உறவினர் எதற்கு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,081 
 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அவனன்றி ஓரணுவும் அசையாது!” என்கிறார்கள். அப்படியானால், இந்த அகண்டாகார உலகத்தில் அவ்வப்போது நடக்கும் அநீதி, அக்கிரமங்களுக்கெல்லாம் அவனே ஜவாப்தாரியாகிறான் அல்லவா? ஆனால், தண்டனை மட்டும் அவனுக்கு இல்லையாம்; அவனால் ஏவப்பட்ட மனிதர்களுக்குத் தானாம்! – இதென்ன வேடிக்கை! – இப்படி அதிசயத்துக்கு ஆளாகி, ஆண்டவனைப் பற்றி ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்குக் கிடைக்கும் பதில் இதுதான்:

“அவனுடைய லீலா விநோதங்கள் அற்பர்களாகிய நமக்குப் புரியாதவை!”

அது எப்படியாவது போகட்டும்; ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அந்த ஆபத்பாந்தவனின் அறிய முடியாத தத்துவம் எனக்கு புரிகிறது. அதாவது பணக்காரனுக்கு மேலும் மேலும் பணம்; பணமில்லாதவனுக்கு மேலும் மேலும் பிள்ளை!

இரண்டாவது விஷயத்தில்தான் பகவானுடைய அருள் எனக்குப் பரிபூரணமாக கிடைத்திருக்கிறது. அதாவது பெண்ணாய்ப் பிறந்த நாலு ஜீவன்கள் என்றும் அல்லும் பகலும் ‘அப்பா! அப்பா!’ என்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அந்த நாளில் நான் மணக்கோலம் பூண்டிருந்த போது எனக்குச் சகல செளபாக்கியங்களும் வாய்க்கட்டும் என்று ஆசீர்வசித்த பெரியோர்களின் வாக்கு இந்த முறையில்தானா பலிக்க வேண்டும்?

என்னமோ, இந்த ஒரு பாக்கியமாவது, எனக்குக் கிடைத்ததே என்று என்னை ஆசீர்வதித்த பெரியோர்கள் வேண்டுமானால் சந்தோஷமடையலாம். நான் சந்தோஷமடைய முடியுமா?

எல்லோருடைய வீட்டிலும் பிறக்கும் குழந்தைகள் அத்தனையும் உயிருடன் இருந்து விடுவதில்லை; ஓரிரண்டு செத்துப் போவதுண்டு. எனக்கு வேறு என்ன பாக்கியம் வைக்காமற் போனாலும், ஆண்டவன் அந்தத் துர்ப்பாக்கியத்தை மட்டும் வைக்கவில்லை.

இந்த உலகத்தில் எனக்காக இரங்கிய ஜீவன் ஏதாவது உண்டா என்றால், அது என் மனைவிதான். நாலு பெண்களைப் பெற்று வைத்ததோடு அவள் நமன் உலகம் போய்விட்டாள் – மகராஜி! அவள் எந்த உலகத்திலிருந்தாலும் அந்த உலகம் தொல்லையில்லாத உலகமாயிருக்கட்டும்.

என்னுடைய குழந்தைகளின் அழகைக் கண்டு என் அம்மா அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அவள், ஒரு நாளாவது அவர்களுக்குத் திருஷ்டி கழிக்காமலிருக்க மாட்டாள். அக்கம் பக்கத்தாரின் பார்வையினால் அந்தக் குழந்தைகளின் அழகுக்குப் பங்கம் வராமலிருக்க வேண்டுமே என்பது அவள் கவலை! – அழகு மட்டும் இருந்தால் போதுமா? அதற்காகப் பிள்ளையைப் பெற்றவர்கள் வந்து என்னுடைய பெண்களைக் கல்யாணம் செய்து கொண்டு போய்விடுவார்களா? காட்டில் மலர்ந்த மலர் போல அந்தக் குழந்தைகள் ஏழையாகிய என் வீட்டில் அல்லவா வந்து பிறந்திருக்கின்றன? அவற்றை அனுபவிப்பார் யார்? ஆக்கிய கடவுள் அழிக்கும் வரையில் அவை காலந் தள்ளுவது எப்படி?

