
“சுதா என்னாச்சு” தேவி வாஞ்சையுடன் கேட்க, “இன்னும் என்னாகணும்?” என்று அவள் கையைத் தட்டிவிட்டு வீட்டிற்கு வந்தாள்.
ஸ்கூலிலிருந்து வந்த மகன் ரகு “மம்மி நான் தான் கிளாஸ் பர்ஸ்ட் பாரு. எனக்குத் தான் பர்ஸ்ட் ராங்க்” என்று ஓடி வந்து சுதாவைக் கட்டிப்பிடிக்க “போடா பர்ஸ்ட் ராங்க், நான் என் வாழ்க்கையிலே சைபர் மார்க் வாங்கித் தோற்றுப் போய் நிற்கிறேன்டா?” என்று திரும்பவும் அழ ஆரம்பிக்க, மகன் ரகுவும் சேர்ந்து அழ ஆரம்பித்தான்.
“நான் நினைத்தது எல்லாமே சரியாப் போச்சு. கொஞ்ச நாளாகவே இவர் மாலினி வீட்டிற்கு போறதும், அவள் இவரிடம் குழைந்து குழைந்து பேசுவதும் நேற்று ‘நாளை கண்டிப்பாக நாம் போக வேண்டும்’ என்று இவர் சொல்ல, ‘அவள் கண்டிப்பாக?’ என்று சொல்லும் போதே எனக்குச் சந்தேகம் வலுத்தது. பாவி அப்போதே நான் இவரிடம் என்ன ராஜன் என்று கேட்டிருக்க வேண்டும்.
இப்போது இருவரும். அவரவர் ஆபீசுக்கு விடுப்பு சொல்லி விட்டு கொட்டமடிக்கப் – போயிருக்கிறார்கள்
சே…. நினைக்கும் போதே உடம்பெல்லாம் பற்றி எரிகிறதே…என் கணவருக்கு, நான் என்ன குறை வைத்தேன். அந்த மாலினி அறுத்துக், கொண்டு வீட்டோடு வந்ததுமில்லாமல் இப்படி என் வாழ்க்கையை நாசமாக்க வந்து விட்டாளே..கடவுளே நான் இனி என்ன செய்வேன்.
ஊருக்குப் போன் பண்ணி அப்பாவையும் அம்மாவையும், கூப்பிட்டுச் சொல்லுவோமா ? அய்யோ. அவங்க மருமகனைக் எங்கேயோ இருந்து வந்த தேவதூதனாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இந்த மறுஷன் புத்திகெட்டு அலையறது தெரிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார்கள்.
ஒருவேளை மாலினியும் இவரும் எங்காவது போய் விட்டால்… கடவுளே என் வாழ்க்கை என்னாவது? நான் நடுக்காட்டில்தான் நிற்க வேண்டுமா? சே! அப்படியெல்லாம் நடக்கக்கூடாது.
திரும்ப ஒருமுறை அவருடைய ஆபீசுக்கு போன் பண்ணிக் கேட்போமா என்று யோசித்துக் கொண்டிருந்தவளை “மம்மி ரொம்பப் பசிக்குது சாப்பாடு போடம்மா” என்றான் ரகு.
“போடா சோறும் கிடையாது. ஒரு இழவும் கிடையாது. நான் என் வாழ்க்கையே பறி போய் விட்டது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவனுக் குப் பசிக்குதாம்?” என்று மக்னை ஓங்கி அடிக்க ரகு அழுது கொண்டே வெளியே ஓடினான்.
‘சே! என் கோபத்தில் குழந்தையை இப்படி அடிக்கிறேனே.. அவனுக்கு என்ன தெரியும், பாவம், அவனுக்கு பசிக்கிறது என்றானே’ என்று சமையலறைக்கு வந்து பிரிட்ஜிலிருந்து குழம்பு கறிகளெல்லாம் எடுத்து. சூடாக்கி சாதம் போட்டு பிசைந்து கொண்டே “ரகு வாடா கண்ணா, வா. பசிக்குதுண்ணுச் சொன்னியே சாப்பிடலாம் வா” என்று கதவைத் திறந்தாள்.
ராஜன் அலுவலகத்திற்கு போய் வந்த களைப்போடு ரகுவையும் தடவிக் கொடுத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
“டாடி, மம்மி எனக்குச் சோறு தராமல் அடிச்சு விரட்டிட்டாங்க டாடி” என்றான் ரகு.
“என்னாச்சு சுதா. குழந்தைக்கும் சாப்பாடு கூட போடாமல் அப்படி வீட்டிலே என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்?”
“நான் இனி இருந்துதான் எதுக்கு?”
“என்னாச்சும்மா. உடம்பிற்கு சரியில்லையா?”
“எதுவுமே சரியில்லை”.
“ஏய். நான் ரொம்ப டயர்டா இருக்கிறேன். காபி கொண்டு வா”
“விஷம் தான் கலந்து தர வேண்டும்”.
“உனக்கு என்ன பைத்தியம்’ பிடிச்சுருக்கா?”
“அது ஒண்ணுதான் பாக்கி?”
“ஏய் சுதா முதல்லே ரகுவிற்கு சாப்பாடு கொடு”
“இன்றைக்கு ஆபீசுக்கு லீவு போட்டுண்டு எங்கே போனீங்க?”
“ஏன் கேட்கிறாய்!”
“பதில் சொல்லுங்கள்”
“பிரெண்ட் வீட்டிற்கு போயிட்டு வருகிறேன்”
“யார் பாலாஜி சார் வீட்டிற்கு தானே?”
“ஆமாம்”
“நான் போன் பண்ணினேன் நீங்கள் வரவில்லை என்று சொன்னாரே. கொஞ்ச நாளாகவே உங்களைக் கவனிச்சுண்டு தான் வர்றேன். எதிர்த்த வீட்டு மாலினியோட் கூத்தடிச்சுக் கும்மாளம் போட்டுத்தானே வர்றீங்க”
“சீ வாயைக் கழுவு. உனக்கும் ஆஸ்பத்திரியிலிருக்கும் உன் அக்கா புவனாவிற்கும் பிடிக்காது. அவர்களுக்கு ‘ஏ’ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்பட்டது. மாலினியிடம் ரொம்ப தாழ்மையாக கேட்டு அவளுக்கும் ‘ஏ’ பாசிட்டிவ் ரத்தம் என்பதால் அவளைக் கூட்டிக் கொண்டு போய் ரத்தம் கொடுக்கச் சொல்லி அழைத்துக் கொண்டு வந்தேன்” என்றான் ராஜன்.
ஜெயசுதா எதுவும் சொல்ல முடியாது திகைத்து நின்றாள்.
– தமிழ் டைம்ஸ்.