முதல் பெண்ணை மூன்றாந் தாரமாக ஒரு முதியவருக்குக் கொடுத்து அவள் அமங்கலியாக இப்பொழுது என் அகத்துள் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருக்கிறாள். இரண்டாவது பெண்ணை ஓர் இருமல் வியாதிக்காரனுக்குக் கொடுத்தேன் – தெரியாமல் கொடுத்துவிட வில்லை – தெரிந்துதான் கொடுத்தேன் – அப்புறம் கேட்க வேண்டுமா? அவள் புகுந்ததும் அந்த வீடு ஆஸ்பத்திரியாக மாறி விட்டது. அந்த ஆஸ்பத்திரியில் அவள் ‘நர்ஸ்’ஸாக இன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மூன்றாவது பெண்தான் ரங்கா, நாலாவது பெண்ணான நளினியைப் பற்றி “இன்னும் நாலைந்து வருடங்களுக்குக் கவலையில்லை. அவளுக்கு வயது பத்துத் தான் ஆகிறது. ரங்காவுக்குத்தான் இப்பொழுது இருபத்திரண்டாவது வயது நடக்கிறது”. ஆமாம்; அவளுக்கு வயது இப்பொழுது இருபத்திரண்டுதான்! – இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஏன் ஆகவில்லை? அவளுக்கென்று இந்த உலகத்தில் எந்த ஆடவனும் இல்லவே இல்லையா? எத்தனையோ பேர் இருக்கத்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாரையாவது ஒருவரை ‘வரதட்சணை’ என்னும் பெயரால் நான் விலை கொடுத்து வாங்க வேண்டுமே! அப்படித் தானே சம்பிரதாயம் சொல்லுகிறது? அதற்கு என்னிடம் பணம் இல்லை; இல்லை யென்றால் ஏழை வாழ வேண்டாமா?

தற்சமயம் என்னுடைய கவலையெல்லாம் ரங்காவைப் பற்றியது தான். என்ன கவலையென்றால் இந்தப் பெண்ணையாவது நல்ல இடமாகப் பார்த்துக் கொடுக்க வேண்டுமே என்ற கவலைதான்.

பார்க்கப்போனால் இந்த எண்ணம் எனக்கே பைத்தியக்காரத் தனமாகத்தான் தோன்றுகிறது. முதல் இரண்டு பெண்களை மட்டும் ஏதாவது நல்ல இடமாகப் பார்க்காமலா கொடுத்துவிட்டேன்? – இல்லை. என்னுடைய நிலைமையில் அந்தக் குழந்தைகளுக்கு நான் எவ்வளவுதான் முயன்றும், அவ்வளவு அழகான சம்பந்தங்கள் தான் கிடைத்தன. ஆனாலும் அந்த மூன்றாவது பெண் விஷயத்தில் என்னமோ அப்படி மீண்டும் ஒரு சபலம்.

அன்னியர் யாரும் வந்து என்னுடன் சம்பந்தம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. ஆகவே உறவினர்களிடையே வரன் வேட்டையாட ஆரம்பித்தேன். என் தங்கையின் வீட்டில் ஒரு பிள்ளையாண்டான் இருந்தான். அதே மாதிரி என் மைத்துனருக்கும் ஒரு மகன் இருந்தான். இருவருக்கும் ரங்காவின் ஜாதகம் ஏற்ற முறையில் தானிருந்தது. என்னுடைய குறையெல்லாம் அந்த இரு வீட்டாருக்கும் தெரிந்ததுதான். அவர்கள் மனம் வைத்தால் தன் சகோதரிகளைவிட ரங்கா, கொஞ்ச நஞ்சம் சுகத்தையாவது காணமுடியும்; நானும் கல்யாண முகூர்த்தப் பத்திரிகைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடாமலிருக்க முடியும்; கொட்டு மேளத்தின் ‘கும்கும்’ என்ற முழக்கத்தையும், நாதசுரத்தின் ‘பிப்பீ’ என்ற கானத்தையும் கேட்டுக் கண்ணீர் சிந்தாமலிருக்க முடியும்; செந்தாமரைத் தண்டின் நிறத்தை நிகர்த்த கரத்தையே தலையணையாகக் கொண்டு என் மகள் தனிமையில் ஒடுங்கித் துாங்கும் போது, இறுக மூடிய அவள் கண்ணீமைகளின் ஓரத்திலே கண்ணீர்த் துளிகள் கசிவதைக் கண்டு என் நெஞ்சம், நெகிழ்ந்து உருகாமலிருக்க முடியும். இந்த ஆசையுடன் தான் பகவான் மேல் பழியைப் போட்டுவிட்டு நான் என்னால் ஆனவரை இம்முறை முயன்று பார்த்தேன்.

என் உறவினர்களில் யாரும் என்னை அழைக்காவிட்டாலும் நானே என்னுடைய வருகையை முகத்தில் அசடு வழியத் தெரிவித்துக் கொண்டு, அடிக்கடி அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தேன்; முதலில் அவர்கள் என்னுடன் முகம் கொடுத்துப் பேசாவிட்டாலும், நானே அவர்களிடம் முகம் கொடுத்துப் பேசினேன். கண்ணீரும் கம்பலையுமுடன் அவர்களிடம் என் கருத்தைத் தெரிவித்தேன். ஆனால் நடந்தது என்ன?

என்னுடன் பிறந்து வளர்ந்த என் தங்கை, பிச்சைக்காரனைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தாள். ரங்காவின் தாயுடன் பிறந்து வளர்ந்த என் மைத்துனன் நான் கல்யாணப் பேச்சை எடுக்கும்போதெல்லாம் “இப்பொழுது அதற்கென்ன அவசரம்?” என்று எரிந்து விழுந்து என் வாயை அடக்கினான். ஆனால் அதே சமயத்தில் அவன் தன் பிள்ளைக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான் அவர்கள் வாயைப் பார்ப்பதும், அவர்கள் வானத்தைப் பார்ப்பதுமாக எத்தனையோ நாட்கள் கழிந்து விட்டன. என்னுடைய எண்ணம் மட்டும் ஈடேறவில்லை.
*⁠*⁠*

ஒரு நாள் இரவு பத்துமணி இருக்கும். மழை ‘சோ’ வென்று பெய்து கொண்டிருந்தது. தூக்கம் பிடிக்காமல் நான் வீட்டு வாசலில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது அழுக்கடைந்த ஜிப்பாவும், பைஜாமாவும், அணிந்த ஒரு வாலிபன் மழைக்காக வராந்தாவில் ஒதுங்க வந்தான். அவன் முகத்தில் கருகருவென்று வளர்ந்திருந்த தாடியும் மீசையும் பார்ப்பதற்கு விகாரமாயிருந்தன. ஆனால் கண்களில் மட்டும் தெய்வீக அமைதி குடி கொண்டிருந்தது.

“நீ யார், தம்பி? எங்கே போக வேண்டும்?” என்று நான் விசாரித்தேன்.

“நானா கைதி ‘எங்கே போகவேண்டும்!’ என்று எனக்கே தெரியாது!” என்றான் அவன்.

என் மனம் ‘திக்’கென்றது. “கைதியா!” என்று பரபரப்புடன் கேட்டு விட்டுத் தெருவைப் பார்த்தேன். யாராவது போலீஸ்காரர்கள் அவனைப் பின் தொடர்ந்து வருகிறார்களா என்றுதான்!

அதற்குள் என் குறிப்பை ஒருவாறு உணர்ந்து கொண்ட அந்த வாலிபன், “ஐயா! நான் திருட்டுக் கைதியல்ல; கொலை செய்த கைதியல்ல; சிறையிலிருந்து தப்பி ஓடி வந்துவிட்ட கைதியல்ல!” என்றான்.

அப்புறம் தான் எனக்கு விஷயம் புரிந்து விட்டது. ஆனானப்பட்ட ஹிட்லராலும், முஸோலினியாலும், டோஜாவாலும் கவிழ்க்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைக் கவிழ்த்து விட முயன்றவர்களில் அவனும் ஒருவன் என்று தெரியவந்தது. ஆனால் அவன் பணமும் பலமும் இல்லாதவனாயிருக்க வேண்டும். அல்லது உலகம் இன்னதென்று தெரியாதவனாயும், இதற்குமுன் ஒரு கஷ்டமும் நஷ்டமும் அறியாதவனாயும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விடுதலை அடைந்த அவன் ஒரு ரோஜாப் பூமாலையில்லாமல் ஓரிரண்டு பேர் ‘ஜே’ கோஷங்கூடப் போடாமல் என் வீட்டு வராந்தாவில் வந்து ஏன் ஒதுங்கிக் கொள்ளப்போகிறான்?

என்னையும் அறியாமல் அவனிடம் எனக்கு இரக்கம் உண்டாயிற்று. “சாப்பாடெல்லாம் ஆச்சோ?” என்று விசாரித்தேன்.

“ஆச்சு, சாப்பிட்டு இரண்டே இரண்டு நாட்கள் தான் ஆச்சு! நேற்றைக்கு முன்தினம் தான் விடுதலை அடைந்தேன்!” என்றான் அவன் சோர்வுடன்.

நான் அவனை உள்ளே அழைத்துக் கொண்டு சென்று, அம்மாவைக் கூப்பிட்டுக் கொஞ்சம் சாதம் போடச் சொன்னேன். “அவன் என்ன ஜாதியோ என்னமோ நேரே உள்ளுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்!” என்று முணுமுணுத்துக் கொண்டே அவனுக்குச் சாதம் பரிமாறினாள் அம்மா. அவன் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

அதற்குள் மழையும் கொஞ்சம் விட்டிருந்தது. அவன் வெளியே போவதற்குக் கிளம்பினான்.

“இந்நேரத்தில் எங்கே போகப் போகிறாய்?” என்று கேட்டேன்.

“படுக்க எங்கேயாவது கொஞ்சம் இடம் பார்ப்பதற்குத்தான்!” என்றான் அவன்.

“இந்த வராந்தாவில் படுத்திருந்துவிட்டுப்பொழுது விடிந்ததும் போகலாமே?”

“என்ன சொல்வீர்களோ என்று நினைத்தேன். உங்களுக்கு ரொம்பப் புண்ணியமுண்டு. அப்படியே படுத்துக் கொள்கிறேன்” என்று ஜிப்பாவைக் கழற்றி வராந்தாவில் போட்டு அவன் படுத்துவிட்டான்.

நானும் தெருக்கதவைத் தாளிட்டுவிட்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டேன்.

பொழுது விடிந்தது. அந்த வாலிபன் என்னிடம் சொல்லிக் கொண்டு போக வந்தான்.

அப்போது, “உங்கள் பெயரென்ன?” என்று அவன் என்னைக் கேட்டான்.

‘கோபாலசாமி’ என்றேன்.

உடனே தன் பைஜாமாவின் ‘பாக்கெட்’டிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்தான். அதில் என் பெயரைக் குறித்துக் கொண்டான். கதவைப் பார்த்து இலக்கத்தையும் குறித்துக் கொண்டான். தெருவின் பெயர் அவனுக்கு ஏற்கனவே தெரியும் போலிருக்கிறது; அதையும் கீழே எழுதிக் கொண்டான். ‘தாங்ஸ்’ என்று சொல்லிவிட்டுத் தெருவை நோக்கி நடந்தான்.
*⁠*⁠*

அவன் வந்துபோன நாலைந்து மாதங்களுக்குப் பிறகு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், அன்றிரவு நான் அவனுக்குப் போட்ட ‘தண்ணீர் விட்ட சாத’த்தைப் பற்றிப் பிரமாதமாக எழுதி யிருந்தான். நானும் என் வாழ்நாளிலே எத்தனையோ உறவினர்களுக்கு விருந்து வைத்திருக்கிறேன். கடன் வாங்கியாவது விதவிதமான கறி வகைகளுடன் பலகாரம் பட்சணங்களுடனும் பரிமாறியிருக்கிறேன். அவர்களில் ஒருவராவது இதுவரை என் விருந்தை மெச்சி ஒரு வார்த்தை பேசியது கிடையாது. ஆனால், இவனோ? கேவலம் தண்ணீர் விட்ட சாதத்தை இவ்வளவு பிரமாதப்படுத்தி எழுதியிருக்கிறானே? – ஆமாம்; வாழ்க்கையில் யாருமே தமக்கு மேற்பட்டவர்களை உபசரிப்பதற்கும், தமக்குக் கீழ்ப்பட்டவர்களை உபசரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் இது!

அத்துடன் அவன் ‘ஜேம்ஸ் தாம்ஸன்’ என்றும் தற்சமயம் இந்திய விமானப் படையில் வேலை பார்க்கிறானென்றும் மேற்படி கடிதத்திலிருந்து தெரிய வந்தது. இன்னும் வயிற்றுக் கவலையின் காரணமாகத் தன்னுடைய தேசபக்தியை விலைக்கு விற்ற விதத்தைப் பற்றியும் அவன் கடிதத்தில் விவரித்திருந்தான்.

பெண்ணைப் பெற்ற என் மனம் அவனைப் பற்றி எண்ணிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. அவன் மட்டும் கிறிஸ்துவனாக இல்லாமலிருந்தால்? ஒருவேளை ரங்கா அவனால் வாழ்ந்தாலும் வாழலாமல்லவா? தேச விடுதலையில் ஆர்வங் கொண்ட அவன், சமூக விடுதலையிலும் ஆர்வங் கொண்டவனாக இருப்பானல்லவா?

இப்போது மட்டும் என்ன? இந்த இந்து சமூகத்திலேயே இருந்து கொண்டு நாம் என்ன வாழ்ந்துவிடப் போகிறோம்? வேண்டுமானால் ரங்காவையும் இன்னொரு இருமல்காரனைப் பார்த்துக் கொடுக்கலாம்; அவ்வளவு தான்! – அப்பப்பா! யார் என்ன சொன்னாலும் சரி, முதல் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதி மட்டும் இந்தப் பெண்ணுக்கு நேரவே வேண்டாம், ஆண்டவனே!

ஆமாம், அவளுடைய செளகரியத்திற்காக நாம் இந்த இந்து சமூகத்திற்கே ஒரு முழுக்குப் போட்டு விட்டால் என்ன? அந்தப் பிள்ளையாண்டான் மட்டும் ஒப்புக் கொள்ளவதாயிருந்தால் நாமும் ரங்காவின் நலத்திற்காகக் கிறிஸ்துவ மதத்தையே வேண்டுமானால் தழுவி விடலாமே!

இந்தச் சங்கடமெல்லாம் என்னத்திற்கு? என்னமோ! ‘கலப்புமணம்’ என்கிறார்களே, அப்படிச் செய்துவிட்டால் என்ன? – ஊராரும் உறவினரும் ஏசுவார்கள் – ஆனால் என்ன? அவர்களா என்னுடைய துன்பத்தை அனுபவிக்கிறார்கள்?

இப்படி யெல்லாம் எண்ணி என் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அதற்கேற்றாற்போல் அடிக்கடி அவன் எனக்கு எழுதும் கடிதங்களின் மூலம் அன்பை வளர்த்து வந்தான். பத்துப் பதினைந்து நாட்கள் லீவில் வரும்போதெல்லாம் அவன் என் ஊருக்கு வருவான். எந்த ஹோட்டலில் தங்கினாலும் என்னையும் என் வீட்டையும் மறக்க மாட்டான். அடிக்கடி என்னுடன் அளவளாவி விட்டுப் போவான். என்னுடைய சுக துக்கங்களைப் பற்றி அக்கறையோடு விசாரிப்பான். நானும் என்னுடைய துன்பங்களையும் துயரங்களையும் பற்றி அவனிடம் சாங்கோபாங்கமாக விவரிப்பேன்.
*⁠*⁠*

இப்படியே இரண்டு மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. இதற்கு மத்தியில் என் உறவினரிடையே நான் எதிர்பார்த்திருந்த இரண்டு வரன்களுக்கும் வெவ்வேறு இடங்களில் பெண் பார்த்துக் கல்யாணமும் நடந்து விட்டது. என் அம்மாவும் கண்ணை மூடிவிட்டாள்.

எனக்கு அசாத்தியத் துணிச்சல் ஏற்பட்டு விட்டது. எத்தனையோ நாட்களாக என் உள்ளத்தில் அமுக்கி வைத்துக் கொண்டிருந்த ஆசையை அன்று ரங்காவிடம் தெரிவித்தேன். அவள் சிரித்தாள்.

“சொல்வதைக் கேள் அம்மா!” என்று நான் வற்புறுத்தினேன்.

அவள் சொன்னாள்:

“அப்பா! நீங்கள் சொல்வது சரி. ஆனால் ஒன்று: பிரபலஸ்தர்களும் பிரமுகர்களும் ‘கலப்பு மணம்’ செய்தால், அவர்கள் சமூக முன்னேற்றத்திற்காகவும் சர்வ சமய சமரஸத்திற்காகவும் அப்படிச் செய்வதாக ஊரார் புகழ்வார்கள்; இது அவர்களுக்குச் சிறுமை யளிப்பதற்குப் பதிலாகப் பெருமையளிக்கும். ஆனால் நம்மைப் போன்ற ஏழைகள் செய்தாலோ? அப்படிப் புகழமாட்டார்கள். அப்பா! ‘கையாலாகாதவன் வேலை’ என்றும் ‘கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’ என்றும் இகழ்வார்கள் அப்பா!”

“அவர்கள் புகழ்ந்தாலும் புகழட்டும்; இகழ்ந்தாலும் இகழட்டும், அம்மா! அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எப்படியாவது நீ சுகமாயிருந்தால் அதுவே போதும் எனக்கு. வேண்டுமானால் நீ கலப்பு மணம் செய்து கொள்ள வேண்டாமே! அந்தப் பிள்ளையாண்டானும் பிறக்கும்போதே கிறிஸ்துவனாகப் பிறந்து விடவில்லையாம்; நடுவில்தான் மாறினானாம். அவனுடைய மதத்தை நாமும் தழுவி விடுவோமே நீதான் நேரில் பார்த்திருக்கிறாயே, உனக்கு அவனைப் பிடிக்கிறதோ இல்லையோ?”

அதற்கு மேல் அவள் அங்கே நிற்கவில்லை. “போங் கப்பா!” என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடிவிட்டாள்.

அவ்வளவுதான்; அன்றே அவனுடைய சம்மதத்தைத் தெரிந்து கொள்வதற்காகக் கடிதம் எழுதினேன். அவனும் சீர்திருத்த மனப்பான்மையோடு பதில் எழுதி யிருந்தான். அதாவது ‘பெண்ணுக்குச் சம்மதமாயிருந்தால் தனக்குச் சம்மதமே’ என்று தெரிவித்திருந்தான்.

அப்புறம் என்ன? ஜேம்ஸ் தாம்ஸன் ஒரு மாத லீவில் ஊருக்கு வந்தான். எல்லோருமாகக் கிளம்பி ஒருநாள் மாதா கோயிலுக்குச் சென்றோம். தன்னைச் சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்தவர்களுக்காக ‘தந்தையே அவர்களை மன்னித்துவிடு; தாங்கள் இன்னது செய்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது!’ என்று இறைவனை வேண்டிக் கொண்ட ஏசுநாதரின் படம் எங்களை வரவேற்றது. பாதிரியார் எங்களை முறைப்படி மதம் மாற்றி வைத்தார்.

அதற்கு அடுத்த வாரத்திலேயே ஜேம்ஸ் தாம்ஸனுக்கும், ரங்கா என்ற மேரி ரோஸுக்கும் கிறிஸ்துவ முறைப்படி விவாகம் சிறப்பாக நடந்தேறியது. என்னுடைய கவலையும் ஒருவாறு தீர்ந்தது.

இந்த வைபவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட எங்கள் உறவினர் யாவரும் என்மீது வசை மாரி பொழிந்து கொண்டே நான் இறந்துவிட்டதாகப் பாவித்துப் புண்ணிய ஸ்தானம் செய்து விட்டார்களாம்!

ரொம்ப சரி; செத்தால் தலை முழுகத்தானே அவர்கள் இருக்கிறார்கள்? – பின் உறவினர் எதற்கு?

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *